http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[180 Issues]
[1786 Articles]
Home About US Temples Facebook
Issue No. 112

இதழ் 112
[ அக்டோபர் 2014 ]


இந்த இதழில்..
In this Issue..

கண்கள்
Arivar Koil - 2
வலிவலம்
Urar of Thiruchirappalli District
தேடலில் தெறித்தவை - 16
வன்பார்த்தான் பனங்காட்டூர் திருக்கோயில்
திருவையாறு தென்கைலாயம்
சேரன் சூடிய பனம்பூவே!
இதழ் எண். 112 > கலைக்கோவன் பக்கம்
அன்புள்ள வாருணி,

‘கண்’ எத்தனை முக்கியமான உறுப்பு என்பதை இலக்கியங்கள் புரிந்துகொண்டுள்ளன. அதனால்தான், தொல்காப்பியம் தொடங்கித் திரைப்பாடல்கள்வரை கண்ணின் ஆட்சி, பிற உடல் உறுப்புகள் பொறாமைப்படும் அளவிற்குப் பரந்து விரிந்துள்ளது.

கண்ணை முழுதாகப் பாடியவர்களும் இருக்கிறார்கள். கண்ணின் உறுப்புகளைத் தனித்துப் பாடியவர்களும் இருக்கிறார்கள். கண்ணிலே என்ன உண்டு என்று கேட்டவர்களும், கண் போன போக்கிலே கால் போகலாமா என்று தடுத்தவர்களும் கூடக் கண்களில் அடைக்கலமாகிக் கவிதைகள் பல தந்திருக்கிறார்கள். இலக்கிய அடுக்குகளில் ‘உவமை’ உள்ளத்தைக் கொள்ளைகொள்ளவும் உள்ளதை உரியவாறு உணர்த்தவும் பயன்படுவது. இந்த உவமை கண்களுக்கு உதவியிருப்பது போல் உடலின் எந்த உறுப்புக்கும் இடமளித்திருக்காது எனுமாறு, கண் பற்றிய உவமைகள் காற்றில் நிறைந்துள்ளன. மலர்கள், கனிகள், பூச்சிகள், ஐம்பூதச் சேர்க்கை, நீர் வாழ்வன என உலகில் இருப்பன, இல்லாதன என எந்த வேறுபாடுமின்றிக் கண்களுக்கு உவமை தேடிச் சளைக்காமல் கவிதை செய்துள்ளனர், இந்த மண்ணின் புலமைச் சான்றோர். மனிதக் கண்கள் மட்டுமல்ல, வாழ்வன அனைத்தின் கண்களுமே இவர்களால் இலக்கியங்களாகியுள்ளன.



‘தன் கண்ணைவிட மேலாக உன் மீது அன்புடையவள்’ என்று மகளுக்குத் தாயை அறிமுகப்படுத்தும் தோழியைக் கபிலரும், ‘காணுந்தோறும் களிப்புண்டாக்கும் மையுண்ட கண்கள்’, ‘மலர் பெருமை இழத்தற்குக் காரணமான அழகிய குளிர்ந்த கண்கள்’ எனப் பலபடத் தலைவியைப் போற்றும் தலைவனை இரண்டு புலவர்களும் சுனையில் மலர்ந்த நீலப்பூக்களைக் காண்கையில் அவை கண்களைப் போல் பூத்துள்ளதாகக் கூறும் பேரிசாத்தனாரும் இன்னபிறரும் கண்களில் காட்சி கண்டனர். காட்சிகளில் கண்களைக் கண்டனர்.

வள்ளுவரோ கண்களைப் பல சொல்லப் பயன்படுத்தியுள்ளார். சங்கப் பாடல்களில் கண்கள் உளவியல் நோக்கில் கையாளப்பட்டிருந்தபோதும், கண்களினும் அவற்றினின்று பிறக்கும் நோக்கு அங்கு மிகுதியான ஆட்சிக்கு ஆளாகியுள்ளது. வள்ளுவரோ பிறர் போலக் கண்களைப் பூக்களுக்கு உவமித்த இடத்திலும்கூட ஓர் ஆண் உள்ளத்தின் ஆற்றாமை காட்டவே அதைப் பயன்படுத்தியுள்ளார். ‘மலர் காணின் மையாத்தி நெஞ்சே இவள் கண் பலர் காணும் பூவொக்கும்’ என்று, அவள் கண்கள் பலராலும் பார்க்கப்படும் பூக்களைப் போல் அமைந்துள்ளதாக மலர்களைப் பார்க்கும்போதெல்லாம் என் அருமை நெஞ்சமே நீ மயங்குகிறாய்! காதலியின் கண்கள் பூக்கள் போல் இருப்பதில் மகிழ்வுதான். ஆனால், அவை ‘பலர் காணும்’ பூப்போல் உள்ளதில்தான் தடுமாற்றம், துன்பம். இவர் மட்டும் காணும் பூக்களாக அவை இல்லையாம். இந்த ஆற்றாமையைத்தான் உளவியலில் ‘தனக்கென மட்டுமே உள்ளல்’ என்பர்.

இதே நோக்கில் நலம் புனைந்துரைத்தலில் இன்னொரு குறளையும் வள்ளுவர் இணைத்துள்ளார். ‘முழுமதியே, மலர் போன்ற கண்கள் உடையவளின் முகத்தை ஒத்திருக்க நீ விரும்பினால், பலர் காணும்படி தோன்றுவதைத் தவிர்.’ நிலவையே எச்சரிக்கும் இந்த ஆற்றாமைப் பண்பை வெளிப்படுத்தும் குறள் இதோ. ‘மலரென்ன கண்ணாள் முகமொத்தி ஆயின் பலர் காணத் தோன்றல் மதி.’ 1330 குறட்பாக்களில் நேரடியாகக் ‘கண்’ அணைத்துச் செல்வன 43. கண்ணோட்டமில்லாமல் ஆனால், கண் தொடர்புடையன ஏறத்தாழ 40. ‘உள்ளமே, நீ அவரிடம் சென்றால் இந்தக் கண்களையும் உடன் கொண்டு செல்’. அவரைக் காண விரும்பி, இவை என்னை உண்பவை போல் வருத்துகின்றன. வள்ளுவரின் இந்தக் கண் ஆளலும் கண்களில் ஒற்றிக் கொள்ளத் தக்கதே. ஐம்புல நுகர்வில் கண்ணுக்கே முதலிடம் தரும் வள்ளுவர், காதலர் வாழ்வில் கண்ணுக்குத் தந்திருக்கும் இடம் ஒப்பற்றது. தன் கண்களில் காதலர் குடியிருப்பதால், கண் இமைக்க மாட்டேன், இமைத்தால் அந்த நொடி அவர் மறைவார், அதை என்னால் தாங்கமுடியாது என்று குமுறுகிறாள் ஒரு காதலி. காதலனோ, கண்ணுக்குள் இருக்கும் பாவையையே வெளியேறச் சொல்கிறார். அந்த இடத்தில்தான் அவர் காதலி அமர வேண்டுமாம். ‘கண்ணொடு கண் இணை நோக்கு ஒக்கின்’ வாய்ச்சொற்கள் பயனற்றுப் போகும் என்ற வள்ளுவர் வாக்கும் காலத்தால் பதிவான உண்மையாகும். அது போலவே, ‘ஏதிலார் போலப் பொது நோக்கு நோக்குதல் காதலார் கண்ணே உள’ என்ற குறளும் முற்றிலும் உளவியல் சார்ந்த பதிவாகும். கல்வியைக் கண்களுக்கு இணையாக்கிக் ‘கண்ணுடையர் என்பவர் கற்றோர்’ என்று உயர்ந்தோங்கி ஒலிக்கும் வள்ளுவக் குரலினும், கண்களின் மேன்மை சொன்னவர் வேறு யார் இருக்க முடியும். ‘கண் விதுப்பழிதல்’ என்று கண்ணுக்கு ஓர் அதிகாரமே வைத்தவர் அல்லவா அவர்.

கண்களின் பார்வை, கண்ணீர் இரண்டுமே சக்தி வாய்ந்தவை. இரண்டையுமே தமிழ் முடிந்த மட்டிலும் ஆண்டு பார்த்துள்ளது. ‘கண்ணீர்’ சங்க இலக்கியங்களில் பெரும்பான்மையும் அவலத்தின் வெளிப்பாடாகவே விழிகளிலிருந்து வழிந்துள்ளது. ஆனால், வள்ளுவர் கண்களைப் போலவே கண்ணீரையும் சற்றே மாறுபட்ட நோக்கில் கையாண்டுள்ளார். ‘அன்புடையார் துன்பம் கண்டவிடத்துச் சிந்தப்படும் கண்ணீர், அன்பை அனைவரும் அறிய வெளிப்படுத்தும்’ என்று கூறி, அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்று வியக்கும் வள்ளுவர், கண்ணீரைச் செல்வம் தேய்க்கும் படையாகக் காட்டித் தம்முடைய மற்றொரு பரிமாணத்தையும் குறளில் பதிவு செய்துள்ளார். அந்தக் கண்ணீர் அல்லல்பட்டு, ஆற்றாது அழுத கண்ணீராம். பாரதியார் கண்ணீரையும் இரத்தத்தையும் இணையக் காணும் காட்சி உள்ளத்தை உலுக்குவது. ‘உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி, என் கண்ணில் பாவையன்றோ கண்ணம்மா, என்னுயிர் நின்னதன்றோ’. உள்ளன்பின் உச்சம்தொடும் பாரதியின் கண்ணன், கண்ணம்மா பாடல்கள் பெயர்களிலேயே ‘கண்’ கண்டவை.

அதுசரி, கண்களைப் பேசும் கல்வெட்டுகள் உள்ளனவா என்று கேட்கிறாயா! சிராப்பள்ளி மாவட்டம் பெருங்குடி பெருமுடியீசுவரர் கோயிலில் ஒன்றும், புதுக்கோட்டை மாவட்டம் மலையடிப்பட்டி சிவன்கோயிலில் ஒன்றுமாய் இரண்டு கல்வெட்டுகள் கிடைக்கின்றன. பொதுக்காலம் 1268இல் வரையப்பட்டுள்ள ஓய்சள அரசர் வீரராமநாதரின் 14ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, உறையூர்க் கூற்றத்து ஜகதேகவீரச் சதுர்வேதிமங்கலத்துத் தட்டார் கூத்தன் தம் மகன் சிறுவயதில் பார்வையிழந்து பிறகு பார்வை பெற்றதைக் கொண்டாடும் முகத்தான் இறைவனுக்கு ஒரு கழஞ்சுப் பொன்னில் நெற்றிப்பட்டம் தந்ததாகக் கூறுகிறது. ‘கண் மறைந்து’ என்று பார்வை போனநிலையையும் ‘கண் விளங்கி’ என்று பார்வை கிடைத்த நிலையையும் கல்வெட்டுச் சொற்கள் படம்பிடித்துள்ளன.

மலையடிப்பட்டிக் கல்வெட்டு ஒரு சுவையான கதையை முன்வைக்கிறது. பூச்சிக்குடியைச் சேர்ந்த ஆவுடையாதேவன், நெடுங்களத்திலிருந்த விலைமாது ஒருவரின் வீட்டுக்குப் போய் உறவாடியிருக்கையில், அவ்வம்மை இவரோடு நிறுத்தாமல் ஓர் அந்தணரையும் அழைத்து வந்து வீட்டில் இருந்தமை கண்டு, பொறாது, இருவரையும் கொன்று, உளம் வெதும்பி மலையடிப்பட்டி வருகிறார். வந்த இடத்தில் இரண்டு கண்களும் பார்வையிழக்கின்றன. ‘செய்த தவறுக்குத் தண்டனை’யாக அதைக் கருதிய தேவன், இறைவனிடம் துன்பம் நீங்க வேண்டுகிறார். மலையடிப்பட்டி வாகீசர் மனமிரங்கிப் பார்வை தர, தம் வயலை இறை வழிபாட்டுக்கு அளிக்கிறார் தேவன்.

செய்த தவறுக்குத் தண்டனையாகப் பார்வை பறிபோவதும் இறைவன் முன் வேண்டுதல் வைத்ததும் பார்வை மீள்வதும் சுந்தரர் காலத்திலிருந்து நடந்துவரும் நிகழ்ச்சியாகும். தந்த உறுதியை மீறி ஒற்றியூரைத் தாண்டும் சுந்தரர் பார்வையிழப்பதும், வழியில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதரை வழிபட்டு ஒரு கண் பார்வையும், திருவாரூரில் மறுகண் பார்வையும் பாடப்பாட அவருக்கு மீண்டும் வருவதும் சேக்கிழார் அடிகளில் செவ்வையாய்ப் படமாகியுள்ளன.

‘கண் திறப்பு’ நமக்கு மட்டுமல்ல, செப்புத்திருமேனிகளுக்கும் நிகழ்த்தப்படுகிறது. இந்தக் கண் திறப்புதான் எழிலார்ந்த அந்த உருவாக்கங்களை உயிரோட்டம் உள்ளனவாய் மாற்றுகின்றன. அற்புதமான கண்களை ஓவியங்களிலும் சிற்பங்களிலும் பதிவு செய்துள்ளனர்.

காண ஆர்வமா? காத்திருத்தல் கூடுமா?

அடுத்த திங்கள் வரைதான்.

(வளரும்)this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.