http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[177 Issues]
[1753 Articles]
Home About US Temples Facebook
Issue No. 36

இதழ் 36
[ ஜூன் 16 - ஜூலை 15, 2007 ]


இந்த இதழில்..
In this Issue..

நமக்கு நாமே
அபிமுத்தன் திருமடம்
கதை 10 - மதுரகவி
திரும்பிப் பார்க்கிறோம் - 8
ஆடற்கலை வாயிலாக அறியப்படும் தமிழின் தொன்மையும் தமிழர் பெருமையும்
எவ்வுள் கிடந்தான்
ஜப்பானில் பொ.செ தீம்பார்க் போல
திருவள்ளுவரின் திருமேனி தாங்கிய தங்கக்காசு - 2
Links of the Month
சங்கச்சாரல் - 18
இதழ் எண். 36 > கலைக்கோவன் பக்கம்
திரும்பிப் பார்க்கிறோம் - 8
இரா. கலைக்கோவன்

அன்புள்ள வாருணி,

1984ல் செந்தமிழ்ச் செல்வியில் எழுதிய, 'முழையூர்க் கோயில் மாடக் கோயிலா?', 'கோனேரிராஜபுரத்துக் குழப்பங்கள்' கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை. இக்கட்டுரைகளால் அறிஞர்கள் சிலருடன் முரண்பட நேர்ந்தது. பெரிய புராணத்திற்கு உரை எழுதிய அறிஞர் திரு.. சி. கே. சுப்பிரமணிய முதலியார் முழையூரிலுள்ள கோயிலைத் தம் நூலில் மாடக்கோயிலாகக் காட்டியிருந்தார். முழையூர்ப் பரசுநாதர் கோயில் மாடக்கோயில் அன்று. களஆய்வில் நான் கண்டறிந்த இவ்வுண்மையைக் கட்டுரையில் எழுதியிருந்தேன். கட்டுரையைப் படித்த தஞ்சாவூர் வாழ் சைவப் பெரியார் ஒருவர், சி. கே. சுப்பிரமணிய முதலியாரின் கூற்றில் குறை காண்பதா என்று என்னைக் கடிந்துகொண்டார். நேரிடை உரையாடலில் பலபட விளக்கியும், அவர் புரிந்துகொள்ள மறுத்ததுடன் என்னிடமிருந்து விலகிநின்றார்.

கோனேரிராசபுரத்துக் குழப்பங்களில் அறிஞர் திரு. இரா. நாகசாமி, திரு. எஸ். ஆர். பால சுப்பிரமணியம், திரு. என். சேதுராமன், திரு. வெ. வேதாசலம், திரு. பரணீதரன் கருத்துக்களைச் சான்றுகளோடு மறுத்து எழுதியிருந்தேன். இக்கட்டுரை செந்தமிழ்ச் செல்வியில் நான்கு மாதங்கள் தொடராக வெளிவந்தது. கோனேரிராசபுரம் கோயிலில் உள்ள கண்டராதித்தர் சிற்பத்தை, 'செம்பியன்ம hதேவி' என்று அறிஞர் சிலர் அடையாளப்படுத்தி இருந்தமை ஆழ்ந்த வருத்தம் தந்தது. கண்ணெதிர்ச் சான்றைக்கூடச் சரியாகப் பார்க்காமல் பிழையாக இனங்கண்டிருந்த ஆய்வுப் போக்குகள் எனக்கு வியப்பும் துன்பமும் தந்தன. 'இரண்டாம் நிலைச் சான்றுகளை' ஆராயாமல் கொள்ளக்கூடாது என்று உறுதிபூண்டேன்.

தங்கள் நூல்களின் வழி எனக்குள் உயர்நிலை பெற்றிருந்த திரு. எஸ். ஆர். பாலசுப்பிர மணியம், திரு. இரா. நாகசாமி இருவரையுமே கட்டுரைகள் எழுதத் தொடங்கிய இரண்டாண்டுகளுக்குள் மறுக்க நேர்ந்தமை நெடுங்காலம் என்னை வருத்திக்கொண்டிருந்தது. ஆனால், உண்மைகளை முன்வைக்கும்போது, யாரை மறுக்கிறோம் என்பதைவிட எதற்காக மறுக்கிறோம் என்பதில்தான் அக்கறை கொள்ளவேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். ஆய்வு என்று வரும்போது கருத்துக்களைத்தான் பார்க்கவேண்டுமே தவிர, அவற்றின் பின் நிற்கும் அறிஞர்களைஅன்று. அதனால்தான், என் முதல் கருத்தரங்கக் கட்டுரையை உளமாரப் பாராட்டி, அரசு விழாவொன்றிலும் கட்டுரை வாசிக்க வாய்ப்பளித்த, நான் இன்றளவும் நேசிக்கும் நல்லறிஞர் திரு. இரா. நாகசாமியின் கருத்துக்களை என்னால் தயங்காமல் தொடர்ந்து மறுக்கமுடிந்தது.

ஒரு கருத்தை மறுப்பதாலேயே, அக்கருத்தை வெளியிட்ட அறிஞரை மதிக்கவில்லை என்று பொருளல்ல. ஆய்வாளனாக எழுதத் தொடங்கிய காலம் முதல் இந்த இருபத்தைந்து ஆண்டு அநுபவத்தில் எத்தனையோ அறிஞர்களை மறுக்க நேர்ந்துள்ளது. ஆனால், அவர்கள் யாரையும் மதிக்க மறந்ததில்லை. அந்த ஆய்வாளர்கள் ஒவ்வொருவரும் எத்தனை பாடுபட்டுத் தரவுகள் சேகரிக்கிறார்கள் என்பதை நானறிவேன் , நானும் ஒரு களஆய்வாளன் என்பதால், இன்று வரை எந்த ஆய்வாளருடனும் எனக்குப் பகையில்லை. எல்லோரும் நல்ல நண்பர்களே.

கருத்துக்களை மறுத்த காரணத்தாலேயே, என்னை யாரேனும் பகையாகக் கருதினாலோ, அவமதித்தாலோ அவதூறு பேசினாலோ நான் பொருட்படுத்துவதில்லை. பொதுவாழ்க்கையில் இதற்கெல்லாம் தயாராக இருக்கவேண்டும். தொடக்கக் கால மருத்துவ வாழ்க்கையில், புகழ்பெற்ற மனநோய் மருத்துவர் திருமதி சாரதா மேனனின் உதவியாளராகச் சில மாதங்கள் பணியாற்றிய அநுபவம் எனக்கு ஆய்வுவாழ்க்கையில் பெரிதும் கைகொடுத்தது. கடுமையான சந்தர்ப்பங்களில்கூட அமைதியாகப் போரட அந்த அநுபவம் உதவியது.

முள்ளிக்கரும்பூர் கோயிலை வழிபாட்டிற்குக் கொணர்ந்த சில மாதங்களில் அவ்வூர் வாழைத்தோப்பில் ஒரு சிற்பம் தென்படுவதாகச் செய்தி வந்தது. நானும் நண்பர் திரு. இரா. இராஜேந்திரனும் உடன் சென்று பார்த்தோம். தலையின் மேற்பகுதி மட்டுமே வெளித்தெரிந்த நிலையில் ஒரு சிற்பம் வாழைத்தோப்பொன்றில் புதைந்திருந்தது. மண் தோண்டியபோது இந்தத் தலை தெரியவந்ததாகத் தோப்புப் பெரியவர் கூறினார். அந்த வார இறுதியிலேயே, திரு. மஜீது முன்னிலையில் கி. ஆ. பெ. விசுவநாதம் மேனிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களின் உதவியுடன் அச்சிற்பத்தை அகழ்ந்தெடுத்தோம். பல ஆண்டுக் காலம் மண்ணில் புதைந்திருந்த அச்சிற்பத்தைத் தூய்மை செய்து சிராப்பள்ளி அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியர் திரு. மோகனிடம் ஒப்புவித்தோம்.

சுகாசனத்தில் கிரீடமகுடத்துடன் இரண்டு கைகள் மட்டுமே பெற்றிருந்த அச்சிற்பத்தை, 'இன்ன தெய்வம்' என்று என்னால் உடன் கண்டறியக் கூடவில்லை. திரு. மஜீதிற்கும் அதே நிலைதான். இருவருமே நிறைய விவாதித்தோம். இருந்தும் பயனில்லை. மிக அரியவகைச் சிற்பமாக அது அமைந்துவிட்டதால், செய்தித்தாள்களில் செய்தி தரத் தயக்கமாக இருந்தது. 'இன்ன சிற்பம்' என்று அடையாளப்படுத்திய பிறகு செய்தி தரலாம் என்று முடிவுசெய்து சிற்ப நூல்கள் அனைத்தையும் படித்தேன். 'விஷ்வக்சேனராக' இருக்கலாமோ என்று தோன்றியது. ஆனால், பார்வைக்குக் கிடைத்த விஷ்வக்சேனர் சிற்பங்கள் அனைத்துமே நான்கு கைகள் பெற்றிருந்தன.

இந்த நிலையில்தான், சிற்பரத்னா கைகொடுத்தது. இராமருடைய தோற்றங்களை வண்ணிக்கும் அந்நூலில், இது போன்ற அமைப்பும் சொல்லப்பட்டிருந்தது. திரு. மஜீதிடமும் கலந்துகொண்டு, அரியவகை இராமர் சிற்பம் கண்டுபிடிப்பு என்று செய்தியிதழ்களுக்குத் தகவல் தந்தேன். படத்துடன் செய்தியைப் பார்த்த அறிஞர் ஒருவர் (பெயர் நினைவில் இல்லை), அச்சிற்பம் 'மஞ்சுஸ்ரீ' ஆகலாம் எனக் கருத்துத் தெரிவித்திருந்தார். தவறாகக் கூறிவிட்டோமோ என்றஞ்சி, புத்தமதச் சிற்பங்களைக் குறிக்கும் சிற்பவியல் நூல்களை வளனார் கல்லூரி நூலகத்தில் பெற்றுப் படித்தேன். அப்போதுதான் அது மஞ்சுஸ்ரீ அன்று என்பது விளங்கியது. மஞ்சுஸ்ரீக்குரிய வாளோ, புத்தகமோ, தலையைச் சுற்றிக் காணப்படவேண்டிய சிறு வடிவங்களோ, முள்ளிக்கரும்பூர்ச் சிற்பத்தில் இடம்பெறாமையைச் சுட்டி, அவ்வறிஞருக்கு எழுதினேன். அவரும் என் விளக்கத்தை ஏற்றுக்கொண்டு, கண்டுபிடிப்பைப் பாராட்டினார். பின்னாளில், தருமபுர ஆதீனச் சொற்பொழிவு ஒன்றிற்குச் சென்றபோது, திருமடத்தில் அவரைச் சந்திக்கும் வாய்ப்பமைந்தது. மதுரை காமராசர் பல்கலையிலிருந்து ஓய்வு பெற்றுத் திருமடப்பணிக்கு வந்திருப்பதாகக் கூறினார்.

திரு. இரா. நாகசாமி சிராப்பள்ளி வருவதாகவும் அவரிடம் இச்சிற்பத்தைக் காட்டிக் கருத்துக் கேட்கலாமென்றும் திரு. மஜீது கூறினார். நான் மகிழ்வுடன் ஒப்புக்கொண்டேன். அறிஞர் திரு. இரா. நாகசாமியுடன் நான், மஜீது இருவருமே அருங்காட்சியகம் சென்று அச்சிற்பத்தைப் பார்த்தோம். சிற்பத்தை நன்கு ஆராய்ந்த அப்பெருந்தகை, அது ஓர் அரிய சிற்பமே என்று கூறியதுடன், தற்போதைக்கு அதைச் சிற்பரத்னா கூறுமாறு போல இராமராகவே கொள்வோம் என்று கூறியதுடன், இது குறித்து மேலும் ஆராயலாம் என்று கருத்துரைத்தார்.

இதெல்லாம் நடந்து சில வாரங்களில் ஆலம்பாக்கம் போக நேர்ந்தது. அப்போது அங்கிருந்த மாடமேற்றளியான வரதராசப் பெருமாள் கோயிலுக்குச் சென்றேன். அக்கோயிலின் கருவறையில் முள்ளிக்கரும்பூரில் கிடைத்த சிற்பத்தைப் போலவே மற்றொரு சிற்பம் இருப்பதைக் கண்டேன். என் உள்ளம் களிகொண்டது. அந்தச் சிற்பத்தைப் படமெடுத்துக் கொண்டதுடன் நன்கு ஆராய்ந்து குறிப்புகள் எடுத்தேன். சிராப்பள்ளி மீண்டதும் மஜீதிற்குத் தொலைபேசியில் செய்தி தந்தேன். அடுத்த நாள் படத்துடன் அவரைச் சந்தித்தேன். இருவரும் அருங்காட்சியகம் சென்று முள்ளிக்கரும்பூர்ச் சிற்பத்தை ஆலம்பாக்கம் சிற்பத்துடன் ஒப்பிட்டு ஆராய்ந்தோம். அச்சிற்பங்கள் இரண்டும் ஒன்றுபோலேவே அமைந்திருந்தமை வியப்பளித்தது. இரண்டு அரியவகை இராமர் சிற்பங்களைக் கண்டுபிடித்தமை அளவற்ற மகிழ்ச்சியளித்தது. இன்றுவரை அது போன்ற மூன்றாவது சிற்பத்தை நாங்கள் பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புரப்பாரற்று நலிந்து கொண்டிருக்கும் ஆலம்பாக்கம் வரதராசப் பெருமாள் கோயில் அருமையான மாடக்கோயிலாகும். சில ஆண்டுகளுக்கு முன்புகூட அங்குச் சென்றிருந்தேன். அந்தக் கோயிலுக்கு இன்னமும் விடியல் வரவில்லை. அதே ஊரிலுள்ள பிற்பல்லவர் காலக் கற்றளியான கயிலாசநாதர் கோயில் தப்பித்துக் கொண்டது. ஆனால், மாடமேற்றளியைக் காப்பாற்றுவார் யாரும் இல்லை. மிக உயரமான வெற்றுத் தளமும் அதே கட்டமைப்பில் விமானமும் கொண்டுஅமைந்த இக்கோயிலின் கட்டமைப்பைக் காஞ்சிபுரம் வைகுந்தப் பெருமாள் கோயில், மேலப்பழுவூர் பகைவிடை ஈசுரவம் இவற்றின் கட்டமைப்புடன் ஒப்பிட்டுக் கட்டுரை எழுதியமையும் இப்போது நினைவுக்கு வருகிறது. மூன்றுமே அற்புதமான கற்றளிகள். பகைவிடை ஈசுவரம், சாந்தார அமைப்புடைய விமானம் பெற்ற முற்சோழர் காலக் கோயிலாகும்.

கும்பகோணத்துக்கு அருகில், முழையூர் பரசுநாதர் கோயிலை அடுத்தமைந்துள்ள ஆறைவடதளி, வரலாற்றுப் புகழ் பெற்ற மாடக்கோயிலாகும். அப்பர் பெருமானோடு, நெருங்கிய தொடர்புள்ள இக்கோயிலின் கோபுரம் சிதைந்து, நொறுங்கிவிட்டது. ஆறாண்முகளுக்கு முன் சென்றிருந்தபோது, கோயிலின் சுற்றுப்புறம், நான் 1983ல் பார்த்த நிலையிலேயே இருப்பதுகண்டு துணுக்குற்றேன். சைவக் கோயிலான இதைச் சமணர்கள் கைப்பற்றியிருந்தமையால் மனம் வருந்திய அப்பர் பெருமான், உடன்வந்தாருடன் அங்கேயே அமர்ந்து உண்ணாநோன்பியற்றி அக்கோயிலை மீட்டெடுத்ததாகச் சேக்கிழார் கூறுவார். பழையாறையின் ஒரு பகுதியாக இக்கோயிலுள்ள இடம் இருந்தமையால்தான் இது ஆறைவடதளியானது. அமர்நீதி நாயனாரின் வாழிடமாக இப்பகுதி கருதப்படுவதால், இக்கோயிலில் அவர் சிற்பம் இடம்பெற்றுள்ளது. இக்கோயிலைப் பற்றிய ஆய்வுக் கட்டுரை 1984ம் ஆண்டு செந்தமிழ்ச் செல்வி இதழ்களில் ஏப்ரல் முதல் ஜூன்வரை வெளியானது.

1982 டிசம்பரில் இலக்கிய இளவல் (பி. லிட்.) இரண்டாம் ஆண்டு தேர்வெழுதினேன். ஐந்து தாள்கள் இருந்தன. படிக்க நேரம் அமையாமையின், இலக்கியம் மூன்றாம் தாளும், இலக்கணம் இரண்டாம், மூன்றாம் தாள்களும் எழுதி வெற்றி பெற்றேன். இலக்கணப் படிப்பு என் எழுத்தைத் திருத்திக்கொள்ளவும் தொடர்களைச் சீரமைக்கவும் பெரிதும் உதவியது. 1983 செப்டம்பரில், விட்டுப்போன, தமிழ்நாட்டின் கலையும் நாகரிகமும் தாளும் மொழிபெயர்ப்புத் தாளும் எழுதித் தேறினேன். அத்துடன் மூன்றாம் ஆண்டுக்குரிய இலக்கியம் நான்காம், ஐந்தாம் தாள்கள், கல்வெட்டுகளும் கோயிற் கட்டடக்கலையும் தாள் இவற்றை எழுதித் தேறினேன். செப்டம்பர் 1984ல் தமிழிலக்கிய வரலாறு, தொல்லியல் தாள்கள் எழுதினேன். இலக்கியத் தாள் ஒன்று, இலக்கணத் தாள்கள் மூன்று என நான்கு தாள்கள் எஞ்சியிருந்தன. மருத்துவப் பணியும் ஆய்வுப்பணியும் அவற்றை எழுத முடியாதபடி செய்தன. தமிழ்க்குடில் செல்வதும் குறைந்து போயிற்று. ஆசிரியப் பெருமக்களுடன் ஒரு சாலை மாணாக்கனாய் அமர்ந்து படிக்கும் வாய்ப்பு அருகியது.

என்னுடைய முதல் ஆங்கிலஆய்வுக் கட்டுரை 12. 02. 1984ல் இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் வெளியானது. 'வயலூர் சதுரன்' என்ற தலைப்பில் வயலூரில் இருந்த ஆடல் செப்புத் திருமேனியைப் பற்றிப் படத்துடன் எழுதி வெளியிட்டிருந்தேன். இதே ஆண்டில் மார்ச்சு மாதம் சமயபுரத்திற்கு அருகிலுள்ள கூத்தூர் கிராமத்துக்கு அழைக்கப்பட்டேன். அவ்வூர்க் கோயில் பூசாரி ஒரு செப்பேட்டை என்னிடம் தந்து படித்துத் தரச் சொன்னார். திருமலை நாயக்கர் காலச் செப்பேடான அதை நானும் மஜீதும் இணைந்து படித்தோம். பூசாரியிடம் செய்தியைத் தந்ததுடன், செய்தி இதழ்களுக்கும் தகவல் தந்தோம். கூத்தூர் கோயிலை ஆய்வு செய்தபோது, அங்கிருந்த ஓர் இலிங்கத்திருமேனி என்னைக் கவர்ந்தது. ஆண்குறியைப் போலவே அமைக்கப்பட்டிருந்த அது போல் இலிங்கத்திருமேனியை அதற்குமுன் நான் எங்கும் கண்டதில்லை.

கூத்தூர்க் கோயிலில் ஒரு செப்புத்திருமேனி இருந்தது. அதைக் கழுத்துவரை பட்டுத் துணி கொண்டு மூடியிருந்தனர். கோயிலைப் பற்றிக் கட்டுரை எழுதித் தருமாறு வேண்டிய பூசாரி, அத்திருமேனியைக் கொற்றவை என்று கூறி, அதைப் பற்றிச் சிறப்பாக நான்கு வார்த்தை எழுதுமாறு சொன்னார். அந்தத் திருமேனியை முழுவதுமாகப் பார்த்தால் தவிர, அது பற்றி எழுத முடியாது என்று கூறினேன். 'பூர்வ காலமாக அது இப்படித்தான் கழுத்துவரை துணியால் மூடப்பட்டுள்ளது. புதியவர்கள் முன் துணி நீக்கிக் காட்டிப் பழக்கமில்லை' என்று கூறிய பூசாரி, 'அந்தத் திருமேனி ஊர் உலாச் சென்றால்தான் காணிக்கை மிகுதியாகக் கிடைக்கிறது' என்றும் கூறினார். துணியை நீக்கினால் மட்டுமே திருமேனியின் சிறப்புக் குறித்து ஏதும் சொல்லமுடியும் என்று நான் உறுதிபடக் கூறியதால், வேறுவழியின்றித் துணியை அகற்றினார். நான் அதிர்ந்து போனேன். காரணம், துணி நீக்கிய அந்தத் திருமேனி கொற்றவையாக இல்லை; விஷ்ணுவாக இருந்தது!

ஓர் ஆண் இறைத்திருமேனியைக் கழுத்துவரை துணி சுற்றிப் பெண் இறைத் திருமேனியாகக் காட்டிக் காணிக்கை பெற்றுக்கொண்டிருக்கும் அந்தக் கோயில் நடைமுறை என்னை ஆழ வருத்தியது. பின்னாளில் இது போன்ற நடைமுறைகளைப் பல கோயில்களில் பார்க்க நேர்ந்தது. தஞ்சாவூர் இராஜராஜீசுவரத்திலேயே நாகர்கள் கழுத்துவரை புடவை சுமந்து நாககன்னிகளாக மாற்றப்பட்டிருந்தமையைக் கண்டேன். கோயில் வழிபாடுகளிலுள்ள இத்தகு அவலங்களை யார் சரிசெய்வது? 'எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே' எனும் பாடலடிதான் இன்றளவும் எனக்குள் எப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

கூத்தூர்ப் பூசாரியிடம் நெடுநேரம் பேசி விஷ்ணு, கொற்றவை இரண்டும் வெவ்வேறு திருமேனிகள் என்பதைப் புலப்படுத்தினேன். விஷ்ணுவை, விஷ்ணுவாக வணங்குமாறு வேண்டினேன். அவர் நான் கூறியதையெல்லாம் புரிந்துகொண்டது போலவே என்னை வழியனுப்பி வைத்தார். ஆனால், விஷ்ணு மீண்டும் கொற்றவையாகவே மாறுவார் என்று என் உள் மனம் கூறியது. தெய்வங்களைவிடக் காணிக்கை பெரியது அல்லவா!

1984 அக்டோபரில் முள்ளிக்கரும்பூரில் இருந்து மீண்டும் அழைப்பு வந்தது. அவ்வூரின் புறப்பகுதியாக இருந்த கொத்தட்டையின் குட்டைக்கரையில் துணி துவைக்கும் கல்லாகப் பயன்பட்டுவந்த ஒரு சிற்பத்தைக் காப்பாற்ற நானும் நண்பர் இரா. இராஜேந்திரனும் அங்குச் சென்றோம். வானொலி நண்பர் திரு. தே. சந்திரனும் வந்திருந்தார். ஊர் இளைஞர்கள் துணையுடன் அந்தத் துணி துவைக்கும் கல்லைப் புரட்டினோம். என்ன கொடுமை! பத்தாம் நூற்றாண்டினதாகக் கொள்ளத்தக்க சமண தீர்த்தங்கரர் சிற்பமாக அது இருந்தது. சமணச் சிற்பங்களைப் பற்றிய அடிப்படைத் தெளிவுகள் ஏதும் இல்லாமையின் அந்தத் தீர்த்தங்கரரை யார் என்று அடையாளப்படுத்தக் கூடவில்லை. ஊர் மக்களிடம் பேசி அந்தச் சிற்பத்தை சிராப்பள்ளி அருங்காட்சியகத்திற்குக் கொணரும் முயற்சி தொடங்கியது. அப்போது ஊர் நிருவாக அலுவலர் மாவட்ட ஆட்சித் தலைவரின் அனுமதி பெறவேண்டும் என்றார்.

அன்று மாலையே மாவட்ட ஆட்சித் தலைவரைச் சந்திக்கச் சென்றேன். திரு. பி. நடேசன் மாற்றலான பிறகு, திரு. வ. விசுவநாதன் ஆட்சித் தலைவராகப் பொறுப்பேற்றிருந்தார். அவரைச் சந்தித்த அந்த மாலை நேரம் மறக்கமுடியாதது. வரலாற்றில் ஆர்வம் கொண்டிருந்த அப்பெருந்தகை என்னைக் கேள்விப்பட்டிருந்தார். அதனால், அன்புடன் உரையாடினார். அவருடைய கல்லூரிப் படிப்பு, நா. பா. வின் நூல்கள் எனப் பலவும் பேசினோம். நா. பா. வின் மணிபல்லவம் அவரை மிகவும் கவர்ந்த நூலென்று கூறினார். எனக்கும் அந்த நூல் பிடிக்கும் என்பதால், சுரமஞ்சரி பற்றி நிறையவே பேசினோம். கொத்தட்டை நிலை கூறியதும், உடனே ஆவன செய்யுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

கொத்தட்டைத் தீர்த்தங்கரரால் ஓர் இனிய மனிதரின் நட்பு கிடைத்தது. அந்த இனிய மனிதரால் கொத்தட்டைத் தீர்த்தங்கரரும் துவைப்பில் இருந்து தப்பினார். அரசு அருங்காட்சியகத்திற்கு அவரைக் கொணர்ந்து சேர்த்ததும் மஜீது வந்து பார்த்தார். திரு. கணபதி சிற்பியின் சிற்பச் செந்நூல் கொண்டு, தீர்த்தங்கரர் மகாவீரராகலாம் என்று அடையாளப் படுத்தினோம். செய்தி இதழ்களுக்கும் தகவல் தந்தோம். 27. 10. 1984 இந்தியன் எக்ஸ்பிரஸில் செய்தி சிறப்பாக வந்திருந்தது. இராமர், மகாவீரர், புத்தர் மூன்று சிற்பங்களுமே ஏறத்தாழ ஒரே காலகட்டத்தைச் சேர்ந்தவையாக இருந்தமை குறித்து நானும் மஜீதும் நிறைய விவாதித்தோம். முள்ளிக்கரும்பூர், குழுமணி, எட்டரை உள்ளடங்கிய பகுதி சோழர் காலத்தில் சிறப்புக்குரிய பெருவழியாக இருந்திருக்கலாம் என்ற எண்ணம் என்னுள் உருவெடுத்தது.

1984 நவம்பரில் முள்ளிக்கரும்பூரில் இருந்து மற்றோர் அழைப்புக் கிடைத்து. இம்முறை, முள்ளிக்கரும்பூருக்கு எதிர்ப்புறமிருந்த மஞ்சாங்குளம் என்ற சிற்றூர் வயலில் தென்னை மரத்தின் கீழ்த் தோண்டியபோது ஒரு சிற்பம் வெளிப்பட்டிருந்தது. மஜீது, இராஜேந்திரனுடன் சென்று பார்த்தபோது, அது திருமால் சிற்பம் என்பதை அறிந்தோம். மாவட்ட ஆட்சித் தலைவரின் அநுமதி பெற்று கி. ஆ. பெ. விசுவநாதம் மேனிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களின் உதவியுடன் திருமாலைச் சிராப்பள்ளிக்குக் கொண்டுவந்தோம். இதுவும் பத்தாம் நூற்றாண்டுச் சோழர் சிற்பமாக விளங்கியது.

ஏறத்தாழ இதே காலகட்டத்தில் சிராப்பள்ளியிலிருந்த சக்தி சங்கத்தில் என்னைப் பேச அழைத்திருந்தார்கள். அச்சங்கத்தின் தலைவியாக இருந்த திருமதி செல்வி சந்திரசேகரன் மதுரையில் நாங்கள் வாழ்ந்த காலத்தே, என் சகோதரி சிவஅரசியின் வகுப்புத் தோழியாக இருந்தவர். செல்வியின் தங்கை மானமணி என் வகுப்புத் தோழியாக நான்காம் வகுப்புப் படித்தவர். இந்த உறவுகள் எல்லாம் திருமதி செல்வியைக் கண்டபிறகுதான் நினைவிற்கு வந்தன. இவை யாவும் தெரியாத நிலையிலேயே என்னை அழைக்க வந்த திருமதி செல்வி சந்திரசேகரன், பழைய நினைவுகள் புதுப்பிக்கப்பட்ட நிலையில் என்னை மிகுந்த அன்புடன் தம்பியாகக் கொண்டார். எப்போதுமே 'தம்பி' என்று பாசத்துடன் அழைப்பார் நான்கு மூத்த சகோதரிகளைப் பெற்ற எனக்கு அவர் ஐந்தாவது சகோதரியானார். அவருடைய ஒரே திருமகள்தான் என் முதல் மாணவியாக வந்து வாய்த்த திருமதி வாணி செங்குட்டுவன்.

அன்புடன்,
இரா. கலைக்கோவன்
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.