http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[180 Issues]
[1786 Articles]
Home About US Temples Facebook
Issue No. 142

இதழ் 142
[ ஆகஸ்ட் 2018 ]


இந்த இதழில்..
In this Issue..

கயிலைப் பயணம் - 4
அழகியசேம விண்ணகரம்
பத்தாளப்பேட்டைப் புதையல்
பாலகுமாரன் என்ற கிருஷ்ணன் இராமன்
இதழ் எண். 142 > கலைக்கோவன் பக்கம்
கயிலைப் பயணம் - 4
இரா.கலைக்கோவன், மு.நளினி
ஆடலரசிகள்

இறைவனின் முன்னால் தேவருலக மங்கையர் இருவர் அவிநயித்து ஆடுகின்றனர். பூச்சரங்களாலும் பல்வேறு அணி கலன்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ள தமிழம் கொண்டை கள் அவர்தம் கூந்தல் வளம் காட்ட, கழுத்தில் முத்துமாலைகள். முதலாமவர் தலைமுடியே தெரியாவண்ணம் நகை நிறைத்திருந் தாலும் இரண்டாமவர் அது போலல்லாது முடியழகும் காட்டுகிறார். அழகான, அளவான மார்பகங்களை ஸ்வர்ண வைகாக்ஷம் தன் பிடியில் இருத்த முயன்றாலும் ஆடலின் அமைப்பும் கைகளின் அசைவும் பிடிகொடுக்காமையை ஓவியம் உள்ளங்கைக் கனியாய்க் காட்டுகிறது. கைகளின் மேற்பகுதியில் கங்கணம். முழங்கையருகே முத்தாலான கடக வளைகள். மணிக்கட்டருகே அடுக்கிய வளைகள். செவிகளில் குண்டலங்கள். இடை ஆடைமீது அரைப்பட்டிகை, மேகலை, குறங்குசெறி. கணுக்காலருகே சதங்கை, தாள்செறி.



மண்டல நிலையில் கால்களை ஸ்வஸ்திகமாக்கி, இறைப் பார்வையாய் அவிநயித்து ஆடும் அவர்தம் மடக்கி உயர்த்திய வலக்கைகளும் மடக்கித் தாழ நெகிழ்த்திய இடக்கைகளும் அல பத்மம் காட்டுகின்றன. ஸ்வஸ்திகப் பாதங்களுள் வலப்பாதம் பார்சுவமாக, இடப்பாதம் அக்ரதலசஞ்சாரத்தில் உள்ளது. இருவருமே உதரபந்தம் அணிந்துள்ளனர். இளமைத் தோற்ற மும் மலர்ந்த விழிகளும் இளநகை பூத்த இளகிய இதழ்களும் அவர்தம் ஆடலுக்கு மேலும் எழில் கூட்டுமாறு அமைந்துள்ளன.

தோலிசைக் கலைஞர்கள்

ஆடுவார் கீழே, அவர்தம் இடப்புறத்தே, இந்த அவிநயக் கூத்திற்குத் தோலிசை தருமாறு இரண்டு பூதங்கள் நிற்கின்றன. அடுத்தடுத்து நிற்கும் அவ்விரண்டனுள், வலப்பூதம் தலையை வலப்புறம் சாய்த்துப் பார்வையையும் கடைக்கண் நோக்காய் வலப்புறம் வீழ்த்த, விரிசடையுடனுள்ள இடப்பூதம் தலை நிமிர்த்தித் தன் தோளிலிருந்து தொங்கும் இடக்கை எனும் இசைக்கருவியை ஆவேசமாக வலக்கையால் முழக்குகிறது. அதன் இடதுகை இசைக்கருவியின் கயிற்றுப் பின்னலைப் பிடித்துள்ளது. வலப்பூதத்தின் தோளிலிருந்து தொங்கும் இரு முக முழவு அளவில் பெரியதாய் நடுவில் பருத்து, இரு ஓரத்தும் சிறுத்துள்ளது. அதைத் தன் இருகைகளால் முழக்கும் பூதம் நெற்றிப்பட்டத்தால் இறுக்கப்பட்டிருக்கும் தலைப்பாகையும் பனையோலைக் குண்டலங்களும் கண்டிகையும் கங்கணமும் மார்பில் சட்டையும் இடுப்பில் சிற்றாடையும் இடைக்கட்டும் கொண்டுள்ளது. இடைக்கட்டின் முடிச்சுகள் இடப்புறம் காட்டப்பட்டுள்ளன. இரு பூதங்களுமே நெறித்த புருவங்களும் விழித்த நோக்கும் கொண்டுள்ளன.





சுந்தரரும் சேரமானும்

அவற்றின் வலப்புறத்தே, சுந்தரரும் சேரமான்பெருமாளும் கூப்பிய கைகளுடன் இறைஇணையை நோக்கியவாறு அமர்ந் துள்ளனர். சுந்தரர் கால்களைக் குறுக்கீடு செய்து அமர்ந்துள் ளார். இடையில் சிற்றாடை. அவருடைய தமிழம் கொண்டை யில் பூச்சரங்கள்; அணிகலன்கள். இளந்தாடியும் மீசையுமாய்க் காணப்படும் அவர் கழுத்தில் சரப்பளி, முத்தாரம். கைகளில் வளைகள். சுந்தரரின் பின்னால் செண்டுதாளங்களை ஏந்தி, இரு கால்களையும் முழங்கலளவில் மடக்கி நீட்டியவாறு அமர்ந் திருக்கும் சேரமான் பெருமாளும் சிற்றாடையே அணிந்துள்ளார். அவரது தமிழம் கொண்டையிலும் பூச்சரங்கள், அணிகலன் கள். கழுத்தில் ருத்திராக்க, முத்துமாலைகள்.



நந்தீசன்

இவர்களின் பின் குடமுழவு வாசிக்கும் நந்தீசன். பெரு முத்துக்களும் மணிக்கற்களும் தைக்கப்பெற்ற விலங்குமுகக் கைப்பிடி கொண்ட அலங்கார விரிப்பின் மேல் இரு கால்களை யும் குறுக்கீடு செய்து அமர்ந்துள்ள அவர் கால்களுக்கிடையில் செவ்வண்ணத்தில் குடமுழவு. கங்கணம், வளைகள், மோதிரங் கள் அணிந்துள்ள அவரது நான்கு கைகளுள் முன்னிரு கைகள் முழவு வாசிப்பில் முனைந்திருக்கப் பின்னிரு கைகள் போற்றியி லும் வியப்பிலும் உயர்ந்துள்ளன. நெற்றிப்பட்ட முகப்புகள் சூழ்ச் சடைமகுடராய்த் திகழும் அவரது அகன்ற முகத்தில் பரவசம். வாய்க்கடையில் கோரைப்பற்கள் இருந்தபோதும் இதழ்களில் அச்சுறுத்தாத இளநகை. விழிகள் நன்கு விரிந்து இசையை அநுபவிக்க, கடைக்கண் பார்வை சிந்தும் அவர் கழுத்தில் சரப்பளி. மகுடம் மீறித் தோள்களில் பரவியுள்ள சடைக்கற்றைகளில் பூக்கள். தோள்களில் ஸ்கந்தமாலை. முப்புரிநூல் பாம்பு போல் வளைந்து நெளிந்து இறங்கி வலப் புறம் ஏறுகிறது. கழுத்திலிருந்து மார்பளவில் காட்டப்பட் டிருக்கும் செவ்வண்ணப்பூச்சு கைகளின் மேற்பகுதிகளையும் தழுவியிருப்பதால், அதைச் சட்டையாகக் கொள்ளலாம்.

வாணன், கண்ணப்பர், கலைஞர்கள்

அவருக்குப் பின்னால் கீழ்ப்பகுதியில் நான்கு பூதங்களும் மேற்பகுதியில் வாணனும் வேடர் கண்ணப்பரும் உள்ளனர். இடுப்புவரை தெரியும் நீள்வெறுஞ் செவியரான வாணனின் இருகைகளும் உயர்ந்து பூத்தூவல் மெய்ப்பாட்டில் உள்ளன. கருஞ்சாம்பல் வண்ணத்திலுள்ள வேடரின் இடக்கை இறைவ னைப் போற்ற, வலக்கை தோளில் சாத்தியுள்ள வில்லையும் அம்பையும் பிடித்துள்ளது. வேட்டையில் பெற்ற பறவையை யும் விலங்கையும் கயிற்றால் பிணைத்துத் தோள்களில் தொங்க விட்டவராய்ப் பனையோலைக் குண்டலங்கள், பதக்கம் வைத்த ஆரம், வளைகளுடன் தாடியும் மீசையுமாய்க் காட்சிதரும் அவரது இடுப்பில் சிவப்பு வண்ண ஆடை. கருத்த தலைமுடி யைச் சுற்றிப் பொன்னிறப் பட்டை முடியப்பட்டுள்ளது. இடுப்பில் கத்தி.

இசைக்கலைஞர்களாயுள்ள பூதங்கள் நான்கனுள் மூன்று ஒன்றன் பின் ஒன்றாய் நிற்க, நான்காவது, முதலிரண்டின் பின் புல்லாங்குழல் இசைத்தவாறு முகம் காட்டுகிறது. படியச் சீவப்பட்ட தலைமுடியும் முகத்தை வலப்புறம் சாய்த்து இடப்புறம் ஓட்டிய கடைக்கண் பார்வையுமாய்க் கைகள் குழல் துளைகளில் நர்த்தனமிடக் காட்சிதரும் அதன் நீள்செவிகள் வெறுமையாக அமைய, கைகளில் வளைகள்.

கீழுள்ளவற்றில், சங்கூதும் முதற்பூதத்தின் சீவப்பட்ட தலைமுடி முதுகுவரை பரந்துள்ளது. சங்கை இரு கைகளாலும் பிடித்து ஊதும் அதன் கன்னங்கள் செய்முறைக்கேற்ப வீக்க முற்றுள்ளன. பனையோலைக் குண்டலங்கள், மணிச்சரங்கள், கங்கணங்கள், வளைகள், முப்புரிநூல், மேகலை, அரைப்பட் டிகை இருத்தும் சிற்றாடை, இடைக்கட்டு, தண்டை என அலங்கரித்துக் கொண்டுள்ள அதன் பின் சிவப்புச் சட்டையும் கோவணஆடையும் அணிந்துள்ள பூதம் தலையை வலப்புறம் சாய்த்தவாறு நின்றுள்ளது. பனையோலைக் குண்டலங்கள், கங்கணங்கள், வளைகள், கோவணஆடை, சதங்கைகள், சுடர் முடி கொண்டுள்ள அதன் பாதங்கள் பார்சுவமாக உள்ளன. பார்வையில் வியப்பும் சற்றே விரிந்த இதழ்களில் இளநகையும் கொண்டுள்ள அதன் கைகள் இருமுக முழவை இசைக்கின்றன.

கோவணஆடையுடன் உள்ள மூன்றாவது பூதம், தலையை நன்கு பின்னுக்குச் சாய்த்தவாறு வலக் கடைக்கண் நோக்கில் களி துள்ள இலைத்தாளம் வாசிக்கிறது. பனையோலைக் குண்டலங்கள், சவடி, முப்புரிநூல், வளைகள், தாள்செறி அணிந்துள்ள அதன் தலைமுடி நன்கு சீவப்பட்டுள்ளது.

பாடகர்கள்

முழவருக்கும் அவர் பின் காணப்படும் அறுவருக்கும் மேலே உள்ள பகுதியில் ஒரு தெற்றியின் மீது ஒருவர் பின் ஒருவராக ஏழு கலைஞர்கள் கால்களைக் குறுக்கீடு செய்து, அமர்ந்துள்ளனர். மூன்றாமவரை அடுத்துத் தலை மட்டுமே தெரியும் நிலையில் ஒருவர் உள்ளார். இவ்வெண்மருள் முதல் ஐவர் ஆடவர். மற்ற மூவரும் பெண்கள். இவர்களுள் நால்வர் இளம்பச்சை வண்ணத்திலும் மூவர் இளமஞ்சள் நிறத்திலும் ஒருவர் சிவப்பு வண்ணத்திலும் காட்டப்பட்டுள்ளனர். ஆண்கள் கோவணஆடையும் பெண்கள் கணுக்கால்வரை யிலான ஆடையும் அணிந்துள்ளனர்.

உருத்திராக்கமாலையுடனுள்ள ஆண்களுள் முதலிருவர் கண்டிகையும் கொள்ள, மூன்றாமவர் சவடி பெற்றுள்ளார். ஐந்தாமவர் இரட்டைக் கண்டிகையுடன் காட்சிதருகிறார். முதலிருவர் கைகளில் மட்டுமே வளைகள். முதலாமவர் செண்டுதாளம் இசைக்க, மூன்றாமவர் உடுக்கை வாசிக்கிறார். இரண்டாமவரின் வலக்கை தாளக் கணக்கிலிருக்க, இடக்கை போற்றுகிறது. ஐந்தாமவர் தாழ்த்திய வலக்கையிலும் உயர்த்திய இடக்கையிலும் கொண்டிருக்கும் வளையங்கள் இசைதருவதற் காகலாம்.

வளைகள் அணிந்துள்ள பெண்கள் மூவருள் முதலிருவர் சரப்பளி கொள்ள, சிவப்புப் பட்டைகளிட்ட இடுப்பாடை அணிந்து இறுதியிலிருப்பவர் சவடி அணிந்துள்ளார். முதலாம வர் தண்டையும் இறுதியிலிருப்பவர் தாள்செறியும் கொள்ள, பின்னிருவர் செண்டுதாளம் வாசிக்கின்றனர். முதற் பெண் ணின் வலக்கை கீழ்நோக்கிய பதாகமாகவும் இடக்கை போற்றும் மெய்ப்பாட்டிலும் உள்ளன. அவரது முதுகு தழுவும் கூந்தல் முடிச்சில் பூச்சரங்கள்.

தேவர்கள்

மேலும் கீழுமென இரு நிலைகளில் காட்டப்பட்டிருக்கும் கலைஞர்களுக்குப் பின்னால் தேவர்கள் எழுவர் நிற்கின்றனர். அவர்களுக்குத் தலைமையேற்று நான்முகனும் அவரை அடுத் துத் திருமாலும் மூன்றாவதாக அடையாளப்படுத்த முடியாத தேவர் ஒருவரும் நான்காவதாகத் தும்புருவும் நிற்க, அவர்களுக்கு இடைப்பட்டவர்களாய்ச் சற்றே பின்னிருக்குமாறு முகமும் இடையும் கால்களும் தெரியும் நிலையில் தேவேந்திரன், அக்னி, மற்றொரு தேவர் உள்ளனர். சிவபெருமானை வணங்கிய நிலை யில் உள்ள எழுவரும் அலங்கார முப்புரிநூலும் இடையாடை யும் கணுக்கால்வரை நீளும் முடிச்சுத்தொங்கல்கள் பெற்ற இடைக்கட்டும் வளைகளும் தண்டைகளும் பெற்றுள்ளனர்.

சடைகளை மகுடமாக்கி வெண்தாடியுடன் முதுமைப்பரு வத்தில் காட்சிதரும் நான்முகனின் இடமேற்கையில் குண்டிகை. நெற்றிப்பட்டம், சிறுகுண்டலங்கள், கங்கணம், சரப்பளி அணிந் துள்ள அவரது அரைப்பட்டிகையில் புலிமுகக்கச்சு. நெற்றிப் பட்டம் சூழ்க் கரண்டமகுடமும் முப்புரிநூலும் அணிந்துள்ள சிவந்த மேனியரான இரண்டாமவர் தேவேந்திரனாகலாம். அடுத் துள்ள விஷ்ணு தலைச்சக்கரம் பெற்ற கிரீடமகுடத்துடன் மகர குண்டலங்கள், சற்றே நீளமான ஆரம், முப்புரிநூல், உதரபந்தம் அணிந்து இடப் பின் கையில் சங்கேந்தி நான்முகன் போலவே இளம்பச்சை வண்ணத்தில் காட்சிதருகிறார். அவருக்குப் பின் னிருப்பவராய்த் தீச்சுடர்கள் சூழ்க் கரண்டமகுடத்துடன், சரப் பளி, அரைக்கச்சுப் பெற்று அக்னியும் அவரையடுத்துத் தலைச் சக்கரம் பெற்ற கிரீடமகுடம், சரப்பளி, முப்புரிநூல் அணிந்து இளம்பச்சை வண்ணராய்த் தேவர் ஒருவரும் கரண்டமகுடத் துடன் மஞ்சள் வண்ணராய் மற்றொரு தேவரும் இறைவனை வணங்க, இறுதியில் இருக்கும் வெள்ளை நிறத்தவரான தும்புரு முத்துச்சரப்பளி, முப்புரிநூல் கொண்டு இடையில் பட்டுச் சிற் றாடையுடன் இடக்கணுக்காலில் தண்டையும் பாதங்களில் தாள் செறியும் அணிந்தவராய் சிவபெருமானை தொழுது நிற்கிறார்.

பதினொரு ருத்திரர்கள்

இவர்களுக்கு மேலிருக்குமாறு மேகங்களின் பின்னணி யில் இருபத்து மூன்று ஆடவர்களைக் காணமுடிகிறது. இட மிருந்து வலமாக நிற்கும் அவர்களில், இடப்புறமுள்ள வெண் ணிற மேனியர் பதினொருவரும் ஏகாதச ருத்திரர்கள். இரண்டு வரிசைகளில் சிவபெருமானை வணங்கிய கையர்களாய் முன் பின்னாக நிற்கும் அவர்கள் அனைவருமே நெற்றிப்பட்டம் அணைத்த சடைமகுடமும் நெற்றிக்கண்ணும் குண்டலங்களும் முப்புரிநூலும் உதரபந்தமும் இடைக்கட்டுடனான சிற்றாடை யும் கங்கணங்களும் கைவளைகளும் பெற்றுள்ளனர். அவர்க ளுள் சிலர் இடையில் மேற்கட்டாகச் சிறுத்தைப் புலித்தோலும் தலையில் அழகிய இளம்பிறையும் மண்டையோடும் கொள்ள, பலர் சவடியும் சிலர் சரப்பளியும் சிலர் கூடுதலாக ருத்திராக்க, முத்துமாலைகளும் கொண்டுள்ளனர். சில கங்கணங்கள் நாக கங்கணங்களாய்க் கண்களைக் கவர, பதினொருவரில் சிலர் முகங்கள் அற்புத அழகுடன் கருத்தில் நிறைகின்றன. அனைவர் பார்வையும் இறைவனை நோக்கி அமைய, ஒருவர் மட்டும் கனவுலகத்தில் இருப்பவர் போல் பத்திமையில் மேல் நோக்கிச் செருகிய கண்களுடன் காட்சிதருகிறார். ஒருவர் இளநகை சிந்த, மற்றொருவர் இதழ் விரித்தே முறுவலிப்பதைக் காணமுடிகிறது.

பன்னிரு ஆதித்தர்கள்

பதினொரு ருத்திரர்களின் பின்னால் செவ்வண்ணத்தி லுள்ள பன்னிரு ஆதித்தர்களும் வணங்கிய கைகளுடன் தீக் கங்குகள் தழுவிய மகுடம், சரப்பளி, முப்புரிநூல், உதரபந்தம், கங்கணங்கள், வளைகள், இடைக்கட்டுடனான சிற்றாடை அணிந்து நிற்க, அவர்களுக்குப் பின்னிருக்குமாறு உள்ள தனிப் பகுதியில் இரண்டு முனிவர்கள் அமர்ந்துள்ளனர். அவர்களுள் பின்னிருக்கும் இளைஞர் முகத்தளவினராய்ச் சடைமகுடத் துடன் காட்சிதர, சடைமகுடமும் வெண்தாடியுமாய் முப்புரி நூலுடன் சம்மணமிட்டு முன்னிருப்பவர் வீணை வாசிக்கிறார். இவரை நாரதராகக் கருதலாம். இவ்விருவர் பின் இடக்கையைப் போற்றியில் அமைத்து வலக்கையை மார்பருகே கொண்டமர்ந் துள்ள இளைஞர் சடைகளைத் தலைப்பாகையென மாறு பட்ட அமைப்பில் முடிந்துள்ளார். அவரது கழுத்தில் சரப்பளி.

பூத்தூவும் பெண்கள்

சிவபெருமானுக்குப் பின்னால் மேலுள்ள பகுதியில் மேகங் களுக்கிடையில் மூன்று பெண்கள் இடுப்பளவினராய்க் காணப்படுகின்றனர். இளமஞ்சள் நிறத்தினரான முதற் பெண் கவர்ந்திழுக்கும் முகத்தினராய் நீள்செவிகளில் செவிப்பூக்க ளுடன் அழகிய கருங்கொண்டை முழுவதும் பூச்சரங்கள் மணக்க, பட்டையில்லா மார்புக்கச்சுடன், அணிகள் (கழுத் தணி, கங்கணம், கடகவளை, கைவளைகள்) அனைத்தும் முத்துச் சரங்களால் அமைய முத்தழகியாய்க் காட்சிதருகிறார். இடுப் பில் மேகலையுடன் பட்டாடையும் கைகளில் மலர்ச்சரங்க ளும் கொண்டுள்ள இப்பேரழகியின் கண்கள் காண்பாரைக் காந்தமென ஈர்க்கின்றன. அவர் பின் நிற்கும் செவ்வண்ண மங்கை, தன் தமிழம் கொண்டையைப் பூக்களும் அணிகலன் களும் அழகுசெய்யக் கழுத்தில் சரப்பளியுடன், கங்கணங்கள், வளைகள், பதக்கம் வைத்த அரைக்கச்சு, முத்துச் சரங்களாலான மேகலை, பட்டாடை அணிந்து, இரு கைகளிலும் பூக்களை ஏந்திக் காட்சிதர, அவர் பின்னிருக்குமாறு மிகவும் சிதைந்த நிலையில் மற்றொரு பெண்ணின் முகத்தைக் காணமுடிகிறது. அவர்களுக்கு முன்னால் காட்டப்பட்டுள்ள மரத்தின் மேற்புறக் கிளைகளில் நான்கு பறவைகள் அமர்ந்துள்ளன.











மாளிகைக்காட்சி

இறைவனும் இறைவியும் வீற்றிருந்து தேவர்களுடனும் கலைஞர்களுடனும் ஆடல் காணும் கயிலைக் காட்சிக்கு மேற்பட்ட நான்காம் பத்தி பெருவாயிலும் ஈரடுக்கு மதிலும் பெற்ற மாளிகை ஒன்றின் படப்பிடிப்பாக அமைந்துள்ளது. சிதைவின் காரணமாக இப்பத்தியின் பெரும்பகுதி அழிந்து விட்டபோதும் மதில் சுவரை அணைத்திருக்கும் அனைத்து உறுப்புகளும் பெற்ற உருளைத் தூண்களையும் அத்தூண் களுக்கு இடைப்பட்டுச் சுவரைத் தழுவியிருக்கும் பல்வேறு விதமான தோரணத்தொங்கல்களையும் சில இடங்களிலேனும் பார்க்கமுடிகிறது. வாயிலை ஒட்டியுள்ள மதில் சுவரின் இரு புறத்தும் அலங்கரிப்புச் சிறப்பாக உள்ளது. இப்பகுதி உபானம், பத்மவரி, உருள்குமுதம் பெற்ற துணைத்தளத்தின் மீது ஒரு பக்கக் கதவு அடைக்கப்பெற்ற நெடும் வாயிலைக் கொண்டுள் ளது. இப்பகுதியின் மேலுள்ள கபோதம் மூன்று நிலைகளில் முன்னிழுக்கப்பட்டுள்ளது. வாயிலின் பின்னுள்ள மாளிகை யின் உப்பரிகை சிதைந்த நிலையிலிருக்க, வாயிலை ஒட்டியுள்ள கபோதத்தின் தலைப்பில் முத்துக்கள் அடுக்கப் பெற்ற வளை வுடனான பெருங்கூட்டைக் காணமுடிகிறது.

முடிவுரை

தமிழ்நாட்டுச் சோழர் கோயில்கள் சிலவற்றில் கயிலாயக் காட்சிகளைச் சிற்பங்களாகப் பார்க்கமுடிந்தாலும் தஞ்சாவூர் இராஜராஜீசுவரச் சாந்தார நாழியில் சுந்தரர் வரலாற்றின் உச்சக் காட்சியாக விளைந்திருக்கும் இந்தக் கயிலைக் காட்சி போல் விரிவானதும் கலைஞர்கள், தேவர்கள், அடியவர்கள் எனக் கயிலாயத்தார் அனைவரையும் ஒருங்கிணையக் காட்டுவது மான படிப்பிடிப்பு எந்தக் காலத்தும் எந்த அரசு மரபு சார்ந்தும் தோன்றாமை ஒன்றே இதன் சிறப்பை உணர்த்தப் போதுமான தாகும். இராஜராஜர் கருதியதும் அதைத்தான். அனைத்து விதங்களிலும் தனித்துவம் பெற்று விளங்கிய பெருமகன் என்ப தால் நட்பின் பெருமையை இறைப்பற்றின் விளைபயனைக் காட்ட இந்தக் காட்சியைக் கருவுயிர்த்தார் இராஜராஜர்.

இதில் இடம்பெற்றுள்ள சுந்தரர், சேரமான், கண்ணப்பர் எனும் மூன்று பத்திமையாளர்களுமே பங்களிப்பில் பிற அடியவர்களிடமிருந்து தனித்து நிற்பவர்கள். 63 நாயன்மார் களுமே இறைவனைச் சேரும் இதயம் கொண்டவர்கள், ஈடு இணையற்ற பத்திமையாளர்கள் என்பதை நன்கறிந்திருந்த போதும் அவர்களுள் மூவரை மட்டுமே இங்குக் காட்சிப்படுத்த இராஜராஜர் எண்ணம் கொண்டமைக்குக் காரணம் உண்டு. இறைவன் கண்களில் குருதி கண்ட கண்ணப்பர் அடைந்த துன்பங்களும் அக்குருதி நிறுத்தத் தம் கண்களையே அகழ்ந்து இட்ட அவரது பேரன்பும் இராஜராஜரை உருக்கி, அவர் நெஞ்சில் நிறைந்திருந்தமையால்தான் இராஜராஜீசுவரத்து இராஜராஜன் திருவாயிலின் வடக்குச் சுவர் முழுவதும் கண்ணப்பர் வரலாற்றைச் சிற்பத்தொகுதிகளாக்கிக் காலகாலத் திற்கும் அவரை வாழ வைத்திருக்கிறார் இராஜராஜர். ‘என் அன்புடைத் தோன்றல்’ என்று இறைவனாலேயே விளிக்கப் பெற்று, இடமிருக்கும் உமைக்கு இணையாகத் தம் வலமிருக்கு மாறு இறைவனாலேயே அருகிருக்க அழைக்கப்பெற்ற கண்ணப்பரின் நிகரற்ற இந்த இறையன்பே கயிலாயக் காட்சியிலும் அவருக்கு இடம்பிடித்துத் தந்துள்ளது.

சேரமானும் சுந்தரரும் தோழமையால் இங்கு இடம்பெற்ற னர் என்றாலும், சுந்தரர் முதன்மை பெற அவர் உருவாக்கிய திருத்தொண்டத்தொகை எனும் அரிய வரலாற்றுத் தொகுப்பே தலையாய காரணம் எனலாம். சுந்தரர் அதை உருவாக்க எத்தகு முயற்சிகளை மேற்கொண்டார் என்பதறியச் சான்றுகளேதும் இல்லையெனினும், அதன் அருமையை, உயர்வை, தனித்து வத்தை அதன் வழி நூல்களான திருத்தொண்டர் திருஅந்தாதி யும் திருத்தொண்டர் புராணமும் தெற்றெனப் புலப்படுத்து கின்றன. இந்தியாவின் வேறெந்த சமயத்திற்கும் கிடைக்காத பெருமைஇது.

சுந்தரர் வரலாற்றை இராஜராஜீசுவர அகச்சுவரில் இடம் பெறச் செய்ததன் வழி இறைப்பற்று, தோழமை, வரலாற்றுப் பதிவு எனும் மூன்றிலும் தமக்கிருந்த அணுக்கமான ஈடு பாட்டை இராஜராஜர் மிக மென்மையாக அதே சமயம் மிக உறுதியாக வெளிப்படுத்தியிருப்பதாகவே கருதத் தோன்று கிறது. இராஜராஜர் யார் என்ற ஆளுமைக் கேள்வியோடு வரலாற்றுப் பக்கங்களை அணுகுவார்க்கு அவர் எடுப்பித்த கோயிலே விடையிறுக்கும் என்றாலும், அவர் மெய்க்கீர்த்தியும் அவர் காலக் கல்வெட்டுகளும் வடிவம் காட்டும் என்றாலும், இந்த அகச்சுவர் ஓவியங்களும் அவர் பண்பு காட்டி, மாண்பு விளக்கி, அவர் உள்ளத்தில் உயிர்ப்புடன் விளங்கிய நினைவுப் பதிவுகளையும் எண்ண விளைச்சல்களையும் கனவுக் கண்ணோட்டங்களையும் கண்முன் நிறுத்தும் என்பதற்கு வாணன் வந்து வழி தந்த வரலாறே சான்றாகும்.
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.