http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 142

இதழ் 142
[ ஆகஸ்ட் 2018 ]


இந்த இதழில்..
In this Issue..

கயிலைப் பயணம் - 4
அழகியசேம விண்ணகரம்
பத்தாளப்பேட்டைப் புதையல்
பாலகுமாரன் என்ற கிருஷ்ணன் இராமன்
இதழ் எண். 142 > பயணப்பட்டோம்
பாலகுமாரன் என்ற கிருஷ்ணன் இராமன்
நீலன்
வருடம் 2005. இறுதி மாதத்தில் ஒருநாள். நாள் நினைவில்லை. ஆதவன் உலாத்தொடங்கிச் சில மணி நேரங்கள் ஆகிவிட்ட காலைநேரம். வீட்டின் அழைப்புமணி அழைக்கத் தொடங்கியது. குடந்தையின் நகர எல்லையில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் உள்ள இரண்டாம் தளத்தில் உள்ள என் வீட்டின் கதவைத் திறந்தால் ஆருயிர் நண்பர் சீதாராமன் காட்சிதந்தார்.

"சீக்கிரம் கீழே இறங்கி வாருங்கள். உங்களைக் காண ஒரு வி.ஐ.பி வந்திருக்கிறார். அவருடன் பட்டீசுவரம் செல்லவேண்டும்" என்று சீதாராமன் கூறியவுடன் வேறு உடைகளை மாற்றிக்கொண்டு பரபரப்புடன் கீழே இறங்கி வந்தேன். வீட்டு வளாகம் முன்பாக ஒரு வெண்ணிற டொயோட்டா கார். அதனுள்ளே குங்குமப் பொட்டுடன் வெண்தாடியும் வெண்ணிற உடையுடனும் ஒரு சிரித்த முகம்.

"வணக்கம்! நான் தான் பாலகுமாரன்! பத்மநாபன் வாருங்கள். உள்ளே ஏறுங்கள்" என்று பாலகுமாரன் கூறியவுடன் எனக்கு இன்ப அதிர்ச்சி.

அறிமுகம் என்பது எளிய நிலையில் உள்ளோர் புகழ்பெற்றவரிடம் தன்னை இன்னார் என்று அறிமுகம் செய்துகொள்வது இயற்கை. இல்லையெனில் மூன்றாம் நபர் ஒருவர் இவர் இன்னார் என்று புகழ்பெற்றவரிடம் அறிமுகம் செய்துவைப்பது ஒரு நடைமுறை. ஆனால் இங்குப் புகழ்பெற்ற பாலகுமாரனோ நான் தான் பாலகுமாரன் என்று தன்னை என்னிடம் அறிமுகம் செய்துகொள்வது என்னே பண்பு. எத்தனை நபர்களுக்கு வரும் இது? இதுதான் அடக்கம் என்பதோ?

சீத்தாராமன் ஏற்கனவே பாலகுமாரன் சாரிடம் என்னைப் பற்றிக் கூறியிருக்கவேண்டும் என்று நினைத்து "வணக்கம் சார்" என்று பதில் உரைத்து அவருடன் பக்கத்தில் அமர்ந்து கொண்டேன். அப்பொழுது அவர் "உடையார்" நாவல் எழுதி அதைப் பூர்த்தி செய்யும் நேரம். பட்டீசுவரம் பக்கத்தில் உள்ள "பஞ்சவன் மாதேவி ஈசுவரம்", உடையாளூர் "பால் குளத்தி அம்மன் கோயில்" இவைகளைப் பார்த்துவிட்டு தஞ்சைப் பெரியகோயில் சென்றோம். வழியெல்லாம் சோழர்களைப் பற்றிய பேச்சுதான். பெரியகோயில் அடைந்தவுடன் காரிலிருந்து துள்ளிக் குதிக்காத குறையாய் முகமெல்லாம் மலர்ச்சியாய் உதவியாளருடன் கோயிலை வலம் வரத்தொடங்கினார்.

"நான் சோழ தேசத்தவன். ஒவ்வொரு முறையும் இங்கு வரும்பொழுது என் மனம் என்னிடம் இல்லை. காலம் கடந்து செல்கிறேன். இங்கு நான் ஜன்மஜன்மமாய் வந்திருக்கிறேன். அதோ இராஜராஜசோழன் சொல்வது கேட்கிறது. இதோ இங்குதான் "நாம் கொடுத்தனவும் நம் அக்கன் கொடுத்தனவும் நம் பெண்டுகள் கொடுத்தனவும் மற்றும் கொடுப்பார் கொடுத்தனவும்" என்ற கல்வெட்டு உள்ளது என்று அபிஷேக நீர் வெளியே வரும் கோமுகம் மேலே ஏறிச் சென்று கல்வெட்டைத் தடவித் தடவிக் கொண்டிருந்தார். அவருடைய செய்கைகளை எல்லாம் பிரமிப்பாய் உணர்ந்தேன். அப்பொழுதே அவர் எழுத்தாளர் பாலகுமாரன் என்ற நிலையில் இல்லை. ஏதோ சோழநாட்டுப் பெரிய அதிகாரிபோல் அங்கும் இங்குமாய் ஆணையிட்டுக் கொண்டு உலவிய காட்சிபோல் இருந்தது. மதியம் யாகப்பாவில் சாப்பிட்டுவிட்டு குடவாயில் பாலசுப்ரமணியனைப் பார்க்க சரசுவதி மகால் சென்றோம். குடவாயிலிடம் அடுக்கடுக்காய்க் கேள்விகள், சந்தேகங்கள் பாலகுமாரனால் எழுப்பப்பட்டன. விடைகளும் விளக்கங்களும் பெறப்பட்டன. பின் கீழவாசல் அருகேயுள்ள ஒரு காளிகோயிலுக்குச் சென்றோம். அதுதான் விஜயாலயனின் "நிசும்பசூதனி" கோயில் என்றார். என் மனம் ஒத்துக்கொள்ளவில்லை.

நான் இரா. கலைக்கோவனின் மாணாக்கர்களில் ஒருவன் என்பது பாலகுமாரனுக்குத் தெரியும். முதல் சந்திப்பிலேயே வாதம் புரியவேண்டாம் என்று மௌனமாய் இருந்துவிட்டேன்.

பின் மாலை மங்கிய நேரம். குடந்தை திரும்பத் தயாரானோம். இதுதான் பாலகுமாரனுடன் எனக்கு ஏற்பட்ட நட்பின் முதல்நாள் அனுபவம். ஆரம்ப காலகட்டத்தில் சார், சார் என்று என்னை அழைத்தவர், பின் 'பத்மநாபா' என்று அழைக்கக்கூடிய அளவிற்கு நட்பு இறுகியது. இந்நட்பு பாலகுமாரன் அவர்கள் என்னுடன் நேரிடையாகக் கைபேசியில் தொடர்பு கொண்டு தன்னுடைய நண்பர்களுக்காகத் திருக்கருகாவூர் கோயில் அம்மையின் எண்ணெய்ப் பிரசாதம் பெற்றுத்தருமாறு கேட்டுக் கொள்ளும் அளவிற்கு வளர்ந்தது. நானும் பலமுறை இப்பிரசாதங்களைத் தபாலில் அனுப்பியுள்ளேன். ஒவ்வொரு முறையும் பிரசாதம் பெற்றவுடன் என்னைத் தொடர்புகொண்டு நன்றி சொல்லத் தவறுவதில்லை. இது அவருடைய வழக்கம்.

ஒவ்வொரு முறையும் குடந்தை வரும்பொழுது அவரது அழைப்பு நேரிடையாக வரும் அல்லது சீதாராமன் மூலமாக வரும். சீதாராமனின் ஆவேசப் பணியின் காரணமாகச் சிலமுறை எங்களுடன் அவர் வருவதற்கு இயலாமல் போய்விடும். நான் அப்போது இந்து சமய அறநிலையத் துறையில் பணிபுரிந்து கொண்டிருந்தமையால் பாலகுமாரன் அவர்கள் காண விரும்பிய கோயில்களில் அவர் விரைவில் சென்று தரிசனம் செய்து வரவும் காலதாமதமாகச் செல்லும்போது கோயில் பூட்டப்படாமல் திறந்து வைக்கவும் எளிதாய் இருந்தது.

ஒருமுறை திருவீழிமிழலை கோயிலுக்குச் செல்லும்போது இராஜேந்திரன் மகன் இராஜாதிராஜ சோழனின் அணுக்கி 'பட்டாலி நங்கை' என்பவள் முதல் இராஜேந்திரனின் அணுக்கி பரவை என்பவள் திருவாரூர் கோயிலுக்குப் பொன் வேய்ந்ததுபோல் இவள் இக்கோயிலுக்குப் பொன் வேய்ந்து உள்ளாள். அவள் பெயரில் 'பட்டாலி ஈசுவரம்' என்ற கோயில் எழுப்பப்பெற்று அது தற்போது 'பட்டீசுவரர் கோயில்' என்ற பெயரில் உள்ளது. இதை உங்கள் கைவண்ணத்தில் எழுதலாம் என்று நான் சொல்ல, "நிச்சயம் எழுதிவிடுகிறேன். இது சம்பந்தமான கல்வெட்டுகள் கொடு" என்று வினவ, 'திருவீழிமிழலை கல்வெட்டுகள்' புத்தகத்தை அவரிடம் கொடுத்து அனுப்பினேன். என்ன காரணத்தாலோ இக்கதை தள்ளிப் போய்க் கொண்டிருந்து கடைசியில் இயலாமலும் போய்விட்டது.

கல்கி தீபாவளி மலரில் நான் எழுதிய 'செருவென்ற சோழனின் செப்பேடுகள்' கட்டுரையைப் பார்த்துவிட்டு அவர் அலைபேசியில் அழைக்க, அந்நேரம் நான் கோயில் வழிபாட்டில் இருந்தமையால் சிறிது நேரம் கழித்துப் பேசுகிறேன் என்று மறுக்க, அவர் விடாப்பிடியாக 5 நிமிடம் பேசி என்னைப் பாராட்டியது என்றும் என் மனதில் நிலைத்துக் கொண்டிருக்கும்.

உடையார் நாவல் எழுதி முடித்தபின்பு ஒருமுறை அவர் வீட்டிற்குச் சென்றபோது "பத்மநாபா அடுத்து இராஜேந்திரனைப் பற்றி எழுதவேண்டும். உனக்குத் தெரிந்ததைப் பற்றிச் சொல்" என்றார். நான் இராஜேந்திரசோழனின் சாதனையாக 1) தலைநகர் மாற்றம் 2) கங்கைப் படையெடுப்பு, 3) கங்கைகொண்ட சோழீசுவரம் ஆலயம் எழுப்புதல், 4) கடற்போர் செய்து அந்நிய நாட்டைக் கைப்பற்றுதல் ஆகியவைகளைப் பற்றிச் சுருக்கமாய்ச் சொல்ல, கப்பல்கள் பற்றிப் புத்தகங்கள் வேண்டும் என்று கேட்க, என்னிடம் உள்ள நாவாய் சாத்திரம், நம்நாட்டுக் கப்பற்கலை ஆகிய புத்தகங்களின் நகல்களைக் கொடுத்தேன்.

பின் சீதாராமன் வீட்டிலும், விடுதியிலும் நடைபெற்ற ஓரிரு கதைவிவாதங்களிலும் கலந்துகொண்டு எனது கருத்துக்களைக் கூறினேன். ஒருமுறை, விவாதத்தில் பாலகுமாரன் அவர்கள் கங்கைப் படையெடுப்பே தன் பெண்ணிற்காகத்தான் எடுத்தான் என்று சொல்ல, புதிதாகக் கட்டியுள்ள கங்கைகொண்ட சோழீசுவரம் கோவிலையும் புதிதாக நிர்மாணித்த தலைநகரையும் புனிதப்படுத்தவும்தான் இப்படையெடுப்பு நடைபெற்றிருக்கவேண்டும். இதற்கு ஆதாரமாய் திருலோகி கல்வெட்டு உள்ளது என்று நான் மறுக்க, வாதம் புரியாமல் மௌனமாக இருந்தது என் நினைவில் இன்றும் ஊஞ்சலாடுகிறது.

பாலகுமாரன் இறந்தபிறகு அவரின் இறுதிச் சடங்கில் சீதாராமன் குடும்பத்தினருடன் நானும் பங்கு கொண்டபோது அங்கு அறிமுகமான பாலகுமாரன் அவர்களின் சீடர் சிங்கப்பூர் சாரதி என்பவருடன் சமீபத்தில் அம்மன்குடி கோயிலுக்குச் சென்றிருந்தேன். அப்போது, பாலகுமாரன் அவர்களுடன் சில வருடங்களுக்கு முன்பு இங்கு வந்து சென்றது நினைவுக்கு வந்தது.

"பத்மநாபா! இங்குதான் நான் பிறந்தேன். வளர்ந்தேன். வேதங்கள் கற்றேன். இது எனது ஊர். ஏனோ இங்கு வந்தவுடன் ஒரு புத்துணர்ச்சி வருகின்றது. எல்லாமே என்னுடையது. என் சார்பானது என்ற உணர்வே வருகின்றது. அன்று இராஜராஜனின் மந்திரி கிருஷ்ணன் இராமனாக நான் என்னை உருவகப்படுத்திக்கொள்கிறேன். இந்த உணர்வு நான் ஏற்படுத்திக் கொண்டது அல்ல. அதுவாக வந்து ஒட்டிக் கொள்கிறது. அன்றும் இக்கோயிலை வலம் வந்தேன். இன்றும் வந்துகொண்டிருக்கிறேன். ஜன்மஜன்மமாய் வந்துகொண்டிருக்கும் உணர்வு என்றுகூறி ஆலமர் அண்ணல் சிலைக்குக் கிழக்கே உள்ள சிலையைத் தடவிக் கொண்டே கண்மூடி மெய்மறந்து நின்றார். உடன்வந்த நண்பரிடம் இதைச் சொல்லிக்கொண்டே நானும் ஒரு நிமிடம் மெய்மறந்து நின்றேன். அந்திசாயும் நேரம் அது. எங்கோ குயில் ஒன்று கூவும் குரல் கேட்டது. அதன்பின்னே மெல்லிய குரலில் "பத்மநாபா" என்ற மெல்லொலி கேட்டதுபோல் இருந்தது.

இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.