http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 132

இதழ் 132
[ ஜனவரி 2017 ]


இந்த இதழில்..
In this Issue..

தேர்க்குரவைகள் 
இராஜராஜர் யார்?
கிரீவத்தில் நந்தியும் கர்ணகூடும்
TEMPLES IN AND AROUND THIRUCHIRAPPALLI - 5
வேதாந்த மரத்திலொரு குயிலைக் கண்டேன்
இதழ் எண். 132 > கலையும் ஆய்வும்
இராஜராஜர் யார்?
Dr.R.Kalaikkovan and Dr.M.Nalini

இராஜராஜர் யார்? மிக எளிதாகத் தோன்றும் இந்தக் கேள்விக்கு வரலாற்று வரிகளில் அவர் பெற்றிருக்கும் இடத்தைக் கொண்டே விடையிறுத்துவிடலாம். சோழவேந்தர் இரண்டாம் பராந்தகரான பொன்மாளிகைத் துஞ்சிய சுந்தரசோழருக்கும் அவருடன் முழங்கெரி நடுவணுந் தலைமகற் பிரியாத் தையலாய் நிலைத்த திருக்கோவலூர் மலையமான் மகளார் வானவன்மாதேவிக்கும் பிறந்த இரண்டு ஆண் மக்களுள் இளையவர். இளவயதிலேயே போர்க்களம் புகுந்து, சேவூரில் மதுரை மன்னர் வீரபாண்டியரைத் தோற்கடித்து, அவர் தலைகொண்ட கோப்பரகேசரிவர்மராய், நான்காண்டுகள் சோழ மண்டலத்தின் பல பகுதிகளில் தம் கல்வெட்டுகளைப் பொறித்த ஆதித்தகரிகாலரின் அருமைத் தம்பி. வல்லவரையர் வந்தியத்தேவர் தேவியார் ஆழ்வார் பராந்தகன் குந்தவையார் என்று கல்வெட்டுகள் குறிப்பிடும் அருமைக்குரிய சோழ இளவரசியைத் தம் தஞ்சாவூர் இராஜராஜீசுவரக் கல்வெட்டில் 'நம் அக்கன்' என்று அன்பொழுக அழைத்துப் பெருமைப்படுத்திப் போற்றி மகிழ்ந்த அவரின் தம்பி.



தக்கோலப் படையெடுப்பால் வலிமையிழந்திருந்த சோழ அரசைக் கண்டராதித்தரும் சுந்தரசோழரும் உத்தமசோழரும் பொலிவுபடுத்த எடுத்த முயற்சிகளையெல்லாம் முழுமையாக்கிய சோழப் பெருவேந்தர் இராஜராஜர். சரணடைந்த எதிரிகளைக் கொல்வதில்லை என்ற அறக்கொள்கையோடு அரசாண்டவர் அருமொழி என்கிறது வீரஇராஜேந்திரரின் கன்னியாகுமரிக் கல்வெட்டு. சோழர் குலத்தின் ஒளியென்றும் இந்திரன் தேவலோகத்தில் வழிபடப்பட்டது போல் தம்முடைய குடிமக்களால் மதிக்கப்பட்டவர் என்றும் தம் ஊரில் மகிழ்வோடு வாழ்ந்த அளவற்ற பெருந்தன்மையாளரென்றும் பெரிய லெய்டன் செப்பேடுகள் அவரைப் புகழ்ந்துரைக்கின்றன. அறிவார்ந்தவர்களின் திருமுகங்களை அன்றலர்ந்த தாமரைகளாய் மலரவைக்கும் எழுகதிரோன் போல் திகழும் பெரியவர்களின் பெருமைகளைத் திரட்டிச் சொல்வது அவ்வளவு எளிதானதன்று என்று அவரைப் பற்றிக் குறிப்பிடும்போது திருவாலங்காட்டுச் செப்பேடுகள் தவித்துப் போகின்றன.



சோழப் பெருநாட்டை இராஜராஜர் ஆண்ட இருபத்தொன்பதாண்டுகளில் தமிழ்நாட்டுக் கோயில்களில் வெட்டப்பட்ட கணக்கற்ற கல்வெட்டுகளின் கண்சிமிட்டல்கள் இராஜராஜரைப் புரிந்துகொள்ள உதவுகின்றன. பல வரலாற்றாசிரியர்கள் இக்கல்வெட்டுகளின் வரிகளுக்குள் நுழைந்து தேடி அவரைப் பற்றிய வரிவடிவங்களைத் தத்தமது நூல்களில் தந்திருக்கின்றார்கள். இராஜராஜரின் மெய்க்கீர்த்தியே அவரைப் படம்பிடிக்க உதவும் ஒரு வழிகாட்டி என்றாலும், இவையெல்லாம் இராஜராஜர் யார் என்ற கேள்விக்கு முழுமையான விடையாக உருவெடுத்திட வல்லனவா?



தஞ்சாவூர் மண்ணில் எழுந்ததால், தமிழ்நாட்டுக்கும் தமிழ்க் குலத்துக்கும் உலகப்புகழ் தேடித் தந்த இராஜராஜீசுவரம் இராஜராஜரின் பிரதிபிம்பம். வானந்தழுவ விழைந்தாற் போல் விண்ணுயர எழும்பி நிற்கும் அந்த விமானத்தின் உயரமும் கம்பீரமும் அதைக் காணும்போது கலைநெகிழ் உள்ளங்களில் கனியும் கட்டுக்கடங்காத உணர்வுகளும் இராஜராஜர் யார் என்ற கேள்விக்கு விடைசொல்லக்கூடும். காலநடையில் ஒரு மனிதர் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு ஆழ்ந்துறைந்த கட்டுமானம் அது. கனவுகளையெல்லாம் கற்களாக்கி, எண்ணங்களை எல்லாம் சுண்ணமாக்கித் தம் காலக் கலையறிவின் உச்சத்திற்கோர் உறைகல்லாய் அருமொழி கட்டிய அந்தத் திருக்கோயில் தன்மீது பொறிக்கப்பட்டிருக்கும் தன்னிகரற்ற தமிழ் எழுத்துக்களாலும் தான் உட்கொண்டிருக்கும் கட்டுமானச் சிறப்பாலும் இராஜராஜர் யார் என்ற கேள்விக்கு விடைகாண வேண்டுமென்ற விழைவோடு நெருங்குவோர்க்கு நிறைவான விடையைத் தரக்கூடும்.



எதுவுமே தேடுவோரைப் பொறுத்தமைகிறது. என்ன தேடுகிறோம் என்பதே தெரியாமல் தேடுவார் சிலர். தேடலே இல்லாமல் தேடுவது போல் நடிப்பவர் சிலர். கிடைத்ததையெல்லாம் தேடியெடுத்தவை போல் தருபவர் சிலர். 'குறிக்கோள் இலாது கெட்டேன்' என்று அப்பர் சொன்னது இவர்களுக்குத்தான் பொருந்தும். தேடல் இலாது அமைந்தமையால்தான் பெரும்பாலான வரலாற்று நூல்கள், வரிகளின் அடுக்குகளாக மட்டுமே உள்ளன. வரலாறு, வாழ்க்கையைக் காட்டுவது, அந்த வாழ்க்கையின் படப்பிடிப்பில் மற்றொரு வாழ்க்கைக்கு அடித் தளமிடுவது. வாழ்ந்தவர்களை அடையாளப்படுத்த வேண்டிய வரலாறு, வெறும் நிகழ்ச்சிக் குவியல்களின் தொடரற்ற தொகுப்பாகப் போனதால்தான், வாழ்க்கைக்குத் தேவையற்றது என்ற துன்பநிலைக்குத் தள்ளப்பட்டது. நுட்பநோக்கு, நுணுகிய ஆய்வு, தெளிந்த தேடல், அறிந்துணர்ந்தவற்றின் இடையறாப் பதிவு என்று வரலாறு எழுதப்பட்டிருக்குமானால் இராஜராஜர் யார் என்ற கேள்வியை இங்கு எழுப்பியிருக்க வேண்டியதில்லை.



அந்தந்தக் கால வாழ்க்கையின் விளக்கமாய் அமைந்தவை, அமைபவை இலக்கியங்கள். அவற்றுள் சில எந்தக் காலத்திற்கும் பொருந்தும் விடிவெள்ளிகளாய் விளங்குவதுண்டு. வள்ளுவம் அத்தகையதோர் உலக இலக்கியம். அதன் மூன்று பகுப்புமே மனித வாழ்வின் மூலங்கள். வள்ளுவம் வழி வாழ்க்கை அமையுமானால், அந்த வாழ்க்கையை நிறைவான வாழ்க்கை என்றிடல் தகும். வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்றவரும் வள்ளுவர்தானே? இராஜராஜரை யாரென்று காண, வள்ளுவக் கண்ணாடியில் அருமொழியின் வாழ்க்கையை ஏன் பிரதிபலித்துப் பார்க்கக் கூடாது?



தெற்காசிய விமானக் கட்டுமானங்களிலேயே மிக உயரமானது இராஜராஜீசுவரத்தின் விமானம். ஆயிரம் வயதைத் தாண்டிய அந்த 'எழில்வளர் ஊழியின்' பெருமைகளையெல்லாம் ஒரு கட்டுரைக்குள் சுருக்கிவிட முடியாது. இராஜராஜரே நிமிர்ந்து நிற்பது போல் காண்பார் பார்வைக்கும் கலை நோக்கிற்கும் ஏற்பக் காட்சிகளை விரிக்கும் அந்தக் கட்டுமானம் தனக்குள் அடக்கி வைத்திருக்கும் கலையற்புதங்கள் ஒன்றிரண்டல்ல. தமிழ்நாட்டுக் கல்தச்சர்களால் நன்கு திட்டமிடப்பட்டு, அயராத உழைப்பாளிகளின் தொடராற்றல் துணை கொண்டு, கண்ணுக்குள் வைத்து இரசித்து இரசித்து இராஜராஜர் கட்டிய அந்த அழகிமயம், தமிழ்நாட்டின் முதலும் கடைசியுமான மிக உயர்ந்த விமானம். அதற்கு முதன்மைத் திசைகள் நான்கிலுமே வாயில்களுண்டு. அப்படி நான்கு வாயில்களுடன் தமிழ்நாட்டில் அமைந்த முதல் விமானமும் இதுதான்; ஒரே விமானமும் இதுதான்.



இருசுவர் நடுவே நடைவழி பெறும் சாந்தார விமான அமைப்பைத் தமிழ்நாட்டுக் கலைவரலாற்றிற்கு அறிமுகப்படுத்தியவர் இராஜசிம்மப் பல்லவர். அவர் கட்டிய கச்சிப்பேட்டுக் கற்றளியின் ஆதிதளச் சுவர்களிடையே அகலக் குறைவான திருச்சுற்று அமைந்து, அதை முதல் சாந்தார விமானமாக்கியது. இந்த அமைப்பு, பல்லவர்களால் திருவதிகையிலும் திருப்பட்டூரிலும் தொடரப்பட்டாலும் அவை பிரதிகளாக அமைந்தனவே தவிர முன்னேற்றமில்லை. பழுவேட்டரையர்களின் பகைவிடை ஈசுவரத்திலும் அதே நிலைதான். ஆனால், நித்தவினோதரான இராஜராஜர், கச்சிக் கற்றளியின் சாந்தார அமைப்பை இராஜராஜீசுவரத்தில் எப்படிப் பயன்படுத்தி எத்தனை அற்புதங்கள் சாதித்திருக்கிறார் என்பதை, அந்தக் கோயிலுள் நுழைந்து விமானச் சுவர்களுக்கிடையே சுற்றியும் அண்ணாந்தும் உற்றுநோக்கியும் பின் வியந்தும் மட்டுமே உய்த்துணர முடியும். முத்தளச் சாந்தாரம் வளர்த்த இராஜேந்திரரால்கூட முடியாத சாதனை அது.



ஆதிதளத்தில் மட்டுமே சாந்தார அமைப்புடன் விளங்கும் பல்லவ விமானங்களிலிருந்து பெரிதும் மாறுபட்டு, இரு தளங்களில் சாந்தார அமைப்புக் கொண்டு எழுந்த முதல் கோயில், தமிழ்நாட்டில் இராஜராஜீசுவரம்தான். இரண்டு சுவர்களுக்கிடையில் நேரும் இடைவெளிப் பகுதியின் கூரையைப் பலகைக் கற்களால் பல்லவர்கள் மூடியபோது, இரண்டாம் தளச் சுவர்களையே மேலே போகப்போக நெருங்க வைத்து 'சுவர்க்காதல்' முறையில் கூரையிட்டுச் சாந்தாரம் அமைத்த பொறியியல் திறம் சோழப் பெருந்தச்சர்களிடமிருந்தது. எப்படியிது சாத்தியம் என்று நம்மையறியாமலே வியப்பின் விளிம்பில் விரல் மூக்கின் மேல் அமருமாறு, கற்களை நகர்த்தி இடைவெளிக் குறுக்கம் கண்டது, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் விளங்கிய அறிவின் உச்சமல்லவா! அதற்குத் தூண்டலாய் அமைந்தவர் சோழத் தூங்காமணி விளக்கான இராஜராஜர் அல்லவா!



சாந்தாரம் கண்டது, கருவறை இறைவனை வலம் வர மட்டுமே என்றிருந்த பல்லவ, பழுவேட்டரையச் சிந்தனை, இராஜராஜீசுவரத்தில் சிறகடித்தது. விளைவு, சுற்றி வரும்போதே வரலாற்றுச் சுகம் காண வனப்பான ஓவியங்கள், சிற்பங்கள் ஆதிதளச் சாந்தாரத்தில். எப்பக்கம் திரும்பினும் நிமிர்ந்தாலும் குனிந்தாலும் வண்ணங்களின் தோய்வில் அநுபவத் தூரிகைகள் அள்ளித் தெளித்திருக்கும் காலக் கண்ணாடியின் கலைப்பதிவுகளும் உளிகளின் நர்த்தனமும்தான். நடப்பதே தெரியாமல் ஒரு கனவுலக பவனி. 



வாயில்களின் எதிரில் இராஜராஜரின் எண்ணங்களைப் போலவே, வீரமும் கலையும் நளினமுமே என் அடையாளங்கள் எனுமாறு எழுந்தமைந்த பெரிதினும் பெரிதான சிற்பங்கள். தமிழ் எந்தக் காலத்தும் குனிந்துவிடக் கூடாது என்பதற்காகவே உருவாக்கினாற் போல் கழுத்தை வலிக்கச் செய்யுமளவு பார்வைப் பரப்பில் விரியும் கூரைச் சிற்பங்கள். இந்த ஓவியக்கூடத்தின் விரிவான விளக்கங்கள் இராஜராஜர் யார் என்பதை விளக்குவதிருக்கட்டும், இந்த அமைப்பே, இதன் நோக்கே அவரைக் காட்டவில்லையா? 'செயற்கரிய செய்வார் பெரியர்' என்பதன் உள்நாதம் இந்தத் தொடக்கத்திலேயே செவிக்குள் செந்தேனாய்ப் பாயவில்லையா? சிந்தனைச் சீறல்களை அந்தப் பொருள் நயம் வளர்த்துப் போடும் மாயம் நிஜந்தானே?



 


இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.