http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 107
இதழ் 107 [ மே 2014] இந்த இதழில்.. In this Issue.. |
தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் செல்லும் நெடுஞ்சாலையில் தஞ்சையிலிருந்து பதினான்கு கிலோமீட்டர்கள் தள்ளி அமைந்துள்ளது பசுபதிகோயில் என்ற சிற்றூர். நெடுஞ்சாலையிலிருந்து இடதுபுறம் திரும்பி ஓரிரு கிலோமீட்டர்கள் பயணம் செய்தால் புள்ளமங்கை திருவாலந்துறையார் கோயிலை அடையலாம். புள்ளமங்கலத்து திருவாலந்துறை மஹாதேவர் என்று இங்குள்ள இறைவன் முதலாம் பராந்தகர் காலக் கல்வெட்டு ஒன்றால் குறிப்பிடப்படுகிறார் (1). இதுவரை இங்குப் படியெடுக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளில் மிகப்பழமையானது முதலாம் பராந்தகர் காலக் கல்வெட்டு என்பதால் இக்கோயில் முதலாம் பராந்தகர் காலத்தில் எடுப்பிக்கப்பட்டது என உறுதிப்படுத்தலாம். இவைதவிர, ஆதித்த கரிகாலர், முதலாம் இராஜராஜர்(2) ஆகியோரது கல்வெட்டுகளும் கண்டறியப்பட்டுள்ளன.
விமானம் கிழக்கு நோக்கி அமைந்துள்ள இக்கோயிலின் முத்தள விமானம் தூய நாகர வகையைச் சேர்ந்ததாகும். விமானம் கர்ணபத்தி - சாலைப்பத்தி - கர்ணபத்தி என்று பிரிக்கப்பட்டுள்ளது. இப்பத்திகள் அனைத்தும் பிதுக்கமாக அமைய, இரண்டு பத்திகளுக்கு இடைப்பட்ட பகுதிகள் ஒடுக்கமாகத் தரைத்தளத்தில் பஞ்சரத்தைக் கொண்டு அமைந்துள்ளன. தென்மேற்கு மூலையிலிருந்து விமானம் தாங்குதளம் கபோதபந்தத் தாங்குதளத்தைக் கொண்டுள்ள இவ்விமானத்தின் தாங்குதளம், தரையில் உபஉபானத்திலிருந்து துவங்குகிறது. தெற்கிலும் மேற்கிலும் இவ்வுபஉபானம் தரைக்கு வெளியில் தெரியவில்லை. அதற்குமேல் உபானம் அமைந்துள்ளது. உபானத்திற்கு மேல் ஜகதி, உருள்குமுதம் அமைய, கண்டப்பகுதியானது மேலும் கீழும் அணைக்கப்பட்ட கம்புகளுடன் கண்டபாதங்களில் சிற்றுருவச் சிற்பங்களைக்கொண்டு அமைந்துள்ளது. அதன்மேல் சந்திரமண்டலத்துடனும் முனைகளில் கொடிக்கருக்குகளுடனும் கூடிய கபோதமும் பூமிதேசமும் அமைந்துள்ளன. வேதிகைத்தொகுதி பிதுக்க ஒடுக்கங்களில் வேறுபாடின்றி மேலும் கீழும் கம்புகளுடன் கூடிய வேதிகண்டம் மற்றும் வேதிகையைப் பெற்றுள்ளது. இவ்வேதிகையிலும் வேதிபாதங்களில் சிற்றுருவச் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. பஞ்சரங்கள் பிதுக்கமாக அமைந்துள்ள இரு பத்திகளுக்கு இடைப்பட்ட ஒடுக்கங்களில் உபானத்திற்கு மேலிருந்து பத்மஜகதி, உருள்குமுதம், பிரதிவரி என்றமைந்த பிரதிபந்தத் தாங்குதளத்தையும், அதற்குமேல் வேதிகைத்தொகுதி, நான்முக அணைவுத்தூண்களைப் பெற்ற சிற்பங்களற்ற சுவர், கூரை உறுப்புகள், ஆடல் மகளிர் அல்லது அடியவர்களைப் பெற்ற கிரீவம் ஆகியவற்றைப் பெற்று, கபோதத்திலுள்ள நாசிகையில் முடிகிறது. இவற்றை ஒரு தனி விமானம் என்று சொல்ல முடியாதவாறு ஒரு விமானத்திற்கு வேண்டிய சிகரமும் ஸ்தூபியும் கபோதத்தின் நாசிகையால் நிரப்பப்பட்டுள்ளன. சுவர் தரைத்தளத்தின் கர்ணபத்திகள் கோட்டங்களோ இறைத்திருமேனிகளோ இல்லாமல் வெறுமையாக இருக்க, சாலைப்பத்திகள் அனைத்தும் கோட்டங்களைப் பெற்று, அவற்றில் தெற்கில் பிற்காலத்தில் அமைக்கப்பட்ட ஆலமர் அண்ணல், மேற்கில் லிங்கோத்பவர், வடக்கில் நான்முகன் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. இக்கோட்டங்கள் உருள்வடிவ அரைத்தூண்களாலும், சாலைப்பத்திகள் எண்முக அரைத்தூண்களாலும், கர்ணப்பத்திகள் நான்முக அரைத்தூண்களாலும் அணைக்கப்பட்டுள்ளன. சாலைப்பத்தியின் கோட்டம் தவிர்த்த பகுதிகளில் அவ்வவ்விறைத் திருமேனிகளின் தொடர்புடைய சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. ஆலமர் அண்ணலின் இருபுறமும் காட்டு விலங்குகள் மற்றும் அடியவர்கள், லிங்கோத்பவரின் இடதுபுறம் திருமால் மற்றும் வலதுபுறம் நான்முகன், வடக்கிலுள்ள நான்முகனுக்கு இருபுறமும் அடியவர்கள் இடம்பெற்றுள்ளனர். கோட்டங்கள் அனைத்தும் மேலே மகரதோரணங்களைப் பெற்றுள்ளன. ஆலமர் அண்ணல் (தெற்கு) லிங்கோத்பவர் (மேற்கு) மேற்குச் சுவர் நான்முகன் (வடக்கு) அணைவுத்தூண்கள் மேலே குறிப்பிட்ட உருள், எண்முக மற்றும் நான்முக அணைவுத்தூண்கள் அனைத்துமே ஒரு தூணுக்குரிய அனைத்து உறுப்புகளையும் பெற்று அமைந்துள்ளன. உருள் மற்றும் எண்முக அரைத்தூண்களின் கீழ்ப்பகுதி (பாதம்) சதுரமாக உள்ளது. எல்லா அரைத்தூண்களின் மேல்பகுதிகளும் மாலைத்தொங்கல், தாமரைக்கட்டு, கலசம், தாடி, கும்பம், பாலி, பலகை மற்றும் வீரகண்டத்தைப் பெற்றுள்ளன. எல்லா அரைத்தூண்களிலும் பலகை நான்முகமாக அமைய, மற்ற எல்லா உறுப்புகளும் அவ்வத்தூண்களின் வடிவிற்கேற்ப வட்டமாகவும் எண்முகமாகவும் நான்முகமாகவும் அமைந்துள்ளன. இவ்வரைத்தூண்களுக்கு மேல் பட்டையுடன் கூடிய குளவுப்போதிகை இடம்பெற்றுள்ளது. பட்டையில் கொடிக்கருக்குகள் உள்ளன. பத்திகள் பிதுக்கமாக உள்ளதால் போதிகைகள் முகப்பிலும் பக்கவாட்டிலும் அமைந்துள்ளன. பலகைகளின்மீது கபோதந்தாங்கிகளாக ஆடல் மகளிர் கரணச்சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. கூரை உறுப்புகள் போதிகைக்கு மேல் வாஜனமும், அதற்கு மேலுள்ள வலபியில் பூதகணங்களும் காட்டப்பட்டுள்ளன. சந்திரமண்டலத்துடன் கூடிய கபோதத்தில் நாசிகைகளும் முனைகளில் கொடிக்கருக்குகளும் இடம்பெற்றுள்ளன. கபோதத்திற்கு மேல் பூமிதேசத்துடன் தரைத்தளம் முடிவு பெறுகின்றது. ஆர உறுப்புகள் மற்றும் மேற்றளங்கள் தரைத்தளத்தின் (முதல்தளம்) மேலுள்ள ஆரமானது நான்கு முனைகளிலும் கர்ணகூடங்களையும், நடுவில் சாலைகளையும், அவற்றை இணைக்கும் ஆரச்சுவரில் நேத்ரநாசிகைகளையும் கொண்டு ஒட்டியமாலையாக உள்ளது. கர்ணகூடங்களின் நாசிகைகளில் அடியவர் சிற்பங்கள் அமைக்கப்பட்டிருக்க, சாலைகளின் நாசிகைகள் தெற்கில் பிச்சை உகுக்கும் அண்ணலையும் மேற்கில் வைகுந்தரையும் வடக்கில் பிரம்மாவையும் பெற்றுள்ளன. இரண்டாம் தளச் சுவரும் கர்ணபத்தி - சாலைப்பத்தி - கர்ணபத்தி என்ற அமைப்பில் அமைந்துள்ளது. இரண்டாம் தள ஆரத்தின் கர்ணகூடத்தையும் சாலையையும் இணைக்கும் ஆரச்சுவரில் ஒரேயொரு நாசிகை உள்ளது. இத்தளத்தின் ஆரமும் ஒட்டியமாலையாக அமைந்து, தெற்கில் காளைத்தேவரையும் மேற்கில் நரசிம்மரையும் கொண்டுள்ளது. வடக்கில் இருப்பவர் திரிபுராந்தகர் ஆகலாம். மூன்றாம் தளத்தின் சாலைப்பத்தி மட்டும் பிதுக்கமாக அமைந்து, பூமிதேசத்திற்குமேல் ஆர உறுப்புகளுக்குப் பதிலாக மூலைகளில் பக்கத்திற்கொன்றாக ஒன்றையொன்று பக்கவாட்டில் நோக்கியபடி இரண்டிரண்டு நந்திகள் உள்ளன. விமானத்தின் மேற்றளங்கள் உச்சி உறுப்புகள் கிரீவம், சிகரம் மற்றும் ஸ்தூபியைக் கொண்ட உச்சியின் கிரீவப்பகுதி எல்லாத்திசைகளிலும் நடுப்பகுதியில் வெற்றுக்கோட்டத்தைப் பெற்று உருள்வடிவ அரைத்தூண்களால் அணைக்கப்பெற்றுள்ளன. இக்கோட்டங்களின்மேல் மகாநாசிகைகள் நாகர சிகரத்தின் நாற்புறமும் அமைந்துள்ளன. சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுகள் பிறிதொரு கட்டுரையில். பின்குறிப்புகள்: 1. புள்ளமங்கைக் கல்வெட்டுகள் (இரா.சுஜாதா, கோ.வேணிதேவி), வரலாறு-2, டாக்டர். மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய வெளியீடு. 2. புள்ளமங்கைக் கல்வெட்டுகள் (மு.நளினி), வரலாறு-3, டாக்டர். மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய வெளியீடு. this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |