http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 8
இதழ் 8 [ ஃபிப்ரவரி 15 - மார்ச் 14, 2005 ] இந்த இதழில்.. In this Issue.. |
திருவலஞ்சுழி க்ஷேத்ரபாலர்
கல்வெட்டுகள் கோயிலின் எந்த பகுதியில் இருக்கும் என்று யாரேனும் கேட்டால், விமானத்தின் அதிஷ்டானப்பகுதியிலும், சுவர் பகுதியிலும் கோபுரங்களிலும் இருக்கும் என்பது இன்றைய பதிலாகும். பழங்காலச் சிற்பங்களை எங்கு காண முடுயும் என்பது கேள்வியாகின் அதற்கான பதில், கோயில் கருவறைகள் என்று குழந்தை கூட கூறிவிடும். இதே கேள்விகளை அடுத்த நூற்றாண்டில் கேட்டால் அதற்கான பதில்கள், "கல்வெட்டுகள் நடைபாதையில் தளமாக சிதைந்த நிலையில் காணப்படும்" என்றும் "பண்டைக்காலச் சிற்பங்கள் ஒரு வேளை அருங்காட்சியகங்களில் காணக்கிடைக்கலாம்" என்றுதான் இருக்கும். சென்ற மாதத்தில் நாங்கள் சுமார் 10 கோயில்களுக்குச் சென்றிருப்போம். அவற்றுள் மத்தியத் தொல்லியல் பரப்பாய்வுத்துறையின் கட்டுப்பாட்டிலிருக்கும் கோயில்களைத் தவிர மற்ற இடங்களில் நிகழ்ந்திருக்கும் சிதைவுகள் எங்களை உறுத்திய வண்ணம் இருந்தன. திருவெள்ளறை புண்டரீகாக்ஷ்ப் பெருமாள் கோயிலிலும், மணிமங்கலத்திலிருக்கும் சிவன் கோயிலிலும், காஞ்சீபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலிலும் கல்வெட்டுகள் நடைபாதையாகப் போடப்பட்டு, தினமும் ஆயிரக்கணக்கானவர்களிடம் மிதி வாங்கும் அவல நிலையில் இருக்கின்றன. திருவெள்ளறையில் இருக்கும் குடைவரைக் கோயிலில் தண்ணீர் போக வழி செய்ய வேண்டி பராந்தக சோழரின் கல்வெட்டைப் பதம் பார்த்திருப்பதும், மணிமங்கலத்தில் இருக்கும் பெருமாள் கோயிலில் இராஜராஜன் காலக் கல்வெட்டின் மேல் இரும்புக் கதவைப் பொருத்த வேண்டி ஓட்டை போட்டிருப்பதும் எம் கண்களில் இரத்தக் கண்ணீரை வரவழைத்தன. இந்த கொடுமைகளுக்கெல்லாம் மகுடம் வைத்தது போன்ற ஒரு அநியாயம், திருவலஞ்சுழி கோயிலில் நடந்துள்ளது. திருவலஞ்சுழி ஷேத்திர பாலர் திருக்கோயில் (சிதைவுற்ற முந்தைய நிலையில்) - அமரர் சில்பியின் ஓவியம் காவிரி ஆறு வலப்பக்கமாய் சுழன்று திரும்புவதால் திருவலஞ்சுழி என்று பெயர் பெற்ற ஊரில், இன்று பிரபலமாக இருக்கும் ஸ்வேத விநாயகருக்குத் தெற்கே, க்ஷேத்ரபாலர் கோயில் அமைந்திருந்தது. 'அமைந்திருந்தது' என்னும் இறந்த காலப் பிரயோகம் உங்களைக் குழப்பத்தில் ஆழ்த்தலாம். இது ஆசிரியரின் தட்டச்சுப் பிழையோ கவனக் குறைவோ அல்ல. சில மாதங்களுக்கு முன் முள்ளும் புதரும் சூழத் தனது கருவறையில் குடியிருந்த க்ஷேத்ரபாலர் இன்று தஞ்சையில் யாருமே சீந்தாத அருங்காட்சியகமான, இராஜராஜன் மணிமண்டபத்தில் இருக்கும் அருங்காட்சியகத்தில் அனாதையாகக் கிடக்கிறார். அவர் இருந்த கோயிலின் கற்கள், திருப்பணி எங்கிற பெயரில், அக்கு வேறு ஆணி வேறாகப் பிரிக்கப்பட்டு இருக்கின்றன. பிரித்தவர்கள் மீண்டும் இக்கற்களை அடுக்கும் எண்ணத்தில் செய்யாததால் வரிசையைக் குறித்துக் கொள்ளாமல் விட்டிருக்கின்றனர். இதே இடத்தில் வேறொரு கட்டிடம் செங்கல்லும் சிமெண்டும் கொண்டு கட்டப்படுமெனின், ஆயிரம் வருடங்களுக்கு மேலாக சோழர் கால நிகழ்வுகளைத் தாங்கி நின்ற கற்களை நடைபாதையில் தரையாக வேயும் அபாயம் நமக்கு வெகு அருகில் இருக்கிறது. இவ்வபாயம் நிகழ்வதன் மூலம் பல இராஜராஜர் காலத்து கல்வெட்டுகளையும் இராஜேந்திரரின் கல்வெட்டுகளையும் இழந்துவிடுவோம். முன்பே படியெடுக்கப்பட்டிருக்கும் இக்கல்வெட்டுகளில் பல அரிய தகவல்கள் பொதிந்திருக்கிறது. இராஜராஜரின் குடும்பத்தைப் பற்றிய தகவல்களும், இராஜேந்திரரும் தந்திசக்திவிடங்கியும் இராஜராஜன் மறைந்த ஒரு வருடம் கழித்து நிகழ்த்திய கிரியைகளைப் பற்றிய கல்வெட்டும், மாமன்னர் இராஜராஜரின் நினைவாய் அவரது மகன் இங்கிருந்த க்ஷேத்ரபாலருக்கு பொற் பூக்களை அளித்த தகவலைப் பகரும் கல்வெட்டும் இங்கிருப்பதாக வரலாற்றாய்வாளர் முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியம் கூறுகிறார். சில மாதங்கள் முன்பு, இக்கோயிலுக்கு முனைவர் கலைக்கோவனுடன் சென்றிருந்தோம். ஏற்கெனவே பதிவாகியிருக்கும் கல்வெட்டுகளைத் தவிர பல புதிய கல்வெட்டுகள் இக்கோயிலில் கிடைக்கும் வாய்ப்பிருப்பதாக அவர் கூறினார். சென்ற வாரம் திருவலஞ்சுழிக்குச் சென்றிருந்த நம் நண்பர் ஒருவர் அந்த மகிழ்ச்சியான செய்தியைக் கூறினார். கங்கைகொண்ட சோழபுரத்தைச் சீரமைத்த அதே கட்டுமானப் பணியாளர்களிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும், அவர்கள் இதன் வரலாற்று முக்கியத்துவத்தை உணர ஆரம்பித்திருப்பதாகவும் கூறினார். எத்தனையோ இழந்த செல்வங்கள் போல் இத்திருமுன்னின் கதியும் ஆகாமல் இருக்கும் என்ற நம்பிக்கை இதன் மூலம் பிறக்கிறது. இந்த ஒரு கோயிலைப் பாதுகாக்கும் முயற்சி ஓரளவு வெற்றி பெற்று விட்டது. இதைப்போல இன்னும் எத்தனையோ தளிகள் இதைவிடச் சிதிலமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனவே! உலகம் முழுவதையும் இணைக்கும் இணையத்தில் இச்செய்தியைப் பகிர்தலின் மூலம், உலகத் தமிழர்களின் ஒருமித்த குரலை இவ்வநியாயத்துக்கெதிராய் ஒலிக்க வைப்பதே இக்கட்டுரையின் நோக்கம். இந்திய சரித்திரத்தின் முக்கியமான நிகழ்வுகளைத் தாங்கி நிற்கும் நம் பழங்கோயில்களைத் தொல்பொருள் ஆய்வுத்துறை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருதல் அவசியம். அப்படிச் செய்வது முடியாத பட்சத்தில், பல இடிந்த கோயில்களைச் சிறப்பாக சீரமைத்திருக்கும் தொல்பொருள் ஆய்வுத்துறை இக்கோயில்களை முன்பிருந்தபடி மீட்கும் பணியையாவது செய்ய வேண்டும். நமது இந்த முயற்சிக்குச் செவிசாய்க்க இந்து அறநிலையத் துறையையும், தமிழ்நாடு மாநில அரசையும், தொல்பொருள் ஆய்வுத் துறையையும் கேட்டுக் கொள்வோம். வரலாற்றைக் காக்க குரல் கொடுத்து கீழுள்ள முகவரிகளுக்கு கடிதம் எழுத வேண்டி இணையத் தமிழர் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். -ஆசிரியர் குழு 1. The Commissionar, HR & C (Hindu Relegeous Endowments & Charities) Board, 119, Nungambakkam High Road, Chennai - 600 034 2. The Chief Secretary to the Govt of Tamilnadu, Fort. St. George, Chennai 600 009 3.The Director, Archaelogical Survey of India, Fort Museums, Fort St.George, Chennai 600 009 this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |