http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[145 Issues]
[1528 Articles]
Home About US Temples Facebook
Issue No. 72

இதழ் 72
[ ஜூன் 16 - ஜூலை 15, 2010 ]


இந்த இதழில்..
In this Issue..

ஆயிரம் ஆக்கங்கள்
மெய்யத்தே பள்ளிகொண்டவரும் நின்றருளியவரும் - 1
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு - இனிய பயணம்
நாகப்பட்டினம் வரலாற்று ஆர்வலர்கள் குழு
பங்கேற்பாளன் பார்வையில் செம்மொழி மாநாடு
விதுஷி வித்யா சங்கரின் இரு புத்தகங்கள் – ஒரு பார்வை
நலமிகு கார்த்திகையே!
இதழ் எண். 72 > இலக்கியச் சுவை
நலமிகு கார்த்திகையே!
ரிஷியா

சங்ககாலம் தொடங்கி இன்றுவரை தமிழர் வழக்கில் அவர்தம் வாழ்வியலோடு இணைந்து வரும் திருவிழா தீபங்களின் ஒளிவிழாவான "கார்த்திகை" நன்னாளாகும். அன்று நாட்களிலெல்லாம் ஒரு மங்கலநாளாய், விழாக்களில் பெருவிழாவாய்த் தமிழர் வாழ்வில் கார்த்திகைத் திருவிழா இடம்பெற்றது. விண்ணில் மலர்ந்த விண்மீண்கள் எல்லாம் மண்ணில் பூத்த இந்தப் பெருநாள் பற்றிய இலக்கியப் பதிவுகள் சிலவற்றை இங்குக் காண்போம்.

சுடர் நெடுங்கொடியே!

முதுவேனில் காலம். வானில் செல்லும் ஞாயிறு மண்டிலம் நெருப்பெனச் சிவந்து காய்கின்றது. அதனால் கானல்நீர் தோன்றுகிறது. பாலை நிலத்தில் உள்ள இலவ மரங்கள் ஓர் இலைகூட இல்லாமல் வெறுமையாய் இருக்கின்றன. மொட்டு ஒன்றுகூட மிஞ்சாமல் எல்லா மொட்டுகளும் செந்நிறமாக மலர்கின்றன. இக்காட்சி மகளிர் குழாம் ஒன்றுகூடி மிக்க ஆரவாரத்தோடு அழகிய கார்த்திகை விளக்குகளை நெடிய வரிசையில் ஒழுங்கு பிறழாமல் ஏற்றினாற்போலத் தோற்றமளித்தது.


அகநானூறு : 11 (1-5 வரிகள்)
துறை : தலைமகன் பொருள்வயிற் பிரிந்தடத்து ஆற்றாளாய தலைமகள் வேறுபாடு கண்டு ஆற்றாளாய தோழிக்குத் தலைமகள் ஆற்றுவல் என்பதுபடச் சொல்லியது.
ஆசிரியர் : ஔவை

வானம் ஊர்ந்த வயங்கு ஒளி மண்டிலம்
நெருப்பு எனச் சிவந்த உருப்பு அவிர் அங்காட்டு
இலைஇல மலர்ந்த முகையில் இலவம்
கலிகொள் ஆயம் மலிபுதொகுபு எடுத்த
அம்சுடர் நெடுங்கொடி பொற்பத் தோன்றி


மதி நிறைந்த நன்னாள்!


முழு வெண்திங்கள் வானில் உலவிடும் நாள். வெண்மதி நிறைவுற்றுக் கார்த்திகையைச் சேரும் இருள் அகன்ற நடுநிசியில் தெருக்களில் விளக்குகளை நிறைவாக வரிசைப்பட ஏற்றி, மாலைகளைத் தொங்கவிட்டுப் பழமையான வென்றியுடைய முதிய ஊரின்கண் பலரும் ஒருங்கு சேர்ந்த விழாவினை நம்முடன் கொண்டாட வருவாராக என அழைப்பு விடுக்கும் அகப்பாடல் இதோ,


அகநானூறு : 141 (7-11 வரிகள்)
துறை : பிரிவிடை ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது
ஆசிரியர் : நக்கீரர்

... ... ... மதி நிறைந்து
அறுமீன் சேரும் அகலிருள் நெடுநாள்
மறுகு விளக் குறுத்து மாலை தூக்கி
பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய
விழவுடன் அயர வருகதில் அம்ம ...


பெருவிழா விளக்குகள்!


மேகம் பொழியாததால் அருவிகள் இல்லையாகிய உயர்ந்த சிகரங்களில் பெருவிழாவான கார்த்திகை விழாவிற்கு இடும் விளக்குகளைப் போல இலையே இல்லாது பலவாய் ஒருங்கே மலர்ந்த இலவ மரங்களைக் கொண்டு உயர்ந்த நிலையையுடையாய் பக்க மலையினையுடைய பெருமலையைத் தாண்டிச் சென்றோராய நம் தலைவர் என இலவ மலர்களைக் காத்திகை விளக்கங்களோடு ஒப்பிடும் மற்றுமொரு அகப்பாடல்,


அகநானூறு : 185 (9-14 வரிகள்)
துறை : பிரிவிடை வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
ஆசிரியர் : பாலை பாடிய பெருங்கடுங்கோ

... ... ... வான் உலங்உ
அருவி ஆன்ற உயர்சிமை மருங்கில்
பெருவிழா விளக்கம் போலப் பலவுடன்
இலைஇல மலர்ந்த இலவமொடு
நிலை உயர் பிறங்கல் மலை இறந்தோரே



இவ்வாறு கார்த்திகைப் பெருவிழாவினைப் பற்றிய பல குறிப்புகள் சங்க இலக்கியங்களில் பதிவு பெற்றுள்ளது. வழிவழியாகப் பண்டுத் தொடங்கி இன்றுவரை தமிழர்கள் கொண்டாடும் இத்தீபத் திருவிழாவானது நற்றமிழரது நனிநாகரீகச் சிறப்பின் சீர்மிகு அடையாளங்களில் ஒன்றாகும். பெருமையுடன் நாம் இதனைக் கொண்டாடுவோமாக.
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.