http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 129

இதழ் 129
[ அக்டோபர் 2016 ]


இந்த இதழில்..
In this Issue..

எவ்விதத்தானும் அறமன்று
புள்ளமங்கை பயண அனுபவங்கள் - ஒரு பகிர்வு
வாசிப்பில் வந்த வரலாறு - 6
SOMUR SOMESWARA TEMPLE - 3
TEMPLES IN AND AROUND THIRUCHIRAPPALLI - 2
மதி சேர்ந்த மகம்
இதழ் எண். 129 > பயணப்பட்டோம்
புள்ளமங்கை பயண அனுபவங்கள் - ஒரு பகிர்வு
செல்வி அருண்குமார்

ஒருநாள் 13.06.2016 அன்று காலை 10.00 மணியளவில் எனது அலைபேசி ஒலித்தது. தனது இனிய குரலில் பேராசிரியர் நளினி அவர்கள் நாளை புள்ளமங்கை பயணம் உள்ளது. சென்னையிலிருந்து திரு.கமலக்கண்ணன் மற்றும் சிலர் வருகைதர இருப்பதாகவும், காரில் அவர்கள் வந்துவிடுவதாகவும், நீங்கள் புள்ளமங்கைக்கு வந்துவிடுங்கள், அங்கே நாம் இணைந்து கொள்ளலாம் என்று அழைப்பு விடுத்தார். மறுநாள் 14.06.2016 அன்றுஅதிகாலை இல்லத்திலிருந்து கிளம்பியபோது மணி 05.30. திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தை அடைந்து, தஞ்சைப் பேருந்தில் பயணம் ஆரம்பம். காலை ஆதவன் இருள்மங்கையை அணைத்துக் கொண்டிருந்த வேளையில், வாயுதேவனும் அம்மங்கையை இதமாகத் தழுவியதால் வீசிய குளிர்ந்த காற்றில் மனதின் மகிழ்ச்சியின் அலைகள், எண்ணத்தில் மோதப் பயணம் தொடங்கியது. கற்பனையில் நான் கண்ட புள்ளமங்கையைப் பார்க்கும் ஆவலில், பேருந்து மெதுவாகச் செல்வதாகவே தோன்றியது. 

பேருந்து "இராஜராஜேஸ்வரம்" சோழனின் பிரம்மாண்ட சின்னம் ஈன்ற தஞ்சையை வந்தடைந்தது. சோழனின் மண்ணில் இறங்கி அவரது ஆசிகள் பெற்றுக்கொண்டேன். "சோழவளநாடு சோறுடைத்து" என்பதை மெய்ப்பிக்கும் வண்ணம் காலைச் சிற்றுண்டியை ஓர் உணவகத்தில் முடித்துவிட்டு, பிறகு பயணத்தைத் தொடரக் கும்பகோணம் பேருந்தில் ஏறி, பசுபதிகோயில் இறக்கத்தில் இறக்கிவிடப் பேருந்து வழிநடத்துனரிடம் கேட்டுக்கொண்டேன். ஒரு வழியாகப் பசுபதிகோயில் 9.15 மணியளவில் வந்தடைந்தேன். பேருந்திலிருந்து இறங்கியவுடன், ஒரு வியாபாரி பனை நுங்கை சீவி, நுங்கு விற்பனை செய்து கொண்டிருந்தார். வெயிலின் தாக்கம் ஏறத்தொடங்கியிருந்ததால் நுங்கு, வெள்ளரிக்காய் போன்ற நீர்க்காய்கள் தாகசாந்திக்காக வாங்கிக்கொண்டு பேராசிரியர் நளினி அவர்களுக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டேன். அவர்கள் தஞ்சையை தாண்டி வந்து கொண்டிருக்கிறோம். நீங்கள் கோயிலுக்குச் சென்று உள்ளே அமர்ந்திருங்கள். நாங்கள் விரைவில் அங்கு வந்துவிடுவோம் என்று கூறினார். பிறகு அருகில் நின்ற ஆட்டோ மூலம் புள்ளமங்கைக்குப் பயணம் மேற்கொண்டேன். 

பசுபதி கோயிலிலிருந்து புள்ளமங்கை கிராமம் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. வயல்வெளிகளின் நடுவில், இக்காலச் சுற்றுப்புற சூழல்களால் சிக்கி மாசுபெறாமல், உள்ளே அடங்கியுள்ளது அந்தக் கிராமம். சோழன் இக்கோயிலைக் கட்டியபோது அந்தக் கிராமம், பெரிய நகரமாக இருந்திருக்க வேண்டும் என்றது எனது எண்ண ஓட்டம். "அவரசங்களும், அழுத்தங்களும் நிறைந்த இயந்திர வாழ்க்கையில் அடுத்த தெருவுக்குச் செல்லும் சிறுநடைப்பயணமோ, அரைமணி நேரக் குறும்பயணமோ கூட மனதுக்கு ஆசுவாசமளிக்கும் மந்திரத்தைத் தன்னகத்தே கொண்டிருக்கும் என்பது அன்று எனது ஆட்டோ பயணத்தின்போது அனுபவப்பூர்வமாகக் கண்டறிந்த உண்மை". நான்கு வளைவுத் திருப்பங்களில், சிறு வீடுகள் அமைந்த தெருவில் இதோ எதிரில் இறைவனது திருக்கோயில் இராஜகோபுரம் தெரிந்தது. கனவை மெய்ப்பித்த இறைவனை வணங்கிக் கோயில் உள்ளே பிரவேசித்தேன். மகாமண்டபத்தில் வீற்றிருந்த பிள்ளையார், நந்தி, பைரவர், அம்மன் சௌந்தரநாயகியை வணங்கிவிட்டுத் திருச்சுற்றுத் தெற்குவாயில் வழியே இறங்கி 10 அடி தூரம் சென்று முத்தள விமானத்தைப் பார்த்தபோது மெய்சிலிர்த்துப் போனேன். விமானத்தின் அமைப்பு தூயநாகர வகையை சேர்ந்தது. விமானத்தில் உள்ள சிற்பங்களும், சுவர்களில் உள்ள கல்வெட்டுகளும், கபோதபந்தத் தாங்குதளமும், ஜகதி, குமுதங்களில் உள்ள கல்வெட்டுகளும், கண்டபாதச் சிற்பங்களும், வேதிபாதச் சிற்பங்களும், தெற்கு, மேற்கு, வடக்கு கோட்டத்தில் உள்ள கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, விஷ்ணு, கொற்றவை, பூமிதேசத்தில் உள்ள இரட்டை நந்திகள், மகரதோரணங்கள் இவற்றைக் காணக்காண இதை வடிவமைத்தவன் எப்பேர்ப்பட்ட கலைஞனாக இருந்திருப்பான் என்ற நினைவுகளில் உள்ளம் நெகிழ்ந்து போனதை உணர்வுபூர்வமாக உணர்ந்த வேளையில், டாக்டரும் பேராசிரியர் நளினியும் அவர்களுக்குப் பின்னே, ரிஷியா, திரு. கமலகண்ணன், திரு. கிருபாசங்கர் வந்து சேர்ந்தனர். டாக்டர், என்னையும் லெட்சுமியையும் அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். வரலாறு.காம் எழுத்துக்களின் மூலம் மட்டுமே எங்களுக்கு நிழலாக அறிமுகமானவர்கள். இன்று நிஜமாகினார்கள். ஆக நிழல்கள் நிஜமானது அறிமுகத்தால். 

பிறகு கள ஆய்வுக்கு எல்லோரும் தயார் ஆனார்கள். அந்தக் கோயிலின் குருக்கள் திரு.குமார் அவர்கள் வந்ததும், இறைவன் திருமுன்னைத் திறந்து தீபாரதனை தரிசனம் செய்து, பின் ஆய்வுப்பணியை மேற்கொண்டார்கள். முகமண்டபத்தில் உள்ள தூண்களின் வடிவமைப்பை எங்களுக்குச் சுட்டிக்காட்டி, இது பராந்தகசோழனால் கட்டப்பட்ட கோயில் என்றும், அந்தத் தூண்களில் உள்ள மாலைத்தொங்கல் ஆடற்கலைச் சிற்பங்களையும், முகமண்டபத்தைத் தாங்குவதுபோல் செதுக்கப்பட்டிருக்கும், இசைகருவிகளுடன் உள்ள பூதவரிகளையும், காண்பித்து, ஒரு கோயில் கட்டப்பட்ட காலத்தை, அதன் கட்டுமான அமைப்பைக் கொண்டே கணித்துவிடலாம் என்று விளக்கம் அளித்தார். துவாரபாலகர்கள் வடிவமைப்பு அமைப்பு மிக அற்புதக் காட்சியாக இருந்தது. மகாமண்டபத்தின் வடக்குத் திசையில் அம்மன் திருமுன். ஒவ்வொரு சிற்பத்தையும் ரசித்துக் கொண்டே திருச்சுற்றுக்கு வெளியில் வந்தோம். பிறகு முத்தள விமானத்தில் செதுக்கப்பட்ட சிலைகளை வடிவமைத்த சிற்பியின் எண்ணத்தைப் பிரதிபலிக்கும் வண்ணம் எங்களுக்கு விளக்கம் அளித்தார். தெற்குச் சுவர்க் கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி அருகில் உள்ள சிற்பங்களைச் சனகாதி முனிவர்கள் என்றும், விமானத்தின் முதல் தள நாசிகையிலுள்ள பிச்சாடனாரையும் சுட்டிக்காட்டி, கலைவடிவத்தை அந்தக் காலச் சரித்திர ஆதாரங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும். அப்போதுதான் வரலாற்றின் உண்மை விளங்கும் என்று கூறினார். 

பிறகு அவர் ரிஷியாவிடம், இங்கே ஓரிடத்தில் வந்தியத்தேவன் இருக்கிறார். கண்டுபிடியுங்கள் என்று  புன்னகையுடன் கூறியதும், ரிஷியா தனது அழகிய கண்களை மேலும், கீழும் சுழற்றித்தேட, வந்தது முதல் என்னை மிகவும் கவர்ந்தது 2 சிற்பங்கள், ஒரு ஆடவரும், ஒரு பெண்டிரும். மனதிலே பதிந்த இந்த முகங்களை எங்கோ பார்த்தது போல் உள்ளதே! முக்கியமாக அவர்களின் சிகை அலங்காரம்! என் மனதிலே தோன்றிய அந்த ஆடவர் சிற்பத்தை நான் சுட்டிக்காட்ட, டாக்டர் புன்முறுவலுடன் செல்வி கண்டுபிடித்துவிட்டார் என்று கூறியவுடன் எனக்குள் ஓர் ஆச்சர்யம். ஆம்! கல்கி அவர்கள் புதினத்தின் ஓவியர் மணியம் அவர்களை இந்தப் புள்ளமங்கலத்துக்கு அழைத்துவந்து இந்தச் சிற்பத்தை மாதிரியாக வைத்து வந்தியத்தேவனையும், குந்தவை நாச்சியாரையும் வரைந்திருப்பாரோ என்ற எண்ணம் மனதில் உதித்தோடியது. பிறகு நளினி அவர்கள் கல்வெட்டைப் படிக்கத் தொடங்கிக் குறிப்புகள் எடுத்து கொண்டிருந்தார். திரு. கமலக்கண்ணன் கோயில் கட்டமைப்புகளை அளக்கும் பணியிலும், திரு. கிருபாசங்கர் அவர்கள் இராமயணத்தில் வாலிவதத்தின் தத்ரூபக் காட்சியைக் கண்டபக்ச் சிற்பங்களில் பார்த்து ரசித்து ஆய்வுப்பணியில் ஈடுபட, லெட்சுமி தனது புகைப்படக்கருவி மூலம் சிற்பங்களைப் பதிவு செய்யும் பணியிலும் ஈடுபட்டிருந்தனர். மேற்குப்புறச் சுவரில் கோட்டத்தில் உள்ள லிங்கோத்பவர் அருகில் உள்ள பிரம்மனின் சிரிப்பு காண்போர் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு போய்விடும் அளவிற்கு அப்படி ஓர் அழகு. சொல்லவொன்னா அழகிய சிரிப்பை வடித்துள்ள சிற்பிக்குக் கோடி வந்தனங்களை மானசீகமாகச் சமர்ப்பித்தேன். 

வடக்குச் சுவர்க் கோட்டத்தின் நான்முகன். மேலே முதல்தளத்தில் திரிபுராந்தகர் கையில் வில்லுடன் உள்ளார் என்றும் சண்டேசர் எதிரில் உள்ள கொற்றவை மிக அற்புதப்படைப்பு; இந்தக் கொற்றவை அமைப்பு வேறு எந்தக் கோயிலிலும் இல்லை என்றும் டாக்டர் கூறினார். பிறகு தேநீர் அருந்தச் சிறிது ஓய்வெடுத்துக் கொண்டோம். தாகத்திற்கு இதமாக நுங்கு, வெள்ளரிக்காய் இவைகள் எங்கள் களைப்பை போக்கியவுடன் மீண்டும் ஆய்வுப் பணிக்குக் கொற்றவையிடம் வந்தோம். கொற்றவை அருகில் உள்ள சிற்பங்களில் ஒன்று தனது கண்டத்தையும், மற்றொன்று தனது கால்களையும் வெட்டிக்கொள்ள முற்படுகிறது. மிகத் தெளிவாக நமது முன்னோர்களின் அக்கால வழிபாட்டினை இந்தச் சிற்பங்கள் விளக்குவது நம் சிந்தனையைத் தூண்டுவதாக அமையப் பெற்றது.

ஆய்வு பணியில் நேரம் போனது எங்களுக்குத் தெரியவில்லை. மேலும் அவ்வப்போது ரிஷியா, கிருபாசங்கர், கமலக்கண்ணன் இவர்களின் நகைச்சுவை உரையாடல் களைப்பைப் போக்குவதாக அமைந்தது. ஆனாலும், வயிற்றில் பசியின் அலைபேசி ஒலிக்கத் தொடங்கியது. மதியம் 2 மணிக்கு மேல் ஆகியிருந்த வேளை. மதிய உணவு விருந்தோம்பலை ஏற்கனவே ஏற்றுக்கொண்ட திரு.சீதாராமன், திரு.பத்மநாபன் அவர்களும் கும்பகோணத்திலிருந்து வந்து சேர்ந்தார்கள். பெரிய பெரிய தூக்குகளுடன், வாழைஇலை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் பாட்டில்களுடன் வந்து சேர்ந்தனர். பரஸ்பர அறிமுகம் முடிந்தவுடன் மதிய உணவைத் திரு.பத்மநாபன் எல்லோருக்கும் பரிமாற, சுவையான விருந்து. மா, பலா, வாழை என முக்கனிகளுடன் மிகவும் நேர்த்தியாகப் பரிமாறினார்.

"அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந் தோம்புவான் இல்"

என்னும் வள்ளுவனின் குறளுக்கேற்ப, திரு.பத்மநாபன் அவர்களின் விருந்தோம்பலில் வயிறாறப் பசியாறினோம். பிறகு மீண்டும் ஆய்வுப்பணியில் திரு.சீதாராமன் அவர்கள் தனது நவீன அளவுகோலின் உதவியுடன் திரு. கமலக்கண்ணன் அவர்களும் ஆய்வில் களமிறங்கினர். திரு.பத்மநாபன் ஒரு நோட்டில் குறிப்புகள் எடுத்துக்கொண்டிருக்க, ரிஷியா அவர்கள் தனது அலைபேசி உதவியுடன் புகைப்படங்கள் எடுக்க, நானும் லெட்சுமியும் கண்டபாதச் சிற்பங்களைப் புகைப்படப் பதிவாக்கிக் கொண்டிருந்தோம். அண்மையில் கல்வெட்டு எழுத்துக்களைப் பயிலும் பயிற்சியை மேற்கொண்டுள்ள நான் இங்கு வந்தது முதல் சுற்றுப்புறச் சுவர்களில் உள்ள ஒவ்வொரு கல்வெட்டு எழுத்தையும் எழுத்துக்கூட்டிப் படிக்கும் முயற்சியில் ஈடுபட்டதன் விளைவாக, புள்ளமங்கலம், மதுரை, ஸ்வஸ்திஸ்ரீ கோப்பரகேசரி, ராஜராஜன், களமறுத்து போன்ற எழுத்து வரிகளைப் படித்தேவிட்டேன். பேராசிரியர் நளினி அவர்களும் படித்தது சரி என்று கூறினார். பயிற்சியில் தேறிவிடுவேன் என்ற நம்பிக்கை பிறந்தது. 

மாலை மணி 05.30. சந்திரனும் இருள்மங்கையும் தனது வருகையைத் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். சுவையான தேநீர் அருந்திக்கொண்டிருக்கும் போது, கோயில் குருக்கள் மாலை பூஜைக்கு வருகை புரிந்தார். அனைவரும் புள்ளமங்கலத்தை விட்டுக் கிளம்ப தயாரானோம். டாக்டர் என்னையும் லெட்சுமியையும் காரில் திருச்சி வரை அழைத்துப் போவதாகக் கூறினார். 
பிறகு குருக்களிடம் விடைபெற்றுக் கொண்டு காரில் ஏறியதும், புள்ளமங்கையிடம் பிரியாவிடை பெற்றுக் கொண்டோம். திரு. சீதாராமனும், திரு. பத்மநாபனும் எங்களிடம் விடைபெற்றுக் கும்பகோணம் புறப்பட்க்ச் சென்றார்கள். 

கார் கிளம்பிச் சிறிதுதூரம் சென்ற பிறகு, டாக்டர் தஞ்சைப் பெரியகோயிலுக்குச் செல்கிறோம் நீங்கள் வருகிறீர்களா என்று கேட்க, கரும்புதின்னக் கூலியா! ஆகா என்னே நான் இன்று பெற்ற பாக்கியம்! ஒரேநாளில் பராந்தகன், இராஜராஜசோழன் இருவர் காலத்துக் கோயில்களை தரிசிப்பதற்கு, "அவன் அருளாலே அவன் தாள் வணங்கி" என்று எனது தந்தையார் அடிக்கடி சொல்லும் வாசகம் நினைவுக்கு வந்ததும், ஆனந்த கண்ணீர் பெருகியது. தஞ்சை வந்தடைந்தபோது மாலை 06.30 மணி. நேராகப் பெரியகோயில் சென்று சோழனின் பிரம்மாண்டத்தை அனுபவத்தில் உணர்ந்தேன். பலமுறை பெரிய கோயில் வந்திருந்தபோதும், இன்று மாறுப்பட்ட மனநிலையே நிறைந்திருந்தது என்னவோ மறுக்க முடியாத உண்மை. பெருவுடையாரை, பெரியநாயகி அம்மையைக் கண்குளிரக் கண்டு தரிசனம் செய்து, திருச்சுற்று வலம் வந்தோம். இராஜராஜன் காலத்து நந்தியைப் பேராசிரியர் நளினி அவர்கள் எனக்கு அடையாளம் காட்டினார். இரவின் விளக்கொளியில் அந்த நந்தி தனக்கே உரிய அழகில் என்னைப் பார்த்து எனது கம்பீரம் எப்படி என்று கேட்டதுபோல் இருந்தது அதன் பார்வை. மனம் மகிழ்ந்து கைகூப்பி வணங்கிவிட்டுக் கோயிலிலிருந்து வெளியே வந்து, ஞானம் உணவகத்தில் இரவுச் சிற்றுண்டியை முடித்துவிட்டுத் திருச்சியை நோக்கிப் பயணித்தோம். திரு. கிருபாசங்கர் அவர்கள் நீங்கள் எழுதும் பயணக்கட்டுரையை வரலாறு.காம் மின்னிதழுக்கு ஒரு வாரத்திற்குள் அனுப்பி வைக்கவும் என்று கூறினார். மறுப்பேதும் சொல்லாமல் சரி என்று ஒப்புக்கொண்டேன். ஒரு வழியாகத் திருச்சி வந்து சேர்ந்ததும் டாக்டர், பேராசிரியர். நளினி மற்றவர்களுடன் விடைபெற்று எனது இல்லம் வந்தடைந்தேன் மனநிறைவாக. 

இல்லத்திற்கு வந்ததும் இரவுப் பணிகளை முடித்துவிட்டு, உறங்கச் சென்றபோது டாக்டரின் எழுதுகோல் கூறியது. வரலாறு எங்கோ இல்லை; நம்முடன் நடந்து, விடியலில் பிறந்து, பகலில் வளர்ந்து, மாலையில் மலர்ந்து, இரவில் காத்திருந்து, மறுநாள் விடியலில் நம்மோடு உடன் வரும் ஒப்பற்ற துணைதான் வரலாறு. வரலாற்றை தேடுங்கள், வரலாறாக வாழ முயலுங்கள் என்று…… 

நன்றி. 
செல்வி அருண்குமார். 
 

இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.