http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 91
இதழ் 91 [ ஜனவரி 2013 ] இந்த இதழில்.. In this Issue.. |
தொடர்:
திரும்பிப் பார்க்கிறோம்
அன்புள்ள வாருணி, சென்ற இதழில் வள்ளுவர் கோட்டம், இராமாயணத் தொடர் சிற்பங்கள் குறித்து வெளியாகியிருந்த கட்டுரைகள் மகிழ்வளித்தன. கோகுலின் கட்டுரையில் இடம்பெற்றிருந்த 'Treatment' என்ற சொல்லாட்சியைத் தமிழ்நாட்டுச் சிற்பிகள் காலங்காலமாய்க் கையாண்டிருக்கும் முறை கண்டு பலமுறை வியந்திருக்கிறேன். கலை வரலாற்று ஆய்வாளர்கள் அதிகம் தொட்டிராத இது பற்றி வாய்ப்பமையும்போது பேசுவோம். சென்ற இதழில் வெளியான நண்பர் ஸ்ரீதரனின் கட்டுரை மூன்று அருமையான பதிவுகளைக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் கணக்கற்ற கவரிப்பெண்கள், கவரியேந்திய ஆடவர்களின் சிற்பங்கள் காணக் கிடைத்திருப்பினும் நான் அறிந்தவரையில் பெயர்ப்பதிவுடன் கவரிப்பிணாக்களின் சிற்பங்கள் வரலாற்று வெளிச்சத்திற்கு வந்ததாகத் தகவல் இல்லை. முதல்முறையாக இந்தத் திருக்கோயிலில்தான் கவரிப்பெண்கள் அடையாளப்பட்டுள்ளனர். நண்பர் ராம் ஒரு கட்டுரையில் குறித்திருந்தாற் போலத் தமிழ்நாட்டுக் கோயில்களில் பலவகையான தோலிசைக் கருவிகளின் சிற்பங்கள் கிடைத்தபோதும் இது மத்தளம், இது தண்ணுமை, இது பறை என உறுதிபடச் சுட்டுமாறு பெயர்ப்பதிவுகள் அமையவில்லை. இக்கோயிலில் முதல் முறையாக ஒரு தோல் கருவி, 'மத்தளம்' என்ற பெயருடன் காட்சிக்குக் கிடைக்கிறது. இனி, எந்தக் கோயிலிலும் மத்தளத்தைத் தனித்து அடையாளப்படுத்த முடியும். இந்தக் கோயில் தூண் ஒன்றின் தொங்கலில் காணப்படும் ஆடற்பெண்களின் சிற்பங்கள் அற்புதமானவை. முதற் பராந்தக சோழர் காலக் கோயில்கள் சிலவற்றில் காணப்படும் ஆடற்சிற்பங்களை அவை ஒத்துள்ளன. பராந்தகர் காலக் கோயில்களைத் தேடித்தேடி ஆராய்ந்து வரும் நண்பர் சீதாராமனுக்குத் தொலைபேசிக் கோயிலைப் பார்வையிடுமாறு கூறினேன். அவர் 289 ஒளிப்படங்களுடன் கோயிலையே என் கண்களின் முன் நிறுத்திவிட்டார். அந்தக் கோயிலின் சிறப்புக்களைப் படங்கள் பகிர்ந்துகொண்டதால், சீதாராமனை, அவர் பார்வையில் பதிந்தவற்றை விரிவான அளவில் டாட் காம் நண்பர்களுக்கு ஒரு கட்டுரையாகத் தருமாறு மின்னஞ்சல் அனுப்பினேன். சீதாராமன் அன்புடன் ஒப்புக்கொண்டுள்ளார். ஸ்ரீதரன் சுட்டிய கோயிலில் களஆய்வு முகிழ்த்து, கட்டுரையாக மலரவிருப்பது மகிழ்ச்சி தருகிறது. இனி, திரும்பிப் பார்ப்போம். 17. 3. 1991 தஞ்சாவூர் இராஜராஜீசுவரம் ஆய்வின்போது இரண்டாவது கோபுரமான இராஜராஜன் திருவாயிலின் மேற்குமுகத் தென்புறத்தில் சிற்பிகள் பயன்படுத்தும் சிற்பக் கோலின் பதிவைப் பட்டயக்கல்வி மாணவர் இராமகிருஷ்ணன் கண்டறிந்தார். தாங்குதளப் பட்டிகையில் பொறிக்கப்பட்டுள்ள அந்தத் தச்சக்கோல் மூன்று கூட்டல் குறிகளால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. முதல் கூட்டல் குறிக்கும் மூன்றாம் கூட்டல் குறிக்கும் இடையிலுள்ள அளவு 73 செ. மீ. ஆகும். முதல் கூட்டல் குறிக்கும் இரண்டாம் கூட்டல் குறிக்கும் இடையிலுள்ள அளவு 36 செ. மீ. இரண்டாம் கூட்டல் குறிக்கும் மூன்றாம் கூட்டல் குறிக்கும் இடையிலுள்ள அளவு 37 செ. மீ. அழுத்தமாகவும் ஆழமாகவும் வெட்டப்பட்டுள்ள அக்குறியீடுகள் இராஜராஜீசுவரத்திற்குரிய தச்சக்கோல் ஆகலாம் என்று நான் தெரிவித்த கருத்தைத் திரு. கொடுமுடி சண்முகம் வரவேற்றதுடன் இது போலத் தாமும் சில கோயில்களில் அளவுகோல்களைக் கண்டறிந்துள்ளதாகத் தெரிவித்தார். இக்கண்டுபிடிப்பு 12. 3. 1991 தினமலர் நாளிதழிலும் 11. 3. 1991 மாலைமுரசு நாளிதழிலும் வெளியாயின. மார்ச்சுத் திங்கள் 8, 9, 10 ஆகிய நாட்களில் மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகத்தின் கலைத்துறை சார்பில் கட்டடக்கலைக் கருத்தரங்கு நிகழவிருப்பதாகவும் அதில் மையத்தின் பங்களிப்பு இருக்கவேண்டும் என்றும் துறைத்தலைவர் பேராசிரியர் திரு கோ. விஜயவேணுகோபால் அழைத்திருந்தார். மாணவர்களின் தஞ்சாவூர்க் கருத்தரங்கிற்கு அவர் வந்திருந்தமையால் பட்டயக்கல்வி மாணவர்களையும் அழைத்து வருமாறு கேட்டிருந்தார். வகுப்பில் அத்தகவலைப் பகிர்ந்துகொண்டபோது திருமாறன், தமிழகன், வீராசாமி மூவர் மட்டுமே மதுரை வர விரும்பினர். அதனால் அவர்களுடன் நானும் நளினியும் மதுரை பயணமானோம். திருமணத்திற்குப் பிறகு திருமதி வாணி செங்குட்டுவன் மதுரையில் இருந்ததால் எங்கள் வருகையை அவருக்குத் தெரிவித்திருந்தோம். தமிழ்நாடு தங்கும் விடுதியில் எங்களுக்காக இரண்டு அறைகளைப் பதிவு செய்யுமாறு கேட்டிருந்தோம். மதுரையை அடைந்ததும் விடுதிக்குச் சென்று ஓய்வெடுத்தோம். வாணி கணவருடனும் பிள்ளைகள் மஞ்சரி, நித்தன் இருவருடனும் வந்து எங்களை வரவேற்று இரவு உணவிற்கு அழைத்துச் சென்றார். அடுத்த நாள் காலை பல்கலைக்கழகம் சென்றோம். நண்பர்கள் மஜீது, தாமோதரன், ஸ்ரீதரன், வேதாசலம் இவர்களுடன் தொல்லியல்துறை சார்ந்த மற்றவர்களையும் சந்தித்து மகிழ முடிந்தது. பேராசிரியர்கள் சுப்பராயலு, சண்முகம், திரு. கணபதி சிற்பி ஆகியோரையும் கண்டு உரையாடி மகிழ்ந்தோம். கணபதி சிற்பி காரைக்குடிக் கருத்தரங்கிலேயே பழகியிருந்தமையால் அன்பு காட்டி நெருக்கமானார். முதல் நாள் அமர்வுகளில் தமிழ்ப் பல்கலைக்கழகச் சிற்பத்துறைப் பேராசிரியர் திரு. வேலு சாமி சுதந்திரன் படித்த தஞ்சாவூர் இராஜராஜீசுவரம் பற்றிய கட்டுரையில் பிழைகள் மலிந்திருந்தன. பேராசிரியர் சண்முகம், நான் இருவருமே பிழையான கருத்துக்களைச் சுட்டிக்காட்டி உரிய விளக்கங்கள் தந்தோம். சுதந்திரன் இதைச் சற்றும் எதிர்பாராமையால் சினத்திற்கு ஆளானார். மதிய உணவின்போது என்னிடம், 'நாளை உங்கள் கட்டுரை வாசிக்கப்படும் போது என்ன செய்கிறேன் பாருங்கள்' என்று அறைகூவல் விடுத்தார். என்னைச் சுற்றியிருந்த பட்டயக் கல்வி மாணவர்களும் மஜீதும் மற்றவர்களும் அவர் சினத்தைத் தணிக்குமாறு ஏதேதோ கூறினர். சினம் தணியாமல் ஆனால், கூட்டம் இருந்தது கண்டு அவர் ஒதுங்கிப்போனார். மறுநாள் நிகழவிருக்கும் என் கட்டுரை வாசிப்பின்போது அவர் தொல்லையாவார் என்று மஜீது எச்சரித்தார். நான் அதைப் பற்றிச் சிறிதும் கவலுறவில்லை. அவரது நடத்தை அவருக்குத்தான் இழுக்கும் துன்பமுமே தவிர நமக்கு அதில் என்ன இருக்கிறது என்றே சூழ இருந்த அனைவரிடமும் கூறினேன். என்றாலும், அன்று முழுவதும் என்னைத் தனியேவிடாது யாரேனும் உடனிருந்தனர். அன்று மாலை கருத்தரங்கம் முடிந்ததும் மதுரைக்குத் திரும்பினோம். திரும்பும் வழியில் வாணியும் நளினியும் பேராசிரியரின் பொருத்தமற்ற போக்குப் பற்றியே வருந்தி வந்தனர். அடுத்த நாள் காலை அமர்வில் என் கட்டுரை இருந்தது. அரங்கில் சுதந்திரனும் இருந்தார். நான் கட்டுரை படிக்க எழுந்ததுமே மஜீது என் கையைப் பற்றி அன்புடன் எச்சரித்தார். இராஜராஜீசுவரம் கோயிலில் நாங்கள் மேற்கொண்ட ஆய்வுகளின் பிழிவையே என் கட்டுரை கொண்டிருந்தது. சுந்தரர் ஓவியத்தொடர், கண்ணப்பர் தொகுதி, கிராதார்ச்சுனர் தொகுதி, கயிலாய ஞானஉலா சிற்பத்தொகுதி, விமானம் பற்றிய உண்மைகள் இவற்றின் தொகுப்பாகவே அமைந்த அக்கட்டுரையை நான் படித்து முடித்ததும் கேள்வி நேரம் தொடங்கியது. நண்பர்களும் மாணவர்களும் சுதந்திரனை எதிர்கொள்ளத் தயாராயினர். ஆனால், அனைவர் எதிர்பார்ப்பிற்கும் மாறாகச் சுதந்திரன் ஒரு கேள்வியும் கேட்கவில்லை. என் வாய்ப்பு முடியும் வரை அமைதியாகவே இருந்தார். நான் மீளச்சென்று அமர்ந்ததும் நண்பர்களும் மாணவர்களும் சற்று ஏமாற்றத்துடன் என்னைப் பார்த்தனர். நான் அவர்களைப் பார்த்து முறுவலித்தேன். மதிய உணவின்போது சுதந்திரன் என்னைச் சந்தித்துக் கட்டுரை குறித்துப் பாராட்டுத் தெரிவித்ததுடன் கட்டுரையின் படியையும் கேட்டபோது அனைவரும் வியந்தனர். சுதந்திரனை அறிந்திருந்த நான் அவருக்கு நன்றி தெரிவித்து அவரது மாற்றம் குறித்து மகிழ்ந்தேன். மதுரையைச் சுற்றி உள்ள மலைகளில் சமணர் படுக்கைகளும் பழந்தமிழ்க் கல்வெட்டுகளும் இடம்பெற்றுள்ளமையால் அவற்றைக் காணவேண்டும் எனக் கருதியிருந்தோம். எங்களுக்காக மாங்குளம், அரிட்டாபட்டி இவற்றிற்குச் செல்லும் வழியைச் செங்குட்டுவன் முன்கூட்டியே அறிந்து வைத்திருந்தார். வாணி, செங்குட்டுவன் துணையுடன் நாங்கள் அனைவரும் 8. 3. 1991 காலை 11. 30 மணியளவில் அரிட்டாபட்டி அடைந்தோம். நான் அரிட்டாபட்டி செல்வது அதுதான் முதல் முறை. நளினி மதுரையில் படித்த காலத்திலேயே அந்தக் கல்வெட்டுகளை எல்லாம் பார்த்திருந்தமையால் அவருடைய வழிகாட்டலில் அரிட்டாபட்டியிலுள்ள வட்டெழுத்துக் கல்வெட்டு, பழந் தமிழ்க் கல்வெட்டு இவற்றை வாசித்தோம். அரிட்டாபட்டிக் குடைவரையையும் பார்த்தோம். அக்குடைவரையின் அமைப்பும் கோட்டச் சிற்பமாக இருந்த தடியேந்திய ஆடவர் வடிவமும் என் கவனத்தைக் கவர்ந்தன. மாங்குளம் பல குகைத்தளங்களைக் கொண்டிருந்தது. அங்கிருந்த பழந்தமிழ்க் கல்வெட்டுகளை நளினியின் உதவியோடு அனைவரும் படித்தனர். சமணர் படுக்கைகளைப் பார்த்து வியந்த செங்குட்டுவன் தாம் மதுரையில் இருந்தபோதும் மாங்குளம் குகைத்தளங்களைப் பார்ப்பது அதுவே முதல் முறை என்று கூறி வாய்ப்புக் கிடைத்தமைக்கு மகிழ்ந்தார். மாங்குளம் கிராமத்தில் இருந்த ஒரு வீட்டில் வாணி கொண்டு வந்திருந்த உணவைப் பசியாற அருந்தினோம். 9. 3. 1991 அன்று காலை 8. 30 மணியளவில் திருப்பரங் குன்றம் மலை மேலுள்ள பழந்தமிழ்க் கல்வெட்டையும் சமணர் படுக்கைகளையும் காணச்சென்றோம். 'எருகாடூர் ஈழக் குடும்பிகன் போலாலையன் செய்தான் ஆய்சயன் நெடுசாதன்', 'அந்துவன் கொடுபிதவன்' எனும் இரண்டு கல்வெட்டுகளையும் முயன்று படித்தோம். பழந்தமிழ்க் கல்வெட்டுகளைப் பார்த்து ஒவ்வொரு எழுத்தாக அடையாளப்படுத்திப் படித்து எழுதிக்கொண்டதில் மாணவர்கள் மகிழ்ந்தனர். மறுநாள் காலை 8. 00 மணி அளவில் கொங்கர்புளியங்குளம் சென்று குகைத்தளங்களையும் பழந்தமிழ்க் கல்வெட்டுகளையும் பார்த்தோம். அக்கல்வெட்டுகளின் இறுதியில் இடம்பெற்றிருந்த குறியீடுகளை மாங்குளத்திலோ, பரங்குன்றத்திலோ பார்த்திராமையால் அவற்றை அனைவரும் வரைந்துகொண்டோம். அழகர்மலைக் கல்வெட்டுகளில் அக்குறியீடுகள் இடம் பெற்றிருப்பதாகக் கூறிய நளினி, 'பாகன்ஊர் பேரதன் பிடன் இந்த வெபோன்', 'குற கொடுபிதவன் உபாசன் உபறுவன்' எனும் இரண்டு கல்வெட்டுகளையும் மாணவர்களுக்குப் படித்துக் காண்பித்தார். கல்வெட்டுகளின் எழுத்துக்கள், சொற்கள், பொருள் இவற்றில் அறிஞர்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை விளக்கிய நளினி கல்வெட்டுகளின் காலக் கணிப்பிலும் அறிஞர்களுக்கிடையே வேறுபாடுகள் உள்ளன என்று எடுத்துரைத்தார். 9. 3. 1991 அன்று கருத்தரங்கில் நிகழ்ந்த கணபதி சிற்பியின் உரை குறிப்பிடத்தக்கதாய் அமைந்தது. 'உணர்வுகள் வடிவம் கொள்கின்றன. அதன் வழி சிற்பியே சிற்பமாகிறான்', 'உள்ளதை உள்ளபடி அல்லாமல் உள்ளதை உணர்ந்தபடி வடிப்பவன் சிற்பி' என்பன போன்ற கருத்துக்கள் சிந்தனையைத் தூண்டின. 'ஒவ்வொரு சிற்பத்தையும் காணல் மட்டுமே அதை விளங்கிக் கொள்ளப் போதுமானதாகாது. மேடு, பள்ளங்களுடன் கூடியது சிற்பம். அதனால், தொட்டால்தான் ஒரு சிற்பத்தை உணரவும் உள்வாங்கவும் முடியும்' என்ற அவருடைய கருத்து முழுமையும் சரியே. தொடக்கக் காலங்களில் சிற்பங்களைப் பார்ப்பதுடன் நிறுத்திக் கொண்ட நான் கோயில்களுடன் நட்பான பிறகு என் கண்களை நிறைத்த அனைத்துச் சிற்பங்களையுமே தொட்டுப் பழகியிருக்கிறேன். தொடுதல் அவற்றோடு நம்மை ஒன்றிணையச் செய்வதை ஒவ்வொரு முறையும் நான் உணர்ந்திருக்கிறேன். அதனால் சிற்பியின் கூற்றிலிருந்த அனுபவ உண்மையை என்னால் எளிதாக உணரமுடிந்தது. பாண்டிய நாட்டுச் சோழர் கோயில்களைப் பற்றி நண்பர் வெ. வேதாசலம் கட்டுரை படித்தார். பாண்டிய நாட்டில் எழுப்பப்பெற்ற சோழர் கோயில்களில் ஒன்றுகூடச் சோழர் கலை முறையில் அமையவில்லை என்று கூறிய அவர், அக்கோயில்கள் அனைத்துமே பாண்டிய, சோழக் கூட்டுக் கலைமுறையில் அமைந்திருப்பதாகக் கூறினார். பாண்டிய நாட்டில் இருந்த சோழர் கோயில்களை நான் அதிகம் பார்த்ததில்லை என்பதால் பார்க்கும் வாய்ப்பு அமையும்போது வேதாசலத்தின் கருத்தை ஆய்வுக்குட்படுத்த வேண்டும் என்று எண்ணினேன். பின்னாளில் திருவாலீசுவரம் உள்ளிட்ட பாண்டிய நாட்டுச் சோழர் கோயில்களில் ஆய்வு செய்தபோது அவர் கருத்தில் ஓரளவு உண்மை இருப்பதை அறியமுடிந்தது. கருத்தரங்கம் முடிந்து பல்கலைக்கழகத்திலிருந்து தமிழ்நாடு விடுதிக்குத் திரும்பியபோது, தொடர்வண்டி நிலையத்தில் இறங்கிக்கொள்வதாகக் கூறி கணபதி சிற்பி எங்களுடன் வந்தார். அவர் உரையின் மையக் கருத்தைப் பாராட்டி எங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தோம். அவர் தம்முடைய அனுபவங்களையும் எதிர்பார்ப்புகளையும் நோக்கங்களையும் எங்களிடம் பகிர்ந்து கொண்டார். மூன்று நாள் கருத்தரங்க நிகழ்வு பயனுடையதாக இருந்ததென்றும் பல புதிய செய்திகளை அறிந்துகொண்டதாகவும் கூறிய அவர் என் கட்டுரையில் இருந்த தரவுகளைப் புதியன என்று பாராட்டினார். மதுரையில் இருந்து திரும்பியதும் வகுப்புகளில் கவனம் கொண்டோம். 16. 3. 1991 மாலை உதயேந்திரம் செப்பேடுகள் குறித்து நளினியும் கல்வெட்டாய்வு குறித்து நானும் பேசினோம். 17. 3. 1991 ஞாயிறன்று தஞ்சாவூர்க் கருந்திட்டைக்குடி வசிஷ்டேசுவரர் கோயிலுக்குச் சென்றோம். கோபாலன், வீராசாமி, இராஜேந்திரதேவன், இலலிதாம்பாள் இவர்களும் எங்களுடன் வந்தனர். குடமுழுக்குக் காணவிருந்த அக்கோயிலை ஆய்வு செய்து கல்வெட்டுகளைப் படித்தளிக்க வேண்டும் என்று மார்ச்சு முதல் வாரத்திலேயே அக்கோயில் இறைப்பணி மன்றத் துணைத்தலைவர் திரு. வி. ஆர். கோவிந்தராசன் அழைத்திருந்தார். நளினி, அகிலா, இலலிதாம்பாள், வீராசாமி இவர்கள் நால்வரும் அங்குச் சென்று தொடக்க நிலை ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர். நளினி ஐந்து புதிய கல்வெட்டுகளைக் கண்டறிந்து படியெடுத்திருந்தார். இரண்டாம் கட்ட ஆய்விற்கு நானும் உடன் சென்றேன். திரு. கோவிந்தராசன் பழம் பொருள் விற்பனையாளர். நல்ல தமிழன்பர். அவரும் அவரது துணைவியாரும் எங்களிடம் அன்பு பாராட்டி எப்போது சென்றாலும் விருந்தோம்பும் பண்பாளர்கள். அவருக்கு நெருக்கமாக இருந்த அமைப்பு ஒன்றில் பாரதிதாசனின் அழகின் சிரிப்பு குறித்து என்னை உரையாற்றுமாறு செய்து, அந்நிகழ்ச்சியில் எங்கள் இராஜ ராஜீசுவரம் ஆய்வைப் பாராட்டிப் பழங்கால வழக்கப்படிக் காசு முடிப்பு வழங்கியவர். அந்த முடிப்பில் முதலாம் இராஜராஜரின் செப்புக்காசுகள் ஏராளம் இருந்தன. அவற்றைப் பட்டயக்கல்வி மாணவர்களுக்கும் நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் பகிர்ந்தளித்து மகிழ்ந்தேன். எப்போது இல்லம் சென்றாலும் ஏதேனும் ஒரு பழம் பொருளை அன்பளிப்பாக அளிப்பதும் அவர் வழக்கம். அன்புடன், இரா. கலைக்கோவன். this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |