http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[178 Issues]
[1762 Articles]
Home About US Temples Facebook
Issue No. 143

இதழ் 143
[ அக்டோபர் 2018 ]


இந்த இதழில்..
In this Issue..

அப்பர் என்னும் அரிய மனிதர் - 3
அரங்கநாதபுரம் திருவானேசுவரர்
அவர் போல்தான்! ஆனால் அவரில்லை!
அரங்கத்தின் ஆடற்சிற்பங்கள் இரண்டு
கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயம்
திருவித்தியாசக்குடி
இதழ் எண். 143 > கலைக்கோவன் பக்கம்
அப்பர் என்னும் அரிய மனிதர் - 3
இரா. கலைக்கோவன்
இக்கட்டுரையின் முதல் இரண்டு பகுதிகளும் இங்கே: பகுதி 1, பகுதி 2.

உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாலும் மனிதன் எப்படிச் செம்மையுறமுடியும் என்பதையும் அவ்வுறுப்புகளை அவன் பெற்றதன் பயன் யாதென்பதையும் உணர்த்தும் இந்தப் பதிகம் அறிவியல் அடிப்படையில் அமைந்தது மட்டுமன்று. பொதுநல நோக்கிலும் அமைந்த ஒன்றாகும்.

ஒருபானைச் சோற்றுக்கு ஒருசோறு பதமாகக் கண்காள் காண்மின்களோ, கடல் நஞ்சுண்ட கண்டன் தன்னை, எண்டோள் வீசி நின்றாடும் பிரான் தன்னைக் கண்காள் காண்மின்களோ என்று கண்களின் பணிக்கு அப்பர் காட்டியுள்ள நெறி நோக்கலாம்.

கண்களால் காணவேண்டியவராக இறைவனைக் காட்டும் அப்பர், இங்குச் சுட்டுவன இரண்டு. ஒன்று, கடல் நஞ்சுண்ட கண்டம். மற்றது எண்டோள் வீசி நின்றாடும் நிலை. மூளையின் சாளரங்களான கண்களால் அப்பர் பார்க்கச் சொல்வனவற்றுள் முதலாவது தியாகத் திருச்செயலைக் குறிக்கும் கழுத்து. அடுத்தவர் அழியக்கூடாதென்ற அரிய நோக்கோடு நஞ்சுண்டவர் எம்பெருமான். பிறர் வாழத் தம்மைத் தரும் அந்தத் தவநோக்கம் நம்மில் தியாக விதைகளை விதைக்க வேண்டுமென்றே, அழிந்துகொண்டிருக்கும் மனிதநேயம் மலரவேண்டுமென்றே, வளரவேண்டுமென்றே, கடல் நஞ்சுண்ட‌ கண்டம் உடையானைப் பார்க்கச் சொன்னார்.

எண்டோள் வீசி ஆடும்நிலை இயக்கஞ் சார்ந்தது. இறைவனின் எண்டோள் ஆடல் எட்டுத் திசைகளையும் நோக்கிய இயக்கத்தின் குறியீடு. இயக்கமே வாழ்வின் மூச்சாக வேண்டும். அந்த இயக்கம் சமுதாயத்தின் மூலை முடுக்கையெல்லாம் தொடவேண்டும். அதுவும் ஆனந்த இயக்கமாக, உள்ளத்தைக் கிளரச்செய்யும் உயர் இயக்கமாக அமையவேண்டுமென்பது அப்பரின் நோக்கம். அதனால்தான், சும்மாயிருப்பதே சுகம் என்று அவர் கூறவில்லை. என் கடன் பணிசெய்து கிடப்பதே என்று தெளிவாகத் தெரிவித்தார். அப்பர் ஓரடியில் கூறியதைத் தம் காலத்தில் வலியுறுத்த, வள்ளுவர் சில அதிகாரங்களையே படைக்க வேண்டியிருந்தது என்பதை இங்குக் கருதிப் பார்க்கலாம்.

சோம்பிச் சுயநலத்தில் மூழ்கியிருந்த குடும்பிகளைத் தட்டியெழுப்பி இறைப்பின்புலத்தில் அவர்களைச் சமுதாய உணர்வுடையவர்களாக மாற்ற அப்பர் மேற்கொண்ட முயற்சியே திருவங்கமாலை. தேர்ந்தெடுத்த நெறிகளை, மிகுந்த சிந்தனைக்குப்பின், ஒவ்வொருவரும் தத்தம் உடலும் உள்ளமும் வலுப்பட வாழவேண்டுமென்பதற்காகவே அறிவியல் அடிப்படையில் அப்பர் தொகுத்தளித்தார். இவை கைக்கொள்ளப் பெற்றால் ஈசன் பல்கணத்துள் எண்ணப்பட்டு, இறைவன் சேவடிக்கீழ் இறுமாந்திருக்கலாம். எப்பேர்ப்பட்ட இடம் செல்ல எவ்வளவு எளிய வழிகள். உறுப்புப் பூசையே உன்னத பூசை, உன்னால் முடிந்த பூசை, அதைச்செய். இறைவன் உனக்களித்த உறுப்புகள் ஒவ்வொன்றாலும் அந்த இறைவனுக்குத் தொண்டுசெய். அவன் செயல் பார், கேள், பேசு, நெஞ்சிலிருத்து. அப்படிச் செய்தால் திருமாலொடு நான்முகனும் தேடித் தேடொணாத் தேவனை நம்முளே தேடிக் கண்டுகொள்ளலாம். அப்பர் மக்களுக்குச் சொன்ன முதல் வழி இது.

உறுப்புகளின் பயன் விளக்கிய அப்பர், உறுசெயல்களை எடுத்துரைத்தார். அது இரண்டாம் வழி. விளக்கினைப் பெற்ற இன்பம், மெழுக்கினால் பதிற்றியாகும். துளக்கி நன்மலர்த் தொடுத்தால் தூய விண் ஏறலாகும். விளக்கு இட்டார் பேறு சொல்லின் மெய்ந்நெறி ஞானமாகும். அளப்பில கீதம் சொன்னார்க்கு அடிகள் தாள் அருளும். பெருக்குதல், மெழுகுதல், மலர்த் தொடுத்தல், விளக்கேற்றுதல், பாடுதல் இவ்வைந்தும் அப்பர் காட்டிய இரண்டாம் வழியின் ஐந்து எளிய கூறுகள். இவற்றைச் செய்தால், இறைவன் தாமே தம்முடைய திருவடிப்பேற்றை நல்குவாராம். தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் மனக்கவலை மாற்றலரிது என்று வள்ளுவர் கோடிட்டுக் காட்டியதை, அப்பர் எளிதாக்கினார். அந்தத் தாள் எங்ஙனம் அடைதற்கேதுவாகும் என்பதை நாவுக்கரசர் கூறியிருப்பது போல் அறிவியல் பின்புலத்தோடு வேறு எந்த அடியவரும் கூறவில்லை என்பதையும் இங்கு அழுந்தப் பதிய வைக்கவேண்டும்.

பெருக்கலும் மெழுகலும் தூய்மைப்படுத்தும் பணிகள். உடலுக்கு உழைப்பு. அழுக்கை அகற்றுகிறோம், பளிச்சென்று நீர்பரப்பி எங்கும் ஈரம் பூசுகிறோம், குளுமை பிறப்பிக்கிறோம் என்ற நினைப்பே பரவசமானது. உடலும் உள்ளமும் ஒருங்கிணையும் இப்பயிற்சிகள் இந்நாளில் இல்லாமற் போனமையால்தான் இதயத்தார்க்கு இமயமாய் வளர்ந்திருக்கிறது.

பூத்தொடுத்தல், பறித்தபின் நிகழ்வது. பறிப்பதோ, பார்த்தபின் நடப்பது. பூத்துக்குலுங்கும் மலர்ச்செடிகளைப் பார்க்கும்போது ஏற்படும் எண்ணவிரிவு, அந்த மலர்களைப் பறிக்கும்போது ஏற்படும் இணையற்ற பயிற்சி, நாரை நீரால் அவ்வப்போது நனைக்கும்போது விரல்நுனிகள் நீர்ப்பட்டுப் பெறும் புத்துணர்ச்சி, இவை அனைத்தையும் விட இவற்றை யாருக்காகச் செய்கிறோம் என்ற நினைவு தரும் உள்ளச் சிலிர்ப்பு மிக முக்கியமானது.

விளக்கேற்றல் இருளை அகற்றுவதற்கு மட்டுமல்ல, அது ஒரு மங்கல நிகழ்வு. பல எதிர்நோக்கல்களின், நம்பிக்கைகளின் குறியீடு. ஒரு குச்சியில் பத்து விளக்கேற்றுபவர்களும் இருக்கிறார்கள். ஒரு விளக்கைக்கூட ஏற்றமுடியாமல் சூடு பெறுபவர்களும் இருக்கிறார்கள். விளக்கேற்றுவதும் பயிற்சியால் வருவதுதான். அகல்விளக்கு ஏற்றும்போது அருகிருந்து பார்த்தால்தான் தெரியும், எத்தனை நயமாகச் சில மெல்விரல்கள் சுடர்கிளப்புகின்றனவென்று. அக்கறை, ஈடுபாடு, தொழில்நேர்த்தி என எத்தனை இரகசியங்கள் ஒரு விளக்கேற்றலில்.

பாடுவது சொல்திருத்தம், உச்சரிப்புத் தூய்மை, தொடரொழுங்கு, நினைவுத்திறன் வளர்க்கும் செயலாகும். எழுதிப் படிப்பது குறைந்திருந்த அக்காலத்தில் சொல்லிப் படிப்பதே முதன்மையாக இருந்தது. சொல்வதைச் சீர்மைபெறப் பண்ணொடு சொல்லப் பழக்கும் முகத்தான்தான் அளப்பில கீதம் சொல்ல அறிவுறுத்தினார் அப்பர். பெருக்குவது இன்பம் தரும். மெழுகுவது அதைப்போல் பத்துமடங்கு இன்பம் தரும். மலர்த்தொடுத்தால் விண்ணேறலாம். விளக்கிட்டால் ஞானம் வயப்படும். கீதம் சேர்ந்தால் இறைவன் தாள் தருவான். மக்களுக்கு அப்பர் சொன்ன எளிய வழிகள் இவை.

நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்குப் புலர்வதன் முன் அலகிட்டு மெழுக்குமிட்டுப் பூமாலை புனைந்து ஏத்தி, புகழ்ந்து பாடி, தலையாரக் கும்பிட்டுக் கூத்துமாடி, சங்கரா சய போற்றி போற்றி என்று மகிழச் சொன்ன நாவுக்கரசர், இந்த வழிகாட்டலில் புதிதாகச் சேர்ப்பவை இரண்டு. புலர்வதன் முன் செய்ய வேண்டுமென்பது ஒன்று. தலையாரக் கும்பிட்டுக் கூத்துமாடுவது இரண்டாவது. கருக்கலின் தூய உயிர்வளி மண்டலம் உடலுக்கு நன்மை செய்யுமென்பதை அப்பர் அறிந்திருந்தாரோ என்றெண்ணுமாறு, புலர்வதன் முன் என்ற வழிகாட்டல் அமைந்துள்ளது. தலையாரக் கும்பிட்டுக் கூத்துமாடி உடல், மனவளப் பயிற்சிக்கான வழிகாட்டல்.

மக்கள் அப்பர் சொன்ன வழிகளை முற்றும் கடைப்பிடித்தனர். தமிழ்நாட்டுத் திருக்கோயில்களில் வெட்டப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான கல்வெட்டுகள் அதற்குச் சான்று பகர்கின்றன. பெருக்குவதும் மெழுகுவதும் திருப்பணிகளாயின. மலர்த்தோட்டம் அமைப்பதும் அதற்குக் கிணறு வெட்டித் தருவதும் தலைப்பணியாயின. பூத்தொடுத்தலுக்கும் விளக்கேற்றலுக்கும் கழஞ்சுக் கழஞ்சாய்ப் பொன். இருவிரல் அகலத்து இரண்டிரண்டு நறும்பூ இட்டுத் தொடுத்து, இருமுழ நீளத்தனவாய் ஒருவடம் என நாளும் பதினைந்து வடம் மலர்மாலை அமைத்திட்ட மக்களும் இருந்தனர். இந்தக் கல்வெட்டுச் சொற்களில் எத்தனை தேர்வு, கவனம், குறிப்பு! மக்கள் வழிப்பட்டனர். மன்னர்களும் வழிப்பட்டனர். தஞ்சாவூர் இராஜராஜீசுவரத்துக் கல்வெட்டுகள் திருக்கோயில் ஆடல், பாடல் நிகழ்வுகளுக்குப் பட்டயம் வாசிக்கின்றன.

சோம்பிக் கிடந்தவர்களை, விலகிப் போனவர்களை, விட்டேற்றிகளாய் இருந்தவர்களை விரும்பி அழைத்து, விடாது துரத்தியழைத்து, வைதும் அழைத்து அவர்கள் வாழவும் வழிப்படவும் அதன்வழித் தமிழ்நாட்டுத் திருக்கோயில்கள் தழைக்கவும் தளமிட்ட அப்பர் பெருமான் தொடக்கத்தில் ஒரு சாதாரண மனிதர். அதனால்தான் சூலைக்குத் தீர்வுகேட்டு அழுதார். மாழை ஒண் கண்ணினார்கள் வலைதனில் மயங்குகின்றேனே என்று மறுகினார். கனியிருக்கக் காய் கவர்ந்த கள்வனானேன், முயல்விட்டுக் காக்கைப்பின் போயிருந்தேன், ஏதன் போர்க்கு ஆதனாய் அகப்பட்டேன் என்றெல்லாம் குமைந்தார். ஏழையேன், ஏழையேன்! நான் என்செய்கேன்? என்றெல்லாம் தன்னிரக்கப்பட்டார்.

ஒரு பதிகம்பாடியாகத்தான் அப்பரின் வாழ்க்கை தொடங்கியது. பாடப்பாட, இறையடியார் பலரிடம் பேசப்பேசக் கண்டதும் கேட்டதும் உணர்ந்ததும் அவரைப் பக்குவப்படுத்தின. அவர் வளர்நிலைகளை அவர் பதிகங்களே கண்ணாடிகளாய் நின்று கணக்கிடுகின்றன. மன்னுளே திரியும்போது வருவன பலவும் குற்றம் எனத் தன்னிலை விளக்கி, என்செய்கேன் எந்தை பெம்மான் வாழ்வதேல் அரிது போலும், வைகலும் ஐவர் வந்து ஆழ்குழிப் படுக்க ஆற்றேன் என இயலாமை தெரிவித்து, நாயேன் உன்னை எங்குற்றாய் என்ற போதா இங்குற்றேன் என் கண்டாயே என்று இறைவன் இருக்குமிடம் தேடி, ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே என்று தம்மை நெறிப்படுத்த வேண்டி, கோவாய் முடுகி அடுதிறல் கூற்றம் குமைப்பதன் முன் பூவார் அடிச்சுவடு என்மேல் பொறித்துவை எனச் சத்திமுற்றத்தில் இறைஞ்சி, நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன் நினையாது ஒருபோதும் இருந்தறியேன் என அறிவிப்புச் செய்து அலமந்து காத்திருந்த அப்பர், அநுபவத் தழும்புகளால் அடியோடு மாறிப்போகிறார்.

எத்தாயர்? எத்தந்தை? எச்சுற்றத்தார்? எம்மாடு சும்மாடாம்? ஏவர் நல்லார்? செத்தால் வந்து உதவுவார் ஒருவர் இல்லை. சிறுவிறகால் தீமூட்டிச் செல்லா நிற்பர். சித்தாய வேடத்தாய் நீடு பொன்னித் திருவானைக்கா உடைய செல்வா வைச்ச பொருள் நமக்கு ஆகுமென்று எண்ணி அச்சம் ஒழித்தேன். எத்தகைய மாற்றம்! எங்குற்றாய்? எங்குற்றாய்? என்று ஏங்கித் திருக்கோயில் கதவுகளைத் திறக்கப் பாடிய பெருந்தகை, தேடிக் கண்டுகொண்டேன் தேடித் தேடவொண்ணாத் தேவனை என்னுள்ளே தேடிக் கண்டுகொண்டேன் என்ற மகிழ்ந்து பூரிக்குமளவு, கடுக்க நடந்த கால்களும், பரவித் தேடிய விழிகளும், பார்க்கத் தவித்த நெஞ்சும், இறைவனை உருக்கி, அப்பர் நெஞ்சுள் அவரை அமரவைத்தன.

அதையுணர்ந்தமையால்தான், காண்டலே கருத்தாய் நினைத்திருந்தேன் மனம் புகுந்தாய் என்று களிகொண்டு கூறவும், அந்தக் களிப்பின் முத்தாய்ப்பாய்த் தொண்டலால் துணையுமில்லை, கலந்தபின் பிரிவதில்லை என்று இறைவனைப் பெறும் வழியை உறுதியிட்டு உரைக்கவும் அப்பரால் முடிந்தது. இறைவன் உள்ளிருந்ததால் அவரை உறவாக உணர்ந்ததால், அவர் தமர் நாம், அதனால் அஞ்சுவது யாதொன்றுமில்லை, அஞ்ச வருவதுமில்லை என்று துணிவொடு தளைகளாய்த் தைப்பன எவை நோக்கியும் அப்பரால் முழங்க முடிந்தது. இந்தத் துணிவுணர்வின் உச்சமே நாமார்க்கும் குடியல்லோம், நமனையஞ்சோம், நரகத்தில் இடர்ப்படோம், நடலைஇல்லோம். ஏமாப்போம், பிணியறியோம், பணிவோம் அல்லோம் என்று நெஞ்சுரம் காட்டி நிமிர வைத்தது.

திருவையாற்றில் கண்டறியாதன எல்லாம் கண்ட நிலையில், கண் பனிக்கும் கைகூப்பும், கண்மூன்றுடைய நண்பனுக்கு என்னை நான் கொடுப்பேன் என்று உருகவும் வைத்தது. தலைவன் தலைப்பட்ட அந்த உள்ளம், தான் உற்ற அந்த நிலையை, வழிதேடி அலைவார்க்கெல்லாம் சொல்லுமாறு போல, உயிராவணமிருந்து உற்றுநோக்கி உள்ளக்கிழியின் உருவெழுதி உயிர் ஆவணம் செய்திட்டு உன் கைத் தந்தால் என்று பாடும்போது நினைத்ததைப் பெற எத்தனை பக்குவம் எதிர்பார்க்கப்படுகிறதென்பதை அங்கைக் கனியாய் அறிந்து கொள்ளமுடிகிறது.

கூற்றாயினவாறு விலக்கலீர் என்று வேண்டி வைத்த முதலடியும், பயண முத்தாய்ப்பில், உணரப்படுவாரொடு ஒட்டி வாழ்தி என்று இறைவனுக்கே உத்தரவிடும் உயர்நிலையும், இவற்றிற்கு இடைப்பட்ட அப்பரின் பயணப்பாடுகளும் அவற்றால் விளைந்த உளநிலை மாற்றங்களும் அவரைப் பத்திமையுலகின் அரிய மனிதராய்ப் படம்பிடிக்கின்றன. ஒரு நதியின் ஓட்டம் போலச் சிறுகத் தொடங்கிப் பெருக வாழ்ந்த பெம்மான் அவர்.

       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.