http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 81

இதழ் 81
[ செப்டம்பர் 16 - அக்டோபர்17, 2011 ]


இந்த இதழில்..
In this Issue..

இரவில் வாங்கினோம்
அறிவர் கோயில் - 3
தமிழ்நாட்டுக் கோயில்களில் புதையலா?
செருவென்ற சோழனின் செப்பேடுகள் - 2
இராஜராஜேசுவரத்து ஆடலரசிகள் நானூற்றுவர் - 4
இராமநாதபுரம் சி.எஸ்.முருகபூபதி
இதழ் எண். 81 > கலைக்கோவன் பக்கம்
அறிவர் கோயில் - 3
இரா. கலைக்கோவன்


கல்வெட்டுகள்

குடைவரை வளாகத்துள் ஓர் எழுத்து வரைவும் ஐந்து எழுத்துப் பொறிப்புகளும் உள்ளன. வளாகத்தை அடுத்துள்ள சரிவில் தென்புறமாகச் சில எழுத்துப் பொறிப்புகள்30 காணப் படுகின்றன. இளங்கெளதமர் ஓவியம் உள்ள சதுரத்தின் தென் முகத்தில் செங்காவியில் எழுதப்பட்டுள்ள எழுத்துக்களுள் சிலவே படிக்குமாறு உள்ளன. குடைவரை வளாகத்துள்ள எழுத்துப் பொறிப்புகளுள் ஒன்று அரசன் அரசி ஓவியத்திலும் மற்றொன்று முகப்பிற்கு முன்னுள்ள தரையின் முகப்புப் பகுதியிலும் இடம்பெற்றுள்ளன. அரசன் அரசி ஓவியத்தின் நடுப்பகுதியில் 'கச்சமங்கலம் உடையான்' என்ற எழுத்துப் பொறிப்பு சோழர் கால எழுத்தமைதியில் மூன்று வரிகளில் அமைந்துள்ளது. முகப்புக் கல்வெட்டை 'ஸ்ரீயங்கைல' எனப் படிக்கலாம்.31 முகப்பு முழுத்தூண்களின் கீழ்ச் சதுரக் கிழக்கு முகங்களில் உள்ள இரண்டு கல்வெட்டுகளுள் வடக்கில் உள்ளது, 'ஸ்ரீதிருவாசிரியன்' எனும் பெயரையும் தெற்கில் உள்ளது, 'ஸ்ரீஉலோகாதித்தர்'32 எனும் பெயரையும் வெளிப்படுத்துகின்றன.33

குடைவரையின் தெற்கு வெளிச்சுவரில் உள்ள இளங் கெளதமன் கல்வெட்டு பதினேழு வரிகளில் அமைந்துள்ளது. பெருமளவு அழிந்துள்ள இக்கல்வெட்டைத் தற்போது படிப்ப தென்பது எளிதான செயலன்று. அதனால், இந்தியத் தொல்லியல் துறையின் கல்வெட்டுப் பிரிவால் 1904ல் படியெடுக்கப்பட்டுத் தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி 14ல் வெளியிடப் பட்டுள்ள இக்கல்வெட்டின் (எண். 45) பாடத்தை 1979ல் வெளியிடப்பட்டிருக்கும் இரா. நாகசாமியின் பாடத்தோடு34 ஒப்பிட்டு உரியவாறு பொருள் காண முயன்றுள்ளோம்.

பாண்டிய வேந்தர் அவனிபசேகரனான ஸ்ரீவல்லபனுக்காக மதுரையைச் சேர்ந்த கொள்கைப் பல்குணத்தோனான ஆசிரியர் இளங்கெளதமன் என்பார் செய்த திருப்பணிகளைப் பாடல் வடிவில் அமைந்த இக்கல்வெட்டுக் கருப்பொருளாகக் கொண்டுள்ளது.

1. தரண்பை மூதூரின் வளம் பெருக்கியமை.
2. அங்கு அருகர் கோயில் ஒன்றினைச் செய்தமை.
3. நாள்தோறும் சமைத்த உணவு படைக்கவும் விளக்கேற்ற வும் அமணன் காணி ஒதுக்கியமை.
4. வயக்கல் ஒன்று வழங்கியமை.
5. மெழுக்குப்புறமாக மூன்று மா நிலம்.
6. வழிபடுவானுக்கு அரைக்காணி நிலம்.

இவை தவிர,

7. அண்ணல்வாயில் அறிவர் கோயில் முன்னர் கல்லால் மண்டபம் நிறுவியமை.
8. கண்டோர் மருளுமாறு காமரு விழுச்சீர் உள்ளொரு புறம்பால் ஒளிமிகப் போக்கியமை.
9. எல்லாங்குற்ற (ஆங்கிருந்த அனைத்தையும்?) நீக்கியமை.
10. ஆதிவேந்தர் அறம் செயலாக்கியமை.
11. (எழுத்துச் சிதைவால் இன்னவையென அறியமுடியாத நிலையில் உள்ள) இரண்டினை நிறுவியமை. (முக மண்டபச் சிற்பங்கள்?)
12. திருவேற்றாஞ் செய்பாவை நெடிதூண் ஒருபால் நகர் அமைத்தமை.
13. விளக்கிற்கான நெய்ப்புறமாக இடைவயல் அளித்தமை.
14. அறவோர்க்கு நிலம் மாச்செய் ஒதுக்கியமை.
15. அகமண்டபம் புதுக்கியமை.
16. அறிவர் கோயில் முகமண்டபம் எடுத்தமை.

இளங்கெளதமரின் திருப்பணிகள் பற்றிப் பேசும் இந்தக் கல்வெட்டின் சில வரிகளில் எழுத்துக்கள், சொற்கள் அழிந் திருப்பதால், அத்தகு வரிகளின் முழுப்பொருளை அறியக்கூட வில்லை.35 அது போலவே, 'திருவேற்றாஞ் செய்பாவை' எனும் சொல்லாட்சி எதைக் குறிக்கிறது என்பதையும் அறியக்கூட வில்லை. 'செய்பாவை' என்பதற்குப் 'பதுமை', 'செய்யாள்' எனும் பொருள்களைப் பேரகராதி தந்தபோதும், திருவேற்றான் எனுஞ் சொல் எதைக் குறிக்கிறது என்பது அறியாமல் செய்பாவையின் பொருளை முழுமையாக உணர்தல் இயலாது.

இத்தகு இடர்ப்பாடுகளைக் கருத்தில் கொண்டால், இளங்கெளதமன் தரண்பை மூதூரில் அருகர் கோயில் ஒன்று எடுத்து, அங்குப் படையலிடவும் விளக்கேற்றவும் அமணன் காணி, சாத்தி வயக்கல் எனும் நிலத்துண்டுகளை ஒதுக்கி, மெழுக்குப்புறத்திற்கு மூன்று மா நிலம் அளித்து, வழிபடு வோனுக்கு அரைக்காணி நிலம் அளித்தமையை முதல் பணித் தொகுப்பாகவும் அண்ணல்வாயில் அறிவர் கோயில் முன்னால் கல்லால் மண்டகம் நிறுவி, அங்குக் கண்டோர் வியப்புறுமாறு உள்ளும் புறமும் அழகுசெய்து, அங்கிருந்த அனைத்தையும் நீக்கி, முந்து அரசர் வைத்திருந்த அறக்கட்டளைகளைச் செயற்படுத்தி, எழுத்துச் சிதைவால் இன்னதென அறியப்பட முடியாத நிலையில் உள்ள இரண்டினை நிறுவி, திருவேற்றான் செய்பாவை நெடிதூண் ஒருபுறம் நகரமைத்து, விளக்கிற்கு நெய்ப்புறமாக இடைவயல் அளித்து, வழிபடுவோருக்கு மாச்செய் நிலம் வழங்கியமையை இரண்டாம் பணித் தொகுப்பாகவும் கொள்ளலாம்.

செய்தி விளம்பலை அடுத்துக் காணப்படும் இறுதி அடிகள், 'சீர் மதிரை ஆசிரியன் அண்ணல் அகமண்டகம் புதுக்கி ஆங்கு அறிவர் கோயில் முகமண்டபம் எடுத்தான் முன்' என அமைந் துள்ளன. இப்பாடலில் வரும் அகமண்டபம், முகமண்டபம் எனும் சொற்கள் தற்போதுள்ள குடைவரை வளாகத்தின் எப்பகுதிகளைக் குறிக்கின்றன என்பதில் தெளிவு காண வேண்டியுள்ளது.

ஆனைமலை நரசிங்கர் குடைவரையில் காணப்படும் மாறஞ் சடையர் கல்வெட்டில்36 இடம்பெற்றுள்ள முகமண்டபம் என்ற சொல்லாட்சியும் நகரத்தார்மலைப் பழியிலி ஈசுவரம் குடைவரைக்கு முன்னுள்ள மண்டபத் தளத்தில் காணப்படும் நிருபதுங்கர் கல்வெட்டுக் குறிப்பிடும் முகமண்டபம் எனும் சொல்லாட்சியும்37 கருவறைக்கு முன்னுள்ள மண்டபத்தையே சுட்டுகின்றன. சீயமங்கலம் அவனிபாஜன பல்லவேசுவரம் குடைவரையில் காணப்படும் நந்திவர்மர் கல்வெட்டில் இடம் பெற்றுள்ள முகமண்டபம் என்ற சொல்லாட்சி குடைவரைக்கு முன்னுள்ள மண்டபத்தைக் குறிக்கிறது.38 இம்மூன்று கல்வெட்டு களும் அவை வெட்டப்பட்ட காலத்தில் இறையகத்தின் முதல் கட்டுமானமாக எது அமைந்ததோ, அதையே முகமண்டபம் என்று அழைக்கின்றன. எனில், சிற்றண்ணல்வாயிலில் இளங் கெளதமன் எடுத்த முகமண்டபம் குடைவரைக்கு முன் அமைந்த கட்டுமானமே எனத் தெளியலாம். இதை, அறிவர் கோயில் முன் முகமண்டபம் எடுத்தான் எனும் கெளதமன் கல்வெட்டின் இறுதி அடியும் 'அறிவர் கோயின் முன்னால் மண்டகம் கல்லால் இயற்றி' எனும் இடையடியும் உறுதிப்படுத்து தல் காண்க. அதனால், தற்போது இந்தியத் தொல்லியல் துறையால் அமைக்கப்பட்டுள்ள முன் மண்டபம் இருக்கும் இடத்திலேயே கெளதமனின் முகமண்டபம் அமைந்ததாகக் கொள்ளலாம்.

அகமண்டபம் என்ற சொல்வழக்கு இக்காலக் கல்வெட்டு களில் காணப்படாமையின், அச்சொல் குறிக்கும் இடத்தை அறிய வேண்டியுள்ளது. குடைவரை வளாகங்களில் கருவறைக்கு முன் இரண்டு மண்டபங்கள் இருந்தாலோ அல்லது ஒரே மண்டபம் இருவரிசைத் தூண்களால் இரண்டு பிரிவுகளாகப் பகுக்கப்பட் டிருந்தாலோ அவற்றுள் கருவறைக்கு முன்னுள்ள மண்டபத்தை அல்லது மண்டபப்பகுதியை அர்த்தமண்டபம் (உள்மண்டபம்) என்றும் அதற்கு முன்னுள்ள மண்டபத்தை அல்லது மண்டபப் பகுதியை முகமண்டபம் என்றும் கூறுவது மரபு. அம்மரபின் வழித் தற்போதுள்ள முகமண்டபத்தை அகமண்டபமாகக் கொள்வதில் தடையிருக்க முடியாது.

அகமண்டபத்தைப் புதுக்கி, இளங்கெளதமன் செய்த பணி களாக மண்டபச் சிற்பங்களையும் ஓவியங்களையும் கொள்ள லாம். இச்சிற்பங்களுக்கும் கருவறைச் சிற்பங்களுக்கும் இடையில் காணப்படும் வேறுபாடுகளும்39 'அண்ணல்வாயில் அறிவர் கோயின் முன்னால்' எனும் கல்வெட்டு அடியும் இளங்கெளத மன் காலத்தில் சிற்றண்ணல்வாயில் குடைவரையின் கருவறை சமண இறையகமாகவே இருந்தமையை உறுதிப்படுத்துகின்றன.

ஒரு கோயில் வளாகத்தில் கருவறைச் சிற்பங்களே முதன்மை யானவையாக அமையும். ஆனால், சிற்றண்ணல்வாயில் வளாகத் திலுள்ள முகமண்டபச் சிற்பங்கள் கருவறைச் சிற்பங்களினும் பெருமைக்குரிய நிலையில் சிறப்புடன் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இச்சிற்பங்கள் பெற்றிருக்கும் தள அமைப்பு, தூண் அணைவு, கூரையமைப்பு என்பனவற்றுள் ஒன்றுகூடக் கருவறைச் சிற்பங் களுக்கு அமையவில்லை. கருவறையிலுள்ள மூன்று சிற்பங் களின் செவிகளும் இயல்பான செவியமைப்பாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆனால், முகமண்டபச் சிற்பங்களும் ஓவிய இளைஞர்களும் நீளவளர்த்த செவிகளைப் பெற்றுள்ளனர். மண்டப, கருவறைச் சிற்பங்களின் சிற்பஅமைதியிலும் அவற் றிற்கு மேலுள்ள குடையமைப்பிலும் மிகுந்த வேறுபாட்டைக் காணமுடிகிறது. முகமண்டபச் சிற்பங்கள் நன்கு உருவாக்கப் பட்டனவாய் முழுமையும் செம்மையும் பொலியக் காட்சிதர, கருவறைச் சிற்பங்களில் அத்தகு நிறைவைக் காணக்கூடவில்லை.

அதனால், இளங்கெளதமன் திருப்பணி மேற்கொண்ட காலத்தில் சிற்றண்ணல்வாயில் குடைவரை சிற்பங்களுடனான கருவறையும் வெறுமையான முகமண்டபமும் கொண்டிருந்த தாகக் கொள்ளலாம். முகமண்டபத்தில் சிற்பங்கள் உருவாகவும் ஓவியங்கள் அமையவும் குடைவரை வளாகத்தின் முன் புதிய மண்டபம் ஒன்று எழவும் இளங்கெளதமன் திருப்பணி வழியமைத்தது.

இளங்கெளதமனுக்கு முன்பே அண்ணல்வாயிலில் அமைந் திருந்த இக்குடைவரை தொடக்கத்திலிருந்தே அறிவர் கோயிலாக இருந்ததா என்ற கேள்வியைக் கருவறையில் காணப்படும் சில அடையாளங்கள் எழுப்புகின்றன. தற்போதுள்ள கருவறைத் தரையில் காணப்படும் பொளிவு வேறுபாடுகள் இங்குத் தாய்ப் பாறையில் உருவான வேசர இலிங்கத்திருமேனி இருந்து அகற்றப்பட்டிருக்குமோ என்ற ஐயத்தைத் தருகின்றன. மதுரை மாவட்டம் குன்றத்தூர் மூன்றாம் குடைவரை, மலையக் கோயில் ஓக்காலீசுவரம், மேலைச்சேரி சிகாரி பல்லவேசுவரம்40 இவற்றின் கருவறைக் கூரைகளில் காணப்படும் தாமரைச் செதுக்கல் சிற்றண்ணல்வாயில் கருவறைக் கூரையிலும் இடம்பெற்றுள்ளமை இந்த ஐயத்தை உறுதிப்படுத்துகிறது.

எனில், சிற்றண்ணல்வாயிலில் காலத்தால் முற்பட்ட சைவக் குடைவரை ஒன்று இருந்து, அது பின்னாளில் அறிவர் கோயிலாக மாற்றப்பட்டிருக்கலாம். தமிழ்நாட்டில் சமணர் களின் தொடர் வாழிடங்களாக அடையாளப்படுத்தப்படும் பரங்குன்றம், யானைமலை இவ்விரண்டு இடங்களிலுமே சைவ, வைணவக் குடைவரைகள் உருவாகியுள்ளன. அது போலவே சிற்றண்ணல்வாயிலிலும் கி. பி. ஏழாம் நூற்றாண்டில் குடை வரை உருவாகி அது கி. பி. எட்டாம் நூற்றாண்டளவில் அறிவர் கோயிலாக மாற்றப்பட்டிருக்கலாம். இது போன்ற மாற்றங்கள் தமிழ்நாட்டில் நிகழ்ந்துள்ளமைக்கு நகரத்தார்மலைப் பதிணென் பூமி விண்ணகர் சிறந்த சான்றாக அமையும். இக்கருதுகோள் சரியானதாக அமையுமானால் சிற்றண்ணல்வாயில் கருவறைச் சிற்பங்களே தமிழ்நாட்டில் காணக் கிடைக்கும் காலத்தால் முற்பட்ட சமணச் சிற்பங்களாக அமையும்.

பிற கல்வெட்டுகள்

குடைவரை வளாகத்திற்கு வெளியிலுள்ள தென்புறப் பாறையின் சரிவில், 'விதிவலி, சுனக்குளம்' எனும் எழுத்துப் பொறிப்புகள் காணப்படுகின்றன. குடைவரை அமைந்துள்ள குன்றுத் தொடரின் கிழக்கு முகத்தில் காணப்படும் இயற்கை யான குகைத்தளத்தில் பல படுக்கைகள் வெட்டப்பட்டுள்ளன.41 தளத்தின் முன்புறத்தே உள்ள 2. 04 மீ. நீள, 1 மீ. அகலப் படுக்கை யின் மேற்கு விளிம்பை ஒட்டித் தொடங்கும் பழந் தமிழ்க் கல்வெட்டு படுக்கையின் வடக்குப் பகுதியில் உள்ள 20 செ. மீ. அகலத் தலையணையை அடுத்துத் தொடர்கிறது. 'எருமி நாடு குமுழ் ஊர் பிறந்த கவுடிஇ தென்கு சிறுபொசில் இளயர் செய்த அதிட்அனம்' என்று ஐராவதம் மகாதேவனால் படிக்கப் பட்டுள்ள இக்கல்வெட்டு கி. மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த தாகக் கருதப்படுகிறது.42

இப்படுக்கையின் விளிம்பில் காணப்படும் இரண்டு கல்வெட்டு களுள், 'காயவனூர்' எனத் தொடங்கும் முதல் கல்வெட்டு தொடர்ச்சியை இழந்துள்ளது. அதன் கீழுள்ள இரண்டாம் கல்வெட்டு காயவனூர்க் கட்டுளன்43 என அமைந்துள்ளது. மற்றொரு கல்வெட்டு 'திட்டைச் சாணன்' எனும் பெயரைத் தருகிறது. குகைத்தளத்தின் வெளிப்புறத்தே உள்ள பாறையில் இருந்து, 'எருக்காட்டூரு கட்டுளன்', 'கட்டுள' எனும் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.44

படுக்கைப்பகுதிகளில் இருந்து கண்டறியப்பட்டனவாக, 'தொழுக்குன்றத்துக் கடவுளன் திருநீலன்', 'கடவுளன் திருநாவலன்', 'ஸ்ரீபூரணசந்திரன்', 'நியத்தகரன்', 'பட்டக்காளி', 'திருச்சாத்தன்', 'திருப்பூரணன்' எனும் பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.45 இப்படுக்கைகளுக்குச் செல்லும் வழியில் உள்ள புடவு ஒன்றில் இருந்து, 'சம்பொய்கை பேடு தைத்த கல்', 'பெந்தோடன்', 'நக்கன்', 'பொய்கை', 'கொற்றை காய்வன்', 'சம்பொகல்', 'சாத்தன்', 'காதன்' 'சிறுசெண்ணன்' எனும் ஐந்தாம் நூற்றாண்டு எழுத்தமைதியில் உள்ள வட்டெழுத்துக் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.46

குறிப்புகள்

29. சு. இராசவேலும் அ. கி. சேஷாத்திரியும் இந்த ஓவியம் இடத்தூணின் எட்டுப் பட்டை கொண்ட இடைப்பகுதியில் இருப்பதாகக் கூறுகின்றனர். மு. கு. நூல், ப. 149.
30. SII 17: 399, 400; டி. என். இராமச்சந்திரன், மு. கு. நூல், ப. 38; சிதைந்துள்ள இக்கல்வெட்டுகளால் இப்பகுதியில் மீண்டும் ஒரு புதுக்குப் பணி நிகழ்ந்ததை மட்டுமே அறியமுடிகிறது.
31. டி. என். இராமச்சந்திரன் 'ஸ்ரீதரக' என்று படித்துள்ளார். மு. கு. நூல், ப. 37.
32. டி. என். இராமச்சந்திரன் 'ஸ்ரீமணிக சித்தன்' என்றும் பி. ஆர். சீனிவாசன் 'ஸ்ரீஉலோகாதித்தன்' என்றும் படித்துள்ளனர். மு. கு. நூல்கள், பக். 37, 57. பி. ஆர். சீனிவாசன் தம் வாசிப்பில் உள்ள முதல் மூன்று எழுத்துக்களையும் ஐயத்திற்குரியன வாகவே குறிப்பிட்டுள்ளார். ஆனால், அவருடைய வாசிப்புச் சரியாகவே அமைந்துள்ளது.
33. இவ்விரண்டு கல்வெட்டுகளுள் திருவாசிரியன் கல்வெட்டு முகமண்டபத்தின் வடசுவரிலுள்ள சமணச் சிற்பத்தைக் குறிப்பதாகவும் இவ்வாசிரியர் மதுரை இளங்கெளதமன் என்றும் டி. என். இராமச்சந்திரன், கே. வி. செளந்ததரராஜன், இரா. நாகசாமி ஆகியோர் எழுதியுள்ளனர். மு. கு. நூல்கள், பக். 37, 97, 89. ஆனால், இம்மூவருமே தென்புறத் தூணிலுள்ள உலோகாதித்தர் கல்வெட்டு யாரைக் குறிக்கிறது என்பது பற்றி ஏதும் கூறவில்லை. வடக்குத் தூண் கல்வெட்டு வட சுவர்ச் சிற்பத்தைக் குறிக்கிறதென்றால், அதே காலகட்டத்தில் தெற்குத் தூணில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு தெற்குச் சுவர்ச் சிற்பத்தைத்தானே குறிக்கமுடியும். இங்கே தெற்குச் சுவர்ச் சிற்பம் பார்சுவநாதராக அமைந்துவிட்டதால், அவரை உலோகாதித்தராக இவர்களால் அடையாளப்படுத்தக் கூடவில்லை. உருவச் சிற்பங்களை ஊகங்களின் அடிப்படை யில் அடையாளப்படுத்தும் போக்கு வரலாற்றின் உண்மைத் தன்மையைச் சிதைத்துவிடும்.
34. மு. கு. நூல், பக். 89 - 90.
35. ஆதிநாதரின் சுதை பூசப்பட்ட சிற்பமாகக் கொள்கிறார் டி. என். இராமச்சந்திரன். மு. கு. நூல், ப. 37; இரா. நாகசாமி அவரைப் பின்பற்றியுள்ளார். மு. கு. நூல், ப. 91.
36. SII 14: 2.
37. SII 12: 63.
38. மு. நளினி, இரா. கலைக்கோவன், மகேந்திரர் குடைவரைகள், ப. 113.
39. கருவறைச் சிற்பங்கள் மூன்றும் புறமண்டபச் சிற்பங்களையே ஒத்திருப்பதால் அவை அகமண்டபம் புதுப்பிக்கப்பட்ட போது செதுக்கப்பட்டவையாய் இருக்கலாம் என்று ஓரிடத்தில் எழுதும் இரா. நாகசாமி, மற்றோர் இடத்தில் புதுப்பிக்கப்பட்ட பகுதி கருவறை அன்று என்றும் தெரிவிக்கி றார். மு. கு. நூல், ப. 91.
40. இம்மூன்று கோயில்களிலுமே தாய்ப்பாறை இலிங்கங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
41. இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட சு. இராசவேலு எழுத்துப் பொறிப்புகளற்ற படுக்கைகள் குன்றின் பல்வேறு பகுதிகளிலுள்ள குகைத்தளங்களில் காணப்படுவதாக எழுதியுள்ளார். ஆவணம் 6, ப. 12.
42. ஐராவதம் மகாதேவன், Early Tamil Epigraphy, ப. 385. சு. இராசவேல், 'எருமி நாட்டு குமுழ் ஊர் பிறந்த காவுதிஈ தென்கு சிறுபோசில் இளையர் செய்த அதிடஅனம்' என்று வாசித்திருப்பதுடன், கல்வெட்டின் காலத்தைக் கி. மு. மூன்றாம் நூற்றாண்டாகக் குறித்துள்ளார். Re-look on Sittannavasal- A Jaina Centre of Tamilnadu, Sripushpanjali Vol. 1, pp. 139-140.
43. டி.என். இராமசச்சந்திரன், மு. கு. நூல், ப. 31.
44. சு. இராசவேலு, ஆவணம் 6, ப. 9.
45. டி. என். இராமச்சந்திரன், மு. கு . நூல், ப. 31.
46. ஐராவதம் மகாதேவன், மு. கு. நூல், பக். 451- 458; சு. இராச வேலு, ஆவணம் 6, ப. 9-12.
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.