http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[178 Issues]
[1762 Articles]
Home About US Temples Facebook
Issue No. 132

இதழ் 132
[ ஜனவரி 2017 ]


இந்த இதழில்..
In this Issue..

தேர்க்குரவைகள் 
இராஜராஜர் யார்?
கிரீவத்தில் நந்தியும் கர்ணகூடும்
TEMPLES IN AND AROUND THIRUCHIRAPPALLI - 5
வேதாந்த மரத்திலொரு குயிலைக் கண்டேன்
இதழ் எண். 132 > கலைக்கோவன் பக்கம்
தேர்க்குரவைகள் 
இரா. கலைக்கோவன்

தொல்காப்பியப் பொருளதிகாரப் புறத்திணை இயலில் வாகைத்திணையின் பல்வேறு துறைகள் பேசப்படுமிடத்துத் தேர்க்குரவைகள் சுட்டப்படுகின்றன. 'தேரோர் வென்ற கோமான் முன்தேர்க் குரவையும்', 'ஒன்றிய மரபிற் பின்தேர்க் குரவையும்'1 என்ற அடிகளால் இருவிதத் தேர்க்குரவைகள் இருந்தமையும் அவை தேரின் முன்னும் பின்னும் ஆடப்பட்டமையால் முன் தேர், பின்தேர்க் குரவைகளாயின என்பதும் முதற் குரவையில் மன்னனும் கலந்துகொண்டான் என்பதும் விளக்கமாகின்றன.இளம்பூரணர் முன்தேர்க் குரவையைக் குறிக்கும் தொல்காப்பிய அடிக்கு உரையெழுதுமிடத்து, 'தேரோரைப் பொருது வென்ற அரசன் தேர்முன் ஆடும் குரவையும்' என்று விரித்துச் சொல்கிறார்.2 இதற்கு அவர் தந்திருக்கும் சங்கப்பாடல் புறநானூற்றில் உள்ளது. அந்தப் பாடலில் தேர் இடம்பெறாமையோடு, குரவை என்ற சொல்லே ஆளப்படவில்லை. பாடலின் இறுதி அடிகள், 'உருகெழு பேய்மகள் அயரக் குருதித்துகள் ஆடிய களங்கிழவோயே' என்று முடிகின்றன.3 போர்க்களத்தில் பிணந்தின்று குடல்மாலை சூடி மகிழ்ந்த பேய்மகள், தன் பசிதீர்த்த மன்னனை வாழ்த்தியாடிய செய்திதான் இவ்வடிகளில் உள்ளது. கல்லாடனார், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியனைக் களங்கிழவோயே என்று விளித்துப் பாடிய பாடல் இது. போர்க்களம், வென்றார்க்கு உரித்தானமையால், வென்ற வேந்தனைக் களங்கிழவோயே என்பது மரபு. 'குருதித் துகளாடிய'  என்பதற்கு உ. வே. சா. உரையில் விளக்கமில்லை. 'குருதி உலர்ந்து துகள்பட்ட போர்க்களத்தை உரிமை கொண்டவனே' என்று கல்லாடனார் நெடுஞ்செழியனைப் பாடிப் புகழ்வதாக அவ்வை சு. துரைசாமி பொருள் தருகிறார்.4பேய்மகள் அயர என்ற தொடரில் உள்ள, 'அயர்தல்' என்னும் சொல்லுக்குப் பல பொருள்கள் உண்டு. அவற்றுள் ஆடுதல் என்ற பொருளே இங்குப் பொருந்தும். புறநானூற்றின் மற்றொரு பாடலிலும், 'அழுகுரல் பேய்மகள் அயரக் கழுகொடு செஞ்செவி எருவை திரிதரும் அஞ்சுவரு கிடக்கைய களங்கிழவோயே'5 என்று வருவது இங்கு ஒப்புநோக்கத்தக்கது. ஆடல் பற்றி வரும் சங்கப்பாடல்களுள் பல அயர்தல் என்றே ஆடலைக் குறிக்கின்றன.'நறவுநாட் செய்த குறவர்தம் பெண்டிரொடு மான்தோல் சிறுபறை கறங்கக் கல்லென வான்தோய் மீமிசை அயரும் குரவை',6 'குழையன் கோதையன் குறும்பைந் தொடியன் விழவயர் துணங்கை தழூஉகம் செல்ல',7 'அன்புறு காதலர் கை பிணைந்து ஆய்ச்சியர் இன்புற்று அயர்வர் தழூஉ'.8 இதனால், நெடுஞ்செழியனின் போர்க்களத்தில் பிணந்தின்று மகிழ்ந்த பேய்மகள் அதற்குக் காரணமான மன்னனைப் போற்றி ஆடிய செய்திதான் இளம்பூரணரின் எடுத்துக்காட்டிலிருந்து கிடைக்கிறது. இப்பேய்மகள் ஆடியது முன்தேர்க் குரவையாகுமா? இளம்பூரணர் எப்படி முன்தேர்க் குரவைக்கு இப்பாடலை மேற்கோளாகக் கொண்டார்?முன்தேர்க் குரவை நூற்பாப்பகுதிக்கு உரையெழுதும் போது நச்சினார்க்கினியர், 'தேரின்கண் வந்த அரசர் பலரையும் வென்ற வேந்தன் வெற்றிக் களிப்பாலே தேர்த்தட்டிலே நின்று போர்த் தலைவரோடு கைபிணைந்து ஆடும் குரவை' என்று விளக்கம் தருகிறார்.9 தேர்த்தட்டிலே நின்றாடுவதுதான் முன் தேர்க் குரவை என்றால் பின்தேர்க் குரவை எங்கு நிகழும்? நச்சினார்க்கினியரே தேரின் பின்னே நிகழ்வதுதான் பின்தேர்க் குரவையென்கிறார். அப்படியாயின் முன்தேர்க் குரவையென்பது தேரின் முன்னால் நிகழ்வதாகுமே தவிர, தேரினுள் ஆடுவதாகாது. தேர்த்தட்டு ஓரிருவர் நின்று செயற்படுவதற்கு இடமளிக்குமே தவிர சிலர் இணைந்து ஆடுவதற்குப் பயன்படாது.குரவை என்பது தனியர் ஆடல் அல்ல. அது ஒரு குழு ஆடல். காமமும் வென்றியும் பொருளாகக் குரவைச் செய்யுள் பாட்டாக எழுவரேனும், எண்மரேனும், ஒன்பதின்மரேனும் கைபிணைந்தாடுவதே குரவை.10 குரவை பற்றிப் பேசும் சங்கப் பாடல்கள் அனைத்தும் குரவையைக் குழுஆடலாகவே காட்டுகின்றன. நச்சினார்க்கினியரும் வென்ற மன்னன் போர்த் தலைவரோடு கைபிணைந்தாடியதாகவே கூறுகிறார். இந்நிலையில் இக்குழுவாடல் எங்ஙனம் தேர்த்தட்டில் நிகழ்ந்திருக்க முடியும்?மிகப் பெரிய தேராக இருந்திருந்தால் ஒருவேளை எழுவரோ, எண்மரோ அத்தேரின் தட்டில் ஆட முயற்சிக்கலாம். போர்க்களத்தில் மிகப் பெரிய தேர்கள் எப்படி இயங்கமுடியும். விரைந்து செலுத்தவல்ல தேர்களையே போர்க்களத்தில் விரும்புவர். அதுவும் மன்னன் தேர் காற்றினும் விரைந்து செல்வது போலவே வடிவமைக்கப்படுவது மரபு. மேலும், தேர்த்தட்டில் ஆடப்படும் குரவை தேருள் குரவையாகுமே தவிர முன்தேர்க் குரவையாகாது. தேர்த்தட்டு தேரின் முன்பகுதி என்பதால் இது முன்தேர்க் குரவை ஆகலாமென்று வாதிட்டால், பின்தேர்க் குரவைக்குத் தேரின் எந்தப் பகுதியைத் தேடுவது? ஆக, எப்படி நோக்கினும் தேர்க்குரவை தேர்த்தட்டில் நிகழ்ந்திருக்க முடியாது. போர்த்தலைவர் என்ற சொல்லாட்சியும் பொருத்தமாகத் தோன்றவில்லை. மன்னனே போரின் தலைவன். அவன் கீழ்ப் படைத்தலைவர்கள் இருக்கலாமே தவிர, போர்த்தலைவர்கள் இருக்கமுடியாது. சிற்றரசர் பலர் உடன் வந்திருந்தாலும்கூட அவர்களும் படைத்தலைவர்களாகவே கருதப்படுவர். போர்க்களத்தில் ஒரு தலைவன்தான் இருக்கமுடியும். போர்க்கள வரலாறுகளும் அப்படித்தான் சொல்கின்றன. பல மன்னர்கள் சேர்ந்து ஒருவர் மீது படையெடுத்தாலும் அவர்களுள் ஒருவரே அனைவருக்கும் தலைமையேற்பது அண்மைக்காலப் போர்களிலும் கண்ட காட்சிதான். எனவே போர்த்தலைவர் என்பதினும் படைத்தலைவர் என்றிருப்பின் பொருள்நலம் பொலிந்திருக்கும் எனில் அது பிழையாகாது.நச்சினார்க்கினியர் முன்தேர்க் குரவைக்கு இரண்டு பாடல்களைக் காட்டுகளாய் வைக்கிறார். ஒன்று, பதிற்றுப்பத்தில் ஆறாம்பத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. காக்கைப்பாடினியார் நச்செள்ளையார் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைப் பாடிய இப்பாடல்தொகுதியில் வென்றிச்சிறப்புப் பகுதி நச்சினார்க்கினியரால் எடுத்தாளப்பட்டுள்ளது.'கோடியர் முழவின் முன்னர் ஆடல்வல்லான் அல்லன் வாழ்கஅவன் கண்ணி வலம்படு முரசம் துவைப்ப வாள் உயர்த்து இலங்கும் பூணன் பொலங்கொடி உழிஞையன் மடம் பெருமையின் உடன்றுமேல் வந்த வேந்து மெய்ம் மறந்த வாழ்ச்சி வீந்துகு போர்க்களத்து ஆடும் கோவே.'11 இந்தப் பாடலின் துறை பதிற்றுப்பத்தில் ஒள்வாள்அமலைத் துறையாகக் குறிக்கப்பட்டுள்ளது. தும்பைத் திணையின், 'களிற்றொடுபட்ட வேந்தனை அட்ட வேந்தன் வாளோர் ஆடும் அமலை' என்ற துறைக்குரிய பாடலாகத்தான் இளம்பூரணரும் இப்பகுதியைக் காட்டுகிறார்.12ஒரே பாடலை நச்சினார்க்கினியரும் இளம்பூரணரும் இரு வேறு துறைகளுக்காய் எடுத்தாண்டிருப்பது வியப்பைத் தருகிறது. பாடலில் வரும், 'வாள் உயர்த்து' என்ற தொடர் மிக முக்கியமானது. பகை மன்னர் வீழ்ந்த போர்க்களத்தில் வாள் உயர்த்தி ஆடிய மன்னராக ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் பாராட்டப் பெறுகிறார்.குரவையில் வாள்உயர்த்தி ஆடுதல் இடம்பெறாது. குரவை என்பது செழுநிலை மண்டலக் கடகக் கைகோத்து அந்நிலைக்கொட்ப நின்றாடலாகும்.13 சேரலாதன் வாளுயர்த்தி ஆடியதாகப் பாடல் சொல்கிறதே தவிர, குரவையாடியதாகப் பேசவில்லை. இதே பாடல்தொகுதியில் இம்மன்னன், 'துணங்கை ஆடிய வலம்படு கோமானாகவும்',14 'முழா இமிழ் துணங்கைக்குத் தழூஉப் புணையாக சிலைப்புவல் ஏற்றின் தலைக்கை'15 தந்தவனாகவும் குறிக்கப்பெறுவது நினைக்கத்தகுந்தது. இவன் குரவை நிகழ்த்தியிருந்தால், நச்செள்ளையார் துணங்கையைக் குறித்தது போலவே குரவையையும் குறித்திருப்பார். சேரலாதனின் ஒள்வாள்அமலையை நச்சினார்க்கினியர் முன்தேர்க் குரவையாகக் கொண்டது ஏனென்று தெரியவில்லை.முன்தேர்க் குரவைக்கு நச்சினார்க்கினியர் காட்டும் மற்றொரு பாடல் எந்த இலக்கியத்திலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை. 'சூடிய பொன்முடியும் பூணும் ஒளிதுளங்க ஆடிய கூத்தரின்வேந் தாடினான் - வீடிக் குறையாடல் கண்டுவந்த கொற்றப்போர் வாய்த்த இறையாட ஆடாதார் யார்?'16 இந்த வெண்பாவும் களத்தில் ஆடிய வேந்தனைக் காட்டுகிறதே தவிர தேர்க்குரவையைச் சுட்டவில்லை.இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் தந்துள்ள பாடல்கள் எவையும் முன்தேர்க் குரவையை விளக்காத நிலையில், தொல்காப்பியர் அறிவுறுத்தும் முன்தேர்க் குரவையைப் பற்றிய படப்பிடிப்பைப் பெறமுடியவில்லை. தேரூர்ந்து வந்த பகைவர்களை வென்ற அரசனின் தேர்முன் குரவை நிகழ்ந்தது. இந்தக் குரவையில் அரசனும் பங்குபெற்றான். வெற்றியைக் கொண்டாடி நிகழ்ந்த அம்முன்தேர்க் குரவை வென்றிவகை ஆடலாகும்.இது பற்றிக் குறிக்குமிடத்தில், 'முன்தேர்க் குரவை என்ற பெயரில் அமைந்திருந்தாலும், வென்ற கோமான் முன்தேர்க் குரவையும் என்று ஒருநபர் கூத்தாக விளக்கப்படுவதால், தழுவுதல் செய்தும் தலைக்கை தந்தும் ஆடிய குரவைக்கூத்திலிருந்து இது மாறுபட்ட ஒரு கூத்தே எனல் வேண்டும்'17 என்றுரைக்கும் ஜாண் ஆசீர்வாதத்தின் முடிவு வியப்பளிக்கிறது. முன்தேர்க் குரவை என்பது குரவையின் வரையறைக்குள் வராதென்று இவர் கருதுவது பொருந்துவதாகாது.  நிகழும் இடத்திற்கேற்பவும் நிகழ்த்துவோர் யாரென்பதைக் கொண்டும் குரவை பெயர் பெறலாமே தவிர, 'குரவை' என்ற சொல்லால் குறிக்கப்படும் ஆடல், குழுஆடலாக மட்டுமே இயங்க முடியும். நச்சினார்க்கினியர் உரை, முன்தேர்க் குரவையைக் குழுஆடலென்று உறுதிப்படுத்துவது இங்கு நினைக்கத்தகுந்தது. அரசன் தேர்முன் ஆடும் குரவையும் என்றதனால் அரசன் மட்டும் ஆடினான் என்று பொருளல்ல. அப்படி ஆடியிருந்தால் அது குரவையாக ஏற்றுக்கொள்ளப் பட்டிராது. வென்ற அரசனின் தேர்முன் நிகழ்ந்த இந்த வெற்றிக் குரவையில் அரசனும் கலந்து ஆடியிருத்தலே இயல்பாகும். அரசன் கலந்துகொண்டதால் சிறப்புப் பெற்ற அக்குரவையைச் சிறப்பிக்கவே 'வென்ற கோமான் முன்தேர்க் குரவையும்' என்று தொல்காப்பியர் குறிப்பிட்டிருக்க வேண்டும்.முன்தேர்க் குரவையைப் பற்றிப் பேசும்போது ஜாண் ஆசீர்வாதம் தெரிவிக்கும் கருத்துக்கள் வியப்பைத் தருகின்றன. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். 'துணங்கை, குரவை என்ற இரு கூத்துகளையும் சேர்த்துக் குறித்து வரும் இலக்கியக் குறிப்புகளில் பெரும்பாலும் துணங்கையே முன் குறிக்கப்படுவதால் துணங்கையே முன்பிறந்த கூத்தாதல் வேண்டும்'18 என்று கூறும் ஆசீர்வாதம் இரண்டு கூத்துகளையும் குறித்து வரும் சங்க இலக்கியக் குறிப்புகளாகக் காட்டுவது இரண்டுதான். இதில் 'பெரும்பாலும்' என்பதற்கே இடமில்லை. இவ்விரண்டிலும்கூடத் துணங்கை தவிர குரவை என்ற சொல்லில்லை. தழூஉ என்ற சொல்தான் உள்ளது.'இலங்குவளை மடமங்கையர் துணங்கையஞ்சீர்த் தழூஉம் மறப்ப', 19 'விழவு நின்ற வியன் மறுகில் துணங்கையந் தழூஉவின் மணங்கமழ் சேரி.'20 இப்பாடலடிகளில் உள்ள 'தழூஉ' குரவையைக் குறிப்பதாக உரையாசிரியர்களால் சொல்லப்படுகிறது. ஆனால், இதே தழூஉ துணங்கைக்குரிய குறிப்பாகவும் கையாளப்பட்டுள்ளது.'துணங்கைக்குத் தழூஉப் புணையாக',21 'விழவயர் துணங்கை தழூஉகஞ் செல்ல',22 'மகளிர் தழீஇய துணங்கை யானும்.'23 இங்குத் தழூஉ என்பதற்குக் கைகோத்துக் கொள்ளுதல், தழுவிக் கொள்ளுதல் என்று உரையாசிரியர்கள் பொருள்கொள்கிறார்கள். துணங்கைக்குத் தழூஉ என்னுமிடத்தில் மட்டும் தழுவுதல் பொருளைத் தரும் தழூஉ, துணங்கையந் தழூஉ, துணங்கையஞ் சீர்த் தழூஉ என்னுமிடங்களில் குரவையைக் குறிப்பதாகக் கொள்வது சரியாகுமா?தழூஉ என்பது தழுவலைக் குறித்ததாகக் கொள்ளலாமே தவிரக் குரவையைத் தனித்துச் சுட்டியதாகக் கருத இயலவில்லை. 'கார்மலர்க் குறிஞ்சி சூடிக் கடம்பின் சீர்மிகு நெடு வேல் பேணித் தழூஉப்பிணையூஉ மன்று தொறு நின்ற குரவை',24 'குரவை தழீஇயா மரபுளி பாடித் தேயா விழுப்புகழ்த் தெய்வம் பரவுது'25 என்னும் அடிகள் இவ்வுண்மையை வலியுறுத்தும். தழுவுதல் துணங்கைக்கும் குரவைக்கும் பொதுவான ஒரு செய்கையாக இருந்தமையால் இரண்டைக் குறிக்கு மிடத்திலும் தழூஉ கொள்ளப்பட்டது. தழூஉ என்ற செய்கையைக் குரவையென்ற கூத்துவடிவமாகக் கொள்வது பொருத்தமுடையதாகத் தெரியவில்லை. அப்படியே கொள்வதானாலும் இரண்டு இடங்களில் முன்னதாகச் சொல்லப்படுவதாலேயே, ஒரு கூத்துவடிவம், பழைமை வாய்ந்தனதெனச் சொல்வது பொருத்தமாயிராது. தமிழகத்தையாண்ட மூவேந்தர்களைக் குறிக்குமிடங்களில் எல்லாம் சேர, சோழ, பாண்டியர் என்றுதான் சொல்கிறோம். அப்படிச் சொல்வதாலேயே சேரர்கள் தாம்  மூத்த பழங்குடியினர், சோழரும் பாண்டியரும் அவர்களிலிருந்து கிளைத்தவர் என்றா பொருள் கொள்வது?துணங்கை குரவையினும் பழைமையான வடிவமாக இருந்திருந்தால், தொல்காப்பியத்தில் இடம்பெற்றிருக்கும். அதற்கு மாறாக வெறியாட்டு, காந்தள், வள்ளி, குரவை என்று பல்வகைக் கூத்துவகைகளை அறிமுகப்படுத்தும்  தொல்காப்பியம் யாண்டும் துணங்கையைக் குறிக்கவில்லை. இதுவொன்றே துணங்கை தொல்காப்பியர்க்குப் பிற்பட்ட கூத்துவடிவமென்பதை நிறுவப் போதுமானதாகும்.மகளிர்த்துணங்கை, போர்த்துணங்கை, பேய்த்துணங்கை என்று துணங்கை மூன்று வகைகளாய் இருந்ததென்கிறார் ஆசீர்வாதம். இது சரியன்று. குரவையைப் போல நிகழ்ந்த இடத்தாலும் காலத்தாலும் நிகழ்த்துபவராலும் துணங்கை எந்த அடையையும் பெறவில்லை. பதிற்றுப்பத்தில்கூட 'வென்றாடு துணங்கை' என்றுதான் குறிப்புள்ளதே தவிர, 'வென்றித் துணங்கை' என்ற சொல்லாட்சியில்லை.27 துணங்கை சங்க காலத் தில் நிலைபெற்றிருந்த ஒரு கூத்துவடிவம். இதை மகளிர் ஆடினர். மைந்தரும் பங்கேற்றனர். இது போர்க்களத்திலும் நிகழ்த்தப்பட்டது. போர்க்களத்தில் இக்கூத்தை வீரர்கள் ஆடினர். பேயும் ஆடியதாகப் புலவர்கள் கற்பனை செய்து மகிழ்ந்தனர்.'பேய்த்துணங்கையினைப் பின்பற்றி அமைந்த ஒரு கூத்து முறையே போர்த்துணங்கையாதல் வேண்டும். துணங்கையிலிருந்து குரவை வளர்ச்சி பெற்ற காலத்தில் இவ்விரு கூத்துகளும் முறையே முன்தேர்க் குரவையென்றும் பின்தேர்க் குரவையென்றும் பெயர்பெற்று இயங்கத் தொடங்கின.'28'துணங்கைத் தன்மைகளைக் கொண்ட பேய்த்துணங்கையும் போர்த்துணங்கையும்கூட முன்தேர்க் குரவையென்றும் பின்தேர்க் குரவையென்றும் குரவையின் பெயராலேயே அழைக்கப்படலாயின.'29 'பின்தேர்க் குரவையான பேய்த் துணங்கையின் வழியில் அமைந்தது முன்தேர்க் குரவையான போர்க்குரவை' (?போர்த் துணங்கை).30இம்மூன்று கருத்துகளிலும் ஆசீர்வாதம் தமக்குத் தாமே முரணாகிறார். இரண்டு இடங்களில் பேய்த்துணங்கையே முன்தேர்க் குரவையாகப் பெயர்மாற்றம் பெற்றதென்பவர், மற்றோரிடத்தில் போர்த்துணங்கையே (நூலில் போர்க் குரவையென்று பிழையாக அச்சிடப்பட்டுள்ளது) முன்தேர்க் குரவை என்கிறார். அது போலவே இரண்டு இடங்களில் போர்த் துணங்கை பின்தேர்க் குரவையானது என்பவர் பிறிதோரிடத்தில்  போர்த்துணங்கையே முன்தேர்க் குரவை என்கிறார். இது போதாதென்று, பேய்த்துணங்கை, போர்த்துணங்கை இரண்டனுள் பேய்த்துணங்கையைப் பின்பற்றியே போர்த்துணங்கை அமைந்ததென்று கூறி, அதன்வழிப் பேய்த்துணங்கையைக் காலத்தால் முற்பட்ட கூத்துவடிவமாகக் காட்டுகிறார். இவரே மற்றோர் இடத்தில், 'பேய்த்துணங்கை பற்றிய செய்திகள் கற்பனையானவையாகவும் நம்பத்தகாதனவாயும் உள்ளன' என்று ஒப்புக்கொள்கிறார்.31போர்த்துணங்கையென்று இவர் குறிப்பிடும் போர்க்களத்தில் வீரர்களால் ஆடப்பட்ட துணங்கை ஆடுகோட்பாட்டுச் சேரலாதன், சேரன் செங்குட்டுவன், தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை ஆகிய மூன்று சேர மன்னர்களோடு தொடர்புப்படுத்திப் பதிற்றுப்பத்தில் பேசப்படுகிறது.32 பேயாடும் துணங்கையோ திருமுருகாற்றுப்படையில் மட்டும் இடம்பெறுகிறது.33  இந்த இரண்டு இலக்கியங்களில் எது பழைமையானது என்று சொல்லவும் வேண்டுமோ? பேயாடிய துணங்கை புலவர்களின் கற்பனை. போர்க்களத்தில் வீரர்கள் ஆடிய துணங்கையையும் குரவையையும் கண்டு, கேட்டுக் களித்த புலவர்கள் பேயும் அவற்றை நிகழ்த்திக் காட்டியதாக எழுதி மகிழ்ந்தனர். முற்றிலும் கற்பனையென்றும் நம்பத்தகாதது என்றும் ஆசீர்வாதமே குறிப்பிடும் பேயாடுதுணங்கையை எப்படிப் போர்க்களத் துணங்கைக்கு முந்து வடிவமாகக் கொள்ளமுடியும்? நடந்திருக்க முடியாத ஒரு காட்சியை எப்படி யார் பார்த்துப் போர்த்துணங்கையை வடிவாக்கம் செய்திருக்க முடியும்? ஊரில் இயல்பாக நடந்த துணங்கைக் கூத்தைப் போர்க்களத்தில் வெற்றிக் களிப்பில் ஆடவர் ஆடினர். கேட்போர் இன்பத்திற்காகப் புலவர்கள் பேயையும் ஆடவைத்து மகிழ்ந்தனர்.துணங்கையின் வகைகளே தேர்க்குரவைகளாயின என்று ஆசீர்வாதம் சொல்வது பொருந்தாது. தேர்க்குரவைகள் இவர் குறிப்பிடும் துணங்கை வகைகளுக்குக் காலத்தால் முற்பட்டவை. அதனால்தான் தொல்காப்பியத்தில் இடம்பெற்றன. குரவைக்கும் துணங்கைக்கும் நிகழ்முறையில் சில ஒற்றுமைக் கூறுகள் இருந்திருக்கலாமே தவிர, அதிலிருந்துதான் இது வந்த தென்பதோ, இதிலிருந்துதான் அது வந்ததென்பதோ, தக்க சான்றுகள் தராத நிலையில், பொருத்தமாயிராது. தொல்காப்பியர் குறிப்பிடும் வென்றிக்கூத்தான முன்தேர்க் குரவை சங்க காலத்தில் தொடரப்பட்டதா என்பதை அறியக் கூடவில்லை. போர்க்களத்தில் நடைபெற்ற வீரர் துணங்கை, பேயாடு துணங்கை, ஒள்வாள்அமலை போன்ற ஆடல்களைக் குறிப்பிட்டுப் பேசும் சங்க இலக்கியங்களுள் ஒன்றில்கூடத் தேர்க்குரவைகள் இடம்பெறாமை வியப்பையே தருகிறது. இரட்டைக் காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரத்தில்தான் சங்க இடைவெளிக்குப் பிறகு தேர்க்குரவைகள் மீண்டும் இடம்பெறுகின்றன.கால்கோட் காதையில் சேரன் செங்குட்டுவனின் படைகள் பொருது வென்ற போர்க்களத்தை வண்ணனை செய்யுமிடத்தில் முன்தேர்க் குரவை சுட்டப்படுகிறது.34 இந்த முன் தேர்க் குரவையின்போது வாளேர் உழவனாகிய செங்குட்டுவ னின் போர்க்களத்தை வாழ்த்தி வளையணிந்த தன் பெரிய கைகளை அசையத் தூக்கி, முடியுடைக் கருந்தலை ஏந்திப் பேயொன்று பாடுகிறது. அதன் பாட்டில் மாயவனோடு தொடர்புடைய பாற்கடல் போர், இலங்கைப் போர், பாண்டவ கௌரவப் போர் ஆகியன இடம்பெறுகின்றன. இக்காட்சி முன்தேர்க் குரவைக்குரிய பாடல் பொருளைப் பற்றிய சிந்தனையைத் தருவதுடன், முன்தேர்க் குரவை, பாடலொடு கலந்த ஆடல் என்பதையும் தெளிவுசெய்கிறது.சிலம்பையடுத்து முன்தேர்க் குரவையை நமக்குக் காட்டும் நூல் புறப்பொருள் வெண்பாமாலை. இந்நூலில் தும்பை, வாகை என இரண்டு படலங்களிலும் முன்தேர்க் குரவை இடம்பெறுகிறது. தும்பை மறவர்கள் தம் மன்னன் எழுந்தருளியிருக்கும் தேர்முன் ஆடியதை முன்தேர்க் குரவையென்று துறையின் கொளு வரையறுக்கிறது.35 இது போர் நடந்து கொண்டிருக்கும்போதே நிகழ்ந்த குரவையாகத் தோன்றுகிறது.வாகையின் முன்தேர்க் குரவை வென்ற மன்னனின் தேர் முன் நிகழ்கிறது. இங்கு ஆடுவன பேய்கள். பகை மன்னர் நடுங்கும்படிக் களவேள்வி செய்து வெற்றிவாகை சூடிய மன்னனின் புகழைப் போர்முரசுகளின் வெற்றி முழக்கம் எதிரொலிக்கிறது. எமக்கு நன்மையைச் செய்த இம்மன்னன் நெடுங்காலம் வாழ்க என்று அவனைப் போற்றி மன்னனின் தேர்முன் புலால் நாறும் வாயும் புல்லிய தலையுமுடைய பேய்கள் ஆடுகின்றன.36 இந்தக் காட்சியே இளம்பூரணரைப் புறநானூற்றின் பேயாடு பாடலை முன்தேர்க் குரவைக்குக் காட்டாகக் கொள்ளுமாறு செய்திருக்கலாம்.தொல்காப்பியர் கால முன்தேர்க் குரவை போரில் வென்ற மன்னனின் தேர் முன் நிகழ்ந்தது. இதில் மன்னனும் பங்கேற்றான். சிலம்புக் காலத்திலும் வென்ற மன்னனின் தேர் முன்தான் குரவை நிகழ்ந்தது. இது எவ்விதம் நிகழ்ந்தது என்பதை அறிய முடியவில்லையாயினும் குரவையின்போது போர்கள் பற்றிய பாடல்களே பாடப்பட்டன என்பதைச் சிலம்பின் அடிகள் தெளிவாக்குகின்றன. தொல்காப்பியக் குரவையில் காணப்படாத பேய், சிலப்பதிகாரக் காலத்தில் பாடல்களைப் பாடி, வென்ற மன்னனை குரவையின்போது வாழ்த்தும் நிலையில் தலைகாட்டுகிறது. புறப்பொருள் வெண்பாமாலையோ போரில் மலையும் மன்னனின் தேர்முன்பே குரவையை நிகழ்த்திக் காட்டுகிறது. தும்பை சார்ந்த இம்முன்தேர்க் குரவையை மறவர்கள் நிகழ்த்துகின்றனர். இதில் மன்னன் பங்கேற்றதாகப் பாடல் குறிக்கவில்லை.சிலப்பதிகாரக் காலம்வரை போர்க்கள வெற்றிக்குப் பின் நிகழ்ந்து வந்த முன்தேர்க் குரவை, புறப்பொருள் காலத்தில் முதல் முறையாகப் போர் நடக்கும்போதே நிகழ்வதாகக் காட்டப்படுகிறது. அது மட்டுமல்லாமல் வீரர்களோடு கலந்து மகிழ்ந்து கூத்தாடிய நிலையிலிருந்து மன்னர் பிரிக்கப்பட்டுத் தேரூர்பவராகக் காட்டப்படுகிறார். வெற்றி பெற்ற நிலையில் மீண்டுமொரு முன்தேர்க் குரவை நிகழ்கிறது. இங்குப் பேய்கள் குரவையாடுகின்றன.தொல்காப்பியர் காலத்தில் வீரர்களுடன் மன்னர் ஆடினார். சிலப்பதிகாரக் காலத்தில் வீரர்கள் ஆடப் பேய் பாடியது. மன்னர் ஆடினாரா என்பது தெரியவில்லை. ஆடியிருக்கலாம் என்று நம்ப இடமுண்டு. பதிற்றுப்பத்தில் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனும் சேரன் செங்குட்டுவனும் போர்க்கள ஆடல்கள் நிகழ்த்தியதாகக் குறிக்கப்படும் செய்தி இந்நம்பிக்கையின் தளமாய் அமைகிறது. புறப்பொருள் காலத்தில் தும்பையில் வீரர்கள் ஆட, வாகையில் பேய்கள் ஆடியதாகப் புலவர்கள் பாடினர். ஆனால், இரண்டிடத்திலும் மன்னர் ஆடலில் கலந்துகொள்ளவில்லை. தொல்காப்பியர் காலத்தில் வென்றாடு குரவையாக இருந்த இம்முன்தேர்க் குரவை புறப்பொருள் காலம்வரை அதே நிலையில் தொடர்ந்ததுடன், காலப்போக்கில் போர் நிகழ்காலத்துக் குரவையாகவும் வளர்ச்சி பெற்றதையும், வீரர்களோடு வீரனாக இருந்த தொல்காப்பிய மன்னர் வெண்பாமாலைக் காலத்தில் தலைவராகித் தள்ளிப் போவதையும் காணமுடிகிறது.பின்தேர்க் குரவைபின்தேர்க் குரவையைக் குறிப்பிடும் தொல்காப்பிய நூற்பா, 'ஒன்றிய மரபிற் பின்தேர்க் குரவையும்' என்று அந்தத் துறையை அறிமுகப்படுத்துகிறது. இளம்பூரணர், 'பொருந்திய மரபின் தேர்ப்பின் ஆடும் குரவையும்', என்று இந்நூற்பாவிற்குப் பொருள்விளக்கம் தருகிறார்.37 முன்தேர்க் குரவைக்குச் சொல்லப்படாத, 'ஒன்றிய மரபு' பின்தேர்க் குரவைக்குச் சொல்லப்பட்டிருந்தும், அதை விளக்கும் முயற்சியில் இளம்பூரணர் ஈடுபடவில்லை. இந்த நூற்பாவிற்கு எடுத்துக்காட்டாக அவர் தரும் பாடல் புறப்பொருள் வெண்பாமாலையின் வாகைப் பின்தேர்க் குரவையாக அமைந்துள்ளது. இதில் போர் மறவரும் விறலியரும் களிறும் பிடியும் போல வென்ற மன்னரின் தேரின் பின்னர்ப் போர்க்களத்தே குழுமிக் கைக் கோத்துக் குரவையாடினர்.நச்சினார்க்கினியர், 'தேரோரை வென்ற கோமாற்கே பொருந்திய இலக்கணத்தானே தேரின் பின்னே கூழுண்ட கொற்றவை கூளிச்சுற்றம் ஆடும் குரவை' என்று இந்நூற்பாவிற்கு விளக்கம் தருகிறார்.38 இவ்விளக்கத்தால் பின்தேர்க் குரவையைச் சிறப்பித்துத் தொல்காப்பியர் போட்டு வைத்திருக்கும் மரபுவளையத்தைச் சரியாக அடையாளம் காட்டியவர் என்ற முறையில் நச்சினார்க்கினியரைப் பாராட்டலாம்.இந்தத் துறைக்கு நச்சினார்க்கினியர் இரண்டு காட்டுகளைத் தருகிறார். ஒன்று புறநானூற்றுப் பாடல். அதே பாடலைத்தான் இளம்பூரணர் முன்தேர்க் குரவையை விளக்க எடுத்தாண்டிருந்தார். உணவளித்த மன்னரை வாழ்த்திப் பேய் மகள் ஆடும் இந்த ஆடல் குரவையுமல்ல; இது தேரின் பின் நடந்ததுமல்ல. இந்தப் பாடலை உரையாசிரியர்கள் கொண்டமை பொருத்தமாகத் தெரியவில்லை.நூற்பா விளக்கத்திலேயே 'கொற்றவை கூளிச்சுற்றம் ஆடும் குரவை' என்று தெளிவாகப் பொருள்தரும் நச்சினார்க்கினியர், எடுத்துக்காட்டைத் தரும்போது தனியொரு பேய் மகளின் மகிழ்வாடலைப் படம்பிடித்துக் காட்டியிருப்பது விந்தையாக உள்ளது. முன்தேர்க் குரவைக்குப் பேய்மகளின் இந்த ஆடலை எடுத்துக்காட்டாக இளம்பூரணர் தந்திருப்பது அதனினும் விந்தையானது. ஏனெனில், முன்தேர்க் குரவை மன்னரும் சேர்ந்து நிகழ்த்துவது.பின்தேர்க் குரவைக்கு நச்சினார்க்கினியர் தரும் மற்றோர் எடுத்துக்காட்டு புறத்திரட்டில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. 'வென்றுகளங்கொண்ட வேந்தன்தேர் சென்றதற்பின்   கொன்ற பிணநிணக்கூழ் கொற்றவை - நின்றளிப்ப உண்டாடும் பேய்கண் டுவந்தனவே போர்ப்பரிசில் கொண்டா டினகுரவைக் கூத்து.'39 வெற்றி பெற்ற மன்னனின் தேர் சென்ற பின், வீழ்ந்து பட்ட பிணங்களின் நிணக்கூழைக் கொற்றவை அளிக்க, உண்டு மகிழ்ந்த பேய்கள் குரவையாடியதாக இப்பாடல் எடுத்துரைக் கிறது. இது பின்தேர்க் குரவையா அல்லது பேய்க்குரவையா என்பதை முடிவுசெய்யச் சிலம்பும் புறப்பொருள் வெண்பாமாலையும் பெரிதும் உதவுகின்றன. 'பின்தேர்க் குரவை பேயாடு பறந்தலை' என்னும் சிலப்பதிகார அடி,40 முன்தேர்க் குரவையில் போர்க்களச் செய்திகளைப் பாடலாகத் தந்து களித்த பேய், பின்தேர்க் குரவையில் குரவையாடி மகிழ்ந்த காட்சியைப் படம்பிடிக்கிறது.வெண்பாமாலையில், முன்தேர்க் குரவை போலவே பின் தேர்க் குரவையும் தும்பை, வாகை ஆகிய இரண்டு திணைகளி லும் பேசப்படுகிறது. தும்பைப் பின்தேர்க் குரவையில் மன்னரின் தேர்ப்பின் போர்மறவரும் யாழ்வல்ல விறலியரும் பாட்டிசைத்து ஆடிக்கொண்டு வருகின்றனர்.41 வாகைப் பின்தேர்க் குரவையிலும் அதேநிலைதான்.42 இந்த இரண்டில் வாகைப் பாடலைத்தான் இளம்பூரணர் பின்தேர்க் குரவைக்குக் காட்டாகக் கொண்டுள்ளார். இப்பாடல்களாலும் இத்துறைகளுக்கான கொளுக்களாலும் வெண்பாமாலைக் காலத்தில் பின்தேர்க் குரவை, தும்பை, வாகை என எத்திணை சார்ந்ததாய் நிகழ்ந்தபோதும், வீரர்களாலும் விறலியராலுமே நிகழ்த்தப்பட்டதென்பதை மிகத் தெளிவாக அறியமுடிகிறது. வெண்பாமாலை, தும்பைத்திணை சார்ந்த ஆடலாகப் பேய்க்குரவையைத் தனியே தருகிறது. கடல் போன்ற படையை உடைய தும்பை மன்னரது தேரின் முன்னும் பின்னும், அவன் பகைவர் நிணங்கொண்ட பெரிய வாயினையுடைய பேய்க்கூட்டம், மன்னரின் தறுகண்மையை வாழ்த்தி மகிழ்ந்து கூத்தாடியது.43'ஒன்றிய மரபின் பின்தேர்க் குரவை' என்று சுருங்கச் சொல்லியதன் மூலம் தேரின் பின்னால் வாகைத்திணையில் குரவை நிகழ்ந்த செய்தியை மட்டும் தருவதோடு தொல்காப்பியம் நின்று கொள்கிறது. இந்தக் குரவை எப்படி நிகழ்ந்தது, யாரால் நிகழ்த்தப்பட்டது என்பதற்கு அதில் விளக்கம் இல்லை. இளம்பூரணர் வெண்பாமாலை எடுத்துக்காட்டைத் தருவதன்  மூலம்  இக்குரவை மறவராலும் விறலியராலும் நிகழ்த்தப்பட்டதென்பதை ஒப்புக்கொள்கிறார். நச்சினார்க்கினியரோ இந்தக் குரவையைக் கொற்றவையின் கூளிச்சுற்றம் ஆடியதாகக் கூறுகிறார். அவர் தரும் இரண்டு காட்டுகளிலுமே பேய்களின் ஆடல்தான். முதற்காட்டில் தேர் இல்லை; ஆனால்  பேய்மகள் அயர்கிறாள். இரண்டாவது காட்டில் தேர் சென்ற பின் பேய்களின் குரவை நிகழ்கிறது.இளம்பூரணரின் பின்தேர்க் குரவைக்கும் நச்சினார்க்கினியரின் பின்தேர்க் குரவைக்கும். இரண்டு வேறுபாடுகள். ஒன்று ஆடுநர். மற்றொன்று தேர். இளம்பூரணரின் பாடலில் தேர் உண்டு. நக்சினார்க்கினியரின் காட்டுகளில் தேர் இல்லை. பின்தேர்க் குரவையென்பது தேரின் பின்னால் நடக்கும் குரவைதான் என்பதை இருவருமே ஒப்புக்கொண்ட பிறகும் நச்சினார்க்கினியரின் எடுத்துக்காட்டுகள் தேரற்ற குரவையையே காட்டுவது வியப்பாக உள்ளது.சிலப்பதிகாரப் பின்தேர்க் குரவையில் பேயாடுகிறது. வீரர்களோ, விறலிகளோ இல்லை. இதை நோக்கும்போது இளம்பூரணரின் எடுத்துக்காட்டு தொல்காப்பிய அடிகளுக்குப் பொருந்துமா என்ற சிந்தனை பிறக்கிறது. தொல்காப்பியத்திற்கு அடுத்த நிலையில் தேர்க்குரவைச் செய்திகள் கிடைக்கும் ஒரே இலக்கியம் சிலம்புதான். எனவே தொல்காப்பியர் கால மரபுத் தொடர்ச்சிகளை வெண்பாமாலையில் காண்பதை விட, அதனினும் சில நூற்றாண்டுகள் காலத்தால் முற்பட்ட சிலம்பில் கூடுதலாகவும் நெருக்கமுடையதாகவும் காணமுடியும்.சிலம்பில் பின்தேர்க் குரவையைப் பேய்கள் நிகழ்த்தியுள்ளன. தொல்காப்பிய நூற்பாவோ, அதற்கு முதலில் உரை எழுதியதாகக் கருதப்படும் இளம்பூரணரோ பின்தேர்க் குரவையை யார் நிகழ்த்தினரென்று கூறாதநிலையில், கூளிச் சுற்றத்தால் அது நடத்தப்பட்டதாக நச்சினார்க்கினியர் கூறுவது சிலப்பதிகார அடிகளின் அடிப்படையில்தான் என்று கருதவேண்டியுள்ளது.'ஒன்றிய மரபில்' என்ற அடையொடு தொல்காப்பியம் இப்பின்தேர்க் குரவையைக் குறிப்பதும் இது பேய்களால் நிகழ்த்தப்பட்டதென்பதை மறைமுகமாச் சுட்டத்தானோ என்று தோன்றுகிறது. வெற்றி பெற்றவனின் தேர்முன் வென்றவர்கள் குரவை நிகழ்த்துவதும், அதில் வென்றவன் கலந்து கொள்வதும் அந்தத் தேரின் பின், வெற்றியால் (அதாவது போரால்) பயனடைந்தவர்கள் மகிழ்ந்தாடுவதும் இயல்பானதே.தொல்காப்பியருக்கு முற்பட்ட காலத்திலேயே இலக்கியங்களில் பேய் பற்றிய சிந்தனைகள் இடம்பெற்றிருக்க வேண்டும். அதனால்தான் புறத்திணை இயலில் பேய் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் சுட்டப்படுகிறது. தொல்காப்பியரால் மரபென்று மறைமுகமாகச் சுட்டப்பட்ட பேயாடு பின்தேர்க் குரவை சிலம்பின் அடிகளால் வெளிச்சம் பெறுகிறது. போர்க் களத்தில் பேய்கள் தேரின் பின் ஆடியதாகச் சங்க இலக்கிய அடிகள் நமக்குக் குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்றாலும், பட்டு வீழ்ந்த உடல்களைச் சுவைத்து, அரற்றி, ஆடி மகிழ்ந்த தாகப் பேசுகின்றன.'நிறங்கிளர் உருவில் பேஎய்ப் பெண்டிர் எடுத்தெறி யனந்தற் பறைச்சீர் தூங்க'44, 'இனத்தடி விராய வரிக்குடர் அடைச்சி அழுகுரல் பேய்மகள் அயர'45, 'உருகெழு பேய்மகள் அயர'46, 'கணங்கொள் கூளியொடு கதுப்பிடுத் தசைஇப் பிணந்தின் யாக்கைப் பேய்மகள் துவன்றவும்'47, 'அவையிருந்த பெரும் பொதியில் கவையடிக் கடுநோக்கத்துப் பேய்மகளிர் பெயர்பு ஆட'48, 'செஞ்சுடர் கொண்ட குருதி மன்றத்து பேஎய் ஆடும் வெல்போர்.'49 பேய்கள் போர்க்களத்தில் மகிழ்ந்தாடிய துணங்கையும் குரவையும்கூட இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன.50 இதனால் தொல்காப்பிய மரபு சங்க காலத்திலும் தொடர்ந்ததாகக் கருதலாம். சிலம்பு பின்தேர்க் குரவையைப் பேய்கள் நிகழ்த்தியதென வெளிப்படையாய் அடிக்கோடிட்டுச் சொல்லி அந்த மரபுத்தொடர்ச்சியை உறுதிப்படுத்துகிறது. இதே சிலம்பில் பின்தேர்க் குரவையினின்று சற்று விலகிப் பேய்க்குரவை என்று தனியே ஒரு போர்க்களப் பேயாடலும் இடம்பெறுகிறது.'குழிகட் பேய்மகள் குரவையிற் தொடுத்து'51, இந்தச் சிந்தனை, சங்க இலக்கியங்களில் காணப்படும் பெயர் சுட்டாப் பேயாடல்களின் விளைவாகலாம். இதன் வளர்ச்சியை, வெண்பா மாலைத் தும்பைத்திணையில், பேய்க்குரவையென்று தனித் துறையாக்கித் தருவதில் காணலாம். இங்கே தும்பை மன்னரது தேரின் முன்னும் பின்னும் பேய்கள் களித்தாடுகின்றன.ஜாண் ஆசீர்வாதம் பின்தேர்க் குரவை போர்க்கடவுளான கொற்றவையால் ஆடப்பட்டதென உரையாசிரியர்கள் கூறுவதாக எழுதி, நச்சினார்க்கினியரின் பெயரை அடிக்குறிப்பில் தருகிறார்.52 நச்சினார்க்கினியர் தம் உரையில், 'கூழுண்ட கொற்றவை கூளிச்சுற்றம் ஆடும் குரவை' என்று தெளிவாக எழுதி அதற்கேற்ற எடுத்துக்காட்டையும் தந்துள்ளார். இப்பாடலில் கொற்றவை நிணக்கூழ் தரக் கூளிச்சுற்றம் உண்டாடும் காட்சியைப் பார்க்கலாம். நிலைமை இப்படியிருக்க, ஆசீர்வாதம் பின்தேர்க் குரவையை நச்சினார்க்கினியரின் பெயரால் கொற்றவையின் ஆடலாக்கிவிட்டார்.இப்பின்தேர்க் குரவையை ஓரிடத்தில் போர்த்துணங்கை யினின்று வளர்ச்சி பெற்றதென்றும் மற்றோரிடத்தில் பேய்த் துணங்கையினின்று வளர்ச்சி பெற்றதென்றும் குறிப்பிடும் ஆசீர்வாதம், பிறிதோரிடத்தில், 'துணங்கையின் தன்மையை உட்கொண்டு குரவையோடு தொடர்பு கொண்டமைந்த குரவை' என்றும் கூறுகிறார்.53 இக்குரவை, துணங்கைக்கும் குரவைக்கும் தொடர்புண்டாக்கியதென்றும் பேசுகிறார்.54 முன்னரே கண்ட படி துணங்கை வேறு, குரவை வேறு என்பதுடன், குரவை துணங்கைக்கு முற்பட்ட கூத்து வடிவம் என்பதால் ஆசீர்வாதத் தின் கூற்றுகள் பொருந்தாமை காண்க.அகவாழ்வில் பல்வேறு ஆடல்வடிவங்களைக் கண்டு களித்தாடிய தமிழன், புறவாழ்விலும் ஆடலையே உவந்து வாழ்ந்ததைத் தேர்க்குரவைகள் சுட்டுகின்றன. நடந்ததை முன்தேர்க் குரவையாகவும் கற்பனையில் கண்டதைப் பின்தேர்க் குரவையாகவும் புறப்பொருள் துறைகளாக்கி மரபுத் தொடர்ச்சிகளையும் அவற்றின் வளர்ச்சி நிலைகளையும் இலக்கிய வடிவில் நிலைப்படுத்தியுள்ள சிறப்புப் போற்றற்குரியதாகும். பின்னாளைய இலக்கியங்களில் தேடல் தொடர்ந்தால், தொடர்ச்சிகளின் விழுதுகளை மேலும் பெறமுடியும்.குறிப்புகள்1.    தொல்காப்பியம், பொருளதிகாரம், இளம்பூரணம், ப. 115.

2.    மேலது, ப. 118.

3    புறநானூறு: 371.

4.    மேலது, ப. 356.

5.     புறநானூறு: 370.

6.    மலைபடுகடாம்: 320-323. 

7.    நற்றிணை: 50.

8.    கலித்தொகை: 106.

9.    தொல்காப்பியம், பொருளதிகாரம், நச்சினார்க்கினியம், ப. 224.

10.     சிலப்பதிகாரம், தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிப்பு, ப. 80.

11.     பதிற்றுப்பத்து: 56.

12.     தொல்காப்பியம், இளம்பூரணம், ப. 107.

13.     சிலப்பதிகாரம், ப. 27.

14.     பதிற்றுப்பத்து: 57.

15.     மேலது, 52.

16.     தொல்காப்பியம், நச்சினார்க்கினியம், ப. 224.

17.     ஜாண் ஆசீர்வாதம், தமிழர் கூத்துகள், ப. 57.

18.     மேலது, பக். 62-63.

19.     மதுரைக்காஞ்சி: 159 - 160.

20.     மேலது, 328 - 329.

21.     பதிற்றுப்பத்து: 52.

22.     நற்றிணை: 50.

23.     குறுந்தொகை: 31.

24.     மதுரைக்காஞ்சி: 613 - 615.

25.     கலித்தொகை: 103.

26.     ஜாண் ஆசீர்வாதம், தமிழர் கூத்துகள், ப. 76.

27.     பதிற்றுப்பத்து: 77.

28.     ஜாண் ஆசீர்வாதம், தமிழர் கூத்துகள், ப. 74.

29.     மேலது, ப. 64.

30.     மேலது, ப. 75.

31.     மேலது.

32.     பதிற்றுப்பத்து: 52, 45, 77.

33.     திருமுருகாற்றுப்படை: 47 - 56.

34.     சிலப்பதிகாரம்: 26: 234 - 240.

35.     புறப்பொருள் வெண்பாமாலை, ப. 53.

36.     மேலது, ப. 170.

37.    தொல்காப்பியம், இளம்பூரணம், ப. 119.

38.     தொல்காப்பியம், நச்சினார்க்கினியம், ப. 225.

39.     மேலது.

40.     சிலப்பதிகாரம்: 26: 240.

41.     புறப்பொருள் வெண்பாமாலை, ப. 154.

42.     மேலது, ப. 171.

43.     மேலது, ப. 155.

44.     புறநானூறு: 62.

45.     மேலது, 370.

46.     மேலது, 371.

47.     பட்டினப்பாலை: 259-260.

48     மதுரைக்காஞ்சி: 161 - 163.

49.    பதிற்றுப்பத்து: 35.

50.     திருமுருகாற்றுப்படை: 47- 56; சிலப்பதிகாரம்: 27: 31.

51.     சிலப்பதிகாரம்: 27: 31.

52.     ஜாண் ஆசீர்வாதம், தமிழர் கூத்துகள், ப. 57.

53.     மேலது, ப. 75.

54.     மேலது. 

 


       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.