http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 127
இதழ் 127 [ பிப்ரவரி 2016 ] இந்த இதழில்.. In this Issue.. |
கடந்த ஜனவரி 20ம் தேதியிட்ட இந்து நாளிதழில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது. காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் தாலுகாவில் நெட்ரம்பாக்கம் (நெற்றம்பாக்கம் என்ற பெயர்தான் இவ்வாறு மருவி இருக்குமோ?) என்ற ஊரிலுள்ள நந்தேசுவரர் கோயிலில் கி.பி முதல் நூற்றாண்டைச் சேர்ந்த பிராமிக் கல்வெட்டுடன் ஒரு சிவலிங்கம் கிடைத்துள்ளது. அக்கல்வெட்டை முனைவர் இரா.நாகசாமி அவர்கள் "செ ந் த மான்" என்று வாசித்திருக்கிறார்கள். ஐந்து தாமரை மலர்கள் வரையப்பட்டு நடுவில் உள்ள மலர் மலர்ந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள். முனைவர் இரா.கலைக்கோவன் அவர்கள் வாயிலாக இச்செய்தியைக் கேள்விப்பட்டதும் அடுத்த சில நாட்களிலேயே அவ்விடத்தைப் பார்க்க நண்பர் க.சுப்பையா அவர்களுடன் பயணமானோம். தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் முன்னாள் துணை இயக்குனர் திரு. கி.ஶ்ரீதரன் அவர்களிடம் வழியைக் கேட்டறிந்து நந்தேசுவரர் கோயிலை ஆவலுடன் அடைந்தபோது, குடமுழுக்கு முடிந்து பிராமிக் கல்வெட்டு இருந்த பகுதி மண்ணுக்குள் புதைக்கப்பட்டுச் சிவலிங்கம் வழிபடப்பெற ஆரம்பித்துவிட்டிருந்தது. இனி அக்கல்வெட்டை நேரில் காணச் சாத்தியமே இல்லை. சென்னை எழும்பூரில் உள்ள தொல்லியல் துறை அலுவலகத்தில் அக்கல்வெட்டின் மசிப்படி இருப்பதாகக் கேள்விப்பட்டு, ஒருநாள் அங்குச் சென்று பார்த்துக் கொள்ளலாம் என்று ஏமாந்த மனதைச் சற்று ஆறுதல் படுத்திக்கொண்டு அவ்வூரிலேயே இருக்கும் பொன்னியம்மன் கோயிலின் பல்லவக் கொற்றவையைக் காணச் சென்றோம். நந்தேசுவரர் கோயிலில் இழந்த உற்சாகம் பொன்னியம்மன் கோயிலில் மீண்டது. இடுப்புவரை மண்ணில் புதைந்திருந்த அழகான பல்லவர்காலக் கொற்றவைச் சிற்பம். முன்பு இவ்விடத்தில் முதன்மைத் தெய்வமாக வழிபடப்பட்டுப் பின்னாளில் புதிய துர்கைச் சிற்பத்தால் கோயிலுக்கு வெளியே இடம்பெயர்க்கப் பட்டிருக்கவேண்டும். கோயிலைச் சுற்றி ஆங்காங்கே கருங்கற்கள் காணப்படுவதால், முன்பு இக்கோயில் பெரியதொரு வளாகமாக இருந்திருத்தல் வேண்டும் என்று ஐயப்பட்டார் நண்பர் க.சுப்பையா. பிறகு தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் முன்னாள் துணைக் கண்காணிப்பாளர் திரு. அர்ஜுனன் அவர்களிடம் பேசியபோது, கோயில் தொடர்பான செதுக்கப்பட்ட கற்கள் மட்டுமின்றி, அங்கு இருக்கும் இயற்கையான சிறு பாறைகள் பெருங்கற்காலப் பண்பாட்டுக் காலத்தை உணர்த்துவதாகக் கூட இருக்கலாம் என்ற கருத்தை அறிய நேர்ந்தது. இக்கற்களை வைத்துத்தான் முனைவர் இரா.நாகசாமி அவர்கள் நெட்ரம்பாக்கம் பெருங்கற்காலப் பண்பாட்டுக் காலத்தைச் சேர்ந்தது என்பது உறுதியாகிறது என்று நாளிதழ்ச் செய்திக் குறிப்பில் கூறியிருக்கிறார் போலும். மேலே குடையுடன் கரண்ட மகுடத்துடன் தலையை வலப்புறமாகச் சாய்த்த நிலையில் இருக்கும் கொற்றவையின் செவிகளில் பனையோலைக் குண்டலங்கள் மற்றும் கழுத்தில் சரப்பளி. நெற்றிக்கண் இருக்கிறதா என்று அறியக்கூடவில்லை. செவிகளுக்குப் பின்புறம் விரிந்திருக்கும் சடைப்புரிகளில் இக்கால வழிபாட்டுமுறை பொட்டிட்டிருக்கிறது. மார்பில் கச்சுடன் நடுப்பகுதியில் முடிச்சும் முப்புரிநூலும் காணப்படுகின்றன. எட்டுக்கைகளில் வலப்புறம் மலர், எறிநிலைச் சக்கரம், நீண்ட வாள் பெற்று, இடப்புறம் சங்கும் கேடயமும் கொண்டிருக்கிறது. வலக்கைகளில் ஒன்றும் இடக்கைகளில் ஒன்றும் கொண்டுள்ள கருவிகளை அடையாளம் காணமுடியவில்லை. இடுப்புக்குக் கீழாக நீண்டிருக்கும் இடக்கைகளில் ஒன்று பொதுவாகக் கொற்றவைச் சிற்பங்களில் காணப்படும் கடியவலம்பிதமாக இருக்கலாம். வலப்புறம் பறக்கும் நிலையில் இருக்கும் பறவை கிளியாக இருக்கலாம். பின்புறம் சூலம் இடம்பெற்றிருக்கிறது. இதுவரை வேறெந்தக் கொற்றவைச் சிற்பத்திலும் கண்டிராத ஒரு பொருள் இங்குக் காணப்படுகிறது. சிலப்பதிகாரத்தில் வேட்டுவ வரியில் கொற்றவையின் உருவ அமைப்பும் வழிபாடும் மிகச்சிறப்பாக விளக்கப்பட்டுள்ளது. அவ்வழிபாட்டில் படையலிடப்படும் பொருட்களாகப் பாவை, கிளி, காட்டுக்கோழி, நீலநிற மயில், பந்து, கிழங்கு ஆகியன சுட்டப்பெறுகின்றன. அவற்றில் ஒன்றான மயில் கொற்றவையின் இடது தோள்புறம் காணப்படுகிறது. நீண்ட அலகுடனும் கொண்டையுடனும் நீண்ட கழுத்துடனும் தோகையுடனும் காட்சியளிக்கிறது. கால்கள் இடக்கையில் கொண்டுள்ள கருவி ஒன்றின்மேல் இருத்தப்பட்டிருப்பதுபோல் காட்டப்பட்டிருக்கிறது. இச்சிற்பம் இடுப்புவரை மட்டுமே காணப்படுவதால் இடுப்புக்குக் கீழேயுள்ள அணிகலன்கள், பாதநிலை முதலியன அறியக்கூடவில்லை. முழுவதுமாக அகழ்ந்து வெளியே எடுத்து ஆராய்ந்தால், சிலப்பதிகாரம் சுட்டும் மற்ற படையல் பொருட்களில் ஏதாவது இடம்பெற்றிருக்கிறதா என்று அறியமுடியும். காலம் கனியும்வரை காத்திருப்போம். |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |