http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 65
இதழ் 65 [ நவம்பர் 15 - டிசம்பர் 15, 2009 ] இந்த இதழில்.. In this Issue.. |
நெஞ்சமர்ந்தவளே! நீ என் அத்தை மகளா? மாமன் மகளா? இல்லை அக்காள் மகளா? நீ யாரடி யாழ்மொழியாளே! நீதான் என்ன உறவுமுறை? உன் ஊர் வேறு. என் ஊர் வேறு. என் மக்கள் வேறு. உன் மக்கள் வேறு. மேகம் பொழியும் மழையும், செம்புலத்து நிலம் இரண்டும் வெவ்வேறு இடங்களில் மிகத் தொலைவில் இருப்பினும், உரிய கார்காலத்தில் இணைகின்றன. அதுபோலவே இது நல்ல ஊழால் இணைந்திட்ட உறவு. நாம் பிறந்த குலம் வேறு, நாம் வளர்ந்த நிலம் வேறு. நான் எங்கோ இருந்தேன். இங்கு உன்னைச் சந்தித்தேன். உன் அன்பினில் இணைந்துவிட்டேன். பிரிவின்றி எஞ்ஞான்றும் தொடருமடி கிளிப்பெண்ணே! வடகடலிட்ட நுகம் தென்கடலில் இட்ட கழியில் இணைகின்றதே, நீ அறியாயோ? விழிகள் நான்கு எழுதிய இதயக்கவிதை இது. இதில் பிரிவென்ற சொல் ஏது? இரண்டு நெஞ்சங்கள் ஒன்றெனக் கலந்தபின், நான் வேறு நீ வேறல்ல. பிரிவச்சம் எதற்கு? வீண் கலக்கம் ஏனோ? வானவில் தோற்கும் என்னழகே! மழையென நான், ஏந்தும் நிலமென நீ. இது நம்மிருவரின் ஊழ்வினைப்பயன் பெண்ணே! பிரிவின்றி இயைந்த துவரா நட்பாகத் தொடரும் உறவு இதுவே என உறுதி கூறுகின்றேன். படைத்தவன் நினைத்தாலும் பிரித்திட இயலாதது இது. இனி எந்தன் நாளெல்லாம் உந்தன் நாளே! இயற்கைப் புணர்ச்சி புணர்ந்தபின் பிரிவர் எனக்கருதி அஞ்சிய தலைமகன் குறிப்பு வேறுபாடு கண்டு தலைமகன் கூறியது. அனைவரும் அறிந்த பாடல் இதோ. "யாயும் ஞாயும் யார் ஆகியரோ? எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர். யானும் நீயும் எவ்வழி அறிதும் செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே" ஆசிரியர் : செம்புலப் பெயனீரார் திணை : குறிஞ்சி பாடல் : குறுந்தொகை : 40. விளக்கம் : என் தாயும் உன் தாயும் யார் யாரோ? என் தந்தையும் உன் தந்தையும் எம்முறையில் உறவுடையோர்? நானும் நீயும் எக்குடிவழியைச் சார்ந்தவராக அறிதல் கூடும்? செம்மண் நிலத்தில் பெய்யும் மழைநீரைப் போல, நம்முடைய நெஞ்சங்கள் தாமாக அன்புடன் கலந்தன. மழைநீருக்கு என்று எந்த நிறமும் சுவையும் இல்லை. ஆனால், செம்மண் நிலத்தில் பெய்தபின் அம்மண்ணொடு கலந்தபின், அதன் நிறத்தையும், சுவையையும் பெற்றுத் தம் தன்மை மாறி ஒன்றுபடுவது போல, இருவர் உள்ளங்களும் தம்முள் கலந்து ஒன்றாயின. நெஞ்சு கலந்தமையால் அதற்குச் செம்புலப் பெயல்நீரை உவமையாகக் கூறினமையால் இப்பாடலை இயற்றிய புலவர் செம்புலப் பெயல்நீரார் என்ற சிறப்புப் பெயர் பெற்றார். தமிழ்க்கவிதை வானில் தனித்துவம் வாய்ந்த இடத்தையும், அழியாப் புகழையும் பெற்றுவிட்டார். தமிழ் உள்ளவரை, தமிழன் வாழ்வில் காதல் என்பது உள்ளவரை இந்தப் பாடல் அனைத்துத் தமிழன் நெஞ்சிலும் இடம்பெறும். ஒவ்வொரு தமிழனும் தமிழச்சியும் உன்னத, உயரிய காதல் வயப்படும்போது இப்பாடலை ஒருமுறையேனும் சொல்லி இரசிப்பார்கள். மனத்தின் ஏடுகளில் எழுதி வாசிப்பார்கள். காலத்தை வென்ற காதல் கவிதை இது. தமிழனின் ஒவ்வொரு தலைமுறையும் இதைச் சொல்லிச் சொல்லியே காதலின் இனிமையையும், தமிழின் சுவையையும் உணரும். தமிழ் வாழ்க! தமிழனின் உன்னதக் காதலும் வாழ்க! காதல் பேசும் நற்கவிதையும் வாழ்க! this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |