![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 67
![]() இதழ் 67 [ ஜனவரி 15 - பிப்ரவரி 15, 2010 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
காவேரி கொள்ளிடம் ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ள புகழ்பெற்ற வைணவத் தலம் திருவரங்கம். முதன் முதலாகச் சிலப்பதிகாரத்தில்தான் திருவரங்கத்தைப் பற்றிய குறிப்பு கிடைக்கிறது. அந்தப் பாடலில் இறைவன் திரைவிரியும் காவிரியாற்றிடைக் குறையிலே பாம்பின் மீது பள்ளி கொண்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. 'ஆயிரம் விரித்தெழு தலையுடை யருந்திறற் பாயற் பள்ளிப் பலர்தொழு தேத்த விரிதிரைக் காவிரி வியன்பெருந் துருத்தித் திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும்' சிலப்பதிகாரம், காடுகாண்காதை : 37- 40. வைணவ ஆழ்வார்களில் மதுரகவி ஆழ்வாரைத் தவிர ஏனைய பதினொரு ஆழ்வார்களின் பாடல் பெற்றது திருவரங்கக் கோயில். இங்கிருந்து 644 கல்வெட்டுகளைப் பல்வேறு கால கட்டங்களில் நடுவணரசு படியெடுத்துள்ளது. இக்கல்வெட்டுகள் அனைத்தும் தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி 24ல் பதிவாகியுள்ளன. ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து பதினெட்டாம் நூற்றாண்டுவரை தமிழகத்தை ஆண்ட பல மரபுகளைச் சேர்ந்த மன்னர்களின் கல்வெட்டுகளும் காகதிய, கஜபதி, தெலுங்குச் சோழ மன்னர்களின் கல்வெட்டுகளும் இங்கிருந்து படியெடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள், விஜயநகர மன்னர்களின் கல்வெட்டுகள் இக்கோயிலில் தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய மாதங்களில் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட பல்வேறு திருவிழாக்களைப் பற்றி விரிவாகக் கூறுகின்றன. இந்தத் திரு விழாக்களைச் சிறப்பாக நடத்துவதற்காக விஜயநகர மன்னர்கள் பல்வேறு ஊர்களிலிருந்து வந்த வருவாயைக் கொடையாகத் தந்துள்ளனர். ஒவ்வொரு விழாவிற்கும் எந்த மன்னர் கொடையளித்திருந்தாரோ அவர் பெயரிலேயே அவ்விழாக்கள் நடத்தப்பட்டதற்கான குறிப்புகளும் கல்வெட்டுகளில் கிடைக்கின்றன. தை மாதம் பூபதி உடையார் திருநாள், மாசி மாதம் கிருஷ்ண தேவ மகாராயர் திருநாள், பங்குனி மாதம் ஆதிபிரம்மாவின் திருநாள், சித்திரை மாதம் அச்சுதராயர் திருநாள், வைகாசி மாதம் ராமராஜாவின் திருநாள் என மன்னர்களின் பெயராலேயே விழாக்கள் கொண்டாடப்பட்டுள்ளன. இவை தவிர, வேதபாராயணத் திருநாள், திருவாய்மொழித் திருநாள், விருப்பண உடையார் திருநாள், வீரப்ப நாயக்கர் திருநாள், திருமலை ராஜாவின் திருநாள், வசந்தன் திருநாள், இராம நவமித் திருநாள், தீபாவளித் திருநாள் எனப் பல திருநாட்களும் திருவரங்கம் கோயிலில் கொண்டாடப்பட்டுள்ளன. மன்னர்களின் பெயரால் நடத்தப்பட்ட திருவிழாக்களுள் பெரும்பான் மையன தொடர்ந்து பத்து நாட்கள் சிறப்பாக நடத்தப்பட்ட தற்கான குறிப்புகளைக் கல்வெட்டுகளில் காணமுடிகிறது. இவ்வனைத்துத் திருநாட்களிலும் வைகாசித் திங்களில் நடந்த திருவிழா ராமராஜர் காலக் கல்வெட்டொன்றில் மிக விரிவாகப் பேசப்பட்டுள்ளது (24: 474). கி. பி. 1553ல் விஜயநகர மன்னர் ராமராஜர், திருப்பருத்திச் சீர்மையில், வல்லநாட்டில் உள்ள பாசாறு, செம்பியனங்களார் எனும் ஊர்களையும் பாசாறு ஊரின் உட்கிடைகளான ஆலம்பள்ளம், கயற்றூர் ஆகிய பகுதிகளையும் சேர்ந்த இருபத்தாறு வேலி நன்செய் நிலம், பத்தொன்பது வேலி புன்செய் நிலம் ஆகியவற்றிலிருந்து வரும் தம் வருவாய் இருநூற்றைந்து பொன்னைத் திருவரங்கம் கோயிலுக்குக் கொடையாகத் தந்தார். அந்த இருநூற்றைந்து பொன்னில் வைகாசித் திருவிழாவிற்கு நூற்றெழுபத்தொன்றரை பொன்னும் ஆனி அநுஷநட்சத்திரத்தில் நிகழ்த்தப்படும் திருஊஞ்சல் திருநாளுக்கு முப்பத்து மூன்றரை பொன்னும் வைப்புநிதியாக ஒதுக்கப்பட்டன. அந்தத் தொகையிலிருந்து வரும் வட்டி கொண்டு இரண்டு விழாக்களும் பெருஞ்சிறப்புடன் கொண்டாடப்பட்டன. அவற்றுள், வைகாசித் திருநாள் கொண்டாட்டத் தரவுகளே கல்வெட்டின் பெரும்பகுதியை நிரப்பிக்கொண்டுள்ளன. பத்து நாட்கள் நடந்த அத்திருவிழாவின் முதல் நாளன்று கோயிலில் கொடியேற்றப்பட்டு விழா தொடங்கப்பட்டது. இறைவனின் இவ்விழாக் கொடியைக் கல்வெட்டு, 'திருக்கொடியாழ்வான்' என்று குறிப்பிடுகிறது. திருவிழாவின் இரண்டாம் நாள் தொடங்கி எட்டாம் நாள் முடிய இறைவன் திருக்கோயில் சார்ந்த வாகன மண்டபம், பெரிய திருமண்டபம், சூடிக் கொடுத்த நாச்சியார் கோயில், முதலாழ்வார் கோயில் மண்டபம், நாச்சியார் கோயில், எல்லைக்கரை பதினாறு கால் மண்டபம் ஆகிய பல்வேறு மண்டபங்களுக்கும் திருமுன்களுக்கும் எழுந்தருளிச் சேவை அளித்தார். அவற்றுள் பெரிய திருமண்டபத்தில் மட்டும் அதன் மேற்குப் பகுதியில் ஒரு நாளும் கிழக்குப் பகுதியில் ஒருநாளும் இறைவன் எழுந்தருளியதாகக் கல்வெட்டுக் குறிப்பிடுகிறது. நாச்சியார் கோயில்களாகக் குறிக்கப்படும் இரண்டனுள், சூடிக் கொடுத்த நாச்சியார் கோயில் திருவரங்கக் கோயில் வளாகத்திற்குள்ளேயே இருக்கும் திருமுன்னாகும். அது தற்போது ஆண்டாள் கோயிலென்று அழைக்கப்படுகிறது. மற்றொன்று அரங்க நாச்சியார் கோயில். விழாவின் ஒன்பதாம் நாள் அரங்கநாதரும் அரங்க நாச்சியும் 'தம்பதி சமேதராய்த்' தேரில் எழுந்தருளித் திருவரங்க வீதிகளில் உலா வந்து காட்சி கொடுத்துச் செல்வர். பத்தாம் நாள் சக்ரபாணத்துத் திருமஞ்சனம் கொண்டு விழா முடிவடையும். அந்நாளில் இறைவனுக்கு அளவற்ற படையல்கள் அளிக்கப்பட்டமையை அறியமுடிகிறது. விழா நாட்களில் பல்வேறு மண்டபங்களிலும் திருமுன்களிலும் இறைவன் எழுந்தருளிச் சேவை அளிக்கும்போது தேவைப்படும் வழிபாட்டுப் பொருட்களாக ஸமித்து, புல், நெல், எள், எண்ணெய், சந்தனம், மஞ்சள், குங்குமப்பூ, கற்பூரம், கஸ்தூரி, திருநாமம், குத்துவிளக்கு, சாம்பிராணித் தூபம், பன்னீர்ச் செம்பு, இளநீர், நெய், பழம், வெல்லம், அரிசி, வெற்றிலை, பாக்கு ஆகியன குறிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாள் வழிபாட்டிற்கும் இப்பொருட்களில் எவ்வளவு தேவையோ, அதற்கேற்பக் கோயில் பண்டாரத்திலிருந்து பொன் தரப்பட்டது. விழா நாட்களில் இறைவனுக்கு அளிக்கப்படும் படையல் களுக்காக அப்பம், அதிரசம், வடை, பொரியமுது, பானகம், சம்பா தளிகை, சேமத் தளிகை, வெள்ளித் தளிகை ஆகியன கோயில் மடைப்பள்ளியில் தயாரித்து வழங்கப்பட்டன. தளிகைகள் யாகசாலையிலும் திருப்பள்ளி அறையிலும் படைக்கப்பட்டன. இது போல் அளிக்கப்பட்ட தளிகைகளின் சிறப்புகள், எண்ணிக்கை பற்றிப் பல கல்வெட்டுகள் பேசுகின்றன. இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட படையல் மற்றும் வழிபாட்டுப் பொருட்கள் திருக்கொடி ஆழ்வானுக்கும் திசைக்காவலர்களுக்கும் வழங்கப்பட்டன. விழா நாட்களில் கலந்துகொண்டு வேண்டுவன செய்த கோயில் பணியாளர்கள் பற்றிய செய்திகளும் இக்கல்வெட்டில் மிக விரிவாகக் கூறப்பட்டுள்ளன. கோயில் பணியாளர்களாகத் திருத்தேர் உட்படாம் நெய்பவர், திருக்கொடிப்படாத்திற்கு வண்ணம் எழுதும் பரிசாரி, கொத்தளப் பஞ்சாளத்தார், குயவர், உலாப்படிப்பவர், திருப்பாதம் தாங்குவார், பந்தம் பிடிப்பவர், பேரிகை, தாளம் அடிக்கும் நம்பிமார், நாடகம் ஆடுகிற அடியார், எல்லைக்கரையில் திருவேளைக்காரர், கைக்கோளர், சமப்பவர் ஆகியோர் குறிக்கப்படுகின்றனர். அவர்தம் பணிகளுக்குக் கூலியாகப் பணம் தரப்பட்டமையுடன், அவர்களில் சிலர் பரிவட்டம் கொடுத்தும் சிறப்பிக்கப்பட்டுள்ளனர். திருத்தேர்க்குப் புடவை, கொடியேற்றுவதற்குத் தேவைப்படும் பிள்ளைக் கயிறு, தேர் இழுப்பதற்குத் தேவையான பேழை வடம், இளவடம் ஆகியவற்றிற்கான செலவுகள் பற்றியும் கல்வெட்டுக் கூறுகிறது. பிள்ளைக் கயிறு, பேழை வடம், இளவடம் எனும் சொல்லாட்சிகள் குறிப்பிடத்தக்கன. பத்து நாள் விழாத் தரவுகளைக் கோடிட்டுக் காட்டும் இது போன்ற கல்வெட்டுகள் விரிவாக ஆராயப்பட்டு இன்றைய விழாத் தரவுகளோடு ஒப்பு நோக்கப்படுமானால் தமிழ்நாட்டுக் கலை வரலாறு பல புதிய பக்கங்களைப் பெறுதல் உறுதி. this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |