http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 72
இதழ் 72 [ ஜூன் 16 - ஜூலை 15, 2010 ] இந்த இதழில்.. In this Issue.. |
"இராஜேந்திர சோழரின் முடிசூட்டு விழாவையும் கடார வெற்றி விழாவையும் சிறப்பாகக் கொண்டாடவிருக்கிறோம்".
இதைக் கேட்டதும் நாங்கள் அனைவரும் வியப்பின் உச்சிக்கே சென்றோம். வரலாற்றில், அதுவும் குறிப்பாகச் சோழர் வரலாற்றில் ஈடுபாடு கொண்டவர்கள் தலைமேல் வைத்துக் கொண்டாடுவது முதலாம் இராஜராஜரையும் தஞ்சை பெரியகோயிலையும்தான். ஆனால், இவர் இராஜராஜரை விட்டுவிட்டு வித்தியாசமாக இராஜேந்திரரைக் கொண்டாடுகிறாரே என்று ஆச்சரியப்பட்டோம். பின்பு அவரது குழுவினரை அறிமுகப்படுத்தியபோது, இப்படியொரு ஆர்வலர் குழுவைப் பெற வரலாறு என்ன புண்ணியம் செய்ததோ என்று வியந்தோம். அவர்தான் திரு.க.இராமச்சந்திரன், துணை வட்டாட்சியர், திருக்குவளை, நாகப்பட்டினம் மாவட்டம். அவரைப்பற்றிய மற்றும் அவர் உருவாக்கிய வரலாற்று ஆர்வலர்கள் குழுவினரின் அறிமுகம்தான் இக்கட்டுரை. திருச்சிராப்பள்ளி டாக்டர். மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம் மாடக்கோயில்களைப் பற்றி ஆய்வு செய்துகொண்டிருந்தபோது, 2010ம் ஆண்டின் பிற்பகுதியில், நாகப்பட்டினம் மாவட்டத்துக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்பட்டது. ஏற்கனவே நண்பர் பால.பத்மநாபன் மூலமாக இராமச்சந்திரனைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தாலும், அப்போதுதான் முதல்முறை சந்திக்க நேர்ந்தது. அப்போது அவருக்குக் காலில் சற்று அடிபட்டிருந்தாலும், எங்களுக்காக நாகப்பட்டினம் எல்லையிலேயே காத்திருந்து வரவேற்றார். அதுவே அவரைப்பற்றிய நல்லெண்ணத்தை எங்களிடையே தோற்றுவித்தது. நாங்கள் மட்டுமல்ல. நாகப்பட்டினத்துக்கு வரலாற்றாய்வுக்காக வரும் எல்லா வரலாற்றாய்வாளர்களையும் நல்ல முறையில் வரவேற்று, உபசரித்து, ஆய்வு முடியும்வரை உடனிருந்து தேவையான உதவிகளைச் செய்துதந்து, வழியனுப்பும் வரை தன்னுடைய கடமையாகக் கருதிச் செய்வார் என்று பிற வரலாற்றாய்வாளர்களிடமிருந்து கேள்விப்பட்டபோது, எங்கள் பிரமிப்பு இன்னும் அதிகமாகியது. இரண்டாவது முறையாகக் கடந்த மாதம் நாகப்பட்டினம் செல்ல நேர்ந்தது. வழக்கம்போல் இரண்டு நாட்களும் உடனிருந்து கவனித்துக் கொண்டார். இரண்டாவது நாளின் மதிய உணவைத் திருக்குவளையில் ஏற்பாடு செய்திருந்தார். அப்போதுதான் நாங்கள் பேரின்பப் பெருவெளியில் தள்ளப்பட்டோம். உணவு சுவையாக இருந்ததால் அல்ல. அடுத்து நிகழ்ந்த நிகழ்வுகள் உணவைவிடச் சுவையாக இருந்ததால்தான். சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் எங்கள் கிராமத்தில், ஏதாவது கார் வந்தாலே போதும், ஒரு சிறுவர் பட்டாளம் பின்னாலேயே ஓடி, யார் வந்திருக்கிறார்கள், எதற்காக வந்திருக்கிறார்கள் என்று ஆராய்ந்து கிராம மக்களுக்குத் தகவல் ஒலிபரப்புச் செய்யும். அன்றும் திருக்குவளை கிராமத்துக்குள் எங்கள் கார் நுழைந்ததுமே ஒரு சிறுவர் பட்டாளம் பின் தொடர ஆரம்பித்தது. அட! பல வருடங்களுக்குப் பிறகும் இன்னும் இந்தப் பாரம்பரியம் தொடர்கிறதா என்று வியப்புடன் பார்த்தோம். ஆனால் எங்கள் பேரின்பத்துக்கு அதுவும் காரணம் அல்ல. நாங்கள் உணவருந்தி முடித்து, வெளியே வந்து பார்த்தால், அந்தச் சிறுவர் படை அறையில் குழுமியிருந்தது. பேனர்களைக் கட்டியும் நாற்காலிகளை வரிசைப்படுத்தியும் அறையை அலங்கரித்துக் கொண்டிருந்தது. எல்லோரும் அமர்ந்ததும், திரு. இராமச்சந்திரன் அவர்கள் அறிமுக உரையைத் தொடங்கினார். பொதுவாக, வரலாற்று ஆர்வலர்கள் குழு என்றால், பணியிலிருந்துகொண்டே அல்லது பணிநிறைவு பெற்றபின்பு ஓய்வு நேரத்தில் வரலாற்றைப் பற்றி யோசிப்பவர்கள் என்றுதான் எண்ணத் தோன்றும். பள்ளிப் பருவத்தில் வரலாற்றுப் பணியில் ஈடுபடுபவர்கள் மிகவும் குறைவு. அவ்வளவு ஏன்? பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்றவற்றைப் படிப்பவர்கள்கூடக் குறைவுதான். ஒருமுறை என்னுடன் அமெரிக்காவில் பணிபுரிந்த நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தபோது, 'நீங்கள் சிறுவயதில் பொ.செ எல்லாம் படித்ததுண்டா?' என்று கேட்டுவிட்டேன். 'அதெல்லாம் படித்து என்ன செய்வது?' என்றார். ஏன் என்று கேட்டதற்கு, 'எங்கள் வீட்டில் பெரியம்மா, அத்தை எல்லோரும் படிப்பார்கள். நான் படிக்க முற்பட்டபோது, என் அப்பா திட்டினார். அதெல்லாம் காலையில் சமையலை முடித்துவிட்டு, மதிய உணவுக்காகக் கணவன் வரும்வரை போகாமல் அடம்பிடிக்கும் பொழுதைப் போகவைப்பதற்காகப் பெண்கள் படிப்பது. ஆண்பிள்ளை நீ எதற்காக அதெல்லாம் படிக்கிறாய்? இதையெல்லாம் படித்தால் படிப்பில் கவனம் குறைந்துவிடும். பிறகெப்படி உனக்குப் பொறியியல் படிப்பில் இடம் கிடைக்கும் என்றார்.' என்று கூறினார் நண்பர். ஆனால், ஆங்கில நாவல்கள் படிப்பதற்கோ, ஆங்கிலப் படங்கள் பார்ப்பதற்கோ அல்லது மேற்கத்திய ஆல்பங்களைக் கேட்டு இரசிப்பதற்கோ அவர் வீட்டில் தடையில்லையாம். எப்படி இருக்கிறது பாருங்கள்! பொறியியல் அல்லது மருத்துவப் பட்டப்படிப்பைக் கனவாகக் கொண்டிருந்த எங்கள் தலைமுறையிலேயே வரலாற்று ஆர்வத்துக்குத் தடை இருந்தது என்றால், அமெரிக்கக் குடியுரிமையைக் கனவாகக் கொண்டிருக்கும் இன்றைய தலைமுறையில் தடைகள் இருப்பது வியப்பில்லைதானே? இப்போதெல்லாம் பெற்றோர் தடுக்க வேண்டிய அவசியமே இல்லை என்று நினைக்கிறேன். அவர்களுக்கே ஆர்வம் இருப்பதில்லை அல்லது தமிழ் படிக்கத் தெரிவதில்லை. ஆனால் அன்றைக்கு, அங்கு கூடியிருந்த உயர்நிலைப்பள்ளி மாணவர்கள்தான் வரலாற்று ஆர்வலர்கள் குழு என்று திரு. இராமச்சந்திரன் கூறியபோது உண்மையிலேயே எழுந்து நின்று கைதட்டவேண்டும் என்று தோன்றியது. எல்லோரும் ஏழாம் வகுப்பிலிருந்து பணிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள். வரலாறு என்றால் என்னவென்று அறிய முற்படும் பருவம். 'சிறுவயதிலேயே வரலாற்று ஆர்வத்தை ஊட்டித் தயார் செய்தால், எதிர்காலம் வரலாற்று மறுமலர்ச்சி காலமாக அமையலாம் என்று கருதி, பள்ளி மாணவர்களை வரலாற்று ஆர்வலர்களாக உருவாக்க முயற்சி செய்து வருகிறேன்' என்றார். அதைக்கேட்டு நாங்கள் அனைவரும் நெகிழ்ந்து போனோம். இந்த முயற்சி வரலாற்று ஆர்வலர் குழுவின் ஒரு பகுதிதான். குழுவின் நோக்கங்கள் என்று கீழ்க்கண்டவற்றைப் பட்டியலிடுகிறார். 1. இச்சந்ததி கண்டறிந்துள்ள வரலாற்றுச் சான்றுகளைப் பாதுகாப்பாக அடுத்த தலைமுறையினரிடம் ஒப்படைப்பது. வரலாற்றுச் செய்திகளுக்கு உரிய ஆதாரங்களைக் கண்டறிந்து மக்களிடம் எடுத்துக்கூறி அதை அடுத்த தலைமுறையிடம் பத்திரமாக ஒப்படைப்பதும், அடுத்த தலைமுறையினரும் தொடர் ஓட்டம் போல இவ்வரலாற்று ஆதாரங்களை அவர்களுக்கு அடுத்த தலைமுறையினரிடம் ஒப்படைக்கும்படி கடமை உணர்வைத் தொடங்கிக் கடைபிடிப்பது. 2. வரலாற்று அறிவை மனித சமுதாய மேன்மைக்குப் பயன்படுத்த முயற்சிப்பது. தாவரங்களும் மனிதர்களின் உறவினரே என்ற தமிழ் இலக்கியக் (நற்றிணை 171-ம் பாடல் - தலைவி புன்னை மரத்தைத் தங்கையாகக் கருதித் தோழியிடம் ரகசியம் பேசாது காத்தல்) கருத்தின் மூலம் மனித இயற்கை உறவை மேம்படுத்த முயல்வது. 3. வரலாற்று ஆர்வத்தைத் தூண்டிவிடுவது மூலம் உண்மையான வரலாற்று அறிவு ஒளி பரவ முயற்சித்தல். எந்தக் கட்டிடத்தையும் (கோயில், மசூதி, தர்ஹா, சர்ச் உட்பட) வரலாற்றுச் செய்திக்குத் துருப்பாகக் கருதி வரலாற்றுப் பார்வையில் மட்டுமே ஆராய முயல்வது 4. கால ஓட்டத்தில் நாம் இழந்துவிட்ட வரலாற்றுச் செல்வங்களை மீட்டெடுக்க முயற்சித்தல். அதியமான் அவ்வைக்கு அளித்த நெல்லிக்கனியை மீண்டும் தாவரவியல் ஆய்வின்மூலம் உருவாக்க முயற்சித்தல். 5. உறுப்பினர்கள் மனதளவில் பக்குவம் பெற உதவுதல். எதிர்பார்ப்பு ஏமாற்றத்திற்கு வழிவகுத்து வரலாற்று ஆர்வத்தைக் குறைத்து நம் குறிக்கோளை எட்டுவதற்குத் தடையாக இருக்கலாம் என்பதால், 'வரலாற்றுக்கு எனது பங்களிப்பு' என்ற சிந்தனையில் மட்டும் செயல்படுவது. 6. புதிய கண்டுபிடிப்புகளுக்கு மரியாதை செலுத்துவது. கண்டுபிடிப்புகள் கண்டுபிடித்தவரின் பெயரால் அழைக்கப்படச் செய்வது. 7. கீழைத்தஞ்சைப் பகுதியின் முன்னேற்றத்திற்கு உதவுவது. வரலாற்று ஆதாரங்கள் மூலம் கீழைத்தஞ்சைப் பகுதியில் சுற்றுலாத் திட்டங்களுக்கு வித்திடல். 8. மறக்கப்பட்ட வரலாற்றுச் செய்திக்குப் புத்துயிர் ஊட்டுவது. காளஹஸ்தி அருகிலுள்ள ஆதித்தசோழர் பள்ளிப்படையிலுள்ள கல்வெட்டுச் செய்தியின் அடிப்படையில் ஒருகாலத்தில் நடந்துவந்த 7 நாள் திருவிழாவிற்குப் புத்துயிர் ஊட்டுவது, இராஜேந்திர சோழரின் முடிசூட்டுவிழாவையும் கடார வெற்றியையும் சிறப்பாகக் கொண்டாடுவது முதலியன. அடேயப்பா! எப்பேர்ப்பட்ட குறிக்கோள்கள்!! இவற்றையெல்லாம் உருவாக்குவதற்கு எத்தனை காலம் யோசித்திருக்க வேண்டும்? அடிப்படையில் தாவரவியல் மாணவரான இராமச்சந்திரனுக்கு இருந்த வரலாற்று ஆர்வம் காரணமாக ஏற்பட்ட சிந்தனைகள் இவை. இவரது பூர்விகம் சேலம் மாவட்டத்திலுள்ள இளம்பிள்ளை என்ற ஊர். அதியமான் அவ்வையின் நெல்லிக்கனியுடன் தொடர்புடைய ஊர். நெல்லி மரத்தின் குச்சியால் கிளறப்பட்ட சோற்றை உண்ட முதியவர் இளம் பிள்ளையாக மாறியதால் இவ்வூர் இப்பெயர் பெற்றதாக ஒரு செவிவழிச் செய்தி உண்டு. 1970களில் வியாழக்கிழமை தோறும் கல்கியில் வரலாற்றுப் புதினங்களைத் தந்தையார் உணர்ச்சியுடன் படிக்கக் கேட்டபோது வரலாற்று ஆர்வம் ஏற்பட்டது. பள்ளிப் பருவத்திலேயே பாடத்தில் வந்த புனித தாமஸ் முனிவரின் எலும்புத் துண்டைப் பரங்கிமலையில் பார்க்க விரும்பியது, சங்ககிரி மலைமேல் உள்ள பெருமாள் கோயில் மரக்கதவு எழுத்துக்களை ஆராய விரும்பியது போன்ற வரலாற்று உணர்வுகளைப் பெற்றிருந்தாலும், மராட்டிய சிவாஜி, 'இராஜபேரிகை' புதினத்தின் இராபர்ட் கிளைவ் போன்றவர்கள் மிகவும் பிடித்த கதாநாயகர்களாக இருந்தபோதும், பிடித்த நாவலாக, நாட்டுக்காக எதையும் விட்டுக்கொடுக்கும் எண்ணத்தை விதைக்கும் 'மன்னன் மகள்' புதினம் இருந்தபோதும், கல்லூரியில் படித்தபோது மேற்கொண்ட பயணம்தான் இவரது வாழ்க்கையை மாற்றியிருக்கிறது. பொன்னியின் செல்வன் கதைப்படி சோழர்களின் மறுமலர்ச்சி இடமான திருப்புறம்பியம், இலங்கை மற்றும் கிழக்காசிய நாடுகள் மீதான படையெடுப்புக்கு உறுதுணையாக இருந்த நாகப்பட்டினம் துறைமுகம், அங்கிருந்த புத்தவிகாரை ஆகிய இடங்களுக்குச் சென்றுவந்த பயணம்தான் அது. கடலூர் மாவட்டத்தில் பிறந்திருந்தாலும், சேலம் மாவட்டத்தில் வளர்ந்திருந்தாலும், மதுரை மாவட்டத்தில் பள்ளிப்படிப்பைப் பயின்றிருந்தாலும், சென்னையில் கல்லூரிப் படிப்பைப் பயின்றிருந்தாலும், நாகப்பட்டினம் மாவட்டத்தைத் தன் சொந்த ஊராகக் கருதி வாழ்வதைப் பற்றி அவரே விவரிக்கிறார். '1993-ல் நாகப்பட்டினம் கடற்கரையில் இப்பகுதிக்கு வரலாற்றுப் பொற்காலத்தைத் திரும்பப் பெறுவதற்கு உரிய கருவியாக என்னையே ஒப்படைத்துச் சென்றதைத் தொடர்ந்து 14-02-2000 அன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் அரசுப் பணியில் இணைந்தது முதல் கீழைத்தஞ்சை பகுதியில் வரலாற்றுச் செய்திகளுக்கு உரிய சான்றுகளைக் கண்டறிந்து வெளிப்படுத்தி, கீழைத்தஞ்சையின் பாரம்பரியம், வரலாற்றுக்கு முக்கியத்துவம் பெற்றுத் தருவதை என் கடமையாகக் கருதி வரலாற்று ஆய்வுகள் செய்து வருகின்றேன். இப்பணிக்கு நான் தகுதி உடையவனோ, இல்லையோ எனக்குத் தெரியாது. இருப்பினும் இப்பணியில் இதுவரை யாரும் ஈடுபட்டதாக நான் அறிய முடியாத காரணத்தினால் இப்பணிக்கு நான் தகுதி உடையவன் என்று எனக்கு நானே கருதிக் கொள்கிறேன். மேலும், கீழைத்தஞ்சைப் பகுதிக்கு வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றுத்தரும் ஒரே குறிக்கோளுடன், எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல், வரலாற்றுப் பார்வையில் சிந்தித்து, தன் முயற்சியால் மெய்யறிவு பெற விரும்புவதால் இப்பணிக்கு என்னைத் தகுதி ஆக்கிக்கொள்கிறேன். இப்பகுதி மக்களை, குறிப்பாகச் சிறுவர்களை ஒருங்கிணைத்து, 'வரலாற்று ஆர்வலர் குழு'க்கள் தொடங்கி, வரலாற்று ஆர்வத்தை ஊட்டுவதன்மூலம் எதிர்காலத்தில் இப்பகுதியில் வரலாற்றுப் பொற்காலம் உருவாகிட உதவுவதைப் பெருமையாகக் கருதுகிறேன்'. கீழ்க்கண்ட இடங்களில் இதன் கிளைகள் உள்ளன. 1. கீழக்கடம்பூர் - கடலூர் மாவட்டம் 2. மேலப்பழுவூர், கீழப்பழுவூர் மற்றும் கங்கைகொண்டசோழபுரம் - அரியலூர் மாவட்டம் 3. பிரம்மதேசம் - வேலூர் மாவட்டம் 4. சாளுவன் குப்பம், வல்லம், தூசி மாமண்டூர், குரங்கணில் முட்டம் - காஞ்சிபுரம் மாவட்டம் 5. காயல்பட்டினம் - இராமநாதபுரம் மாவட்டம் 6. காளஹஸ்தி (தொண்டமநாடு பேரூர், பொக்கிஷம்பாளையம்) - ஆந்திரா 7. பட்டணம் (முசிறி) - எர்ணாகுளம் மாவட்டம், கேரளா இக்குழுக்களின் பொதுவான செயல்பாடுகளாகக் கீழ்க்கண்டவற்றைக் கூறுகிறார்கள். 1. எங்கும், சிறியவர் முதல் பெரியவர் வரை வரலாற்று ஆர்வத்தை ஏற்படுத்த முயன்று வருவது. 2. கீழைத்தஞ்சை பகுதியின் வரலாற்றுச் சான்றுகளைக் கண்டறிந்து, அடுத்த தலைமுறையினருக்குக் காட்டுவதையும், அதுகுறித்த வரலாற்று அறிவைப் புகட்டுவதையும் மேற்கொண்டு வருவது. 3. எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாது, 'வரலாற்றுக்கு நம்மால் ஆன பங்களிப்பு' என்ற கொள்கையுடன் செயல்பட்டு வருவது. 4. வரலாற்று ஆர்வம் உள்ள தனியரை ஊக்கப்படுத்துவது. 5. வரலாற்று ஆய்வில் ஈடுபடும் பிற நிறுவனங்களுக்குப் புரிந்துணர்வு மற்றும் கூட்டு முயற்சியின் அடிப்படையில் ஆய்வுக்கு உதவுவது. 6. வரலாற்றில் ஆய்வு செய்துவரும் மாணவர்களுக்கு ஆய்வில் உதவுவது. 7. சீனாவிலுள்ள 'ரிஷா லீ குறுந்தகடகம்' மூலமாகப் பல்வேறு பகுதிகளின் வரலாற்றுச் சான்றுகளைக் குறுந்தகடுகளில் சேகரித்து, பாதுகாத்து, வரலாற்று ஆர்வலர்கள் அறிவை வளர்த்துக்கொள்ள உதவுவது. 8. வரலாற்று ஆர்வலர் குழுவின் கிளைகளை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த எல்லா இடங்களிலும் நிறுவி, அப்பகுதி வரலாற்றுச் செய்திகளைப் பிற பகுதிகளுக்கும் பிரபலப்படுத்த முயற்சிப்பது. இருப்பினும், நாகப்பட்டினத்தில் இருக்கும் குழுவினர் கீழ்க்கண்ட முக்கிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். 1. நாகையில் பவுத்தம் 2. சித்திரலேகைப் பெரும்பள்ளி 3. பல்லன்கோயில் செப்பேடுகள் குறித்தும், அச்செப்பேட்டுச் செய்திகள் குறித்தும் விரிவான ஆய்வு 4. கீழைத்தஞ்சையில் பல்லவர் சான்றுகள் 5. வரலாற்றுக்குக் கீழைத்தஞ்சையின் பங்களிப்பு 6. சோழர்களின் கடற்படைத்தளம் (கலம் திடல் கரை) பற்றிய ஆய்வு 7. ஆனைமங்கலம் செப்பேடுகள், பட்டேவியா சாசனங்கள் பற்றிய ஆய்வு 8. காவிரி சமவெளி நாகரிகம் பற்றிய ஆய்வு பள்ளி மாணவர்களைக் கொண்டு இதெல்லாம் எவ்வாறு சாத்தியம் என்று தோன்றுகிறதா? அதுதான் இராமச்சந்திரன் அவர்களின் ஆளுமை. கடந்த மாதம் கோவையில் செம்மொழி மாநாட்டுக்குச் சென்றிருந்தபோதுதான் எங்களுக்கும் அது புரிந்தது. அனைவரையும் அரவணைத்துச் செல்லும் இவரது இயல்பை நாங்கள் ஏற்கனவே அறிந்திருந்தாலும், இடத்துக்கேற்பச் சமயோசிதமாகச் செயல்படுவது என்பதைக் கோவையில் காவல்துறையினரைக் கையாண்டவிதம் கண்டு வியந்தோம். வருவாய்த்துறை அதிகாரி என்ற பதவி இவருக்குக் கைகொடுத்தாலும், அதையும் மீறிய மனிதநேயம் இவரை முன்னோக்கி அழைத்துச் செல்கிறது. தமிழகத்தில் வரலாற்று ஆய்வில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களுக்கு இடையே உள்ள கருத்து வேறுபாடுகளையும் தாண்டி, அனைத்து இயக்கங்களையும் அரவணைத்து, கீழைத்தஞ்சை பற்றிய ஆய்வு என்ற நூலிழையால் மட்டுமே நடுவண் அரசு தொல்லியல் பரப்பாய்வுத்துறை, தமிழக அரசு தொல்லியல் துறை, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி டாக்டர். மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம், தஞ்சை தமிழ்நாடு தொல்லியல் கழகம், சென்னை தடயம் ஆகிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வுடன், கருத்துப் பரிமாற்றங்களுடன், கண்டுபிடிப்புகளில் உதவி செய்து, உதவி பெறுகிறார். நாகை மாவட்டம் தொடர்பான வரலாற்று ஆய்வுக்கு இவரிடமிருந்து உதவிபெற, 91-94425-80369 என்ற எண்ணுக்கு அழைத்தால் போதும், உங்கள் தேவையறிந்து உதவக் காத்திருக்கிறார் திரு. க.இராமச்சந்திரன். அல்லது muraa3369@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ, கீழ்க்கண்ட ஆர்வலர் குழு அலுவலக முகவரிக்கோ தொடர்பு கொள்ளலாம். இராஜேந்திர சோழரின் முடிசூட்டு விழா மற்றும் கடார வெற்றிவிழாவில் பங்கேற்க அல்லது ஏற்பாடுகளில் உதவ விரும்புபவர்களும் இவரைத் தொடர்பு கொள்ளலாம். இவரது வரலாற்று ஆர்வலர் குழுவின் நோக்கங்கள் எல்லாம் நிறைவேறவும், மேலும் தமிழகமெங்கும் இதன் கிளைகள் வரலாற்று ஒளியைப் பரப்பவும், வரலாறு.காம் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது. வரலாற்று ஆர்வலர்கள் குழு இலக்கம் 1, சிவசக்தி நகர், பால்பண்ணைச்சேரி, நாகப்பட்டினம் - 611003. this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |