http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 65

இதழ் 65
[ நவம்பர் 15 - டிசம்பர் 15, 2009 ]


இந்த இதழில்..
In this Issue..

காக்கைக்கும்
திருநறையூர் நினைவகம்
மூவரை வென்றான் குடைவரை
லக லக லக
சங்கீத லெட்டர் பேட்
காதல் என்பது ......
இதழ் எண். 65 > கலையும் ஆய்வும்
மூவரை வென்றான் குடைவரை
இரா.கலைக்கோவன், மு.நளினி
மதுரை திருவில்லிப்புத்தூர் நெடுஞ்சாலையில் அழகாபுரிக்கு அருகில் மேற்கு நோக்கிப் பிரியும் பாதையில் ஏறத்தாழ நான்கு கிலோமீட்டர் பயணித்தால் மூவரைவென்றானை அடையலாம். ஊரின் புறத்தே உள்ள குன்றின் நடுப்பகுதியில் கிழக்கு நோக்கிய குடைவரையொன்றும் பிற்காலத் திருப்பணிகளாய் அம்மன் திருமுன், பெருமண்டபம், மடைப்பள்ளி இவையும் உள்ளன.1

குடைவரைக்கு முன்னால் ஒரு மண்டபமும் அதற்கு முன்னால் சிறிய அளவிலான நந்திமண்டபமும் காணப்படுகின்றன. கருவறையை நோக்கி நந்தி அமர்ந்துள்ள இம்மண்டபத்தை அடைய மலைத்தளத்திலிருந்து படிகள் உள்ளன. நந்திமண்டபத் தளத்தின் தென்முகப்பிலும் அதன் மேற்கிலுள்ள மண்டப முகப்புச் சுவரின் இருபுறத்திலும் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.



குடைவரையின் முன்னும் நந்திமண்டபத்தின் பின்னுமாய் அமைந்திருக்கும் மண்டபத்தை முன்மண்டபமாகக் கொள்ளலாம். அதன் முகப்புச் சுவர் நடுவே வாயில் காட்டப்பட்டுள்ளது. வாயிலின் வலப்புறம் உள்ள சுவர்ப்பகுதியில் பிள்ளையார் சிற்பம் உள்ளது. உட்புறத்தே இம்மண்டபம் குடைவரையோடு பக்கங்களிலும் மேலும் கீழுமாய்ப் பொருந்த இணைக்கப்பட்டுள்ளது. குடைவரை முகப்பு முழுத்தூண்களுக்கு முன்னால் இரண்டு தூண்கள் எழுப்பி அவற்றின் மேல் உத்திரம் நிறுத்தி, மண்டப முன்சுவருக்கும் இதற்கும் இடையில் கற்கள் பாவிக் கூரையாக்கியிருக்கிறார்கள். இத்தூண்கள் பின்புறத்தில் நான்முகத் தூண்களாகவும் முன்புறத்தே சதுரம், முப்பட்டை, சதுரம் என்ற அமைப்பிலும் உருவாக்கப்பட்டுள்ளன.

முகப்பு, மண்டபம், கருவறை என்ற அமைப்பில் குடைவரை அகழப்பட்டுள்ளது. தென்வடலாக 5. 15 மீ. நீளமும் கிழக்கு மேற்காக 67 செ. மீ. அகலமும் உள்ள முகப்பில் இரண்டு முழுத்தூண்களும் இரண்டு அரைத்தூண்களும் சதுரம், கட்டு, சதுரம் என்ற அமைப்பில் காணப்படுகின்றன.



தூண் சதுரங்களின் மேற்குத் தவிர்த்த பிற முகங்களில் மலர்ப்பதக்கங்கள் முயற்சிக்கப்பட்டுள்ளன.2 முழுத்தூண்களின் மேற்சதுர முகங்கள் இரண்டில் இவை நன்கு உருவாகியுள்ளன. இப்பதக்கங்களின் நடுவில் ஒன்றில் சிம்மமும் மற்றொன்றில் யாளியும் அமைய, வடமுழுத்தூணின் கீழ்ச்சதுரத் தென்முகத்தில் அன்னம் உள்ளது. வடிவங்கள் காட்டப்பெறாத பதக்கங்கள் தாமரையிதழ்களோடு அமையச் சிற்பங்களோடு திகழும் பதக்கங்கள் தாமரையல்லாத மலரிதழ்கள் சூழத் திகழ்கின்றன.



தூண்களின் மேலுள்ள போதிகைகள் விரிகோணக் கைகளால் உத்திரம் தாங்க, மேலே கூரை. உத்திரத்திற்கும் கூரைக்கும் இடையில் வழக்கமாகக் காணப்படும் வாஜனத்தை இங்குக் காணக்கூடவில்லை.

தென்வடலாக 5. 50 மீ. நீளமும் கிழக்கு மேற்காக 1. 16 மீ. அகலமும் கொண்டமைந்துள்ள முகமண்டபத்தின் தரை சிமெந்துப்பூச்சுப் பெற்றுள்ளது. மண்டபத் தென்சுவர் வெறுமையாக அமைய, வடசுவரில் தரையிலிருந்து 78 செ. மீ. உயரத்தில் 1. 25 மீ. அகல, 1. 54 மீ. உயர, 15 செ. மீ. ஆழக் கோட்டம் அகழ்ந்து, ஆனந்தத்தாண்டவச் சிவபெருமானையும் அருகில் உமையையும் செதுக்கியுள்ளனர். கோட்டத்தின் மேற்பகுதி பிறையென வளைக்கப்பட்டுள்ளது.

பின்சுவரின் நடுப்பகுதியில் அகழப்பட்டுள்ள கருவறை உபானம், ஜகதி, எண்பட்டைக் குமுதம், பிரதிவரி, வாஜனம் எனும் உறுப்புகள் கொண்ட 58. 5 செ. மீ. உயரப் பிரதிபந்தத் தாங்குதளம் பெற்றுள்ளது. பிரதிமுகங்கள் உருவாகவில்லை. தாங்குதளத்தின்மீது பாதங்களோடு பேரளவினதாய்க் கண்டமும் கம்பும் அமைய, மேலெழும் சுவரில் பக்கத்திற்கு இரண்டென நான்கு அரைத்தூண்கள் உள்ளன. இடைத்தூண்கள் நான்முகத் தூண்களாய் அமைய, திருப்பத்தூண்கள் சதுரம், கட்டு, சதுரம் என்ற வடிவில் உள்ளன. அரைத்தூண்களின் மேலுள்ள போதிகைகள் விரிகோணக் கைகளால் சிறிய மடிப்புடன் உத்திரம் தாங்க, மேலே வாஜனம், கூரை.

இடைத்தூண்களுக்கு இடைப்பட்ட சுவர்ப்பகுதி கருவறை வாயில் பெற, வாயில் தூண்களுக்கும் திருப்பத்தூண்களுக்கும் இடைப்பட்ட சுவர்ப்பகுதிகள் கோட்டங்களாகியுள்ளன. சிற்பங்களற்ற அவற்றுள்3 1. 44 மீ. உயரம், 74 செ. மீ. அகலம், 6 செ. மீ. ஆழமுள்ள வடகோட்டத்தில் இராமலிங்க அடிகளாரின் ஓவியம் தீட்டப்பட்டுள்ளது. தெற்குக் கோட்டம் 1. 40 மீ. உயரம், 78 செ. மீ. அகலம், 5. செ. மீ. ஆழம் பெற்றுள்ளது. கருவறை வாயிலின் முன், தாங்குதளத்தை ஊடறுத்தவாறு நான்கு பாறைப்படிகள் காணப்படுகின்றன.

கருவறையை அடுத்துள்ள பின்சுவரின் வட, தென்பகுதிகளில் ஆழமான கோட்டங்கள் அகழப்பட்டு, தெற்கில் பிள்ளையாரும் வடக்கில் முருகனும் செதுக்கப்பட்டுள்ளனர். தரையிலிருந்து 65 செ. மீ. உயரத்தில் உள்ள தெற்குக் கோட்டம் 80 செ. மீ. அகலம், 1. 65 மீ. உயரம், 13 செ. மீ. ஆழம் கொள்ள, தரையிலிருந்து 74 செ. மீ. உயரத்தில் உள்ள வடக்குக் கோட்டம் 75 செ. மீ. அகலம், 1. 60 மீ. உயரம், 20 செ. மீ. ஆழம் பெற்றுள்ளது. பின்சுவர் மண்டபத்தின் வட, தென்சுவர்களைத் தொடுமிடத்து உள்ள நான்முக அரைத்தூண்களும் கருவறைச் சுவரின் திருப்பத் தூண்களும் இக்கோட்டங்களை அணைவுசெய்ய, மேலுள்ள விரிகோணப் போதிகைகள் உத்திரம் தாங்குகின்றன.



மேற்பகுதி பிறையென வளைக்கப்பட்டுள்ள இவ்விரண்டு கோட்டங்களுக்கு முன்னிருக்குமாறு பிற்காலத்தே எழுப்பப்பட்டுள்ள மேடை வடக்கில் ஆனந்தத்தாண்டவருக்கும் தொடர்கிறது. முருகன் கோட்டத்தருகே சிதைந்து காணப்படும் தாங்குதள ஜகதி, குமுதம் இவை பிள்ளையார் கோட்டத்தருகே முழுமையடைந்த நிலையில் காணப்படுவதால், முகமண்டபப் பின்சுவர் முழுவதிற்கும் இவை தொடர்ந்திருக்குமோ என்று கருதத் தோன்றுகிறது.

பிள்ளையார் கோட்ட மேடையில் சிறிய பிள்ளையார் சிற்பம் உள்ளது. மண்டபத்தின் கூரையையொட்டித் தெற்கிலும் வடக்கிலும் வாஜனம் காட்டப்பட்டுள்ளது. மண்டபக் கூரையில் கிழக்கு மேற்காக இரண்டு அகலமான பட்டைகள் கருவறை முன்சுவர் வாஜனத்திலிருந்து முகப்பு உத்திரம்வரை வெட்டப்பட்டுள்ளன. தென்தமிழ்நாட்டுக் குடைவரைகள் எவற்றிலும் இது போன்ற கூரைப்பிரிப்பைக் காணக்கூடவில்லை. இதைப் பின்பற்றியே முற்சோழர் கற்றளிகளில் முகமண்டபக் கூரையை மூன்றாய்ப் பகுக்கும் பழக்கம் உருவானது போலும்.

நிலையமைப்புக் கொண்டுள்ள கருவறை வாயிலின் அகலம் 73 செ. மீ.; உயரம் 1. 76 மீ. வாயிலின் இருபுறத்தும் தொடங்கிக் கோட்டங்களின் மீதும் பின்சுவரிலும் தொடரும் உத்திரம் வாயிலின் மேற்பகுதியில் இடம்பெறவில்லை. வாஜனத்தின் அடிப்பரப்பில் வாயிலுக்கு மேலாகக் காணப்படும் கற்பலகை அகற்றப்படாத பாறையாகலாம்.

கிழக்கு மேற்காக 2. 72 மீ. அகலம், தென்வடலாக 2. 77 மீ. நீளம், 1. 89 மீ. உயரம் பெற்ற கருவறையில் சதுரமான ஆவுடையாரும் உருளைப்பாணமுமாய்ச் செய்தமைத்த இலிங்கத் திருமேனி அமைந்துள்ளது. கருவறையின் கூரை, சுவர்கள் இவை வெறுமையாக உள்ளன. தரையில் வடபுறத்தே முழுக்காட்டு நீர் வாங்க ஆழக் குறைவான சதுரப் பள்ளம் வெட்டப்பட்டுள்ளது. அதிலிருந்து வெளிப்படும் வடிகால் மண்டபத்தின் பின், வடசுவர்களை ஒட்டி ஓடுகிறது.

கோட்டச் சிற்பங்கள் அனைத்துமே குடைவரைக் காலத்திற்குப் பிற்பட்டவை. அவற்றைப் பதின்மூன்று அல்லது பதினான்காம் நூற்றாண்டினவாகக் கொள்ளலாம்.

கரண்டமகுடம், முப்புரிநூல், உதரபந்தம், தோள், கை வளைகள் அணிந்து கிழக்குப் பார்வையாக அர்த்தபத்மாசனத்தில் உள்ள பிள்ளையாரின்4 பின்கைப் பொருட்களை அடையாளம் காணமுடியவில்லை என்றாலும், இடப் பின் கையில் இருப்பதைத் தந்தமாக ஊகிக்கலாம். இட முன் கை தொடைமேல் அமர, முகமும் மார்பும் வல முன் கையும் சிதைந்துள்ளன.



பின்கைகளில் வலப்புறம் சக்தியும் இடப்புறம் வஜ்ரமும்5 கொண்டு சமநிலையில் உள்ள முருகப்பெருமானின் முன்கைகள் காத்து, அருள் செய்கின்றன. பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, தோள்மாலை கொண்டிலங்கும் அவர் தலையைக் கரண்டமகுடம் அழகு செய்கிறது. பின்னால் அலகில் பாம்புடன் மயில். பிள்ளையார், முருகன் இருவர் கோட்டங்களிலும் மேலே பக்கத்திற்கொருவராக வானவர்கள் ஒரு கையில் மலர் மொட்டும் மறு கையில் போற்றி முத்திரையுமாய் உள்ளனர்.

ஆனந்தத்தாண்டவர் குப்புறப் படுத்திருக்கும் முயலகன் மீது தம் வலப்பாதத்தை ஊன்றியிருக்கிறார். அழுத்தப்பட்டிக் கும் நிலையிலும் தலை தூக்கிப் பார்க்கும் முயலகனின் கையில் பாம்பு. இறைவனின் இடத்திருவடி உயர்த்தப்பட்டு வலப்புறம் வீசப்பட்டுள்ளது. பின்கைகளில் உடுக்கையும் தீச்சுடரும். வல முன் கை காக்கும் குறிப்புக் காட்ட, இட முன் கை வேழமுத்திரை யில் மார்பின் குறுக்கே நீட்டப்பட்டுள்ளது.6



விரிசடையின்7 வலப்புறம் கூப்பிய கைகளுடன் கங்கை; இடப்புறம் பிறை. நீள வளர்ந்த வலச்செவியில் மகரகுண்டலம்; இடச்செவியில் பனையோலைக் குண்டலம். இரண்டு ஆரங்கள், அரும்புச்சரம், தோள்மாலை, தோள், கை வளைகள், சிற்றாடை, இடைக்கட்டு, தாள்செறிகள், வீரக்கழல் இவை இறைவனை அணிசெய்கின்றன. இடைக்கட்டின் முடிச்சுத் தொங்கல்கள் ஆடல் வேகத்தில் இருபுறமும் விரிந்துள்ளன. அண்ணலின் இடப்புறம் கரண்டமகுடம், கழுத்தணி பெற்றுச் சமநிலையில் நிற்கும் அம்மையின் வலக்கையில் மலர்; இடக்கை நெகிழ்கையாக உள்ளது.8 இறைவனைப் போலவே இவருக்கும் வலச்செவியில் மகரகுண்டலம். இடச்செவியில் பனையோலைக் குண்டலம். கோட்ட மேல் விளிம்பைத் திருவாசி போல் செதுக்கி மேலே தீச்சுடர்கள் காட்டியுள்ளனர்.

குடைவரைக் கோயிலின் வடபுறத்தே கிழக்குப் பார்த்த நிலையில் உள்ள அம்மன் கோயில் கற்றளியாக அமைந்துள்ளது. கருவறை, முகமண்டபம் பெற்ற இத்திருமுன் ஜகதி, கண்டம், பெருவாஜனம் கொண்ட துணைத்தளத்தின்மீது கட்டப்பட்டுள்ளது. அரைத்தூண்களற்ற சுவரும் வாஜனம், வலபி, ஆழமற்ற கூடுகளுடன் கபோதம் எனக் கூரையிழுப்பும் கொண்டுள்ள இத்திருமுன்னின் பல இடங்களில் கல்வெட்டுச் சிதறல்கள் காணப்படுகின்றன. கருவறையின் இட நிலைக்காலில் குலசேகர பாண்டியர் காலக் கல்வெட்டு உள்ளது. கருவறையில் பின்கை களில் அக்கமாலையும் மலரும் கொண்ட மரகதவல்லி அம்மை, முன்கைகளுள் ஒன்று காக்கும் குறிப்புக் காட்ட, மற்றொன்று கடியவலம்பிதமாய் அமையச் சமநிலையில் உள்ளார்.





குடைவரையின் எதிர்ப்புறத்தே உள்ள பெருமண்டபச் சுவர்களிலும் கல்வெட்டுச் சிதறல்கள் உள்ளன. குடைவரைக்குத் தெற்கிலுள்ள சரிவில் விழும் நீரைக் கீழிறக்கச் சிறிய முகப்பு வெட்டியுள்ளனர். அதற்கு இரண்டு தூண்கள் நிறுத்திக் கூரை அமைத்துள்ளனர். அந்த முகப்பு வழி இறங்கும் நீர், கீழுள்ள சுனைக்குப் போகிறது. இச்சுனை நீரே திருமுழுக்காட்டுக்குக் கொள்ளப்படுகிறது. கீழ்ப்பகுதியில் உள்ள மடைப்பள்ளி மண்டபம் புதிய இணைப்பாகும்.

குடைவரையின் எப்பகுதியிலும் கல்வெட்டுகள் இல்லை. ஆனால், முன்மண்டபம், நந்திமண்டபம் இவற்றின் புறச்சுவர்களிலும் மடைப்பள்ளியின் புறச்சுவர்கள், உட்புறத் தாங்குதளம் இவற்றிலும் அம்மன் திருமுன்னிலுமாகப் பதினொரு கல்வெட்டுகள் உள்ளன. அவற்றுள் இரண்டு முழுமையானவை. ஏனைய ஒன்பதும் துணுக்குகளாய் உள்ளன.

குடைவரை முன்மண்டபக் கிழக்குச் சுவரில் இரண்டு கல்வெட்டுகள் உள்ளன. சாளரத்திற்கு அருகிலுள்ள கல்வெட்டு நாராயணன் என்ற பெயரை மட்டும் தருகிறது. பிள்ளையார் சிற்பத்திற்குக் கீழுள்ள கல்வெட்டு அகம்படியாகிய தில்லை நாயகன் பென்மன்9 என்பார் பெயரைத் தருகிறது. அவர் பிள்ளையாரை எழுந்தருளுவித்தவராகலாம். நந்திமண்டபக் கல்வெட்டு மெய்க்கீர்த்தியொன்றின் துணுக்காக உள்ளது.

அம்மன் திருமுன்னில் உள்ள ஐந்து கல்வெட்டுகளுள் துணுக்குக் கல்வெட்டுகள் நான்கு. திருநிலைக்காலில் காணப்படும் பதின்மூன்றாம் நூற்றாண்டு எழுத்தமைதியில் உள்ள நாற்பத்தாறு வரிக் கல்வெட்டு இறைவனே பேசுவது போல் அமைந்துள்ளது.10 சாகல்யகுடி கேசவன் தேவன், ஆப்பனூர் சுந்தரத்தோளன் பேராயமுடையான் உள்ளிட்ட பத்துப் பேருக்கு இறைவனால் காராண்மை ஜன்மமாக நிலம் ஒதுக்கப்பட்டது. குலசேகரரின் எட்டாம் ஆட்சியாண்டு முதல் கைக்கொள்ளப்பட்டுப் பயிர் செய்யப்பட்ட இந்நிலத்திற்கான தீர்வைகள் கல்வெட்டில் வரையறுக்கப்பட்டுள்ளன.

1. இருபத்து நான்கு சாண் கோலால் அளக்கப்பட்ட ஒருமா நீர்நிலத்துக்கு எட்டுக்கல நெல், ஆயிரத்தெண்மன் காலால், கோயில் அடுக்களைப்புறத்தே அளந்து தருதல். அத்துடன் மாத்தால் ஒன்றரைத் திரமம் தேவகன்மிகள் கையில் தருதல்.

2. கோடைக் குறுவை விளைந்த நிலங்களுக்கு இந்நெல்லிலும் திரமத்திலும் பாதி கொடுத்தல்.

3. கருஞ்செய், புன்செய் நிலங்களில் இருபத்து நான்கு சாண் கோலால் அளக்கப்பட்ட ஒருமா நிலத்திற்கு ஒன்றரைத் திரமம் தருதல்.

முகமண்டபச் சுவர்களிலுள்ள கல்வெட்டுச் சிதறல்களுள் ஒன்று, மன்னர் ஒருவரின் ஆறாம் ஆட்சியாண்டின் பங்குனித் திங்கள் முதல் கோயில் நிலங்களுக்குத் தரப்பட்ட கொடையைச் சுட்டுகிறது. திருவிடையாட்டம், கருநீலக்குடிநாடு என்பன குறிக்கப்பட்டுள்ளன. மற்றொரு கல்வெட்டு, திருப்படிமாற்று உள்ளிட்ட வேண்டும் நித்த நிவந்தங்களுக்குத் தரப்பட்ட கொடை யையும் சந்திவிக்கிரகப்பேறு என்ற வரியையும் குறிக்கிறது.

அம்மன் திருமுன் புறச்சுவர்க் கல்வெட்டு நிலக்கொடையைச் சுட்டுவதாகக் கொள்ளலாம். குலசேகர சதுர்வேதிமங்கலம், கண்டநாட்டு நாடாள்வான் என்ற சொற்றொடர்கள் கிடைக்கின்றன. மடைப்பள்ளிப் புறச்சுவர்களிலிருந்து படி யெடுக்கப்பட்ட கல்வெட்டுகளுள் ஒன்று கடமை, அந்தராயம் வழி ஒன்றே முக்கால் காசு வருமானம் வந்ததாகக் கூறுகிறது. இக்கல்வெட்டில் வரகுணப் பேரேரி இடம்பெற்றுள்ளது. தேவதான நிலங்கள் இருந்த குறிப்பும் அவற்றிற்குப் பெறப்பட்ட அமைப்பிலேயே புதிய கொடை நிலத்திலிருந்தும் வரிகள் பெற ஏற்பாடான தகவலும் குறிப்பிடத்தக்கவை.11

மற்றொரு கல்வெட்டு இறைவனுக்குத் தரப்பட்ட கொடையொன்றைச் சுட்டுகிறது. வடசுவரின் மேற்பக்கத்தில் உள்ள கல்வெட்டு, 'சோழ பாண்டியனான குலசேகர சதுப்பேதிமங்கலம் மங்கலத்து ஊரார்க்கு ஆனாயம்' என்றமைந்துள்ளது. இக்கல்வெட்டின் கீழ்ப்பகுதியில் ஒரு முக்காலியும் அதன் மேல் நிறைகுடமும் காணப்படுகின்றன. முக்காலியின் இருபுறமும் குத்துவிளக்குகள். ஆனாயம் என்ற சொல்லிலுள்ள ஆயம் சங்க காலச் சொல்வழக்காகும். இது ஆத்திரளைக் குறிக்கிறதா அல்லது அடைக்கலம் தொடர்பான சொல்லாட்சியா என்பது ஆய்வுக்குரியது.

கல்வெட்டுகளின் வழிக் குடைவரையின் பெயரையோ, இறைவனின் பெயரையோ இங்குள்ள அம்மன் திருமுன் தொடர்பான செய்திகளையோ பெறமுடியவில்லை. மூவரை வென்றான் ஊர்ப்பகுதியில் காணப்படும் சிதைந்த நிலையில் உள்ள ஈசுவரர் கோயில் கல்வெட்டுகளிலும் இக்குடைவரை தொடர்பான செய்திகள் இல்லை. இந்நிலையில் மூவரை வென்றான் குடைவரையின் காலத்தை அதன் அமைப்புக் கொண்டு கி. பி. எட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியாகக் கொள்ளலாம். இங்குள்ள கல்வெட்டுகள் இக்கோயில் பதின் மூன்றாம், பதினான்காம் நூற்றாண்டுகளில் வளமுடன் திகழ்ந்ததை உணர்த்துகின்றன. இந்நாளிலும் இராசபாளையத்தைச் சேர்ந்த சில குடியினருக்கு இக்கோயில் முக்கியத் தலமாக விளங்குவது குறிப்பிடத்தக்கது.

1. முதலாய்வு நாள் 2. 2. 1995. மீளாய்வு நாள் 7. 6. 2009. மீளாய்வின்போது உடனிருந்து உதவிய பூசாரி திரு. சி. கணேசனுக்கு உளமார்ந்த நன்றி. முதலாய்வின்போது சிதைந்திருந்த பாறைப்படிகளும் முகமண்டபத் தரையும் தற்போது சிமெந்துப்பூச்சுப் பெற்றுள்ளன. அம்மன் திருமுன் புதுக்கோலம் பூண்டு, கல்வெட்டுகளை இழந்துள்ளது.

2. தி. இராசமாணிக்கம், சு. இராசவேலு, அ. கி. சேஷாத்திரி இவர்கள் 'தூண்களின் சதுர அமைப்புகளில் தாமரையிதழ்கள் உருவாக்கப்பட்டுள்ளன' என்று எழுதியிருக்கிறார்கள். தென்னகக் குடைவரைக் கோயில்கள், ப. 83. மு. கு. நூல், ப. 158. இக்கூற்றுச் சரியன்று. மலர்ப் பதக்கங்களை உருவாக்கும் முயற்சியே காணப்படுகிறது. தாமரைப்பதக்கங்களாய்ச் சிலவே வடிவெடுத்துள்ளன.

3. 'கருவறை வாயிலின் இருபுறமும் புரைகள் உருவாக்கப்பட்டுள்ளன. வலப்புறம் உள்ள புரையில் விநாயகரும் இடப்புறம் உள்ள புரையில் முருகனும் புடை சிற்பமாக உருவாக்கப்பட்டுள்ளனர்' என்று எழுதியிருப்பதன் மூலம் கருவறை முன்சுவர்க் கோட்டங்களைத் தி. இராசமாணிக்கம், கணக்கில் எடுத்துக்கொள்ளாமையும் பின்சுவர்க் கோட்டங்களைக் கருவறை வாயிலின் இருபுறத்துள்ள புரைகளாகக் கருதியுள்ளமையும் தெளிவாகின்றன. மு. கு. நூல், ப. 83. சு. இராசவேலு, அ. கி. சேஷாத்திரி இவர்களும் இதையே கூறியுள்ளனர். மு. கு. நூல், பக். 158-159.

4. இந்த அமர்வை, 'யோகநிலை' என்று தி. இராசமாணிக்கம், சு. இராசவேலு, அ. கி. சேஷாத்திரி இவர்கள் குறிப்பது பொருந்தாது. மு. கு. நூல்கள், பக். 83, 159.

5. தி. இராசமாணிக்கம் கருவிகளை இட, வல மாற்றம் செய்துள்ளார். மு. கு. நூல், ப. 84. வலப்புறம் வஜ்ரமும் இடப்புறம் வேலும் இருப்பதாகச் சு. இராசவேலுவும் அ. கி. சேஷாத்திரியும் எழுதியுள்ளனர். மு. கு. நூல், ப. 159.

6. தி. இராசமாணிக்கம், சு. இராசவேலு, அ. கி. சேஷாத்திரி இவர்கள் இந்தக் கை, இறைவனின் காலைச் சுட்டிக் காட்டிய நிலையில் இருப்பதாகக் குறித்துள்ளனர். மு. கு. நூல்கள், பக். 84, 159. ஆனால், சுட்டு முத்திரையில் கை இல்லை.

7. சு. இராசவேலு, அ. கி. சேஷாத்திரி இவர்கள் சடைமகுடம் என்கின்றனர். மு. கு. நூல், ப. 159.

8. தி. இராசமாணிக்கம் இந்தக் கை, 'கத்யவலம்பித' முத்திரையில் இருப்பதாகத் தவறாகக் குறித்துள்ளார். மு. கு. நூல், ப. 84.

9. அந்தோணிராஜ் இப்பெயரைத் 'தலனை நாயகன் இபன்மன்' என்று படித்துள்ளார். A Social Histoy of Muvaraivenran, M. Phil. Dissertation, Submitted to Kamaraj University, Madurai, p. 36.

10. அந்தோணிராஜ் இக்கல்வெட்டிற்குச் செய்தி விளக்கம் தரவில்லை. மு. கு. ஆய்வேடு, ப. 132.

11. 'இத்தேவர் தேவதானமான நிலத்தில் ஒட்டினபடியே கடமை அந்தராயத்துக் கொண்டு' என்பது கல்வெட்டு வரி.
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.