http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 107
இதழ் 107 [ மே 2014] இந்த இதழில்.. In this Issue.. |
சென்னை - பூந்தமல்லி, செம்பரம்பாக்கம் வழியாக அரக்கோணம் செல்லும் சாலையில் பேரம்பாக்கத்திலிருந்து 3 கி.மீ தொலைவிலும், 'கூவம்' என்னும் தலத்திலிருந்து 7 கி.மீ தொலைவிலும் சிவபுரம் என்னும் ஊரில் வரலாற்றுச் சிறப்பு மிக்க திருக்கோயில் அமைந்துள்ளது. சென்னை - காஞ்சிபுரம் சாலையில் சுங்குவார் சத்திரம் என்னும் ஊரிலிருந்தும் இவ்வூருக்கு வரலாம்.
'சிவபுரம்' என்று இன்று அழைக்கப்பட்டாலும், சோழர்காலத்தில் 'உரோகடம்' என்று பெயரிட்டு அழைக்கப்பட்டதைக் கல்வெட்டுகளின் மூலம் அறிகிறோம். இக்கோயில் அதிட்டானம் முதல் சிகரம் வரை முழுவதும் கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. கருவறை, அந்தராளம், அர்த்தமண்டபம், முன்மண்டபம் என்ற அமைப்புடன் விளங்குகிறது. விமானம் நாகர ஆதிதளத்தையும் வேசர கிரீவ சிகரங்களையும் கொண்டு அமைந்துள்ளது. கருவரை மற்றும் மண்டப தேவகோட்டங்களில் கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகிய தெய்வத்திருமேனிகள் சிற்பங்கள் வழிபடப் பெறுகின்றன. கல்வெட்டுகள் இக்கோயிலில் முதலாம் இராஜராஜசோழன், முதலாம் இராஜேந்திரசோழன், முதலாம் இராஜாதிராஜன், முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் ஆகியோரது கல்வெட்டுகள் (மொத்தம் 22 கல்வெட்டுகள்) காணப்படுகின்றன. இங்கு எழுந்தருளி அருள்புரியும் இறைவன் 'இராஜராஜீசுவரமுடைய மகாதேவர்' எனப் பெயரிட்டு அழைக்கப்படுகிறார். ஜெயங்கொண்ட சோழமண்டலத்து மணவிற்கோட்டத்துப் புரிசை நாட்டு 'உரோகடம்' என்ற நாட்டுப்பிரிவில் அடங்கியதைக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. சிவபுரம் இவ்வூர் 'உரோகடம்' என்ற பெயருடன் கல்வெட்டுகளில் குறிக்கப்படுகிறது. முதலாம் இராஜேந்திரசோழன் காலத்திய 8 மற்றும் 13ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுகளில் சிவபுரம் என்ற பெயர் குறிக்கப்படுகிறது. எனினும் 12ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில் 'புரிசைநாட்டுச் சிவபுரத்து இராஜராஜீசுவரமுடையார்' என்று குறிக்கப்படுவதால் இவ்வூர் சிவபுரம் எனத் தொடர்ந்து அழைக்கப்பட்டது என்பதை அறியமுடிகிறது. கோயிலின் காலம் இக்கோயிலில் காணப்படும் தொன்மையான கல்வெட்டு முதலாம் இராஜராஜசோழனின் 24வது ஆட்சியாண்டு(கி.பி. 1009)க் கல்வெட்டாகும். இக்கோயிலுக்கு இறையிலி தேவதானமாக முன்னர் கொடையளிக்கப்பட்ட நிலம் நீக்கி, மற்றோர் நிலத்தை இறையிலி தேவதானமாக விற்றுக் கொடுத்த செய்தி கல்வெட்டில் காணப்படுகிறது. உரோகடத்து ஊரார் சொல்ல எழுதினேன் இவ்வூர் வைகானசன் கேசவன் நாராயணன் எழுத்து எனக் கல்வெட்டில் குறிக்கப்படுகிறது. தொன்மையான கல்வெட்டாக விளங்குவதால் சிவபுரம் கோயில் முதலாம் இராஜராஜசோழன் காலத்தில் கட்டப்பட்டிருக்க வேண்டும் எனக் கருத முடிகிறது. முதலாம் இராஜேந்திரன் இக்கோயிலில் முதலாம் இராஜேந்திரசோழனின் 14 கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இம்மன்னனின் 7, 8, 9, 11, 12, 13, 16, 21, 26ம் ஆட்சியாண்டுகளைச் சேர்ந்த கல்வெட்டுகள், இக்கோயிலில் மிகச்சிறந்த நிலையில் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை எடுத்துக் கூறுகின்றன. சிவபுரத்திற்கு அருகில் 'கூவம்' என்ற பாடல்பெற்ற தலம் உள்ளது. அவ்வூர் 'மதுராந்தக நல்லூர்' என்றும் அழைக்கப்பட்டது. கூவமான மதுராந்தநல்லூர் உடன் சேர்ந்த சிற்றரையர் புதூரான ஶ்ரீமதுராந்தக சேரியிலுள்ள ஏரிக்குப் பாலாற்றிலிருந்து நீர் பாய்கின்ற வாய்க்காலை உரோகடம் இராஜராஜீசுவரமுடைய மகாதேவர்க்கு இறையிலி தேவதானமாகக் கொடையளித்த செய்தி இராஜேந்திரசோழனின் 7ம் ஆட்சியாண்டு (கி.பி. 1019) கல்வெட்டில் கூறப்படுகிறது. 8வது ஆட்சியாண்டில் (கி.பி. 1020), இராஜேந்திரசோழன் நந்தாவிளக்கு இரண்டு எரிக்க 180 ஆடுகள் தானமளித்திருக்கின்றான். மேலும் இக்கோயிலுக்கு இத்தேவர் தேவதானம் நகரம் சிவபுரத்து சங்கரப்பாடியான், நாரணன் செல்வன் மணவாட்டி (மனைவி) வாசவி என்பவள் நந்தாவிளக்கு ஒன்று எரிக்க 90 ஆடுகள் அளித்ததாகக் கூறுகிறது. உண்ணாழிகை உடையார்களும், சிவபண்டாரிகளும் நித்தம் உழக்கு நெய் கோயிலுக்கே கொண்டுவந்து கொடுத்து விளக்கு எரிப்பதற்காகச் சம்மதித்தனர் என்பதைக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. 9வது ஆட்சியாண்டுக் கல்வெட்டு (கி.பி. 1021) மிகச்சிறப்பான செய்தியைக் கூறுகிறது. இக்கோயிலில் எழுந்தருளி அருள்புரியும் இராஜரஜீசுவரமுடையார் மகாதேவர்க்கு (1) திருப்பொற்கொள்கை, (2) பொற்பூ, (3) பொன்னால் ஆன பட்டம், (4) மண்டை மற்றும் பொன் மற்றும் ஆபரணங்கள் (மாணிக்கம் - வைரம் - பச்சை - சிவப்புக் கற்கள் பதித்தது), மாணிக்கத்தாலி, வட்டமணி, செவிமலர், வெண்சாமரை, பொற்பூ, திருமாலை போன்றவை அளிக்கப்பட்டதாகக் கல்வெட்டு விரிவாக எடுத்துக் கூறுகிறது. அவற்றின் எடையும் குறிக்கப்பட்டுள்ளது. மேலும் முதலாம் இராஜேந்திர சோழன் காலத்தில் இக்கோயிலுக்கு (1) ஆடவல்லான் - அபிமான மேரு விடங்கர் மற்றும் (2) நம்பிராட்டியார் (சிவகாமி அம்மன்) (3) ரிஷபவாகன தேவர் (4) நம்பிராட்டியார் ஆகிய திருமேனிகளும் செய்தளிக்கப்பட்டன. இத்திருமேனிகளுக்குப் பொன்னால் தன அபிஷேகம், திருமாலை, காதில் அணியும் தோடு, வாகுவலையம், திருக்கைக் காறை, திருக்காற்றாறை, பாதசாயல் போன்ற அணிகலன்களும் செய்தளிக்கப்பட்டிருக்கின்றன. 11வது ஆட்சியாண்டில் (கி.பி.1023) இக்கோயில் கன்மிகள் வழியாக நீர்வேளூர் சபையார் பண்டாரத்திலிருந்து 20 கழஞ்சு பொன் பெற்று வட்டியாக இராஜகேசரி எனும் அளவையால் நெல் பண்டாரத்தில் கொண்டு வந்து கொடுக்கச் சம்மதித்தனர் என்ற செய்தி காணப்படுகிறது. இதே போன்று இவ்வூருக்கு அருகில் உள்ள சிவன் கூடல் சபையினர் இக்கோயில் நிர்வாகிகளிடமிருந்து 400 காசுகள் பெற்றுக் கொண்டனர். அதற்கு வட்டியாக ராஜகேசரி எனும் அளவையால் பதக்கு நெல்லாக 400 காசுக்கு 66 கலம் 2 தூணி நெல்லாக ஒவ்வொரு வருடம் கோயில் திருமுற்றத்தில் அளித்திட சம்மதம் தெரிவித்த செய்தி கூறப்படுகிறது. 12வது ஆட்சியாண்டில் (கி.பி.1024) சிவபுரத்து ஸ்ரீராஜராஜ ஈசுவரமுடிய மகாதேவர் கோயிலில் ந ந்தாவிளக்கு ஒன்று எரிப்பதற்கு அமணிவல்லவன் ராஜராஜனான ராஜேந்திர சோழ இருங்கோளர் தேவியார் தேவன் பொன்னாலியார் என்பவள் கொடையளித்த 96 ஆடுகளப் பெற்றுக்கொண்ட திருவுண்ணாழிகை உடையார்களும் சிவபண்டாரிகளும் நித்தம் விளக்கு எரிப்பதற்குத் தேவையான உழக்கு நெய்யைக் கோயிலுக்குக் கொண்டு வந்து கொடுக்க ஒப்புக்கொண்டு கையெழுத்திட்ட செய்தி கல்வெட்டில் காணப்படுகிறது. மற்றொரு கல்வெட்டில் மன்றாடி காளிதாதன் அடியார் என்ற பெயர் காணப்படுகிறது. 13ம் ஆட்சியாண்டில் தேவதானம் நகரம் சிவபுரத்துச் சங்கரபாடியான் சாத்தன் மாகண்டனான சுந்தர மாயிலாட்டி வைத்த இரு நந்தா விளக்குகள் எரிப்பதற்குக் கொடையளித்த 180 ஆடுகளை திருவுண்ணாழிகை உடையவர்களும் தேவகன்மிகளும் பெற்றுக்கொண்டனர். நாள்தோறும் நெய் அளக்கவும் சம்மதித்தனர். மேலும் இதே 13வது ஆட்சியாண்டில் (கி.பி.1025) இக்கோயில் வழிபாட்டில் இருந்த சிவபுரச் செல்வர் எனும் திரிபுர விஜயர் (திரிபுராந்தக மூர்த்தி) மற்றும் நம்பிராட்டியார் திருமேனிகளுக்கு ஓவ்வொரு சந்தி வழிபாட்டின்போதும் திருவமிர்து, கறியமுது, நெய், தயிர், அடைக்காய் அமுதுகளும் இறைவனுக்குச் சார்த்தியருள திருப்பரிசட்டத்துக்கும் (ஆடை) நிலம் தானம் அளிக்கப்பட்ட செய்தி கூறப்படுகிறது. மேலும் இதே ஆட்சியாண்டில் கோயிலில் இரண்டு விளக்குகள் எரிக்க வைத்த 180 ஆடுகளை தேவகன்மிகள் பெற்றுக்கொண்டு நெய் அளக்கச் சம்மதித்தனர். இதனை அளித்தவர் தேவதானம் நகரம் சிவபுரத்து மாநகரத்தைச் சேர்ந்த பிராமணன் வலியடக்கி தோளனான ஆயிரபட்டன் என்பவராவார். அவர் பெயரைக் குறிப்பிடும் பொழுது நகரக் கணக்கு எனக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இந்நகரத்தின் கணக்கு எழுதும் காணியை (உரிமையை) விலைக்கு வாங்கி எழுதுவதற்கு கோயிலில் விளக்கு எரிக்க 180 ஆடுகள் கொடையளிக்கப்பட்டது என்பதையும் அறிய முடிகிறது. 16வது ஆட்சியாண்டில் இக்கோயில் பண்டாரத்திலிருந்து சிங்களாந்தகச் சதுர்வேதி மங்கலத்து மகாசபையினர் 100 கழஞ்சு பொன்னைப் பெற்றுக்கொண்டு அதற்கு வட்டியாக ஆண்டு தோறும் 166 கலம் 2 தூணி நெல் கோயிலில் அளந்து கொடுப்பதாகச் சம்மதித்தனர். இதே போன்று கோட்டூராகிய சோழச் சதுர்வேதி மங்கலத்திலிருந்து சபையினர் 40 கழஞ்சு பொன் பெற்றுக்கொண்டு 66 கலம் 2 தூணி நெல் கோயில் பண்டாரத்தில் வந்து அளித்திடச் சம்மதித்துள்ளனர். 21வது ஆட்சியாண்டில் (கி.பி.1033) சோமன் குமாரனான மதுராந்தக மாராயர் என்பவர் பாசாலி நாட்டு பாசாலி வீரன் உத்தமச் சோழன் கங்கை கொண்டார் என்பவரிடமிருந்து 30 காசுகளை அளித்து காசொன்றுக்கு ஓராண்டு வட்டி இராஜகேசரி எனும் மரக்காலால் பதக்கு வீதம் 30 காசுகளுக்கு வட்டியாக வந்த ஐங்கல நெல்லை சிவபுரத்துக் கோயிலில் ஐப்பசி மாத த்தில் நடைபெறும் திருவேட்டைத் திருவிழாவில் இறைவனுக்குப் பெருந்திருவமுது படைக்க க் கொடையளிக்கப்பட்டது. அக்கொடை மூலம் அரிசி ஒரு கலம், நெய் இரு நாழி, எண்ணை இரு நாழி, தயிர் பதக்கு, பலவிதமாக கறியமுது நான்கு, மிளகு உழக்கு, கடுகு உழக்கு, சர்க்கரை நாழி, விறகிடுவானுக்கும் குசவனுக்கும் (பானை செய்து தருவதற்கு) ஆகியவற்றுக்கு மேலே குறிப்பிடப்பட்ட ஐந்து கலம் நெல் சரியானது (செலவானது) எனக் கல்வெட்டு துல்லியமாக க் குறிப்பிடுகிறது. மேலும் இதே ஆட்சியாண்டில் (கி.பி.1033) சோழமண்டலத்து உய்யக்கொண்டார் வளநாட்டு திருவழுந்தூர் நாட்டுக் கடவூர் அரிந்தம நல்லூருடையான் நீலன் வெண்காடன் என்பவன் அளித்த கொடையைக் கொண்டு (துளைநிறை காசு கல்லால் 25 கழஞ்சு பொன்) சுவாமி போகமாக நிலம் அளிக்கப்பட்டது. இதனைக் கொண்டு வேதம் ஓதும் அந்தணர்களுக்கு அமுது அளிக்கவும் இதர செலவுகளுக்காகவும் அருமொழித்தேவன் என்ற அளவையால் நெல் அளிக்கப்பட்டது. இதனை சிலாலேகை (கல்வெட்டு) செய்வித்தோம் சிவபுரம் ஸ்ரீராஜராஜ ஈசுவரமுடையார் ஸ்ரீகாரியம் சிவபண்டாரிகள் தேவகன்மிகள் என்று கல்வெட்டு விரிவாகக் கூறுகிறது. 26வது ஆட்சியாண்டில் (கி.பி.1038) கன்றூர் நாட்டி சோழ விச்சாதரச் சதுர்வேதி மங்கலத்துச் சபையார் இக்கோயிலுக்கு நிலம் ஒன்றினை இறையிலி தேவதானமாக 10 ராஜராஜன் காசு பெற்றுக்கொண்டு நில விலையாவணம் செய்து கொடுத்துள்ளனர். இந்நிலத்தினை உழுது பயிர் செய்து வரும் வருவாயினைக் கொண்டு இறைவனுக்கு அமுது படைக்கும் பொருட்டு சிவயோகி ஒருவருக்கு உணவளிக்க தானம் அளித்த செய்தி கல்வெட்டில் காணப்படுகிறது. முதலாம் ராஜாதிராஜன் (கி.பி. 1018 - 1054) இம்மன்னரின் 27வது ஆட்சியாண்டு கல்வெட்டில் இக்கோயிலில் ஆதித்தவாரம் (ஞாயிறு) தோறும் ‘ஆதித்த வாரப் பெரும்பலி’ என்ற சிறப்பு வழிபாடு நடைபெறத் தானம் அளித்த செய்தி விரிவாகக் கூறப்பெறுகிறது. தானம் அளிக்கப்பட்ட நிலத்திலிருந்து வரும் நெல்லினைக் கொண்டு திருவாராதனை செய்வார், திருவுண்ணாழிகை உடையார், மாணிகள் அறுவர், பதியார் 24 பேர் பஞ்சாசாரியர், வீணை வாசிப்பார், உடுக்கை வாசிப்பான், திருப்பதியம் பாடுவான், திருவாய்க் கேழ்வி உடையான், பாடவியம் உள்ளிட்ட உவச்சர் பதின்மர், கவரிப்பிணாக்கள் (சாமரம் வீசுபவர் 12 பேர்) திருப்பள்ளித் தொங்கலிடுபவர் (குடை பிடிப்பவர்) நால்வர், கணக்கன், பண்டாரி, திருமெய்க்காப்பாளர் நால்வர், திருப்பள்ளிதாமம் பறித்து (மாலை) தொடுப்பானுக்கு விளக்குப் பிடிப்பார் நால்வர், கொடி பிடிப்பார் நால்வர் ஆகியோருக்கு அளிக்கப்பட்டதாகக் கூறுகிறது. ஒரு திருக்கோயிலில் பணிபுரிந்தவர்களைப் பற்றி அறிந்துகொள்ள இக்கல்வெட்டு பெரிதும் உதவுகிறது. முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியன் பாண்டிய மன்னனுடைய 15ஆம் ஆட்சியாண்டு (கி.பி.1267) கல்வெட்டு இரண்டு இக்கோயிலில் காணப்படுகின்றன. இவ்வூர்க் கோயிலில் சந்தி விளக்கு ஒன்று எரிப்பதற்கு அருகில் உள்ள கூவம் என்ற தடாக சமுத்திர நல்லூரைச் சேர்ந்த வாசுதேவன் காரானை விழுப்பரையன் மகள் ஆறைச்சியார் என்பவள் கோயில் சிவப்பிராமணர்கள் வசம் ஒன்பது பணம் அளித்த செய்தியும் மேலும் சந்தி விளக்கு எரிக்க மாத்தூர் கிழவன் வடுகன் இராவிழுப்பரையனின் மகள் உமையாண்டை என்பவள் ஒன்பது காசுகளைத் திருக்கோயில் பிராமணர் வசம் அளித்த செய்தியும் கூறப்படுகின்றன. பாண்டியர் காலக் கல்வெட்டுக்களில் இவ்வூர் ஊரோடகம் எனக் குறிப்பிடப்படுகிறது. முன்பு சோழர் கல்வெட்டுக்களில் இவ்வூர் உரோகடம் எனக் குறிப்பிடப்பட்டது. முடிவுரை காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் உள்ள சிவபுரம் என்ற ஊரில் உள்ள இராஜராஜ ஈசுவரமுடைய மகாதேவர் கோயில் கல்வெட்டுக்கள் இவ்வாறு பல வளமான வரலாற்றுச் செய்திகளை உள்ளடக்கியுள்ளன. தற்போது இக்கோயில் சிறியதாக க் காணப்பட்டாலும் பண்டைய காலத்தில் பல்வேறு சிறப்புக்களுடன் திகழ்ந்துள்ளது. ஆதித்தவாரப் பெரும்பலி போன்ற சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றுள்ளன. ஐப்பசி மாத த்தில் திருவிழாக்கள் நடைபெற்றுள்ளன. கோயிலில் பணிபுரிந்த பல்வேறு பணியாளர்களைப் பற்றிய விரிவான செய்திகள் காணக் கிடைக்கின்றன. முதலாம் இராஜேந்திர ர் காலத்தில் பல்வேறு செப்புத் திருமேனிகள் செய்தளிக்கப்பட்டுள்ளன. அவற்றின் பெயரும் எடையும் தஞ்சைப் பெருவுடையார் திருக்கோயில் கல்வெட்டுக்களில் உள்ளது போன்று துல்லியமாக க் குறிப்பிடப்பட்டுள்ளது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இக்கோயிலை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வரலாற்றுச் சின்னமாக அறிவித்துப் போற்றிப் பாதுகாத்து வருகிறது. அடிக் குறிப்புக்கள் 1) ARE 1959-60 - 280 - 290 2) ARE 1961-62 - 226 - 234 3) தொல்லியல் சுற்றுலா - தொல்லியல் துறை வெளியீடு 2010 பக்கம் 17 4) தமிழகத் தொன்மைச் சின்னங்கள் - பாதுகாப்பு அறிக்கை 2002-2005 பக்கம் 59, 66 5) காஞ்சிபுரம் மாவட்டத் தொல்லியல் கையேடு - இரா. சிவானந்தம், தொல்லியல் துறை வெளியீடு 2008 பக்கம் 184 6) தமிழ்நாட்டுக் கல்வெட்டுக்கள் - தொகுதி 4 - பொது பதிப்பாசிரியர் முனைவர் சீ.வசந்தி, பதிப்பாசிரியர் இரா.சிவானந்தம் - 2013 பக்கங்கள் ; 1- 48 வரை (தொல்லியல் துறை வெளியீடு) this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |