http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 8
இதழ் 8 [ ஃபிப்ரவரி 15 - மார்ச் 14, 2005 ] இந்த இதழில்.. In this Issue.. |
தொடர்:
கட்டிடக்கலை ஆய்வு
கபோதபந்தத் தாங்குதளம் என்னடா இது? சென்ற இதழ் வரை சிகரம், ஸ்தூபி என்று மேல்நோக்கிச் சென்று விட்டு, திடீரென்று தாங்குதளத்தின் மீது பாய்கிறானே என்று பார்க்கிறீர்களா? ஸ்தூபியுடன்தான் விமானம் முடிந்து விடுகிறதே! ஆகவே, இதுவரை சொன்னவற்றில் விட்டுப்போனவற்றின் தொடர்ச்சியை இனிமேல் காணலாம். இப்போது உங்களுக்குக் கபோதம் என்றால் என்னவென்று தெரியும். மழை நீர் வழிந்தோடுவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் Sun shade போன்றது. பாதபந்த அல்லது பத்மபந்தத் தாங்குதளங்களில் பட்டிகை இருக்கவேண்டிய இடத்தில் கபோதம் இருந்தாலோ அல்லது பிரதிபந்தத் தாங்குதளத்தில் இருக்கும் பிரதிவரிக்குக் கீழே கபோதம் இருந்தாலோ அது கபோதபந்தத் தாங்குதளம். இதைப் பிரதிபந்தம் மற்றும் பத்மபந்தத் தாங்குதளங்களில் வளர்நிலை என்கிறார் முனைவர். கலைக்கோவன் (அத்யந்தகாமம், பக் 22). கூரை உறுப்பான கபோதம் ஏன் தாங்குதளத்தில் வருகிறது? நம் சிற்பிகளின் கற்பனைக் குதிரைகளின் ஓட்டத்திற்குத்தான் எல்லையே இல்லையே! அவ்வப்போது கண்டபாதங்களில் சிற்பங்களை வடிக்கச் சிற்பி எண்ணலாம். அப்போது சிற்பங்களுடனும் பாதங்களுடனும் கூடிய தாங்குதளம் கோட்டங்களையும் அரைத்தூண்களையும் கொண்ட ஒரு சுவரைப்போலக் காட்சியளிக்கும். சுவர் என்று ஒன்று இருந்தால் அதற்குக் கூரை என்ற ஒன்று தேவைதானே! இல்லாவிடில் வெறுமையாகத் தெரியுமே! அந்த அழகுணர்ச்சிக்காக அமைக்கப்படுவதுதான் கபோதம். இது என்னுடைய ஊகம். ஆகமங்களில் அமைப்பு மட்டுமே விளக்கப்பட்டிருக்கும். இதுதான். இப்படித்தான். என்று இருக்கும். ஏன்? எதற்கு? எப்படி? என்பன இருக்காது. சரி, கூரை உறுப்புகளில் கபோதம் மட்டும் இருந்தால் போதுமா? கூரையாகி விடுமா? மற்ற கூரையுறுப்புகளான வாஜனம், வலபி மற்றும் பூமிதேசம் ஆகியவை என்னவாயின? சில இடங்களில் இவையும் இருக்கும். சிற்பியின் கற்பனைத் திறனுக்கேற்றவாறு, பட்டிகைக்குக் கீழுள்ள கம்பு வாஜனமாகவும், கபோதத்தின் உட்பகுதி வலபியாகவும் மாறியிருக்கும். சில சமயம் இவ்வலபியில் தாமரைவரியோ பூதவரியோ இடம்பெற்றிருக்கும். பட்டிகைக்கு மேலிருக்க வேண்டிய மேற்கம்பு (உபரிகம்பு எனவும் கூறலாம்) பூமிதேசமாக உருப்பெற்றிருக்கும். அதில் யாளிவரியும் இருக்கும். இதை வைத்துக் காலத்தைக் கணிப்பது சற்றுக் கடினம்தான். ஏனெனில் தொடக்க காலக் கற்றளிகளில் ஒன்றான அத்யந்தகாமப் பல்லவேசுவர கிருஹத்திலேயே (தர்மராஜ ரதம்) இவ்வகைத் தாங்குதளம் இடம்பெறத் தொடங்கி விடுகிறது. ஆனால் மகேந்திரர் அமைத்த குடைவரைகளில் இத்தகைய தாங்குதளம் காணப்படவில்லை. வர்க்கபேதம் பத்திகளாகப் பிரிக்கப்பட்ட ஒரு தாங்குதளத்தின் ஒவ்வொரு பத்தியும் ஒவ்வொரு வகைத் தாங்குதளத்தைக் கொண்டிருந்தால் அது வர்க்கபேதமாகும். வர்க்கபேதங்களில் எல்லாத் தாங்குதளங்களும் கபோதபந்தமாகவே இருக்கும் என்று சொல்ல முடியாவிட்டாலும் பெரும்பாலும் நடுப்பத்தி கபோதபந்தத்தையே கொண்டிருக்கும். தாம்பரம் அருகிலுள்ள மாடம்பாக்கம் தேனுபுரீசுவரர் ஆலயத்தின் தாங்குதளத்தைப் பாருங்கள். |