http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 8
இதழ் 8 [ ஃபிப்ரவரி 15 - மார்ச் 14, 2005 ] இந்த இதழில்.. In this Issue.. |
வணக்கம்.
தஞ்சையில் ஜனவரி 30, 2005 அன்று நடைபெற்ற முப்பெரும் விழா மாபெரும் வெற்றிவிழாவாக அமைந்ததற்கு இறையருளும் நல்லோர் ஆசிகளும் நேயர்களின் மகத்தான ஆதரவுமே காரணம் என்றால் அது மிகையில்லை. விழாவிற்கு சில நாட்களுக்கு முன்னதாக முன்னணி செய்தித்தாள்களான தி இந்து மற்றும் தினமணி வரலாறு டாட் காம் பற்றியும் நமது குழுவின் நடவடிக்கைகள் பற்றியும் ஜனவரி30ம் தேதியன்று வெளியிடப்படப்போகும் சிறப்பிதழ் பற்றியும் செய்திகளை வெளியிட்டு நமது பணியை கெளரவித்தன. இந்தச் செய்திகளை தொகுத்து தனிக் கட்டுரையாக இதே இதழில் வெளியிட்டுள்ளோம். விழா சோழ நாட்டில் நித்தவினோத* வளநாட்டில் தஞ்சாவூர் கூற்றத்தில் வரலாறு கண்டிராத பேரரசர் இராஜராஜர் எடுப்பித்த இராஜராஜீஸ்வர திருக்கற்றளி வளாகத்திலேயே நடைபெற்றது நமது பாக்கியம். இதற்கு அனுமதியளித்து உரிய ஏற்பாடுகளை செவ்வனே செய்துகொடுத்த மத்திய தொல்லியல் அளவீட்டுத் துறைக்கும்(Archaeological Survey of India) அதன் தென்னிந்தியத் தலைவர் திரு.தியாக.சத்தியமூர்த்தி அவர்களுக்கும் விழாவிற்கு வந்து சிறப்பித்த துறையின் கல்வெட்டு ஆய்வாளர் டாக்டர்.கா.இராஜவேலு மற்றும் திருக்கற்றளியின் முதுநிலை அலுவலர் திரு.பரமநாதன் அவர்களுக்கும் நமது நெஞ்சம் நிறைந்த நன்றி உரியது. * இராஜராஜரின் ஒரு பட்டப்பெயர் நித்தவினோதன் என்பதாகும் விழாவிற்கு வந்திருந்து நம்மை சிறப்பித்து மனமார்ந்த வாழ்த்துரை வழங்கிய தஞ்சை ஆய்வாளர் திரு.குடவாயில் பாலசுப்பிரமணியத்திற்கு வார்த்தைகளில் நன்றி சொல்வது கடினம். நமது குழுவின்மேல் மிகுந்த அன்பும் பற்றும் கொண்ட இந்தப் பெரியவர் விழா முடிந்ததும் தனியே நம்மை சந்தித்து பொழிவின் அருமையையும் நமது குழுவின் முயற்சியையும் வாழ்த்தியது நமக்குக் கிடைத்த பெரும் பேறு. விழா ஏற்பாடுகளில் நம்முடன் தோள் கொடுத்து உதவிய பொன்னியின் செல்வன் குழு நண்பர்கள் திரு.பாலாஜி நல்லதம்பி, திரு.சதீஷ் அருண், திரு.சசி மற்றும் திரு.சங்கரனுக்கு நன்றிக் கடப்பாடுடையவர்கள் ஆகின்றோம். காலை 9.30 மணிக்கே விழா நடக்கப்போகும் அரங்கம் களை கட்டிவிட்டது. ஆய்வாளர்கள் ஒரு பக்கம், பத்திரிக்கையாளர்கள் ஒரு பக்கம், வரலாற்றின்பால் காதல் கொண்டு நெடுந்தொலைவு கடந்து வந்திருந்த நல்நெஞ்சங்கள் ஒரு பக்கமென கூட்டம் சூழ ஆரம்பித்துவிட்டது. சரியாக 10.10 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்தினை திருமதி.இரா.இலலிதாம்பாள் மற்றும் செல்வி மு.லாவண்யா பாட விழா தொடங்கியது. திரு.கிருபாசங்கர் வந்திருப்போரை வரவேற்று வெண்பா பாடினார். பெண் தெய்வ வழிபாடு புத்தகத்தை திரு.பரமநாதன் வெளியிட, திரு.சுந்தர் பரத்வாஜ் பெற்றுக்கொள்கிறார் டாக்டர் இரா.கலைக்கோவனின் "பெண் தெய்வ வழிபாடு - தோற்றமும் வளர்ச்சியும்" என்னும் ஆய்வுநூலை தொல்லியல் அலுவலர் திரு.பரமநாதன் வெளியிட முதல் பிரதிகளை கட்டுமானப் பொறியாளர் திரு.சுந்தர் பரத்வாஜ், மருத்துவர்கள் திரு.சு.நரேந்திரன் மற்றும் திரு.சு.பழனியாண்டி, செல்வி இரா.இலலிதாம்பாள், புலவர் வெ.இரா.துரைசாமி, திரு.இராம.சுப்பிரமணியன் மற்றும் முனைவர் அகிலா பெற்றுக் கொண்டனர். நூல் அறிமுக உரை நிகழ்த்துகிறார் முனைவர் இரா.கலைக்கோவன் இதனைத் தொடர்ந்து நூல் அறிமுக உரை நிகழ்த்திய டாக்டர் இரா.கலைக்கோவன், இந்த நூல் வெளியான வரலாற்றையும் அதற்குத் துணைநின்றவர்களையும் முதல் படி வாங்க அழைக்கப்பட்டிருந்த பெரியோரையும் வாழ்த்திப் பேசினார். அவருடைய முழு ஏற்புரை இந்த மாத இதழிலேயே வெளியாகியுள்ளது. வரலாறு டாட் காமின் வரலாற்றை முன்வைக்கும் திரு.ச.இராமசந்திரன் இதற்கடுத்தபடியாக வரலாறு டாட் காம் மாத இதழ் துவங்கப்பட்ட கதையை திரு.இராமசந்திரன் நெகிழ்வுடன் நினைவு கூர்ந்தார். பொன்னியின் செல்வன் யாஹூ குழுமத்திலிருந்து(http://groups.yahoo.com/group/ponniyinselvan) தொடங்கி படிப்படியாக வரலாற்று ஆர்வம் வளர்ந்ததையும் குழுவின் முதல் சரித்திர யாத்திரையையும் ஆய்வாளர்களின் சந்திப்பையும் - தொடர்ந்த வளர்ச்சியின் வெளிப்பாடாக வரலாறு டாட் காம் உருவானதையும் அவர் பகிர்ந்துகொண்டார். வரலாறு டாட் காமின் இராஜராஜீஸ்வரம் சிறப்பிதழை வெளியிடும் தொல்லியல் அளவீட்டுத்துறையின் கல்வெட்டாய்வாளர் டாக்டர் கு.இராஜவேலு மாதந்தோறும் வெளியாகும் இந்த இதழின் "இராஜராஜீஸ்வரம் சிறப்பிதழ்" டாக்டர் இராஜவேலு அவர்களால் வெளியிடப்பட, முதல் பிரதியை பச்சையப்பன் கல்லூரிப் பேராசிரியர்.மாரா.அரசுவும் டாக்டர் அர.அகிலாவும் பெற்றுக்கொண்டனர். சாதாரண காகித இதழ் வெளியீடு என்றால் ரிப்பன் வெட்டி வெளியிட்டு விடலாம்... இணைய இதழாயிற்றே ! இதற்காக அதற்கு முந்தையநாள் இரவு விடியற்காலை நான்கு மணிவரை விழித்திருந்து நமது தொழில்நுட்ப வல்லுனர்கள் கிருபாசங்கர் மற்றும் கமலக்கண்ணன் ஒரு ஏற்பாட்டைச் செய்தார்கள். இதன்படி அரங்கில் மொபைல் செல்போன் மூலம் இணையம் பெறப்பட்டு - திரு இராஜவேலு ஒரு பட்டனை கிளிக் செய்ய, பின்புலத்தில் சில மென்பொருள் சாகசங்கள் நிகழ்ந்து புதிய இதழ் இணையத்தில் - அந்தக் கணத்தில் - வெளியானது. டாக்டர் இராஜவேலுவும் பேராசிரியர் அரசும் நமது முயற்சிகளை வாழ்த்தி உரைநிகழ்த்தினர். டாக்டர் கூ.இரா.சீனிவாசன் அறக்கட்டளைப் பொழிவை நிகழ்த்தும் திரு.சே.கோகுல் நிகழ்ச்சியின் அடுத்த கட்டமாக டாக்டர் ஐராவதம் மகாதேவன் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட டாக்டர் கூ.இரா.சீனிவாசன் அறக்கட்டளைப் பொழிவை அறிமுகம் செய்து உரை நிகழ்த்தினார் டாக்டர் கலைக்கோவன். "பழங்கால ஓவியங்களின் பதிவும் மீட்டுருவாக்கமும் - சிக்கல்கள் / தீர்வுகள்" என்ற தலைப்பில் பொழிவு நிகழ்த்திய நமது குழுவின் சே.கோகுல் நவீன கணிணித் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் போட்டோக் கலை பழங்காலக் கலைகளின் பதிவாக்கத்திற்கும் மீட்டுருவாக்கத்திற்கும் எந்த அளவிற்குப் பயன்படும் என்பதை தகுந்த உதாரணங்களோடு தெளிவாக விளக்கினார். இவரது பொழிவு வந்திருந்த அறிஞர்கள்/ நேயர்கள் அனைவரின் பாராட்டையும் பெற்றது. பொழிவு முழுமையும் சென்ற இதழான "இராஜராஜீஸ்வரம் சிறப்பிதழில்" வெளியாகியுள்ளது. பொழிவைப் பற்றி நாளிதழ் வெளியிட்ட செய்தி இந்த மாத இதழில் நாளிதழ்களில் வரலாறு டாட் காம் பகுதியில் வெளியாகியுள்ளது. நிகழ்ச்சியில் சேகர் பதிப்பக உரிமையாளர் திரு.வெள்ளையாம்பட்டு சுந்தரம் மற்றும் ஜோதி பதிப்பகத்தின் உரிமையாளர் திரு.இரா.ஞானசேகரன் பாராட்டப் பெற்றனர். டாக்டர் குடவாயில் வாழத்துரை நிகழ்த்த டாக்டர் மு.நளினி நன்றியுரை நவின்றார். விழா நிகழ்வுகளை மேற்கூறியவாறு சொல்லி முடித்துவிடலாம். ஆனால் இந்த விழா நமக்குள் ஏற்படுத்திய உணர்வுகளை வார்த்தைகளில் விவரிப்பது கடினம். வரலாற்றில் ஒரு அடிகூட சரியாக இன்னமும் எடுத்துவைக்காத நமது கன்னி முயற்சியான வரலாறு டாட் காம் பெரியோரின் / ஆய்வாளர்களின் மனமார்ந்த பாராட்டுதல்களையும் ஆதரவையும் ஆசிகளையும் பெற்றுப் பூரித்து நிற்கிறது. நாளிதழ்களில் நமது இதழ் பற்றி வெளியான செய்திகள் தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலகில் தமிழர் வாழும் இடமெங்கும் பரவலானதொரு வாசகர் வட்டத்தை நமக்குப் பெற்றுத் தந்திருக்கின்றன. வரலாறு கற்கப் புகுந்த நாம் நமது தேடலையும் கற்றலையும் மற்ற ஆர்வலருடன் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்கிற நோக்கத்தோடு துவங்கப்பட்டது இந்த மாத இதழ். அந்த நல்நோக்கத்திற்கு கிடைத்த அங்கீகாரமாகவே நமக்குக் கிடைத்த பாராட்டுக்களை எடுத்துக் கொள்கிறோம். வரலாறு துவங்கப்பட்ட ஆகஸ்ட் 15, 2004 நாளன்று பொங்கிய மகிழ்ச்சி ஒரு விதமானது என்றால் அதற்கு இப்போது கிடைத்துள்ள அங்கீகாரம் கொடுக்கும் மகிழ்ச்சியும் பெருமிதமும் வேறுவிதமானது. "ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனை சான்றோன் எனக்கேட்ட தாய்" என்னும் குறள் வாக்கின்படி நமது முயற்சி நம்மை பெருமிதத்திற்குள்ளாக்கிவிட்டது. இந்த விழாவும் அது சார்ந்த நிகழ்ச்சிகளும் நமது அடிப்படை நோக்கங்களுக்கு உரம் சேர்ந்துள்ளன. நல்லோர் சுற்றம் நம்மீது படர்ந்துள்ளது என்கிற நம்பிக்கை வந்துவிட்டது. பொறுப்புக்கள் முன்னிலும் அதிகமாகிவிட்டன. மேலும் சிறப்பான படைப்புக்களை வழங்கவேண்டும், வரலாற்று வளர்ச்சிக்கு நம்மால் இயன்றதைச் செய்யவேண்டும் என்கிற உத்வேகம் இதயத்தில் குடிகொண்டுவிட்டது. இறையருளும் நல்லோர் ஆதரவும் இருப்பின் இயலாததும் உண்டோ ? வணக்கங்களுடன் ஆசிரியர் குழுthis is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |