http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 79
இதழ் 79 [ ஜனவரி 16 - பிப்ரவரி 17, 2011 ] இந்த இதழில்.. In this Issue.. |
தொடர்:
குடைவரைகள்
சிராப்பள்ளியிலிருந்து விராலிமலைவரை பயணித்து, அங்கிருந்து இடப்புறம் பிரியும் புதுக்கோட்டைச் சாலையில் 27 கி. மீ. சென்றால் சிற்றண்ணல்வாயிலை அடையலாம். வடக்குத் தெற்காக நீண்டிருக்கும் குன்றுத்தொடர்களில் வடகோடியில் உள்ள சரிவைத் தெரிந்தெடுத்து அதன் கீழ்ப்பகுதியில் மேற்குப் பார்வையாகக் குடைவரை அகழப்பட்டுள்ளது.1 பெருங்கற்காலப் பண்பாட்டு எச்சங்கள் நிறைந்து காணப்படும் இப்பகுதியில் சமணர்கள் தொடர்ந்து இருந்தமையைக் குன்றின் கிழக்குப்பகுதி யிலுள்ள இயற்கையான குகைத்தளத்தில் காணப்படும் படுக்கை களும் கல்வெட்டுகளும் உணர்த்துகின்றன.
முன் மண்டபம் சிற்றண்ணல்வாயில் குடைவரையை அடையச் சாலையில் இருந்து பாறைப்படிகள் பல ஏறிச் செல்லவேண்டும். மேலே, இந்தியத் தொல்லியல் துறையால் சமன்படுத்தப்பட்டுள்ள பாறைப் பரப்பொன்றும் அதையடுத்துக் குடைவரைக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள 11. 38 மீ. நீள, 2. 12 மீ. அகல, 68 செ. மீ. உயரத் தளமொன்றும் உள்ளன. தளத்தையடுத்துள்ள தற்போதைய மண்டபம் குடைவரையின் முன் பின்னாளில் கட்டப்பட்ட தாகும். உபானம், ஜகதி, எண்பட்டைக் குமுதம் மட்டுமே பெற்றுள்ள தளமொன்றின் மீதெழும் இம்மண்டபத்தை அடைய மூன்று படிகள் உள்ளன. குமுதத்தின் மேல் நிறுத்தப்பட்டிருக்கும் ஐந்து தூண்கள் மண்டபக் கூரையைத் தாங்குகின்றன. முச்சதுர, இருகட்டு, உடலினவாய் அமைந்துள்ள இத்தூண்களின் மேலுள்ள வெட்டுப் போதிகைகள் உத்திரம், வாஜனம், வலபி தாங்க, பலகைக் கற்களால் கூரையிடப்பட்டுள்ளது. முன் மண்டபத் திற்குள் நுழைய இரண்டாம், மூன்றாம் தூண்களுக்கு இடைப் பட்ட பகுதி உதவுகிறது. பிற வழிகள் பாதுகாப்புக் கருதி கம்பிச் சட்டங்களால் அடைக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் தென், வடசுவர்கள் குடைவரை வெட்டப் பட்டுள்ள பாறைச்சரிவின் தென், வடபகுதிகளைத் தழுவியுள் ளன. வடபுறம் 44 செ. மீ. அளவிற்கு மட்டுமே உள்ளகப் பட்டுள்ள சரிவு, தென்புறம், அங்கு வெட்டப்பட்டிருக்கும் கல்வெட்டின் முக்கியத்துவம் கருதி 2. 72 மீ. அளவிற்கு உள்ளகப் படுத்தப்பட்டுள்ளது. தென்வடலாக 10. 07 மீ. நீளம், கிழக்கு மேற்காக 1. 65 மீ. அகலம் பெற்றுள்ள முன் மண்டபத் தரையில் இருந்து 67 செ. மீ. உயரத்தில் உள்ள குடைவரையை அடையப் பாறையிலேயே பிடிச்சுவரற்றனவாய் மூன்று படிகள் வெட்டப் பட்டுள்ளன. இப்படிகளை அடுத்து விரியும் பாறைத்தரை குடைவரை முகப்பிற்கு முன்னுள்ள தரையாகத் தென்வடலில் 6. 79 மீ. நீளத்திற்கும் கிழக்கு மேற்கில் 80 செ. மீ. அகலத்திற்கும் பரந்துள்ளது.2 மண்டபச் சுவர்களில் வண்ணப் பூச்சின் சுவடு களைப் பார்க்கமுடிகிறது. முகப்பு முன்னுள்ள பாறைத்தரையிலிருந்து 5 செ. மீ. உயரத்தில் அமைந்துள்ள முகப்புத் தளம் தென்வடலாக 6. 85 மீ. நீளத்திற்கும் கிழக்கு மேற்காக 72 செ. மீ. அகலத்திற்கும் விரிந்துள்ளது. இத்தளத்தின் மீது நடுவில் இரண்டு முழுத்தூண்களும் பாறைச் சுவரொட்டி இரண்டு அரைத்தூண்களும் சதுரம், கட்டு, சதுரம் என்ற அமைப்பில் வெட்டப்பட்டுள்ளன. தூண்களின் மேலுள்ள பட்டை பெற்ற தரங்கப் போதிகைகள் விரிகோணக் கைகளால் உத்திரம் தாங்க, மேலே வாஜனம். தரங்கங்களில் திருப்பத் தரங்கம் அளவில் பெரியதாக உள்ளது. கூரை நன்கு சமன்படுத்தப்பட்ட நிலையில் முகப்பிற்கு முன்னுள்ள தரையளவிற்கு நீண்டு சற்றே கீழிறங்கியுள்ளது. இவ்விறக்கத்தின் முகப்பு பட்டை தட்டப் பட்டுள்ளது. வாஜனம் தென்வடலாகத் திரும்பிக் கூரைநீட்சி யின் தென், வடபகுதிகளைத் தழுவி நிற்பதுடன் அரைத்தூண் களையொட்டி இறங்கி முகப்புத் தரையுடன் ஒன்றுகிறது. இத்தரையின் விளிம்பிலிருந்து 4 - 5 செ. மீ. உட்தள்ளியே முகப்புத் தூண்கள் எழுகின்றன. 2. 60 மீ. உயரம் பெற்றுள்ள முகப்பையடுத்து மேற்கில் விரியும் வட, தென்பாறைச்சுவர்கள் சமன்படுத்தப்பட்டுள்ளன. வடசுவர் 99 செ. மீ. அகலத்தில் அமைய, 72 செ. மீ. அகலத்தில் தொடங்கும் தென்சுவர், கீழ்ப்பகுதியில் அகலக் குறைவாகி 50 செ. மீ. அளவில் முடிகிறது. இச்சுவர்களில் இருந்த ஓவியங் கள் பெருமளவிற்கு மறைந்துவிட்டபோதும் கூரை ஓவியங்கள் எஞ்சியுள்ளன. போதிகைக் கைகள் வண்ணப்பூச்சுப் பெற்று விளங்க, உத்திரத்தின் கீழ்முகத்தில் கொடிக்கருக்குகளைக் காண முடிகிறது. மண்டபம் முகப்பையடுத்துக் கிழக்கில் பரந்துள்ள மண்டபம் தென் வடலாக 6. 76 மீ. நீளமும் கிழக்கு மேற்காக 2. 13 மீ. அகலமும் 2. 55 மீ. உயரமும் பெற்றுள்ளது. அதன் தெற்கு, வடக்குச் சுவர்களில் தாங்குதளத்துடனான கோட்டங்களும் பின்சுவரில் வடக்கில் 41 செ. மீ. அளவும் தெற்கில் 49 செ. மீ. அளவும் பிதுக்கமாக அமைந்த கருவறையும் அகழப்பட்டுள்ளன. பின்சுவர் தவிர ஏனைய முப்புறத்தும் கூரையைத் தழுவி உத்திரம் அமைய, வாஜனம் பின்சுவரையும் அணைத்துள்ளது. கூரை முழுவதும் சுதைபூசி எழுதிய ஓவியங்களுள் வடக்கு, தெற்குப்பகுதி ஓவியங்கள் பெருமளவு அழிந்துவிட்டன. நடுப்பகுதி ஓவியக் காட்சி இன்றளவும் காணுமாறு உள்ளமை பெரும் பேறாகும். முகப்புத் தரையிலிருந்து 3 செ. மீ. தாழ உள்ள மண்டபத் தரை நன்கு சமன்படுத்தப்பட்டுள்ளது. தெற்கு, வடக்குச் சுவர்களில் தாங்குதளத்துடன் கோட்டங்கள் அகழப்பட்டிருந்தபோதும் அவற்றின் அமைப்பில் ஒத்திசைவு இல்லை. தெற்குக் கோட்டத்தின் தாங்குதளம் முகப்பில் இடம் பெற்றுள்ள தெற்கு அரைத்தூணினும் இலேசாக முன்தள்ளி அமைய, வடக்குக் கோட்டத்தின் தாங்குதளம் அவ்வாறின்றி அரைத்தூணின் தொடக்கநிலை அளவிலேயே நன்கு உள்ளடங்கி அமைந்திருப்பது மண்டபத்தை உருவாக்கியவர்களின் திறன் குறைவைக் காட்டுவதாக உள்ளது. தெற்குக் கோட்டத்தின் முன்னுள்ள தாங்குதளம் உபானம், ஜகதி, உருள்குமுதம், கம்புகளின் தழுவலில் பாதங்கள் பெற்ற கண்டம், பட்டிகை, மேற்கம்பு என அனைத்து உறுப்புகளும் பெற்று 58 செ. மீ. உயரத்துடன் 1. 60 மீ. அகலத்தில் பாதபந்தத் தாங்குதளமாக அமைய, வடக்குக் கோட்டத்தின் முன்னுள்ள உபானமற்ற பாதபந்தத் தாங்குதளம் 59 செ. மீ. உயரம் பெற்று 1. 84 மீ. அகலத்தில் அமைந்துள்ளது. இரண்டு கோட்டங்களுமே தாங்குதளத்திலிருந்து பக்கத்திற்கொன்றாக எழும் உறுப்பு வேறுபாடற்ற நான்முக அரைத்தூண்களால் அணைக்கப் பட்டுள்ளன. அவற்றின் மேலுள்ள எளிய போதிகைகள் விரிகோணக் கைகளால் உத்திரம் தாங்க, மேலே வாஜனம். 1. 50 மீ. உயரம், 1. 03 மீ. அகலம், 19 செ. மீ. ஆழம் பெற்றுள்ள தெற்குக் கோட்டத்தில் பார்சுவநாதரும் 1. 40 மீ. உயரம், 1. 15 மீ. அகலம், 16 செ. மீ. ஆழம் கொண்டுள்ள வடக்குக் கோட்டத்தில் சமணமுனிவர் ஒருவரும் அர்த்தபத்மாசனத்தில் காட்சிதருகின்றனர். கருவறை பின்சுவரிலிருந்து மண்டபத்திற்குள் பிதுக்கமாகவுள்ள கரு வறை 48 செ. மீ. உயரத் தளத்தின் மீது எழுகிறது. எண்பட்டைக் குமுதம், கம்புகளின் தழுவல் பெற்ற பாதங்களுடனான கண்டம், பட்டிகை, மேற்கம்பு என அமைந்துள்ள அத்தளத்தின் மேல் எழும் சுவரைச் சதுரம், நீள்கட்டு, சதுரம் எனும் அமைப்பிலான நான்கு அரைத்தூண்கள் அணைத்துள்ளன. அவற்றின் கீழ்ச் சதுரங்கள் வெறுமையாக அமைய, மேற்சதுரங்களின் மேற்கு முகங்களில் மட்டும் தாமரைப்பதக்கங்களைக் காணமுடிகிறது.3 சுவர்த் திருப்பத் தூண்களுக்கும் நடுத்தூண்களுக்கும் இடைப் பட்டுள்ள சுவர்ப்பகுதி வெறுமையாக உள்ளது.4 நடுத்தூண் களுக்கு இடையில் 1. 65 மீ. உயரத்தில் 78 செ. மீ. அகலத்தில் பக்க நிலைகள், மேல், கீழ் நிலைகள் பெற்ற வாயில் திறக்கப்பட்டுள்ளது. அரைத்தூண்களின் மேலமர்ந்துள்ள தரங்கப் போதிகைகள் பட்டை பெற்ற விரிகோணக் கைகளால் உத்திரம் தாங்க, மேலே வாஜனம். வாயிலை ஒட்டியுள்ள போதிகைகள் வாயிலுக்கு எதிர்த்திசையில் மட்டும் கைவிரிக்க, திருப்பப் போதிகைகள் முத்திசைகளிலும் கைவிரித்துள்ளன. தரங்கங்களில் திருப்பத் தரங்கம் பேரளவினதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. வாயிலுக்கு முன் மண்டபத்திலிருந்து கருவறைக்குள் நுழைய வாய்ப்பாக வேழயாளிப் பிடிச்சுவருடன் மூன்று படிகள் வெட்டப்பட்டுள்ளன. அவற்றுள் கீழ்ப்படி நிலாக்கல்லாக உள்ளது. தென்வடலாக 2. 93 மீ. நீளமும் கிழக்கு மேற்காக 2. 84 மீ. அகலமும் 2. 14 மீ. உயரமும் பெற்றுள்ள கருவறையின் தென், வடசுவர்களும் மேற்குச் சுவர்த்துண்டுகளும் வெறுமையாக உள்ளன. தரையிலிருந்து 90 செ. மீ. உயரத்தில், கிழக்குச் சுவர் முழுவதும் பரவியிருக்குமாறு வெட்டப்பட்டுள்ள 2. 99 மீ. அகல, 1. 19 மீ. உயர, 8 செ. மீ. ஆழக் கோட்டத்தில் மூன்று சமணச் சிற்பங்கள் மேற்குப் பார்வையாகச் செதுக்கப்பட்டுள்ளன. நாற்புறத்தும் வாஜனம் அணைத்துள்ள கூரையின் நடுவில் தாமரைமலர் காட்டப்பட்டுள்ளது.5 அதன் வெளிவட்டம் பெரு வட்டமாக அமைய, நடுவட்டம் சுற்றளவில் குறைந்து ஆனால், அதனினும் இரு மடங்கு அகலத்தில் காட்சிதர, உள் வட்டம் இரண்டினும் சற்று முன்தள்ளிய நிலையில் ஒரு மேடு போலச் சிறிய அளவினதாக வடிக்கப்பட்டுள்ளது. உள்வட்டத்திற்கு நடுவில் காட்டப்பட்டுள்ள தாமரையின் முகுளம் போன்ற பகுதி சிதைந்துள்ளது. அதற்குக் கிழக்கே உள்ள கூரைப்பகுதியில் ஓவியப் பின்னல்களைக் காணமுடிகிறது. இன்றளவும் நன்னிலையில் உள்ள இவ்வோவியப்பகுதி, வளைவும் அதன் நால் மூலைகளிலுமான சதுரங்கள் என இழை பின்னினாற் போல் தொடர்ந்து பரவியுள்ள காட்சியைக் கண்முன் வைக்கிறது. அதற்கு முற்றிலும் மாறாகக் கூரையின் மேற்குப்பகுதி ஓவியங்களின்றி வெறுமையாக உள்ளது. தரை யின் நடுப்பகுதியில் காணப்படும் பொளிவிற்கும் பிற பகுதிகளில் உள்ள பொளிவிற்கும் மிகுந்த வேறுபாடு உள்ளது. இந்நடுப் பொளிவு ஒரு பெருவட்டமாய் அமைந்திருப்பது ஐயத்திற்கிடம் தருவதாய் அமைந்துள்ளமையைக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. தாய்ப்பாறையிலான வேசர ஆவுடையார் இருந்து அகற்றப்பட்டிருக்கலாம் எனக் கருதுமாறு இந்தப் பொளிவு காட்சியளிக்கிறது. சிற்பங்கள் தளக் கீழ்க்கம்பே இருக்கையாக விரியும் தெற்குக் கோட்டத் தில் தலைக்கு மேல் ஐந்து தலைப் பாம்பைக் குடையாகப் பெற்றிருக்கும் பார்சுவநாதர் அர்த்தபத்மாசனத்தில் உள்ளார். அவரது செவிகள் நீள்செவிகளாக உள்ளன. தியான முத்திரையில் உள்ள கைகளில், வலக்கையின் கட்டை விரல் உள்ளங்கைக்காய் மடிந்து பதாகக் குறிப்புக் காட்டுவது சிறப்புக்குரியதாகும். பார்சுவரின் தலைக்குப் பின்னுள்ள பாம்பு அவரது இயக்கரான தருணேந்திரனைக் குறிக்கும். இப்பாம்பின் பக்கத் தலைகள் நடுத்தலையை நோக்கியனவாய்த் திரும்பியுள்ளன. வடக்குக் கோட்டத்தில் உள்ள சமணமுனிவர் பார்சுவர் போலவே நீள்செவிகள், அர்த்தபத்மாசனம், தியான முத்திரை பெற்றுள்ளார். பார்சுவருக்கு உள்ளாற் போன்ற பதாகக் குறிப்பை அவரது வலக்கையில் காணமுடியாதவாறு கட்டை விரல் சிதைந்துள்ளது. ஆனால், தலைக்கு மேல் பேரளவிலான குடை உள்ளது. அக்குடை முக்குடையாக அமையாமல் ஒரு குடையாக உள்ளமையால் அவரைத் தீர்த்தங்கரராகக் கொள்ளக் கூடவில்லை.6 கருவறைப் பின்சுவரில் காணப்படும் மூன்று சிற்பங்களுள் வடக்கிலும் நடுவிலும் உள்ளவை தலைக்கு மேல் முக்குடை பெற்றுத் தீர்த்தங்கரர்களைக் குறித்தபோதும், 'இன்னாரின் வடிவம்' என்று அடையாளப்படுத்த, அவற்றில் தடயங்கள் இல்லை.7 தெற்கரின் தலைக்கு மேல் ஒரு குடை மட்டுமே காட்டப்பட்டுள்ளது.8 அர்த்தபத்மாசனத்தில் தியான முத்திரை யுடன் காணப்படும் மூவரின் செவியமைப்பும் வெளியில் உள்ள இரண்டு தீர்த்தங்கரர்களின் செவியமைப்பிலிருந்து முற்றிலும் மாறுபட்டு இயல்பான செவிகளாய் அமைந்திருப் பதன் பின்புலம் அறியக்கூடவில்லை. இத்தீர்த்தங்கரர்களின் காலமைப்பு, கையமைப்பு இவற்றிலும் செம்மையைக் காண முடியவில்லை. குறிப்புகள் 1. முதலாய்வு 4. 11. 2001; மீளாய்வு 1. 3. 2009. 2. அகலம் இடத்திற்கு இடம் வேறுபடுகிறது. 3. 'நடுவில் உள்ள எட்டுப் பட்டைகளில் தாமரையிதழ்கள் செதுக்கப்பட்டுள்ளன' என்கின்றனர் தி. இராசமாணிக்கமும் சு. இராசவேலும் அ. கி. சேஷாத்திரியும். தென்னகக் குடை வரைக் கோயில்கள், ப. 65; மு. கு. நூல், ப. 147. அனைத்துச் சதுரங் களிலும் பதக்கங்கள் உள்ளன என்கிறார் கே. வி. செளந்தர ராஜன். மு. கு. நூல், ப. 97. 'The lotus medallions carved on the pilasters of the niches on either side of sanctum special to Mahendravarman’s style, is seen here' எனும் டி. என். இராமச்சந்திரனின் கூற்றுச் சரியன்று. 'Cave Temple and Paintings of Sittannavasal’, Lalit Kala, vol. No. 9, p. 32. சிற்றண்ணல்வாயில் கருவறை முன்சுவர் அரைத்தூண்களில் காட்டப்பட்டுள்ள தாமரைப்பதக்கங்கள் மகேந்திரவர்வர்மர் கலைக்கூறாக அமையவே முடியாது. ஏனெனில், இலக்ஷிதாய தனம் தவிர, ஏனைய அனைத்து மகேந்திரவர்மர் குடைவரை களிலும் உள்ள கருவறை முன்சுவர்த் தூண்கள் நான்முகமாக உள்ளன. அவற்றுள் எந்தத் தூணிலும் தாமரைப்பதக்கம் இடம்பெறவில்லை. இலக்ஷிதாயதனக் கருவறைகளின் முன்சுவர்த் தூண்கள் சதுரம், கட்டு, சதுரம் அமைப்பில் இருந்தபோதும் அவற்றில் தாமரைப்பதக்கம் இல்லை. கருவறை முன்சுவர்த் தூண்கள் தாமரைப்பதக்கம் பெறும் அமைப்பை மகேந்திரரின் ஒரு குடைவரையில்கூடக் காணமுடியாத நிலையில் அதை மகேந்திரர் கலைக்கூறாக டி. என். இராமச் சந்திரன் முன் வைப்பதை ஏற்கக் கூடவில்லை. மாறாக இத்தாமரைப்பதக்கங்கள் மெய்யம் மகாதேவர், கோளக்குடி, குன்றத்தூர் முதற் குடைவரை, யானைமலைக் கந்தன் குடைவரை இவற்றின் கருவறை முன்சுவர்த் தூண்களில் இடம்பெற்றுள்ளன. எனில், அதைத் தென்தமிழ்நாட்டுக் கலையறிஞர்களுக்கே உரிய சிறப்புக்கூறாகக் கொள்ளலாம் அன்றோ! 4. இங்குக் கோட்டங்கள் இருப்பதாகவும் அவற்றில் சமணத் தீர்த்தங்கரர் சிற்பங்கள் வடிக்கப்பட்டிருப்பதாகவும் எழுதி யுள்ளார் டி. என். இராமச்சந்திரன். மு. கு. நூல், ப. 32. 5. 'தர்ம சக்கரம்' என்கிறார் டி. என். இராமச்சந்திரன். மு. கு. நூல், ப. 33. 'கூரையில் தாய்ப்பாறையிலேயே அமைக்கப்பட்டிருந்த தாமரை வடிவிலான குடை இருந்திருக்க வேண்டும். மலரின் காம்பு உடைந்த அடையாளம் கூரையில் காணப்படுகிறது' என்கிறார் ஜெ. ராஜாமுகமது. ஆவணம் 19, ப. 186. 6. தூண் கல்வெட்டின் அடிப்படையில் டி. என். இராமச்சந்திரன் இவரைத் திருவாசிரியர் என்றும் மதுரை இளங்கெளதமன் என்றும் அடையாளப்படுத்துகிறார். கே. வி. செளந்தரராஜனும் இவரை இளங்கெளதமனாகவே கொள்கிறார். மு. கு. நூல்கள், பக். 33, 97. 7. கே. வி. செளந்தரராஜனும் சு. இராசவேலும் அ. கி. சேஷாத்திரி யும் இவர்களை ஆதிநாதர், மகாவீரர் என்று அடையாளப் படுத்தியுள்ளனர். மு. கு. நூல்கள், பக். 97, 148. 8. கே. வி. செளந்தரராஜன், சு. இராசவேல், அ. கி. சேஷாத்திரி ஆகியோர் இவரையும் தீர்த்தங்கரராகக் கொண்டு, நேமி நாதராக அடையாளப்படுத்தியுள்ளனர். மு. கு. நூல்கள், பக். 97, 148. தி. இராசமாணிக்கமும் இவரைத் தீர்த்தங்கரராகவே கொண்டுள்ளார். மு. கு. நூல், ப. 65. (தொடரும்) this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |