http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 8

இதழ் 8
[ ஃபிப்ரவரி 15 - மார்ச் 14, 2005 ]


இந்த இதழில்..
In this Issue..

ஈன்ற பொழுதினும் பெரிதுவந்தோம்
முப்பெரும் விழா நிகழ்வுகள் - 1
மத்தவிலாசப் பிரகசனம் - 5
நாளிதழ்களில் வரலாறு டாட் காம்
சீவரமுடையார் குடைவரையும் கல்வெட்டுகளும்
பழுவூர் - 1
கல்வெட்டாய்வு - 6
இராஜராஜரின் வெற்றிகள்
கட்டடக்கலைத் தொடர் - 7
யாழ் என்னும் இசைக்கருவி - ஒரு பார்வை
நார்த்தாமலையை நோக்கி...
அழிவின் விளிம்பில் ஒரு அரிய வரலாற்றுப் பெட்டகம்
Genesis of Vimana in Pallava Art
சங்கச்சாரல் - 7
இதழ் எண். 8 > கலைக்கோவன் பக்கம்
கி.பி. 880 தமிழக வரலாற்றைத் திசைமாற்றி விட்ட திருப்பு முனையான ஆண்டு. குடந்தைக்கருகில் உள்ள திருப்புறம்பியம் நான்கு நூற்றாண்டுகளுக்குத் தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் பொறுப்பை ஏற்றது. புலியாய்ப் பாய்ந்து பல்லவர்க்குத் துணையாக இங்குப் போரில் புகுந்த முதலாம் ஆதித்தனால் பாண்டியப் பேராட்சி தென் தமிழகத்தில் ஒரு முடிவுக்கு வந்தது. ஆதித்தனின் வெற்றி சோழ ஆதிக்கத்தைத் தமிழக மண்ணில் தழைக்க வைத்தது. சிற்றரச நிலையிலிருந்து விடுபட்ட ஆதித்தன் அபராசிதனையும் வென்று வடதமிழகத்தில் காலூன்றினான்.

அன்பில் செப்பேடுகள் வளர்ந்து விரிந்த சோழப் பேராட்சிக்கு விதைபோட்ட தலைமகனாய் ஆதித்தனைப் போற்றுகின்றன. ஆதித்தனின் மகனான முதலாம் பராந்தகன் தந்தைக்குப் பிள்ளை தப்பாமல் பிறந்ததுபோல் இந்தத் திருப்பணியில் இயன்றமட்டும் முயன்று நின்றதைக் கல்வெட்டுத் திரட்டல்கள் களிப்போடு உணர்த்துகின்றன. ஆதித்தனுக்கும் பராந்தகனுக்கும் பேராட்சி பரப்பும் பணியில் துணையாய் நின்று தோள் கொடுத்து உதவிய சிற்றரச மரபினர் பலராவர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் பழுவேட்டரையர்கள்.

பழுவேட்டரையர்களின் மரபுவழி, அவர்களால் எடுப்பிக்கப்பட்ட கோயில்கள், அங்குக் காணப்படும் கல்வெட்டுகளிலுள்ள கருத்து விளக்கங்கள் என்பன குறித்து திரு. தி.வை. சதாசிவ பண்டாரத்தார், பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியார், கல்வெட்டறிஞர் வை. சுந்தரேச வாண்டையார், கலையறிஞர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், பேராசிரியர் எம்.எஸ். கோவிந்தசாமி, டாக்டர் வெ. பாலாம்பாள், திரு. இல. தியாகராசன், கல்வெட்டுத் தொகுதிகள் சிலவற்றைப் பதிப்பித்துள்ள திரு. ஜி.வி. சீனிவாசராவ் போன்ற பெருமக்கள் ஆய்வு நூல்களையும், கட்டுரைகளையும் வெளியிட்டிருக்கிறார்கள். இவற்றில் பரவலாகக் காணப்படும் முரண்பாடுகளை, உருவம் தெரியாமல் ஒளிந்துகொண்டிருக்கும் உண்மைகளை ஒழுங்குபடுத்திப் புதிய பார்வையில் பழுவேட்டரையர்களின் முறையான வரலாற்றையும் அவர்தம் கலைப்பணிகளையும் தொகுத்துத் தருவதே இந்நூலின் நோக்கம்.

கலை வரலாற்று உலகின் இமயச் சாதனைகளாய் இதயம் நெகிழப் புகழப்படும் அழகுக் கற்றளிகளை இன்றைக்கும் கொண்டு விளங்கும் பழுவூர், திருச்சி சயங்கொண்டம் சாலையில், திருச்சியிலிருந்து ஐம்பத்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மேலப்பழுவூர், கீழையூர், கீழப்பழுவூர் என்ற மூன்று சிற்றூர்களாய்ச் சிதறியுள்ள இப்பழுவூர் மண்டலம், ஆயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முன்னர்ப் பெரும்பழுவூர், அவனி கந்தர்ப்பபுரம், சிறுபழுவூர் என்ற மூன்று ஊர்களின் முழுமையாய்த் திகழ்ந்தது. இப்பழுவூரை ஆண்ட சிற்றரசர்களே பழுவேட்டரையர்கள். முதலாம் ஆதித்தனின் காலத்தில் திடீரென வரலாற்று வெளிச்சத்திற்கு வரும் இவர்கள் முதலாம் இராசேந்திரனின் பொற்காலப் பேராட்சியின் முதற்பகுதியோடு, வந்தது போலவே திடீரென மறைந்தும் விடுகிறார்கள். ஒன்றரை நூற்றாண்டுக்கும் சற்றுக் குறைவான கால அளவில் வரலாற்றில் வந்தொளிர்ந்த இந்தப் பழுவேட்டரையர்கள் யார்? இவர்கள் எங்கிருந்து வந்தனர்? எப்போது வந்தனர்?

பழுவேட்டரையர்களின் வருகை குறித்து இரண்டு கருத்துக்கள் நிலவுகின்றன. கேரளத்திலிருந்து வந்தவர்கள் இவர்கள் என்றும், இந்த வருகை முதலாம் பராந்தகன் காலத்தில் நிகழ்ந்ததென்றும் சில அறிஞர்கள் எண்ணுகிறார்கள் (1). இதற்குப் பின்புலமாக அன்பில் செப்பேடுகள், வெள்ளான் குமரனின் படைத்தலைமை, இரவி நீலியின் வருகை ஆகியவற்றை இவர்கள் காட்டுகிறார்கள். வேறுசில அறிஞர்கள் இவற்றை மறுத்துப் பழுவேட்டரையர்கள் கேரள வழியினர் அல்லர். தமிழகத்தினரே என்று நிறுவ முயல்கின்றனர் (2). இவ்விரண்டனுள் எது உண்மை என்பதையறிய வரலாற்றுச் சான்றுகளை வரிசையாகப் பார்ப்போம்.

அன்பில் - உதயேந்திரம் செப்பேடுகள்

பழுவேட்டரையர்களின் தொடக்கக் கால நிலைமைகளை அறிய நமக்குப் பெருமளவு உதவும் சான்றுகள் அன்பில் செப்பேடுகளும், பழுவூர்க் கல்வெட்டுகளும்தாம். சுந்தர சோழரால் வெளியிடப் பெற்ற அன்பில் செப்பேடுகள் மரபுவழி கூறுமிடத்தில் முதற் பராந்தகனின் திருமணத்தைப் பற்றிய மூன்று முக்கியமான செய்திகளைக் குறிப்பிடுகின்றன:

1. முதற்பராந்தகன் ஒரு கேரள இளவரசியை மணந்து கொண்டான்.

2. இப்பெருமாட்டியின் தந்தையான கேரள அரசன் பழுவேட்டரையன் என்ற பெயராலும் அழைக்கப்பட்டார்.

3. முதற்பராந்தகனுக்கும் இக்கேரள இளவரசிக்கும் பிறந்தவனே அரிஞ்சய சோழன் (3).

இம்மூன்றனுள் முதல் செய்தி முதலாம் பராந்தகனின் பதினைந்தாம் ஆட்சியாண்டில் இரண்டாம் பிருதிவீபதியால் வெளியிடப்பெற்ற உதயேந்திரம் செப்பேடுகளிலும் இடம் பெற்றுள்ளது.

திரு. சதாசிவ பண்டாரத்தார்,

இராசாதித்தன் தாயாராகிய கோக்கிழானடியே பட்டத்தரசியாக விளங்கியவள். அவள் சேர மன்னன் மகள் என்பது உதயேந்திரம் செப்பேடுகளால் உணரப்படுகின்றது என்று எழுதுகிறார் (4). இது எத்தனை பிழையான கருத்தென்பதை உதயேந்திரம் செப்பேடுகளை உணர்த்துகின்றன.

As Sakra (Indra) the daughter of Puloman, as Sarva (siva) the daughter of the Lord of Mountains (and) as (Vishnu) the enemy of Kaitabha the dayghter of the Ocean, he (Parantaka) married the daughter of the Lord of Kerala (5).

இதுதான் உதயேந்திரம் செப்பேடுகள் பராந்தகன் திருமணம் குறித்துச் சொல்லும் செய்தி. கேரள அரசனின் மகளைப் பராந்தகன் மணந்து கொண்டதைத் தவிர இதில் வேறு விளக்கமில்லை. அப்பெண்ணின் பெயரோ, அவள் இடாசாதித்தனின் தாய் என்றோ உதயேந்திரம் செப்பேடுகள் எந்த ஓரிடத்திலும் குறிப்புக் கூடக் காட்டவில்லை. செப்பேட்டு வரி இவ்வளவு தெளிவாக இருந்தும், திரு. பண்டாரத்தார் பாதை மாறக் காரணம், பராந்தகன் காலத்தனவாகப் படித்துரைக்கப்பட்ட மூன்று கல்வெட்டுகள்தாம்.

குன்றப்போழனைக் குறிக்கும் கல்வெட்டுகள்

மலைநாட்டுப் புத்தூரைச் சேர்ந்த சங்கரன் குன்றப்போழன் என்பாரின் விளக்குக்கொடை பற்றிய மூன்று கல்வெட்டுகளுள் முக்கியமான கல்வெட்டு, லால்குடியிலுள்ள சப்த ரிஷீசுவரர் திருக்கோயிலில் உள்ளது (6). திருத்தவத்துறைக் கோயில் இறைவனுக்கு நந்தா விளக்கொன்று எரிப்பதற்குச் சேரமானார் மகளார் கோக்கிழானடிகள் சார்பில், இக்குன்றப்போழன், ஊரவையிடமிருந்து நிலமொன்று விலைக்குப் பெற்றுக் கோயிலுக்குத் தந்ததை இக்கல்வெட்டு கூறுகிறது. இது பரகேசரிவர்மனின் பதினாறாம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்டுள்ளது. குன்றப்போழனைக் குறிக்கும் மற்ற இரண்டு கல்வெட்டுகளும் குடுமியான் மலை மேலைக் கோயிலில் உள்ளன. இவை பரகேசரிவர்மனின் பதினைந்தாம் (7), பதினாறாம் (8) ஆட்சியாண்டுகளில் வெட்டப்பட்டுள்ளன. இவற்றில் கோக்கிழானடிகள் பற்றிய குறிப்பு ஏதுமில்லை. பத்தொன்பதாம் கல்வெட்டுத் தொகுதியைப் பதிப்பித்த திரு. ஜி.வி. சீனிவாசராவும் லால்குடிக் கல்வெட்டு குறிக்கும் கோக்கிழானடிகளைப் பராந்தகனின் மனைவியென்று கொண்டு இக்கல்வெட்டையும், குன்றப்போழனைப் பற்றிக் குறிப்பிடும் மற்ற இரண்டு கல்வெட்டுகளையும் முதற்பராந்தகனுடையவை என்று எழுதுகிறார் (9). இது பொருத்தமாகத் தெரியவில்லை. காரணங்களைப் பார்ப்போம் :

1. லால்குடிக் கல்வெட்டு குறிக்கும் கோக்கிழானடிகளும் உதயேந்திரம் செப்பேடுகள் குறிக்கும் கேரள இளவரசியும் ஒருவரா என்ற கேள்விக்கு முதலில் விடை காண்போம். உதயேந்திரம் செப்பேடுகள் முதலாம் பராந்தகனின் பதினைந்தாம் ஆட்சியாண்டில் வெளியிடப்பெற்றவை. இவை மிகத் தெளிவாகக் கேரள அரசர் மகள் ஒருவரை முதலாம் பராந்தகன் மணந்து கொண்ட செய்தியைத் தருகின்றன. சுந்தர சோழரால் வெளியிடப் பெற்ற அன்பில் செப்பேடுகள் இக்கேரள இளவரசிக்கும் பராந்தகனுக்கும் பிறந்தவனே அரிஞ்சயன் என்று எடுத்துரைக்கின்றன. அரிஞ்சயன் முதலாம் பராந்தகனின் மூன்றாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டொன்றில் திருமணமான நிலையில் காட்சி தருகிறாள் (10). இக்கல்வெட்டால் பராந்தகனுக்கும், அரிஞ்சயன் தாயான கேரள இளவரசிக்கும் முதலாம் ஆதித்தன் ஆட்சிக் காலத்திலேயே மணமாகிவிட்ட உண்மை வெளியாகிறது. இந்நிலையில் அரிஞ்சயனின் தாயான இந்தக் கேரள இளவரசியும், லால்குடிக் கல்வெட்டு குறிக்கும் கோக்கிழானடிகளும் ஒருவரேயெனில், லால்குடிக் கல்வெட்டு இப்பெருமாட்டியைக் குறிப்பிடுமிடத்தில் உரிய மரியாதைகளுடன் நம்பிராட்டியார் என்றோ, தேவியார் என்றோ அழைத்து அறிமுகப்படுத்தியிருக்கும். ஆனால், 'சேரமானார் மகளார் கோக்கிழானடிகளார்' என்றுதான் கல்வெட்டு உள்ளது. பராந்தகனின் மனைவிமார்களைக் குறிக்கும் கல்வெட்டுகள் அனைத்திலும் நம்பிராட்டியார் அல்லது தேவியார் என்ற சொல்லாட்சி தவறாமல் இருப்பதைப் பார்க்கும்போது லால்குடிக் கல்வெட்டு சேரமானார் மகளார் என்று மட்டு
ம் குறிக்கும் கோக்கிழானடிகள் பராந்தகனின் தேவியான கேரள இளவரசியாய் இருக்க முடியாதென்பது அங்கைக் கனியாய் விளங்கும்.

2. லால்குடிக் கல்வெட்டு குறிக்கும் கோக்கிழானடிகளும், முதலாம் இராசாதித்தனின் அன்னையாரான கோக்கிழானடிகளும் ஒருவர்தானா என்பதையும் பார்ப்போம். குடுமியான் மலை மேலைக் குடைவரையின் வடபுறத் தூணிலுள்ள முதலாம் பராந்தகனின் பதினைந்தாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில் இராசாதித்தன், 'சோழப் பெருமானடிகள் ஸ்ர் பராந்தகர் மகன் ஸ்ர் கோதண்டராமன்' என்று குறிக்கப் பெறுகிறார் (12). இவரே பராந்தகனின் மூத்த மகனென்று திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் கோயில் கல்வெட்டு உறுதியாய் உரைக்கிறது (13). இளையமகன் அரிஞ்சயனே பராந்தகனின் மூன்றாம் ஆட்சியாண்டில் திருமணமாகியிருந்த நிலையில், மூத்த மகன் இராசாதித்தன் வயதை நினைத்துப் பார்க்க வேண்டும். அப்படியானால் இராசாதித்தன் தாய்க்கும், பராந்தகனுக்கும் முதலாம் ஆதித்தன் ஆட்சியின் தொடக்கக் காலத்திலேயே திருமணம் முடிந்திருக்க வேண்டும். இந்நிலையில் இத்திருமணத்திற்குப் பல ஆண்டுகள் கழித்து வெட்டப்பட்ட லால்குடிக் கல்வெட்டு குறிக்கும் கோக்கிழானடிகள்தான், இராசாதித்தன் தாயென்றால் கல்வெட்டு இப்பெருமாட்டியைத் தகுந்த சிறப்பு செய்து அழைத்திருக்கும். நம்பிராட்டியாரென்றோ, தேவியாரென்றோ குறிக்கப்பெறாமல், சேரமானார் மகளார் என்று மட்டும் தன் பெயர் இக்கல்வெட்டில் குறிக்கப் பெறுவதை ஒருபோதும் பராந்தகன் தேவி ஒப்புக்கொண்டிருக்கமாட்டார். கோயிலாரும் மாமன்னனின் பட்டத்தரசியாரை வெறும் சேரமான் மகளெனக் கொண்டு கல்வெட்டைப் பொறித்திருக்க முடியாது. மேலும், பராந்தகனின் பட்டத்தரசி தான் வழ
ங்க விரும்பிய கொடையைத் தானே நேரடியாக வழங்காமல், மலைநாட்டுக் குன்றப்போழன் வழி வழங்க நேர்ந்த அவசியமென்ன என்பதைச் சிந்திக்க வேண்டும்.

ஆக, எந்நிலையில் பார்த்தாலும் லால்குடிக் கல்வெட்டு குறிக்கும் கோக்கிழானடிகளைப் பராந்தகன் தேவியாகக் கொள்ள முடியவில்லை. உதயேந்திரம் செப்பேடுகளும், அன்பில் செப்பேடுகளும் குறிக்கும் கேரள இளவரசியும் இவரில்லை. இராசாதித்தன் தாயான கோக்கிழானடிகளும் இவரில்லை.

3. கோக்கிழானடிகளைக் குறிக்கும் லால்குடிக் கல்வெட்டும், குன்றப்போழனைக் குறிக்கும் குடுமியான் மகைக் கல்வெட்டுகளும் சுட்டும் பரகேசரிவர்மன் யாரென்பதே ஐயத்திற்குரியதாகும். அப்பரகேசரிவர்மன் முதற்பராந்தகனாகவும் இருக்கலாம். உத்தமசோழனாகவும் இருக்கலாம். ஆனால் எழுத்தமைதி கொண்டு லால்குடிக் கல்வெட்டை உத்தமசோழனுடையதாகக் கருத வாய்ப்புண்டு. குடுமியான் மலைக் குன்றப்போழன் கல்வெட்டுகளை, இதே கோயிலில் உள்ள முதலாம் பராந்தகனின் கல்வெட்டுகளோடு (13அ) ஒப்பிடும்போது, எழுத்தமைதியில் மாற்றம் காணப்படுகிறது. இந்நிலையில் இம்மூன்று கல்வெட்டுகளுக்கும் உரிய பரகேசரிவர்மனை உத்தமசோழனாகக் கருதுவது பிழையாகாது.

தெளிவாகும் உண்மைகள்

அ. குன்றப்போழனைச் சுட்டும் மூன்று கல்வெட்டுகளும் திரு. ஜி.வி.சீனிவாசராவ் சொல்வது போல் முதலாம் பராந்தகனுடையவை அல்ல. அவை உத்தமசோழனுடையவையாகலாம்.

ஆ. லால்குடிக் கல்வெட்டு குறிக்கும் கோக்கிழானடிகள், இராசாதித்தன் தாயும், பராந்தகனின் மனைவியுமான கோக்கிழானடிகள் இல்லை. இவர் உத்தம சோழன் காலத்தில் வாழ்ந்த வேறோர் இளவரசி.

இ. உதயேந்திரம் செப்பேடுகள் குறிக்கும் கேரள இளவரசி திரு. பண்டாரத்தார் குறிப்பதுபோல் கோக்கிழானடிகள் இல்லை.

கேரள இளவரசி யார்?

(தொடரும்)

this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.