http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 52

இதழ் 52
[ அக்டோபர் 16 - நவம்பர் 17, 2008 ]


இந்த இதழில்..
In this Issue..

எங்கே போயின ஏரிகளும் குளங்களும்?
சிவிகை பொறுத்தாரும் ஊர்ந்தாரும்
திரும்பிப் பார்க்கிறோம் - 24
சிதையும் சிங்காரக் கோயில்கள் - 6
திரிபுவன வீரனே! பாண்டியாரியே! - முதல் பாகம்
Virtual Tour On Kundrandar Koil - 4
ஐராவதி நூல் வெளியீட்டு விழா - ஒளிப்படத் தொகுப்பு (Videos)
அவர் - ஆறாம் பாகம்
நீங்கல் சரியோ நீயே சொல்!
பழந்தமிழர் பொறியியல் நுட்பத்திறன்
இதழ் எண். 52 > இதரவை
அவர் - ஆறாம் பாகம்
மு. நளினி
தொடர்: அவர்


பைஞ்ஞீலிக் கோயிலை ஆய்வு செய்தபோது அக்கோயில் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டிருந்த திருவெள்ளறை புண்டரிகாட்சப் பெருமாள் கோயிலையும் சென்று பார்த்தோம். அக்கோயிலைச் சுற்றிவந்தபோது என் கண்ணில் பட்ட முதல் சிற்பம் குடக்கூத்துச் சிற்பம்தான். பெருமாள் கோயில் சிற்பமாக இருப்பதால் ஆடுபவரைக் கிருஷ்ணராகக் கொள்ளவேண்டும் என்று அவர் கூறினார். அக்கோயிலிலும் பிற்சோழர், பிற்பாண்டியர் காலக் கல்வெட்டுகள் பல இருந்தன. அவற்றைப் படிப்பதில் கவனம் செலுத்தினேன்.

பெருமாள் கோயிலுக்குப் பின்னால் இருக்கும் குடைவரைக் கோயிலையும் பார்வையிட்டோம். அங்கு ருக்மணி கிருஷ்ணர் திருமேனிகள் பற்றிய கல்வெட்டொன்றை வாசித்தேன். ருக்மணி கிருஷ்ணர் பற்றி அமைந்த பழங் கல்வெட்டு அது என்று அவர் கூறினார். அக்கோயில் கவனிப்பார் யாருமின்றிப் பாழ்பட்டுக் கிடந்தது. கோயில்கள் இப்படி மனித நடமாட்டமில்லாமல் பாழ்பட்டுப் போகிறதே என்ற வருத்தத்துடன் கோயிலை விட்டு வெளியே வந்தோம். இன்றோ நடமாட்டம் குறைந்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணுமாறு கோயில்களின் சிதைவுக்கு வருவோரே காரணமாகின்றனர்.

அதே ஊரில் திருவானைக்காவுடையார் கோயில் என்று மற்றொரு குடைவரைக் கோயில் இருந்தது. அதையும் பார்க்கச் சென்றோம். அந்தக் குடைவரைக் கோயிலுக்கு முன்னால் உள்ள பாறைப்பகுதியில் மதிரை கொண்ட கோப்பரகேசரி, இராஜகேசரி இவர்தம் கல்வெட்டுகள் இருந்தன. அவை படிப்பதற்கு எளிதாக நன்கு ஆழமாக வெட்டப்பட்ட கல்வெட்டுகளாக இருந்தன. திருவெள்ளறைக் குடைவரைகள் இரண்டும் முத்தரையர் காலப் பணிகளாக இருக்கவேண்டும் என்று தாம் கருதுவதாக அவர் கூறினார்.

பின்னால் திருச்சிராப்பள்ளி மாவட்டக் குடைவரைக் கோயில்கள் ஓர் ஒப்பாய்வு எனும் தலைப்பில் அமைந்த சுமிதாவின் முதுகலை ஆய்வேட்டிற்காக இந்தக் குடைவரைகளை ஆய்வு செய்தபோது கல்வெட்டுகள், கட்டடக்கூறுகள் இவற்றின் அடிப்படையில் அக்குடைவரைகள் முத்தரையர் காலப் பணிகளே என்ற முடிவுக்கு வந்தோம். முதன்முதலில் இக்குடைவரைகளுக்கு வந்து மேலோட்டமாகப் பார்த்த நிலையிலேயே அவை முத்தரையர் பணியாக இருக்கலாம் என்று அவர் கூறியதைத்தான் நான் அப்போது நினைத்து வியக்குமாறு ஆயிற்று.

அதே ஊரில் அமைந்திருந்த ஸ்வஸ்திக வடிவக் குளத்தைப் பார்த்தோம். கிணற்றின் பிடிச்சுவரில் இருந்த பல்லவர் காலக் கல்வெட்டுகளைப் படித்தபோது கிணற்றின் பெயர் மாற்பிடுகு பெருங்கிணறு என்பதை அறியமுடிந்தது. கிணற்றின் உள்ளே செல்வதற்கு நான்கு பக்கங்களிலும் படிகள் உள்ளன. அவற்றில் ஒரு பக்கப் படிக்கட்டுகளில் 1, 2, 3 என எண்கள் குறிக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். மற்றொரு பல்லவர் கல்வெட்டு பாடல் வடிவில் இருந்தது.

'ஸ்ரீ கண்டார் காணா உலகத்தில் காதல் செய்து நில்லாதேய்

பண்டேய் பரமன் படைத்த நாள் பார்த்து நின்று நைய்யாதேய்

தண்டார் மூப்பு வந்துன்னைத் தளரச்செய்து நில்லாமுன்

உண்டேல் உண்டு மிக்கது உலகம் அறிய வைம்மினேய்'

இந்தப் பாடலின் பொருளைப் பற்றி அவரிடம் கேட்டதும் அவர் தந்த விளக்கங்கள் அவருடைய இலக்கிய அறிவையும் பரந்துபட்ட பார்வையையும் எனக்குப் புரிய வைத்தன. எந்தக் காலத்துக்கும் பொருந்துமாறு போல அமைவதைத்தான் இலக்கியம் என்கிறோம் என்று அன்று அவர் கூறியதன் உண்மைத் தன்மையைக் காலப்போக்கில் நான் ஆழ உணர்ந்தேன்.

திருவெள்ளறைக்கு அருகில் இருந்த சிற்றூரான பாச்சிலுக்கும் சென்றோம். ஒரு காலத்தில் மிகப் பெரிய ஊராக விளங்கி இன்று சுருங்கிப் போயிருக்கும் பாச்சிலில் ஒரு சிவன் கோயிலும் தற்போது கோபுரப்பட்டி என வழங்கும் பாச்சிலின் புறப்பகுதியில் மற்றொரு சிவன் கோயிலும் பெருமாள் கோயில் ஒன்றும் உள்ளன. மேற்றளி சிதறிப்போன கோயிலாகும். அமலீசுவரம் என்று கல்வெட்டுகளில் குறிக்கப்படும் சிவன் கோயிலின் கண்டப்பகுதியில் பல சிற்றுருவச் சிற்பங்கள் உள்ளன. அவற்றுள் சிவபெருமானின் ஆடல்தோற்றச் சிற்பங்களும் அடங்கும். தமிழ்நாடு அரசு தொல்லியல்துறையின் பாதுகாப்பில் இருந்த அக்கோயில் சரியான பாதுகாப்பில்லாமல் இருந்தது. இந்தப் பாச்சில் அமலீசுவரத்தில் இருந்துதான் தஞ்சாவூர் இராஜராஜீசுவரத்துத் தளிச்சேரிகளுக்கு ஆடற் பெண்கள் பயணப்பட்டனர்.

திருப்பைஞ்ஞீலிக் கோயிலுடன் தொடர்புடைய கோயில்களைப் பார்த்த அதே சமயத்தில் அவருடன் இரண்டாம் முறையாக மாமல்லபுரம் செல்லும் வாய்ப்பமைந்தது. 30. 12. 1989ல் பேராசிரியர் மா. அரசு தம் நண்பர்களுடன் பாதாமி, பட்டடக்கல், ஐஹொளே ஆகிய பகுதிகளைப் பார்க்கச் செல்வதாக இருந்தது. இதை அறிந்ததும் அவரும் பேராசிரியர் அரசுவின் குழுவில் இணைந்துகொண்டார். புறப்படுவதற்கு முன் சாளுக்கியர் கலை பற்றிக் கிடைத்த நூல்களை எல்லாம் அவர் படித்ததை நான் அறிவேன். சாளுக்கியர் கலை வண்ணத்தைப் பார்க்க வேண்டும் என்பது அவருடைய நெடுநாளைய ஆவல்.

அந்தப் பயணத்தின்போது ஒவ்வொரு நாளும் அவர் அங்கு என்னவெல்லாம் பார்த்தாரோ அவற்றைப் பற்றி விளக்கமாக மேடத்திற்கும் எனக்கும் வாணிக்கும் நாள் தவறாமல் எழுதிவந்தார். எனக்கு ஐஹொளேயில் அவர் பார்த்த அன்னையர் எழுவர் சிற்பத்தொகுதியைப் பற்றியும் பாதாமி குடைவரைகளைப் பார்த்தமை பற்றியும் மிக விரிவாக எழுதியிருந்தார். இந்தக் கடிதங்களை இரவு உணவுக்குப் பிறகு எழுதுவதாகவும்அன்றைய நாள் பார்த்தவை அனைத்தும் அக்கடிதத்தில் விளக்கப்பட்டிருப்பதாகவும் கடிதத்தைப் படித்துவிட்டுப் பாதுகாப்புடன் வைத்திருக்குமாறும் தாம் வந்ததும் அக்கடிதத்தைப் பெற்றுக் கொள்வதாகவும் முதல் கடிதத்திலேயே அவர் எழுதியிருந்தார்.

ஐஹொளேவிற்கு அவர்கள் போய்ச் சேர்வதற்குள் மாலை மயங்கும் நேரமாகிவிட்டதால் நேராகத் தங்கும் விடுதிக்குச் சென்று குளித்து உணவருந்திவிட்டுப் பக்கத்தில் இருந்த குடைவரைக் கோயிலுக்குத் தனியராகச் சென்றிருக்கிறார். பயணக் களைப்பினால் மற்றவர்கள் யாரும் உடன் செல்லவில்லை. அன்று நல்ல நிலவு இருந்ததால் அந்த இரவு நேரத்திலும் அவரால் குடைவரையை அடையவும் அங்குள்ள சிற்பங்களை இரசிக்கவும் முடிந்திருக்கிறது. நிலவொளி படாத இடங்களில் கொண்டு சென்றிருந்த கைவிளக்கின் உதவியோடு சிற்பங்களைப் பார்த்திருக்கிறார். ஏறத்தாழ இரண்டு மணி நேரம் அந்தக் குடைவரையின் சிற்பங்களையும் இயற்கையின் எழிலையும் இரசித்தபடி தாம் இருந்ததாக அவரே குறிப்பிட்டுள்ளார்.

பாதாமியை அவர்கள் அடைந்தபோதும் இரவு நேரம்தான். தங்கும் இடம் தேடி அலைந்ததில் இரவு எட்டாகிவிட்டதாகவும் உணவருந்தி உறங்கிவிட்டு மறுநாள் கருக்கலில் மற்றவர்கள் எழுவதற்கு முன்பே புறப்பட்டு பாதாமி குடைவரைகளை பார்க்கச் சென்றதாகவும் தொடங்கி, பாதாமி அனுபவங்களை அவர் எழுதியிருந்தவிதம் என்னால் மறக்கவே முடியாது. மொழி தெரியாத ஊரில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அந்த விடியற்காலையில் சாளுக்கியச் சிற்பங்களைப் பார்ப்பதற்காக அவர் சென்ற அந்த வேகம் இன்றுவரை நீடிக்கிறது. மாமல்லபுரம் சென்றிருந்தபோது ஒரு முறை அப்படித்தான் காலை ஆறுமணிக்கெல்லாம் எழுந்து கடற்கரைக் கோயிலுக்குப் போனவர் ஒருமணிநேரம் சென்ற பிறகே திரும்பிவந்தார். இவ்வளவு நேரம் என்ன செய்தீர்கள் என்று நானும் அகிலாவும் கேட்டபோது, 'மக்கள் வரத்து இல்லாத சூழலில் நானும் கோயிலும் மட்டும் தனித்திருக்க விழைந்தே சென்று வந்தேன். இந்த ஒரு மணி நேரம் அந்தக் கோயில் எவ்வளவோ தகவல்களை என்னுடன் பரிமாறிக்கொண்டது' என்று சொல்லிச் சிரித்தார்.

சாளுக்கிய பூமியில் தாம் பார்த்த ஒவ்வொரு கட்டுமானத்தைப் பற்றியும் சிற்பத்தைப் பற்றியும் மிக விரிவாக கடிதங்களில் எழுதியிருந்தார்.. இது போல் அனைவருக்கும் கடிதம் எழுதியதனால் அது ஒரு நாட்குறிப்புப் போலவும் அவர் பார்த்த கோயில்கள் பற்றிய சுருக்கமான கட்டுரைகள் போலவும் அமைந்துவிட்டது. அவருடைய கடிதங்களைப் படித்தபோது நானே அந்தச் சிற்பங்களை நேரில் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் அளவிற்கு விரிவாகவும் விளக்கமாகவும் எழுதியிருந்தார். அவருடைய எழுத்தாற்றல் அது.

சாளுக்கியர் காலக் குடைவரை, கட்டுமானக் கோயில்களைப் பார்த்து வந்த அடுத்த வராமே நானும் அவரும் பல்லவர் காலக் கோயில்கள் நிறைந்த காஞ்சிபுரம், மாமல்லபுரம் பகுதிக்குச் சென்றோம். முதல் இரண்டு நாட்கள் காஞ்சிபுரத்துக் கோயிகளையும் அடுத்த இரண்டு நாட்கள் மாமல்லபுரத்துக் கோயில்களையும் பார்த்தோம். காஞ்சிபுரத்தில் முதலில் இராஜசிம்மரால் கட்டப்பட்ட கயிலாசநாதர் கோயிலைப் பார்த்தோம். கோயிலைச் சுற்றிலும் அமைந்துள்ள சிறு கோயில்கள் இரண்டு தள சிறு சிறு விமானங்களாக அமைந்திருந்தன. அவற்றின் தாங்குதளப்பகுதியில் கல்வெட்டுகள் வெட்டப்பட்டிருந்தன. அவை பல்லவ கிரந்தத்தில் எழுதப்பட்டிருந்தன.

இராஜசிம்மேசுவரத்து விமானம் நான்கு தளங்களைக் கொண்ட அழகான கோயில். அக்கோயில் கருவறை பழுவூர்ப் பகைவிடை ஈசுவரம் போல் சாந்தார அமைப்பில் அமைந்திருந்தது. அக்கோயிலின் சுவர்ப்பகுதிகள், சிறிய கோயில்களின் உள்ளும் புறமும் என எங்குப் பார்த்தாலும் சிற்பங்கள்தான். நான் முதல் முறையாக அங்குச் சென்றிருந்ததால் அந்தச் சிற்பங்களின் அழகில் மயங்கினேன். எதைப் பார்ப்பது எதை விடுவது என்றே தெரியவில்லை. சிற்பங்கள் பல்வேறு அளவுகளில் அமைந்திருந்தன. சிறிய கோயில்களில் சிவபெருமானின் பல்வேறு திருவுருவங்கள், ஆடற்கோலங்கள் காட்டப்பட்டுள்ளன. அன்றுதான் க்ிராதார்ச்சுனர் வடிவம் பற்றியும் அதுதொடர்பான புராணக் கதையையும் அவர் விளக்கிக் கூறக் கேட்டேன்.

எங்களுடன் அவரின் பள்ளிக் கால நண்பர் திரு. சீனிவாசனும் அவருடைய அக்கா மகன் திரு. இராஜமுருகனும் வந்திருந்தனர். அவர் பள்ளி நண்பர் சிறு வயதிலிருந்தே அவரின் இரசிகர். அவர் என்னிடம் சிற்பங்களுக்கான விளக்கங்களைக் கூறிக்கொண்டிருந்தபோது அவர் கூறுவதையே இரசித்துக் கேட்டுக்கொண்டிருந்தார். நான் அவ்வப்போது இது என்ன சிற்பம். அந்தச் சிற்பம் தொடர்பான புராணக்கதை என்ன? என்றெல்லாம் கேள்விகள் கேட்டு கொண்டிருந்தேன். அவர் ஒவ்வொன்றையும் பொறுமையாக விளக்கிக் கொண்டிருந்தார். அவர் அக்கா மகன் பொறியியல் கல்வி மாணவராக இருந்தபோதும் வரலாற்றில் ஆர்வர் உள்ளவராக இருந்தார். இவர்கள் குடும்பத்தார் அனைவருக்குமே வரலாற்றில் அதிக ஈடுபாடு உண்டோ என்று நினைத்தேன். அதே நேரத்தில் அதற்குக் காரணம் அவருடைய தந்தையார் டாக்டர் மா. இராசமாணிக்கனார் என்பதையும் உணர்ந்தேன்.

இராஜசிம்மேசுவரத்தில் (கயிலாசநாதர் கோயில்) கிராதார்ச்சுனர், ஆறு குழந்தைகளாக வளர்ந்து ஒன்றான முருகன், இரணியவதம் செய்யும் நரசிம்மர், யானையை அழித்தமூர்த்தி, கங்காதரர், இலிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, காலாரிமூர்த்தி, சிம்மத்தின் மீது நின்றநிலையில் உள்ள கொற்றவை எனப் பல சிற்பங்களைப் பார்த்தோம். அவர் சிற்பங்களை ஒளிப்படம் எடுப்பதில் கவனமாக இருந்தார். நான் ஒவ்வொரு சிற்பத்தையும் பார்த்துக் கொண்டு வந்தேன். கிராதார்ச்சுனர், ஆறு குழந்தைகளாக அமைந்த முருகன் சிற்பங்களை முதன்முதலில் அங்குதான் பார்த்தேன்.

அதற்குப் பிறகு கிராதார்ச்சுனர் சிற்பத்தைத் தஞ்சாவூர் இராஜராஜீசுவரத்தில்தான் பார்த்தேன். நாங்கள் தஞ்சாவூர்க் கோயிலை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு ஆறுமாத காலம் அங்குக் களப்பணி செய்தபோது கிராதார்ச்சுனர் பற்றிய புராணக்கதை சிற்பத்தொகுதியாகப் படமாக்கப்பட்டிருந்தது. அதில் முக்கியமாகக் குழந்தை முருகனைப் பார்வதி தம் இடுப்பில் வைத்துக் கொண்டு, வேடன் உருவில் வந்த சிவன் அர்ச்சுனனருடன் போர் புரியம் காட்சியைப் பார்த்துக் கொண்டிருப்பது போல் காட்டப்பட்டிருந்தது. வேறு சில கோயில்களில் இந்த கிராதார்ச்சுன சிற்பத்தொகுதியில் பார்வதி குழந்தை இல்லாமல் காட்டப்பட்டிருப்பார். ஏன் இந்த வேறுபாடு என்று ஆராய ஆரம்பித்தோம். அதனால் அந்தக் காலகட்டத்தில் நானும் அகிலாவும் எந்தக் கோயிலுக்குச் சென்றாலும் கிராதார்ச்சுனர் சிற்பம் இருக்கிறதா என்று தேடுவோம். இறுதியில் அனைத்தையும் ஒப்பிட்டு நோக்கியதில் மூன்றாம் குலோத்துங்கர் காலம் வரை கிடைக்கும் சிற்பத்தொகுதிகளில் பார்வதி முருகனை இடுப்பில் வைத்திருப்பதை அறியமுடிந்தது. முதல் இராஜராஜருக்கு முற்பட்ட கோயில்களில் இத்தகு அமைப்பை இதுவரை காணமுடிந்ததில்லை.

இராஜசிம்மேசுவரத்திலுள்ள தட்சிணாமூர்த்தி சிற்பம், முனிவர்கள், காட்டுப்பகுதி, சிங்கம், புலி, மான் போன்ற விலங்குகள் சிவன் வீற்றிருக்கும் ஆலமரம் என அனைத்தும் கொண்டு மிகச் சிறப்பாக வடிக்கப்பட்டிருந்தது. இந்தக் காட்சித் தொகுப்பு தென்சுவரின் ஒரு பகுதியில் அமைந்திருந்தது. அதன் கதை சொல்லும் நேர்த்தி சிறப்பாக இருந்ததைக் கண்டு வியந்தேன். சோழர் காலத்திலும் இந்தச் சிற்பத்தொகுதி பல ஊர்க் கோயில்களில் இடம்பெற்றிருந்தாலும் இவ்வளவு பெரிய பகுதியை அது எடுத்துக்கொள்ளவில்லை. தென்கோட்டம், அதை ஒட்டியுள்ள சுவர்ப்பகுதியை மட்டுமே சோழர்கள் இந்தக் காட்சியை சித்தரிக்கப் பயன்படுத்தியுள்ளனர். இக்கோயிலில் மட்டுமே இந்தத் தொகுப்பு மிகப் பெரிய பகுதியில் ஒரு திரைப்படக் காட்சி போல அமைந்துள்ளது.

சில கரணச் சிற்பங்களையும் இராஜசிம்மேசுவரத்தில்தான் முதன்முதலாகப் பார்த்தேன். ஸ்வஸ்திகம், குஞ்சிதம், ஊர்த்வஜாநு, புஜங்கத்திராசிதம் கரணக்கோலங்களும் ஊர்த்வதாண்டவச் சிற்பங்களும் அழகாக வடிக்கப்பட்டிருந்தன. குஞ்சித கரணச்சிற்பம் இராஜசிம்மரின் பல கோயில்கள் இருப்பதைப் பிறகு பார்த்தோம். இக்கரணம் இராஜசிம்மருக்கு மிகவும் பிடித்த கரணம் போலும். அதனால்தான், அவருடைய எல்லாக் கோயில்களிலும் இந்தச் சிற்பம் மிக நேர்த்தியாக, சிவனின் ஆடும் கோலத்திற்கு ஏற்ப உடல் அமைப்பும் அணிகலன்களும் அமைந்து, அவர் அழகுக்கு அழகு சேர்ப்பதாய் அமைந்துள்ளது. இதே போல் கம்பீரமாய் நிற்கும் சிம்மவாகினி சிற்பம் எழிலார்ந்ததாய் அமைந்திருந்தது. நாங்கள் முதன் முறை சென்றபோது கோயில் கட்டடக்கலை பற்றி விரிவாக ஆராயமுடியவில்லை.

காஞ்சிபுரம் வைகுந்தப் பெருமாள்கோயிலிலும் சிற்பங்கள் திருச்சுற்றுமாளிகையின் உட்புறம் நான்கு சுவர்களிலும் செதுக்கப்பட்டிருந்தன. அவை சமயம் தொடர்பானவையாக இல்லாமல் பல்லவர்களின் மரபுவழி பற்றிக் கூறுவனவாய் அமைந்திருந்தன. அத்தொடரில் அரச அவை, அரசவைக் கூட்டங்கள், அரச அவையில் நிகழும் கலை நிகழ்ச்சிகள், போர்க்காட்சிகள், படைகள் செல்லும் காட்டுப்பகுதி, பல்லவர் வாழ்க்கை முறை, கட்டுமானங்கள், தண்டனைகள் எனப் பலவற்றைப் பார்த்தோம்.

அன்று இரவு தங்கும் விடுதியில் அந்த இரண்டு நாட்களும் பார்த்த பல்லவப் புதையலைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தோம். சாளுக்கியச் சிற்பங்களுக்கும் பல்லவச் சிற்பங்களுக்கும் இடையிலுள்ள வேறுபாடுகள், அமைப்புமுறையில் உள்ள தனித்தன்மைகள் இவற்றைப் பற்றியெல்லாம் மிக விரிவாகப் பேசினார். 'நம் நாட்டுக் கலையறிஞர்களுள் பலர் விரிவான பார்வை இல்லாமல் 'அவர்களின் தாக்கம் இவர்களின் படைப்புகளில் உள்ளது, இவர்களின் தாக்கம் அவர்களின் படைப்புகளில் உள்ளது' என்றெல்லாம் எழுதியுள்ளனர். சாளுக்கியர்களைப் பார்த்துதான் பல்லவர்கள் படைத்தார்கள் என்பது எவ்வளவு மடமையான கூற்று என்பதை இப்போது என்னால் தெளிவாக உணரமுடிகிறது.

இரண்டு கலைமரபுகளையும் ஒப்பிடவே முடியாது. இரண்டுமே இரண்டு தனி நதிகள். ஓட்டத்தை மட்டும் வைத்துக்கொண்டு ஒப்பிட்டுவிடக் கூடாது. வரலாற்றுப் பின்புலம் மிக முக்கியம். மண் வாசனை அதைவிட முக்கியம். இலக்கிய நுகர்வில்லாதவர்கள் ஒரு காலத்தும் நல்ல கலையறிஞர்களாக விளங்க முடியாது. என்றாவது ஒரு நாள் இந்தப் பல்லவச் செழுமையைப் பாரறியச் செய்யவேண்டும். நாம் அனைவரும் இணைந்துதான் இதைச் செய்து முடிக்கவேண்டும்' என்று அவர் கூறியபோது என் கண்கள் நனைந்தன. மிகச் சிறியவளான என்னிடம் அவர் தன் கனவுகளைக் கூறியபோது என்ன செய்வதென்றே எனக்குத் தெரியவில்லை. ஆனால், உள்ளத்தில் ஒர் உறுதி பிறந்தது. அவருடைய அந்த ஒப்பற்ற கனவை நிறைவேற்ற நம்மால் இயன்றது அனைத்தும் செய்ய வேண்டும் என எனக்குள்ளேயே அன்று சூளுரைத்துக் கொண்டேன். இன்று வரை அதிலிருந்து வழுவாமல் அவருடைய கலைப் பயணத்தில் என்னால் இயன்ற அளவு, இராமருக்கு அணில் உதவியது போல உழைத்துக் கொண்டிருப்பது மகிழ்வாகவும் பெருமையாகவும் இருக்கிறது. எத்தனை பேருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துவிடமுடியும்!

(வளரும்)
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.