http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 120
இதழ் 120 [ ஜுன் 2015 ] இந்த இதழில்.. In this Issue.. |
தொடர்:
ஆய்வுப்பாதையில் ஆங்காங்கே
அமைவிடம் - குத்தாலம் சொன்னவாரறிவார் திருக்கோயிலின் முகமண்டபத் தெற்குச் சுவரில் அமைந்துள்ள அகத்தியர் கோட்டத்தின் வலப்புறத் தூணின் வேதிக்கண்டத்தில் 4.5” X 4.5” அங்குலத்திற்குச் செதுக்கப்பட்டுள்ள அற்புதமான குறுஞ்சிற்பம். இரு கால்களையும் குறுக்கே மடக்கி யோகாசனத்தில் அமர்ந்துள சிவபெருமான், தனது முன் வலது கரத்தினை ஆசனத்தில் அமர்த்தியும் முன் இடது கரத்தினை தொடையின் மீது அமர்த்தியும் பின் வலது கரத்தில் அக்கமாலையையும் பின் இடது கரத்தில் பாம்பினையும் கொண்டுள்ளார். யோக நிலையில் அமர்ந்துள்ள இவரது பார்வை கீழ்நோக்கியுள்ளது. கழுத்தில் மாலையொன்றும் முத்துமாலையொன்றும் காணப்படுகின்றன. இறைவன் தனது சடைமுடிகளை ஜடாபாரமாக அலங்கரித்துள்ளார். இடது காதில் பத்ர குண்டலமும் வலது காது வெறுஞ்செவியாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. இடுப்புப் பகுதியை மார்பிலிருந்து பிரித்துக் காட்டும் உதர பந்தமும் வஸ்திர முப்புரிநூலும் தரித்து தலையில் மண்டையோட்டுடன் காணப்படும் இக்காமதகன மூர்த்தியின் மேல் இருபுறங்களிலும் கந்தர்வர்களும் கீழ் வலப்பக்கத்தில் மன்மதனும் எழிலுடன் காட்டப்பட்டுள்ளனர். கீழ் இடது பக்கத்தில் உள்ள உருவத்தை இச்சிற்பத்தில் சரிவர அடையாளம் காணமுடியாவில்லை. இதே போன்றதொரு குறுஞ்சிற்பம் திருக்கோடிக்கா திருக்கோயிலில் அமைந்துள்ளது. அக்கோயில் சிற்பத்தில் கீழ்ப்புறமுள்ள உருவத்தை இரதியாக அடையாளம் காண முடிவதால் தற்போதைய சிற்பத்தின் கீழ் இடப்பக்கம் உள்ள உருவத்தையும் இரதியாகவே கொள்ள முடியும். கிடைத்த இடம் நான்கரை சதுர அங்குலம் மட்டும்தான் என்றாலும் அந்த இடத்திற்குள் இத்தனை உருவங்களை எழிலுறச் செதுக்கிய சிற்பியின் கலைத்திறமை காலம் உள்ளவரை வாழுமல்லவா? |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |