http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 81
இதழ் 81 [ செப்டம்பர் 16 - அக்டோபர்17, 2011 ] இந்த இதழில்.. In this Issue.. |
(சென்ற இதழ்த் தொடர்ச்சி....) 1000 வருடங்கள் கண்ட தஞ்சைப் பெரியகோயிலை எடுப்பித்த முதல் இராஜராஜனுக்குப் பிறகு இவன் மகன் முதல் இராஜேந்திரசோழன் மன்னனாக முடிசூடினான். கடல்கடந்து பல அந்நிய நாடுகளை வென்ற ஒரே இந்திய மன்னன் இவன் ஆவான். கி.பி. 1044 வரை ஆண்ட முதல் இராஜேந்திரன் தனது மகன் அறுவரில் மூத்த மகனான முதல் இராஜாதிராஜனுக்கு கி.பி. 1018ல் இளவரசனாகப் பட்டம் சூட்டி அரசியல் நிர்வாகத்திலும், படையெடுப்பிலும் ஈடுபடுத்தினான். முதல் இராஜேந்திரன் உயிருடன் இருக்கும் கடைசி சில ஆண்டுகளில் மேலைச் சாளுக்கியன் ஆகவமல்லனோடு போர் புரியும் சூழ்நிலை தொடங்கியது. முதல் இராஜேந்திரன் முதுமை அடைந்து விட்டதால் இப்போரை முதல் இராஜாதிராஜன் நடத்தி வெற்றியும் பெற்றான். கி.பி. 1044ல் முதல் இராஜேந்திரன் இறந்து போகவே முதல் இராஜாதிராஜன் சோழமன்னனாக முடிசூடி, நாட்டு நிர்வாகத்திலும், படையெடுப்பையும் திறம்பட நடத்தினான். வாழ்வின் பெரும்பகுதியைப் போர்க்களத்திலேயே கழித்த முதல் இராஜாதிராஜனின் கடைசிச் சில ஆண்டுகள் (கி.பி 1042ல் தொடங்கி) மேலைச் சாளுக்கிய மன்னன் ஆகவமல்லனுடன் ஏற்பட்ட போர்க்களத்திலேயே கழிந்தது. மேலைச் சாளுக்கிய நகர்கள் கொள்ளிப்பாக்கை (கி.பி. 1046ல் கொளுத்திக் கம்பிலியை (1048ல்) கைப்பற்றி வெற்றித்தூண் நிறுவினான். மீண்டும் 1048ல் பூண்டூர், மன்னதிப்பதி ஆகிய நகரங்களைக் கொளுத்திப் பின் கி.பி. 1050ல் மேலைச் சாளுக்கியத் தலைநகரான கல்யாணபுரத்தைக் கொளுத்தி அங்கு விஜயராஜேந்திரன் என்ற பெயருடன் வீராபிஷேகம் செய்துகொண்டான். இங்கிருந்து இவன் எடுத்துவந்த பல பொருட்களில் துவாரபாலகர் சிலை ஒன்று தஞ்சை அரண்மனை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இச்சிலையின் பீடத்தில் 'ஸ்ரீஉடையார் ஸ்ரீவிஜயராஜேந்திர தேவர் கல்யாணபுரம் எரிந்து கொடு வந்த துவாரபாலகர்!' என்று எழுதியுள்ள செய்தி இவனின் வீரத்தை எடுத்துரைக்கும் சான்றாக அமைந்துள்ளது. இப்போர்களிலெல்லாம் இவனது தம்பிகளும் கலந்துகொண்டனர். போர் மேகங்கள் சூழ்ந்துள்ள இந்தக் காலகட்டத்தில்தான் முதல் இராஜாதிராஜன் தனது 35வது ஆட்சியாண்டில் (இறப்பதற்கு 1 வருடம் முன்னர்) கி.பி. 1053ல் கும்பகோணத்திற்கு அருகாமையில் உள்ள சோழர்காலத் தலைநகர்களில் ஒன்றான முடிகொண்ட சோழபுரமான பழையாறையில் உள்ள இராஜேந்திரசோழன் என்ற பெயர்கொண்ட அரண்மனையில் கீழைப்பகுதியில் அமைந்திருந்த 'விஜயராஜேந்திர காலிங்கராயன்' என்ற ஆசனத்தில் வீற்றிருந்து பிராமணர்களுக்குச் சில கிராமங்களைத் தானமளித்தான். இவன் தந்தை முதல் இராஜேந்திரன் கி.பி. 1020ல் 51 கிராமங்களை ஒரு தொகுதியாக்கித் தனது தாயின் நினைவாகத் திரிபுவனமாதேவி சதுர்வேதிமங்கலம் என்று பெயரிட்டுப் பிராமணர்களுக்குத் தானம் வழங்கிச் செப்பேட்டில் பொறித்தும் வைத்தான். இச்செப்பேடுகள்தான் 'கரந்தைச் செப்பேடுகள்' என்று அழைக்கப்படுகின்றன. இதில் தானம் வழங்கிய ஊர்களின் பெயர்களும் நான்கெல்லைகளும், விளைநிலங்களின் கணக்குகளும் அவற்றிலிருந்து கிடைக்கும் ஆண்டு வருவாய் நெல்லும், காசும் அவற்றைப் பெறுதற்குரிய பிராமணர்களின் பெயர்களும் பங்குகளும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. இதைப்போலவே முதல் இராஜாதிராஜனும் திருஇந்தளூர் நாட்டிலுள்ள 1. தத்தமங்கலம் 2. கூத்தனூர் 3. பஞ்சவன் நல்லூர் 4. கரம்பைக்குடி 5. மேல்நாகக்குடி 6. கீழ்நாகக்குடி 7. கொற்றநல்லூர் 8. பெரியங்குடி என்ற 8 கிராமங்களையும் திருஇந்தளூருடன் இணைத்துத் தனது தந்தையின் நினைவாக 'இராஜேந்திரசோழ சதுர்வேதிமங்கலம்' என்ற பெயரில் பிராமணர்கள் குடியிருக்கும் இடமாக்கி அங்கு கிடைக்கும் வருவாயில் இவர்களுக்குத் தானமாக்கி ஆணையிட்டான். மன்னர் வாய்மொழியாகப் பிறப்பித்த ஆணையைத் திருமந்திர ஓலை என்ற அதிகாரி ஓலையில் எழுதி ஓலைநாயகன் என்ற உயர்பதவியில் இருப்பவன் அதைச் சரிபார்த்து ஒப்புதல் அளிக்க, பின் வரிவிதிக்கும் அதிகாரி உடன் கூட்டத்துக் கருமம் ஆராயும் அதிகாரிகளுக்கு அனுப்புவர். இவர்கள் சரிபார்த்து நிலவரிக் கணக்கு ஒழுங்காக எழுதப்பெற்று ஊர்ச்சபையில் வைக்கப்பட்டுள்ளனவா என்று மேற்பார்வை பார்க்கும் அதிகாரிகளான புரவு வரி திணைக்களத்துக் கண்காணிக்களுக்கு அனுப்புவர். பின், அரசிற்கு ஒவ்வொரு ஊரிலிருந்து வருவதற்குரிய அரசிறை எவ்வளவு என்பதை உணர்த்தும் புத்தகத்தை வைத்திருக்கும் வரிப்புத்தகம் என்ற அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து விபரங்கள் பதிவு செய்யப்படும். பின்பு உயர் அதிகாரிகள் ஒப்பமிட்டு ஓலை தயார் செய்யப்படும். இவ்வாறு தயார் செய்யப்பட்ட ஓலை திருஇந்தளூர் நாட்டார்க்கும், பிரம்மதேயக் கிழவர்களுக்கும் (பிராமணர்களுக்கும்) மற்றும் தேவதானம், பள்ளிச் சந்தம் கணிமுற்றூட்டு அறச்சால போகம் ஆகிய பிற அறக்கட்டளைக்குரிய நிர்வாக ஊரவை உறுப்பினர்களுக்கும், நகரத்தார்க்கும் (வணிகர்கள்) அனுப்பி வைக்கப்படும். அதிகாரிகளால் அனுப்பிவைக்கப்பட்ட ஓலையை நாட்டார் உட்பட ஊரவை உறுப்பினர்கள் எதிரே எழுந்து சென்று வணங்கி மன்னனின் திருமுகத்தைத் தலைமேல் வைத்து மரியாதை செய்விப்பர். இவ்வெட்டு கிராமங்களிலுள்ள நிலங்களில் பிற அறக்கட்டளைக்குரிய நிலங்கள் மற்றும் நீக்கவேண்டிய நிலங்கள் ஆகியவற்றை நீக்கி மற்ற வெள்ளாண் வகை நிலங்கள் அனைத்தும் ஒன்றாக்கித் தானம் செய்யப்படுகின்ற நிலங்களாக மாற்றம் செய்யப்பட்டு, இந்நிலங்களை யானை கொண்டு நடத்திக் கல்நட்டு அளந்து, எல்லைகள் வரையறை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு எல்லைகள் வரையறை செய்யப்பட்ட நிலங்களிலிருந்து அரசிற்கு வரவேண்டிய இறை (வரி) ரத்து செய்யப்பட்டு அவ்விறை இவ்வெட்டு கிராமங்களில் உள்ள பிராமணர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அறிவிக்கப்பட்ட தானம் 33வது ஆண்டு விளைச்சலில் இருந்து அமலாகிறது என்பதையும் இச்செப்பேடு தெரிவிக்கிறது. பொதுவாக நிலத்திற்க்குச் செலுத்தப்பட்ட வரி நெல்லாகப் பெறப்பட்டது. இவ்வாறு நெல்பெறும் பிராமணர்களின் பெயர்கள் அவரவர் குடும்பப் பெயர்கள் அவரவர் வசிக்கும் ஊர் ஆகியவற்றைத் தெரிவித்து அவர்கள் பெறும் பங்கின் அளவும் தெரிவிக்கின்றன. மேலும் இப்பிராமணர்களுக்குப் பணி செய்யும் நாவிதர், வண்ணார், பறை அறைபவர் ஆகியவர்களுக்கும் வழங்கப்பட்ட பங்குகள் பற்றியும் தெரிவிக்கின்றன. இச்செப்பேடுகள் இவ்வரசு ஆணையை நிறைவேற்றிய அரசு அதிகாரிகளாகப் புரவுவரி கண்காணி சோலை திருச்சிற்றம்பல உடையான், ஜெயங்கொண்ட சோழ கோசல ராயன், நாடுவகை செய்கின்ற சோழவளநாட்டு கரிகால்சோழ நல்லூருடையான் கேகயன் ஆதித்தனான கண்டராதித்த மூவேந்த வேளாண் ஆகியோர் குறிப்பிடப்படுகின்றனர். இத்தானத்தை முதல் இராஜராஜன் தமிழ்நாட்டில் பழையாறை அரண்மனையில் இருந்து வழங்கிவிட்டு மீண்டும் மேலைச் சாளுக்கியருடன் போர்புரியப் போர்முகத்துக்குச் சென்றுவிட்டான். கொப்பம் என்ற இடத்தில் நடைபெற்ற இப்போர் கடுமையாக இருந்தது. இப்போரில் முதல் இராஜாதிராஜனும் இவன் தம்பிகள் இரண்டாம் இராஜேந்திரன், இராஜ மகேந்திரன், வீர ராஜேந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர். போரில் முதலாம் இராஜாதிராஜன் யானையின் மேலே இருந்து போர்புரியும்போது எதிரியின் அம்புகளால் துளைக்கப்பட்டு யானையின்மேல் இறந்து 'யானைமேற் துஞ்சின தேவர்' என்ற வீரப்பெயர் பெற்றான். சோழமன்னனின் தலை சாய்ந்ததும் கொலைக்களத்தை விட்டுச் சிதறி ஓடின சோழப்படைகள். போர்க்களத்தில் இருந்த முதல் இராஜாதிராஜனின் தம்பியும் இளவரசருமான இரண்டாம் இராஜேந்திரன் போர்க்களத்தே சோழமன்னனாக முடிசூடி, சிதறி ஓடிய சோழப்படைகளை ஒன்று திரட்டி வீர உணர்ச்சி ஊட்டிப் புத்துணர்ச்சியுடன் போர்முகம் நோக்கிப் புறப்பட்டான் புது மன்னன். மறுமலர்ச்சியுடன் புறப்பட்ட சோழர்படை கொண்டு, இரண்டாம் இராஜேந்திரன் வீரமுடன் போரிட்டு மேலைச் சாளுக்கியனின் செருக்கை அடக்கிப் பின் கோலாப்பூர் (மகாராஷ்டிரா மாநிலம்) வரை சென்று வெற்றித்தூண் நிறுவித் தாயகம் திரும்பினான். அண்ணன் வழங்கிய அறக்கொடையை நடைமுறைக்குக் கொண்டுவந்து தனது 9ம் ஆட்சியாண்டில் (கி.பி. 1061ல்) அதைச் செப்பேட்டில் எழுதிக் கங்கை கொண்ட சோழபுரத்தில் இருந்து அரண்மனையிலிருந்து வழங்கினான். அந்தச் செப்பேடுதான் தற்போது கழுக்காணிமுட்டத்தில் தற்போது கிடைத்திருக்கிறது. சுமார் 950 ஆண்டுகளுக்கு முன்னர் மன்னர் வழங்கிய செப்பேடு மண்ணுக்குள் மறைந்து பின் வெளிவந்தாலும் அந்தச் செப்பேட்டின் முத்திரை மற்றும் அதன் ஏடுகள் ஏற்படுத்தும் பிரமிப்பு சோழ மன்னர்கள் மீதல்லவா ஏற்படுத்துகின்றது? (தொடரும்) this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |