http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[179 Issues]
[1772 Articles]
Home About US Temples Facebook
Issue No. 45

இதழ் 45
[ மார்ச் 16 - ஏப்ரல் 17, 2008 ]


இந்த இதழில்..
In this Issue..

குறத்தியறை
திரும்பிப் பார்க்கிறோம் - 17
அப்பர் என்னும் அரியமனிதர் - 2
இராஜராஜனின் வாசுதேவனே நம:
கழனி சூழ் பழனம் பதி
Alathurthali in Malayadipatti
1000 ரூபாய்த் திட்டம்
நினைத்தது நடந்தது
இதழ் எண். 45 > கலைக்கோவன் பக்கம்
அப்பர் என்னும் அரியமனிதர் - 2
இரா. கலைக்கோவன்

தமிழ்நாட்டில் சமயப்புரட்சி செய்த பெருமை தேவார மூவரில் அப்பருக்கும் சம்பந்தருக்குமே உண்டு. சமணராக இருந்த முதலாம் மகேந்திரவர்மர் அப்பரால் சைவரானார். சம்பந்தரால் நெடுமாறப் பாண்டியன் சமணத்திலிருந்து சைவத்திற்கு வந்தார். காஞ்சியிலும் மதுரையிலும் சைவம் தழைத்தது. இந்த இருவரில் அப்பரால் மனமாறுதல் பெற்ற மகேந்திரரே தமிழ்நட்டின் மிகப்பெரும் கலைப்புரட்சிக்குக் காரணமானார். அதன் விளைவால் சமயப் புரட்சியோடு கலைப்புரட்சிக்கும் காரணமான பெருமை அப்பருக்கமைந்தது. 'செங்கல், மரம், உலோகம், சுதை இல்லாமல், பிரம்ம, ஈசுவர, விஷ்ணுகளுக்கு விசித்திரசித்தன் என்னும் மன்னன் லக்ஷிதாயதனம் என்னும் இக்கோயிலைக் கட்டுவித்தான்' என்னும் மண்டகப்பட்டுக் கல்வெட்டு தமிழ்நாட்டுக் கலைவரலாற்றில் திருப்புமுனையாய் அமைந்த மகேந்திரப் பொறிப்பாகும்.

இந்தச் சாதனையைச் செய்ய அந்த விசித்திரசித்தருக்குத் தூண்டுகோலாய் இருந்தவர் யார்? அப்பர் பெருமான்தானே! சமணராயிருந்தபோது தோன்றாத குடைவரைச் சிந்தனை சைவரானதும் குணபரருக்கு விளைந்தது ஏன்? அப்பரே காரணி என்பதினும் காரணம் வேறிருக்க முடியுமா?

தமிழ்நாட்டுக் கற்றளிகளெல்லாம் அப்பரைக் கையெடுத்துக் கும்பிடவேண்டும். அவற்றின் பிறப்பிற்கு அப்பர் மௌனமூலம். இதுபோன்ற சாதனையைத் தமிழ்நாட்டுச் சமயப் பெரியார்கள் யாரும் எந்தக் காலத்தும் சாதித்தாரிலர், அப்பரைத் தவிர. 'பாத்திரமறிந்து பிச்சையிடு' என்பது இதைத்தான். சம்பந்தரும் பிச்சையிட்டார். ஆனால் அது பிறருக்காக இட்ட பிச்சை; மங்கையும் அமைச்சரும் வேண்டிக்கொண்டதால் விழுந்த பிச்சை. அதனால்தான் அது சமய மாற்றத்தோடு நின்றுவிட்டது. ஆனால் அப்பர் பிச்சையிடும் நோக்கோடு ஏதும் செய்யவில்லை. பிச்சையிடுமாறும் அவரை யாரும் வேண்டவில்லை. அவர் பட்ட துன்பங்கள் மகேந்திரர் என்னும் சரியான பாத்திரத்தில் பொருத்தமான பிச்சையாய் விழுந்தன. சம்பந்தர் போட்டியில் வென்றார். அப்பரோ போராடியே வென்றார். அந்தப் போராட்டப் பாடுகள் கண்டு மனம் மாறியதால்தான் மகேந்திரர் ஆழமான சைவரானார்; அணுக்கச் சைவரானார்.

ஈசன் கணக்கெழுதுகிறான் எனும் சித்தாந்தத்தை முதன்முதலாக முன்வைத்தவர் அப்பர். 'தொழுது, தூமலர்த் தூவித் துதித்து நின்று, அழுது காமுற்று அரற்றுகின்றாரையும் பொழுதுபோக்கிப் புறக்கணிப்பாரையும் எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே' எனும் அவரது எச்சரிக்கைக் குரல், 'நடையை மெய்யென்று நாத்திகம் பேசாதே' என்று உலகாய்தத்திற்கு மறுப்பாகவும் எழுந்துள்ளது. நாத்திகம் இலக்கியப் பேறு பெற்றிருக்கும் முதலிடமாக இதைக் கொள்ளலாம்.

தலவரலாறு எனும் புதிய துறையைத் தொடங்கிவைத்தவர் அப்பர். 'மங்கலங்குடி ஈசனை மாகாளி, வெங்கதிர்ச் செல்வன், விண்ணொடு மண்ணும் நேர் சங்கு சக்கரதாரி, சதுர்முகன், அங்கு அகத்தியனும் அர்ச்சித்தாரன்றே' என்று அவர் வரிசைப்படுத்தும்போதே தலவரலாறுகளுக்குத் தளம் அமைந்துவிடுவதை யாரே மறுக்கமுடியும்? ஒரு பதிகம் முழுவதும், பாடலுக்கொரு தொண்டர் அல்லது பக்தரின் பத்திமைப் பாடி அந்தப் பதிகத்தையே திருத்தொண்டத் தொகையாக்கிய முதற்கவிஞர் இந்திய அளவில் அப்பர் பெருமான்தான். பிரமன், மார்க்கண்டேயன், சண்டீசர், கோச்செங்கணான், திருமால், சாக்கியர், கண்ணப்பர், மாவலி, கணம்புல்லர், இராவணன் எனப் பன்முகப்பட்ட பத்துப்பேரும் ஒரு பதிகத்துள் ஒன்றாகிய இந்தத் தொண்டர்தொகையைப் பின்பற்றியே சுந்தரரின் தொண்டர்தொகை வளர்ந்ததெனலாம்.

சரியை, கிரியை பற்றி அதிகம் பேசி அவற்றையே முன்னிறுத்திப் பாடிய முதல்வர் அப்பர். திருக்கோயில் நடைமுறைகளை முதன்மைப்படுத்தி, வகைப்படுத்தி, வரிசைப்படுத்திய முதற்கவிஞரும் அப்பரே. ஆறாம் நூற்றாண்டுக் கோயில் வழிபாடு, ஊர்வலம், படையல், திருமஞ்சனம், விழாக்கோலமென அனைத்தும் பாடித் தம் பதிகங்களை வரலாறாக்கிக் கொண்ட வித்தகர் அவர்.

சம்பந்தர் உமையிடம் பாலுண்டதால் தெய்வக் குழந்தையானார். அதனால் நல்லூர்ப் பெருமணத்தில் சுடரில் கலந்தார். சுந்தரரோ தெய்வலோகத்திலிருந்து காதலைத் தொடர்வதற்காகவே பூமிக்கு வந்தார். அழைக்க வந்த வெள்ளையானையேறி சிவலோகம் சேர்ந்தார். அப்பர் மட்டுமே மனிதராய்ப் பிறந்து, மனிதராய் வாழ்ந்து, மனிதராய் மறைந்தார். அவர் சுகங்களுக்கு அப்பாற்பட்டவர். அதனால்தான் சம்பந்தருக்கும் சுந்தரருக்கும் பக்தர்கள் கிடைத்தனர். அவர்கள் பாடுவதும் உறங்குவதுமாய்க் காலம் கழித்தனர். ஆனால் அப்பருக்கோ அப்பூதி என்னும் ஒரு தொண்டர் கிடைத்தார். அவர் மக்கள் பணியே மகேசன் பணியென வாழ்ந்தார்.

இத்தனை அரிய முதல்களுக்கும் புகழிற்கும் காரணரான அப்பர் யார்? அவர் ஓர் அரிய மனிதர். தேய்ந்தே வளர்ந்தவர். முயற்சிகளின் மொத்த வடிவம்! உணர்வுகளின் முழுக்கலவை. சேக்கிழாரால் வண்ணம் பூசப்பெற்றுச் சற்றே வடிவம் மாறியவர். இந்தப் பெருமகனாரை முழுமையாகவும் சரியாகவும் பார்க்க விரும்புவார்க்கு அவர் பதிகங்களே பாதை.

அப்பரின் வாழ்கை அழுகையும் அரற்றலுமாய்த் துன்பத்தில் தொடங்கிய வாழ்க்கை. சுடுகின்றது சூலை, தவிர்த்தருள்வீர் என்று மன்றாடித் தொடங்கிய தொண்டு வாழ்க்கை. 'அடியேன் உமக்கு ஆளும்பட்டேன்; தன்னை அடைந்தார் வினை தீர்ப்பதன்றோ தலையாயவர் தம் கடன்' என்று இறைவனுக்கே கடமையுணர்த்தித் தம்மை அடையாளம் காட்டிப் பணிந்த வாழ்க்கை. 'அடியார் படுவது இதுவேயாகில், எம் போலிகள் உம்மை இனித் தெளியார்' என்று ஆத்திரமும் அழுகையுமாய் இறைவனைச் சினந்துகொண்ட உணர்வு வாழ்க்கை. அப்பருக்குச் சினம் வருமா?

'பாலனாய்க் கழித்த நாளும், பனிமலர்க் கோதையர்தம் மேலனாய்க் கழித்த நாளும், மெலிவோடு மூப்புவந்து கோலனாய்க் கழித்த நாளும் குறிக்கோள் இலாது கெட்டேன்' என்று தம்மையே நொந்து, இழந்த வாழ்க்கையின் இழிவுக்கு வருந்திய அப்பருக்கா சினம்? இயல்பான கேள்விதான். நெருடுகிறது என்பதும் உண்மைதான். 'கற்றதேல் ஒன்றும் இல்லை. காரிகையாரோடு ஆடிப் பெற்றதேல் பெருந்துன்பம், ஐவர் வந்து முறை முறை துயரம் செய்ய அற்று நான் அலந்து போனேன்' என்று பயனற்றுப் போன வாழ்நாட்களுக்காகக் குமுறி வருந்திய அப்பர் தன்னிரக்கவாதியல்லவா? அவருக்கேன் சினம்? எப்படி வந்தது, ஏன் வந்தது இந்தச் சினம்?

சுற்றிலும் கிடந்த சமுதாயம் அவரைச் சினம்கொள்ளச் செய்தது. திரிந்தும், கெட்டும், நெறிமாறியும் இருந்த மனிதச் சிந்தனைகள் அவரை வருத்தின. வீட்டுப் பணி தவிர வேறொன்று நினையாத குடும்பிகள் அவரை அஞ்சவைத்தனர். உண்பதும் இன்பம் கொள்வதும் உறங்குவதும்தானா வாழ்க்கை? சொல்லித் திருந்துவார்களா இவர்கள்? தொடக்கத்தில் சொல்லித்தான் பார்த்தார், சொல்லின் செல்வராயிற்றே.

'நாளும் நம்முடைய நாள்கள் அறிகிலோம். ஆளும் நோய்கள் ஓர் ஐம்பதோடு ஆறெட்டும் ஏழைமைப்பட்டு இருந்து நீர் நையாதீர், கோளிலி அரன் பாதமே கூறுமீர்'. பொதுவாகக் கூறினார். மக்கள் கேட்கவில்லை. அதனால் கூவியழைத்துக் குந்தியிருந்து சொன்னார். 'இருந்து சொல்லுவன் கேண்மின்காள் ஏழைகாள். அருந்தவம் தரும் அஞ்செழுத்து ஓதினால் பொருந்துநோய் பிணி போகத் துரப்பதோர் மருந்தும் ஆகுவார் மன்னும் மாற்பேறரே'. 'சாற்றிச் சொல்லுமின் கேண்மிண் தரணியீர்! ஏற்றின் மேல்வரும் செம்பொன் ஆவர் மாற்பேறரே'. 'மனிதர்காள் இங்கே வம், ஒன்று சொல்லுகேன். கற்றுக் கொள்வன வாயுள; நாவுள. இட்டுக் கொள்வன பூவுள; நீருள. கற்றைச் செஞ்சடையான் உளன். நாம் உளோம். எற்றுக்கே நமனால் முனி உண்பதே'.

இருந்து சொன்னார், மக்கள் கேட்கவில்லை. சாற்றிச் சொன்னார்; அவர்கள் செவிசாய்க்கவில்லை. 'வம்' என்று அழைத்தும் சொன்னார்; 'ஒன்று சொல்லுகேன்' என்று குறித்தும் சொன்னார். கேட்டனரா மக்கள்? பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டல்லவா! எத்தனை புகன்றும் ஏதும் பயனில்லையே என்ற வருத்தம், சிந்திக்கச் சிந்திக்கச் சினமானது. 'நடலை வாழ்வு கொண்டு என்செய்தீர் நாணிலீர்? பூக் கைகொண்டு பொன்னடி பேற்றிலார் நாக்கைக் கொண்டு அரன் நாமம் நவில்கிலார், ஆக்கைக்கே இரை தேடி அலமந்து காக்கைக்கே இரையாகிக் கழிவரே!' எந்த அளவிற்கு உள்ளம் பொங்கியிருந்தால் இந்த அளவிற்குச் சொற்கள் பிறந்திருக்கும்!

செய்யவேண்டுவன செய்யாவிட்டால் என்னவாகும் நிலைமை என்பதை முடிவாகவும் வலியுறுத்தியும் சொல்லுவது போலச் சொன்னவர், 'பிணிகொள் வார்குழல் பேதையர் காதலால் பணிகள் மேவிப் பயனில்லை. பாவிகாள் அணுகவேண்டில் அரன்நெறி!' என்று வழியும் காட்டினார். மக்கள் அப்போதும் பின்பற்றவில்லை. 'ஏழைகாள்' என்று அழைத்தார்; 'தரணியீர்' என்று மரியாதை தந்தார். 'மனிதர்காள்' என்று அடையாளம் காட்டினார். புரிந்து கொள்ளவில்லை மக்கள். மெத்தனம் தொடர்ந்தது. அதனால்தான், 'பாவிகாள்' என்று கடிந்துரைத்தார். ஒருவகையில் பார்த்தால், இன்று பிற சமய அறவுரைகளில் பெரிதும் பயன்படுத்தப்படும் 'பாவிகாள்' என்ற அந்தச் சொல்லைக்கூட மக்கள் மனந்திரும்ப வேண்டுமென்ற நோக்கில் முதன்முதலாகப் பயன்படுத்தியவர் அப்பர் பெருமான்தான்.

'பாவிகாள்' என்று அழைத்தும் மனந்திரும்பாத மக்கள் அப்பரைச் சினத்தின் உச்சிக்கே அழைத்துச் சென்றனர். அதனால்தான் அமைதியே உருவான அப்பர் பெருமான், 'சாத்திரம் பல பேசும் சழக்கர்காள் கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்? பாத்திரம் சிவனென்று பணிதிரேல்' என்று பொங்கியெழுந்தார். இது அவரின் இறுதி அறைகூவல். இது மக்களுக்காய் மட்டுமல்ல, மக்கள் மனத்தைக் குழப்பிக் கொண்டிருந்த சாத்திர சமயவாதிகளுக்கும் சேர்ந்து விழுந்த அடி.

'சிவனென்று பணியச் சொன்னீர், பணிந்தோம்; அப்பர் பெருமானே, இனி என்ன செய்யலாம்?' மக்களுள் ஒருசிலராவது அப்பரிடம் இப்படிக் கேட்டிருக்க வேண்டும். அதனால்தான் அவர் வழிகாட்டியானார்.

அப்பருக்குத் தெரியும், ஞானமே முடியாத விஷயம், இதில் யோகத்திற்கு எங்கே போவது? ஆச்சார்யர்களுக்கே கைவராத இந்த இரண்டையும் அடித்தொண்டர்கள் எங்கிருந்து பெறுவது? ஞானம், யோகம் இரண்டுமே தேடினால் கிடைக்காதவை. அவை தாமே வருவன. பாடுகளுக்குப் பின் கிடைக்கப்பெறுவன. அதனால்தான் அப்பர் மக்களால் முடிந்ததைச் செய்யச் சொன்னார். சரியை, கிரியை என்னும் ஏணிப்படிகளை ஏறச் சொன்னார். அவை போதுமென்று அவர் நினைத்தார். படியேறவிட்டால் போதும், விழுந்தும் எழுந்தும் மேலே போய்ச் சேர்ந்துவிடுவார்கள் என்று அவருக்குத் தெரியும். அவரும் அப்படி வந்தவர்தான். அநுபவம் கைகொடுத்தது.

தலையில் தொடங்கிக் கண், செவி, மூக்கு, வாய், நெஞ்சு, கைகள், கால்கள் என்று உடலின் உறுப்புகள் ஒவ்வொன்றாலும் மனிதன் தன்னைப் படைத்த எம்பெருமானுக்குச் செய்யவேண்டுவதெல்லாம், செய்யக்கூடியதெல்லாம் சொன்னார். தமிழ்நாட்டில் அவருக்கு முன்போ அல்லது தொடர்ந்தோ யாரும் காட்டிடாத ஒப்பற்ற வழிமுறைகளைக் கூறும் அப்பரின் திருவங்கமாலை, அவரை அடையாளம் காட்டும் அற்புதமான பதிகமாய் அமைந்தும், அதிகம் பேசப்படாத பதிகமாகவே விடுபட்டுப்போனது.

(தொடரும்)
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.