![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 59
![]() இதழ் 59 [ மே 15 - ஜுன் 15, 2009 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
வாசகர்களுக்கு வணக்கம்.
சில மாதங்களுக்கு முன்பு வரலாறு.காம் இதழில் வரலாற்று ஆய்வுகளைச் செம்மைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி ஒரு தலையங்கம் எழுதப்பட்டிருந்தது. வாசகர்கள் எங்கள் கருத்தை ஆதரித்து இட்டிருந்த பின்னூட்டங்கள், இன்றைய வரலாற்றாய்வுகளைப் பற்றி நாங்கள் கொண்டிருக்கும் கருத்துக்கள் சரியானவைதான் என்று உறுதிப்படுத்தின. ஆய்வேடுகளின் அருமையைப் பற்றியும் அவை எழுதப்பட வேண்டிய முறையைப் பற்றியும்கூட ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறோம். என்னதான் ஆய்வுகளைச் செம்மையாகச் செய்தாலும், தரமான ஆய்வேடுகளை உருவாக்கினாலும், அவற்றால் முழுப்பயன் விளையப்போவது அவற்றைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை பெருகும்போது மட்டுமே. யாருமே மீட்டாத வீணை தங்கத்தாலேயே செய்யப்பட்டிருந்தாலும் அதன் பயன் என்ன? பல்கலைக்கழகங்களில் படிப்பை முடிக்க வேண்டிய கடமைக்காக ஏற்கனவே பலமுறை மேற்கொள்ளப்பட்ட, எளிமையான, கவர்ச்சிகரமான ஆய்வுத் தலைப்புகளைப் பெரும்பாலோர் பயன்படுத்தி வருவதையும் காணமுடிகிறது. மாணவர்களின் அறியாமை மற்றும் முறையான வழிகாட்டிகள் இல்லாமை போன்றவற்றால் விளையும் இத்தகைய தவறுகளைப் பொருட்படுத்தாவிட்டாலும்கூட, கருத்தரங்குகளுக்கும் ஆய்விதழ்களுக்கும் ஆய்வுக்கட்டுரைகளை அளிக்கும் நன்கு அறியப்பட்ட வரலாற்றாய்வாளர்களும் இதுபோன்ற தலைப்புகளையே தேர்ந்தெடுப்பது மிகவும் வருத்தத்திற்குரியது. இன்னும் தமிழக வரலாற்றில் ஆய்வு செய்யப்படவேண்டிய தலைப்புகள் ஏராளமாக இருக்கின்றன. ஏராளமான ஆய்வுகள் செய்யப்பட்டிருந்தாலும் அறிஞர்கள் கூடி ஒருமித்த கருத்தை எட்டவேண்டிய விஷயங்களும் எண்ணிலடங்காமல் உள்ளன. தமிழக வரலாற்றுச் சங்கிலியில் இன்னும் அகப்படாத கண்ணிகள் ஆங்காங்கே ஏராளமாக இருக்கின்றன. வரலாறு என்பது வரலாற்றுப் புதினங்களைப்போலத் தொடர்ச்சியான தகவல்களைக் கொண்டிருக்காது என்பது அனைவராலும் அறியப்பட்ட உண்மை. ஆனால் நிஜ வரலாற்றைப் புதினத்தைவிடச் சுவாரசியமாக ஆக்குவது இத்தகைய தொடர்ச்சியற்ற தன்மைதான் என்பது சிலரது கருத்து. வரலாற்றைச் சுவாரசியமாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காகவே சில கண்டுபிடிப்புகள் முழுமை பெறாமல் இருக்கின்றனவோ என்று கருதுமளவுக்கு அண்மைக்காலக் கண்டுபிடிப்புகளில் ஒரு தொய்வைக் காணமுடிகிறது. இதற்கான காரணங்களை ஆராயும்போது தட்டுப்படும் காரணங்களில் சிலவாக அறிஞர்களுக்கிடையிலான ஒற்றுமையின்மையும் விட்டுக்கொடுக்காத தன்மையும் இருக்கின்றன. தமிழர்களுக்குள் நிலவும் ஒற்றுமை என்பது உலகறிந்த ஒன்று. தமிழக வரலாற்றாய்வாளர்கள் என்ற குழுவும் தமிழர் என்ற இனக்குழுவின் ஒரு உட்குழுதானே? பிறகெப்படி அவர்களுக்குள் மட்டும் ஒற்றுமை இருக்கும்? சில இடங்களில் இவை அவ்வளவாகத் தெரிவதில்லை, பல இடங்களில் வெளிப்படையாகப் பளிச்சிடுகின்றன. சில குறிப்பிட்ட கருத்தரங்குகளில் இத்தகைய மோதல்கள் வெளிப்படையாக நிகழ்வதைக் காணலாம். கருத்துக்களைக் கருத்துக்களால் எதிர்கொள்வது என்றுமே வரவேற்கப்பட வேண்டியதுதான் என்றாலும், தனிமனிதத் தாக்குதல்கள் தவிர்க்கப்பட வேண்டியவையே. இதனால் பாதிப்படைவது தமிழக வரலாறுதான். பார்வையாளர்களும் யார் சொல்வது சரி என்று ஒரு முடிவுக்கு வரமுடியாமல் தடுமாற வேண்டியிருக்கிறது. கருத்தரங்குகளில்தான் இந்த நிலை என்றில்லை. ஆய்விதழ்களிலும் போட்டி போட்டுக்கொண்டு ஒருவரையொருவர் தாக்கிக்கொள்வது சரியல்ல. வரலாற்றாய்வாளர்களின் இத்தகைய போக்கினால் பல்வேறு முடிவுகள் இன்னும் குழப்ப நிலையிலேயே இருக்கின்றன. உதாரணமாகத் தமிழ் பிராமி எழுத்துருக்களை எடுத்துக் கொள்ளலாம். தமிழகத்தில் பல்வேறு அறிஞர்கள் இதைப்பற்றி ஆய்வு செய்திருக்கிறார்கள். ஆனால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு முடிவை முன்வைக்கிறார்கள். கொடுமணலில் கண்டெடுக்கப்பட்ட பானையோட்டில் உள்ள எழுத்துக்களின் காலம் கி.மு 2ஆம் நூற்றாண்டு என்று திரு. ஐராவதம் மகாதேவன் அவர்களும் பேராசிரியர் எ.சுப்பராயலு அவர்களும் கூறுகின்றனர். இதை ஆய்வு செய்த மற்ற ஆய்வாளர்களான பேராசிரியர் கா.இராஜன் அவர்கள் கி.மு. 3ஆம் நூற்றாண்டாகலாம் என்றும் முனைவர் சு.இராசவேலு அவர்கள் கி.மு. 5ஆம் நூற்றாண்டாகலாம் என்றும் கூறுகின்றனர். எங்களைப்போல் உண்மையை அறியவேண்டும் என்ற விருப்பமுடையவர்கள் இவற்றில் எதை எடுத்துக் கொள்வது? இவர்கள் அனைவரும் சேர்ந்து விவாதித்து ஒரு முடிவுக்கு வந்து, அதை மற்றவர்களுக்கு அறிவிக்கலாம். ஒவ்வொருவரும் தத்தமது கருத்துக்களுக்குச் சான்றுகளை எடுத்துரைத்து நிறுவுகிறார்கள். யானையை ஒவ்வொரு கோணத்திலிருந்தும் கண்டு அதன் முழு உருவத்தை உருவகிப்பதுபோல், தமிழக வரலாற்றாய்வாளர்கள் ஒவ்வொரு கோணத்திலிருந்து ஆய்வு செய்கிறார்கள். ஆனால் அவை அனைத்தையும் ஒருங்கிணைத்து முழுமையாக்கி வெளியுலகுக்குத் தெரியப்படுத்தும் முயற்சியின்மை உண்மை வெளிப்படத் தடையாக இருக்கிறது. யாராவது முயற்சி எடுத்து அனைத்து அறிஞர்களையும் ஓரிடத்தில் குழும வைத்து ஒரு முடிவுக்கு வரவேண்டும். ஆனால் சமீபத்தில் நடந்த சில கருத்துக்கூடல்களிலும் எந்த முடிவும் எட்டப்படாமல் தோல்வியையே தழுவியிருக்கின்றன. தமிழக வரலாற்றில் விடுபட்டுப் போயிருக்கும் பல்வேறு கண்ணிகளைக் கண்டறியும் முயற்சிகளை அறிஞர்கள் மேற்கொண்டிருந்தாலும், அவை எப்பொழுது கிடைக்கும் என்பது அவ்வறிஞர்களின் கையில் இல்லை. காலம்தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால் இதுநாள்வரை கண்டுபிடிக்கப்பட்ட காலம் காப்பாற்றித் தந்திருக்கும் புதையல்களையாவது முறையாக ஒருங்கிணைத்து வெளிப்படுத்துவதற்குத் தடையாக இருப்பது எது என்பதுதான் தெரியவில்லை. இப்படியே முடிவுக்கு வரமுடியாத சிக்கல்கள் அதிகரித்துக் கொண்டே போனால், தமிழக வரலாறு கேள்விகளின் உறைவிடமாகத்தான் இருக்கும். பிறகு தமிழனின் சாதனைகளை வரும் தலைமுறைக்கு எடுத்துக் கூறுவது எங்ஙனம்? அன்புடன் ஆசிரியர் குழு this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |