http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 127
இதழ் 127 [ பிப்ரவரி 2016 ] இந்த இதழில்.. In this Issue.. |
திருவானைக்கோயில் இயற்கை நலவாழ்வு மைய நிறுவனர் திரு. பெ. பாலசுப்பிரமணியம் அளித்த தகவலைத் தொடர்ந்து, மணப்பாறையிலிருந்து 5 கி. மீ. தொலைவில் பொன்முச்சந்திக்கு அருகிலுள்ள பூர்த்திகோயில் கிராமத்தின் முக்தீசுவரம் கோயிலில் ஆய்வு மேற்கொண்ட நானும் சிராப்பள்ளி சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி வரலாற்றுத்துறைத் தலைவர் முனைவர் மு. நளினியும் பாண்டியர் காலக் கல்வெட்டுகள் சிலவற்றைப் படியெடுத்தோம். கோயிலின் மேற்குப் பகுதியில் மதில் சுவருக்கு அருகிலுள்ள புதர்களுக்கிடையில் சிதைந்த நிலையில் சில சிற்பங்களையும் அப்போது கண்டறிந்தோம். இங்கிருந்து எங்களால் படியெடுக்கப்பட்ட 18 கல்வெட்டுகளுள் பெரும்பான்மையன இரண்டாம் பாண்டிய அரசுக் காலத்தன. அவற்றுள் சில அடர்த்தியான சுண்ணாம்புப் பூச்சாலும் தக்க பராமரிப்பின்மையாலும் பெருமளவிற்குச் சிதைந்துள்ளன. கோயில் மண்டபங்களின் வெளிப்புறத்துள்ள கல்வெட்டுகள் சிலவற்றின் கீழ்ப்பகுதிகள் மண்ணில் புதைந்துள்ளதால் இயன்றவரை அவற்றைப் படியெடுத்துள்ளோம். கண்டறியப்பட்ட பாண்டியர் காலக் கல்வெட்டுகள் மாறவர்மர் குலசேகரர், சடையவர்மர் சுந்தரபாண்டியர் ஆட்சிக்காலத்தே பொறிக்கப்பட்டுள்ளன. இம்மன்னர்களாலும் ஊரவை அமைப்புகளாலும் கோயில் வழிபாட்டுக்கும் படையலுக்கும் என பெரும் நிலப்பரப்புகள் கொடையளிக்கப்பட்டமையைத் தெரிவிக்கும் இக்கல்வெட்டுகள், இப்பகுதியில் இருந்த பல ஊர்களை வெளிக்கொணர்வதோடு நிலங்களுக்குப் பாசனமளித்த நீர் அமைப்புகளையும் ஆவணங்கள் எழுதப்பட்ட முறைமையையும் புலப்படுத்துகின்றன. குலசேகரபாண்டியரின் கல்வெட்டொன்றால் திருமுக்தீசுவரம் என்ற இக்கோயிலின் பெயரும் வடகோனாட்டின் கீழிருந்த முதியகுடி நாட்டுடன் இணைக்கப்பட்டிருந்த கடுவன்குடி எனும் ஊரில் இக்கோயில் அமைந்திருந்தமையும் தெரியவருகின்றன. இப்பகுதியின் ஆட்சியாளராக இருந்த சேமாண்டன் என்பவர் அழகியசேமநல்லூர் எனும் ஊரை, அதற்கான வரிகளை நீக்கிக் கோயிலுக்குத் தந்தமை கூறும் இக்கல்வெட்டு, ஊர் எல்லைகளைச் சுட்டும்போது மேலும் பல ஊர்களின் பெயர்களைத் தருகிறது. கோயில் திருமடைவிளாகத்தைச் சேர்ந்த ஆண்டார்கள் இருவர் கோபாலக்குடியிலிருந்த கிணற்றோடு அமைந்த நிலத்துண்டொன்றைக் கோயிலுக்களித்த தகவலைப் பகிர்ந்துகொள்ளும் கல்வெட்டு, கோயில் நிருவாகம் பற்றிய தரவுகளையும் தருகிறது. முன்மண்டபத்திலிருந்து படியெடுக்கப்பட்ட குலசேகரபாண்டியரின் மற்றொரு கல்வெட்டு, கடுவன்குடி ஊரார், இறைவனின் திருஎழுச்சிப்படிக்காக 30 கழஞ்சுப் பொன் அளித்ததாகச் சொல்கிறது. உபையகுடி, சேமங்கலம், அகளங்கநல்லூர், கொடும்பாளூர் ஆகியவற்றால் சூழப்பெற்ற கொடாலக்குடி எனும் ஊரை வடகோனாட்டு நாட்டவரும் முதியகுடி நாட்டவரும் இணைந்து இறையிலி திருநாமத்துக்காணியாகக் கோயிலுக்கு வழங்கிய தகவலைத் தரும் கல்வெட்டு, இவ்விருநாட்டு ஆட்சியாளர் பெயர்களை முன் வைப்பதுடன், ஆவணங்கள் எழுதப்பட்ட அமைப்பையும் வெளிப்படுத்துகிறது. சடையவர்மர் சுந்தரபாண்டியரின் கல்வெட்டு, மேலைக்கடுவன்குடி ஊரார் கோயில் செயற்பாடுகளுக்காகக் கொடையாக அளித்த நிலப்பகுதியைச் சூழ்ந்திருந்த முதியகுடி நாட்டைச் சேர்ந்த பல ஊர்களின் பெயர்களைச் சுட்டுகிறது. கோயிலில் நிகழ்த்தப்பெற்ற திருவிழாக்களுக்கான செலவினங்களைச் சந்திக்க வாய்ப்பாகக் கீழைக்கடுவன்குடி, மேலைக்கடுவன்குடி, பொய்கையூர் ஊரவையினர் விஜயபஞ்சரநல்லூர் எனும் வளமான ஊரைக் கோயிலுக்களித்துள்ளனர். இக்கொடைக் கல்வெட்டும் இப்பகுதியில் இருந்த பல சிற்றூர்களின் பெயர்களைப் பதிவுசெய்துள்ளது. கட்டடப்பகுதியில் சிக்கியும் சற்றே சிதைந்த நிலையிலும் உள்ள சுந்தரபாண்டியரின் கல்வெட்டு, இக்கோயில் சிவாச்சாரியார்கள் இருவருக்கிடையே கோயில் ஊழியம் தொடர்பாக நிகழ்ந்த ஒப்பந்தத்தை வெளிப்படுத்துகிறது. புதிதாக சிவாச்சாரியம் மேற்கொள்பவர்கள் தொடர்பான நடைமுறைகளையும் அவர்தம் கடமைகளையும் தொழில் சார்ந்த கட்டுப்பாடுகளையும் வெளிப்படுத்தும் இக்கல்வெட்டு, அவர்களுக்கான தொழில் பங்கீடுகள், ஊதிய விகிதங்கள் குறித்தும் பேசுகிறது. பெரிதும் சிதைந்த நிலையிலுள்ள இரண்டு கல்வெட்டுகள் கனகராயரால் இக்கோயிலுக்குத் தேவரடியார்களாகக் கொடையளிக்கப்பட்ட, தாயும் மகளுமான இரண்டு பெண்களைக் குறிப்பிடுகின்றன. பிற்காலக் கல்வெட்டொன்று இவ்வூரின் தற்போதைய பெயரான பூரத்தூர் என்பதை வெளிப்படுத்துவதுடன், இவ்வூர் கடுவன்குடியுடன் இணைக்கப்பட்டிருந்ததையும் கோயில் வழிபாட்டிற்கு இரண்டு சிற்றூர்கள் கொடையாகத் தரப்பட்டதையும் தெரிவிக்கின்றது. கோயில் வளாகத்தில் கண்டறியப்பட்ட சிதைந்த சிற்பங்களுள் விஷ்ணு, பாண்டியர் காலக் கலையமைதியில் சிறப்பான சிற்பமாகக் காட்சிதருகிறார். சண்டேசுவரர், முருகன், இரண்டு பெண் சிற்பங்கள் ஆகியவையும் ஆய்வின்போது கண்டறியப்பட்டன. மண்ணில் புதைந்திருக்கும் கல்வெட்டுப் பகுதிகளை வெளிக்கொணரக் கோயில் நிருவாகத்துடனும் ஊர் மக்களுடனும் இணைந்து திரு. பாலசுப்பிரமணியம் முயற்சி மேற்கொண்டுள்ளார். ஆய்விற்குத் துணைநின்ற டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய இயக்குநர் டாக்டர் இரா. கலைக்கோவனுக்கும் ஊர் மக்களுக்கும் எங்கள் உழுவல் நன்றி உரியது. |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |