http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 112

இதழ் 112
[ அக்டோபர் 2014 ]


இந்த இதழில்..
In this Issue..

கண்கள்
Arivar Koil - 2
வலிவலம்
Urar of Thiruchirappalli District
தேடலில் தெறித்தவை - 16
வன்பார்த்தான் பனங்காட்டூர் திருக்கோயில்
திருவையாறு தென்கைலாயம்
சேரன் சூடிய பனம்பூவே!
இதழ் எண். 112 > கலையும் ஆய்வும்
வன்பார்த்தான் பனங்காட்டூர் திருக்கோயில்
கி.ஸ்ரீதரன்
காஞ்சிபுரத்திலிருந்து அய்யங்கார்குளம் வழியே கலவை-ஆற்காடு செல்லும் சாலையில் சுமார் 15 கி.மீ தொலைவில் திருப்பனங்காடு என்ற ஊரில் சுந்தரமூர்த்தி சுவாமிகளால் போற்றப்பட்டுப் பாடல்பெற்ற திருத்தலம் அழகிய இயற்கைச் சூழலில் அமைந்துள்ளது. வெண்பாக்கம் என்ற ஊருக்குச் சற்றுமுன்பாக இவ்வூருக்குச் செல்லும் சாலை அமைந்துள்ளது. சுந்தரர் பெருமான் தமது பதிகங்களில் இத்தலத்தை "வன்பார்த்தான் பனங்காட்டூர்" என்று போற்றுவதைக் காணலாம்.



சுந்தரமூர்த்தி நாயனார் காஞ்சிபுரத்தில் கச்சி ஏகம்பம், திருமேற்றளி, அநேகதங்காவதம், திருநெறிக்காரைக்காடு, திருஒணகாந்தன் தளி போன்ற திருக்கோயில்களைத் தரிசித்துவிட்டுத் திருப்பனங்காடு தலத்திற்கு வந்து இறைவனைப் போற்றுகின்றார். இத்தலத்து இறைவனைப் போற்றும்பொழுது "சடையில் கங்கை தரித்தானை, வேதத்தின் பொருளானை, பிறையும் கங்கையும் சூடிப் பெயர்ந்தாடும் பெருமானை, மான் மழுவேந்திக் காலன் காலம் அறுத்தானை" என்றெல்லாம் தமது பதிகங்களில் இறைவனது சிறப்பினைக் கூறுகின்றார்.



இத்தலப் பதிகம் "விடையின் மேல்வருவானை" எனத் துவங்குகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த வன்பார்த்தான் பனங்காட்டூர் இறைவனை "சாராதார் சார்பென்னே, உணராதார் உணர்வென்னே, பேசாதார் பேச்சென்னே, பரவாதார் பரவென்னே, பயிலாதார் பயில் என்னே, அறியாதார் அறிவென்னே, நினையாதார் நினைவென்னே, குழையாதார் குழைவென்னே என்றெல்லாம் வியந்து போற்றுவதைக் காணலாம். பனங்காட்டூர்ப் பரமன், பனங்காட்டூர் ஐயன், பனங்காட்டூர்ப் பதி, பனங்காட்டூர்ப் பவளத்தின்படியானை என்றெல்லாம் இறைவனை சுந்தரர் பெருமான் தனது பாடல்களில் குறிப்பிடுகின்றார். சேக்கிழார் பெருமான் பெரியபுராணத்தில் சுந்தரர் வரலாற்றைக் கூறும்பொழுது, கண்ணீர் மல்க நின்று "விடையின் வருவான்" என்னும் வண்டமிழ்ப்பதிகம் நல்ல இசையுடன் பாடிப்போந்து பிறவும் நண்ணுவார்" என்று குறிப்பிடுகிறார்.

பட்டினத்தடிகளின் திருஏகம்பர் திருவந்தாதி பாடலிலும், வள்ளலார் பெருமானின் ஊர்த்தொகை பாடலிலும் இத்தலம் குறிப்பிடப்படுவதிலிருந்து இத்தலத்தின் சிறப்பினை உணரமுடிகிறது.



இத்தலத்தில் அகஸ்தியர் வழிபட்டபோது இறைவன் சடையிலிருந்து கங்கை புனிதத் தீர்த்தமாக வெளிப்பட்டது. சுந்தரர் பெருமான் இறைவனை "சடையில் கங்கைத் தரித்தானை" என்று இத்தலப் பதிகத்தில் போற்றுகின்றார். இதற்கு ஏற்பத் திருப்பனங்காடு கோயிலின் எதிரில் காணப்படும் திருக்குளம் "சடாகங்கை" என அழைக்கப்படுகிறது. நான்கு புறங்களிலும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு அழகாகக் காட்சியளிக்கிறது. குளத்தின் தென்கரையில் கங்கை அம்மனுக்காக ஒரு சிறுகோயிலும் அமைந்துள்ளது. இக்குளத்தைத் தூர்வாரிப் பராமரித்தால் ஊர்மக்கள் அனைவருக்கும் சிறந்தமுறையில் பயன்படும். கோயிலின் எதிரே வடக்கு நோக்கி முனீசுவரர் திருக்கோயில் அமைந்து சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.



பனைமரத்தைத் தலமரமாகக் கொண்டு விளங்கும் திருப்பனையூர், விரிஞ்சிபுரம், திருமழபாடி, திருவோத்தூர், புறவார் பனங்காட்டூர் (பனையபுரம்), எசாலம், திருப்பனந்தாள் போன்ற திருக்கோயில்கள் தமிழ்நாட்டில் உள்ளன. அதில் ஒன்று திருப்பனங்காடு. பெயருக்கு ஏற்ப இவ்வூரில் அதிக அளவில் பனைமரங்கள் இருப்பதைக் காணலாம். இவ்வூருக்கு வரும் வழியில் ஊற்றுத் தீர்த்தம் உள்ளது. சுந்தரர் பெருமான் களைப்பைப் போக்க இறைவனே இங்கு அவருக்குக் கட்டமுது - உணவு அளித்தார் எனக் கூறப்படுகிறது. சுந்தரர் வரலாற்றுடன் இத்தலம் நெருங்கிய தொடர்பு கொண்டு விளங்குகிறது.

இனி திருக்கோயிலுக்குள் செல்வோம்! அழகிய இயற்கைச் சூழலில் திருக்கோயில் அமைந்துள்ளது. நுழைவு வாயிலின் மேல் இறைவன் ரிஷபவாகனராகக் காட்சிதரும் அழகிய சுதைச் சிற்பங்களைக் காணலாம். அடுத்து நாம் காண்பது இரண்டு நந்திகள், இரண்டு கொடிமரங்கள், இரண்டு சன்னிதிகள், இரண்டு பனைமரங்கள்! தெற்குப் பகுதியில் இருக்கும் பனை பெண்பனையாகவும் வடக்குப் பகுதியில் இருக்கும் பனை ஆண்பனையாகவும் விளங்குகிறது.



இறைவன் எழுந்தருளியுள்ள இரண்டு கருவறைகளும் தொண்டைநாட்டுக்கே உரித்தான கஜபிருஷ்ட வடிவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தெற்குப் பகுதியில் உள்ள இறைவன் தாளபுரீசுவரர் என அழைக்கப்படுகிறார். அகத்தியர் வழிபட்ட மூர்த்தி என்பதற்கு அடையாளமாக நுழைவாயிலில் அகத்தியர் வடிவமும், எதிர்ப்புறம் பனைமரத்தின் சிற்பமும் புடைப்புச் சிற்பமாகக் காணப்படுகிறது.

வடக்குப் பகுதியில் நுழைவுவாயிலின் எதிரே அமைந்துள்ள சன்னிதியில் இறைவன் கிருபானாதேசுவரர் என அழைக்கப்படுகிறார். அகத்தியரின் மாணவரான புலஸ்தியர் என்பவரால் வழிபடப்பட்டதாகப் புராண வரலாறு கூறுகிறது. இச்சன்னிதியின் நுழைவுவாயிலிலும் புலஸ்தியர் உருவமும் பனைமரமும் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. தாளபுரீசுவரர் கருவறை தேவகோட்டங்களில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்ம, துர்க்கை தெய்வ வடிவங்களைக் கண்டு வழிபடலாம். கிருபாநாதேசுவரர் கருவறை தேவக்கோட்டத்தில் மேற்கில் விஷ்ணுவின் வடிவம் உள்ளது.

திருச்சுற்றில் நால்வர், 63 நாயன்மார்கள், வல்லபை விநாயகர், கஜலட்சுமி, வள்ளி-தெய்வானையுடன் முருகப்பெருமான், நவக்கிரக சன்னிதி ஆகியவை அமைந்துள்ளன.

மேற்குத் திருச்சுற்றில் பனைமரத்துடன் இறைவன், இறைவி வடிவங்கள் திருப்பனங்காடு தலச்சிறப்பினைக் கூறும் சிற்பங்கள் வழிபாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்மண்டபத்தில் தெற்குநோக்கி இரண்டு அம்பாள் சன்னிதிகள் உள்ளன. தேவி அமிர்தவல்லி - கிருபாநாயகி என அழைத்துப் போற்றுகின்றனர். அம்பாள் தனது நான்கு கரங்களில் மேலிரு கரங்களில் அங்குசம், பாசம் தாங்கியும் கீழிரு கரங்களில் அபய, வரத முத்திரையுடன் அருள்புரியும் அழகு வடிவங்களைக் கண்டு வழிபடலாம். முன்மண்டபத் தூண்கள் அழகிய சிற்பங்களுடன் காட்சி தருகின்றன. நகரத்தார் கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

இக்கோயில் 1928ம் ஆண்டு தேவகோட்டை பெரி. ஏகப்பச் செட்டியார் குடும்பத்தினரால் திருப்பணி செய்யப்பட்டது. நுழைவு வாயிலில் கல்வெட்டுப் பொறிப்பும் காணப்படுகிறது. தாளகிரீசுவரர் சன்னிதி முன்னர் தூண் ஒன்றில் ஏகப்பச் செட்டியாரின் திருவுருவம் கைகூப்பி வணங்கிய நிலையில் சிற்பமாகக் காணப்படுகிறது.

இக்கோயிலின் வரலாற்றுச் சிறப்பை அறிந்துகொள்ள 22 கல்வெட்டுகள் உள்ளதாகக் கல்வெட்டு அறிக்கையின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. முதலாம் இராஜேந்திரசோழன், இராஜாதிராஜன், மூன்றாம் குலோத்துங்கசோழன், மூன்றாம் இராஜராஜன், கிருஷ்ணதேவராயர், விருப்பண்ண உடையார், கம்பண்ண உடையார் போன்றோரும் இக்கோயிலில் சிறப்பான வழிபாட்டிற்குத் தானமளித்துள்ளனர்.

இங்கு கோயில் கொண்டுள்ள இறைவன் திருப்பனங்காடு உடையார் எனவும், அன்புடைய நாயனார் எனவும் குறிக்கப்படுகின்றார். இவ்வூர் திருப்பனங்காடு எனவும் குறிக்கப்படுகிறது. இவ்வூர் நிலம் அளக்கும் அளவுகோலின் இருமுனைகளிலும் பனைமரங்களின் வடிவங்கள் பொறிக்கப்பட்டிருந்தன என ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது. உயிருடன் உள்ள பனைமரங்களை வெட்டக்கூடாது என்று ஒரு கல்வெட்டுச் செய்தி குறிப்பிடுகிறது. பனைமரத்திற்குப் பெருமளவு முக்கியத்துவம் இவ்வூரில் அளிக்கப்பட்டதை வரலாற்றுச் சான்றுகளால் அறிய முடிகிறது. மரங்களை வெட்டாமல் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு இத்தலம் எவ்வளவு முக்கியத்துவம் தந்தது என்பதைக் கல்வெட்டுகள் எடுத்துக் கூறுகின்றன.

இவ்வூரில் இருந்த ஏரிக்கரை உடைந்ததைச் சரிசெய்யத் திருக்கோயிலின் பயிரிடப்படாமல் இருந்த நிலங்கள் விற்பனை செய்யப்பட்டு ஏரி சரிசெய்யப்பட்டதை விஜயநகரக் காலக் கல்வெட்டு கூறுகிறது. விஜயநகர மன்னர்கள் இக்கோயிலின் சிறப்பான வழிபாட்டிற்குத் தானம் அளித்திருக்கின்றனர்.

இத்திருக்கோயிலில் மாசிமாதத்தில் சிறப்பான திருவிழா நடைபெறுகிறது. மேலும் கார்த்திகைச் சோமவார தினத்திலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

சுந்தரர் பெருமானின் பதிகத்தில் "திருவாரூர்ச் சிவன் பேர் சென்னியில் வைத்த ஆரூரன் அடித்தொண்டன் உரை செய்வார் உயர் வானத்து உயர்வாரே" என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார். நாம் இறைவன் அருள் பெறவும், வாழ்க்கையில் உயர்வு பெறவும் திருப்பனங்காடு திருத்தலம் சென்று வழிபட்டு நலம் அடைவோம்!

குறிப்பு : A Topographical List of the Inscriptions of the Madras Presidency - V. Rengacharya, Cheyyar Takul, - 247.233 of 1906 to 268.254 of 1906, Thirupanangadu.
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.