http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 52
இதழ் 52 [ அக்டோபர் 16 - நவம்பர் 17, 2008 ] இந்த இதழில்.. In this Issue.. |
தொடர்:
திரும்பிப் பார்க்கிறோம்
அன்புள்ள வாருணி, 1988ல் எங்களால் கொண்டாடப்பட்ட உலக மரபுரிமை வார விழாவின் நிறைவுநாள் நிகழ்வைச் சிராப்பள்ளிக் குழித்தலைச் சாலையிலிலுள்ள பழுவூர் சுந்தரேசுவரர் கோயிலில் அமைத்திருந்தோம். அக்கோயிலை ஒட்டி ஒரு பள்ளிக்கூடம் இருந்தது. அதன் நிருவாகத்தினர் பள்ளிக்குரிய கழிப்பறை ஒன்றைக் கோயில் வளாகத்திற்குள்ளேயே கட்டியிருந்தனர். கோயில் வழிபாடு இழந்திருந்தமையால் ஊராரும் அக்கட்டுமானம் பற்றிக் கவலைப்படவில்லை. தொல்லியல்துறையின் கீழ்ப் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக அக்கோயில் அறிவிக்கப்பட்டிருந்தபோதும், கேட்பார் இல்லாமையால் பள்ளி நிருவாகம் அப்படிச் செய்திருந்தது. மரபுரிமை வார விழாவன்றுதான் அந்தக் கழிப்பறை விஷயமே தெரியவந்தது. நானும் திரு. மஜீதும் பள்ளி நிருவாகத்திடம் பேசி, அவர்களே அக்கழிப்பறையை இடித்து அகற்ற உதவினோம். வேறு கழிப்பறை அவர்கள் வளாகத்திற்குள் கட்ட ஏற்பாடானது. சிதிலமாகியிருந்த சுந்தரேசுவரர் கோயிலை இ. ரெ. மேனிலைப்பள்ளி, தேசிய மேனிலைப்பள்ளி, திருப்பராய்த்துறை விவேகானந்தர் மேனிலைப்பள்ளி இவற்றைச் சேர்ந்த நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் தூய்மைப்படுத்திச் சீரமைத்தனர். திரு. ஆறுமுகமும் தொல்லியல்துறை நண்பர்கள் திரு. நடராசன், பொறியாளர் திரு. கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் மாணவர்கள் பணிமுடிக்கத் துணைநின்றனர். பழுவூர் சுந்தரேசுவரர் கோயில் - இடமிருந்து வலமாக கி. ஸ்ரீதரன், இரா. கலைக்கோவன், சிற்பி இராமன் நிறைவு நிகழ்விற்குத் தலைமையேற்கச் சிராப்பள்ளிக் காவல்துறைத் துணைத்தலைவர் திரு. சு. குமாரசாமியை அழைத்திருந்தோம். அவர் அருமையான மனிதர். காவல்துறையில் உயர் அலுவலராக இருந்தபோதும் மென்மையாகவும் இனிமையாகவும் பழகுபவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் இணையான புலமை பெற்றவர். அப்பெருந்தகையுடன் எனக்கேற்பட்ட அறிமுகம் பின்னாளில் சிறந்த நட்பாக வளர்ந்து தழைத்தது. அவர் சிராப்பள்ளியில் இருந்த காலம்வரை பல கூட்டங்களுக்கு அவரை அழைத்துப் பயன்கண்டிருக்கிறோம். நிறைவு நிகழ்வில் சிறப்புரையாற்றத் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் இயக்குநர் பொறுப்பில் இருந்த திரு.நடன. காசிநாதன் வந்திருந்தார். சிராப்பள்ளியில் விளங்கிய பாரதி சேவாசங்கம் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் அமைப்பாளரும் என் இனிய நண்பருமான மருத்துவர் ஸ்ரீதரை வாழ்த்துரை வழங்க அழைத்திருந்தோம். நிகழ்ச்சி மாலை 4. 30க்குப் பழுவூர்க் கோயில் வளாகத்திற்கு அருகிலேயே அமைந்தது. ஊர்மக்களும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களும் கூடியிருந்தனர். தமிழர் மரபுகள் பற்றிச் சுருக்கமாகக் குறிப்பிட்டுப் பேசிய திரு. சு. குமாரசாமி மாணவர்களின் பணியைப் பாராட்டி வாழ்த்தினார். உரையினிடையே எனக்கும் அவருக்கும் இடையில் மலர்ந்த நட்பை அன்பொழுகக் குறிப்பிட்டார். என் பணிகளும் பழகும் பாங்குமே அவர் உள்ளத்தில் எனக்கு இடம்பெற்றுத் தந்தன என்று அவர் குறிப்பிட்டபோது என் கண்கள் கலங்கின. அந்த உயர்ந்த மனிதரின் அன்பு வட்டத்திற்குள் இடம்பெற என்ன தவம் செய்தோம் என்று வியந்து மகிழ்ந்தேன். இந்திய தொல்லியல் அளவீட்டுத்துறையின் சார்பில் அதன் புதுக்கோட்டைப் பிரிவு பராமரிப்பு அலுவலர் திரு. வாசுதேவன் சிராப்பள்ளியில் மரபுரிமை வார விழாக் கொண்டாட்டத்தை நிகழ்த்த விரும்பியபோதும் திரு. சு. குமாராசாமியையே சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தோம். அந்நிகழ்ச்சிக்கு அறிஞர் கூ. ரா. சீனிவாசன் தலைமையேற்றார். சிராப்பள்ளிக் கீழ்க்குடைவரை வளாகத்தில் நிகழ்ந்த அந்த நிகழ்வின் போது, குடைவரை வளாகத்தைத் திரு. குமாரசாமிக்குச் சுற்றிக் காட்டத் திரு. சீனிவாசன், நான், திரு. வாசுதேவன் உடன் சென்றோம். அப்போது கொற்றவை வழிபாடு, சிவவழிபாடு பற்றியெல்லாம் பல கேள்விகளை எழுப்பிய காவல்துறைத் துணைத் தலைவர் கூ. ரா. சீனிவாசனே வியக்கும் அளவு பல இலக்கியச் சான்றுகளை முன்வைத்தார். சிலப்பதிகாரத்தில் அவர் கொண்டிருந்த தேர்ச்சியும் தெளிவும் எங்களை மயக்கின. விழா முடிந்து அவரை அனுப்பிய பிறகு நானும் திரு. சீனிவாசனும் பேசிக்கொண்ட நேரத்தில் குமாரசாமியின் அறிவுக் கூர்மையை அப்பெருந்தகை பாராட்டி மகிழ்ந்தார். கூ. ரா. சீனிவாசன் அறிவை நேசிப்பவர்; அன்புக்கு ஆட்படுபவர். திரு. குமாரசாமியும் அத்தகையவரே. அதனால், எளிதாக அவ்விரு பெருந்தகைகளும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு மதிப்பளித்து மகிழ முடிந்தது. பழுவூர்க் கூட்டத்தில் கலந்து கொண்ட நண்பர் ஸ்ரீதர் இறைப்பற்றும் இந்துமதக் கோட்பாடுகளில் ஆழ்ந்த நம்பிக்கையும் கொண்டவர். இளைஞர்களுக்கு நல்வழி காட்டவேண்டும் என்ற ஆர்வம் காரணமாக ஆண்டுதோறும் அவர்களுக்குப் பலவிதமான போட்டிகள் நிகழ்த்தி இராஜராஜர் பெயராலும் இளங்கோவடிகள் பெயராலும் பரிசுகள் வழங்கிவந்தவர். அவருடைய நட்பால் ஆர். எஸ். எஸ். இயக்கத்தின் அறிமுகம் கிடைத்தது. அந்த இயக்கத்தின் சார்பில் இந்தியாவின் வரலாற்றைப் புதுக்கி எழுதும் முயற்சி ஒன்று அப்போது மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதன் சார்பில் இ. ரெ. மேனிலைப்பள்ளியில் நடந்த கூட்டம் ஒன்றிற்கு ஸ்ரீதர் என்னை அழைத்துச் சென்றார். கூட்டத்தில் பேசப்பட்ட கருத்துக்களில் எனக்கு உடன்பாடில்லை. கூட்டம் முடிந்ததும் ஸ்ரீதர் என்னிடம் கருத்துக் கேட்டபோது என் நிலையை அவருக்கு விளக்கினேன். சார்புடைய வரலாறுகளில் எனக்கு என்றுமே ஈடுபாடு கிடையாது. கிடைக்கும் உண்மைகளை அவை எவ்வளவு கசப்பானவையாக இருந்தபோதும் அப்படியே தருதல் வேண்டும் என்ற கருத்துடையவன் நான். எதன் சார்ந்தும் பொய்யோ, மிகையோ, கற்பனையோ வரலாற்றில் இம்மியளவுகூடக் கலந்துவிடக்கூடாது என்பதில் பணிதொடங்கிய காலத்திலிருந்து மிகுந்த கவனத்துடன் இருந்துவருகிறேன். அதனால்தான், பெரும்பாலான வரலாற்று ஆய்வாளர்களுக்கு என்னைப் பிடிப்பதில்லை. எந்தக் குழுவிலும் என்னால் இருக்க முடிந்ததும் இல்லை. என் மண்ணின் வரலாற்றைப் பற்றி நான் அறியும் உண்மைகளை என் சுற்றத்துக்குத் தந்து செல்வது மட்டுமே என் கடமை. இந்தக் கொள்கையில் உறுதியாக இருந்தமையால் ஸ்ரீதர் மீது அளவற்ற அன்பிருந்தும்கூட அவர் இழுத்த இழுப்பிற்கு என்னால் செல்லக்கூடவ்ில்லை. ஆனால், அதற்காக அந்த இனிய மனிதரின் நட்பை இழக்கவும் நான் ஒருப்படவில்லை. தொடர்ந்து அவரிடம் நட்பாக இருந்தேன். சிராப்பள்ளி வந்திருந்த திரு. இராம. கோபாலனைச் சந்திக்க ஒரு முறை அழைத்துச் சென்றார். அவரிடம் பாழடைந்திருக்கும் கோயில்களைச் சீரமைக்க உதவுமாறு கேட்டுக்கொண்டேன். கல்வெட்டுகளைப் படியெடுக்கவும் பாதுகாக்கவும் அவருடைய இயக்கம் உதவவேண்டும் என்றும் கூறினேன். திரு.இராம. கோபாலன் நான் கூறியதையெல்லாம் கேட்டுக்கொண்ட போதும் இதுநாள்வரை அவை தொடர்பாக ஏதும் பதிலுரைக்கவில்லை. அவர் நோக்கங்கள் வேறாக இருந்தன. அவை எனக்கு உடன்பாடானவை அன்று. அதனால், அந்தச் சந்திப்பாலும் ஸ்ரீதர் பயன்பெறவில்லை. எப்படியாவது இந்து இயக்கங்களுடன் என்னை இணைத்துவிடவேண்டும் என்று கருதிய நண்பர் ஸ்ரீதர் அவருடைய ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியே அடைந்தார். எனினும், அவர்மீது நான் கொண்டிருந்த அன்போ, மதிப்போ சிறிதும் குறையவில்லை. அவருடைய கொள்கைகளும் நம்பிக்கைகளும் அந்த இனிய மனிதருக்கு அமைதியான முடிவைத் தரமுடியாமல் போனமைதான் மிகுந்த துன்பமானது. ஒரு நாள் இரவு மருத்துவமனையிலிருந்து இல்லம் திரும்பிக் கொண்டிருந்தபோது அவர் கொள்கைகளை விரும்பாத சிலரால் ஆர்வமும் துடிப்பும் நிறைந்த அந்த இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட கொடூரத்தைச் சிராப்பள்ளி சந்திக்க நேர்ந்தது. செய்தி அறிந்தபோது நான் அனுபவித்த துன்பமும் வேதனையும் சொல்லி மாளாது. சமுதாய நலம் நாடிய ஒரு நல்ல உள்ளம் மாற்றுக் கருத்தாளர்களின் தீவிரவாதத்திற்குப் பலியான கொடுமையை எங்களால் தாங்கமுடியவில்லை. அவர் இந்து சமயப் பற்றாளர்தான். ஆனால், தீவிரவாதப் போக்குடையவர் அல்லர். மற்ற சமயங்களை வெறுத்தவரும் அல்லர். அவற்றிற்கு எதிரானவரும் அல்லர். அவருடைய நெறியாளர்களில் என் இனிய நண்பர் மருத்துவர் மீ. சா. அஷ்ரப்பும் ஒருவர் என்பதொன்றே ஸ்ரீதரின் சமய நல்லிணக்கம் உணர்த்தப் போதுமானதாகும். எதற்காக அந்த இனியவரின் உயிர் பறிக்கப்பட்டது என்பது எங்களுக்கு விளங்காத புதிரே. 1989ன் தொடக்கம் எங்கள் ஆய்வு மையத்திற்கு இரண்டு சிறப்புகளைக் கொணர்ந்தது. என்னுடைய மூன்றாவது நூலான, 'சுவடழிந்த கோயில்கள்' சென்னையிலுள்ள பாரி நிலையத்தாரால் வெளியிடப்பட்டிருந்தது. பாரி நிலைய உரிமையாளர் திரு. க. அ. செல்லப்பனார் என் தந்தையாரின் நெருங்கிய நண்பர். தந்தையாரின் நூல்களைப் பலவாக வெளியிட்டுப் பெருமை கொண்டவர். அவருடைய மகன்களுள் ஒருவரான திரு. செ. இராதாகிருஷ்ணனும் நானும் சென்னை இலயோலா கல்லூரியில் ஒன்றாகப் புகுமுக வகுப்புப் பயின்றவர்கள். திரு. செல்லப்பனார் சிராப்பள்ளி வந்திருந்தபோது என்னைச் சந்தித்து தம் நிறுவனம் சார்பில் வெளியிட நான் ஒரு நூல் தரவேண்டும் என அன்புக் கட்டளையிட்டார். அவருடைய அன்பிற்கு ஆட்பட்டுத் தந்த நூல்தான் சுவடழிந்த கோயில்கள். அதில் இடம்பெற்றிருந்த சுவடழிந்த கோயில் என்ற முதற் கட்டுரை சிராப்பள்ளி வானொலி நிலையத்தாரால் 8. 1. 1984ல் ஒலிபரப்பப்பட்ட ஆய்வுரையாகும். செந்தமிழ்ச் செல்வி திங்கள் இதழில் 1986 ஏப்ரல் முதல் ஜூலைவரை இக்கட்டுரைத் தொடராக வெளியிடப்பட்டது. நூலில் இடம்பெற்றிருந்த முள்ளிக்கரும்பூர் ஒரு வரலாற்று விடியல் எனும் இரண்டாவது கட்டுரையும்செந்தமிழ்ச் செல்வியில் 1985 செப்டம்பர் முதல் 1986 பிப்ருவரி வரை வெளியான தொடர் கட்டுரைதான். மூன்றாவது கட்டுரையான கோனேரிராசபுரத்துக் குழப்பங்கள் செல்வியில் 1984 செப்டம்பர் முதல் டிசம்பர் வரை வெளியிடப்பட்டது. அழிந்துகொண்டிருக்கும் அழகுக் கோயில்கள் என்ற நான்காம் கட்டுரை 9. 6. 1985ல் சிராப்பள்ளி வானொலி நிலையத்தாரால் ஒலிபரப்பப்பட்டது. குடந்தைக் கீழ்க்கோட்டம் கல்வெட்டுகள் என்ற கட்டுரை செல்வியில் 1985 ஏப்ரல் முதல் ஆகஸ்டு வரை வெளியான ஆய்வுக்கட்டுரையாகும். இறுதிக் கட்டுரையான காலத்தால் அழியாத கலைக்கோயில் 20. 2. 1986ல் சிராப்பள்ளி வானொலி நிலையத்தாரால் ஒலிபரப்பப்பட்டதாகும். சுவடழிந்த கோயில்கள் என்னுடைய மூன்றாவது நூல் என்றபோதும் அதுதான் நூலாசிரியர் என்ற முறையில் எனக்கு ஊதியம் அளித்த முதல்நூல். என் முதலிரு நூல்களுக்கும் ஊதியமாக ஏதும் தரப்படவில்லை. திரு.செல்லப்பனார் அன்புடன் ஒரு தொகையை ஆசிரியர் என்ற முறையில் நான் பெறுமாறு செய்தார். அந்த நூல் தமிழ்நாடு அரசின் 1988ம் ஆண்டிற்கான சிறந்த நூல் பரிசைப் பெற்றது. புதுச்சேரிப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த பேராசிரியர் கி. வேங்கட சுப்பிரமணியம் பரிசளிக்க நான் பெற்றுக்கொண்டேன். 25. 1. 1989ல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தது. அடுத்த நாள் நடைபெறவிருந்த விடுதலை நாள் விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. உஜாகர் சிங் என்னைப் பராட்டிப் பரிசளிக்க இருப்பதாகவும் காலை எட்டு மணிக்குத் தவறாமல் அண்ணா விளையாட்டரங்கிற்கு வந்துவிடுமாறும் மாவட்ட ஆட்சித் தலைவரின் சிறப்பு உதவியாளர் அழைப்பு விடுத்தார். முற்றிலும் எதிர்பாராத இந்த அழைப்பு என்னையும் என் இல்லாத்தரையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது. விடுதலை நாள் விழாவில் சிறப்பிக்கப்படுவதை பெரும் பேறாகக் கருதினேன். 26. 1. 1989 காலை நான், என் வாழ்வரசி, பிள்ளைகள், திரு. ஆறுமுகம் அனைவரும் விழாவிற்குச் சென்றிருந்தோம். அணிவகுப்பு மரியாதைகள் முடிவுற்ற பிறகு, என் முறை வந்தது. என் பணிகளையும் உழைப்பையும் முறையாக அறிமுகப்படுத்திப் பேசிய பேராசிரியர் மேஜர் அரவாண்டி பரிசு பெற வருமாறு என்னை அழைத்தார். அரசு மரியாதைகளுடன் நான் பரிசு பெறுவது அதுவே முதல்முறை. மாவட்ட ஆட்சித்தலைவர் என்னை அன்புடன் தட்டிக்கொடுத்துக் கைகுலுக்கிப் பாராட்டு மொழிகள் சொல்லி என்னால் சிராப்பள்ளி மாவட்டமே பெருமை கொள்வதாகக் கூறியபோது என் உள்ளம் அந்தப் பெருமைகளுக்குப் பின்னால் இருந்த அத்தனை பேரையும் நினைத்தது. திரு. ஆறுமுகம், திரு. மஜீது, திரு. இராஜேந்திரன், திருமதி கீதா, பேராசிரியர் அரசு, ஒளிப்பட நண்பர் பாபு, வாணி, நளினி எல்லாரினும் மேலாக என் வாழ்வரசி, என் பிள்ளைகள் என அந்த வரிசை என் கண் முன்னால் நிழலாடியது. மாவட்ட ஆட்சித்தலைவர் தந்த சான்றிதழையும் பரிசையும் பெற்று நான் மீண்ட போது என் வாழ்வரசியின் முகத்தையே பார்த்தபடி வந்தேன். அவர் முகத்தில் ஒளிர்ந்த பெருமிதம் எனக்கு நிறைவளித்தது. என்னைக் காதலித்துக் கைப்பிடித்துச் சிராப்பள்ளிக்கு அழைத்து வந்த அவருக்குப் பெருமை தேடித் தந்த நிறைவு எனக்குள் இருந்தது. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மறக்கமுடியாதபடி அமையும் நிகழ்வுகள் பல இருக்கும். என் வாழ்க்கையில் அப்படி அமைந்த அருமையான நிகழ்வுகளுள் திரு. உஜாகர்சிங்கிடமிருந்து விடுதலை நாள் விழாவில் பரிசு பெற்றமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். திரு. உஜாகர் சிங் சிராப்பள்ளி வந்து பொறுப்பேற்றுக் கொண்டதுமே என்னுடன் தொடர்பு கொள்ள நேர்ந்தது. நடுவண் அரசின் பாதுகாப்புத் துறையிலிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு அது போழ்து ஒரு மடல் வந்திருந்தது. அதில், சிராப்பள்ளி கண்டோன்மென்ட் பகுதியில் இருக்கும் இராணுவத் தளத்தில் இராபர்ட் கிளைவ் வசித்த குடியிருப்புப் பகுதி இருப்பதாகவும் அதைக் கண்டறிந்து தெரிவிக்குமாறும் கேட்கப்பட்டிருந்தது. மாவட்ட ஆட்சித்தலைவர்அலுவலகத்தினர் திரு. உஜாகர் சிங்கிற்கு என் பெயரைச் சொல்ல, அவர் என்னை அழைத்து அப்பணியை மேற்கொள்ளச் செய்தார். நடுவண் அரசின் சார்பில் சென்றதால் இராணுவத்தளத்தின் அனைத்துப் பகுதிகளையும் பார்வையிட முடிந்தது. ஆங்கிலேயர் காலக் கட்டமைப்புகள் சில எந்த மாற்றத்திற்கும் உட்படாமல் அவ்வளாகத்தில் இருந்தன. அவற்றை அடையாளப்படுத்தியதுடன், கிளைவ் தொடர்பான நினைவுச் சின்னங்கள், கல்வெட்டுகள் இவற்றைத் தேடினோம். எதுவும் கிடைக்கவில்லை. ஆளுநரின் ஆலோசகராக இருந்த திரு. பத்மநாபன் சிராப்பள்ளிக்கு வருகை தந்தார். ஆழ்வார்கள் தொடர்பாக ஆராய்ச்சி செய்துகொண்டிருந்த அவருக்குத் திருப்பாணாழ்வார் சிற்பங்கள் பற்றித் தெரிந்துகொள்ளும் ஆவல் ஏற்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அவரது விருப்பம் தெரிவிக்கப்பட்டதால், இரண்டாம் முறையாகத் திரு. உஜாகர் சிங்கைச் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. உறையூர் நாச்சியார் கோயிலில் திருப்பாணாழ்வார் சிற்பம் இருப்பதைக் கூறினேன். அதைப் பார்க்கத் திரு. பத்மநாபன் விரும்பியதால், அவர் சிராப்பள்ளி வந்தபோது நானும் அவருடன் கோயிலுக்குச் சென்றேன். அறநிலையத்துறை ஆணையராக இருந்த திரு. கு. ஆளுடையபிள்ளை, திரு. பத்மநாபன், திரு. உஜாகர் சிங்கர் இவர்களுடன் சென்ற அந்தப் பயணம் மறக்கமுடியாதது. பத்மநாபன் என்னிடம் நிறையப் பேசினார். அவரது மொழி அறிவும் கவிதை நாட்டமும் என்னைக் கவர்ந்தன. திருப்பாணாழ்வார் சிற்பத்தைப் பார்த்ததும் பெரிதும் மகிழ்ந்த அவர், அதைப் படமெடுத்துக்கொள்ளச் செய்தார். என் ஆய்வுகள் பற்றிக் கேட்டறிந்தவர், என்னைப் பயன்படுத்திக் கொள்வதாகக் கூறினார். உறையூர் நாச்சியார்கோயில் திருப்பாணாழ்வார் உப்பு சத்தியாகிரக நினைவு நாளின்போது நானும் திரு. உஜாகர் சிங்கும் மூன்றாம் முறையாகச் சந்தித்தோம். சிராப்பள்ளியிலிருந்து வேதாரண்யம் புறப்பட்ட சத்யாகிரகக் குழுவினரை வழியனுப்பி வைத்த இடத்தில் ஒரு நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டிருந்தது. சீர் குலைந்திருந்த அதன் நிலை பற்றி நாளிதழொன்றில் எழுதியிருந்தேன். அதைப் படித்த திரு உஜாகர் சிங் அச்சின்னத்தைப் புதுப்பிக்க ஏற்பாடு செய்தார். அரசு விழாவாக உப்பு சத்தியாகிரக நாள் கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் நானும் அவரும் பங்கேற்றோம். திரு. உஜாகர் சிங் வரலாற்று நாட்டம் மிக்கவர். விழாவிற்குப் பிறகு பலமுறை அவரைச் சந்தித்து உரையாடியிருக்கிறேன். ஆவணக் காப்பகங்கள் பற்றி அவர் பகிர்ந்துகொண்ட செய்திகள் என்னை வியப்பிலாழ்த்தின. கும்பகோணத்தில் உதவி ஆட்சியராக இருந்தபோது அங்குள்ள அலுவலகக் காப்பகத்தில் அவர் பார்த்த பதிவுகளைப் பற்றிப் பலமுறை கூறியிருக்கிறார். ஆங்கிலேயர் காலப் புகையிலை வணிக வரலாறு குறித்து அங்குக் கிடைத்த ஆவணங்களிலிருந்து திரட்டியதாகக் கூறி அவர் தெரிவித்த செய்திகள் என்னைத் திகைப்பிலாழ்த்தின. மாவட்ட ஆட்சியரின் அலுவலகங்களில் உள்ள ஆவணக் காப்பகங்கள் ஒவ்வொன்றும் ஒரு வரலாற்றுக் களஞ்சியம் எனக் கூறிய அவர், வாய்ப்பிருந்தால் ஆவணக் காப்பகங்களிலும் ஆய்வு செய்யுமாறு என்னைக் கேட்டுக்கொண்டார். அதற்கான அனைத்து உதவிகளையும் தாம் செய்து தருவதாகவும் குறிப்பிட்டார். ஆர்வம் ஏற்பட்டபோதும் நான் அகலக் கால் வைக்க விரும்பவில்லை. என் ஆய்வுகளைக் கோயில் சார்ந்த வரலாறு என்று வரையறுத்துக்கொண்ட பிறகு அந்தக் கோடுகளைத் தாண்டிப் பயணிப்பது இயலுவதாக இல்லை. இதிலேயே என்னால் நான் விரும்பிய அளவிற்கு முன்னேற முடியாத போது மேலும், மேலும் எல்லைகளை விரித்துக்கொண்டே போவது துன்பமாகிவிடும் என்பதை நன்கு உணர்ந்திருந்தமையால் கோயில் ஆய்வுடன் நிறுத்திக் கொண்டேன். சிராப்பள்ளிக்கு வந்து வரலாற்றில் நாட்டம் செலுத்தி நல்ல பணிகள் பல செய்யத் துணையாய் இருந்த திரு. உஜாகர் சிங்கின் கைகளால் விடுதலை நாள் விழாவில் பரிசு பெறுவோம் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை. ஜனவரி 1989 முதல் வாரத்தில் அவரைச் சந்தித்தபோதுகூட இது பற்றி ஏதும் கூறவில்லை. என் பணிகளும் உழைப்பும் அவரை மகிழ்வித்திருப்பதைச் சான்றிதழின் ஒவ்வொரு வரியும் உணர்த்தியது. நான் பழக நேர்ந்த இந்திய ஆட்சிப்பணி அலுவலர்களுள் வரலாற்றை நேசித்த மிகச் சிலருள் அவரும் ஒருவர். அவரைப் போலவே அறநிலையத் துறையிலும் இரண்டு நல்ல மனிதர்கள் இருந்தார்கள். சிராப்பள்ளியில் உதவி ஆணையராக இருந்த திரு. அழகப்பனும் துணை ஆணையரும் எங்கட்கு மிகவும் உதவியாக இருந்தனர். கோயிற் சார்ந்த எங்கள் பணிகள் அனைத்திற்கும் துணைநின்றனர். நாங்கள் வழிபாட்டிற்குக் கொணர்ந்த கோயில்களின் வழிபாடு தொடக்க விழாக்களில் தவறாது கலந்து கொண்டு வேண்டிய உதவிகளைச் செய்துதந்தனர். அவர்களுடைய ஒத்துழைப்பால் எங்கள் பணிகள் செழுமையுற்றன. சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி வரலாற்றுத்துறையில் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த கோ.வேணிதேவி வாணி வழி ஏற்கனவே அறிமுகமாகியிருந்தார். அதே துறையில் பேராசிரியராக இருந்த திருமதி கீதா, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலராக அமைந்து எங்கள் சீரமைப்புப் பணிகளில் பங்கெடுத்துக்கொண்டிருந்தார். 1989ன் தொடக்கத்தில் பேராசிரியர் வேணிதேவியும் அத்துறையில் இருந்த மற்றொரு பேராசிரியர் முனைவர் அமிர்தவர்ஷினியும் என்னைச் சந்தித்தனர். வரலாறு தொடர்பாகப் பலவும் பேசிக்கொண்டிருந்த அந்த மாலைப் போதில் தரமான வரலாற்றுப் பொழிவுகள் அமைந்தால் வரலாறு தொடர்பான அறிவு வளத்தைப் பெருக்கிக் கொள்ள வாய்ப்பாக இருக்கும் என்று கூறிய வேணிதேவி எங்கள் மையம் அதற்கு முயற்சி எடுக்கவேண்டும் என்று அன்புடன் வேண்டிக்கொண்டார். திங்கள் தோறும் ஒரு பொழிவு அமைக்கலாம் என்றும் வரலாறு, இலக்கியம் சார்ந்த தகுதிவாய்ந்த அறிஞர்களை அழைத்து அப்பொழிவுகளை நிகழ்த்தச் செய்யலாம் என்றும் முடிவு செய்தோம். பொழிவிற்கான செலவுகளுக்கு நன்கொடையாளர்களை அணுகக் கருத்துக் கொண்டோம். என் வாழ்வரசியிடம் இந்த ஏற்பாட்டைக் கூறினேன். எங்கள் வீட்டின் மேல் தளத்தில் ஒரு பெரிய கூடம் இருந்தது. அந்தக் கூடத்திலேயே பொழிவுகளை வைத்துக் கொள்ளலாம் என்று கருதினேன். முதல் சில கூட்டங்களுக்கு என் உடன்பிறப்புகளே நன்கொடையாளர்களாக அமைந்தனர். தந்தையார், அன்னையார், பெரிய தமையனார், பெரியம்மா இவர்கள் நினைவாக முதல் நான்கு கூட்டங்கள் நிகழ்த்த நால்வர் கொடையளித்தனர். கூட்டத்திற்கு வருபவர்களுக்கு இன்சுவை நீர் வழங்குவது என்றும் உரையாளருக்குப் போக்குவரத்துச் செலவு தருவது என்றும் முடிவானது. நாற்காலிகளை வாடகைக்கு எடுக்கவேண்டியிருந்தது. அழைப்பிதழ்ச் செலவும் இருந்தது. எல்லாவற்றிற்குமாகச் சேர்த்து ஒவ்வொரு கூட்டத்திற்கும் ரூபாய் இருநூற்றைம்பது கொடையாகப் பெற்றோம். ஒவ்வொரு திங்களும் மூன்றாம் சனிக்கிழமை மாலை கூட்டத்தை அமைத்துக் கொள்ள முடிவானது. முதல் கூட்டம் 18. 3. 1989 அன்று அமைந்தது. காவல்துறைத் துணைத் தலைவர் திரு. சு. குமாரசாமி தலைமையேற்றார். அவரது துணைவியார் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். அறிஞர் பெருந்தகை திரு. கூ. ரா. சீனிவாசன், 'தூண்கள்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அந்தக் கூட்டத்தில் சிராப்பள்ளியைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர்கள் திரு. பட்டாபிராமன், புலவர் வை. இராமமூர்த்தி, திரு. அ. அப்துல் மஜீது இவர்களுடன் என் வடமொழி ஆசிரியர் திரு. செள. இராமகிருஷ்ணனும் பாராட்டப் பெற்றார். நான்கு பெருமக்களுமே நாங்கள் அழைத்ததும் அன்போடு ஒப்புக்கொண்டு விழாவிற்கு வருகை தந்தனர். இந்த விழாவில் கலந்துகொள்ள வாணி தம் கணவருடன் வந்தார். புதுச்சேரிப் பல்கலைக்கழக நாடகப்பள்ளியில் அப்போது பட்டப்படிப்புப் படித்துக்கொண்டிருந்த என் அண்ணன் மகன் திரு. இ. குமரவேல், காஞ்சிபுரம் கல்லூரியொன்றில் பொறியியல் படிப்புப் படித்துக் கொண்டிருந்த என் அக்கா மகன் திரு. மு. இராஜமுருகன் இவர்களும் மிகுந்த ஆர்வத்துடன் அவ்விழாவில் பங்கேற்றனர். திரு. இ. குமரவேல் பின்னாட்களில் Magic Lantern என்ற குழுவில் இணைந்து, சென்னையில் 'பொன்னியின் செல்வன்' நாடகத்தை அனைவரும் வியக்கும் வண்ணம் அரங்கேற்றினார். திரு. மு. இராஜமுருகன் இந்தியக் காவல்பணி (IPS) முடித்துவிட்டு, காவல்துறையில் உயரதிகாரியாக இருக்கிறார். நாங்கள் சற்றும் எதிர்பாராத விதமாக ஏறத்தாழ நாற்பதிற்கும்மேற்பட்ட சுவைஞர்கள் வந்திருந்து விழாவைச் சிறப்பித்தனர். கூடம் நிரம்பி வழிந்தது. வழக்காடு மன்றங்களில் என்னுடன் கலந்துகொண்டு வழக்குத் தொடுக்கும் இனிய தம்பி தட்சிண சுப்பிரமணியன் நிகழ்ச்சி நடத்துனராக அமைந்தார். காவல்துறைத் துணைத் தலைவர் தமக்கே உரித்தான வகையில் சிறப்புரையாற்றி மகிழ்வித்தார். திரு. சீனிவாசனின் தூண்கள் பற்றிய உரை அவரது ஆய்வுச் செழுமைக்குச் சான்றாகத் திகழ்ந்தது. மிகச் சிறப்பாகத் தொடங்கிய அந்த நிகழ்விற்கு 'இப்படியொரு அமைப்பு வேண்டும்' என்று கேட்டுக்கொண்ட வேணிதேவியும் அமிர்தவர்ஷினியும் கலந்துகொள்ளாமல் போனமை எங்களை வருத்தியது. தொடர்ந்து நிகழ்ந்த கூட்டங்களுக்கும் அவர்கள் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அவர்களால் சிராப்பள்ளி வாழ் வரலாற்று ஆர்வலர்கள் தொடர்ந்து மூன்றாண்டுகள் சிறந்த பொழிவுகள் பலவற்றைக் கேட்கும் வாய்ப்புப் பெற்றார்கள். எங்களுக்கும் பல அறிஞர்களுடன் பழகவும், வரலாற்று நேயர்களை அடையாளம் காணவும் வாய்ப்பமைந்தது. அந்த வகையில் பேராசிரியர்கள் கோ. வேணிதேவி, அமிர்தவர்ஷினி இருவருக்கும் நாங்கள் கடப்பாடு உடையவர்கள் ஆனோம். (வளரும்) this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |