http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 123
இதழ் 123 [ செப் 2015 ] இந்த இதழில்.. In this Issue.. |
அன்புள்ள வாருணிக்கு,
குறளின் பொருட்பாலில் 'காலம் அறிதல்' எல்லார்க்கும் வழிகாட்டும் அதிகாரங்களுள் ஒன்று. அதில் இரண்டாம் குறள், 'பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத் தீராமை ஆர்க்கும் கயிறு' எனச் செல்வத்தைக் காக்கும் முறைமை பேசுகிறது. இக்குறளில் ஆளப்பட்டுள்ள 'கயிறு' 1330 பாக்களில் இந்த ஒரு குறளில்தான் இடம் பெற்றுள்ளது. செல்வம் குறைந்துவிடாமல் பிணைக்கும் பொருளாகக் கயிறு காட்டப் பட்டுள்ளது. வள்ளுவர் காலத்தே சமூகத்தில் இருந்த பல்வேறு தொழில்களில் கயிறு திரித்தலும் ஒன்றாக இருந்தமையும் கட்டுவதற்கும் பிணைப்பதற்கும் அதுவே பொருளாக அமைந்தமையும் இக்குறளால் அறியப்படுகிறது. சங்க காலத்தில் கயிற்றின் பயன் எத்தகையதாக இருந்தது என்பதறியும் அவாவினால் எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் பார்த்தேன். கூடுதலாகக் காப்பியங்களிலும் பார்வைப் பரந்தது. அடிப்படையில் கட்டுவதற்கும் பிணைப்பதற்குமே கயிறு பயன்பட்டிருந்தபோதும் அதனால் கட்டுண்ட, பிணைக்கப்பட்ட பொருள்களும் உயிர்களும் எப்படியெல்லாம் கயிறு இலக்கியத்தில் ஆளப்பட்டிருக்கிறது என்பதை முன்னிருத்தின. எருதுகளையும் குதிரைகளையும் வண்டியில், தேரில் பூட்டப் பயன்பட்ட கயிறு யானையைப் பிணிக்கவும் உதவியுள்ளது. பல்வேறு தொழில்களிலும் கயிறு இன்றியமையாப் பொருளாகப் பயன்பட்டுள்ளது. பரதவர்கள் வலை கட்டவும் மீன் பிடிக்கவும் கயிற்றையே நம்பியிருந்தனர். சுறாவேட்டைக்கான எறி உளியைக் கயிற்றால் கட்டியே மீன் வேட்டையர் பயன்படுத்தினராம். கடல் வணிகத்தில் பாய்மரக் கப்பல்கள் பாயை மடக்கவும் விரிக்கவும் கயிற்றையே நம்பியிருந்தன. வணிகச் சாத்துகள் வண்டிகள் கட்டவும் உரல் போன்ற உரிய பொருள்கள் கொண்டு செல்லவும் கயிறு தேவைப்பட்டது. ஆயர்கள்கூடத் தயிர் கடைந்து வெண்ணெய் எடுக்கும் மத்தைச் சுற்ற கயிற்றையே நம்பியிருந்தனர். வேள்வி செய்தாரும் வேள்வித் தூணின் இடையில் கட்ட கயிறு கேட்டனர். நூல் பல கற்ற கட்டடக் கலைஞர்களும் நுண்ணிதின் கயிறிட்டே கட்டமைப்புகளை உருவாக்கினர். ஓலைகளிட்ட குடத்தையும் கயிறு பிணித்திருந்ததாம். பாசறைகளில் இருக்கைகள் அமைக்கக்கூடக் கயிறே தேவைப்பட்டது. கிணறுகளிலிருந்து நீர் எடுக்கக் குறுமுகவைகளைப் பயன்படுத்தியோர் கயிறு கொண்டே முகந்தனர். விளையாட்டுக்கும் கயிறு துணைநின்றுள்ளது. தோழியர் ஆட்டிய ஊசல்களும் தலைவி ஆடிய ஊசல்களும் மரக்கிளைகளில் பல்வகைப் பொருட்களால் ஆன கயிறுகளாலேயே கட்டப்பட்டிருந்தன. அவற்றுள் தாழைக் கயிறும் ஒன்றாம். கழைக்கூத்திற்குக் கயிறு இன்றியமையாத பொருளாக இருந்தமையை 'ஆரியர் கயிறு ஆடு' என்ற பாடலடியும், 'ஆடுமகள் கயிறு ஊர் பாணியில்' என்ற பாடலடியும் புலப்படுத்துகின்றன. புராணக் கதைகளிலும் கயிறு பயன்பட்டுள்ளதை இலக்கியக் கண்காட்டலால் அறியமுடிகிறது. மந்தரமலை கொண்டு கடல் கடையப் பாம்பே கயிறானது. வெண்ணெய் எடுக்காமல் கண்ணன் கைகட்ட யசோதைக்குக் கயிறே கைகொடுத்தது. கண்களையே கயிறாகப் பயன்படுத்திக் காதலர் தோள் பிணைத்த காதலியரையும் பாடலடிகளில் பார்க்க முடிகிறது. பெருங்கயிறு, நெடுங்கயிறு, பூங்கயிறு, நோன்கயிறு, நுண்புரி வன்கயிறு, நோன்புரிக் கயிறு, பலபுரி வார்கயிறு, கொடும்புரி நோன்கயிறு எனப் பலபட இடமும் பயனும் நோக்கி வண்ணிக்கப்படும் கயிறு, பொன்புனை கயிறாகவும் ஓரிடத்தில் காட்சிதருகிறது. குதிரைகளைத் தேரில் கட்டப் பயன்படுத்திய கயிறு வடிகயிறாகச் சுட்டப்படுகிறது. கயிற்றை அறுத்துக் கொண்டு ஓடிய எருதுகளையும் 'வன்கயிறு இயக்கி நின் நெடுந்தேர் கடவுமதி' எனத் தேரோட்டிகளை இயக்கிய தலைவர்களையும் ஒருசேர இலக்கியங்கள் காட்டுகின்றன. இந்தக் காட்டுகளால் கயிறு செய்யும் தொழில் சங்ககாலத்திலிருந்தே முனைப்பான கைத்தொழில்களில் ஒன்றாய் இருந்து வந்துள்ளமையை அறியமுடிகிறது. வள்ளுவர் சில சொற்களைப் பல முறை பெய்திருந்தாலும் பல சொற்களை அரிதே பயன்படுத்தித் தேடலைத் தூண்டிவிடுகிறார். அந்தத் தூண்டலே கயிறாய் வளர்ந்து, மடலாய் மலர்ந்து, உன்னையும் என்னையும் சிந்தனைப் பிணைப்பில் இணையவைக்கிறது. அன்புடன், இரா. கலைக்கோவன் |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |