http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 121
இதழ் 121 [ ஜுலை 2015 ] இந்த இதழில்.. In this Issue.. |
தொடர்:
பல்லவர் பாதையில்
விழுப்புரம்-செஞ்சி நெடுஞ்சாலையில் விழுப்புரத்திலிருந்து 28 கிலோ மீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் பிரியும் ஓரளவிற்கு சுமாரான கிராமப்புறச் சாலையில் 6 கிலோ மீட்டர் பயணித்து தளவானூர் சிற்றூரை அடையலாம். இவ்வூர், முற்காலத்தில் தலைவாய்நல்லூர் என்றழைக்கப்பட்டதென கல்வெட்டுச் செய்தியால் அறிகிறோம்.
தளவானூர் ஊரை அடைந்து இரண்டு பாதைகள் பிரியும் இடத்தில் ஓர் ஆலமரத்தின் கீழிருந்த தேனீர்க் விடுதியில் குகைக் கோயிலைப் பற்றி விசாரித்த போது அவர்கள், “ஆமாங்க..அந்த கோயிலுக்கு ஒவ்வொரு மாதமும் அமாவாசையன்று புதுச்சேரியிலிருந்து ஒரு சாமியார் வந்து அருள்வாகு சொல்கிறார் என்றும் அன்னாளில் கூட்டம் அதிகமாக இருக்கும்” என்றும் கூறினர். அவர்களிடம் அக்கோயிலின் காவலரை வரவழைத்து அவருடன் சத்ருமல்லேஸ்வரம் நோக்கி நடந்தோம். செப்பனிடப்படாத கப்பிச் சாலையில் சிறிது தூரம் சென்றவுடன் வலப்புறம் பொட்டலாகவும் இடதுபுறம் பச்சைப் பசேலென்று விரியும் வயல்களும், ஊடே தென்னை மரங்களும் கண்ணுக்கு இனிய விருந்தளித்தன. அவ்வயல்வெளியினைத் தாண்டி தெற்குப் பார்வையாக அமைந்த மகேந்திரரின் சத்ருமல்லேஸ்வரம் புலப்பட்டது. மழைக் காலமாகையால் கால்கள் கழனிச் சேற்றில் அழுந்த வரப்புகளில் நடந்து குடைவரையினை அடைந்தோம். குடைவரைக்கு பாதுகாப்பு அரணாக இந்தியத் தொல்பொருள் அளவீட்டுத் துறையினரால் முள்கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. தளவானூரை நெருங்குகையில் சிறியதாகத் தோன்றிய குன்று இப்போது கிழக்கு மேற்காக படர்ந்த நீண்டதொரு தொடராகக் காட்சியளித்து வியப்பினையூட்டியது. கிழக்குப் பகுதியில் சரியும் குன்றுத்தொடரின் தென் முகத்தில் சத்ருமல்லசுவராலயம் குடைவிக்கப்பட்டுள்ளது. அதன் முன் பகுதியில் பரந்த பாறைத்திடல் முள் கம்பி வேலியால் பாதுகாக்கப்பட்டுள்ளது. குடைவரை அமைந்துள்ள குன்றின் மேல் ஏறியவுடனே நம் உடலைத் தழுவிச் செல்லும் சிலுசிலுவென காற்றும், ரம்யமான சூழலும் வரவேற்கின்றன. அகன்று பரந்த லேசான சரிவுடனான அப்பாறைத்தளம் குறைந்த பட்சம் நூறு பேராவது தங்கி இளைப்பாறும் வண்ணம் உள்ளது. இப்பாறைத் தளத்தின் கீழ்ப்பகுதியில் தான் குடைவரை அமைந்துள்ளது. குடைவரையின் அமைப்பு இக்குடைவரையை அடைய தாய்ப்பாறையில் வெட்டப்பட்ட மகேந்திரர் காலப்படிகளின் அமைப்பு இருபுறமும் தெரிகின்றன. தொல்லியல் துறையினர் அவற்றின் மீது ஐந்து படிகளை அமைத்துள்ளனர். குடைவரை முகப்பு முகப்புத் தளத்திற்கும், நிலமட்டத்திற்கும் இடையிலான பாறைப்பகுதி தாங்குதளமாக உருவாக்கப்பட்டு அதன் மேல் முகப்பின் தரையும் அதன் மீது முகப்பும் அமையுமாறு காட்டப்பட்டுள்ளது. இத்தாங்குதளம் உபானம், ஜகதி, எண்பட்டைக் குமுதம், கம்புகளின் தழுவலில் பாதங்களோடமைந்த கண்டம், பட்டிகை என தாங்குதளத்திற்கான அனைத்து உறுப்புகளையும் கொண்டு பாதபந்த தாங்குதளம் பெற்ற ஒரே மகந்திரர் குடைவரை என்னும் சிறப்பினைப் பெறுகிறது. பட்டிகை குடைவரை முகப்பின் தரையாக உள்ளது. மண்டபத்தின் முகப்பு சதுரம், கட்டு அமைப்பிலான இரண்டு முழுத்தூண்களாலும், முகப்பின் இரு ஓரங்களிலும் நான்முகமாய் அமைந்த இரண்டு அரைத்தூண்களாலும் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முழுத்தூண் சதுரங்களின் நான்கு முகங்களிலும் தாமரைப் பதக்கங்கள் வடிக்கப்பட்டுள்ளன. நான்முக அரைத்தூண்களில் தாமரைப் பதக்கங்கள் காணப்படவில்லை. முழுத்தூண்களின் மேல் சதுரங்களுக்கு காட்டப்பட்டுள்ள மெல்லிய பலகையின் கீழ் தாமரையிதழ்களின் அணைப்பு காட்டப்பட்டுள்ளது. இத்தாமரை கிழக்குத் தூணின் கிழக்குப் பகுதியிலும், மேற்குத் தூணில் தெற்கு, மேற்கு பகுதியில் இவ்வமைப்பு காணப்படவில்லை. அரைத்தூண்கள் தாமரையிதழ் அணைப்பினைப் பெறவில்லை. அரைத்தூண்களின் மீதும், முழுத்தூண்களில் இப்பலகைகள் மீதும் அமர்ந்துள்ள எளிய போதிகைகளின் கைகள் உத்திரம் தாங்குகின்றன. உத்திரத்தின் மேல் வாஜனமும், அதையடுத்து வலபியும், அதையொட்டிக் கூரையின் முன்னிழுப்பாகக் கபோதமும் அமைந்துள்ளன. வாயிற்காவலர்கள் குடைவரை முகப்பின் கிழக்கிலும் மேற்கிலும் அகலமான, ஆழமான கோட்டங்களில் வாயிற்காவலர்கள் வடிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் தலைக்கோலம், உடையமைப்பு, அணிகலங்களால் முழுமையான பல்லவர் கலையை கண்முன்னே நிறுத்துகின்றனர். கரண்ட மகுடம், மகுடம் மீறிய சடைக்கற்றைகள், செவியில் பனையோலைக் குண்டலங்கள் , முப்புரிநூல், கழுத்தில் சரப்பளி, கைகளில் தோள்வளைகளும், வளையல்களும் அணிந்து இருவருமே நேர்ப்பார்வையராக உள்ளனர். மகரத் தோரணம் தமிழ்நாட்டிலுள்ள குடைவரைகளில் மகரத் தோரண முகப்பு பெற்ற ஒரே குடைவரை என்பது சத்ருமல்லேஸ்வராலயத்தின் சிறப்பாகும். மகரங்கள் அகலமாய் வாய் திறந்து ஒன்றையொன்று நோக்கிய பாவனையும், அவற்றின் துதிக்கைகளும் மிக்க அழகுடன் வடிக்கப்பட்டுள்ளன. மகரங்களின் தோகை பல சுருள்களாய் பிரிந்து விரிந்து பரவியுள்ளது. மகரங்களின் வாயிலிருந்து வெளிவருவது போல் காட்டப்பட்டிருக்கும் அழகிய கொடிக்கருக்கு உத்திரத்தின் வாஜன, வலபிப் பகுதியில் பக்கவாட்டில் திரும்பியவாறு அமர்ந்துள்ள சிறு மகரங்களின் திறந்த வைகளில் முடிகிறன. சிறுமகரங்கள் இரண்டிற்குமிடையே வடிக்கப்பட்ட சிறு தாமரைத் தளத்தில் மகரங்களின் சுருட்டிய துதிக்கைகளினிடையே பூதகணமொன்று காட்டப்பட்டுள்ளது. பெருமகரங்கள் ஒவ்வொன்றின் மீதும் ஒரு பூத கணம் அமர்ந்துள்ளது. கபோதம குடைவரையின் கூரையின் நீட்டலாய் வளைக்கப்படுள்ள கபோதம், முழுமையுற்ற முதல் கபோதமாகும். கபோதத்தின் வளைந்த முகத்தில் ஐந்து கூடுகள் காணப்படுகின்றன. இவற்றுள் மூன்றாவதாக அமைந்துள்ள வளைக்கூடு மட்டுமே முழுமையடைந்த நிலையிலுள்ளது. கூடுகளில் அழகிய கந்தர்வத் தலைகள் வடிக்கப்பட்டுள்ளன. மேற்கிலிருந்து கிழக்காக முதல் நால்வரும் சடைமகுடம் கொள்ள கிழக்கிலிருப்பவரின் தலைக்கோலம் சடைபாரமாக உள்ளது. கூடுவளைவை அலங்கரிக்கும் கொடிக்கருக்குகள் மேலெழுந்து தலைப்பில் இணைகின்றன. வளைவின் உச்சிப் பகுதியை பூப்பதக்கம் அழகு செய்கிறது. கபோதத்தின் மேல் ஆலிங்கனம், அந்தரி, பிரதிமுகம், வாஜனம் ஆகிய பூமிதேசத்தின் உறுப்புகள் வெட்டப்பட்டுள்ளன. பூமிதேசம் முழுமையடையாத நிலையில், பூமிதேசத்திற்கான அமைப்பினைக் கொண்ட முதல் குடைவரை சத்ருமல்லேஸ்வராலயம் எனக் கொள்ளலாம். மண்டபம மண்டபப் பகுதி முக மண்டபம், அர்த்தமண்டபம், முன்றில், கருவறை ஆகிய அங்கங்களைக் கொண்டு விளங்குகிறது. முக மண்டபம் முகப்பினையடுத்து சரேலென விரியும் முகமண்டபம். முகமண்டபச் சுவர்கள் நன்கு சமன்படுத்தப்பட்டு வெறுமையாக உள்ளன. கூரையின் கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் வாஜனம் காட்டப்பட்டுள்ளது. அர்த்தமண்டபம் முகமண்டபத்திற்கு இணையாக வடபுறம் அமைந்துள்ள அர்த்தமண்டபத்தின் மேற்குச் சுவரினை அணத்தவாறு கருவறை அகழப்பட்டுள்ளது. கருவறையின் முன், நன்கு சீரமைக்கப்பட்ட தளமொன்றின் மீது முன்றில் அமைந்துள்ளது. முன்றில் முன்றிலின் தரை நன்கு சீரமைக்கப்பட்டுள்ளது. முன்றிலின் கிழக்குப் பகுதியில் அர்த்தமண்டபத் தரையில் அரை வட்ட சந்திரக்கல் வெட்டப்பட்டுள்ளது. கருவறையின் முன்னிருக்கும் சதுரத்தளத்தின் முன்புறம் இரண்டு முழுத்தூண்கள் அமைந்துள்ளன. முன்றிலின் முழுத்தூண்கள் கீழே சதுரமாகவும், மேற்புறம் எண்பட்டையுடனும் காணப்படுகின்றன. இவற்றின் மீதமர்ந்துள்ள கனமான போதிகைகள் வளைமுகமாக உத்திரம் தாங்குகின்றன. உத்திரத்தையடுத்து வாஜனம். அவற்றின் நேர் பின்னால் கருவறை வாயிலின் இருபுறத்திலும் உறுப்பு வேறுபாடற்ற இரண்டு நான்முக அரைத்தூண்கள் உள்ளன. கருவறை கருவறையின் இருபுறமும் அமைந்துள்ள கோட்டங்களில் வாயிற்காவலர்கள் வடிக்கப்பட்டுள்ளனர். இருவருமே சடைமகுடம் தரித்து, பனையோலை குண்டலங்களும், கழுத்தில் சரப்பளியும், முப்புரி நூலும் அணிந்து கைகளில் தோள்வளைகளும், வளையல்களும் கொண்டவராக உள்ளனர். கருவறையின் நடுப்பகுதியில் சிறிய தளமொன்றில் ஆழமான சதுரப்பள்ளம் அகழ்ந்து லிங்கபாணம் பொருத்தப்பட்டுள்ளது. சதுர அடிப்பகுதியும் ருத்ர மேற்பாகமும் கொண்ட லிங்கத்தை சரியாகப் பொருந்தாத நிலையில் ஆவுடையார் அமைந்துள்ளது. கல்வெட்டுகள் இக்குடைவரையிலிருந்து மூன்று கல்வெட்டுக்கள் படியெடுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் ஒன்றிலிருந்து, “சத்ருமல்லேசுவராலயம் என்னும் இக்குடைவரைக் கோயிலைத் தம் படைவலியால் அரசர்களை எளியவராக்கிய நரேந்திரனான சத்ருமல்லன் உருவாக்கினான்” என்ற செய்தியை அறிகிறோம். சத்ருமல்லேசுவராலயம் - சிறப்பியல்புகள் 1. பாதபந்த தாங்குதளம் பெற்ற ஒரே குடைவரை. இதனை கட்டுமானக் கோயில் தாங்குதள அமைப்பிற்கு முன்னோடி எனலாம். 2. தமிழ்நாட்டிலுள்ள குடைவரைகளில் மகர தோரண முகப்புப் பெற்ற ஒரே குடைவரை. 3. முழுமை பெற்ற முதல் முகப்புக் கபோதம் பெற்ற குடைவரை. 4. முதல் பூமிதேசம் அமைப்பினை கொண்ட குடைவரை 5. முன்றில் பெற்ற முதல் தமிழ்நாட்டுக் குடைவரை. இத்துனை சிறப்புகளையும் கொண்டு விளங்கும் தளவானூர் சத்ருமல்லேசுவராலயம் குடைவரை விசித்திரசித்தரின் படைப்பில் உருவான பல்வேறு கலைமுயற்சிகளுள் ஓர் மணிமகுடம் என்பதில் ஐயமில்லை தான்!! நன்றி மு. நளினி, இரா. கலைக்கோவன், மகேந்திரர் குடைவரைகள், அலமு பதிப்பகம், சென்னை, 2004. |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |