http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[180 Issues]
[1786 Articles]
Home About US Temples Facebook
Issue No. 99

இதழ் 99
[ செப்டம்பர் 2013 ]


இந்த இதழில்..
In this Issue..

காவிரிக் கரையிலோர் காவியக் கற்றளி - 5
Chola Ramayana 08
Thirumeyyam - 5
பிராட்டிக்குத் திருநாள் கண்ட திருக்கோயில்
விடங்கர் அருள்புரியும் வீராபுரம் திருக்கோயில்
தேடலில் தெறித்தவை - 6
எரிகதிர் நோக்கும் சிறுநெருஞ்சிப் பூவே!
இதழ் எண். 99 > கலைக்கோவன் பக்கம்
காவிரிக் கரையிலோர் காவியக் கற்றளி - 5
இரா. கலைக்கோவன்
செந்துறைக் கரணங்கள்

கோயிலின் வடபுறச் சுவரிலும் மேற்கிலும் தெற்கிலுமாய் உள்ள அரைத்தூண்கள் சிலவற்றில் ஐந்து அழகிய ஆடற்கரணக் கோலங்கள் சின்னஞ்சிறு கவிதைகளாய் செம்மயுறச் செதுக்கப்பட்டுள்ளன.


திருச்செந்துறை அரைத்தூண்களில் மாலைத்தொங்கல் சிற்பங்கள்
புகைப்படம் - சு.சீதாராமன்


இவற்றுள் ஒன்று சிவனார் ஆடுவதுபோல் அமைக்கப்பட்டுள்ளது. வலமுன் கையைக் காக்கும் குறிப்பிலும் இட முன் கையை அர்த்த ரேசித த்திலும் காட்டி நிற்கும் இப்பெருமானின் பின்கைகளில் உடுக்கையும் முத்தலை ஈட்டியும் உள்ளன. பனையோலைக் குண்டலங்களும் சடா மகுடமும் கொண்ட திருமுகம் வலப்புறமாய்த் திரும்பிப் புன்னகைக்க இடப்பாத த்தைப் பார்சுவமாய் ஊன்றி வல முழங்காலை உதரபந்த அளவிற்கு உயர்த்தி ஊர்த்வஜாநு கரணத்தில் உவகையோடு காட்சியளிக்கிறார் எம்பெருமான். ஏழு செ.மீ. அகலமும் பத்து செ.மீ. உயரமும் கொண்ட சின்னஞ்சிறு இடத்தில் சோழநாட்டுச் சிற்பிகள் காட்டியிருக்கும் கலைவண்ணம் காண்போரை மெய்மறக்கச் செய்கிறது. அசைவுகளில் மட்டுமின்றி மெய்ப்பாடுகளிலும் இயல்பான மென்மையைக் காட்டி ஒயிலும் எழிலும் ஒருங்கே அமைய நடிக்கும் இந்த உமைக்கு நல்லவர் இத்தனை நாட்களும் சுண்ணாம்புப் பூச்சுக்குள் மறைந்து கிடந்த கொடுமையை என்னென்பது? டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்று மையத்தினால் வெளிப்படுத்தப்பட்ட ஏனைய ஆடற்சிற்பங்களும் இவரைப் போலவே சின்னஞ்சிறியவை என்றாலும் சிறக்கச் செதுக்கப்பட்டவை.


திருச்செந்துறை மாலைத்தொங்கல் சிற்பங்கள்
புகைப்படம் - சு.சீதாராமன்


காவிரிக் கரையில் செழித்துக் கொழித்த கலைகளின் வெளிப்பாடுகளை நம் கடைவிழிகளுக்குக் காட்டி நிற்கும் இக்கவிதைச் சான்றுகளுள் ஒன்று சிவபெருமானின் ஊர்த்வஜாநுவை அடுத்து மேற்குச் சுவரிலேயே காணப்படுகிறது. இச்சிற்பத் தொகுதியில் மூன்று மகளிர் காட்டப்பட்டுள்ளனர். வலப்புறம் இருப்பவர் ஆடலரசியைப் பார்த்தபடியே தாளம் கொட்டுகிறார். இடப்புறம் இருப்பவர் அரை மண்டல நிலையில் தாமும் அசைந்தபடியே ஆடலுக்கேற்ப துடியை இயக்குகிறார். இருவருமே இடையாடை அணிந்துள்ளனர். தூக்கிச்சீவி, பக்கவாட்டில் கொண்டையாக முடிக்கப்பட்ட நிலையிலும் சற்றே சரிந்த முடியழகியராய்க்க கழுத்தணிகளும் கால் சிலம்புகளும் கொண்டு இசையெழுப்பும் இந்த இனிய நங்கையர்க்கு இடையில் இதமாய்க் கரணக்கோலம் காட்டுகிறார் இன்னோர் அழகி. இவரது வலப்பாதம் சூசியில் அமைய இடப்பாதம் பார்சுவமாய்த் திருப்பப்பட்டுள்ளது. வல முன்கை மார்பருகே அமைந்த கொடி முத்திரையில் கதைகள் பேச, இடக்கை உயர்த்திய ரேசிதமாய் அந்தக் கதைகளுக்கு விளக்கம் தருகிறது. இடுப்பாடையில் முடிச்சுகள் வலப்புறம், இடப்புறம், இடைநடுவே என்று மூவிடங்களில் தொங்கலாய் நிற்க முக அழகைத் தாளப் பெண்ணுக்கே காட்ட விரும்பியவர் போல வலப்புறம் திரும்பிய முகத்தினராய் இந்த ஆடல் நங்கை சூசிவித்தா கரணத்தை நயமுற நடித்துக் காட்டுகிறார். செதுக்கலில்தான் எத்தனை தெளிவு! எத்தனை திறம்! அசைவுகளில்தான் எத்தனை ஒயில்! எத்தனை எழில்! இந்தச் சிற்பங்களைப் பார்க்கும் கலையுணர்வுடைய எவருக்கும் கற்பனைகள் சிறகடிக்காமல் இருக்கவே முடியாது. எங்கெங்கோ அழைத்துச் செல்லும் இந்தக் கலைப்படைப்புக்களைப் படைத்தளித்த சோழச்சிற்பிகள்தாம் எத்தனை வல்லாளர்கள்! இந்தச் சிற்பக் காவியம் சிறைப்பட்டிருக்கும் இடத்தின் அகலம் பதினைந்து செ.மீ. உயரம் பன்னிரண்டு செ.மீ.


திருச்செந்துறை மாலைத்தொங்கல் சிற்பங்கள்
புகைப்படம் - சு.சீதாராமன்


வடபுறத்தூணில் இரண்டு ஆடல் அழகிழர். ஒருவர் சூசிவித்தா கரணத்திலும் மற்றொருவர் அர்த்த மண்டல வகைக் கரணமொன்றிலும் காட்சி தருகின்றனர். சூசிவித்தா அழகியின் வலக்கை மார்பருகே அமைந்த கொடிமுத்திரையிலும் இடக்கை அர்த்த ரேசித த்திலும் இருக்க வலப்பாதம் பார்சுவமாய்க் காட்டப்பட்டுள்ளது. இடப்பாதம் சூசியில் வலக்கணுக்காலருகே அமைந்த கரண இலக்கணத்தைக் கெட்டியாய்ப் பிடித்துக்கொள்ளப் பனையோலைக் குண்டலங்கள் கரண வேகத்தில் ஆடி நம்மை ஆர்வமாய் அழைக்க ஆயிரமாய் உணர்வுகளைத் தேக்கிய முகத்தில் காவியமாய்க் கதை வளர்க்கிரார் இந்த சுருள் கூந்தல் சுந்தரி.

அர்த்த மண்டலப் பெண் வலக்கையைத் தொங்கும் கையாக்கி இடக்கையை உயர்த்திய நிலையில் மலர்ந்த தாமரையாய் விரித்து இரண்டு பாதங்களையும் பார்சுவகமாய் அமைத்து ஆடல் நிகழ்த்துகின்றார். இவரும் அவருமாய் இந்தச் சின்னஞ்சிறு இடத்திற்குள் ஆயிரத்து நூறு ஆண்டுகட்கு முற்பட்ட கலைத்திறன்களுக்குக் காட்சிச் சான்றுகளாய் ஆடிக்காட்டும் அழகை எப்படி வியப்பது!

இந்தச் சிற்பங்களைப் பார்க்கும்போது அக்காலத்தில் இசையும் ஆடலும் பெற்றிருந்த சிறப்பான வளர்ச்சியையும் மகளிரே இசைக்கருவிகளை இயக்கியும் ஆடியும் குழுக்களாய் இயங்கிய நிலைகளையும் நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. தாளமும் துடியும் மட்டுமல்ல - மேளமும் கூட முழக்கிய மங்கையர் இருந்தனர் என்பதைப் புள்ளமங்கைச் சிற்பங்கள் புரியவைக்கின்றன. இந்தக் கரணச் சிற்பங்களையும் பிற ஆடற்சிற்பங்களையும் தமிழக அளவில் தொகுத்துவரும் டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம் தமிழக ஆடல்கள் பற்றித் தனித்த தோர் ஆய்வே மேற்கொண்டுள்ளது.

தென்மேற்குக் கோடியில் ஒன்றும் தென்கிழக்குக் கோடியில் ஒன்றுமாய்த்த தென்புற அரைத்தூண்களில் இரண்டு சிற்றுருவச் சிற்பங்கள் உள்ளன. இவற்றுள் தென்மேற்குக் கோடியில் உள்ள சிற்பம் வடபுறச் சிற்பம் போலவே சூசிவித்தா கரணத்தையும் அர்த்த மண்டல வகைக் கரணங்களுள் ஒன்றையும் காட்டும் அழகியருடன் அமைந்துள்ளது. இச்சிற்பத் தொகுதியில் சூசிவித்தா கரணத்தை ஆடிக்காட்டும் அழகியின் இடக்கை, மார்பருகே அமைந்த கொடிமுத்திரையிலும் வலக்கை அர்த்த ரேசிதத்திலும் காட்டப்பட்டுள்ளன.

இச்சிற்பத்திற்கும் வடபுறச் சிற்பத்திற்கும் உள்ள இன்னொரு வேறுபாடு. இதிலுள்ள சிற்பத் தெளிவும் ஆட்டத்தில் காட்டப்பட்டிருக்கும் விரைவும்தான். வடபுறக் கரணங்கள் தொடங்கு நிலையிலும் இந்த த் தென்புறக் கரணங்கள் சூடுபிடித்த நிலையிலும் காட்டப்பட்டுள்ளன. இந்த அழகியரின் முகத்திருப்பங்கள் ஆடை முடிச்சுகள் அசைந்துள்ள வேகம் கைகளின் வீச்சுக்கள்.. இவற்றைப் பார்க்கும்போது உணர்வு பூர்வமாக ஓர் ஆடல் மேடையின் முன்னால் அமர்ந்தபடி அங்கே நடக்கும் நயமும் விரைவும் நளினமும் கந்த ஆடற்கரணக் காட்சியைக் காண்பது போலவே தோன்றுகிறது. விடிகாலைப் பொழுதின் இலேசான குளிரும் தொலைவில் கேட்கும் புள்ளினங்களின் ஓசையும் அரசமர இலைகளின் ஒய்யார ஆட்டமும் இந்தச் சூழலையே கனவுலகமாக மாற்றிக்கொண்டிருக்க எதிரில் ஆடற்காட்சியென்றால் கேட்கவா வேண்டும்!

தென்கிழக்கு அரைத்தூணின் மேலே உள்ள பதினாறு செ.மீ. அகலமும் எட்டரை செ.மீ. உயரமும் கொண்ட செவ்வகத்தில் காளிதேவியின் போர்க்கோலம்! அரக்கன் ஒருவனைக் கொன்று வீழ்த்தியிருக்கும் இந்த த் தேவியின் வெற்றியைக் கொண்டாடிக் கீழே உள்ள சதுரங்களில் ஓர் ஆணும் பெண்ணும் இடக்கை ஏந்திய முத்தலை ஈட்டிகளுடன் வலக்கைகளில் உடுக்கைகளை ஏந்தி வெற்றிக்களிப்பு எக்களிக்க அசுர தாண்டவமாடுகின்றனர். காலமைப்பைக் கண்டால் இதுவும் சூசிவித்தாவையே சுட்டுகிறது. ஆனால் கையமைப்பு மாறுபட்டுள்ளது. அரக்கனைக் கொன்ற தேவியின் புகழ்பாடி ஆனந்த வெறிக்கூத்து நிகழ்த்தும் இந்த இருவரின் ஆடல் வேகமும் நம்மை பிரமிக்க வைப்பதுடன் சற்று அச்சுறுத்தவும் செய்கின்றது. இதே தோற்றங்களில் இன்றைய ஆடல் நிகழ்வுகள் நடப்பதை நினைக்கும்போது கலைமரபுரகளின் தொடர்ச்சியையும் சாசுவதத்தையும் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.