http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 143

இதழ் 143
[ அக்டோபர் 2018 ]


இந்த இதழில்..
In this Issue..

அப்பர் என்னும் அரிய மனிதர் - 3
அரங்கநாதபுரம் திருவானேசுவரர்
அவர் போல்தான்! ஆனால் அவரில்லை!
அரங்கத்தின் ஆடற்சிற்பங்கள் இரண்டு
கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயம்
திருவித்தியாசக்குடி
இதழ் எண். 143 > கலையும் ஆய்வும்
அரங்கநாதபுரம் திருவானேசுவரர்
இரா.கலைக்கோவன், மு.நளினி
தஞ்சாவூர் மாவட்டத்தில் கல்லணையிலிருந்து திருக்காட்டுப்பள்ளி செல்லும் நடுக்காவிரிச் சாலையில் நியமத்தையடுத்த வலத் திருப்பத்தில் கட்டப்பட்டுள்ள வளைவுக்குள் நுழைந்து சில அடித் தொலைவு பயணித்தால் அரங்கநாதபுரம் அடையலாம்.1 யானைக்காட்டுக் கோயில் என்றும் பூரட்டாதிக் கோயில் என்றும் கொண்டாடப்படும் திருவானேசுவரர் கோயில், இச்சிற்றூரில்தான் வறண்ட பெருங்குளத்தின் கரையில் செங்கல்கட்டுமான மாடக்கோயிலாய்க் காட்சிதருகிறது. வடக்கிலும் மேற்கிலும் வாயில்கள் பெற்றுள்ள இக்கோயில் வளாகத்தின் குளக்கரை வாயிலான வடக்கு வாயில் அண்மைக் காலத்தில் கட்டப்பட்ட முத்தளக் கோபுரத்தால் சிறப்படைந்துள்ளது. கோபுர முதல்தளச் சாலையில் சுதையுருவங்களாய் வாயிற்காப்போரும் அவர்களுக்கிடையில் வள்ளி தெய்வானையுடன் முருகனும் நிற்கின்றனர். மதிலால் சூழப்பட்டுள்ள இக்காட்டீசர் கோயிலின் திருச்சுற்றிலுள்ள அனைத்து விமானங்களும் திருமுன்களும் மையக்கோயில் போலச் செங்கல் கட்டுமானங்களாகவே உள்ளன.

வளாகச்சுற்று

வளாகத்தின் வடகிழக்கில் ஒன்பான்கோள்களுக்கான திருமுன்னும் தென்கிழக்கில் மடைப்பள்ளியும் அமைய, மேற்கில் தென்பகுதியில் பிள்ளையாருக்கென ஒருதளத் தூங்கானை மாட விமானமும் வடபகுதியில் யானைத்திருமகளுக்கென ஒருதளத் திராவிட விமானமும் உள்ளன. இவ்விரண்டுக்கும் இடையில் ஒருதளத் திராவிடமாக முருகன் விமானம். வடக்கிலுள்ள ஒருதள நாகர விமானத்தில் சண்டேசுவரரும் அதன் வடபுறமுள்ள வளைவுமாடத்தில் கொற்றவையும் காட்சிதர, தெற்கிலுள்ள கட்டமைப்பில் ஆதிசங்கரர் படம் வைக்கப்பட்டுள்ளது. மதிலின் கிழக்குப்பகுதியிலுள்ள மாடவளைவில் இறைக்கோயிலை நோக்கியபடியுள்ள நந்தி சோழர் காலத்தது. மேற்கிலுள்ள மூன்று விமானங்களுமே முன்றில் பெற்றுள்ளன. உறுப்புவேறுபாடற்ற தாங்குதளம், நான்முகத் தூண்களின் அணைவுபெற்ற வெறுமையான சுவர், கூரையுறுப்புகள் என அமைந்துள்ள கீழ்த்தளத்தின் மேல் முருகன், பிள்ளையார் விமானங்கள் அலங்காரக் கபோதம் பெற்றுள்ளன. கிரீவத்தில் முருகன், பிள்ளையாரின் சுதைவடிவங்கள்.



இச்சுற்றுத் திருமுன்களில் உள்ள சிற்பங்களில் பிள்ளையாரும் சண்டேசுவரரும் சோழர் காலப் படைப்புகள். ஏனைய அனைத்தும் அண்மைக் காலத்தன. கரண்டமகுடம், சரப்பளி, தோள், கை வளைகள், சிற்றாடையுடன் வலம்புரியராய் இலலிதாசனத்திலுள்ள பிள்ளையாரின் வல முன் கையிலும் துளைக்கைச் சுருட்டலுக்குள்ளும் மோதகம். இட முன் கை தொடையில் முஷ்டியில் இருக்க, பின்கையில் இடப்புறம் கரும்புத்தோகை, வலப்புறம் தந்தம். பிள்ளையாரின் வலத்தந்தம் உடைந்திருக்க, இடப்புறம் தந்தமில்லை. சுகாசனத்திலுள்ள சண்டேசுவரரின் சடைப்பாரம் இருபுறமும் கனத்துப் பரந்துள்ளது. பனையோலைக் குண்டலங்கள், முத்துச்சவடி, முப்புரிநூல், தோள், கை வளைகள், அரைக்கச்சு இருத்தும் சிற்றாடை அணிந்துள்ள அவரது இடக்கை தொடைமீதிருக்க, வலக்கையில் மழு.





மாடக்கோயில்

வளாகத்தின் நடுப்பகுதியில் வெற்றுத்தளத்தின் மேல் மேற்கிலிருந்து கிழக்காக வானேசர் விமானமும் மண்டபங்களும் அமைய, வடக்கிலிருந்து தெற்காக காமாட்சியம்மன் விமானமும் மண்டபமும் உள்ளன. தாங்குதளம், சுவர், கூரை எனும் உறுப்புகள் பெறாது ஒரு சுவரென அமைந்துள்ள வெற்றுத்தளம் 1. 82 மீ. உயரம் பெற்றுள்ளது. அதன் மேல் அமைந்துள்ள இறைவன், இறைவித் திருமுன்களை அடையத் தென்கிழக்கிலுள்ள 9 படிகள் உதவுகின்றன. வானேசுவரர் விமானம் பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, நான்முக அரைத்தூண்கள் அணைத்த சுவர், வெட்டு, வளைவுப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகளுடன் கிழக்கு மேற்கில் 4. 58 மீ. அளவும் தென்வடலாக 4. 68 மீ. அளவும் கொண்ட ஒருதள வேசரமாக உள்ளது. கிரீவத்தில் தெற்கில் ஆலமர் அண்ணல் இருபுறத்தும் முனிவர்களுடன் வீராசனத்தில் இருக்க, மேற்கில் தேவியருடன் விஷ்ணு சுகாசனத்தில் உள்ளார். தேவியருடன் சுகாசனத்தில் வடக்கில் நான்முகனும் கிழக்கில் சிவபெருமானும் காட்சிதருகின்றனர். அனைத்துமே சுதையுருவங்கள்.





சுவரின் முப்புறத்துமுள்ள சாலைக் கோட்டங்களில் தென்புறம் மட்டும் ஆலமர்அண்ணலின் சிற்பம் உள்ளது. இக்கோட்டத்தின் முன் எழுப்பப்பட்டுள்ள முன்றிலின் மேலும் சுதைவடிவில் ஆலமர்அண்ணல். விமானத்தின் முன்னிருக்குமாறு வெளிப்புறத்தே தெரியும் சிறிய அளவிலான முகமண்டபம், பின்னாளைய திருப்பணியில் விளைந்த வண்டிக்கூரை மண்டபத்தின் கருவறை ஒட்டிய ஒடுக்கமாகியுள்ளது. பெருமண்டபமாய்க் கட்டப்பட்டுள்ள வண்டிக்கூரை மண்டபத்துள் வடபுறத்தே முகமண்டபமும் ஒருதள வேசர விமானமும் பெற்ற இறைவித்திருமுன் உள்ளது.

இந்த மண்டபத்தின் முன் நீளும் மற்றொரு பெருமண்டபம் அதன் வெற்றுத்தளக் கிழக்கு முகப்பிலுள்ள வளைமாடத்தில் யானையின் முன்பகுதியைச் சிற்பமாகக் கொண்டுள்ளது. கம்பீரமாக நின்றகோலத்தில் பாதம்வரை நெகிழும் துளைக்கையை இலேசாகச் சுருட்டியவாறு கழுத்தில் மணிமாலையுடன் தோற்றமளிக்கும் இந்த எழிலார் யானை கோயிலின் பழைமைக்கு மற்றொரு சான்றாகத் திகழ்கிறது.



வெற்றுத்தளத்தின் மீதமைந்துள்ள இப்புதிய மண்டபம் பத்திமையாளர்கள் அமர்ந்து இளைப்பாற உதவுகிறது. இம்மண்டபத்தில் இறைவன் பார்வையில் நந்தியும் அதன் பின் பலித்தளமும் உள்ளன. இறைவன், இறைவி திருமுன்களைச் சுற்றிவர வெற்றுத்தளத்தின் மீதுள்ள பிடிச்சுவர் பெற்ற திருச்சுற்று உதவுகிறது. இறைவன் கருவறை வாயிலின் வலப்புறத்தே பிள்ளையார் இருக்க, கருவறையில் வேசர ஆவுடையார்மீது உயரமான இலிங்கபாணத்துடன் வானேசுவரர் எழுந்தருளியுள்ளார். இறைவி திருமுன்னின் முகமண்டபத்தில் வலப் பின் கை சிதைந்த பழைய இறைவித்திருமேனி உள்ளது. கருவறையில் சமபாதராய்ச் சடைமகுடம், குண்டலங்களுடன் பட்டாடை அணிந்தவராய்க் காட்சிதரும் காமாட்சி அம்மையின் முன்கைகள் காக்கும், அருட்குறிப்புகளில் விளங்க, பின்கைகளில் வலப்புறம் அக்கமாலை, இடப்புறம் மலர்மொட்டு. இறைவன் விமானம் போலவே தளஅமைப்புக் கொண்டுள்ள இறைவியின் ஒருதள வேசர விமான கிரீவகோட்டங்களில் அம்மனின் சுதையுருவங்கள். தளச்சுவரின் வளைவுத் தோரணம் பெற்ற கோட்டங்கள் வெறுமையாக உள்ளன.

கல்வெட்டுகள்

இக்கோயிலிலுள்ள இரண்டு கல்வெட்டுகளுமே 18. 2. 1984இல் பதிவானவை. அரங்கநாதபுரத்து வைத்யநாதர் மகன் சுப்பிரமணியன் இவ்வளாகத்தில் இலட்சுமி அம்மனுக்குக் கோயில் கட்டியதுடன் வளாகத்தில் உள்ள மணிமண்டபத்தையும் கட்டுவித்துள்ளார். உச்சிக்காலப் பூசைக்கு ஓர் ஏக்கர் நன்செய் நிலம் அவரால் கொடையளிக்கப்பட்டுள்ளது. வைத்யநாதரின் துணைவியார் திருமதி பார்வதி வளாகத்தின் வடக்கிலுள்ள இராஜகோபுரத்தைத் தம் கணவர் விழைவிற்கேற்ப எடுப்பித்துள்ளார். குடமுழுக்கு விழா 5. 9. 1982இல் நடைபெற்றுள்ளது.

காலம்

இங்குள்ள சண்டேசுவரர், பிள்ளையார், நந்தி, யானை முதலிய சிற்பங்கள் திருவானேசுவரர் கோயில் சோழர் காலத்திலிருந்தே இங்கிருந்தமைக்குச் சான்றாகின்றன. தொடக்கத்திலிருந்தே செங்கல் கட்டுமானமாகத் தொடரும் இக்கோயில் கோச்செங்கணான் பணிகளுள் ஒன்றாகலாம்.2 இதுநாள்வரை கண்டறியப்பட்டுள்ள 34 மாடக்கோயில்களோடு இந்தக் காட்டுயானைக் கோயில் 35ஆவதாக இணைகிறது.

குறிப்புகள்

1. ஆய்வுநாள் 21. 1. 2018. இக்கோயிலை எங்கள் பார்வைக்குக் கொணர்ந்தவர் ஒளிப்படக் கலைஞர் செல்வி க. இலட்சுமி. களஆய்விற்குத் துணையிருந்தவர்கள் பேராசிரியர் முனைவர் அர. அகிலா, செல்வி இர. ஜமுனா.

2. அறிவிப்புப் பலகையில் இக்கோயில் கோச்செங்கணானால் எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இறைவன் விமானத்தின் முன்னிருக்கும் மண்டபத்தின் வெற்றுத்தள முகப்பில் வளைமாடத்தில் காட்டப்பட்டிருக்கும் யானை அதற்கான குறியீடாக அமைந்துள்ளது. (கோச்செங்கணான் யானை ஏறமுடியாத கோயில்களை அமைத்ததாகப் புராணச் செய்தி கூறுகிறது.)

இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.