http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 95
இதழ் 95 [ மே 2013 ] இந்த இதழில்.. In this Issue.. |
திருச்சி கரூர் சாலையில் திருச்சியிலிருந்து பதினோரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள அழகான சிற்றூரே திருச்செந்துறை. காவிரியின் கைவீச்சால் இங்குக் கண்ணுக்கெட்டிய தொலைவு வரை பசுமைதான். பறவைகளின் கீச்சொலியும், காவிரியின் சலசலப்பும் இவ்வூர் மக்களுக்குப் பழகிப்போன பூபாளம். அழகு, கோட்டை கட்டிக் குடியிருக்கும் இந்தச் சிற்றூரில்தான் கொடும்பாளூர் இளவரசி பூதி ஆதித்தவிடாரி கருத்தோடும் கவனத்தோடும் எடுத்துச் சென்ற சோழர் காலக் கற்றளியொன்று சுந்தரப் புன்னகையுடன் நம்மை எதிர்நோக்கியே நித்தமும் காத்திருந்தாற்போல் காலப் பெருமைகளின் கனிந்த பார்வைகளால் கைகூப்பி வரவேற்கிறது.
அகன்ற மணல்வெளியில் நின்றபடி, அரசமர இலைகளின் ஆட்டத்தைப் பார்த்தபடியே அந்த இளங்காலைக் குளிரில் இதமாய்ச் சிலிர்த்துக்கொண்டு கோபுரப் பார்வையில் கொஞ்சம் திரும்புகிறோம். கோபுரத்துச் சுதையுருவங்கள் ஐந்து நிலைகளுடன் சுதையுருவங்களைத் தாங்கி நிற்கும் கிழக்கு நோக்கிய கோபுரம். கோயிலின் முதல் நுழைவாயிலான இதன் முதல் நிலையில், புருவங்களை உயர்த்தி நெற்றியைச் சுருங்க வைக்கும் சில வியப்புக்குரிய இறை உருவங்கள், இயல்பான சுதையுருவங்களுடன் இடையிடையே அமைக்கப்பட்டுள்ளன. முதல் நிலையின் இடப்புறத்தில் உள்ள மூன்று சுதை உருவங்கள் குறிப்பிடத்தக்கன. முதலில் பாம்பின் மீதாடும் ஆனந்தத் தாண்டவ விஷ்ணு, படமெடுத்தாடும் பெரிய அளவிலான பாம்பின் கழுத்துப் பகுதியில் இறைவனின் வலக்கால் சமபாதமாய் ஊன்றியுள்ளது. இடக்கால் உயர்த்தப்பட்டுச் சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவக் கோலத்தில் இடப்புறமாய் வீசப்பட்டுள்ளது. நான்கு கைகளில் வலமுன்கையும், இடப்பின்கையும் உடைந்து உள்ளன. இடமுன்கை வேழ முத்திரையில் வலப்புறமாய் வீசப்பட்டுள்ளது. வலப்பின்கையில் சக்கரம்; செவிகளில் ஆந்தைக் குண்டலங்கள்; தலையில் கிரீடமகுடம். இடுப்பில் அரையாடை. பாம்பின் பின்பகுதி, ஆடும் இறைவனின் இடப்புறம் வளைந்து, தலைக்கு மேலாய்ச் சுற்றி, வலப்புறமாய் இறங்கிய நிலையில் காட்டப்பட்டுள்ளது. வலப்பின்கை சக்கரமும், கிரீடமகுடமும் இல்லையென்றால் இந்த ஆனந்தத் தாண்டவக் கோலம் சிவபெருமானுடையதென்று சொல்லி விடலாம். இவ்விரண்டும் பெருமாளுக்கே உரியவை என்பதால் இவ்வடிவத்தை ஆனந்தத் தாண்டவ விஷ்ணுவாகக் கொள்ள வேண்டியுள்ளது. இதே கோலத்தில் அமைந்த ஆனந்தத் தாண்டவ விஷ்ணு வடிவங்கள் இரண்டைத் திருவரங்கம் கோயிலில் இருந்து கண்டறிந்து டாக்டர். மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம் வெளிப்படுத்தியுள்ளது (1). இருபது கைகளுடன் கூடிய திரிவிக்கிரமரை இங்குக் காணலாம். இடக்கால் வானோக்கிப் பக்கவாட்டில் உயர, வலக்காலை ஊன்றி, மேலிரண்டு கைகளை ரேசிதத்தில் அமைத்து நிற்கும் இப்பெருமானின் பேருருவத் தோற்றம் சற்றுப் புதுமையானது மட்டுமல்ல, அழகானதும் கூட. இவரையடுத்து இன்னொரு புதுமையாய் நான்முக நரசிம்மர். இது நான்முக வடிவமா அல்லது பின்னால் ஒரு முகம் இருப்பதாய் உருவகித்துக்கொள்ள வேண்டுமா என்பது தெரியவில்லை. பொதுவாக சதாசிவ மூர்த்தங்களில் காட்டப்பட்டிருப்பதுபோல் இந்த நரசிம்ம வடிவத்திலும் வலப்புறம், இடப்புறம், நடுவில் என மூன்று முகங்களும், நடுத்தலைக்கு மேல் மற்றொரு முகமும் காட்டப்பட்டிருப்பதால், இதைச் சதாசிவருக்கு இணையான வடிவமாய்க் கொள்ளலாமென்றே தோன்றுகிறது. ஐந்தாவது முகம் சதாசிவ வடிவத்திற்கு அமைவதுபோல் பின்புறமிருப்பதாய்க் கொளல் வேண்டும். அப்படியாயின் இந்தப் பஞ்சமுக நரசிம்மரைப் பஞ்சமுகக் கணபதி போல் பின்னாளில் வடிவமைக்கப்பட்ட இறைவடிவமாகக் கருதலாம். திருச்சியில் பஞ்சமுக நரசிம்ம வடிவம் காணக் கிடைத்திருப்பது இதுவே முதல் முறையாகும். திருச்செந்துறைக் கோபுரத்தின் வலக்கோடியில்தான் மிக முக்கியத்துவம் வாய்ந்த சுதையுருவம் இடம் பெற்றிருக்கிறது. திருச்செந்துறைத் திருக்கோயில் பற்றி எழுதியுள்ள அறிஞர் பெருமக்கள் யாராலும் இதுநாள் வரையிலும் சுட்டிக் காட்டப்படாதது இந்த அபூர்வ இறைவடிவம். முதல் பார்வையில் இன்ன இறைவடிவமென்று அடையாளம் காணமுடியாத நிலையில் வியக்க வைத்த இச்சுந்தர சுதையுருவம் பத்துத் திருக்கைகளுடன் மகிழ்வமர்வில் அமைந்துள்ள பெண் தெய்வமாகும். இதன் இருபுறமும் வனப்புடன் விளங்கும் வனிதையர் இருவர் கவரி வீசிய நிலையில் காட்டப்பட்டுள்ளனர். இறைவியின் பத்துக் கைகளில் முன்னிரு கைகள் உடைந்துள்ளன. பின்னிரு கைகளில் சங்கும், சக்கரமும். இடைப்பட்ட கைகளில் வலப்புறம் மலர், கத்தி, இடப்புறம் கேடயம், பாசம், இன்னுமிரண்டு கைகளில் உள்ள கருவிகளை அடையாளம் காணமுடியவில்லை. நான்கு முகங்களை உடைய இவ்விறைவியின் வலப்புற முகம் பன்றியினுடையதாய் அமைந்துள்ளது. இடப்புறம் நரசிங்க முகம். இரண்டுக்கும் இடையில் நேர் நோக்கிய நிலையில் சிதைந்து காணப்படும் முகம் மனித முகமா குதிரை முகமா அல்லது அசுர முகமா என்பதைத் தெளிவாய் அறியக்கூடவில்லை. இந்த நடுத்தலையின் மேல் சடாமகுடத்துடன் கூடிய சிறிய அளவிலான மனிதத்தலை. இதன் முகமும் நேர்நோக்கிய நிலையில் அமைந்துள்ளது. சிறந்த ஆடையணிகளும், எடுப்பான கச்சணிந்த மார்பகங்களும், இவ்விறைவியின் வடிவத்தைப் பொலிவுடையதாக்குகின்றன. இறைவியின் காலடியில் விறைத்த நிலையில் ஒரு மனித வடிவம் காட்டப்பட்டுள்ளது. மிக அபூர்வமான இந்த இறைவடிவத்தை அடையாளம் காண அரும்பாடு பட்ட நிலையில் லலித்கலாவின் பழைய இதழ்கள் கைகொடுத்தன. டக்ளஸ்பாரட் (2), அட்ரிஸ் பானர்ஜி (3), கல்பனா தேசாய் (4) என்ற அறிஞர்கள் மூவரும் காஷ்மீரிலும் இராஜஸ்தானிலும் கண்டெடுக்கப்பட்ட அல்லது வெளிப்படுத்தப்பட்ட சில அபூர்வமான விஷ்ணு திருமேனிகளைப் பற்றி வடபுலத்து ஆகமங்களின் உதவியுடன் விளக்கிக் கட்டுரைகளும், குறிப்புகளும் எழுதியுள்ளனர். பம்பாய் வேல்ஸ் இளவரசர் அருங்காட்சியகத்திலுள்ள விஷ்ணுவின் நான்முக செப்புத் திருமேனியைப் பற்றி டக்ளஸ்பாரட் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார். இது காஷ்மீரில் கிடைத்த ஒன்பதாம் நூற்றாண்டுக் கலைவடிவம். நான்கு கவரிப்பெண்கள் சூழ்ந்த நிலையில் கருடன் மீது அமர்ந்தபடி காட்சியளிக்கும் இவ்விஷ்ணுத் திருமேனியின் நான்கு முகங்களுள் ஒன்று பன்றிமுகம்; மற்றொன்று நரசிங்கம். மூன்றாவது மனித முகம். பின்புறமுகம் அரக்கனுடையது. இதேபோன்ற நான்முக விஷ்ணு திருமேனிகள் லாஸ் ஏஞ்சல்ஸ் அருங்காட்சியகத்தில் இருப்பதை அவர்கள் வெளியிட்டுள்ள நூலொன்றால் அறிய முடிகிறது (5). இந்த நான்முக விஷ்ணு வடிவத்தைப் பற்றி கஜூரகோவில் உள்ள யசோவர்மனின் கல்வெட்டொன்று குறிப்புக் காட்டுகிறது (6). (தொடரும்) அடிக்குறிப்புகள் 1. டாக்டர். இரா. கலைக்கோவன், 'ஆனந்தத் தாண்டவத்தில் விஷ்ணு', கட்டுரை, கலைமகள், நவம்பர் 1987. 2. DOUGLAS BARRET, 'Bronges of North west India and west Pakistan', Lalitkala No. 11, P.44. 3. Adris Banerji, 'Interesting images from South East Rajasthan', Lalitkala No. 12, pp 21-25. 4. Kalpana Desai, 'Consort of Vaikuntha', Lalitkala No. 13, pp 51-52. 5. Pratapaditya pal, Indian Sculpture, Vol 2, plates 14a, 14b, 23, Los Angeles County Museum of Art. 6. Epigraphica Indica, Vol. 1, pp 124-129 and plate. this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |