http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[180 Issues]
[1786 Articles]
Home About US Temples Facebook
Issue No. 63

இதழ் 63
[ செப்டம்பர் 15 - அக்டோபர் 15, 2009 ]


இந்த இதழில்..
In this Issue..

பார்வைகளைப் பண்படுத்தும் பயணங்கள்
மதுரகவி நந்தவனம் பொதுநல வழக்கு - சில விளக்கங்கள்
மதுரகவி நந்தவனம் அழித்தொழிப்பு - ஒரு வேண்டுகோள்
கல்வெட்டுக்கள் காட்டும் நந்தவனங்கள்
திருநந்திக்கரைக் குடைவரை
கழுகுமலைப் பயணக்கடிதம் - 4
அன்பே! நீயின்றி
இதழ் எண். 63 > கலையும் ஆய்வும்
திருநந்திக்கரைக் குடைவரை
இரா.கலைக்கோவன், மு.நளினி
கன்னியாகுமரி மாவட்டத்துப் பேச்சிப்பாறை அணைக்கட்டிலிருந்து ஏறத்தாழ 6 கிலோமீட்டர் தொலைவிலுள்ள திருநந்திக்கரை தற்போது பத்மநாபபுரம் பிரிவைச் சேர்ந்த கேரளத்துச் சிற்றூராகத் திகழ்கிறது.1 ஊரின் புறத்தேயுள்ள குன்றின் கீழ்ப்பகுதியில் நிலமட்டத்திலிருந்து 4 மீ. உயரத்தில் தெற்கு நோக்கிய நிலையில் அகழப்பட்டுள்ள குடைவரையை அடையப் பத்துப் படிகள் உதவுகின்றன. அவற்றுள் கீழுள்ள இரண்டு படிகள் பின்னாளில் இணைக்கப்பட்டவையாகும். மேற்படிகள் எட்டும் பாறையிலேயே வெட்டப்பட்டுள்ளன. இடைவெளியிட்ட நிலையில் நான்கு சதுரக் குழிகள் பெற்றுள்ள பாறைத்தரை கிழக்கு மேற்காக 5. 68 மீ. நீளமும் தென்வடலாக 64 செ. மீ. அகலமும் கொண்டு விரிந்துள்ளது.



இதிலிருந்து 4 செ. மீ. உயரத்தில் காணப்படும் 52 செ. மீ. அகல, 5. 40 மீ. நீளப் பாறைத்தளம் நன்கு சமன்படுத்தப்பட்டுள்ளது. கிழக்கில் பாறைச்சுவரொட்டிய நிலையில் தெற்காகப் பரவியுள்ள இத்தளம் மேற்கில் முழுமையுறவில்லை. இந்தத் தளத்திலிருந்து 5 செ. மீ. உயரத்தில் வெட்டப்பட்டுள்ள உபானம் குடைவரை முகப்பிற்கு முன் கிழக்கு மேற்காக நெடுக உள்ளது. உபானத்திலிருந்து 10 செ. மீ. உயரத்தில் அமைந்துள்ள முகப்புத் தளம் கிழக்கு மேற்காக 5. 37 மீ. நீளமும் தென்வடலாக 64 செ. மீ. அகலமும் பெற, இதிலிருந்து 4 செ. மீ. உள்ளடங்கி எழும் மெல்லிய தளஅமைப்பே முகப்பின் தூண்களைத் தாங்குகின்றது.



சதுரம், கட்டு, சதுரம் என்ற அமைப்பில் உள்ள முகப்பின் இடைத்தூண்கள் முழுத்தூண்களாகவும் நான்முகமாக உள்ள பாறைச்சுவரொட்டிய தூண்கள் அரைத்தூண்களாகவும் அமைய, மேலே விரிகோணப் போதிகைகள் தாங்கும் மெல்லிய உத்திரம். நான்கு தூண்களின் இருப்பால் மூன்று இடைவழிகளைப் பெற்றுள்ள முகப்பின் உத்திரத்தையடுத்து, வாஜன அணைப்பின்றி 98 செ. மீ. அளவிற்குச் சரிந்திறங்கும் கூரைநீட்சி வடிவமைக்கப்படாத கபோதமாக விளிம்புடன் விளங்குகிறது. கபோத முகப்பின் கீழ்ப்புறத்தே புருவம் வெட்டப்பட்டுள்ளது. புருவத்திற்குச் சற்று மேல், பக்கத்திற்கொன்றாகக் காணப்படும் இரண்டு செவ்வக அகழ்வுகளும் பாறைத்தரையில் இருக்கும் குழிகளும் முகப்பின் முன் பந்தல் அமைக்கப் பயன்பட்டிருக்கலாம். கபோத விளிம்பில் இருந்து ஏறத்தாழ 1 மீட்டர் மேலே காணப்படும் நீளமான அகழ்வும் அதையொட்டிய செதுக்கல்களும் பூமிதேச முயற்சியைச் சுட்டுவனவாய் உள்ளன.

அரைத்தூண்களை ஒட்டிய பாறைச்சுவர்கள் குன்றின் சரிவிற்கேற்ப மேலிருந்து கீழாக நன்கு அகலப்பட்டுள்ளன. மேற்குச்சுவர் 1. 97 மீ. உயரம், 1. 04 மீ. அகலம் பெற்றமைய, கிழக்குச்சுவர் 1. 89 மீ. உயரம், 1. 19 மீ. அகலம் கொண்டுள்ளது. இரண்டு சுவர்களிலும் 1. 54 மீ. உயரத்திற்கு அதிக ஆழமற்ற கோட்டங்கள் அகழப்பெற்று, அவற்றில் வட்டெழுத்துக் கல்வெட்டுகள் வெட்டப்பட்டுள்ளன. 82 செ. மீ. அகலமுள்ள கிழக்குச்சுவர்க் கோட்டத்தில் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டின் கீழ்ப்பகுதி சிதைந்துள்ளது. 89 செ. மீ. அகலமுள்ள மேற்குக் கோட்டக் கல்வெட்டு நன்னிலையில் உள்ளது.

முகப்புத்தூண்களில் மேற்கு முழுத்தூணின் மேற்சதுரம், கட்டு, கீழ்ச்சதுரத்தின் ஒருபகுதி இவற்றில் வட்டெழுத்துக் கல்வெட்டுக் காணப்படுகிறது. கிழக்கு முழுத்தூணின் மேற்சதுரம், கட்டின் மூன்றில் ஒருபகுதி இவற்றிலும் வட்டெழுத்துக் கல்வெட்டொன்று வெட்டப்பட்டுள்ளது. கோட்டங்களை அடுத்திருக்கும் வடபுறச் சுவர்த்துண்டுகள், அரைத்தூண்களை ஒட்டி உறுப்பு வேறுபாடற்ற நான்முகத் தூண்களெனக் காட்சியளிக்கின்றன.

முகப்பையடுத்துத் தென்வடலாக 3. 28 மீ. அகலத்திற்கு விரிந்துள்ள மண்டபத்தின் தரை முகப்பிலிருந்து 83 செ. மீ. தள்ளி, 6 செ. மீ. அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளதால் இரண்டு பிரிவுகளாக்கப்பட்டுள்ளது. தாழ உள்ள தரையமைப்புடன் விளங்கும் முன்பகுதியை முகமண்டபமாகவும் உயர்த்தப்பட்ட தரையமைப்புடன் விளங்கும் பின்பகுதியை உள்மண்டபமாகவும் கொள்ளலாம். தென்வடலாக 86 செ. மீ. அகலம், கிழக்கு மேற்காக 5. 85 மீ. நீளம், 2. 23 மீ. உயரம் பெற்றமைந்துள்ள முகமண்டபத்தின் தரை சீரமைக்கப்பட்டுள்ளது. இத்தரையின் கிழக்கிலும் மேற்கிலும் சுவரொட்டிக் காணப்படும் தள அமைப்புகள் அகற்றப்படாத பாறை எச்சங்களாகலாம்.

வெறுமையாக உள்ள முகமண்டப மேற்கு, கிழக்குச் சுவர்களுக்கும் கூரைக்கும் இடையில் உத்திரம், வாஜனம் இவை காட்டப்பட்டுள்ளன. ஒரு சிறிய நான்முகத்தூண் என நிற்கும் முகமண்டபத் தென்சுவரின் மேல் தொடங்கும் இவை, மேற்குச் சுவரை அடுத்துத் திரும்பும் முகமண்டபத்தின் 34 செ. மீ. அகல வடசுவர் மீது இவர்ந்து, உள்மண்டபத்துள் தொடர்கின்றன. முகமண்டபத்தின் கிழக்குச்சுவரும் முகப்பின் கிழக்கு அரைத்தூணும் சந்திக்குமிடத்தில் காட்டப்பட்டுள்ள தென்சுவர்த் துண்டு மேற்கில் உள்ளாற் போலவே ஒரு மெல்லிய நான்முக அரைத்தூண் போலக் காட்டப்பட்டுள்ளது. அதன் மேலே கூரையை அணைத்தவாறு உத்திரம்.

உயர்த்தப்பட்ட தரையமைப்பால் உள்மண்டபமாய் விளங்கும் பின்பகுதி கிழக்கு மேற்காக 5. 40 மீ. நீளம், தென்வட லாக 2. 42 மீ. அகலம், 2. 18 மீ. உயரம் கொண்டுள்ளது. அதன் கிழக்குச் சுவரைத் தொடங்குமிடத்தில் ஓர் அரைத்தூணும் வடசுவரோடு ஒன்றுமிடத்து ஓர் அரைத்தூணும் அணைத்துள்ளன. உபானம் ஒன்றின்மீது எழும் அகலமான முதல் தூணும் அளவில் சிறுத்த இரண்டாம் தூணும் உறுப்பு வேறுபாடற்ற நான்முக அரைத்தூண்களாய் அமைந்து உத்திரம் தாங்க, சுவர் வெறுமையாக உள்ளது. முகமண்டபத்தின் தென்கிழக்குச் சுவர்த் துண்டிற்கும் உள்மண்டபத்தின் அகலத்தூணுக்கும் இடையில் பரவியுள்ள முகமண்டபக் கிழக்குச் சுவர் 88 செ. மீ. அகலம் கொள்ள, உள்மண்டபத்தின் கிழக்குச் சுவர் 1. 67 மீ. அகலத்தில் அமைந்துள்ளது.

உள்மண்டபத்தின் மேற்குச்சுவரில் கிழக்கு முகமாக அமையுமாறு அகழப்பட்டுள்ள கருவறையின் 1. 75 மீ. உயர, 1. 16 மீ. அகல வாயிலை நிலையமைப்பு அலங்கரிக்கிறது. பக்கநிலைகள் இரண்டிலும் வெட்டப்பட்டுள்ள ஒழுங்கற்ற அரைத்தூண்கள் மேலும் கீழும் சிறிய அளவிலான சதுரம் பெற்று இடைப்பட்ட பகுதியில் கட்டுக் கொண்டுள்ளன. வடநிலையில் ஓரளவிற்கு ஒழுங்குற வெட்டப்பட்டுள்ள இவ்வரைத்தூண் தென்நிலையில் முழுமையுற அமையாமையுடன் வாயிலின் மேல்நிலைவரை தொடர்ந்துள்ளது. வாயிலின் முன் வெட்டப்பட்டுள்ள சிதைக்கப்பட்ட பிடிச்சுவருடனான நான்கு பாறைப்படிகளுள் கீழ்ப்படி சந்திரக்கல்லாக அமைந்துள்ளது.2

கருவறைச் சுவரின் தென்கோடியை ஒட்டி முகமண்டப வடசுவரிலிருந்து கிழக்கு முகமாக வெளிப்பட்டுள்ள உறுப்பு வேறுபாடற்ற நான்முக அரைத்தூண், தளமொன்றின் மீதிருந்து வளர்கிறது. கருவறைச் சுவரின் தென்னெல்லையாக விளங்கும் இதற்கும் கருவறை வாயிலின் தென்பக்கநிலைக்கும் இடையிலுள்ள சுவர்ப்பகுதியில் மற்றோர் உறுப்பு வேறுபாடு அற்ற மெல்லிய நான்முக அரைத்தூண் வெட்டப்பட்டுள்ளது. முகமண்டபத்தின் வடசுவரில் தொடரும் உத்திரம், வாஜனம் இவை, இவ்விரண்டு நான்முக அரைத்தூண்களின் மீதும் படர்வதைக் காணமுடிகிறது.



கருவறையின் வடநிலையை அடுத்துத் தென்புறம் போலவே உறுப்பு வேறுபாடற்ற நான்முகக் குறுந்தூண் ஒன்று காட்டப்பட்டுள்ளது. அதையடுத்துள்ள உள்மண்டப மேற்குச்சுவர் தளமொன்றின்மீது எழுந்த நிலையில் 46 செ. மீ. அகலத்தில் பரவி, வடசுவரின் வடமேற்கு அரைத்தூணைத் தழுவுகிறது. இந்தத் தளத்தின் முன் அகற்றப்படாத பாறைப்பகுதிகள் இரண்டு நிலைகளில் விடப்பட்டுள்ளன. வடகுறுந்தூண், உள்மண்டப மேற்குச்சுவர் இவற்றின் மீது படரும் உத்திரம் கூரையைத் தழுவியவாறு உள்மண்டப வடசுவரின் மேலும் தொடர்கிறது.

2. 15 மீ. பக்கமுடைய சதுரமாக அமைந்துள்ள கருவறையின் உயரம் 1. 86 மீ. சுவர்களும் கூரையும் வெறுமையாக உள்ள அதன் தரையின் நடுவில் கிழக்கு மேற்காக 70 செ. மீ. அகலம் தென்வடலாக 1 மீட்டர் நீளமுள்ள மெல்லிய பாறைத்தளம் வெட்டப்பட்டுள்ளது. அதன் மீது சதுரமான செய்லிங்கம் இருத்தப் பட்டுள்ளது. தென்வடலாக 82 செ. மீ. நீளம், கிழக்கு மேற்காக 78 செ. மீ. அகலம், 53 செ. மீ. உயரம் கொண்ட ஆவுடையாரின் வெளிப்புறம் ஜகதி, எண்பட்டைக் குமுதம், கம்புகளின் தழுவலில் பாதங்களுடனான கண்டம், பட்டிகை, மேற்கம்பு எனப் பாதபந்தமாய் அமைய, மேலே 44 செ. மீ. உயர உருளைப் பாணம் உள்ளது. சிறிய அளவிலான கோமுகம் வடபுறம் நீட்டப்பட்டுள்ளது. முழுக்காட்டு நீர் வெளியேற வடபுறம் காட்டப்பட்டுள்ள வடிகால் உள்மண்டபத்தின் வடசுவரையொட்டி ஓடி, கிழக்குச் சுவரை அணைத்து முகமண்டப கிழக்குச் சுவரையொட்டி வளர்ந்து வெளியேறுகிறது.

உள்மண்டபத்தின் வடசுவர் உறுப்பு வேறுபாடற்ற நான்கு நான்முக அரைத்தூண்களால் அணைக்கப்பட்டுள்ளது. அவற்றுள் மேற்கிலும் கிழக்கிலும் உள்ளவை குறுந்தூண்களாக அமைய, இடைப்பட்ட இரண்டும் அகலத் தூண்களாகக் காட்சிதருகின்றன. அவற்றின் மேல் நீளும் உத்திரம் கூரையை அணைத்தவாறு கிழக்குச் சுவரில் வளர்ந்து முகமண்டபத்தின் கிழக்குச் சுவரில் படர்ந்து முகப்பு உத்திரத்தைத் தொட்டு முடிகிறது. தூண்களின் கீழ்ப்பகுதியில் வடசுவரொட்டி உபானமும் துணைஉபானமும் காட்டப்பட்டுள்ளன. வடிகால் உபானத்தின் முன் அமைந்துள்ளது.

உள்மண்டபத்தின் வடசுவர் முழுவதும் சுதைபூசி வரையப்பட்டிருந்த ஓவியங்களுள் பெரும்பகுதி அழிந்துவிட்டது. வலக்கையை மார்பருகே கொண்டு அமர்ந்துள்ள மனித வடிவம் ஒன்றை மட்டுமே அடையாளம் காணமுடிகிறது.3 செங்கோட்டு ஓவியமாய் அமைந்துள்ள இதன் கழுத்தில் பதக்கம் வைத்த ஆரம் உள்ளது. வலக்கால் மடிந்து இருக்கையின்மீது இருத்தப்பட்டுள்ளது. இடக்காலின் நிலையை அறியக்கூடவில்லை.





முகமண்டபத்தின் மேற்குச் சுவரில் பிள்ளையார் காணப்படுகிறார்.4 நெற்றிப்பட்டம் அணைத்த கரண்டமகுடம், முப்புரிநூல், தோள், கை வளைகள் அணிந்துள்ள பிள்ளையாரின் வலப் பின் கை ஒடிந்த தந்தம் கொள்ள, முன்கைப் பொருளை அடையாளம் காணக்கூடவில்லை. இடப் பின் கையில் கரும்புத்தோகை. இட முன் கை அழிந்துவிட்டது. இடத்தந்தம் நன்கு தெரிய, வலத்தந்தம் இல்லை. பிள்ளையாரின் வலப்புறம் மேலுள்ள வித்யாதரர் வலக்கையை மார்பருகே கொண்டபடி, இடக்கையில் மலர் கொண்டு பிள்ளையாரை நோக்க, பறக்கும் மெய்ப்பாட்டில் உள்ள அவரைக் கடைக்கண் பார்வையில் பார்த்தவாறு பிள்ளையார் உள்ளார்.

குடைவரை வளாகத்திற்குக் கிழக்கிலுள்ள பாறைச்சரிவின் கீழ்ப்பகுதியில் 85 செ. மீ. உயர, 77 செ. மீ. அகலக் கோட்டம் ஒன்று ஆழ அகழப்பட்டுள்ளது. கோட்டத்தின் தரையில் ஒழுங்கற்ற தளமொன்றும் அதன் மேலிருக்குமாறு 16 செ. மீ. உயர உருளைப்பாணம் ஒன்றும் வெட்டப்பட்டுள்ளன.

திருநந்திக்கரை குடைவரை வளாகத்திலிருந்து நான்கு வட்டெழுத்துக் கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று மட்டுமே அரசர் பெயரும் ஆட்சியாண்டும் கொண்டுள்ளது.5 முகப்பின் மேற்குப் பாறைச்சுவரில் காணப்படும் இக்கல்வெட்டு முதல் இராஜராஜரின் பதினெட்டாம் ஆட்சியாண்டில் அமைந்துள்ளது. இராஜராஜத் தென்னாட்டில் இருந்த வள்ளுவ நாட்டைச் சேர்ந்த திருநந்திக்கரை மகாதேவருக்குத் தம் பிறந்த மீனான ஐப்பசித் திங்கள் சதையத்தின் போது விழாவெடுத்து, சதையத் திருநாளில் ஆற்றில் நீராட்டிச் சிறப்பிக்கவும் இராஜராஜன் என்ற பெயரால் நாளும் நாழி நெய் கொண்டு நந்தாவிளக்கு ஒன்று ஏற்றவும் வாய்ப்பாக அதே நாட்டின் கீழிருந்த முட்டம் என்னும் ஊரை மும்முடிச்சோழநல்லூர் எனப் பெயர் மாற்றம் செய்து மன்னர் வழங்கினார்.

முகப்பின் கிழக்குப் பாறைச்சுவரில் உள்ள கல்வெட்டை எழுத்தமைதி கொண்டு கி. பி. 12ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கோபிநாதராவ் கருதுகிறார்.6 திருநந்திக்கரை இறைவனுக்கு நாளும் உரி நெய் கொண்டு நந்தாவிளக்கு ஒன்று ஏற்றுவதற்காக நாஞ்சில் நாட்டு வேய்க்கோட்டு மலையைச் சேர்ந்த சித்தகுட்டி அம்பியான ஐந்நூற்றுவ முத்தரையன் ஒன்பது எருமைகளை ஊர்ப்பெருமக்களுக்குக் கட்டுப்பட்ட இடையர் மங்கலவன் பவித்திரனிடம் ஒப்புவித்தார். கல்வெட்டின் தொடக்கத்தில், ‘கறைக்கண்ட ஈசுவரத்துக் கலமறுத்த யாண்டு’ என்று கல்வெட்டுப் பொறிக்கப்பட்ட காலம் குறிக்கப்பட்டுள்ளது. இந்தக் கறைக்கண்ட ஈசுவரம் இரணியல் வட்டத்திலுள்ள கடிகைப்பட்டினத்திற்கு அருகிலுள்ள ஓர் ஊர் என்று குறிப்பிடும் கோபிநாதராவ், கறைக்கண்ட ஈசுவரத்தில் கப்பல்கள் அழிக்கப் பட்ட ஆண்டில் இக்கல்வெட்டு வெட்டப்பட்டதாகவும் அந்நிகழ்வு எப்போது நடந்ததென்று அறியமுடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முகப்புத் தூணொன்றில் உள்ள கி. பி. எட்டாம் நூற்றாண்டு எழுத்தமைதிக் கல்வெட்டுத் திருநந்திக்கரை பெருமக்களும் தளியாள்வானும் குருந்தம்பாக்கத்தில் கூடி ஊரின் பெயரை ஸ்ரீநந்திமங்கலம் என்று மாற்றி, கோயிலின் நள்ளிரவுத் திருவமுதுக்காக அதை நம்பி கணபதிக்குத் தந்ததாகக் கூறுகிறது.7 கொடையளிக்கப்பட்ட ஊருக்கான எல்லைகளாகப் பெயரற்ற ஆறு ஒன்றுடன் நந்தியாறும் முதுகோனூரும் பாக்கமங்கலமும் குறிக்கப்பட்டுள்ளன. கல்வெட்டைப் பதிவுசெய்திருக்கும் கோபிநாதராவ் முதுகோனூரும் நந்திமங்கலமும் திருநந்திக்கரைக்கு அருகில் இன்றும் இருப்பதைச் சுட்டியுள்ளார். கல்வெட்டுப் பொறிக்கப்பட்ட காலமாக, ‘தலைக் குளத்துக் கலமறுத்த யாண்டு’ குறிக்கப்படுகிறது. இந்நிகழ்வு எப்போது நடைபெற்றது என்பதை அறியக்கூடவில்லை.

மற்றொரு முகப்புத் தூணில் கி. பி. எட்டாம் நூற்றாண்டு எழுத்தமைதியில் நாற்பது வரிகளில் அமைந்துள்ள கல்வெட்டு,8 திருநந்திக்கரையைச் சேர்ந்த திருவல்லவாழ் மகாதேவருக்கு மங்கலச்சேரி நாராயணன் சிவாகரன் அளித்த நிலத்துண்டுகளை வரிசைப்படுத்துகிறது. இந்நிலங்களிலிருந்து வரும் விளைவில் சாந்திப்புறத்திற்கு நான்கு கலம், உவச்சர்கட்கு ஐந்து கலம், திருக்கோயில் உடையார், கோயிலைத் தூய்மை செய்வார் இவர்கட்கும் திருப்பலிக்குமாக ஐந்து கலம் தருதல் வேண்டும் என முடிவானது. எஞ்சிய நிலவிளைவில் நாளும் அறுநாழி உரி நெய் கொண்டு நந்தாவிளக்குகள் ஏற்றப்பட்டன. சிவாகரன் அளித்த நிலத்துண்டுகளில் கவயெல்மங்கமண்ணூர்ப் பாலைக் கோட்டு நிலம் திருநந்திக்கரை மகாதேவரிடமிருந்து பெறப்பட்டதாகும்.9 இதிலிருந்து இருகலம் நெல் கிடைத்தது.

1 வாழைக்கோட்டு பேரறையும் துடவலும்
2 சூழிக்குண்டறை - 1 கலம்
3 இடவேலி எருமனை - 1 கலம்
4 முட்டுக்கோட்டுக் குளத்தின் கீழ் நிலம் - 1 கலம்
5 பிலையூர் படம்பறை அலைமன்றத்துக்
காறக்கோட்டுப் புதுச்செய் - 1 கலம், தூணி
6 அறுவுக்கரை வயல் கரை
7 துவ்வக்காட்டு ஆரமாச்செய்
8 வியாலிக் குளவரை மாவரை துடவல்
9 வெட்டியூர் மருத்தை
10 நெல்வேலிப் பறம்பு
11 பெருநீர் நெடுங்கண்பாக்கமங்கலம் வயல், கரை
12 பெருமண் இற்றிச்செய் - 2கலம்
13 முட்டத்து மேற்கின் கரை
14 இடை அரங்கம் தென்கரை
15 பெறினூர் - 12 கலம்
16 தென்கரை
17 இயானமங்கலம் - 2 கலம்
18 மேற்கோட்டு வரையறை கோமூர் - 9 கலம்

முகப்புத் தூண் வட்டெழுத்துக் கல்வெட்டுகளின் காலம் கி. பி. எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியாகக் கொள்ளப்படுவதால், குடைவரையின் காலத்தையும் அதுவாகவே கொள்ளலாம்.10 கட்டமைப்பின் எளிமையும் அக்காலக் கணக்கிற்கு ஏற்புடையதாகவே உள்ளது.

1. இக்குடைவரையை ஆய்வு செய்யத் துணைநின்ற இந்தியத் தொல்லியல் அளவீட்டுத்துறையின் முதுநிலை பராமரிப்பு அலுவலர் திரு. த. பரமநாதன், கன்னியாகுமரி வட்டப் பராமரிப்பு அலுவலர் திரு. இர. கலைச்செல்வன், உடனிருந்து உதவிய குடைவரைக் காவலர் திரு. மா. இராஜப்பா, போக்குவரத்திற்கு உதவிய மருத்துவ இணையர் திரு. பரத் வாஜ், திருமதி காந்திமதி, குறிப்பெடுப்பதில் துணைநின்ற மருத்துவர் திருமதி அவ்வை கலைக்கோவன் இவர்கள் அனைவருக்கும் உளமார்ந்த நன்றி உரியது.
2. கருவறையின் முன்புறம் அதிட்டானம், அரைத்தூண்கள், கபோதம் போன்ற அமைப்புகள் காணப்படுவதாகக் குறிப்பிடுகிறார்கள் சு. இராசவேலும் அ.கி.சேஷாத்திரியும். மு. கு. நூல், ப. 204.
3. தட்சிணாமூர்த்தி வடிவம் தெளிவாகக் காணப்படுவதாகச் சு. இராசவேலும் அ.கி.சேஷாத்திரியும் கூற, தட்சிணாமூர்த்தி யின் எச்சங்கள் காணப்படுவதாக கே.வி.செளந்தரராஜன் எழுதியுள்ளார். மு. கு. நூல்கள், பக். 204, 108.
4. இக்குடைவரையைப் பற்றி எழுதியுள்ளவர்கள் எவரும் பிள்ளையார் ஓவியத்தை குறிப்பிடவில்லை.
5. Travancore Archaeological Series (T. A. S.) vol. I., p. 413.
6. T. A. S. Vol. III, p. 206.
7. T. A. S. Vol. III, pp. 200-203.
8. T. A. S. Vol. III, pp. 203-206.
9. நிலங்கள் வல்லவாழ் மகாதேவர், நந்திக்கரை மகாதேவர் இருவருக்கும் அளிக்கப்பட்டவை என்று கோபிநாதராவ் கருதுகிறார். T. A. S. Vol. III, p. 204. ஆனால், கல்வெட்டுச் சொல்லாட்சி அதற்கு ஏதுவாக இல்லை.
10. இக்குடைவரையின் காலத்தைத் தி. இராசமாணிக்கம் ஏழாம் நூற்றாண்டாகக் கொள்கிறார். நெல்லைமாவட்டக் குடை வரைகள், ப. 64. எவ்விதச் சான்றுகளையும் முன்வைக்காமல் இக்குடைவரையை ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆய் மன்னர் விக்கிரமாதித்ய வரகுணரின் கைவண்ணமாகக் கொள்கிறார் கே. வி. செளந்தரராஜன். மு. கு. நூல், ப. 108. சு. இராசவேலும் அ. கி. சேஷாத்திரியும் இதன் அமைப்பில் இருந்து ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கொள்கின்றனர். மு. கு. நூல், ப. 204.
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.