http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 136

இதழ் 136
[ ஆகஸ்ட் 2017 ]


இந்த இதழில்..
In this Issue..

Intensive, Pragmatic and Insitu study?
TEMPLES IN AND AROUND THIRUCHIRAPPALLI - 8
புள்ளமங்கை - திருவாலந்துறையார் கோயில் - 2
OLOGAMADEVI ISWARAM – THIRUVAIYARU - 2
உலகப் பார்வைக்கு உதயம் - 4
வெகுமக்கள் இலக்கியத்தில் தமிழ் இலக்கணம் - 1
இதழ் எண். 136 > கலையும் ஆய்வும்
புள்ளமங்கை - திருவாலந்துறையார் கோயில் - 2
ச. கமலக்கண்ணன்

கோட்டச் சிற்பங்கள்



தெற்கிலும் வடக்கிலும் 22 அடி 3 அங்குல அகலமுடைய முகமண்டப வெளிச்சுவரின் நடுப்பகுதியில் 7 அடி 10 அங்குல அகலமுள்ள சாலைப்பத்தி முன்னிழுக்கப்பட்டுச் சாலைப்பத்தியைத் தூணுக்குரிய அனைத்து உறுப்புகளையும் பெற்ற எண்முக அரைத்தூண்கள் அணைவு செய்ய, உருள் அரைத்தூண்களால் அணைக்கப்பட்ட கோட்டத்தில் இறைத்திருமேனித் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. பத்தி அணைவுத்தூண்களுக்கும் கோட்ட அணைவுத்தூண்களுக்கும் இடைப்பட்ட பகுதிகளில் அவ்வவ்விறைகளின் வழிபாட்டுக் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. உருள் அரைத்தூண்களுக்கு மேல் மகரதோரணம் அமைய, அதில் புராண நிகழ்வுகளும் ஆடல்களும் சிற்றுருவச் சிற்பங்களாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.



 





 



பிள்ளையார்



தாமரை இதழ்களையும் மணிச்சரங்களையும் கொண்டு நன்கு அலங்கரிக்கப்பட்ட குடையின்கீழ்த் தாமரைப் பீடத்தின்மீது காலில் சிலம்புடன் இலலிதாசனத்தில் அமர்ந்திருக்கும் பிள்ளையாரின் பின்புறம் திருவாசி அமைந்துள்ளது. தலையில் கரண்ட மகுடத்தையும் வலப்புறம் தந்தமின்றியும் இடப்புறம் உடைந்த தந்தத்தையும் கொண்டு, துதிக்கையில் மோதகத்தை ஏந்தியுள்ளார் பிள்ளையார். தோள்களில் கேயூரத்தையும் கைவளைகளையும் கொண்டுள்ள இவரது இடமுன்கை தொடைமீது இருத்தப்பட்டு, இடப்பின்கையில் தோகையுடன் கூடிய கரும்பையும் வலமுன்கையில் மோதகத்தையும், வலப்பின்கையில் உடைந்த தந்தத்தையும் கொண்டுள்ளார். பின்கைகள் இரண்டுமே கடக முத்திரையில் அமைந்துள்ளன. கழுத்தை முத்துமாலையும் சரப்பளியும் மார்பை வஸ்திர முப்புரிநூலும் வயிற்றை உதரபந்தமும் இடையை சிற்றாடையும் அழகு செய்கின்றன.



பிள்ளையாரின் குடைக்கு மேலே வானில் பறக்கும் கோலத்தில் இருக்கும் சூரியர் வலக்கையில் தாமரை மொட்டையும் இடக்கையைப் போற்றி முத்திரையாகவும் கொண்டுள்ளார். அதே கோலத்தில் இருக்கும் சந்திரர் இடக்கையில் ஒரு மலரையும் வலக்கையைப் போற்றி முத்திரையாகவும் கொண்டுள்ளார். இருவருமே அழகான தலையலங்காரத்துடன் நெற்றியில் வட்ட வடிவப் பதக்கத்துடன் கூடிய பட்டையை அணிந்திருக்கிறார்கள். இருவருமே கரண்ட மகுடத்துடன் முப்புரிநூலும் இடைக்கட்டும் கொண்டுள்ளனர்.



பிள்ளையாருக்கு மேற்கில் மேலடுக்கில் அலங்காரக் கொண்டையுடன் உள்ள ஒரு பூதம் சிரட்டைக் கின்னரி வாசித்துப் பாடிக்கொண்டிருக்கிறது. நெற்றியில் நெற்றிப்பட்டத்துடனும் இருசெவிகளிலும் பனையோலைக் குண்டலத்துடனும் கழுத்தில் சரப்பளியுடனும் வாயைத் திறந்து மெய்மறந்த நிலையில் பாடிக்கொண்டிருக்கும் இப்பூதத்தின் முப்புரிநூல் உபவீதமாகவும் தோள்களில் கேயூரத்தையும் கைகளில் வளைகளையும் கொண்டுள்ளது. 



மேலுள்ள பூதத்தின் பாடலையும் இசையையும் இரசித்தவாறு பிள்ளையாருக்குக் கவரி வீசிக்கொண்டு நடு அடுக்கில் இருக்கும் பூதத்தின் நெற்றியில் நெற்றிப்பட்டமும் வலச்செவியில் பனையோலைக் குண்டலமும் இடச்செவி வெறுமையாக நீண்டும் தலையலங்காரத்துடன் இருக்க, கழுத்தைச் சரப்பளியும் மார்பை அலங்கார முப்புரிநூலும் வயிற்றை உதரபந்தமும் இடையை சிற்றாடையும் இடக்கையை வளையும் அழகுசெய்ய, வலக்கையில் கடக முத்திரையில் கவரியைக் கொண்டு இடக்கையைப் போற்றி முத்திரையில் வைத்திருக்கிறது. 



கீழடுக்கில் இரண்டு பூதங்களில் ஒன்று பலாப்பழத்தைக் கத்தியால் அரிய, இன்னொன்று அதை வியப்பாகப் பார்க்க, ஒருவரைத் தன் செயலால் வியப்படைய வைத்த பெருமிதம் முகத்தில் மிளிர்கிறது. பழத்தை அரிபவரின் தலை நன்கு அலங்கரிக்கப்பட்டு நெற்றிப்பட்டத்துடன் வலச்செவி நீண்டு வெறுமையாக இருக்க, இடச்செவியில் பனையோலைக் குண்டலம். கழுத்தில் பதக்கமாலையையும் தோள்களில் கேயூரத்தையும் கொண்டு இலலிதாசனத்தில் அமர்ந்திருக்கும் இப்பூதத்தின் இடையில் சிற்றாடை. வியப்பவரின் கொண்டை முடித்துக் கட்டப்பட்டிருக்கிறது. நெற்றியில் நெற்றிப் பட்டத்தைக்கொண்டு, வலச்செவியில் பனையோலைக் குண்டலமும் இடச்செவி நீண்டு வெறுமையாகவும் இருக்கிறது. வலக்கை பழத்தை அரிபவரின் பின்புறம் மறைந்திருக்க, இடக்கையில் மோதகம் போன்ற ஓர் உருண்டை. மா அல்லது மாதுளை போன்ற பழமாகவும் இருக்கலாம்.



கிழக்கிலுள்ள மேலடுக்கில் மூக்கணாங்கயிற்றில் கட்டப்பட்டு முன்னோக்கி நகர மறுக்கும் எலியை விரட்டியவாறு இரு செவிகளிலும் பனையோலைக் குண்டலத்தையும் கழுத்தில் சரப்பளியையும் மார்பில் முப்புரிநூலையும் கொண்டுள்ள பூதம் காட்டப்பட்டுள்ளது. இதன் இடக்கை கடக முத்திரையில் கயிறைப் பிடித்துள்ளது. வலக்கை வழிகாட்டும் அமைப்பில் உள்ளது.



நடு அடுக்கில் இசையை இரசித்தவாறு இருக்கும் பூதம் காட்டப்பட்டுள்ளது. தலையலங்காரத்துடன் இடச்செவியில் பனையோலைக் குண்டலமும் வலச்செவி வெறுமையாகவும் இருக்க, கழுத்தில் காம்பு நீண்ட மலர் போன்ற பதக்கத்துடன் கூடிய ஓர் அணியையும் மார்பில் முப்புரிநூலையும் வயிற்றில் உதரபந்தத்தையும் இடது தோளில் கேயூரத்தையும் வலது கையில் வளைகளையும் கொண்டு போற்றி முத்திரையிலும் இடக்கையில் மோதகம் நிறைந்த பாத்திரத்தையும் வைத்திருக்கிறது. 



கீழடுக்கில் இரண்டு பூதங்களில் சடைமகுடத்துடனும் நெற்றிப்பட்டத்துடனும் தலையைச் சாய்த்திருக்கும் முன்னவர், பின்னால் இருப்பவருக்கு வலக்கையால் பிள்ளையாரைச் சுட்டு முத்திரையால் சுட்டிக் காட்டிக் கொண்டிருக்க, அவரது இடக்கையில் வாழைப்பழச் சீப்பு ஒன்றுள்ளது. இரு செவிகளிலும் பனையோலைக் குண்டலத்தையும் கழுத்தில் பதக்கம் வைத்த ஆரத்தையும் மார்பில் வஸ்திர முப்புரிநூலையும் வயிற்றில் உதரபந்தத்தையும் தோள்களில் கேயூரத்தையும் கால்களில் சிலம்பையும் கொண்டு லலிதாசனத்தில் அமர்ந்திருக்க, பின்னால் இருப்பவரும் அதேபோன்ற தலையலங்காரத்துடனும் நெற்றிப்பட்டத்துடனும் இலலிதாசனத்தில் அமர்ந்திருக்கிறார். வலச்செவியில் பனையோலைக் குண்டலத்தையும் இடச்செவியில் ஏதுமின்றியும் கழுத்தில் சவடியையும் முப்புரிநூலையும் கொண்டு கைகளில் வளைகளையும் கால்களில் சிலம்பையும் கொண்டிருக்க, இடக்கையில் மாம்பழம் எனக் கருதத்தக்க ஒரு பொருளை வைத்திருக்கிறார்.



மகரதோரணத்தில் கீழே இருபுறமும் பக்கத்திற்கொன்றாக முதுகில் வீரர்களைச் சுமந்துகொண்டிருக்கும் மகரங்களின் திறந்த வாய்க்குள்ளிருந்து வீரர்களைத் தாங்கிய நான்கு யாளிகள் வெளிப்பட்டு நிற்கின்றன. கடைசி யாளி தவிர்த்த மற்றவற்றின் முதுகில் வீரர்கள் காட்டப்படவில்லை. பின்புறம் மறைந்திருக்கலாம். மேலே திசைக்கொன்றாக இருக்கும் இரு மகரங்களின் திறந்த வாயிலிருந்தும் வீரரைச் சுமந்த ஒவ்வொரு யாளி வெளிப்பட்டு நிற்கின்றன. இந்த யாளிகளுக்குக் கீழே ஓரடுக்கு அரைவட்ட மலரலங்காரம் இடம்பெற்று, அதன் கீழ் அடுக்கில் ஒன்பது பூதங்கள் பல்வேறு முத்திரைகளுடன் ஆடல்நிலையில் இடம்பெற்றிருக்கின்றன. பூதங்களின் கீழே அரைவட்ட வடிவத்தில் சண்டேச அணுக்கிரகப் படலம் கண்ணுக்கு விருந்தாகிறது. தோளின் பின்புறமிருக்கும் லிங்கத்தைப் பின்வலக்கை தொட்டவாறு இருக்க, இடக்கை தொடைமீது உள்ளது. முன்கைகளில் கொன்றை மாலையுடன் அர்த்தபத்மாசனத்தில் சிவபெருமான் அமர்ந்திருக்க, அவருக்குப் பின்புறம் உமையும் எதிரில் கருடாசனத்தில் கொன்றை மாலையை ஏந்த ஏதுவாகச் சண்டேசரும் அமர்ந்துள்ளனர். மேற்புற யாளிகளுக்கு இடைப்பட்ட இடத்தில் ஒரு வட்டத்திற்குள் ஊர்த்துவஜாநு முதல்நிலையில் சிவபெருமான் இடம்பெற்றுள்ளார்.



(தொடரும்)

 


இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.