http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 112
இதழ் 112 [ அக்டோபர் 2014 ] இந்த இதழில்.. In this Issue.. |
எழில் கொஞ்சும் காவிரி ஆற்றங்கரையில் தஞ்சாவூரிலிருந்து 13 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது திருவையாறு என்னும் திருத்தலம். ஐந்து நதிகள் ஓடும் சிறப்புடன் இங்கு குடிகொண்டிருக்கும் ஐயாறப்பரும் நாதப்பிரம்மம் தியாகராஜரும் மேலும் இவ்வூரை மிளிரச் செய்கின்றனர். ஐயாறப்பர் என்று தமிழிலும் பஞ்சநதீசுவரர் என்று வடமொழியிலும் அழைக்கப்படும் மூலவரைக் கொண்டிருக்கும் இவ்வூர்த் திருக்கோயிலின் மகுடத்திலிருக்கும் இன்னொரு சிறகு, அப்பர் என்னும் அரிய மனிதரால் பாடப்பெற்றதாகும். வடகைலாயத்தையும் தென்கைலாயத்தையும் தன்னகத்தே கொண்டிருக்கும் இப்போதிருக்கும் கோயிற்கட்டமைப்பு முற்சோழர் காலத்தைச் சேர்ந்தது. வடகைலாயம் முதலாம் இராஜராஜரின் பட்டத்தரசியார் உலகமாதேவியாலும் தென்கைலாயம் அவரது புதல்வர் முதலாம் இராஜேந்திரரின் பட்டத்தரசியான பஞ்சவன் மாதேவியாலும் கட்டப்பட்டதாகக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இத்தென்கைலாய விமானத்தின் கட்டமைப்பைப் பற்றி விளக்குகிறது இக்கட்டுரை.
விமானம் ஐயாறப்பர் கோயில் வளாகத்தின் முதன்மை விமானத்தின் தென்புறத்தில் வடக்கு நோக்கி அமைந்துள்ள இக்கோயிலின் இருதள விமானம் வேசர சிகரத்துடன் கூடிய கலப்பு வேசர வகையைச் சேர்ந்ததாகும். விமானம் கர்ணபத்தி - சாலைப்பத்தி - கர்ணபத்தி என்று பிரிக்கப்பட்டுள்ளது. இப்பத்திகள் அனைத்தும் பிதுக்கமாக அமைய, பத்திகளுக்கு இடைப்பட்ட பகுதிகள் ஒடுக்கமாகத் கீழ்த்தளத்தில் பஞ்சரத்தைக் கொண்டு அமைந்துள்ளன. சாலைப்பத்தி கர்ணபத்தியைவிடக் கூடுதலாக முன்னிழுக்கப்பட்டுள்ளது. தாங்குதளம் பத்மபந்தத் தாங்குதளத்தைக் கொண்டுள்ள இவ்விமானத்தின் தாங்குதளம், தரையில் உபபீடத்திலிருந்து துவங்குகிறது. தரைக்குமேல் தெரியும் உபபீடப் பகுதியில் நாசிகைகளின் மேற்பகுதிகள் தெரிகின்றன. அதற்குமேல் உபஉபானமும் உபானமும் அமைந்துள்ளன. உபானத்திற்கு மேல் பத்மஜகதி, உருள்குமுதம் அமைய, கண்டப்பகுதியானது மேலும் கீழும் அணைக்கப்பட்ட கம்புகளுடன் அமைந்துள்ளது. கண்டபாதங்களில் சிற்றுருவச் சிற்பங்கள் இடம்பெறவில்லை. அதன்மேல் பட்டிகை அமைந்துள்ளது. பொதுவாக வேதிகையின்மீது காணப்படும் பிரநாளம் இங்கு மேற்குப்புற உபானத்தின்மீது அமைந்திருப்பது கருவறையின் தரை தாங்குதளத்தின்மீது அமையவில்லை என்பதைக் காட்டுகிறது. வேதிகைத்தொகுதி தாங்குதளத்திற்குமேல் உபரிகம்பும் அதற்குமேல் மேலும் கீழும் கம்புகளுடன் கூடிய வேதிகண்டமும் கீழே தாமரையால் அணைக்கப்பட்ட வேதிகையும் அமைந்துள்ளன. இவ்வேதிகையிலும் வேதிபாதங்களில் சிற்றுருவச் சிற்பங்கள் இடம்பெறவில்லை. பஞ்சரங்கள் ஒடுக்கங்களில் பட்டிகைக்குமேல் சுவர்ப் பஞ்சரம் அமைந்துள்ளது. நான்முக அணைவுத்தூண்களைப் பெற்ற சிற்பங்களற்ற கோட்டம், உத்தரம், வாஜனம், பூதவரி இல்லாத வலபி, நாசிகையையும் நடுவிலும் முனைகளிலும் கொடிக்கருக்கு அலங்கரிப்புகளைப் பெற்ற கபோதம், முனைகளில் திறந்த வாயுடன் இருக்கும் யாளிகளைப் பெற்ற பூமிதேசம், அடியவர்களைக் கோட்டங்களில் பெற்ற கிரீவம், நாசிகை, சிங்கமுக ஸ்தூபி ஆகியவற்றைப் பெற்றுள்ளது. இந்த சிங்கமுக ஸ்தூபி கீழ்த்தளச் சுவரின் உத்தரத்தின்மீது அமைந்துள்ளது. சுவர் கீழ்த்தளத்தின் கர்ணபத்திகள் கோட்டங்களோ இறைத்திருமேனிகளோ இல்லாமல் வெறுமையாக இருக்க, சாலைப்பத்திகள் அனைத்தும் கோட்டங்களைப் பெற்று, அவற்றில் கிழக்கிலும் தெற்கிலும் மேற்கிலும் சிவபெருமானின் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. இக்கோட்டங்களும் சாலைப்பத்திகளும் நான்முக அரைத்தூண்களாலும் கர்ணப்பத்திகள் எண்முக அரைத்தூண்களாலும் அணைக்கப்பட்டுள்ளன. கோட்டங்கள் அனைத்தும் மேலே மகரதோரணங்களையும் அவற்றிற்கு நடுவே அடியவர் சிற்பங்களையும் பெற்றுள்ளன. அணைவுத்தூண்கள் மேலே குறிப்பிட்ட எண்முக மற்றும் நான்முக அணைவுத்தூண்கள் அனைத்துமே ஒரு தூணுக்குரிய அனைத்து உறுப்புகளையும் பெற்று அமைந்துள்ளன. எண்முக அரைத்தூண்களின் கீழ்ப்பகுதி (பாதம்) சதுரமாக உள்ளது. எல்லா அரைத்தூண்களின் மேல்பகுதிகளும் மாலைத்தொங்கல், தாமரைக்கட்டு, கலசம், தாடி, கும்பம், பாலி, பலகை மற்றும் வீரகண்டத்தைப் பெற்றுள்ளன. எல்லா அரைத்தூண்களிலும் பலகை நான்முகமாக அமைய, மற்ற எல்லா உறுப்புகளும் அவ்வத்தூண்களின் வடிவிற்கேற்ப எண்முகமாகவும் நான்முகமாகவும் அமைந்துள்ளன. இவ்வரைத்தூண்களுக்கு மேல் பட்டையுடன் கூடிய விரிகோணப்போதிகை இடம்பெற்றுள்ளது. பத்திகள் பிதுக்கமாக உள்ளதால் போதிகைகள் முனைகளின் முகப்பிலும் பக்கவாட்டிலும் அமைந்துள்ளன. கூரை உறுப்புகள் போதிகைக்கு மேல் உத்தரமும் வாஜனமும், அதற்கு மேலுள்ள வலபியில் பூதகணங்களும் காட்டப்பட்டுள்ளன. சந்திரமண்டலத்துடன் கூடிய கபோதத்தில் நாசிகைகளும் முன்னிழுக்கப்பட்ட சாலைப்பத்தியின் நடுவிலும் முனைகளிலும் கொடிக்கருக்குகளும் இடம்பெற்றுள்ளன. கபோதத்திற்கு மேல் முனைகளில் மகரங்களுடன் கூடிய பூமிதேசத்துடன் தரைத்தளம் முடிவு பெறுகின்றது. ஆர உறுப்புகள் மற்றும் மேற்றளங்கள் கீழ்த்தளத்தின் மேலுள்ள ஆரமானது நான்கு முனைகளிலும் கர்ணகூடங்களையும், நடுவில் முன்னிழுக்கப்பட்ட சாலைகளையும், அவற்றை இணைக்கும் ஆரச்சுவரில் நாசிகைகளையும் கொண்டு ஒட்டியமாலையாக உள்ளது. பிற்காலத்தில் திருப்பணிக்கு உள்ளாகி அண்மைக்கால வண்ணப்பூச்சுடன் இருக்கும் ஆர உறுப்புகளில் சிவபெருமானின் பல்வேறு சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. இரண்டாம் தளமும் பிதுக்க ஒடுக்கங்களுடன் மூன்று பத்திகளைப் பெற்றுச் சாலைப்பத்தி முன்னிழுக்கப்பட்டுள்ளது. சாலைப்பத்தியில் சிற்பங்கள் ஏதுமில்லை. ஒடுக்கங்களிலும் கர்ணபத்தியிலும் அடியவர் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. உச்சி உறுப்புகள் கிரீவம், சிகரம் மற்றும் ஸ்தூபியைக் கொண்ட உச்சியின் கிரீவப்பகுதி எல்லாத்திசைகளிலும் நடுப்பகுதியில் வெற்றுக்கோட்டத்தைப் பெற்று உருள்வடிவ அரைத்தூண்களால் அணைக்கப்பெற்றுள்ளன. இக்கோட்டங்களின்மேல் மகாநாசிகைகள் வேசர சிகரத்தின் நாற்புறமும் அமைந்துள்ளன. சிற்பங்கள் விமானச் சிற்பங்கள் விமானத்தின் தரைத்தளத்தின் கிழக்கு, தெற்கு மற்றும் மேற்குக் கோட்டங்களில் இடம்பெற்றுள்ள சிவபெருமானின் சிற்பங்கள் அனைத்தும் கைகளில் தாங்கியிருக்கும் ஆயுதங்கள், முத்திரைகள், குண்டலங்கள் தவிர்த்த பிற கூறுகள் ஒன்றாகவே இருக்கின்றன. சுகாசனத்தில் அமர்ந்திருக்கும் நிலையில் சடைமுடியையும் நெற்றிக்கண்ணையும் கொண்டுள்ள இவர்களது வலதுசெவிகளைப் பனையோலைக்குண்டலங்கள் அலங்கரிக்கின்றன. இடது செவிகளில் கிழக்கர் எதுவுமில்லாமலும் தெற்கரும் மேற்கரும் மகரகுண்டலங்களுடனும் காட்சியளிக்கின்றனர். கழுத்தில் சரப்பளியையும் மார்பில் உபவீத முப்புரிநூலையும் வயிற்றில் உதரபந்தத்தையும் இடையில் இடைக்கட்டையும் பெற்றுள்ளனர். கைகளில் கேயூரத்தை அணிந்திருக்கும் இவர்களது வலமுன்கை, வலப்பின்கை, இடமுன்கை, இடப்பின்கை ஆகியவற்றில் முறையே கிழக்கர் அபயமுத்திரை, மழு, கடகமுத்திரை, மான் ஆகியவற்றையும் தெற்கர் அபயமுத்திரை, சூலம், கடகமுத்திரை, கபாலம் ஆகியவற்றையும் மேற்கர் தர்ஜனிமுத்திரை, அக்கமாலை, அபயமுத்திரை, கமண்டலம் ஆகியவற்றையும் பெற்றுள்ளனர். இரு கால்களிலும் சிலம்புகள் இருக்க, வலதுகால் தாமரைப்பீடம் மேல் இருத்தப்பட்டுள்ளது.
முகமண்டபச் சிற்பங்கள் சேத்ரபாலர் முகமண்டபத்தின் கிழக்குப்புறச் சுவரில் உள்ள முதல் கோட்டத்தில் தீச்சடையுடனும் நெற்றிக்கண்ணுடனும் தலைமுன்பக்கம் மண்டையோட்டைக் கொண்டுள்ள சேத்ரபாலரின் சிற்பம் இடம்பெற்றுள்ளது. இவரது இடச்செவியைப் பனையோலைக் குண்டலம் அலங்கரிக்க, வலச்செவியில் குண்டலம் ஏதுமில்லை. கழுத்தில் சரப்பளியும் மார்பில் மண்டையோட்டு முப்புரிநூலும் வயிற்றில் உதரபந்தமும் பெற்றுள்ள இவரது ஆடையற்ற இடையை அரைஞாணாகப் பாம்பு சுற்றியிருக்கிறது. வலமுன்கை வாளையும் வலப்பின்கை சூலத்தையும் இடமுன்கை கபாலத்தையும் இடப்பின்கை பாசத்தையும் பெற்றுள்ளன. கைகளில் கேயூரத்தையும் கால்களில் சிலம்பு மற்றும் சலங்கையையும் கொண்டு தாமரைப்பீடத்தின் மீது நிற்கும் இவரது கால்கள் சமத்தில் உள்ளன. பிள்ளையார் முகமண்டபத்தின் கிழக்குப்புறச் சுவரில் உள்ள இரண்டாம் கோட்டத்தில் குடை மற்றும் கவரிக்குக் கீழே கரண்டமகுடத்துடன் அமர்ந்திருக்கும் பிள்ளையாரது கழுத்தில் சரப்பளியும் மார்பில் உபவீத முப்புரிநூலும் வயிற்றில் பாம்பு உதரபந்தமும் இடையில் இடைக்கட்டும் இடம்பெற்றுள்ளன. இவரது வலமுன்கை தந்தத்தையும் வலப்பின்கை அங்குசத்தையும் இடப்பின்கை பாசத்தையும் கொண்டிருக்க, இடமுன்கையில் ஏதுமில்லை. காலில் சிலம்புடன் தாமரைப்பீடத்தின்மீது நின்றிருக்கும் இவரது கால்கள் சமத்தில் உள்ளன. முருகன் முகமண்டபத்தின் மேற்குப்புறச் சுவரில் உள்ள முதல் கோட்டத்தில் கரண்ட மகுடத்துடனும் சென்னியுடனும் காட்சியளிக்கும் முருகப் பெருமானின் இருசெவிகளையும் பனையோலைக் குண்டலங்கள் அலங்கரிக்கின்றன. கழுத்தில் சரப்பளியையும் தோளில் வீரச்சங்கிலியையும் வயிற்றில் உதரபந்தத்தையும் இடையில் இடைக்கட்டையும் கொண்டுள்ள இவரது வலமுன்கை அபயமுத்திரையிலும் வலப்பின்கை வஜ்ரத்தைக் கொண்டும் இடமுன்கை கடியவலம்பிதத்திலும் இடப்பின்கை சக்தியைக் கொண்டும் அமைந்துள்ளன. கால்களில் சலங்கை மற்றும் சிலம்பைக் கொண்டு தாமரைப்பீடத்தின்மீது நிற்கும் இவரது கால்கள் சமத்தில் உள்ளன. கொற்றவை முகமண்டபத்தின் மேற்குப்புறச் சுவரில் உள்ள இரண்டாம் கோட்டத்தில் கரண்ட மகுடத்தையும் நெற்றிக்கண்ணையும் கொண்ட கொற்றவையின் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. இவரது இரு செவிகளையும் மகரகுண்டலங்கள் அலங்கரிக்கின்றன. கழுத்தில் சரப்பளியையும் மார்பில் கச்சையும் வீரசங்கிலியையும் கொண்டுள்ளார். வலமுன்கை காக்கும் குறிப்பிலும் பின்கை எறிநிலைச் சக்கரத்தைக் கொண்டும் இடமுன்கை கடியவலம்பிதத்திலும் பின்கை சங்கைக் கொண்டும் அமைந்துள்ளன. இடையில் இடைக்கட்டும் தோலாடையும் இடம்பெற்றுள்ளன. தாமரைப்பீடத்தின்மீது இருத்தப்பட்டு சமத்தில் உள்ள இவரது கால்கள் சிலம்பையும் சலங்கையையும் பெற்று, வலதுகால் சலங்கை பாம்பால் அமைந்துள்ளது. முடிவுரை இவ்விமானத்தின் கிழக்குப் பகுதியில் காணப்படும் கல்வெட்டு வழியாக முதலாம் இராஜேந்திரரின் முப்பத்து ஒன்றாம் ஆட்சியாண்டில் எடுப்பிக்கப்பட்டதாகக் அறியப்பெறும் இக்கோயில் அவர்காலக் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கூறுகளை ஆராய உதவுகிறது. கருவறைக் கோட்டங்களில் சிவபெருமானின் திருமேனிகள் மட்டும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |