http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[178 Issues]
[1762 Articles]
Home About US Temples Facebook
Issue No. 133

இதழ் 133
[ மார்ச் 2017 ]


இந்த இதழில்..
In this Issue..

The Importance of Rajaraja Chola I and his son Rajendra Chola I in Southeast Asian Tamil Links
TEMPLES IN AND AROUND THIRUCHIRAPPALLI - 6
உலகப் பார்வைக்கு உதயம் - 1
பெருங்குடித் தோரணம்
திருவையாற்று தென்கயிலாயம்
கருந்துளைக் குழலும் வில்யாழும்
இதழ் எண். 133 > கலையும் ஆய்வும்
உலகப் பார்வைக்கு உதயம் - 1
இரா.கலைக்கோவன், மு.நளினி

 இராஜராஜீசுவரத்து ஆதிதளச் சாந்தாரச் சுவர்களில் தரைதொட்டுக் கூரை மேவுமாறு போல இராஜராஜர் காலத்தில் ஓவியக் காட்சிகள் வரையப்பட்டன. பின்னால் வந்த நாயக்க அரசர்கள் அவற்றை மறைக்குமாறு அவற்றின் மீது சுண்ணம் தடவித் தங்கள் பங்கிற்குச் சில ஓவியக் காட்சிகளை வரைந்து வைத்தனர். கருத்தற்று வரையப்பெற்ற இந்நாயக்க ஓவியங்கள் ஆங்காங்கே சிதைய, முகில் கிழித்து வெளிப்படும் கதிரவன் எனக் கீழிருந்த சோழர் கால ஓவியங்கள் கண்சிமிட்டின. அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் திரு. கோவிந்தசாமியின் கூர்மையான பார்வையில் இந்தக் கண் சிமிட்டல்கள் சிக்க, இந்தியத் தொல்லியல்துறை முயற்சி மேற் கொண்டு வேதிகளின் துணையுடன் நாயக்க மேற்பூச்சை உரித்தெடுத்தது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சோழத் தூரிகைகள், மூலிகை வண்ணங்களில் மூழ்கி மலர்வித்த நாகரிகப் பண்பாட்டு வெளிப்பாடுகள், அக்காலக் கலையுச்சங்களையும் அவற்றை அடையக் காரணமாயிருந்த இராஜராஜரின் தூண்டல்களையும் குன்றின் மீதிட்ட பேரொளியாய் மக்களுக்கு உணர்த்துமாறு உலகப் பார்வைக்கு உதயமாயின. 

 அப்படி உதயமான சாந்தாரச் சுவர் ஓவியங்களுள் நான்கு அரிய பதிவுகளைக் காணமுடிகிறது. கருவறையின் தெற்கு அகச்சுவர் முழுவதும் ஆலமர்அண்ணல் ஆகமம் விளக்கிய வரலாறு காட்சியாகியுள்ளது. மேற்கு அகச்சுவரில் சுந்தரர் வாழ்க்கையின் திருப்புமுனைக் காட்சிகளும் தில்லைக் காட்சியும் விளங்க, வடக்கு அகச்சுவர் இராஜராஜரை மிகக் கவர்ந்த  சிவபெருமானின் முப்புர எரிப்புப் போரைக் கொண்டுள்ளது. இந்நான்கு பதிவுகளுமே நேயத்துடன் அணுகின் இராஜராஜர் யார் என்பதைப் புலப்படுத்தக்கூடும். எனினும், அந்நான்கனுள் மிக எளிதாகவும் மிகச் சிறப்பாகவும் அப்பெருந்தகையின் தலைமைப் பண்புகளை விளங்கிக்கொள்ளச் சுந்தரர் வாழ்க்கை துணையாகும் என்பதனால், மேற்குச் சுவரில் முத்தாய்ப்பான காட்சிகளோடு படம்பிடிக்கப்பட்டிருக்கும் வாணன் வந்து வழி தந்த வரலாற்றைக் காண்போம்.வாணன் வந்து வழி தந்த வரலாறாக மேற்கு அகச்சுவரில்,  பரவியிருக்கும் சுந்தரர் வாழ்க்கையின் திருப்புமுனைக் காட்சிகள், வரலாற்றில் இராஜராஜருக்கிருந்த ஈடுபாட்டிற்கு மட்டுமல்லாது, தோழமையில் அவருக்கிருந்த நாட்டத்திற்கும் அந்தத் தோழமைப் பண்பையே தம் வாழ்நாளெல்லாம் தம்மைச் சுற்றி நிகழ்ந்த நிகழ்ச்சிகளிடத்தும் தம்மைச் சேர்ந்தும் சார்ந்தும் இருந்த மானுடரிடத்தும் அன்புப் பின்னலாய் வளர்வித்த அவரது ஆளுமைக்கும் மௌனச் சான்றுகளாய் விளைந்துள்ளன. ஆயிரம் ஆயிரம் உரையாடல்களைவிட இது போன்ற பொருள் பொதிந்த மௌனங்கள் வரலாற்றிற்கு விடிவிளக்குகளாய் அமையவல்லன. 

 தேவருலகத்தில் தாம் மையலுற்ற மங்கையரை மணப்பதற்காகவே இறைவனால் நிலவுலகப் பிறப்பிற்கு ஆட்படுத்தப்பட்ட சுந்தரர் சுந்தரமான வாழ்க்கையர். சிற்றரசர் மகனாய் வளர்ந்து, களப கஸ்தூரிகளில் மிதந்து, இறைவனிடமும் அதையே கேட்டுப் பெற்றுக் கலையரசியையும் கன்னிமாடக் காரிகையையும் கைப்பிடித்த அந்த இறைத்தோழரின் இனிய வரலாறு சுகமானதுதான் என்றாலும், எதிர்பாராத திருப்பங்களையும் கொண்டமைந்தது. மணங்கொள்ள மேடை வந்தபோது, வயதான கிழவர், அடிமை நீ என்று ஆட்கொண்டமை முதல் திருப்பம். நண்பரோடு நயந்து, இறைவனோடு உவந்து அஞ்சைக்களத்தில் பாமாலைகள் புனைந்துகொண்டிருந்தபோது வாணன் வந்து வழிகாட்ட, நண்பரையே மறந்து, வான் வழிக் கயிலாயம் சென்றது இரண்டாவது திருப்பம். இந்த இரண்டும் இல்லையேல் சுந்தரர் வாழ்க்கை களியாட்டக் குவியலும் கலக்க உருகலுமாய்க் கரைந்து போயிருக்கும். சுந்தர வாழ்க்கையை அந்நிலையிலிருந்து, உடுக்கையிழந்தவன் கை போலக் காப்பாற்றி உயர்த்தியவர் அந்தக் கடவுள். உடம்பொடு உயிரிடையன்ன மற்றென்ன மடந்தையொடு எம்மிடைத் தொடர்பென்ற காதல் இலக்கணத்தை நட்பிலக்கணமாக்கிச் சுந்தரருக்காகக் கால் தேயத் தெருவலைந்து காதல் சேகரித்தவர் இந்தக் கடவுள். கலிக்காமர் கொதிக்க, கண்டவர்கள் வியக்க நிகழ்ந்த இந்தக் காதல் தூதும் காதலால் விளைந்ததுதான். தோழமைக் காதல். அது இறைவனுக்கும் சுந்தரருக்கும் இடையில் விளைந்தது. வளர்ந்தது; வாழ்ந்தது.இறைவன் நண்பராய்க் கொண்ட சுந்தரரின் வாழ்க்கையில், இராஜராஜர் மனங்கொண்டது தோழமையில் அவருக்கிருந்த பற்றால், நம்பிக்கையால், அதன் தனித்தன்மையில் அவருக்கேற்பட்ட பத்திமையால். இறைவனை யார் வேண்டுமானாலும் நண்பராய்க் கருதலாம். ஆழ்வார்கள், நாயன்மார்கள் முதல் பாரதியார்வரை அப்படிக் கருதிப் பாடியவர்கள் கணக்கிலர். ஆனால், இறைவன் தோழராய்க் கருதித் தம்பிரான் தோழரென்ற பெருமையைத் தந்தது சுந்தரருக்குத்தான். அதனால்தான், அரிய மனிதரான அப்பரை விடுத்து, அம்மைப் பால் அருந்திய சம்பந்தரை மறந்து, காதலிகளுக்கிடையில் கலந்துருகிய சுந்தரரைத் தேர்ந்தார் இராஜராஜர். ஆனால், அந்தத் தேர்வுக்குச் சுந்தரர் காரணமல்லர். சுந்தரரிடம் சொந்தம் கொண்ட இறைவன்தான் காரணம்.உழைப்பது பலரால் முடியும். இறையருள் உண்மைத் தொண்டருக்குக் கைகூடும். ஆனால், தோள் மேல் கைபோட்டு, நட்புரிமையோடு, நவில்தொறும் நூல்நயம் போலப் படைத்தவனோடு பழகும் பேறு சமய வரலாற்றில் சுந்தரருக்கு மட்டும் தானே வாய்த்தது. நட்பாங் கிழமை தரும் புணர்ச்சியில் நம்பிக்கை மிகுந்த இராஜராஜர், தோழமைப் பண்பை, யாதும் ஊரே யாவருங் கேளிர் என்ற பூங்குன்றக் குழைவில், அதே சமயம் அரச அறத்திற்கு மாறுபாடில்லாத நிலையில் தம்மைச் சூழ வளர்த்து வாழ்ந்ததை அவருடைய கல்வெட்டுகள் விரிவாகப் பேசுகின்றன. கோயில் முழுவதையும் தாம் ஒருவரே எடுத்து, அடைய முடியாத பெருமைகளையெல்லாம் அளப்பரிய நிலையில் கொண்டிருக்கக் கூடிய இந்தக் கோ, தாம் எடுப்பித்த கற்றளிக்குத் தம் படைத்தலைவரைக் கொண்டு திருச்சுற்று மாளிகை எழுப்பியது ஏன்? இராஜராஜீசுவரருக்குச் சூட்டினாற் போல், திசைக்காவலர் திருமுன்கள் அனைத்திற்கும் தாமே குடமேற்றியிருக்கக் கூடுமென்ற நிலையிலும், தம் சைவாச்சாரியாருக்கு அவ்வாய்ப்பை அவர் வழங்கியமை எதனால்? எக்காலத்தும் திசைவிளக்காய் விளங்கப்போகிறதென்பது தெரிந்தும், கட்டிய தமக்கோரிடம், உடன் ஒட்டிய பிறர்க்கோரிடம் என்று நினையாது, வடவாயில் இடப்புறம் தொடங்கும் கல்வெட்டில், தம்மையும் அக்கனையும், பெண்டுகளையும் மற்றும் குடுத்தார் அத்தனை பேரையும் ஒன்றாய் நிறுத்திய அந்தப் பெருந்தகையின் நோக்கமென்ன? தம் பணியாளர்கள் அந்நாளைய வீரவிளையாட்டுகளில் தோல்வியுறக் கூடாதென்ற பெருநோக்கோடு இராஜராஜீசுவரத்தில் அவர்தம் வெற்றிக்காக விளக்கு எரித்தாரே அந்த நித்தவினோதர், அதன் அடிப்படைதான் என்ன? களத்தூரிலிருந்து வந்து, பேரரசே உம் நலத்திற்கு விளக்கெரிப்பேன் என்றவரை, உலக நலத்திற்கு விளக்கெரியும் என்று உலகப் பார்வைக்கே உவந்து திருப்பிய அந்தக் கேரளாந்தகரின் உள்ளத்தில் உறைந்திருந்த உணர்வுகளின் உட்பொருள்தான் எது?இவை எல்லாவற்றிற்கும் எது விடையோ, அதுதான் இராஜராஜரைச் சாந்தார இடைவெளியின் அகச்சுவரில் சுந்தரர் வாழ்க்கையைப் படம்பிடிக்க வைத்தது. தமக்குள் மலர்ந்திருந்த தோழமையின் பெருமையை வருந் தலைமுறைகளுக்கெல்லாம் உணர்த்த விரும்பிய இராஜராஜருக்குச் சுந்தரர் வரலாற்றினும் சிறந்தது வேறு அமையவில்லை. இறைத் தோழமையுடன் சேரமானின் தோழமையும் கலந்துய்த்த வாழ்க்கையைப் பெற்றவர் சுந்தரர். சிலருக்கு வாய்ப்புகள் வலிய வந்து விழுகின்றன. தலைமீது இறையடிப் பதியப் பல இடங்களில் வேண்டிப் பல மைல்கள் நடந்தவர் அப்பர். ஆனால், தேடி வந்து தெய்வம் தந்ததால், கேட்காமலேயே மேனியெங்கும் அடிச்சுவடு பெற்றும் யாரென்று கேட்டு, இறையென்று அறிந்தவர் சுந்தரர். அப்பருக்கும் சம்பந்தருக்கும் தொண்டர்கள் கிடைத்தனர். சுந்தரர் மட்டுமே நண்பர்களைப் பெற்றார். நட்பிற்கு இலக்கணமாய் நண்பர்கள் நடந்து கொண்டதால் சுந்தரர் பெருமை பெற்றார். பெற்ற நட்பு அவர் வாழ்க்கையை உயர்த்தியது. திருத்தொண்டர் புராணமே அவரைச் சுற்றி எழுமாறு அந்த நட்பே சுந்தரருக்கு வாய்ப்பளித்தது.பெருமானும் பெருமாளும் சுந்தரரிடம் கொண்ட நட்பின் ஆழத்தை, இறைவன், அரசன், இறையடியார் என்ற முந்நோக்கில் பார்த்துப் பூரித்த இராஜராஜருக்குத் தம் நெஞ்சில் இயல்பாக ஊறித் ததும்பிய தோழமைப் பண்பை, பத்திமையுணர்வை அதனுடன் ஒப்பிட்டுப் பொருத்திப் பார்க்க முடிந்தது. விளைவு, வரலாற்றின் பதிவுகளோடு சுந்தரர் வாழ்க்கை வண்ணக் களஞ்சியமாக வடிவெடுத்தது. இந்த ஓவியக்காட்சியில் இடம் பெற்றிருக்கும் சுந்தரர் வாழ்க்கைப்பகுதிகள் இராஜராஜரின் வரலாற்றுக் கண்ணோட்டத்திற்கு விரிவான விளக்கங்கள். சுந்தரர் நாவலூரில் பிறந்ததும் வளர்ந்ததும் நரசிங்க முனையரையரின் தத்துப் பிள்ளையானதும் புத்தூரில் சடங்கவியார் மகளுக்கு மணம் பேசப்பட்டதும் வாழ்வின் இயல்பான படி நிலைகள் என்பதால் இராஜராஜர் அவற்றைக் காட்சியாக்குவதில் கருத்துக் கொள்ளவில்லை.‘உங்கள் மலரடியை மறந்து மயங்கினால் வந்து தடுத்தாட் கொள்க’ என்று இறைவனிடம் வேண்டிய பிறகே நிலவுலகப் பிறப்புக்கு ஆளானார் சுந்தரர். அவர் நிலவுலகம் வந்தது பரவையையும் சங்கிலியையும் மணக்க. பிறப்பின் காரணமாய்த் தேவருலக உறவுகள் மறந்து, சடங்கவி மகளை மணங்கொள்ளத் தயாரான சுந்தரரை, இறுதிநொடிவரை விட்டுப்பிடித்தார் இறைவன். மணமேடை இருக்கையில் சுந்தரர் அமர்ந்த பிறகு, இனியுங் காலந் தாழ்த்தினால் காரியம் கெட்டுவிடும், தந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது போய்விடும் என்பதை உணர்ந்தவராய்த்தான் இறைவன், நாடகமாடி நிகழ்ச்சியை நிறுத்த முதிய ஆண்டகையாய் ஓலையுடன் எழுந்தருளினார். ‘அடிமை நீ’ என்றார். ஆட்கொண்டார். நிகழ்ச்சிகளும் பாத்திரங்களும் நெருங்கியிணைந்து வரலாற்றை நகர்த்திய இந்தக் காட்சியில் தம்மையிழந்த சிவபாதசேகரர் தலைக்காட்சியாய் இதையே கொண்டார்.சுந்தரர் தடுத்தாட்கொள்ளப்பட்டுக் கயிலாயம் சென்றடைந்த வரலாற்றைப் பதிவுசெய்ய ஒரு முழுச்சுவரை மேலிருந்து கீழாக நான்கு அகலப் பத்திகளாகப் பிரித்துக்கொண்ட சோழ ஓவியர்கள் கீழ்ப்பத்தியில் சுந்தரரை இறைவன் தடுத்தாட்கொண்டதையும் இரண்டாம் பத்தியில் அஞ்சைக்களம், கயிலைப் பயணக் காட்சிகளையும் மூன்றாம் பத்தியில் கயிலாயத்தையும் காட்டியுள்ளனர். நான்காம் பத்தியான மேற்பத்தி பெருமளவிற்குச் சிதைந்திருந்தாலும் மாளிகைக் காட்சி ஒன்று அதில் வெளிப்படுத்தப் பட்டிருப்பதைக் காணமுடிகிறது. சுந்தரர் திருமணத்தை இறைவன் நிறுத்தும் காட்சியைக் காட்டும் கீழ்ப்பகுதியை அகலவாக்கில் மூன்றாகப் பிரித்து, முதற்பகுதியில் திருமண வீட்டின் சமையற்கூடத்தையும் திருமண அரங்கையும் கீழும் மேலுமாகக் காட்டி, இரண்டாம் பகுதியில் வழக்குமன்றைப் படம்பிடித்துள்ளனர். மூன்றாம் பகுதியில் முதியவராய் வந்த இறைவன் திருவருட்துறைக் கோயிலுக்குள் மறைவதும் அறக்கள அந்தணர்களும் சுந்தரரும் அவரைப் பின்தொடர்வதும் அருட்துறைக் கோயிலில் சுந்தரர் அமர்ந்து பாடுவதும் காட்டப்பட்டுள்ளன. - வளரும்

 


       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.