http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 132
இதழ் 132 [ ஜனவரி 2017 ] இந்த இதழில்.. In this Issue.. |
ஆன்ற தமிழ்ப் புலவீர், கற்பனையே யானாலும், ஏன் வேதாந்த நோக்கில் பொருளுரைக்க வேண்டும்? குயிலின் அமுதகானத்துக்குள் வேதாந்தக் கருத்துக்கள் ஒளிந்திருக்கிறதாம். காதல் போயின் சாதல், ஒளி போயின் இருள், இன்பத்தின் எல்லை துன்பம், நாதம் நலிந்தால் சேதம், தாளம் தடைபட்டால் கூளம், பண் பழுதானால் மண், புகழுக்குப் புரையுண்டானால் இகழ், உறுதி உடைந்தால் இறுதி, கூடல் முடிந்தபின் பிரிந்தால் வாடல், குழல் வெட்டப்பட்டால் வீழல் என்று நல்லவைகள் அனைத்தின் முடிவுகளும் கெட்டவைகளின் தொடக்கங்கள் என்ற வேதாந்தப் பொருள் மறைந்திருக்கிறது என்று புலவர் திலகம் கீரன் அவர்களின் சொற்பொழிவு ஒன்றில் கேட்க நேர்ந்தது. பாரதியே கடைசி வரிகளில் வேதாந்தத்துடன் முடிச்சிட்டு வைத்திருப்பதைத் தவிர, கீரன் அவர்கள் கூடுதல் சான்றாகக் கொள்வது "குள்ளச்சாமி தரிசனம்" தனிப்பாடல்களை. குள்ளச்சாமி குட்டிச்சுவரின் அருகிலிருந்த கிணற்றுக்குள் காட்டிய கதிரவனின் முகத்தைக் கண்டபிறகு அதை எளியோருக்குப் புரியும் வண்ணம் கவிதையாக்கி இருக்கிறாராம். அதுமட்டுமின்றி, இப்பாட்டில் வரும் முன்ஜென்மக் கதைக்கும் நடப்புக் கதைக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்துவதும் (மாடனும் குரங்கனும் மாடாகவும் குரங்காகவும் மாறுவது) மறுபிறப்பு என்னும் வேதாந்தக் கருத்துதான் என்கிறார். காதல், காதல், காதல், அருளே யாநல் லொளியே; இன்பம், இன்பம், இன்பம்; நாதம், நாதம், நாதம்; தாளம், தாளம், தாளம்; பண்ணே, பண்ணே, பண்ணே; புகழே, புகழே, புகழே; உறுதி, உறுதி, உறுதி; கூடல், கூடல், கூடல் குழலே, குழலே, குழலே; ஆசிரியரின் கதைசொல்லல் பாணியில் அமைந்துள்ள இவ்விலக்கியம் நிகழ்காலத்திலிருந்து கடந்தகாலத்திற்குச் சென்று மீண்டும் நிகழ்காலத்துக்குத் திரும்பி முடிகிறது. முன் ஜென்மக் கதை பின்வருமாறு தொடங்குகிறது. சேர வளநாட்டில் தென்புறத்தே ஓர்மலையில் வீறுடைய வெந்தொழிலார் வேடர் குலத்தலைவன் வீர முருகனென்னும் வேடன் மகளாகச் சின்னக்குயிலி பிறந்து வளர்ந்தாள். நல்லிளமை முந்தும் அழகினிலே மூன்றுதமிழ் (சேர சோழ பாண்டிய) நாட்டில் யாரும் தனக்கோர் இணையில்லை என்றிடவே சீருயர நின்றாள். அந்தச் செழுமையான கானகத்திலிருந்த வேடரில் அவள் மாமன் மகனொருவன் மாடனெனும் பேர்கொண்டவன் காமன் கணைக்கிரையானான். அவளழகைக் கண்டுருகி, அவளை மணக்க நெடுநாள் விரும்பி, அவன் நித்தம் நித்தம் பொன்னை, மலரைப் புதுத்தேனைக் கொண்டு வந்து கொடுத்து நினைவெல்லாம் அவளாகச் சித்தம் வருந்துகிறான். சின்னக்குயிலி அவனை மாலையிட வாக்களித்தாள். மையலினால் இல்லை. அவன் சால வருந்தல் சகிக்காமல் சொல்லிவிட்டாள். இந்த நேரத்தில், அவள் அழகின் பெருங்கீர்த்தி தேசமெங்கும் பரவ, செல்வமும் நல் வீரமும் நாடனைத்தும் அஞ்சி நடுங்குஞ் செயலும் உடைய ஒரு வேடர் தலைவன், தன் மகனான நெட்டைக் குரங்கனுக்கு நல்ல பெண்வேண்டி, அவளை மணம் புரிய நிச்சயித்து, அவள் தந்தையை அணுகி, ''நின்னேர் தையலையென் பிள்ளைக்குக் கண்ணாலஞ் செய்யும் கருத்துடையேன்'' என்று சொன்னபோது, அவள் தந்தை எண்ணாப் பெருமகிழ்ச்சி எய்தி, உடனே உடன்பட்டான். ஆறிரண்டு நாட்களிலே நன்றாக மணம்புரிய உறுதி பண்ணிவிட்டார். பன்னிரண்டு நாட்களிலே பாவையவளைத் தேன்மலையில் அன்னியன் மணம் செய்து கொள்வான் என்னும் செய்தி கேட்டு, மாடன் மனம் புகைந்து அடுத்த நாள் அவளை நாடிச் சினத்துடனே பல்வேறு கோபமொழிகள் கூற அவளும் அவனிடத்தே கொண்ட கருணையினால், ''காயுஞ் சினம் தவிர்ப்பாய் மாடா, வற்புறுத்தலால் நெட்டைக் குரங்கனுக்குப் பெண்டாக நேர்ந்தாலும், கட்டுப்படி அவர்தம் காவலிற்போய் வாழ்ந்தாலும் மூன்று மாதத்தில் மருமம் சில செய்து பேதம் விளைவித்துப் பின் இங்கே வந்திடுவேன்; தாலிதனை மீண்டும் தங்களிடமே கொடுத்து நாலிரண்டு மாதத்தே நாயகனாய் நின்றனையே பெற்றிடுவேன்; நின்னிடத்தே பேச்சுத் தவறுவனோ? மற்றிதனை நம்பிடுவாய் மாடப்பா'' என்றுரைத்தாள். இதுவும் காதலினாலில்லை, கருணையினால் உரைத்தாள். பின்னர்ச் சிலதினங்கள் சென்றதன்பின் பெண்குயிலி, அவளொத்த தோழியரும் அவளுமொரு மாலையிலே மின்னற் கொடிகள் விளையாடுதல்போலே காட்டினிடையே களித்தாடி நிற்கையிலே, வேட்டைக்கென வந்தான் வெல்வேந்தன் சேரமானின் அருமை மைந்தன். தனியே, துணைபிரிந்து மன்னன் மைந்தன் ஒரு மானைத் தொடர்ந்துவர, தோழியரும் அவளும் ஆடுவதைக் கண்டுவிட்டான். மையல் கரைகடந்து அவளைத் தனக்காக நிச்சயித்தான். அவளும் மன்னவனைக் கண்டவுடன் பெருமோகங் கொண்டுவிட்டாள். அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள். அப்படிப்பட்ட பார்வையில் ஆவி கலந்துவிட்டனர். தோழியரும் வேந்தன் சுடர்க்கோலம் கண்டு ஆழியரசன் அரும்புதல்வன் போலும் என்றெண்ணி அஞ்சி விலகி விட்டார். அவனும் ஆவளிடத்தே ''வஞ்சித் தலைவன் மகன்யான்'' எனவுரைத்து, ''வேடர் தவமகளே! விந்தை யழகுடையாய்! ஆடவனாகப் பிறந்ததன் பயனை இன்று பெற்றேன்; கண்டதுமே உன்மீது நான் காதல்கொண்டேன்'' என்றிசைக்க, மண்டு பெருங்காதல் மனத்தடக்கி அவள் மொழிந்தாள், ''ஐயனே! உங்கள் அரண்மனையில் ஐந்நூறு தையலருண்டாம்; அழகில் தன்னிகர் இல்லாதவராம்; கல்வி தெரிந்தவராம்; கல்லுருகப் பாடுவராம்; அவர்களைச் சேர்ந்தே நீர் அன்புடனே வாழ்ந்திருப்பீர், மன்னவரே வேண்டேன், மலைக்குறவர் தம்மகள்யான்; சிங்கம் எங்காவது குழிமுயலை விரும்புவதுண்டோ? வெல்லுதிறல் மாவேந்தர் வேடருள்ளோ பெண்ணெடுப்பார்? பத்தினியாய் வாழ்வதல்லாம் பார்வேந்தர் தாமெனினும் நத்தி விரைமகளாய் நாங்கள்குடி போவதில்லை, பொன்னடியைப் போற்றுகின்றேன், போய் வருவீர். தோழியரும் என்னைவிட்டுப் போயினரே, என்செய்வேன்?'' என்று அவள் நெஞ்சம் கலங்கி நிற்கிறாள். அப்பொழுது, வேந்தன் மகன் அவளது காதலை விழிக்குறிப்பினால் அறிந்து, பக்கத்தில் வந்து பளிச்சென்று அவளது கன்னஞ் செக்கச் சிவக்க முத்தமிட்டான். சினங்காட்டி அவள் விலகிச் சென்றாள். தாவி வந்து அவளைத் தழுவினான் மார்பிறுக. ''நின்னையன்றி ஓர் பெண் நிலத்திலுண்டோ என்றனுக்கே? பொன்னே, ஒளிர்மணியே, புத்தமுதே, இன்பமே, நீயே மனையாட்டி, நீயே அரசி. நீயே துணை எனக்கு. நீயே குலதெய்வம். நின்னையன்றி வேறொரு பெண்ணை நினைப்பேனோ? வீணிலே என்னை நீ ஐயுறுதல் எதற்கு? இப்பொழுதே உன்மனைக்குச் சென்றிடுவோம்; உன் வீட்டிலுள்ளோரிடம் என்மனதைச் சொல்வேன். வேத நெறியில் விவாகமுனைச் செய்துகொள்வேன், மாதரசே!'' என்று வலக்கை தட்டி வாக்களித்தான். பூரிப்புக் கொண்டாள். புளகம் எய்திவிட்டாள். பேரலை போல் வந்த மகிழ்ச்சியிலே நாணந் தவிர்த்தாள்; நனவே தவிர்ந்தவளாய், காணத் தெவிட்டாதோர் இன்பக் கனவிலே சேர்ந்து விட்டாள். மன்னனது திண் தோளை அவள் உவகை ஆர்ந்து தழுவி அவனிதழில் தேன்பருகச் சிந்தை கொண்டாள். வேந்தன் மகன், தேனில் விழும் வண்டினைப்போல் விந்தையுறு காந்தம் மீது வீழும் இரும்பினைப்போல், ஆவலுடன் அவளை ஆரத்தழுவி, அவளது கோவையிதழ் பருகிக் கொண்டிருக்கும் வேளையிலே, சற்றுமுன்னே ஊரிலிருந்து வந்திறங்கியவன், அவள் வீட்டைவிட்டு மாதருடன் காட்டினிலே விளையாடச் சென்றதனைக் கேட்டு ஆத்திரம் கொண்டு அவளை நெட்டைக் குரங்கன் நெருங்கிவந்து பார்த்து விட்டான். ''பட்டப்பகலிலே பாவிமகள் செய்கையைப் பார்! கண்ணாலங்கூட இன்னுங் கட்டி முடியவில்லை, மண்ணாக்கி விட்டாள்! என் மானம் தொலைத்துவிட்டாள். 'நிச்சய தாம்பூலம்' நிலையா நடந்திருக்கப் பிச்சைச் சிறுக்கி செய்த பேதகத்தைப் பார்த்தாயோ?'' என்று மனதில் எழுகின்ற தீயுடனே நின்று கலங்கினான் செட்டைக் குரங்கனங்கே. மாப்பிள்ளைதான் ஊருக்கு வந்ததையும், பெண்குயிலி, தோப்பிலே தன் தோழிகளுடன் சென்று பாடி விளையாடும் செய்தி கேட்டே குரங்கன் ஓடியிருப்பதோர் உண்மையையும் மாடனிடம் யாரோ உரைத்துவிட்டார். ஈரிரண்டு பாய்ச்சலிலே நீரோடும் மேனி நெருப்போடுங் கண்ணுடனே மாடனங்கு வந்துநின்றான். ஆனால் இதனைத் தேன்மலையின் வேடர்கோன் மைந்தன் விழிகொண்டு பார்க்கவில்லை. நெட்டைக் குரங்கனங்கு நீண்ட மரம்போல எட்டிநிற்குஞ் செய்தி இவன்பார்க்க நேரமில்லை. அன்னியனைப் பெண்குயிலி ஆர்ந்திருக்குஞ் செய்தியொன்று தன்னையே இவ்விருவரும் கண்டனர். வேறெதுவும் அறியார். மாடனதைக் கண்டான், மற்றவனும் அங்ஙனமே. மாடன் வெறிகொண்டான், மற்றவனும் அவ்வாறே. காவலன் தன் மைந்தனும் அக்கன்னிகையும் அங்கு தேவசுகங் கொண்டு விழியே திறக்கவில்லை. ஆவிக் கலப்பின் அமுத சுகந்தனிலே மேவியங்கு மூடியிருந்த விழிநான்கு ஆங்கவற்றைக் கண்டமையால் ஆவியிலே தீப்பற்றி ஓங்கும் பொறிகள் உதிர்க்கும் விழிநான்கு மாடனும் தன் வாளுருவி மன்னவனைக் கொன்றிடவே ஓடிவந்தான்; நெட்டைக் குரங்கனும் வாளோங்கி வந்தான்; வெட்டிரண்டு வீழ்ந்தன வேந்தன் முதுகினிலே. சட்டெனவே மன்னவனும் திரும்பி வாளுருவி வீச்சிரண்டில் இருவரையும் வீழ்த்தினான்; வீழ்ந்தவர்தாம் பேச்சிழந்தே அங்கு பிணமாகக் கிடந்துவிட்டார். மன்னவனும் சோர்வெய்தி மண்மேல் விழுந்து விட்டான். அவளும் மன்னவனைப் பெருந்துயர் கொண்டே மடியில் வாரியெடுத்து வைத்து வாய்புலம்பக் கண்ணிரண்டும் மாரிபொழிய மனமிழந்து நிற்கையிலே கண்ணை விழித்து அக்காவலனும் கூறுகின்றான்; ''பெண்ணே, இனிநான் பிழைத்திடேன்; சிலகணத்தே ஆவி துறப்பேன், அழுதோர் பயனில்லை. சாவிலே துன்பமில்லை; தையலே, இன்னமும் நாம் பூமியிலே தோன்றிடுவோம், பொன்னே, நினைக்கண்டு காமுறுவேன்; நின்னைக் கலந்தினிது வாழ்ந்திடுவேன்; இன்னும் பிறவியுண்டு; மாதரசே இன்பமுண்டு, நின்னுடன் வாழ்வில் இனி நேரும் பிறப்பினிலே!'' என்று சொல்லிக் கண்மூடி, இன்பமுறு புன்னகைதான் நின்று முகத்தே நிலவுதர, மாண்டனன். மாடனிங்கு செய்ததோர் மாயத்தால் இப்பொழுது புள்வடிவம் எய்தினாள். வாழி நின்றனன் மன்னவனும் தொண்டை வளநாட்டில் ஆழிக் கரையின் அருகேயோர் பட்டினத்தில் (புதுச்சேரியில்) மானிடனாத் தோன்றி வளருகின்றான். "அவளை ஒரு கானகத்தே கண்டு, கனிந்து அவள் பாடும் நல்ல பாட்டினைத்தான் கேட்பான். பழவினையின் கட்டினால் மீண்டும் அவள்மேல் காதல் கொள்வான்" என்று ஒரு முனிவர் குயிலுக்கு அதன் முற்பிறவிக் கதையை உரைக்கிறார். ஆனால், குயிலின் கவலை வேறு. வெவ்வேறு இனத்தவர் ஆனாலும் காதலிக்க முடிந்தாலும் கல்யாணம் முடிப்பது எவ்வாறு சாத்தியம்? அதற்கும் முனிவர் விடை சொல்கிறார். சின்னக்குயிலி இப்பிறவியிலும் ஒரு வேடன் மகளாகத்தான் பிறந்தாளாம். ஆனால் மாடனும் குரங்கனும் அடுத்த பிறவி எடுக்காமல் பேயாகச் சுற்றுகையில் அவளைக் கண்டுகொண்டு மாயங்கள் செய்து அவளைக் குயிலாக்கி அவளுடனே சுற்றி வருகின்றனர். தொண்டை வளநாட்டில் நம் கவிக்குயில் கருங்குயிலைச் சந்திக்கையில் பல பொய்த்தோற்றங்கள் காட்டி அவரை ஐயமுறச் செய்துவிடும். அவளை வஞ்சகியென்று எண்ணிக் கைவிட்டுவிட நினைப்பார். இதைக் குயில் உரைத்துவிட்டு, "முனிவர் சொன்னதையெல்லாம் அப்படியே சொல்லிவிட்டேன், இனி உங்கள் விருப்பம். காதலோ சாதலோ எதுவென்றாலும் ஏற்றுக்கொள்கிறேன்" என்று கூறி அவர் கையில் விழுந்தது. பெண்ணென்றால் பேயும் இரங்காதோ? பேய்கள் இரக்கமின்றி மாயம் செய்தால், மானிடரும் அதை நம்பி முடிவெடுப்பதுண்டோ? மாதர் அன்பு கூறில் மனமிளகார் இங்குளரோ? என்றெண்ணி முத்தமிடுகையில், பேய்களின் மாயங்கள் விலகி அழகான பெண்ணாக உருமாறுகிறாள். அவளழகைக் கண்டு வியந்து திடுக்கிட்டுப் பார்க்கும்போது பண்டைச்சுவடி, எழுதுகோல், பத்திரிகைக் கூட்டம், பழம்பாய் வரிசையெல்லாம் காணப்பட, குயிலின் கதை ஒரு கனவு என்றும் தாம் வீட்டிலிருப்பதையும் உணர்ந்து கொள்கிறார். இந்தக் கற்பனைக் கதைக்குத்தான் தமிழ்ப்புலவர்களை வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க வேண்டியிருக்கிறார். புலவர் கீரன் அவர்களும் குள்ளச்சாமி தரிசனத்தை இணைத்துப் பொருள் கூறியிருக்கிறார். ஆன்ற தமிழ்ப் புலவர்கள் யாரேனும் வேறு ஏதாவது விளக்கத்தை அளிக்க முன்வந்தால் பாரதியைப் பல்வேறு கோணங்களிலிருந்து புரிந்துகொள்ள உதவிய புண்ணியம் கிடைக்கும்.
|
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |