http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[177 Issues]
[1753 Articles]
Home About US Temples Facebook
Issue No. 51

இதழ் 51
[ செப்டம்பர் 16 - அக்டோபர் 17, 2008 ]


இந்த இதழில்..
In this Issue..

வரலாறு கொடுக்கும் பாடங்கள்
காவற்காட்டு இழுவை!
தொட்டான்! பட்டான்!
திரும்பிப் பார்க்கிறோம் - 23
சிதையும் சிங்காரக் கோயில்கள் - 5
Virtual Tour On Kundrandar Koil - 3
அவர் - ஐந்தாம் பாகம்
கடமை... முயற்சி... பெருமிதம்... நெகிழ்வு...
மான்விழியே!! அள்ளும் அழகே!!
சொற்கள்தான் எத்தனை பொய்யானவை!
இதழ் எண். 51 > தலையங்கம்
வரலாறு கொடுக்கும் பாடங்கள்
ஆசிரியர் குழு
வரலாற்றுக்குப் பல முகங்களுண்டு. பல கோணங்களுண்டு.

அது இறந்த காலத்தில் மட்டும் வாழும் பொருளல்ல. இறந்த காலத்தில் வேர் பாய்ச்சி நிகழ்காலத்தை வழி நடத்தும் சக்தி அது.

கல்வெட்டுகளும் பண்டைய அரசர்களின் சரிதங்களும் மட்டும் வரலாறாகிவிடா. அத்தனை சிறிய குப்பிக்குள் வரலாறு எனும் பூதத்தை அடைத்துவிடவும் முடியாது. அது பல துறைகளில் வேர் பரப்பி - வாழ்வின் பல அங்கங்களிலும் கிளைபரப்பி நிற்கும் ஒரு பரந்த பொருள் ஆகும்.

இந்தக் காரணங்களினால்தான் வரலாறு சென்ற நூற்றாண்டில் சமுதாய வரலாறு, பொருளாதார வரலாறு, மத வரலாறு, கலை வரலாறு, இலக்கிய வரலாறு... ஏன், மனவியல் வரலாறு, உளவியல் வரலாறு என்று நுட்பம் மிகுந்த துறைகளாகப் பரிமளிக்கத் துவங்கியிருக்கிறது.

இந்தப் பின்னணியில், சமீப காலங்களில் பெரிதும் சிக்கலுக்கு உள்ளாகி வரும் உலகப் பொருளாதாரப் பிரச்சனை பல கேள்விகளை எழுப்புகிறது.

பன்முகங்களையும் பல சிக்கலான சமன்பாடுகளையும் உள்ளடக்கி, இந்தியா உட்பட ஏறக்குறைய உலகம் முழுவதிலும் பல்வேறு அதிர்வலைகளைத் தொடர்ந்து எழுப்பியபடியிருக்கும் இந்தப் பிரச்சனையை முழுவதுமாகப் புரிந்துகொள்வது பொருளாதார விற்பன்னர்களுக்கே மிகுந்த சிரமமாக இருக்கிறதெனில் பொது மக்கள் இதனைப் புரிந்து கொள்வது எவ்வாறு? ஏதோ கெடுதல் நடந்துகொண்டிருக்கிறது - நமது வேலைக்கோ அல்லது சந்தையில் நாம் முதலீடு செய்து வைத்திருக்கும் பணத்திற்கோ ஆபத்து - என்கிற வகையில் மட்டும்தான் அவர்கள் இதனைப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்தப் பிரச்சனை என்றில்லை - கடந்த இருபது இருபத்தைந்து ஆண்டுகளில் தொடர்ந்து பல்வேறு விதமாகப் பொருளாதாரப் பிரச்சனைகள் பல்வேறு மட்டங்களில் விதவிதமாக எழும்பிய வண்ணம் இருக்கின்றன. ஹர்ஷத் மேத்தா ஊழல் முடிந்தால் நிதி நிறுவன ஊழல் தலை எடுக்கிறது. அதனை அடக்கினால் ஹவாலா பூதம் கிளம்புகிறது. ஒன்றை அடக்கினால் மற்றொன்று. இப்படித் தொடர்ச்சியாக நிகழ்ந்துகொண்டிருக்கும் நிகழ்வுகள் ஏதோ இயற்கையின் சதித்திட்டத்தால் நிகழ்ந்தவை என்று ஒரேயடியாக நிராகரித்துவிட முடியாது. மேலும் சரித்திரத்தில் இதுவரை காணாத அளவுக்குச் சமீப காலங்களில் இத்தனை பூதாகரமான பிரச்னைகள் எழுவதும் பல மில்லியன் டாலர்கள் அல்லது பல கோடிக்கணக்கான ரூபாய்கள் காற்றில் பஞ்சுபஞ்சாய் மாயமாகி மறைவதையும் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை.

சமீபத்திய பிரச்சனையின் வேர்கள் அமெரிக்கக் கூட்டமைப்பு நாடுகளில் தொண்ணூறுகளில் வேர்கொண்ட சப் பிரைம் கிரைசிஸ் (sub prime crisis) என்று வர்ணிக்கப்பட்டாலும் உலகளவிலான இதன் பாதிப்புக்களைக் கவனிக்கும்போது பிரமிப்பாக இருக்கிறது. பொருளாதார மேதைகளும் நிபுணர்களும் நிதித்துறை நிறுவனங்களும் மத்திய அமைச்சர் பெருமக்களும் "அதெல்லாம் ஒன்றுமில்லை - சரியாகிவிடும்!", "தீ காட்டின் அந்தப் பக்கத்தில்தான் எரிந்து கொண்டிருக்கிறது - இங்கு எரியாது!" என்றெல்லாம் சத்தியப் பிரமாணங்கள் செய்வதும் பொதுமக்களைக் குழப்பத்திலும் பீதியிலும் ஆழ்த்திக்கொண்டிருக்கிறன்றன.

ஆனால், பெரும்பாலான மக்களைப் பாவம், அவர்களின் அன்றாடப் பிரச்சனைகள் ஆட்கொண்டு விடுவதால் இத்தகைய சிக்கல்களைப் பற்றி அதிகம் சிந்தித்து மண்டையைக் குழப்பிக் கொள்வதில்லை. "அதுதான் சரியாகிவிடுமென்று சொல்கிறார்களே - அதனை நம்ப வேண்டியதுதான்!" என்பதுடன் நிறுத்திக்கொள்கிறார்கள்.

எனினும் வரலாற்றுப் பின்புலத்தில் பின்வரும் கேள்விகள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

- பொருளாதார உலகமயமாதல், உண்மையாகவே பொதுமக்களுக்கு நன்மை பயக்கிறதா? அல்லது பொதுமக்களில் "ஒரு சிலருக்கு" மட்டும் நன்மை பயக்கிறதா?

- இதனை முன்னிறுத்திக் கொள்கைகளை வகுக்கும் அரசாங்கங்களும் அமைச்சர்களும் இதன் பல்பரிமாணத் தன்மையை - சாதக பாதகங்களை - உண்மையில் புரிந்துகொண்டுதான் கொள்கைகளை வகுக்கிறார்களா? அல்லது "கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்துவிடு - மற்றவற்றை நான் கவனித்துக் கொள்கிறேன்!" என்கிறவாறு செயல்படுகிறார்களா?

- "உலகமயமாதல் - காலத்தின் கட்டாயம்" என்கிற வாதத்தில் எந்த அளவிற்கு உண்மை உள்ளது? அது உண்மையெனில், உலகமே கையெழுத்துப் போட்ட அணு ஆயுதக் கொள்கையில் இந்தியா மட்டும் எப்படி தனிக்கொடி பிடிக்க முடிந்தது?

மனை மற்றும் வீட்டு விலைகள் எப்பொழுதும் ஏறிக்கொண்டே இருக்கும், அவை ஒரு போதும் இறங்கவே இறங்காது என்னும் முட்டாள்தனமான வாதத்தைப் பாமரர் மட்டுமல்லாது பண்டிதரும் நம்பியது ஏன்? ஜப்பானில் தொண்ணூறுகளில் இதே போன்ற நிலைமை உண்டாகி நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைத்த வரலாற்றை ஏன் எவரும் அதிகம் பேசுவதில்லை? இன்று அமெரிக்காவில் உண்டான அதே சப் பிரைம் பிரச்சனை நமது நாட்டிலும் உண்டாகாது என்பது என்ன நிச்சயம்? கடந்த இரண்டு மூன்று வருடங்களில் கோடிக்கணக்கில் முதலீடு செய்யப்பட்டுள்ள வீட்டு மனைகளின் கதி என்ன? அவற்றுக்குக் கடன் கொடுத்துள்ள HDFC மற்றும் ICICI போன்ற நிறுவனங்களின் கதி என்ன? வீடுகளை வாங்கிக் குவித்த மென்பொருள் தொழில்நுட்ப (IT) இளம் நட்சத்திரங்கள் கடன்களைக் கட்டமுடியாத சூழல் உருவானால் இந்த வங்கிகள் என்ன செய்யும்?

இடமும் நேரமும் வேண்டுமானால் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் நிகழ்வுகளும் விளைவுகளும் ஒரே சுழற்சிமுறையில்தான் இருக்கும் என்ற வரலாறு கற்றுத்தந்த பாடத்தை ஏன் மறந்தோம்? அல்லது "வரலாறு திரும்புகிறது" என்ற தொடரின் பொருளைச் சரியாகத்தான் புரிந்துகொண்டிருக்கிறோமா?

- "காலத்திற்கு உதவாதவை" என்று அரசியல்வாதிகளும் பொதுமக்களும் தூக்கியெறிந்த காந்தியப் பொருளாதாரம் பற்றிய எளிய சிந்தனைகளை ஏன் நாம் திரும்பிக்கூடப் பார்க்க மாட்டேன் என்கிறோம்? நமது நாட்டு ஜீவாதாரத்தைப் புரிந்துகொண்ட மிகச் சில அரசியல்வாதிகளுள் ஒருவரான அவரின் புகைப்படத்தை மட்டும் ஏன் வெட்கமில்லாமல் எல்லா இடங்களிலும் மாட்டி வைத்திருக்கிறோம்?

ஒன்று மட்டும் புரிகிறது. அது பண்டிதர்களானாலும் சரி - பாமரரானாலும் சரி, உழைத்துச் சிறிது சிறிதாகப் பணம் சேர்த்து இயற்கையாகப் பொருளாதாரத்தைப் பெருக்கிக் கொள்ளும் பொறுமை இன்று ஒருவருக்கும் இல்லை. பேராசை மனித மனதை ஆட்டிப் படைக்கிறது. எங்கே ஒரு ரூபாய் போட்டால் ஒரு மணி நேரத்தில் இரண்டு ரூபாய் கிடைக்கும் என்று சொல் - நான் சேர்த்து வைத்த பணத்தையெல்லாம் அங்கே கொட்டுகிறேன்! அது என்ன ஏது என்பதைப் பற்றியெல்லாம் எனக்குக் கவலையில்லை! என்பதுதான் தாரக மந்திரமாக இருக்கிறது. இன்ன ஊரில் ஒரு பழைய கிணறு இருக்கிறது - அங்கு பத்து ரூபாய் போட்டால் பத்து நாட்களில் பத்தாயிரம் ரூபாய் கிடைக்கிறது என்று எவராவது புரளி கிளப்பிவிட்டால்கூட அந்தக் கிணற்றை வைத்துக் குறைந்தது பத்து இலட்ச ரூபாய் சம்பாதித்து விடலாம் என்கிற அவல நிலைமை.

நமது நாட்டின் ஜீவாதாரம் என்ன? பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் எந்தெந்த வகைகளில் நாம் நமது பொருளாதாரத்தைக் காப்பாற்றி வந்திருக்கிறோம்? எத்தனையோ கொள்ளைக்காரர்களும் கொலைகாரர்களும் வந்து வேட்டையாடிவிட்டுச் சென்றபின்பும் எவ்வாறு இன்று வரை நாம் ஜீவித்திருக்கிறோம் என்பதைப் பற்றியெல்லாம் எவரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

கழைக்கூத்து நடந்துகொண்டிருக்கிறதா? சரி, அதில் எனக்கும் ஒரு பாத்திரம் கொடு. நானும் ஆடுகிறேன்! என்பதாகத்தான் நாடகம் நடந்துகொண்டிருக்கிறதுபோல் தெரிகிறது. விடிய விடியக் கூத்து நடந்தாலும் ஒரு கட்டத்தில் கூத்து நின்றுதான் ஆகவேண்டும். அப்போதுதான் நாம் யாரென்பதை நாமே உணர்வோம். ஆனால் அந்த விடியல் வரும் வரை திருடர்கள் நம் வீட்டு வாசல்களை பத்திரமாக விட்டு வைத்திருப்பார்களா? என்பதே கேள்வி.

பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் வரலாறு என்றொரு பாடம் எதற்காகப் பயிற்றுவிக்கப்படுகிறது? கடந்த காலத்தில் நிகழ்ந்த தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு நிகழ்காலத்தைச் செப்பனிட்டுக் கொள்வதற்குத்தானே? இந்த மன்னர் இந்த ஆண்டு இன்னாருடன் போரிட்டு வென்றார் என்ற ரீதியில் மனப்பாடம் செய்து தேர்வெழுதி மதிப்பெண்களைப் பெற்றுத் தேர்ச்சி பெறுவதற்குப் பெயர் ஒருபோதும் கற்றல் ஆகாது. கல்வி என்பது வாழக் கற்றுக்கொடுப்பதாக இருக்கவேண்டும். தேர்வுகளையும் தாண்டி ஒரு வாழ்க்கை இருக்கிறது. அதில் வெற்றிபெறக் குருட்டு மனப்பாடம் மட்டுமே உதவாது. இன்று வாழும் உலகத்தைப் புரியவைத்து, நாளை வாழப்போகும் உலகை எதிர்கொள்ளப் பயிற்சியளிக்கும் கற்பித்தலே கல்வி.

வரலாற்றைப் புரிந்து படிப்போம். வாழ்வை வளமாக்குவோம்.

அன்புடன்
ஆசிரியர் குழு
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.