http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[180 Issues]
[1786 Articles]
Home About US Temples Facebook
Issue No. 81

இதழ் 81
[ செப்டம்பர் 16 - அக்டோபர்17, 2011 ]


இந்த இதழில்..
In this Issue..

இரவில் வாங்கினோம்
அறிவர் கோயில் - 3
தமிழ்நாட்டுக் கோயில்களில் புதையலா?
செருவென்ற சோழனின் செப்பேடுகள் - 2
இராஜராஜேசுவரத்து ஆடலரசிகள் நானூற்றுவர் - 4
இராமநாதபுரம் சி.எஸ்.முருகபூபதி
இதழ் எண். 81 > தலையங்கம்
இரவில் வாங்கினோம்
ஆசிரியர் குழு
வாசகர்களுக்கு வணக்கம்.

ஆறு மாதகால இடைவெளிக்குப் பிறகு வெளியான கடந்த இதழுக்கு வரவேற்பளித்த வாசகர்களுக்கு நன்றி கூறும் அதேவேளையில் தனது வரவேற்பறை மூலமாக இலட்சக்கணக்கான வாசகர்களுக்கு அறிமுகப்படுத்திய (24-8-2011 தேதியிட்ட) ஆனந்தவிகடன் வார இதழுக்கும் வரலாறு.காம் மின்னிதழ் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

கடந்த இதழை வெளியிட்டபிறகு ஓய்வாக மாலை நேரத்தில் விடுதலைநாள் சிறப்பு நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சியில் காண நேர்ந்தது. வழக்கம்போல நடிகைகளின் (கவர்ச்சி என்று தனியாகச் சொல்லவும் வேண்டுமோ?) பேட்டிகளும் நடனங்களும் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தன. விதிவிலக்காக மக்கள் தொலைக்காட்சி மட்டும் விடுதலை தொடர்பான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிக் கொண்டிருந்தது. வழக்கமான நிகழ்ச்சிகளும் அன்று சுதந்திர மணம் வீசின. இரவு நேரங்களில் தொலைக்காட்சி அலைவரிசைகளை மேயும்போது, 'கொஞ்சம் சேட்டை, கொஞ்சம் அரட்டை' என்றொரு நிகழ்ச்சி கண்ணில்படும். இருந்தாலும் மக்கள் தொலைக்காட்சியின் மற்ற நிகழ்ச்சிகளைப்போல அவ்வளவாக அது ஈர்த்ததில்லை. பயனேதுமின்றிப் பொழுது போக்கும் நிகழ்ச்சிகளில் அதுவும் ஒன்று என்ற எண்ணமே மிஞ்சியிருந்தது. ஆனால் விடுதலைநாள் அன்று அந்த நேரத்தில் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த நிகழ்ச்சிகளிலேயே அதுதான் சற்று பரவாயில்லை என்ற எண்ணம் வரவே, இந்திய விடுதலை தொடர்பான கேள்விகளைப் பொதுமக்களிடம் ஒருவர் கேட்டுக்கொண்டிருந்ததைக் காண நேர்ந்தது.

மிக எளிதான கேள்விகள்தான். 'இந்தியாவுக்கு எப்போது விடுதலை கிடைத்தது?', 'இது எத்தனையாவது சுதந்திரதினம்?'. 'காந்தியடிகள் எப்போது இறந்தார்?' என்பன போன்ற மிக எளிமையான கேள்விகளாகத்தான் கேட்டார்கள். ஆனால் பதிலளித்தவர்களில் பெரும்பாலானோர் தவறாகவே கூறினார்கள். எப்போது விடுதலை கிடைத்தது என்பதைச் சரியாகக் கூறியவர்கள்கூட எத்தனை ஆண்டுகள் நிறைவடைந்தன என்பதைச் சரியாகக் கூறவில்லை. தமிழர்களின் வரலாற்று அறிவுதான் கேள்விக்குறி என்றால், கணித அறிவுமா? என்று தோன்றியது. மற்ற நாட்களில் இந்நிகழ்ச்சிக் குழுவினர் பொதுமக்களிடம் சில கேள்விகளைக் கேட்டு அவர்களுக்குப் பதில் தெரியவில்லை என்றால் கேலி செய்யும் தொனியில் ஒரு சிரிப்பொலியைப் பின்னணியில் இசைக்க விடுவது சற்று மிகையாகத் தெரிந்தது உண்டு. மக்களின் அறியாமையை இப்படி வெளிச்சமிட்டுக் காட்டவேண்டுமா? என்றுகூடத் தோன்றியதுண்டு. ஆனால் அன்றுப் பார்த்தபோது அந்த எண்ணத்தில் சற்று மாற்றம் ஏற்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு பிறந்திருந்தாலும், அதைப்பற்றித் தெரியாமலேயே இத்தனை ஆண்டுகாலம் சுதந்திர இந்தியாவில் வாழ்க்கையைக் கழித்தவர்கள் இத்தகைய கேலிகளுக்குத் தகுதியானவர்கள்தான் என்று தோன்றியது. பள்ளி ஆசிரியர்களும் இதில் விதிவிலக்கல்ல. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே காந்தி தற்கொலை செய்துகொண்டார் என்று ஒருவர் கூறியதுதான் இதில் உச்சகட்டம்.

சில தொலைக்காட்சிகள் நிகழ்ச்சிக்கு சுவாரஸ்யம் சேர்க்க விரும்பி, அவர்களது ஆட்களையே அதில் பங்கேற்று நடிக்க வைப்பார்கள். இருப்பினும் இந்நிகழ்ச்சியில் தொடர்ச்சியாகத் தினந்தோறும் பல்வேறு மக்களைச் சந்திப்பதால் அதற்கு வாய்ப்புக் குறைவு என்றே தோன்றுகிறது. பின்னர் இதைப்பற்றி முனைவர் கலைக்கோவன் அவர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது, ஒரு யோசனை தோன்றியது. நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் ஒருபுறமிருக்க, நமக்கு நெருக்கமான வட்டாரத்திலேயே இதுபோன்றதொரு கருத்துக்கணிப்பை(?) நடத்திப் பார்க்கலாம் என்று முடிவு செய்து, நண்பர்கள், உறவினர்கள் மற்றும் உடன் பணிபுரிபவர்கள் எனச் சிலரைத் தேர்வுசெய்து கேள்விகள் கேட்டதில், ஏறத்தாழத் தவறான விடைகளே வந்தன. எப்போது விடுதலை கிடைத்தது என்பதற்கு மட்டும் அனைவரும் சரியான பதிலைக் கூறினார்கள். (நல்லவேளை!! பதிலளித்தவர்கள் யாரும் வரலாறு.காம் வாசிப்பதில்லை என்பதால் துணிச்சலாக இதை வெளியிட முடிகிறது!!!). ஏன் மக்களுக்குச் சுதந்திரத்தைப் பற்றியும் அதற்காக நடந்த போராட்டத்தைப் பற்றியும் விழிப்புணர்வே இல்லை? இரவில் வாங்கியது இன்னும் விடியவே இல்லையா?

ஊடகங்கள் சுதந்திரப் போராட்ட நிகழ்வுகளைச் சரியான முறையில் மக்களுக்குக் கொண்டு சேர்க்கவில்லையா? அல்லது பள்ளிப்பருவத்தில் வரலாறு சரியாகக் கற்பிக்கப்படவில்லையா? இரண்டும் சரியாக நடந்திருந்தும் மக்கள் அதில் கவனம் செலுத்தவில்லையா? தன் வீட்டைப் பற்றிய கவலையில் தாய்நாட்டைப் பற்றி நினைக்க மறந்து விட்டார்களா? இத்தகையவர்கள் தேர்ந்தெடுக்கும் அரசியல்வாதிகள் சுயநலமில்லாதவர்களாக இருந்தால்தானே அதிசயம்? தொலைக்காட்சிகள் சுதந்திரதினம் மற்றும் குடியரசுதினங்களில் அவை தொடர்பான நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதை விடுத்துத் திரைப்படங்களையும் திரைத்துறையினரின் பேட்டிகளையும் ஒளிபரப்பி வருவதுதான் இதற்கெல்லாம் காரணமோ? கேளிக்கை நிகழ்ச்சிகளை மட்டும்தான் மக்கள் விரும்புகிறார்கள் என்பதை இவர்களே எப்படி முடிவு செய்தார்கள்? தமிழகத்தில் தனியார் தொலைக்காட்சிகள் வருவதற்கு முன்பு சென்னைத் தொலைக்காட்சி நிலையம் மட்டுமே இருந்த காலத்தில் பண்டிகை நாட்களில் அவை தொடர்பான தரமான சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தன. சன் டிவியில் தொடங்கித் திரைப்படங்களை மையமாக வைத்து நிகழ்ச்சிகளைத் தயாரிக்கும் தனியார் தொலைக்காட்சிகள் பெருகியபோதுதான் சிறப்பு நிகழ்ச்சிகள் தரமிழக்கத் தொடங்கின.

திரையரங்குக்குச் சென்று காசு கொடுத்தால்தான் திரைப்படம் என்றிருந்த நிலையில், மாதத்தவணையில் வீட்டுக்கே திரைப்படத்தைக் கொண்டு வந்தபோது, இயல்பாகவே வரவேற்பு அதிகமாகத்தான் இருந்தது. இதன் தொடர்ச்சியாக முழுக்க முழுக்கத் திரைப்படம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்காகவே தனியான தொலைக்காட்சிகள் தொடங்கப்பட்டதுதான் இதில் உச்சகட்டக் கொடுமை. இடையில் ஒரு விதிவிலக்காக மக்கள் தொலைக்காட்சி தோன்றியது. ஆனால் அதற்குப்பின் உதயமான கலைஞர் மற்றும் கேப்டன் தொலைக்காட்சிகள் இன்னொரு மக்கள் தொலைக்காட்சியாக இல்லாமல் இன்னொரு சன் டிவியாக மாறிப்போனதுதான் தமிழனின் துரதிருஷ்டம்.

ஊடகங்களுக்கு மட்டும்தான் இந்தப் பொறுப்பு இருக்கிறதா? அவற்றைப் பார்க்கும் மக்கள் தரமற்ற நிகழ்ச்சிகளைப் புறக்கணித்தால் நல்ல நிகழ்ச்சிகள் வெளிவருமே என்ற வாதத்தையும் மறுப்பதற்கில்லை. விடுதலைநாள் அன்று தமன்னாவையும் அனுஷ்காவையும் விடுத்து மக்கள் தொலைக்காட்சியைப் பார்த்தவர்கள் மிகச் சொற்பமாகத்தான் இருந்திருப்பார்கள். எனவே, பார்க்கும் மக்கள் எண்ணிக்கைக்கேற்பப் பெருகும் விளம்பர வருவாயைக் குறிவைத்து இயங்கும் தொலைக்காட்சிகள் ஆளுக்கொரு நடிகையைக் குத்தகைக்கு எடுத்துக் கொள்வதில் வியப்பில்லைதானே? மக்கள் விரும்பிப் பார்ப்பதால் ஒளிபரப்புகிறோம், தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதால் வேறுவழியின்றிப் பார்க்கிறோம் என்ற சுழல் வாதம் என்றைக்கும் முடியப்போவதில்லை. இன்றைக்கு மக்களிடத்தில் பொதுக்கருத்தை உருவாக்குவதில் பத்திரிகைகளும் வானொலிகளும் தொலைக்காட்சிகளும் பெரும்பங்கு வகிக்கின்றன. ஊடகங்களில் வரும் செய்திகள் உண்மையானவையே என்ற மூடநம்பிக்கை பெரும்பாலான மக்களிடம் இருக்கிறது. கிராமப்புறங்கள் மட்டுமல்ல; பெருநகரங்களிலும் மக்கள் ஊடகங்கள் வாயிலாகவே உலகத்தைப் பார்க்கிறார்கள்.

ஓர் ஊரிலுள்ள அனைத்து ஊடகங்களும் சேர்ந்து ஒரு பொய்யை உண்மையெனத் திரும்பத் திரும்பக் கூறினால் உண்மை பொய்யாகிவிடும். பல பொய்கள் நம் நாட்டில் இப்படி ஊடக வலிமையால் உண்மையாகி இருப்பதை நாம் கண்டிருக்கிறோம். இத்தகையதொரு ஆபத்தான சூழலில், ஊடகங்கள் தங்கள் கடமையை உணர்ந்து சமூக வளர்ச்சிக்குப் பங்களிக்க வேண்டியது அவசியம். அதைவிடுத்து, மக்கள் எதை விரும்புகிறார்களோ அதைத் தருவதுதான் எங்கள் வேலை என்று சொல்வது, மக்களை மாயையில் வைத்திருந்து அதன்மூலம் கல்லா நிரப்புவது மட்டுமே எங்கள் நோக்கம் என்று சொல்லாமல் சொல்வதற்குச் சமம். மக்களும் இத்தகைய ஊடகப்போக்குகளை உணர்ந்து விலக்கி வைத்து, தரமான நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டும். இரண்டு கைகளும் சேர்ந்து எழுப்பவேண்டிய ஓசையிது. இல்லாவிட்டால் இரவில் வாங்கியது இரவல் போவதுகூடத் தெரியாமல் உறங்கிக்கொண்டுதான் இருப்போம். எந்தப் பொருளின் முக்கியத்துவத்தையும் உணர்வதற்கு அப்பொருளுக்குத் தரப்பட்ட விலையைப் பற்றி அறிந்திருக்கவேண்டும். விடுதலையும் இதற்கு விலக்கல்ல. கவிஞர் திரு. நெல்லை ஜெயந்தா அவர்கள் ஒருமுறை சொன்னதைப்போல, 'நம் இந்திய சுதந்திரக்கொடி பட்டொளி வீசிப் பறப்பது திரிக்கப்பட்ட கயிறுகளில் அல்ல; பறிக்கப்பட்ட உயிர்களில்'. விடுதலையை வாங்க நம் முன்னோர்கள் எத்தகைய விலையைத் தந்தார்கள் என்பதை அறிந்துகொண்டால்தான் சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள இயலும். இல்லாவிடில் இமைகளைச் சிறையாக நினைக்கும் கண்களாகத்தான் நாமும் இருப்போம்.

அன்புடன்
ஆசிரியர் குழு
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.