http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[178 Issues]
[1762 Articles]
Home About US Temples Facebook
Issue No. 120

இதழ் 120
[ ஜுன் 2015 ]


இந்த இதழில்..
In this Issue..

சிராப்பள்ளி முசிறிச் சாலையில் சில கண்டுபிடிப்புகள்-3
A Study on Nagaram in Thiruchirappalli District - II
To Sacred Shrines.. with Sacred Hymns..- 1
Chola Ramayana 14
இசையால் இசையும் இடைமருதூர் இறைவன் -2
ஆய்வுப்பாதையில் ஆங்காங்கே - 11
திருவல்லம் கம்பராஜபுரம் சிதைந்த திருக்கோயில்
சிறுபாணாற்றுப்படை சுட்டும் மடைநூல்
இதழ் எண். 120 > கலையும் ஆய்வும்
சிராப்பள்ளி முசிறிச் சாலையில் சில கண்டுபிடிப்புகள்-3
அர. அகிலா
சிராப்பள்ளி முசிறிச் சாலையில் பல சோழர் காலக் கோயில்கள் அமைந்துள்ளன. அவற்றுள் பெரும்பான்மையன டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய கள ஆய்வர்களின் முழுமையான ஆய்வுக்கு ஆட்பட்டுள்ளன. சிராப்பள்ளியிலிருந்து 15 கி. மீ. தொலைவிலுள்ள சிற்றூரான சிலையாத்தியில் நெடுஞ்சாலையின் வடபுறத்தே சற்று உள்ளடங்கிய நிலையில் அமைந்துள்ள வாசுதேவப் பெருமாள் கோயில் இக்கட்டுரை வழி வரலாற்று வெளிச்சத்திற்கு வருகிறது.

சிலையாத்தி வாசுதேவப் பெருமாள் கோயில் விமானம் மற்றும் முகமண்டபம் - கிழக்குப் பார்வை


எளிய வாயிலை அடுத்து விரியும் வளாகத்தில் பிற்சோழர் காலக் கட்டுமானமாக விமானம், முகமண்டபம் கொண்டுள்ள வாசுதேவப் பெருமாள் கோயிலின் பெருமண்டபம் பின்னாளையது. வளாகத்தின் வடகிழக்கில் சிதைந்த நிலையிலான சுற்றாலைத் திருமுன் இறைத்திருமேனியற்றுக் காணப்படுகிறது. உபானத்தின்மீது பாதபந்தத் தாங்குதளம் கொண்டெழும் விமானம், ஒருதளக் கலப்புத் திராவிடமாக, வேதிகைத்தொகுதியுடன் சுவர்களை நான்முக அரைத்தூண்கள் அணைக்க, வெட்டுத் தரங்கப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள் கொண்டு அமைந்துள்ளது.

சிலையாத்தி வாசுதேவப் பெருமாள் கோயில் விமானம் மற்றும் முகமண்டபம் - மேற்குப் பார்வை


விமான ஆதிதளத்தின் முப்புறத்தும் உள்ள கோட்டங்கள் அலங்கரிப்பற்ற மகரதோரணங்கள் கொண்டுள்ளன. இக்கோட்டங்களின் அணைவுத்தூண்கள் கூரையுறுப்புகள் தாங்க, மேலே சாலை சிகர அமைப்பு. கிழக்குக் கோட்டம் மட்டும் பிற்கால அமைப்பிலான விஷ்ணுவின் நின்றகோலத் திருமேனியைப் பெற்றுள்ளது. கட்டமைப்பில் விமானத்தைப் பின்பற்றியுள்ள முகமண்டபத்தின் இரண்டு கோட்டங்களும் மகரதோரணங்களுக்கு மாற்றாகப் புதுமையான மாலைத்தோரணம் பெற்று வெறுமையாக உள்ளன. தோரணங்களில் மனிதத் தலை செதுக்கப்பட்டுள்ளது. இக்கோட்டங்கள் விமானக் கோட்டங்களினும் அகலக் குறுக்கமாக உள்ளன. கிரீவம், சிகரம் இரண்டும் செங்கல் கட்டுமானங்களாக வண்ணப்பூச்சுப் பெற்று நான்கு பெருநாசிகைகளிலும் விஷ்ணுவின் திருமேனிகளைக் கொண்டுள்ளன.

கருவறையில் தேவியர்களுடன் விஷ்ணு


கருவறையில் வலப்புறம் நிலமகளும் இடப்புறம் திருமகளும் ஒரு கையை நெகிழ்த்தி, மறு கையில் மலரேந்தி நிற்க, இருவருக்கும் இடையிருக்குமாறு கிரீடமகுடம், கச்சம் வைத்த பட்டாடை, இடைக்கட்டு, தோள்வளைகள், கழுத்தணிகள், மகரகுண்டலம் என உரிய அழகூட்டல்களுடன் நிற்கும் வாசுதேவப் பெருமாள், வலமுன்கையைக் காக்கும் கையாக்கி, இடமுன்கையை உருள்பெருந்தடி மீது இருத்திப் பின்கைகளில் சங்கு, சக்கரத்துடன் காட்சிதருகிறார்.

களஆய்வின்போது விமானம், முகமண்டபத் தாங்குதளப்பகுதியில் இருந்து இதுவரை படியெடுக்கப்படாத ஐந்து பிற்சோழர் காலக் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன. அவற்றுள் நான்கு விக்கிரமசோழர் காலத்தன. ஒன்று குலோத்துங்கர் காலக் கல்வெட்டு. இக்குலோத்துங்கர் விக்கிரமசோழரின் தந்தையா, மகனா என்பதை அறியக்கூடவில்லை.

கல்வெட்டுப் படிப்பு


விமானத்தின் மேற்குத் தாங்குதளத்திலுள்ள விக்கிரமசோழரின் ஐந்தாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு (பொ. கா. 1123) அழகியமணவாளச் சதுர்வேதிமங்கலத்து மகாசபையாரும் பதினெட்டு நாட்டு ஸ்ரீவைஷ்ணவர்களும் திருவெள்ளறை மூலபருடையாரும் ஸ்ரீபுண்டரீகநம்பியும் கூடி, உத்தமசோழ பிரம்மாதராஜரிடமிருந்து வந்த ஓலையில் குறிப்பிட்டிருந்த எச்சோறு எனும் வரியினம் குறித்த சில புதிய மாற்றங்களை நடைமுறைப்படுத்தியதைத் தெரிவிக்கிறது. எச்சோறு காட்டுவார், இடுவார், உண்பார் என மூன்று பிரிவுகள் இக்கல்வெட்டு வழி முதல் முறையாகத் தெரியவருகின்றன. ‘உண்ணாத சோறுகள் வந்தல வாரியப் பெருமக்கள் சம்வத்யத்தேய் உடல் கண்டு அரிசி அட்டுக’ எனும் கல்வெட்டு வரி குறிப்பிடத்தக்கது.

விமானத்தின் வடக்குத் தாங்குதளத்தில் உள்ள விக்கிரமசோழரின் ஆட்சியாண்டு தெரியாத கல்வெட்டு, கிழார்க் கூற்றத்து மிலட்டூருடையான் சீரிளங்கோத் திருப்பூவணமுடையானும் அனந்த நாராயணச் சேரி வங்கிபுரத்துச் சக்கிபரண பட்டனும் தலைக்கு மூன்று காசுகள் கொடையளித்துக் கோயிலில் அமாவாசிதோறும் விளக்கேற்றவும் இறைவனுக்குப் போனகம் அளிக்கவும் வகை செய்தமை கூறுகிறது. வடுகக் குடையான் பெரியான் வீற்றிருந்தான் ஒன்றே முக்காலே ஒரு மா காசு தந்து நாளும் சந்தி விளக்கேற்றச் செய்தார்.

விக்கிரமசோழரின் மூன்றாம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்டுள்ள (பொ. கா. 1121) கிழக்குத் தாங்குதளக் கல்வெட்டு, தீர்த்தநாயக பட்டன், திருவையாறுடையான் ஆகிய இருவரும் தலைக்கு மூன்று காசு அளித்து அமாவாசிதோறும் இறைவனுக்குப் போனகம் அளிக்கவும் திருமுன்னில் சந்திவிளக்கேற்றவும் ஏற்பாடு செய்தனர். இக்கல்வெட்டின் வழி அழகியமணவாளச் சதுர்வேதிமங்கலம் திருவரங்கத்தாழ்வாரின் தேவதான பிரம்மதேயமாக இருந்த செய்தியும் அழகிய மணவாளத்து திருமேற்கோயில் திருவெள்ளறை விண்ணகர் ஆழ்வார் கோயிலான ஸ்ரீவைஷ்ணவ பிரியத்தாழ்வார் கோயில் என்றழைக்கப்பட்ட தகவலும் கிடைக்கின்றன.

முகமண்டப மேற்குத் தாங்குதளத்திலுள்ள விக்கிரமசோழரின் எட்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு (பொ. கா. 1126) அழகியமணவாளச் சதுர்வேதிமங்கலத்து திருமேற்கோயிலான திருவெள்ளறை விண்ணகர் ஆழ்வாருக்கு அமாவாசிதோறும் ஒரு சந்தி அமுது அளிக்க அதவத்தூருடையான் பரசுராமன் பெரியான் பத்துக் கலம் நெல் அளித்தார். இக்கொடைப் பொறுப்பைக் கோயிலில் திருவடிபிடிக்கும் ஸ்ரீராமபட்டன் ஏற்றார்.

முகமண்டபக் கிழக்குத் தாங்குதளத்திலுள்ள குலோத்துங்கசோழரின் ஐந்தாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, அழகியமணவாளச் சதுர்வேதிமங்கலத்தை அழகியமணவாளப் பெருமாளின் திருவிடையாட்டமாகக் குறிக்கிறது. அரசாணைப்படி சபை நடைமுறைகளில் மேற்கொள்ளப்பட்ட சில முக்கியமான மாற்றங்களை இக்கல்வெட்டு முன்வைக்கிறது. அவற்றுள், அனைத்துக் குடியிருப்புகளின் சார்பாளர்கள் இல்லாதவிடத்தும் சபைக் கூட்டம் நிகழும் என்ற புதிய அறிவிப்பு குறிப்பிடத்தக்கது.

கோயில் ஆய்வுக்குத் துணைநின்ற டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய இயக்குநர் டாக்டர் இரா. கலைக்கோவனுக்கும் மதிப்புறு இணை இயக்குநர் பேராசிரியர் மு. நளினிக்கும் கோயில் அறங்காவலர் திரு. அர. கிருஷ்ணசாமிக்கும் பட்டாச்சாரியார் திரு. சுரேஷுக்கும் உழுவல் நன்றி உரியது. உடனிருந்து உதவிய முதுநிலை வரலாற்று மாணவர் திரு. ச. கௌதமன், வரலாற்றுத்துறைப் பேராசிரியர் திரு.லே.சந்திரஹாசன் ஆகியோர் நன்றிக்குரியவர்கள். கல்வெட்டுகளின் விரிவான பாடங்களுக்குக் காண்க வரலாறு ஆய்விதழ் தொகுதி 22, பக். 20-24.
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.