http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 123

இதழ் 123
[ செப் 2015 ]


இந்த இதழில்..
In this Issue..

குறளில் கயிறு
புகைப்படத் தொகுப்பு - மண்டகப்பட்டு இலட்சிதாயனம்
மெய்க்காட்டு
இலக்ஷிதாயதனம்
சிராப்பள்ளி தொட்டியம் சாலையில் சில கண்டுபிடிப்புகள்-6
தேர் இலக்கண நூல்
இதழ் எண். 123 > கலையும் ஆய்வும்
சிராப்பள்ளி தொட்டியம் சாலையில் சில கண்டுபிடிப்புகள்-6
அர. அகிலா
சுண்டைக்காய் வரதராஜப் பெருமாள் கோயில்


திருச்சிராப்பள்ளி முசிறிச் சாலையில் ஏறத்தாழ 32 கி. மீ. தொலைவிலுள்ள வெள்ளூர் திருக்காமீசுவரம் திருக்கோயிலில் என் மாணவி நிர்மலாவின் முதுகலை ஆய்வேட்டிற்காகப் பணியாற்றியபோது சுந்தரபாண்டியர் கல்வெட்டொன்றைக் கண்டறிய நேர்ந்தது. அப்புதிய கண்டுபிடிப்பு நிர்மலாவோடு வந்திருந்த அவரது இளவலும் பள்ளிக்கூட மாணவருமான செல்வன் க. சரண்குமாரை மிகவும் கவர்ந்தது. அப்போதே கல்வெட்டுகளைப் பற்றியும் பழங்கோயில்கள் பற்றியும் பல கேள்விகள் கேட்டுத் தம் ஆர்வத்தை வெளிப்படுத்திய சரண்குமாரிடம் வெள்ளூருக்கருகில் வேறு கோயில்கள் ஏதேனும் அவர் பார்வையில் பட்டால் தெரிவித்திடுமாறு கூறியிருந்தேன். சரியாக ஒரு மாதத்திற்குள் சரண்குமாரிடமிருந்து பயனுள்ள தகவல் கிடைத்தது. விடுமுறைகளில் நிகழ்ந்த கோயில்களுக்கான அவர் தேடலின்போது வெள்ளூருக்கு ஒரு கி. மீ. தொலைவிலுள்ள சுண்டைக்காய் என்ற ஊரில் இடிந்து சிதைந்த நிலையில் கோயிலொன்றைக் கண்டதாகவும் அதன் சுவர்களில் எழுத்துக்கள் இருப்பதாகவும் சரண்குமார் தம் தமக்கை வழிச் செய்திஅனுப்பியிருந்தார். உடன் மாணவியர் க. கஸ்தூரி, ச. ஸ்ரீதேவி துணையுடன் நிர்மலாவும் சரண்குமாரும் வழிகாட்ட சுண்டைக்காய் நோக்கிப் பயணமானோம்.


பெருமண்டபம்விமானமும் முகமண்டபமும் - பந்தலில் விஷ்ணுவிஷ்ணுவும் திருமகளும்


ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் புதர்களும் செடி, கொடிகளும் மண்டியிருந்த சூழலில் பழங்கோயில் ஒன்றைக் காணமுடிந்தது. விமானம், முகமண்டபம், பெருமண்டபம் என அமைந்திருந்த கட்டுமானத்தின் பின்புறத்தே தென்னோலைப் பந்தலின் கீழ் நெடிதுயர்ந்த சிற்பங்களாய்த் தூசும் மண்ணும் பூசிய நிலையில் விஷ்ணுவும் திருமகளும் நின்றிருந்தனர். கோயிலின் தாங்குதளப் பகுதிகளில் திருப்பணிகளின் காரணமாகச் சிதறடிக்கப்பட்டிருந்த தமிழ்க் கல்வெட்டுகள் கண்சிமிட்டின. கோயிலுக்குச் சற்றுத் தொலைவில் குடியிருந்த திரு. இராமசாமி துணையுடன் (பந்தலிட்டு இறைத்திருமேனிகளைக் காப்பாற்றி வருபவர்) ஆய்வு மேற்கொண்டோம்.


மண்டப இறைத்தொகுதிதூண் கல்வெட்டு


வரதராஜப் பெருமாள் கோயிலாக அறியப்படும் அக்கருங்கல் கட்டுமானம் பல இடங்களில் இடிந்தும் சிதைந்தும் விமானத்தின் மேலுறுப்புகள் முற்றிலுமாகச் சிதறிய நிலையிலும் இருந்தது. கோயில் பெருமண்டப வாயில்நிலையில் தென்புறத்தே ஒரு கல்வெட்டைக் காணமுடிந்தது. பதினெட்டாம் நூற்றாண்டு எழுத்தமைதியில் உள்ள அக்கல்வெட்டு வேதநாயக நம்பி என்பார் கோயிலுக்களித்த நிலக்கொடையைச் சுட்டியது. முச்சதுர, இருகட்டுத் தூண்கள் கூரை தாங்கும் பெருமண்டபத்தின் வடமேற்கில் உள்ள மேடையில் பிற்பாண்டியர் காலத்ததாகக் கொள்ளத்தக்க இரண்டு விஷ்ணு சிற்பங்களும் ஒரு நாகச் சிற்பமும் உள்ளன. வடதூண் சதுரம் ஒன்றில் பொ. கா. 14 ஆம் நூற்றாண்டினதாகக் கொள்ளத்தக்க தமிழ்க் கல்வெட்டைக் கண்டோம். அக்கல்வெட்டு கயிலாயமுடையான் அஞ்சாத பெருமாள் என்பாரின் கொடையாக அம்மண்டபத்தைச் சுட்டுகிறது.

வெறுமையாக உள்ள முகமண்டபத்தையடுத்துப் பழுதடைந்திருக்கும் கருவறையின் உட்புறத்தே மேடையொன்றின் மீது வரதராஜப் பெருமாள், திருமகள், நிலமகள் துணையுடன் காட்சிதருகிறார். தனித்தனித் தளங்களின்மீது நின்ற கோலத்தில் காட்சிதரும் இத்திருமேனிகளின் ஆடை, அணிகலன்கள், தோற்ற அமைதி கொண்டு இவற்றை விஜயநகரப் பேரரசுக் காலச் சிற்பங்களாகக் கொள்ள முடியும். வழிபாடற்றிருக்கும் கோயிலின் பின்புறப் பந்தலில் இருத்தப்பட்டிருக்கும் விஷ்ணுவும் திருமகளும் பிற்சோழர் காலச் சிற்பங்களாகும்.

கணுக்கால்கள் வரை பட்டாடை அணிந்துள்ள விஷ்ணுவின் பின்கைகளில் சங்கும் சக்கரமும் அமைய, வல முன் கை காக்கும் குறிப்பில் உள்ளது. கிரீடமகுடம், மகரகுண்டலங்கள், சரப்பளி, முப்புரிநூல் அணிந்து காட்சிதரும் விஷ்ணுவின் இட முன் கை தொடையில் இருத்தப்பட்டுள்ளது. மார்புக்கச்சும் பட்டாடையும் அணிந்துள்ள திருமகளின் தலையில் கரண்டமகுடம். காதுகளில் குதம்பையும் கைகளில் வளைகளும் அணிந்துள்ள அம்மை வலக்கையை நெகிழ்த்தி, இடக்கையில் தாமரை ஏந்தியுள்ளார். புதர்களுக்கு இடையிலிருந்த இச்சிற்பங்களை மீட்டுப் பந்தலிட்டு அதன் கீழிருத்திக் காப்பாற்றி வருபவரான திரு. இராமசாமி சுற்றுப்புறமெங்கும் தேடியும் நிலமகள் சிற்பத்தைக் காணக்கூடவில்லை என்று தெரிவித்தார்.

கோயில் வளாகத்தின் புறத்தே விமானம், மண்டபப் பகுதிகளில் காணப்படும் கல்வெட்டுத் துணுக்குகளைச் சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி வரலாற்றுத்துறைத் தலைவர் பேராசிரியர் மு. நளினி வழிகாட்டலில் ஆய்வு செய்ததில், அவற்றுள் சில, பதினான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டு கல்வெட்டுகளின் சிதறல்களாக இருப்பதை அறியமுடிந்தது. இக்கோயிலுக்கான வழிபாடு, படையல் செலவினங்களுக்காக பிரமதேய உறுப்பினர்கள் சிலர் நன்செய் நிலமொன்றைக் கொடையளித்ததாகக் கூறும் கல்வெட்டு, அவ்வூரின் பெருங்குறி மகாசபை உறுப்பினர்கள் சிலர் பெயரைத் தருவது குறிப்பிடத்தக்கது. திரு. இராமசாமியிடம் பக்கத்திலுள்ள ஊர்களைப் பற்றிக் கேட்டபோது சுண்டைக்காய் எனும் அவ்வூரே சில காலத்திற்கு முன்வரை அலமேலுமங்கலம் என்றும் சதுரகிரிமங்கலம் என்றும் அழைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். அவர் கூற்றின் வழிக் கோயிலுக்குக் கொடையளித்த பிரமதேயத்தார் சுண்டைக்காயைச் சேர்ந்தவர்களே எனக் கருதலாம்.

சில துணுக்குகளின் இணைவு கொண்டு கோயிலில் எழுந்தருளுவிக்கப்பட்ட உற்சவர் திருமேனி பற்றியும் அதன் வழிபாட்டிற்குத் துறையூரைச் சேர்ந்த நில உரிமையாளர்கள் சிலர் புன்செய்நிலம் கொடையளித்தமை பற்றியும் அறியமுடிந்தது. இணைத்துப் பொருள் காணமுடியாத நிலையிலுள்ள சில துணுக்குகள் ஊர் மக்கள் சிலர் பெயர்களையும் கோயில் செலவினங்கள் சிலவற்றிற்கான நெல்அளவுகளையும் தருகின்றன. கோயிலுக்குப் பக்கத்திலுள்ள பகுதிகளில் அகழ்வாய்வு மேற்கொண்டால் காணப்படாதிருக்கும் நிலமகளின் சிற்பமும் கோயில் சார்ந்த பல அரிய செய்திகளும் கிடைக்க வாய்ப்புள்ளது.

ஆய்விற்குத் துணையான டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய இயக்குநர் டாக்டர் இரா. கலைக்கோவனுக்கு உளமார்ந்த நன்றி உரியது.
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.