http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 121
இதழ் 121 [ ஜுலை 2015 ] இந்த இதழில்.. In this Issue.. |
சென்னை செங்கல்பட்டு நெடுஞ்சாலையில் மறைமலை நகரை அடுத்து கிழக்கே செல்லும் சாலையில் சுமார் 6 கி.மீ. தொலைவில் கரும்பூர் என்ற ஊர் அமைந்துள்ளது. ஊரின் வடமேற்குப் பகுதியில் ஏரி, அதன் மூலம் பாசனம் என ஊர் அழகாக க் காட்சியளிக்கிறது. ஊரினுள் கரியமாணிக்கப் பெருமாள், ஆலவட்டம்மன், செல்லியம்மன் முதலான தெய்வங்களுக்குக் கோயில்கள் அமைந்துள்ளன. வழிபாடுகளும் சிறப்பாக நடைபெறுகின்றன.
ஊரின் வடகிழக்குப் பகுதியில் ஏரிக்கு அருகாமையில் விளைநிலங்களுக்கிடையே சிதைந்த நிலையில் சிவபெருமான் கோயிலொன்று அமைந்துள்ளது. இத்திருக்கோயிலின் தற்போதைய நிலை கண்களில் நீரை வரவழைக்கும் அளவிற்கு உள்ளது. கரும்பூர் சிவபெருமான் திருக்கோயில் திருக்கோயிலின் பல்வேறு கட்டிடப் பகுதிகளும் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ள கற்களும் சிற்பங்களும் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. இத்திருக்கோயிலின் தாங்குதளம் (அதிஷ்டானம்) மட்டும் கருங்கற்களால் அமைக்கப்பட்டு மேலே செங்கற்களால் விமானம் எழுப்பப்பட்டிருக்கலாம் என்பதை ஊகிக்க முடிகிறது. பழுதுபட்டுள்ள ஆதிதளக் கருவறை மட்டும் இன்னும் இடிபாடுறாமல் மிச்சமிருக்க தளத்தின் மேற்பகுதிகள் அனைத்துமே சிதைந்துவிட்டன. கருவறை சூரியன் கருவறையில் லிங்க உருவில் சிவபெருமான் எழுந்தருளியுள்ளார். சதுர வடிவில் ஆவுடையாரைக் கொண்டுள்ளது லிங்கம். லிங்கம் தவிர சோழர்காலச் சூரியன், அம்மன் முதலான தெய்வங்களின் திருவுருவங்கள் உரிய பீடங்களின்றி கருவறையில் காணப்படுகின்றன. கோயிலின் வடபுறத்தில் சண்டேசுவரர் சிற்பம் காணப்படுகிறது. திருக்கோயில் நல்நிலையில் இருந்த காலத்தில் இதர பரிவார தெய்வங்களும் இருந்திருக்கலாம். தற்போது அவற்றைக் காண இயலவில்லை. கருவறைக்கெதிரே நந்தியெம்பெருமான் அமைதியாக எழுந்தருளியுள்ளார். நந்தி கோயிலைச் சுற்றிச் செடிகளும் கொடிகளும் வளர்ந்துள்ளன. போதிய பராமரிப்பின்றி இத்திருக்கோயில் தன் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டுள்ளது. சிதறிய கற்பகுதிகள் கல்வெட்டுக்கள் இக்கோயிலில் காணப்பட்ட கல்வெட்டுக்கள் மத்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறையால் படியெடுக்கப்பட்டு கல்வெட்டு ஆண்டறிக்கை (ARE) 1934-35ல் அவற்றின் சுருக்கங்கள் வெளியாகியுள்ளன. ‘கரும்பூர்’ என்று தற்போது அழைக்கப்படும் இவ்வூர் முற்காலத்தில் ‘கருமூர்’ என்று அழைக்கப்பட்டதை அறியமுடிகிறது. ஆமூர் கோட்டத்தில் குமிழி நாட்டில் அமைந்துள்ள ‘பெருந்தோட்டத்து ஆழ்வார்’ என்றறியப்படும் இக்கோயிலின் இறைவனின் வழிபாட்டிற்காக தானமொன்று அளிக்கப்பட்ட செய்தியினை முதலாம் இராஜராஜரின் 26ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டொன்று இயம்புகின்றது. மேலும் மூன்றாம் இராஜராஜனின் 4ம் ஆட்சியாண்டில் தில்லை நாயக அறையன் கூத்தன் என்பவர் நந்தா விளக்கு எரிக்க தானமளித்த செய்தி காணப்படுகிறது. மற்றொரு கல்வெட்டில் மாம்பாக்கத்தைச் சேர்ந்த பெரியான் அரசன் என்பார் விளக்கெரிக்க தானமளித்த செய்தியையும் தெரிந்து கொள்ள முடிகிறது. சோழர் காலத்தில் இத்திருக்கோயில் சிறப்பாகப் போற்றிப் பராமரிக்கப்பட்டு வழிபாடுகள் நிறைவுற நடைபெற்றதை கல்வெட்டுக்கள் கொண்டு தெளியலாம். மண்ணுக்குள் ஜேஷ்டை ஜேஷ்டை சிற்பம் கோயிலுக்கு சற்று கிழக்கே வயல்வரப்பில் சற்றே மேடான பகுதியில் புதைந்த நிலையில் துர்க்கை சிற்பம் வழிபடப்பெறுவதாக ஊரார் தெரிவித்தனர். சிற்பத்தைச் சுற்றிய மண்மேட்டை அகற்றியபோது அவ்வடிவம் ஜேஷ்டா தேவியின் வடிவம் என்று அறியமுடிந்தது. இதன் சிற்ப அமைதி இதன் பழமையைப் பறைசாற்றப் போதுமானதாக உள்ளது. இருபுறங்களிலும் மகன் குளிகனும் மகள் மாந்தியும் காட்சியளிக்க அம்மை அமர்ந்த கோலத்தில் உள்ளார். தற்போது ஊர்மக்கள் இவ்வடிவினை வழிபடத் துவங்கியுள்ளனர். அகழப்பட்டு வெளிவந்த நிலையில் ஜேஷ்டை கரும்பூர் கிராம மக்கள் (இடது ஓரத்தில் கட்டுரையாசிரியர்) கரியமாணிக்கப் பெருமாள் கோயில் இவ்வூரின் மேற்குப்பகுதியில் காணப்படும் பெருமாள் கோயில் கரியமாணிக்கப் பெருமாள் கோயில் என்றறியப்படுகிறது. பெருமாள் கோயில் பலகைக் கல்வெட்டு கோயிலின் முன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 10ம் நூற்றாண்டுப் பலகைக் கல்வெட்டில் ஒளிவெம்பாடி என்ற வணிகன் கருமூர் ஊரில் உள்ள ‘பெரிய நாயனார்’ கோயிலுக்கு நெல் தானம் அளித்த செய்தி காணப்படுகிறது. இக்கல்வெட்டினால் முற்காலத்தில் இக்கோயில் இறைவன் பெரிய நாயனார் என்றழைக்கப்பட்டதை அறியமுடிகிறது. முடிவுரை கரும்பூரின் இரண்டு திருக்கோயில்களும் சிறிய கோயில்களாக விளங்கினாலும் வரலாற்றுச் சிறப்பு மிக்கவையாக விளங்குகின்றன. தற்போது சிவன் கோயிலைச் சீரமைக்க ஊர் மக்கள் முயற்சி எடுத்து வருகின்றனர். விரைவில் பெருந்தோட்டத்து ஆழ்வார் திருக்கோயில் நல்நிலை எய்தும் என்று அவரை வேண்டி நிற்போம். ஆய்விற்கு உதவி; தாம்பரம் திரு.குணசேகரன், மறைமலை நகர் திரு மெய்யப்பன் மற்றும் கரும்பூர் கிராம மக்கள். மேற்கோள் நூல்கள்; ARE Report 1934-35: Nos.46 to 49. Pages 12-13. |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |