http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 13

இதழ் 13
[ ஜூலை 16 - ஆகஸ்ட் 15, 2005 ]


இந்த இதழில்..
In this Issue..

அள்ள அள்ளக் குறையா அட்சய பாத்திரம்
கல்வித் தலைமை
பகவதஜ்ஜுகம் - 4
கதை 5 - தேவதானம்
என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே!
வாழ்க நீ தம்பி!
விடியலைக் கண்ட விட்டுப்போன தொடர்ச்சிகள்
கோயில்களை நோக்கி
2. வலம் வருவோம் வாருங்கள்

கட்டடக்கலைத்தொடர் - 10
திருநந்தி ஈஸ்வரம் - 1
சங்கச் சிந்தனைகள்-1
இதழ் எண். 13 > கலைக்கோவன் பக்கம்
என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே!
இரா. கலைக்கோவன்
அன்புள்ள வாருணி, வலஞ்சுழிப் பணி முடிந்துவிட்டதா என்று கேட்டிருக்கிறாய்! எப்படி முடியும்? பன்னிரண்டு முறை அத்திருக்கோயிலுக்குச் சென்றும் பணி முடியவில்லை. சேத்ரபாலருடன் நிறுத்திக் கொள்ளலாம் என்றுதான் தொடங்கும் போது நினைத்தோம். ஆனால், சேத்ரபாலரைக் காட்டி வளாகத்திற்குள் இழுத்த வலஞ்சுழி வாணரின் பிடி நாள்தோறும் இறுகுவதை இப்போது உணர்கிறோம். எத்தனை பெரிய வளாகம்! மூன்று திருச்சுற்றுகள். மூன்றாம் திருச்சுற்றின் முன்னால் ஒரு செவ்வகத் துணை வளாகம், கோபுர வாயிலுடன். இங்குதான் சேத்ரபாலரும் திருக்குளமும் பிள்ளையார் கோயிலொன்றும் அமைந்துள்ளன. மூன்றாம் சுற்றில் தென்புறத்தே வண்டுவாழ்குழலி அம்மையின் கோயிலும், தென்மேற்குக் கோடியில் பிடாரி ஏகவீரியின் இடிந்து சிதைந்த கோயிலும் வடக்கில் வெள்ளைப்பிள்ளையார் திருமுன்னும் தெற்கில் ஒரு கோபுர வாயிலும் இவற்றால் சூழப்பட்ட நிலையில் நடுநாயகமாக இரண்டு சுற்றுகளுடன் விளங்கும் வலஞ்சுழி வாணரின் ஒருதளவேசர விமானமும் அதன் மண்டபங்களும் அமைந்துள்ளன.

இந்தக் கோயிலில் முந்து திருப்பணியாளர்களின் அக்கறையற்ற போக்கினால் கல்வெட்டுகள் பெரிதும் சிதைந்துள்ளன. பல கல்வெட்டுகள் சிதறித் துணுக்குகளாகியுள்ளன. பத்மநாபன் வளாகம் முழுவதும் தேடித்தேடி அறுபத்தொரு துணுக்குக் கல்வெட்டுகளைப் பட்டியலிட்டிருக்கிறார். இனிதான் அவற்றை மூடியிருக்கும் சுண்ணம், காரை அகற்றிப் படிக்கவேண்டும். சீதாராமனின் உதவியாளர்கள் தொடர்ந்து உழைத்து வருகிறார்கள். சீதாராமனும் பத்மநாபனும் இல்லையென்றால் வலஞ்சுழிப் பணி இந்த அளவு முன்னேறியிருக்குமா என்பது அய்யம்தான். சங்கு, சக்கரம் ஏதுமில்லாமல் ஒன்றுக்கு இரண்டு பெருமாள்கள் எங்களுக்கு உதவ வாய்த்தது அந்த வலஞ்சுழி வாணரின் கருணையில்தான்.

வாருணி, வலஞ்சுழிக் கோயிலை அப்பரும் சம்பந்தரும் பாடியுள்ளனர். இருவருமே இந்தக் கோயிலின் சூழலில், வளாக எழிலில், இறைவனின் ஈர்ப்பில் தம்மை மறந்து மயங்கியுள்ளனர். 'கண் பனிக்கும் கைக்கூப்பும் கண் மூன்றுடைய நண்பனுக்கு எனை நான் கொடுப்பேன்' எனும் அப்பர் பெருந்தகையின் உருக்கமான தொடர்கள் வலஞ்சுழி மண்ணைத் தொட்டபோது பிறந்தவைதான். இறைவனைப் பல உறவுகளாக்கி, 'மாமன், மாமி' என்றெல்லாம் பார்த்து மகிழ்ந்த அந்த மேதைக்கு, கடவுள் நண்பனாகத் தெரிந்தது வலஞ்சுழியில்தான். 'எனை நான் கொடுப்பேன்' என்று உள்ளம் மேவி, உணர்வுகள் விம்மச் சரணடையும் நோக்கு, கண் பனிக்க, மனம் குழைந்து ஒன்றிவிடும் அந்த இன்பநொடி அன்பின் உச்சத்தில் மட்டும்தானே பிறக்க முடியும்! அப்பர் கொடுத்து வைத்தவர். அப்பர் மட்டுமென்ன வலஞ்சுழி வாணருந்தான்.

நண்பன் என்று கூறிக்கொண்டு தம்முடைய நயவஞ்சகச் செயல்களுக்கெல்லாம் இறைவனை இழுத்தடித்து, நடையாய் நடக்க வைத்த அந்தச் சுந்தரரை நினைக்கும்போது, இறைவனைத் தன் நண்பன் என்று உலகறிய அறிவித்து, அப்பெருமானின் இணையற்ற நட்பிற்கு ஈடாக, 'எனை நான் கொடுப்பேன்' என்று விழைந்து உவந்து சரணான அப்பரின் பெருமையும் சீர்மையும் உள்ளங்கைக் கனியல்லவா!

அப்பர் துன்பப்படுவதற்கென்றே பிறந்தவர். ஆனால் துன்பத்தின் ஒவ்வொரு துடிப்பிலும் இறைவனை மட்டுமே பார்த்தவர். இறைவனும் சுந்தரர், சம்பந்தரிடம் நடந்து கொண்டது போல் கொஞ்சலும் கோமள முறுவலும் சிந்தித் தொட்டும் தடவியும் தேவைக்குக் கொடுத்தும் தொடர்ந்து வராமல், தொல்லைகளையே பாதையாக்கித் தொடர்கதையாய்த் துயரம் தந்து திக்கெட்டும் அலைய வைத்துத்தான் ஆதரவு காட்டினார். சுந்தரர் போல் அதற்கெல்லாம் சோர்வடையவில்லை அப்பர். கேட்டுக் கிடைக்கவில்லை என்றாலும், கேளாமல் தமைக் கொடுத்து அந்த மூன்று கண் நண்பனை அயரவைத்தார். உயிராவணமிருந்து உற்று நோக்கி உள்ளக் கிழியில் உருவெழுதி உயிர் ஆவணம் செய்து தந்திட்ட அந்த உத்தமரின் தளராக் காதலில் தமை இழந்த நிலையில்தான் இறைவன் அப்பரை ஆட்கொண்டார். அவருக்கும் அப்பருக்கும் இடையிலான உறவு தஞ்சாவூர் இராஜராஜீசுவரத்தைப் போல! அதிசயமானது! அதிகம் புரிந்துகொள்ளப்படாதது! ஆனால் எல்லாராலும் ஏதாவது ஒரு காரணத்திற்க்காக வியக்கப்படுவது.

வாருணி, பார்த்தாயா? எங்கோ தொடங்கி, எதையோ சொல்ல வந்து, அப்பரைத் தொட்டதும் அடியோடு கரைந்துவிட்டேன். 'போகட்டும், இப்போதாவது வலஞ்சுழிக்குள் வாருங்கள்' எனும் உன் குரல் நன்றாகவே கேட்கிறது. வலஞ்சுழிப் பயணங்களுள் 26.6.2005 அன்று நடந்த பயணம் குறிப்பிடத்தக்கது. இவ்வளாகக் கட்டுமானங்களையும் சிற்பங்களையும் குறிப்பெடுத்தபடியே அம்மன் கோயிலுக்குள் நுழைந்தேன். இக்கோயிலின் வெளிச்சுற்றில் தென்கிழக்கு மூலையில், 'அஷ்டபுஜமாகாளி' என்ற அறிவிப்புப் பலகையுடன் வெளிச்சத்தின் கீற்றுக்கூட விழுந்துவிட முடியாத நிலையில் கட்டப்பட்டிருக்கும் ஓர் அறையில், உடல் முழுவதும் புடவை ஒன்றால் சுற்றப்பட்ட நிலையில், அடையாளம் காணமுடியாத ஓர் இறைவடிவம் இருப்பதைப் பார்த்தேன். பகலிலேயே இருளடைந்திருக்கும் இந்த அறையின் தெய்வத்தைக் கண்ணாரக் காணும் நோக்கே இல்லாமல், போகிற போக்கில் அதற்கும் ஒரு கும்பிடு போட்டுச் சென்று கொண்டிருந்தனர் நம் பக்த கோடிகள்!

'வலஞ்சுழி வாணர்' நூலிற்கு இந்தத் தெய்வத்தைப் பற்றிய விரிவான வர்ணனை தேவைப்பட்டதால், கோயில் ஊழியர் திரு. முத்துசாமியின் உதவியுடன் பூட்டப்பட்டிருந்த அறைக் கதவைத் திறந்து, பக்கத்தில் நின்றவாறு அவர் காட்டிய இரும்புக் கரண்டி விளக்கொளியில் அந்த மாகாளியைப் பார்த்தேன். முகத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே அது சோழர் சிற்பம் என்பதை என்னால் உணரமுடிந்தது. மனதிற்குள் ஒரு பரவசம் மெல்ல மொட்டவிழ்ந்தது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் திருவலஞ்சுழி உடையார் கோயிலில் தென்பக்கத்து எழுந்தருளியிருந்த பிடாரியார் ஏகவீரியைச் சந்திக்கப் போகிறோமோ? முதலாம் இராஜராஜரின் பட்டத்தரசியார் உலகமாதேவியாரின் அன்னையார் குந்தணன் அமுதவல்லியார் முதலாம் இராஜேந்திரரின் மூன்றாம் ஆட்சியாண்டில் அவபலஅஞ்சனை செய்வதற்காக நாற்பது காசுகளை வலஞ்சுழிக் கோயில் சிவபிராமணர்களிடம் ஒப்படைத்தாரே, அந்த அஞ்சனையைப் பெற்ற அம்மையின் தரிசனம் பெறப்போகிறோமா? கை, கால்கள் பரபரத்தன. கண்கள் கனவுகளுடன் விரித்தன. எதிர்ப்பார்ப்பு உச்சத்திலேறி உறைந்து நின்றது. என்னையே பார்த்துக் கொண்டிருந்த முத்துசாமி என் வெளிப்பாடுகளின் பொருளை முற்றிலும் அறிந்தவர் போல் இறைத் திருமேனியில் சுற்றி இருந்த புடவையை அகற்றினார். அந்த நொடி, வாருணி, அந்த நொடியில் நான் பார்த்த காட்சி என் வாழ்க்கையில் மறக்கமுடியாமல் நிறைந்துபோன அற்புதமான சாசுவதங்களுள் ஒன்றாய்ப் பளிச்சென்று பதிவானது. 'என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே' என்று சம்பந்தர் இங்கு வந்து பாகாய்க் கரைந்தமைக்குப் பொருளும் விளங்கியது.

உத்குடியாசனத்தில் இடக்காலைத் தாழவிட்டு, இருக்கையில் இருத்திய வலக்காலில் பாதத்தால் அந்த இருக்கையையே உதைத்தபடி எழ எத்தனிக்கும் முயற்சியில் விரைவையும் ஒழித்துவிடுவேன் என்பது போல் ஓங்கி உயர்ந்திருக்கும் கடக வலக்கையில் ஆற்றலின் உச்சத்தையும் 'தவறிழைப்பவர்கள் கதி இதுதான்' எனுமாறு யாரை அழிக்க இந்தக் கோலமோ அந்த ஜீவனை எச்சரிப்பது போல இடக்கைத் தலையோட்டைக் காட்சிப் பொருளாக்கியிருப்பதில் அறிவுத் திறத்தையும் ஓங்கிய கையின் இழுப்பிற்கேற்பத் தூண்டிய சுடராய்த் திரண்டு வலப்புறம் திரும்பியிருக்கும் இளமார்பில் திண்மையை நிறைத்திருக்கும் இலாவகத்தையும் புயலைப் போல இந்தச் சுழற்சி என்பதைப் புரியாதார்க்கும் புரியவைக்க முப்புரிநூலை வளையமாய் முறுக்கி முதுகிற்காய்த் திருப்பியிருக்கும் அமைப்பில் முத்தாய்ப்பாய் நுணுக்கத்தையும் நிறைத்திருக்கும் அந்தச் சோழக் கைகளை எத்தனை பாராட்டினாலும் தகும் வாருணி.

திரிவிளக்கின் ஒளியில் பார்த்தது போதாதென்று இரண்டாம் கோபுரத்தருகே கல்வெட்டுப் படித்துக் கொண்டிருந்த அகிலாவைக் கூப்பிட்டுக் கைவிளக்குக் கொணர வைத்து, அந்தக் குழல் விளக்கொளியில் ஏகவீரியை அணுஅணுவாக இரசித்தோம். அமர்வுக்கேற்பச் சுருக்கிய இடையாடை. இடையில் தொங்கும் அரைக்கச்சுப் பட்டை, தலை முகப்பில் அச்சுறுத்தும் மண்டையோடு, கழுத்தணிகள், கையணிகள் என அழகு பொலியக் காட்சி தந்த ஏகவீரியின் இடச்செவிக் குண்டலம் என்னைப் பெரிதும் கவர்ந்தது.

முற்பாண்டியர், முற்சோழர் கால எழுவர் அன்னையர் கொகுதியிலிருக்கும் சாமுண்டிச் சிற்பங்கள் ஒரு செவியிலோ அல்லது இருசெவிகளிலோ பிணக்குண்டலங்கள் பெற்றிருக்கக் கண்டதுண்டு. இப்பிணங்கள் செவி வளையத்துள் தலைகுப்புறத் துவண்டு தொங்குமாறு இருக்கும். ஏகவீரியின் இடக்குண்டலம், இவ்வமைப்பிலிருந்து மாறுபட்டு உயிருள்ள மனிதன் ஒருவனைப் பெற்றிருப்பது வியப்பளித்தது. செவிவளையத்துள் நுழைக்கப்பட்டிருக்கும் இம்மனிதனின் வலக்கை உயர்ந்துள்ளது. கால்கள் முழங்காலளவில் உள்நோக்கி மடங்கியுள்ளன. இடக்கை இடுப்பருகே தொங்குகிறது. பிணக்குண்டலம் போல் தலைகுப்புற நுழைக்கப்படாமல், முதுகுப்புறம் கீழிருக்குமாறு நுழைக்கப்பட்டிருக்கும் இம்மனிதக் குண்டலத்தின் தவிப்பு, கை உயர்த்தலிலும் கால் மடக்கலிலும் விளங்குமாறு காட்டப்பட்டிருக்கும் கலை நுட்பம் கண்டு மகிழ்தற்குரியது.

நளினி, பத்மநாபன், சீதாராமன் மூவருமே அப்போது உடனில்லை. ஏகவீரி தரிசனம் பற்றி சீதாராமனிடம் சொன்னதுமே அவர் பரபரப்பானார். மதிய உணவிற்குப் பிறகு முத்துசாமியின் துணையோடு மீண்டும் ஏகவீரி அறைக்குச் சென்றோம். நிதானமாக, பொறுமையாக, முதற் பார்வையின் ஆர்வ முனைப்புச் சற்றுமின்றித் தலை முதல் கால் வரை அங்குலம் அங்குலமாக அந்த அழகு கொஞ்சும் திருமேனியைக் கண்டு மகிழ்ந்தோம். நல்ல வெளிச்சத்தில் அந்தச் சோழக் காளிதான் எப்படியெல்லாம் மிளிர்ந்தார்! அந்த உதடுகளின் அழகை எப்படிச் சொல்வது? சற்றே மேல் தூக்கிய மேலிதழும் இலேசாய் விரிந்த கீழிதழும் அதனால் மென்மையாய்ப் புடைத்த கன்னக்கதுப்புகளும், அம்மையின் முகத்தில் இளநகைக்கும் பெருஞ்சிரிப்புக்கும் இடைப்பட்டதொரு மலர்ச்சியின் நிறைவை மந்தகாசமாய் வெளிப்படுத்தியிருக்கும் அழகு சொல்லில் விளக்கமுடியாத சுந்தரம்! இந்தச் சிரிப்பை எக்களிப்பின் முதல் நிலை என்பதா? சினம் தணியப்போகும் மகிழ்வின் நிறைவை மெலிதாய்க் காட்டும் ஆனந்தச் சீறல் என்பதா? தெரியவில்லை வாருணி! ஆனால் ஒன்று மட்டும் கூறமுடியும்; இத்தகு உணர்வு வெளிப்பாடுகளைக் கருங்கல்லில் காட்டும் திறன் சோழர்களோடு முடிந்துவிட்டது.

கலைமயக்கத்திலிருந்து வெளிப்பட்டுச் சுயநினைவு பெற்றதும் முதல் வேலையாய்க் கம்பர் வழியில், 'கண்டோம் ஏகவீரியை' என்று சுந்தரருக்குத் தகவல் தந்தார் சீதாராமன். ஊர் தவறாமல் காளியை வழிபடும் சுந்தரருக்கு ஒரிஜினல் அக்மார்க் சோழக்காளி இருக்கும் செய்தி கிடைத்ததும் சும்மாயிருக்க முடியுமா? மகிழ்ச்சிப் பெருக்கில் பெரிய பழுவேட்டரையரைப் போல் ஒரு ஹூங்காரம் செய்தார்! காளிக்குப் பிடித்தமான ஒலியல்லவா! 2.7.2005ல் ஏகவீரிக்குத் திருமஞ்சனம் என்று அறிவித்தார். அம்மையின் அழகுப் பொலிவை அனைவரும் காண வியப்பாக அந்த அறைக்கு வீச்சொளி விளக்கும் உண்டென்றார். சுந்தரருக்கு உற்சாகம் கிளம்பிவிட்டால் கேட்க வேண்டுமா? என் கண்கள் நனைந்தன. ஏகவீரிக்கு ஏற்ற பக்தர்! சிவபாதசேகரன் என்று அவர் தம்மை அழைத்துக் கொள்வதில் பிழையே இல்லை.

மதிய உணவிற்குப் பிறகு இரண்டாம் சுற்றின் மேற்குச் சுவர் கல்வெட்டுகளில் மூழ்கினோம், நானும் நளினியும் அகிலாவும். திடீரென்று மகிழ்ச்சியும் பூரிப்புமாய், 'டாக்டர், டாக்டர்' என்றழைத்தார் அகிலா. எனக்குத் தெரியும்; அகிலாவின் கண்களில் புதியது எதுவோ சிக்கிவிட்டது. நானும் நளினியும் அருகே சென்றோம். மேற்குச் சுவரின் அடிப்பகுதியில் அவர் கண்டறிந்திருந்த இரண்டு கூட்டல் குறிகளையும் காட்டினார். சோழர் கால நிலமளந்த கோல்! அளந்து பார்த்தோம். 7.07 மீட்டர் நீளமிருந்தது. இது போல் பல நிலமளந்த கோகள் தமிழ்நாட்டுக் கோயில்களில் எங்களால் கண்டறியப்பட்டுள்ளன. சில, பெயர்ப் பொறிப்புடனும், சில அத்தகு பொறிப்பேதும் இல்லாமல் பொதுக் கோலாகவும் வெட்டப்பட்டுள்ளன. 'நிலமளந்த கோல்' என்ற பொறிப்புடன் திருச்செந்துறை சந்திரசேகரர் கோயிலில் நாங்கள் கண்டறிந்த அளவுகோல், அந்தநல்லுர் வடதீர்த்தநாதர் கோயிலிலுள்ள எத்தனை அளவைகள்! அகிலாவை மனதாரப் பாராட்டிவிட்டுக் கல்வெட்டு வாசிப்பில் மீண்டும் மூழ்கினோம்.

வாருணி, வலஞ்சுழி வளாகத்திலுள்ள கட்டுமான அற்புதங்களுள் வெள்ளைப்பிள்ளையார் திருமுன் மண்டபம் குறிப்பிடத்தக்கது. இது வெறும் மண்டபக் கோயிலாய் இருந்து பின்னாளில் ஒருதள வேசரமாக்கப்பட்டது. பன்னிரண்டாம் நூற்றாண்டுக் கலைமுறையில் உள்ள இக்கட்டமைப்பின் பஞ்சரங்களும் அந்தப் பஞ்சரக் கோட்டங்களில் இடம்பெற்றுள்ள ஆடற்பெண் சிற்பங்களும் காணத்தக்கவை. இத்திருமுன் மண்டபத்தின் முன்றிலில் நான்கு பெரும் ஐந்து நிலைக் குத்துவிளக்குகள், கருங்கல்லால் ஆனவை நிறுத்தப்பட்டுள்ளன. முன்றிலின் முன்பரவும் நடைப்பத்தியின் வடக்கிலுள்ள மண்டபத்தின் துணைக் கண்டத்தில் ஆடற் சிற்பங்கள். தோலிசைக் கருவிகளும் கஞ்சக் கருவிகளும் ஆடவர் இசைக்க, ஆடும் பதுமைகள் போல் பெண்கள்! வலஞ்சுழிக் கோயிலில் அன்று சனிப்பெயர்ச்சி! அதனால் வழக்கத்திற்கு மாறாக சற்று அதிக அளவில் மக்கள் நடமாட்டம் இருந்தது. வந்தவர்களில் ஒருவராவது வளாகத்தின் கட்டுமானங்களையோ, சிற்பங்களையோ கிஞ்சித்தும் கவனிக்கவில்லை. எல்லோருக்கும் கையில் ஒரு சிற்றகல் திணிக்கப்பட்டிருந்தது. அதில் ஒரு திரி. கொஞ்சம் எண்ணெய். எல்லோரும் அந்தச் சிற்றகல் ஒளியில் சனீசுவரரை சாந்தப்படுத்த முயன்றுகொண்டிருந்தனர். அவர் பாவம், இந்தச் சங்கடங்களிலிருந்தும் வெப்பத்திலிருந்தும் எப்போது விடுதலை என்பதுபோல் குருக்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

மாலை மயங்கிய நேரம். இரண்டாம் சுற்றின் வடக்குப் பகுதியில் இரவி தந்த இளநீரைப் பருகிய சுகத்தில் விரைந்து கல்வெட்டுப் படிக்கும் முயற்சியில் நானும் நளினியும் முனைந்திருந்தோம். சீதாராமன் வழக்கம் போல் மடிப்புக் கலையாமல் வந்து, நாங்கள் படிப்பதைப் பார்க்க வசதியாக சுற்று மாளிகை மேடையில் அமர்ந்து கொண்டார். துணுக்குகளாய்ச் சிதறியிருந்த கல்வெட்டுகளைப் படிக்கும் பணிக்காக பத்மநாபனும் அகிலாவும் சென்றிருந்தனர். சில நிமிட நேரத்தில் வெயில் மறைந்தது. 'சில்'லென்ற காற்று வீசத் தொடங்கியிருந்தது. இரண்டாம் சுற்றின் வெளிமதிலில் ஆலும் அரசும் தோட்டத்தில் வளர்வதை விடச் செழித்து வளர்ந்திருந்தன.

இந்த இளங்க் கன்றுகளின் பிஞ்சுக் கிளைகளில் எங்கிருந்தோ வந்தமர்ந்தன கிளிகள்! கீச், கீச்சென்று ஒரே ஒலிமயம். அந்தக் கூச்சலுக்கு விடையிறுப்பன போல் மேலும் சில பறவைகள்! விதம் விதமாய் ஒலிகள்! எந்தப் பறவை எத்தகு ஒலி எழுப்புகிறது என்பதை அறிய நான் சில மணித்துளிகள் முயன்றேன். முடிவில் அது முடியாத செயல் என்பதை உணர்ந்தேன். எதன் அலகு வழி எந்த ஒலி வந்தாலென்ன! கேட்பதற்கும் இரசிப்பதற்கும் வாய்ப்பமைந்துள்ளதே, அது போதாதா என்று என்னை நானே அமைதிப்படுத்திக் கொண்டேன். 'சார், அந்தப் பறவைதான், டொக்! டொக்! என்று இழுத்து இழுத்துக் கத்துகிறது' என்று கூவினார் சீதாராமன். பெரிதும் முயன்று கடைசியாகக் கண்டுபிடித்துவிட்ட மகிழ்ச்சி அவர் குரலில் இருந்தது. அவர் கூறியது உண்மைதான். ஏதோ மந்திரம் சொல்வது போல அந்தச் சிறிய பறவை அடிவயிற்றிலிருந்து ஒலியிழுத்து ஒவ்வொரு முறையும் உயிர்விட்டுக் கூவியது! ஒரு கூவலுக்கே இவ்வளவு முயற்சியா! நானும் நளினியும் வியந்துபோனோம்! சீதாராமனும்தான்.

ஆறேகாலுக்கு அகோரப்பசி! பத்மநாபன் உதவிக்கு வந்தார். சீதாராமனைக் காணோம். கும்பகோணம் போய்விட்டார் என்று இரவி காவிச் சிரிப்புடன் கெக்களித்தார். சுவாமி மலையில் ஓர் ஓட்டல். பத்மநாபன் தலைமையில் உள்ளே நுழைந்தோம். இட்லியுடன் தப்பித்துக் கொண்ட பத்மநாபனுக்கு என்ன கோபமோ தெரியவில்லை, நளினியும் அகிலாவும் இரவாதோசைதான் சாப்பிடவேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார்! நான் வீட்டுத் தோசையுடன் ஐக்கியமானேன். சாப்பிட்டு முடித்து வெளியில் வந்தால் நெற்றி நிறைய திருநீறுடன் சீதாராமன்! இந்த மனிதருக்கு வாயுதான் வாகனமா? சிரித்தபடியே விடையளித்தார்.

சிராப்பள்ளித் திரும்பும்போதுதான் சுவாமிமலை இரவா தோசையின் மகிமை தெரிந்தது. நளினி சாதுவானவர். பயணங்களில் எப்போதும் அமைதி காப்பவர். பெரும்பாலும் தூங்கி விடுபவர். அப்படிப்பட்டவர், வண்டியில் ஒலித்த சகலவிதமான பாடல்களுக்கும் இருக்கையில் இருந்தபடியே அபிநயம் பிடித்தார்! இவர் எப்போது ஆடல் கற்றார் என்று நான் அகிலாவை வியப்போடு பார்க்க, 'எல்லாம் சுவாமிமலை இரவா தோசை மகிமை' என்று கிண்டலடித்தார் அகிலா. 'இல்லை, இல்லை! இது ஏகவீரியின் சேஷ்டை!' என்று ஓட்டுனர் முணுமுணுத்ததும் கேட்டது. எது எப்படியோ, நல்லவிதமாக நளினியை வீட்டில் விட்டுத் திரும்பும்போது மணி இரவு ஒன்பதரை.

அன்புடன்,

இரா. கலைக்கோவன்.this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.