http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[177 Issues]
[1753 Articles]
Home About US Temples Facebook
Issue No. 36

இதழ் 36
[ ஜூன் 16 - ஜூலை 15, 2007 ]


இந்த இதழில்..
In this Issue..

நமக்கு நாமே
அபிமுத்தன் திருமடம்
கதை 10 - மதுரகவி
திரும்பிப் பார்க்கிறோம் - 8
ஆடற்கலை வாயிலாக அறியப்படும் தமிழின் தொன்மையும் தமிழர் பெருமையும்
எவ்வுள் கிடந்தான்
ஜப்பானில் பொ.செ தீம்பார்க் போல
திருவள்ளுவரின் திருமேனி தாங்கிய தங்கக்காசு - 2
Links of the Month
சங்கச்சாரல் - 18
இதழ் எண். 36 > கதைநேரம்
புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கம் வரவில்லை. எழுந்திருந்தாள் அம்மா ஏதாவது சொல்வாள். குறைந்தபட்சம் "படுடா ! நடுராத்திரியில் என்ன சிந்தனை வேண்டிக்கிடக்கிறது ? பேசாமல் கண்ணை மூடிக்கொண்டு தூங்கு !" என்று வைவாள். கண்களை மூடினாலும் திறந்தாலும் அதே காட்சி - ஒரே காட்சிதான் திரும்பத் திரும்ப மனதில் வந்து நிற்கிறது. நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. சந்தோஷமாக இருக்கிறது. ஏன், கொஞ்சம் பயமாகக்கூட இருக்கிறது.

அது ஒரு குடை. சிறிய தங்கக் குடை. அதிகம் வளைக்கப்படாமல் தட்டையாக நிற்கும் குடை. அந்தக் குடையின் முனையில் சிறிய மணிகளும் அம்பரங்களும் தொங்கின. குடை இடைவிடாமல் அதனைப் பிடித்திருந்தவரால் சுழற்றப்பட்டது. முதலில் இடம் வலமாக - அப்புறம் வலம் இடமாக. மாற்றி மாற்றி அந்தக் குடை சுழன்றுகொண்டேயிருந்தது. அது மன்னவருக்காகப் பிடிக்கப்படும் வெண்கொற்றக்குடை.

அந்தக் குடையின் கீழ்தான் மன்னர் காட்சியளித்தார். அளவில் மிகச் சிறிய தோற்றம் - ஆனாலும் எடுப்பாக நிமிர்ந்து நிற்பதால் கம்பீரமாகத் தெரிந்தார். கன்னத்தில் குழிவிழுமளவிற்குத் தொடர்ந்து சிரித்துக்கொண்டேயிருந்தார். தலையில் சற்றே நீண்ட மகுடம். நெற்றியில் - ஏறக்குறைய முழு நெற்றியையும் மறைத்துவிடுமளவிற்கு கருமையான கஸ்தூரிப் பொட்டு. மார்பில் அணியப்பட்டிருந்த அளவான நகைகளில் நீல நிற கோமேதகத்தினால் வடிக்கப்பட்டிருந்த "நீல நாயகம்" மட்டும் எடுப்பாகத் தெரிந்தது. வலது திருக்கரம் சற்றே உயர்ந்து அபயமளித்தது. உள்ளங்கையில் நவரத்தினங்கள் பளபளத்தன. இடதுகரம் சிறிய கதையைப் பிடித்திருந்தது.

அவரது பின் கழுத்தின்மேல் அணியப்பட்டிருந்த மாலையானது இரு தோள்களின் வழியாக மெல்லக் கீழிறங்கிற்று. சிவப்பும் வெளுப்பும் பச்சையும் கலந்து ஒரே ஒரு பெரிய மாலை. அதுவோ அல்லது அவர் அந்த மாலையை அனாயசமாக அணிந்திருந்த விதமோதான் அவனை அதிகம் கலவரப்படுத்திவிட்டிருக்க வேண்டும். செந்நிற இருவாட்சிகளும் வெண்ணிற ஜாதி மலர்களும் இடையிடையே பச்சை வரியைக் கொடுத்த கதிர்ப் பச்சை இலைகளும் மாலையைச் சூழ்ந்து நின்ற வெற்றிலையால் செய்யப்பட்ட கிளிகளும்...

அன்று விடியற்காலை நேரத்தில் பரமபதவாசல் வழியாக மன்னரைக் குளிப்பித்து இந்த அழகான மாலையை அணிவித்து வெண்கொற்றக் குடைசுற்றி இருமருங்கிலும் மெல்லிய வெண் சாமரம்வீசி "தோளுக்கு இனியன்" என்றழைக்கப்பட்ட ஆசனத்தில் இருத்தி "ஹூம் ! ஹூம் !" என்று ஹூங்காரமிட்டுக்கொண்டே வலபுறமும் இடப்புறமும் மாற்றி மாற்றிக் காட்டியபடி ஸ்ரீமான் தாங்கிகள் அவரைச் சுமந்து வந்தபோது.... அம்மம்மா ! அவனால் அந்த அழகைத் தாங்கவே முடியவில்லை ! அழுதேவிட்டான்...

வைகுண்ட ஏகாதசி திருக்காட்சி


அவர் ஒரு கணிசமான புன்னகையை அவனை நோக்கி வீசிவிட்டு விடுவிடுவென்று கடந்து சென்றுவிட்டார். அவன்தான் பிரமை பிடித்தவன்போல் அவர் சென்ற திசையையே நீண்ட நேரம் கண்களில் நீர்வழியப் பார்த்துக்கொண்டிருந்தான். அவனைச் சுற்றிலும் சூழ்ந்து நின்ற ஜனம் மன்னவர் கடந்ததும் சலசலவென்று கரைய..

"என்னடா, பராக்கு வேண்டிக்கிடக்கிறது ? பெரிய பெருமாளை முத்தங்கியில் சேவிக்க வேண்டும்... கிளம்பு.. என்ன அங்கே வெறிக்க வெறிக்கப் பார்த்துக்கொண்டிருக்கிறாய் ?" - அம்மா ரங்கநாயகி விரட்டினாள்.

"அம்மா... அம்மா.....அது ...அந்த...."

"உஸ்... உன்னுடன் பேசிக்கொண்டிருக்க நேரமில்லை - சீக்கிரம் போய் வரிசையில் நின்றால்தான்... அடேய் ! கால்களை எட்டப்போட்டு நடக்கப்போகிறாயா இல்லையா ?"

முதுகில் பச்சென்று விழுந்த அறைகூட உறைக்கவில்லை. திரும்பித் திரும்பி அவர் சென்ற பாதையைப் பார்த்தவண்ணம் இருந்தான். அவர் கடந்து சென்ற பாதையில் அவர் அணிந்திருந்த மாலையிலிருந்து ஏதாவது மலர்கள் விழுந்திருக்காதா என்று அவன் கண்கள் தேடின... அதோ ! கொத்தாக ஒரு இருவாட்சி.... அடடா, பக்தர்களால் அடிபட்டு மிதிபட்டு... சட்டென்று அன்னையின் கைகளை விலக்கிவிட்டுவிட்டு அந்த இருவாட்சியை நோக்கி ஓடினான். ஆசைதீர அதனை அணைத்துக்கொண்டான். கண்களில் ஒற்றிக்கொண்டான். முத்தமிட்டான்.

வழக்கமாக வைகுண்ட ஏகாதசிக்காக இரவெல்லாம் கண்விழித்து மறுநாள் விடியற்காலைப் பொழுதில் தரிசனத்திற்குக் கிளம்பும் வழக்கமெல்லாம் அவனுக்கு இல்லை. இந்த வருடம் வந்தது வினையாய்ப் போயிற்று. பரமபத வாசலில் அவனுக்கு அன்று ஏதோ நேர்ந்துவிட்டது.

அவனுக்கு அப்போது வயது ஒன்பது. அந்த வருடம் கிபி 1855. அந்த இடம் வைணவர்களின் முக்கிய பதிகளுள் தலையாயதாகத் திகழும் திருவரங்கத் திருக்கோயில்.

அப்புறம்... அவன் பெயர் மதுரகவி.


***********************************************************************************************


ஸ்ரீநிவாச பட்டர் மிக நீண்ட நேரமாக சந்நிதியின் ஓரத்தில் ஒண்டிக்கொண்டிருந்த சிறுவனை கவனிக்கவேயில்லை. வியர்க விறுவிறுக்க பூஜைகள் மாற்றி மாற்றி வந்துகொண்டேயிருந்தன. முதலியாண்டான் வந்ததும் நடையை அவனிடம் ஒப்புவித்துவிட்டு அக்கடாவென்று வெற்றிலை போடலாம் என்று வெளியில் கிளம்பும்போதுதான் அவனைக் கண்டார்.

"யாரப்பா தம்பி ? அங்கே என்ன செய்துகொண்டிருக்கிறாய் ?"

அவன் தயங்கித் தயங்கி வந்தான்.

"யாரது...? அடடே ! நமது அரங்கப் பிள்ளையவர்களின் சீமந்தப் புத்திரன் போலத் தெரிகிறது ! அப்பா கோயிலுக்கு வந்திருக்கிறாரா என்ன ?"

"இ...இல்லை, நான் மட்டும்தான்...!"

"அடடே, மேலை அடையவளைஞ்சானிலிருந்து தனியாகவா வந்தாய் ? பேஷ் ! பேஷ் ! தரிசனம் பண்ணிவிட்டாயல்லவா ?"

"....அ...ஆமாம், எ... எங்கே மன்னரைக் காணோம் ?"

"மன்னரா, அட, யாரப்பா அது எனக்கே தெரியாமல் ? மன்னர் ஆட்சியெல்லாம் முடிந்துவிட்டதப்பா ! இப்போது கும்பினிக்காரன்..."

"பெருமாளுக்கு முன் ஸ்ரீதேவி பூதேவியுடன்....இருப்பாரே...."

"ஓ ! நம்பெருமாளைத்தான் மன்னர் என்று சொல்கிறாயா ! நல்ல பெயரப்பா அது... அவர் இந்தத் திருவரங்கத்திற்கு மன்னர்தான். புத்திசாலித்தனமாகப் பேசுகிறாயே ! நம்பெருமாள் புறப்பாடுக்காக மணல்வெளிக்குச் சென்றிருக்கிறார்....."

"அவர் அணிந்த மாலை... அதோ ஓரத்தில் கிடக்கிறதே...."

"ஓ ! அது பழைய மாலை ! உனக்கு வேண்டுமா என்ன ?"

"ஆமாம் !"

கண்களில் ஒற்றியபடி அதனை வாங்கிக்கொள்ள முயல.... கனமான கனம் ! ஐயோ பாவம் ! நாள் முழுவதும் எப்படித்தான் போட்டுக்கொண்டிருக்கிறாரோ.....

"என்ன, இன்னும் தயக்கம் ?"

"அது... இந்த மாலைகளையெல்லாம் யார் கட்டித் தருவது ?"

"ஓ, அதுவா ? இங்கிருந்து நேராக ஒன்று அல்லது ஒன்றரை காதம் நடந்தாயானால் காவிரி வரும். காவிரிக் கரையையொட்டி வேங்கடாசல இராமானுஜதாஸர் திருநந்தவனம் என்று கேட்டால் வழிகாண்பிப்பார்கள் ! அவரும் மற்ற சில ஏஹாங்கிகளும்தான் கோயிலின் திருநந்தவனக்குடிகள். தினப்படி மாலை கட்டித் தரும் பணி அவர்களுடையது....."

"ஏஹாங்கி என்றால் என்ன ?"

"அதுவா.... திருமணம் செய்துகொண்டு குழந்தை குட்டிகளெல்லாம் பெற்றுக்கொண்டு என்னைப்போல் அவஸ்தைப்படாமல் பிரம்மச்சரியத்தில் சித்தத்தை நிறுத்தி பெருமாள் கைங்கரியத்துக்காகவே வாழ்க்கையைச் செலவிடுவது.... உனக்குப் புரிகிறதா ?"

மிக நன்றாகப் புரிந்தது.

"நான்... நானும் ஏஹாங்கி ஆகலாமா ?"

"நாராயணா ! உன் தந்தையின் காதுகளில் விழுந்தால் மிகவும் வருத்தப்படுவார். அப்படியெல்லாம் பேசக்கூடாது தம்பி... நல்லபடியாகத் திருமணம் செய்துகொண்டு குழந்தை குட்டிகளையெல்லாம் பெற்றுக்கொண்டு...."

மேற்கொண்டு அவர் பேசியது அவன் காதுகளில் விழவில்லை. தினந்தோறும் பெருமாளைத் தொட்டுப் பூஜை செய்பவர் ஏன் பெருமாள் கைங்கரியத்துக்காக வாழ்க்கையை அர்பணிக்கிறேன் என்று சொன்னதை அங்கீகரிக்கவில்லை ? என்று குழப்பமாக இருந்தது. அடுத்த சில கணங்களில் அவன் கால்கள் காவிரிக்கரையை நோக்கி நடக்கத்துவங்கின. தோளில் மாலை கனத்தது. அந்தக் கனமும் சுகமாகத்தான் இருந்தது !


***********************************************************************************************


கிளி மாலையில் - ஆண்டாளால் குழலழகர் வாயழகர் என்றெல்லாம் வர்ணிக்கப்பட்ட - என்னரங்கத் தின்னமுதர்
(புகைப்பட உதவி - http://www.srirangapankajam.com)


"அடேய், யாரங்கே ? வரத தாஸா ! மறுபடியும் பேட்டைச் சிறுவர்கள் மாங்காய் பொறுக்குவதற்காக வந்திருக்கிறார்கள் போலிருக்கிறது... நாளை வரச்சொல் !"

"இல்லை, இது வேறு யாரோ ! கையில் கோயில் மாலையைத் தூக்கமாட்டாமல் தூக்கிக்கொண்டு.... இருங்கள், நான் சென்று விசாரிக்கிறேன் !"

அவர் அந்த சிறுவனை அணுகுவதும் ஏதோ கேட்பதும் அவன் ஏதோ பதில் சொல்வதும் ஒரு புன்னகையுடன் வரதன் அவனை உள்ளே வர அனுமதிப்பதும்.... என்னதான் நடந்துகொண்டிருக்கிறது ?

"ஆஹா ! ஸ்ரீமான் வேங்கடாசல இராமானுஜதாஸரே ! உங்களது கைவண்ணத்தையும் கைங்கரியத்தையும் இதுவரை பெருமாள் மட்டும்தான் மெச்சிக்கொண்டிருந்தார் - இன்று இந்தச் சிறுவனும் மெச்சத்துவங்கிவிட்டான் ! நன்று... நன்று...."

"என்னடா சொல்கிறாய் ? யார் தம்பி நீ?"

அவன் பதில் பேசாமல் உடம்பு மண்ணில் புரள சடாரென்று தரையில் வீழ்ந்தான்.

"அடடா, எழுந்திரப்பா ! என்னை எதற்காகச் சேவிக்கிறாய்... நான் மிகவும் சாதாரணமானவன், ஏஹாங்கி ! எழுந்திரு !"

அவன் தன்னை தன் தந்தையை அறிமுகப்படுத்திக்கொண்டான். ரங்கப் பிள்ளையை அவர் நன்றாக அறிந்திருந்தார்.

"சரி, எதற்காக இங்கே வந்திருக்கிறாய் ?"

"இந்த மாலைகள்... இந்த மாலைகள்... "

"இந்த மாலைகளுக்கு திருப்பள்ளிதாமம் என்று பெயரப்பா ! இதோ இதனைக் கட்டும் இந்த மண்டபத்திற்கு திருப்பூ மண்டபம் என்று பெயர்.
நீயும் நானும் நிற்கும் இந்த மண் இருக்கிறதே - இதற்கே திருமாலைப் புரம் என்றுதான் பெயர். அந்தக் காலத்து இராஜாக்களெல்லாம் இதுபோன்ற திருப்பணிகளுக்கு நிவந்தம் விடுவதுண்டு. இந்தத் திருக்கைங்கரியத்தில் ஈடுபடும் எங்களைப் போன்றவர்களுக்கு திருநந்தவனக் குடிகள் என்று பெயர் !"

"இந்த.....இந்த... மாலைகளை....மன்னிக்கவும், இதன் பெயர் என்ன சொன்னீர்கள் ?"

"திருப்பள்ளிதாமம், பரவாயில்லை, வாய்க்குள் நுழையாவிட்டால் திருமாலை என்று சொல்லிவிட்டுப் போயேன் !"

"இந்தத் திருமாலை எப்படிக் கட்டுகிறீர்கள் என்பதை எனக்குக் கற்றுத்தர வேண்டும் !"

"ஹா ! ஹா !...." அவன் சப்தமிட்டுச் சிரித்தார்...."இந்தத் திருமாலை கட்டுவதை வேண்டுமானால் நான் சொல்லித் தரலாம். அந்தத் திருமாலை எப்படிக் கட்டுவது என்பதை நீ ஆழ்வார்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்....ம்... நல்லது. கற்றுக்கொடுத்தால் போயிற்று ! நாளை காலை இதே நந்தவனத்துக்கு வந்துவிடுகிறாயா ?"

வந்தான். மறுநாள் மட்டுமல்ல, அதற்கு மறுநாள் மட்டுமல்ல, தினம் தினம் வந்தான். பாசுரங்களைப் பாடியபடி மலர் கொய்தான். பின்னிப் பின்னி மாலை தொடுத்தான்.விரல்கள் மிக நளினமாக மலர்களைத் தேர்வு செய்தன. முன்னர் வைக்கப்படவேண்டிய மலர்கள் முன்னர் வைக்கப்பட பின்னர் கட்டப்பட வேண்டிய மலர்கள் இயல்பாக ஒதுக்கப்பட்டு... மாலைகள் முன்னிலும் அழகாகக் காட்சியளித்தன.

வேங்கடாசல ராமானுஜ தாஸர் அரங்கனுக்கு அடுத்தபடிதாக அந்தச் சிறுவனிடம் மனதைப் பறிகொடுத்தார். தனக்குத் தெரிந்த வைணவத்தை அவனுக்குக் கற்பித்தார். ஒருநாள் மதுரகவி நந்தவனத்திற்கு வரவில்லையென்றாலும் கலவரமானார். தேடிக்கொண்டு வீட்டிற்கே சென்றார்.

மெல்ல... மெல்ல... மதுரகவி பிஞ்சில் பழுத்துக்கொண்டிருந்தான்.


***********************************************************************************************


"ஸ்ரீநிவாஸப் பிள்ளையவர்களின் பாரியாளை கீழைச் சித்திர வீதித் தெருமுனையில் நேற்றுப் பார்த்தேன்... நம்மையெல்லாம் ரொம்ப விசாரித்தாள்..."

"...ம்..."

"கூடவே அவர்களுடைய பொண்ணும் பூஷ்பக்கூடையைத் தூக்கிக்கொண்டு நின்றது... நெகுநெகுவென்று என்னமாய் வளர்ந்திருக்கிறது தெரியுமா ? நம் மதுரனுக்கு ஏற்ற வரன்...."

"...ம்..."

"எல்லாவற்றுக்கும் ம்.. தானா ? வாயைத் திறந்து ஏதாவது பேசமாட்டீர்களா ?"

"பேசுவதற்கு என்ன இருக்கிறது ?"

"பிள்ளையவர்களிடம் பேசி வருகிற தைமாதத்தில் கல்யாணத்தை முடிக்கிறது ?"

"அவரிடம் பேசுவதற்கு என்ன இருக்கிறது ? நாம் அவருடைய பெண்ணின்மேல் ஆர்வமாக இருக்கிறோம் என்று காற்றோடு சேதி போனால்கூட வண்டி வாழைப்பழங்களோடு வீட்டிற்கு வந்துவிடுவார் ! பிரச்சனை அதுவல்ல.... உன் புத்திரன் மதுரன் இருக்கிறானே....அவனிடம் ஒரு வார்த்தை.."

"அவனையென்ன கேட்கவேண்டியிருக்கிறது ? மனையில் உட்கார்ந்து தாலியைக் கட்டடா என்றால் கட்டிவிடப் போகிறான் !"

"நாழிகைக் கணக்காகக் கதையளக்கத் தெரிந்த உனக்கு சில சிறு விஷயங்கள் ஏன் புரியமாட்டேன் என்கிறது ரங்கநாயகி ? அவன் கோயிலே கதியென்று இருக்கிறான் - ஏஹாங்கியாக ஆகி வேங்கடாசல இராமானுஜ தாஸரின் கைங்கரியத்தை...."

"நன்றாயிருக்கிறது நீங்கள் பேசுகிறது !" - பொலபொலவென்று கண்ணீர் உகுத்தார் ரங்கநாயகியம்மாள்.."ஏதோ குழந்தை ஆசைப்படுகிறான் என்று நந்தவனத்திற்கு அனுப்பினால் - அந்தக் கிழவன் என் குழந்தையின் மனதைக் கலைந்துவிட்டானா ?"

"சேச்சே... தாஸரை அப்படியெல்லாம் தூக்கியெறிந்து பேசாதே ! இவன்தான் நந்தவனமே கதியென்று கிடக்கிறான். அவரே ஒருமுறை என்னைச் சந்தித்து இதுபற்றிப் பேசினார்..."

"என்னத்தைப் பேசினார் ! இருக்கட்டும் இருக்கட்டும். இந்தத் திருமணத்தை நடத்திக் காட்டுகிறேனா இல்லையா பாருங்கள் !"

நடத்த முடியவில்லை. மதுரகவியை இம்மிகூட நகர்த்த முடியவில்லை. மெல்ல சொல்லிப் பார்த்து - அழுது ஆர்ப்பாட்டங்களெல்லாம் செய்து - இறுதியில் தற்கொலை செய்துகொண்டுவிடுவேன் என்று பயமுறுத்தி - கிணற்றில் ஏறக்குறைய விழக்கூடப் பார்த்தும்....
ம்ஹூம். ஒன்றும் நடக்கவில்லை. அதுமட்டுமல்ல. தன் திருமணத்திற்காக பெற்றோர் சேர்த்து வைத்திருந்த நாலு பணத்தில் ஒரு கடலைக்காய் மாலை செய்து அரங்கநாயகித் தாயாருக்கு அணிவித்து அழகுபார்த்தான் அவன் !

அப்போது அவனுக்கு வயது பதினேழு. வருடம் கிபி 1867.


***********************************************************************************************


மதுரகவிப் பிள்ளை வானமாமலை ஜீயரின் முன்னிலையில் பஞ்சஸமஸ்காரம் என்று சொல்லப்படும் வைணவச் சடங்கை மேற்கொண்டார். பரமபாகவதரானார். வீட்டாரிடமிருந்து தனக்குக் கிடைத்த பூர்விகச் சொத்தில் நந்தவனத்து நிலங்கள் வாங்கினார்.

அவருடைய புகழ் பரவிற்று. அவருடைய நண்பர்களிடம் மாத சந்தா வசூலித்து சோழமாதேவியில் மேற்கொண்டு நந்தவனத்து நிலங்கள் வாங்கினார். அமைதியாக - அடக்கமாக - தொடர்ந்து திருப்பணியில் ஈடுபட்டார்.

நாட்கள் மாதங்களாயின. மாதங்கள் பருவங்களாகின. பருவங்கள் வருடங்களாயின. அவர் தொடர்ந்து திருநந்தவனக் காரியத்தில் அமைதியாக ஈடுபட்டு வந்தார். வயது ஏற ஏற வைணவம் அவரைப் பக்குவப்படுத்தியது. ஆழ்வார்களின் பாடல்களின் ஆழங்கள் புலப்பட்டன. வைணவத்தின் இரகசிய கிரந்தங்கள் என்று சொல்லப்படும் தத்துவ நூல்களையும் அவர் கற்றறிந்தார். கற்கக் கற்க கற்கவேண்டியது மேலும் எத்தனை இருக்கிறது என்று மலைப்புத் தட்டியது. சமயக்கல்வி ஏட்டுக் கல்வியைப்போல் கர்வம் கொடுக்காமல் அடக்கத்தையும் ஒடுக்கத்தையும் போதித்தது.

ஒன்றுமறியாதவர்போல் மதுரகவி தொடர்ந்து நந்தவனக் கைங்கரியத்தில் உற்சாகமாக ஈடுபட்டு வந்தார். தினமும் தொடுக்கும் மாலைதானே ! என்று அலட்சியம் தோன்றவில்லை. மாறாக முன்பு தொடுத்த மாலைகளைவிட இன்றைய தினம் இன்னும் அழகாய் அரங்கனுக்கு மாலைகட்ட வேண்டும் என்றுதான் தோன்றியது. சிரத்தை ஒரு ஒழுங்காய் அவரது கரங்களில் பரிணமித்தது.

வானத்தின் மேலிருந்தவன் மதுரகவியைப் பார்த்தான். அவரது பெருமையை உலகறியச் செய்யத் திருவுள்ளம் கொண்டான். திட்டம் தீட்டினான். தீட்டிய தீட்டத்தைப் பார்த்துச் சிரித்துக்கொண்டான்.

அப்போது பிள்ளைக்கு வயது நாற்பத்தியிரண்டு. வருடம் கிபி 1892


***********************************************************************************************


"எங்கே, மதுரகவிப் பிள்ளை வந்தாயிற்றா ?"

"இதோ இருக்கிறேன்...."

"பெரியவர் உங்களை உடனடியாக அழைக்கிறார் !"

"எதற்காக ?"

"தெரியவில்லை - கையோடு அழைத்துவரச் சொன்னார்..."

சென்றார்.

அழைத்தது திருவரங்கத் திருக்கோயில் தேவஸ்தானத்தின் மூத்தவர் ஒருவர்.

"வரவேண்டும் ! இப்படி அமருங்கள். விஷயம் ஒன்றுமில்லை - நமது திருக்கோயிலின் ஸ்ரீ ரங்க விமானம் பெரிதும் ஷீணமடைந்துவிட்டது ! இன்றைக்குப் பரவாசுதேவரின் பாதங்களின் கீழ் பெரிதாக விரிசல் விட்டுவிட்டது...உடனடியாக சீரமைத்தாக வேண்டும். விமானத்தின் தங்கப் பூச்சும் மங்கிவிட்டதாக பலரும் அபிப்பிராயப்படுகிறார்கள். பாண்டியர் காலத்தில் செய்த திருப்பணி ! அதற்குப் பிறகு நமது காலத்தில்தான் நடக்கவேண்டுமென்று பெருமாள் திருவுள்ளம் கொண்டுவிட்டார் போலிருக்கிறது. இந்தக் கைங்கரியத்திற்கு உரிய பணத்தை பக்தர்களிடம் திரட்டி நடத்திவைக்க உங்களால்தான் முடியும் !"

பதறிப்போனார் மதுரகவி....

"பெரியவர் மன்னிக்கவேண்டும். இது மிகப் பெரிய வேலை. அந்தக் காலத்து அரசர்களால்தான் செய்ய முடிந்தது.. இன்றைக்கு பல்லாயிரக்கணக்கான ரூபாய் திரட்ட வேண்டியிருக்கும் ! அடியேன் வெறும் திருநந்தவனத்துக் குடி ! சேர்ந்தார்ப்போல் ஐயாயிரம் ரூபாய் கண்டதில்லை ! என்னால் இது ஆகுமென்று தோன்றவில்லை... எத்தனையோ பெரியவர்கள் இருக்கிறார்கள்...."

"கொஞ்சம் வேண்டுமானால் யோசித்துச் சொல்கிறீர்களா ?"

"இதில் யோசிப்பதற்கு என்ன இருக்கிறது. இத்தனை பெரிய வேலையை என்னிடம் கொடுக்கத் தாங்கள் ஒப்புக்கொண்டதே எனக்கு சந்துஷ்டியாயிருக்கிறது ! வருகிறேன்..."


***********************************************************************************************


இரவு ஒரு கனவு.

மன்னர் வந்தார். வந்தவர் வழக்கம்போல தரிசனம் தருவது - சென்றுவிடுவது என்றில்லாமல் நின்று நிதானித்தார். சிரித்தார்.

"என்ன, சிதலமாகியிருக்கும் எனது விமானத்தை புதுப்பித்துத் தர மாட்டீரோ ?"

"பெருமானே ! அடியேன் சிறியேன் அறியாக் கடையேன்....!"

அவர் கலகலவென்று சிரித்தார். வலது கரம் அபயஹஸ்தமாய் தலை வரை உயர்ந்தது.

"ஆரம்பியும் ! நாம் தலைக்கட்டிக் கொடுக்கிறோம் !"

நீ வெறும் கருவி. நான்தான் உன் செயல்களின் காரணன்.

நீ எதையும் செய்யத் தேவையில்லை. உன் மூலம் நான் என் பணி முடித்துக்கொள்கிறேன்.

ஸ்ரீவிமான ஜீரணோத்தாரணம் உன் பணி அல்ல - என் பணி. என் பெயரால் நீர் ஆரம்பியும்.. நாம் நடத்திக் கொடுக்கிறோம்.

மன்னர் அவரிடம் சொல்லாமல் சொன்னார்.

"தன்செயல் எண்ணித் தவிப்பது தீர்ந்து அவன் செயல் செய்து நிறைவு பெறும் மார்க்கம்" மதுரகவிக்குப் புலப்பட்டது. சட்டென்று முழிப்புத் தட்ட, கண்களில் ஈரம் படிந்திருந்தது தெரிந்தது.


***********************************************************************************************


மறுநாள் மதுரகவிப்பிள்ளை தனது குருநாதரான ஆண்டரங்கர் குவளைக்குடி சிங்கமய்யங்காரை சந்தித்து விமானத் திருப்பணியையும் தன் கனவையும் எடுத்துரைத்தார்.

"உம் கையினால்தான் திருப்பணி நடக்கவேண்டுமென்பது பெருமான் திருவுள்ளம்போலும் - அவர் ஆக்ஞாகித்தபடி ஆரம்பியும் !"

"எங்கே ஆரம்பிப்பது - எப்படி ஆரம்பிப்பது ? ஒன்றும் புலப்படவில்லை..."

"இதோ இந்தப் பித்தளைக் குடத்தக் கையில் பிடியுங்கள்... பத்து ரூபாய் ! அடியேன் உபயம்... அவ்வளவுதான். காரியம் துவங்கியாயிற்று !"

மதுரகவிப் பிள்ளை என்றொரு வைணவ பக்தர் திருவரங்கத்து ஸ்ரீவிமானத்தைப் புதுப்பிக்கும் பணியை மேற்கொண்டிருக்கிறார் என்னும் செய்தி மெல்ல மெல்லப் பரவியது. முடிந்தவர்கள் ரூபாய் கொடுத்தார்கள். முடியாதவர்கள் அணா பைசா கொடுத்தார்கள். அதுவும் முடியாதவர்கள் தங்களின் உழைப்பை - நேரத்தை ஈன்றார்கள். எல்லாவற்றையும் மதுரகவி அடக்கத்துடன் ஏற்றுக்கொண்டார். தமிழகத்தைத் தொடர்ந்து வானமாமலை, ஹைதராபாத் என்று பல இடங்களுக்கும் பயணப்பட்டார்.

மதுரகவிப் பிள்ளையால் புனரமைக்கப்பட்ட திருவரங்க விமானம்


ஏட்டுக் கல்வி கற்காத - எந்த அரசாங்கப் பதவியும் வகிக்காத - அந்த எளிய மனிதர் ஐந்து வருடங்களில் ரூபாய் 80000 திரட்டினார் ! அந்தக் காலத்தில் அது மிகப் பெரிய தொகை. சீமான்களாலும் ஜமீந்தார்களாலும்கூட எளிதில் திரட்டமுடியாத தொகை... மதுரகவியால் ஒரு பொதுக்காரியத்திற்காகத் திரட்ட முடிந்தது.

இதற்குப் பின் பணிகள் மளமளவென்று நடக்க, விமானத் திருப்பணிகள் நிறைவுற்று 1903ல் மிகப்பெரிய குடமுழுக்கு விழா நடைபெற்றது. ஸ்ரீரங்க விமானத்தின் எட்டு பெரிய கலசங்களும் எட்டு சிறிய கலசங்களும் பத்மங்களும் பதினாறு பூச்சுக்களுடன் பளபளத்தன.

மீதமிருந்த பணத்தைக்கொண்டு நந்தவனத் திருப்பணி காலகாலத்திற்கும் முறைதவறாமல் நடக்கவேண்டும் என்பதற்காக மதுரகவி ஒரு குழு அமைத்தார். அதன் செயல்பாடுகளைத் தெளிவாக்கினார். இக்குழு திருச்சி சடகோப நாயுடு, ரெங்கசாமி நாயுடு, மதுரகவியின் பெரியண்ணன் பெரியண்ணப்பிள்ளை, மதுர நாயகம் பிள்ளை என்று பல பெரியவர்களைக் கொண்டிருந்தது.


***********************************************************************************************


வந்த வேலை முடிந்தது.

கூண்டுப் பறவை கூட்டுக்குத் திரும்பக் காத்திருந்தது.

அப்போது பிள்ளைக்கு வயது ஐம்பத்து நான்கு. அது ஐப்பிசை குரோதி ஆண்டு. வருடம் கிபி 1904. குடமுழுக்கு நடந்து ஓராண்டு கழிந்திருந்தது.

ஊஞ்சல் உற்சவம் முடிந்து ஏழாம் நாள். இரவில் மட்டும் கிடைக்கும் அரவணைப் பிரசாதங்கள் பக்த கோஷ்டியினருக்கு விநியோகிக்கப்பட்டிருந்தன.

மணி பதினொன்று. அவருக்கு அழைப்பிதழ் வந்தது.

அணுக்கனை அழைத்துச் செல்ல மன்னரே நேரில் வந்தார்.

"என்ன, மதுரகவி சுவாமி ! கிளம்பலாமா ? பணிகளெல்லாம் முடிந்தாயிற்றா ?"

"ஆஹா ! எல்லாம் நல்லபடியாக முடிந்தன - தேவரீர் உத்தரவுக்காகக் காத்திருக்கிறேன் !"

"சரி, கிளம்பும் !"

தன் முன் நீட்டப்பட்ட தாமரைப்பூக் கரங்களை பிள்ளை கெட்டியாகப் பற்றிக்கொண்டார்.


(முற்றும்)
கல்வெட்டுச் செய்தி
தமிழ்நாட்டில் வைணவர்களின் முக்கிய பதிகளுள் தலையாயதாகத் திகழும் திருவரங்கம்.

இப்பதியின் மையமாகத் விளங்கும் பழமை மிகுந்த திருவரங்கநாதர் திருக்கோயில் ஆழ்வார்கள் பன்னிருவராலும் பாடப்பெற்ற ஒரே தலம். வைணவ ஆகமமான வைகானசம் குறிப்பிடும் ஏழு ஆவரணங்கள்(திருச்சுற்றுக்கள்) கொண்டு துலங்கும் ஒரே கோயில்.

திருவரங்கம் இராஜகோபுரம்


திருக்கோயிலின் மகத்தான இராஜகோபுரத்திற்கு நேர் எதிரே விரியும் பெருந்தெருவில் கிட்டத்தட்ட பதினைந்து நிமிடங்கள் நடந்தீர்களானால் காவிரிக் கரையை அடையலாம். இந்தக் கரையையொட்டி ஒரு பெரிய மண்டபம் அமைந்துள்ளது. இதற்கு "அம்மா மண்டபம்" என்று பெயர்.

அம்மா மண்டபத்திலிருந்து மேற்கே பிரியும் பாதை காவிரிக் கரையோரமாகவே படர்ந்து நேராக மாம்பழச்சாலைக்குக் கொண்டு சென்றுவிடும்.

இந்த மாம்பழச் சாலைக்குச் செல்லும் பாதையைக் கடக்கும்போதெல்லாம் இங்கு அமைந்திருக்கும் பெரிய நந்தவனமொன்று எப்போதும் என் கண்களைக் கவரும். மிக அழகாக பாத்தி கட்டி வளர்க்கப்படும் பாதிரி, ஒற்றை மற்றும் இரட்டை கருடார்த்தனம் (நந்தியாவட்டை), பல நிறங்களில் இருவாட்சி மற்றும் சம்பங்கி மலர்ச் செடிகள், தோட்டம் முழுவதும் வளர்ந்துள்ள கரும்பச்சை நிற கிருஷ்ண துளசிச் செடிகளின் பின்னணியில் அற்புதமாகச் சிரித்துக்கொண்டிருக்கும். வாயிலில் பெருமான் திருவுருவத்துடன் "ஸ்ரீமான் மதுரகவி நந்தவனம்" என்றொரு அறிவிப்புப் பலகை. சரிதான், ஆழ்வார்களுள் இளையவரான மதுரகவியாழ்வாரின் பெயரில் எவரோ நந்தவனம் வைத்து நடத்துகிறார்கள் என்று நினைத்துக்கொண்டேன்.

சமீபத்தில் என் தந்தையார் இந்த நந்தவனத்திற்குள் நுழைந்து விசாரித்து இந்த மதுரகவி யார் என்பதைக் கண்டறிந்தார். அத்தோடு அவருடைய முழு வரலாறு பதிவாகியுள்ள கல்வெட்டையும் காட்டினார்.

திருக்கோயில் - திருவரங்கம் அரங்கநாதர் திருக்கோயில்

இடம் - முக்கிய நுழைவாயிலாகத் திகழும் ரெங்க மண்டபத்தின் மேற்குச் சுவருக்கு அருகில்

காலம் - கி.பி 1904

கல்வெட்டு முதன்முதலில் வெளியான இதழ் - இதுவரை வெளியிடப்பட்டதாகத் தெரியவில்லை

கல்வெட்டுப் பாடம் - கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மதுரகவிப் பிள்ளை வரலாறு கூறும் கல்வெட்டு


மதுரகவிப் பிள்ளை ஸ்தாபித்த நந்தவனம் இன்றுவரை நல்நிலையில் இயங்கி வருகிறது. இன்றைய தேதியில் நான்கு வைணவ அடியவர்கள் - ஏஹாங்கிகள் - திருநந்தவனக்குடிகளாய்ப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

திருவரங்கத்துப் பெருமானும் தாயாரும் பஞ்ச ஆயுத புருஷர்களுள் ஒருவராக விளங்கும் சுதர்சன சக்கரத்து ஆழ்வாரும் தினப்படி தரிக்கும் அழகு மிகுந்த மலர் மாலைகள் இந்த நந்தவனத்தில் விளையும் மலர்களிலிருந்து மட்டும்தான் தொடுக்கப்படுகின்றன என்னும் தகவல் ஆச்சரியமளித்தது. பக்தர்கள் தாம் கொண்டுவரும் மல்லிகைப் பூக்களினால் அரங்கனை அலங்கரிக்கும் பூசாற்று உற்சவ நாள் தவிர மற்ற 364 நாட்களிலும் இறைவன் இறைவியை அலங்கரிக்கும் பெருமை - உரிமை - எல்லாம் மதுரகவி நந்தவனப் பூக்களுக்கு மட்டும்தான் !

மதுரகவி நந்தவனப் பூமாலையில் காட்சிதரும் அரங்கரும் பெருமாட்டியும்
(புகைப்பட உதவி - http://www.srirangapankajam.com)


அடுத்தமுறை திருவரங்கத்திற்குச் சென்றால் மதுரகவி நந்தவனம் எங்கேயிருக்கிறது என்று விசாரியுங்கள். திருமாலைப்புரம் என்று அழைக்கப்படும்அந்த அழகிய நந்தவனத்து மண்ணில் நின்று மதுரகவிப் பிள்ளை என்னும் அரிய மனிதரைப் பற்றி சிந்தியுங்கள்.


(இக்கதையில் வெளிவந்துள்ள அத்தனை தகவல்களையும் தொகுத்தளித்த என் தந்தையார் அவர்களுக்கு நன்றி)

this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.