http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 144

இதழ் 144
[ ஜனவரி 2019 ]


இந்த இதழில்..
In this Issue..

அவரும் நானும்
செய்திகள் வாசிப்பது வரலாறு டாட் காம் - 3
பாச்சில் அவனீசுவரம்
மாமல்லபுரக் குடைவரைகள் - 3
போய் வாருங்கள் தாத்தா!
ஐராவதம் மகாதேவன் – இதயத்திலிருந்து நேராக
தாராசுரம் - தேவநாயகி (அ) பெரியநாயகி அம்மன் ஆலயம்
நாதமும் நாதனும் நாட்காட்டியும்
இதழ் எண். 144 > பயணப்பட்டோம்
ஐராவதம் மகாதேவன் – இதயத்திலிருந்து நேராக
லலிதாராம்
ஐராவதம் மகாதேவன் இந்தியவியல் ஆய்வுகள் தொடங்கி ஐன்பது வருடங்களாகும் பொன்னான தருணமிது. தனது 28-வது வயதில், 'Coin collecting in Coimbatore district' என்ற இவரது முதல்கட்டுரை 'தி இந்து' நாளிதழில் பிரசுரமானது. அப்போதிருந்து, புதிய தரவுகளை நாடும் தீராவேட்கையும் உண்மைக்கான அயராத தேடலும் இவரிடம் வளர்ந்துகொண்டே இருக்கின்றன.

இந்த 78 வயது இளைஞர் வசிக்கும் வீட்டுக்குச் சென்றபோது அவரது மேஜையில் இருந்த வாசகம் இது:

மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொளார் - செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்பு கொளார்
கருமமே கண்ணாயி னார்


ஐராவதம் என்ற மனிதரை இவ்வரிகளை விடச் சிறப்பாக வர்ணித்திட முடியாது.

பண்டைய தமிழ்க் கல்வெட்டுகள் பற்றியும், சிந்து சமவெளிக் குறியீடுகள் பற்றியும் இவர் எழுதியிருக்கும் இரு நூல்கள் இத்துறை மாணவர்க்கும் வல்லுனர்களுக்கும் கலங்கரை விளக்கமாய் விளங்குபவை.

இத்தொல்லியல் இமயத்தின் புகழ்வாழ்வின் முக்கிய கணங்களைத் திரும்பிப் பார்க்கும் முயற்சியே இந்நேர்காணல்.

உங்களது குடும்பப் பின்னணியிலிருந்து நேர்காணலைத் தொடங்கலாமா?

நான் தஞ்சாவூர் ஸ்மார்த்த தமிழ் பிராமணர் குடும்பத்தில் பிறந்தவன். நாராயண தீர்த்தர் வாழ்ந்த வரகூர் கிராமம் எங்கள் பூர்வீகம். எங்களது வேர்களை ஆராயும்போது, பதினெட்டாம் நூற்றாண்டில் நாராயண தீர்த்தர் காலத்தில் வாழ்ந்த வெங்கடராயர் வரை செல்ல முடிகிறது. அவர் தஞ்சாவூரிலிருந்து மராத்திய அரசவையில் பணிபுரிந்திருக்க வேண்டும். ராயர் என்ற பட்டத்தை வைத்தும், ஆசந்தார் என்றழைக்கப்படும் வரிவிலக்கு பெற்ற நிலங்களை எங்கள் குடும்பம் வைத்திருந்ததாலும் நான் இதை யூகிக்கிறேன்.

எங்களது குடும்பத்தில் 'ஐராவதம்' என்ற பெயர் ஒவ்வொரு இரண்டாவது அல்லது மூன்றாவது தலைமுறையிலும் யாராவது ஒருவருக்கு வைக்கப்படும். ஆனை (ஐராவதம்) பாகவதர், தஞ்சாவூர் மராட்டிய அரசவையில் வித்வானாக இருந்தார். அவர் வம்சத்தில் வந்தவர்கள் நாங்கள். எங்கள் குடும்பத்திற்குச் சொந்த ஊர் நேமமாக இருந்திருக்க வேண்டும். காவிரி நதிக்கரையில் அமைந்திருக்கும் நேமத்தில்தான் ஐராவதீஸ்வரர் கோவில் உள்ளது. எங்களது குடும்பத்தில் அடிக்கடி ஐராவதம் என்ற பெயர் வருவதால் அவர்கள் நேமத்தைச் சேர்ந்தவர்களாக இருந்திருக்கவேண்டும்.

18-ம் நூற்றாண்டில் நாங்கள் வரகூரில் இருந்தோம். இரட்டைக் கிராமங்களான வரகூரும் கண்டமங்கலமும் 17-ம் நூற்றாண்டில் தஞ்சாவூர் நாயக்கர்களின் புகழ்பெற்ற அமைச்சராக இருந்த கோவிந்த தீட்சிதரால் பிராமணர்களுக்கு வழங்கப்பட்டன. வரகூரில் இருந்த ஒற்றைத்தெரு அக்ரஹாரத்தில் ஜனத்தொகை பெருகியபோது, சில குடும்பங்கள் கண்டமங்கலத்துக்கு இடம்பெயர்ந்தன. அங்கேதான் எனக்கு முந்தைய ஏழு தலைமுறையினர் வசித்தனர். எனது தந்தையின் தந்தையான வைத்யநாத ஐயர்தான் எங்கள் குடும்பத்தில் நவீன பள்ளிக் கல்வியை முதலில் பெற்றவர். அவர் ரயில்வேயில் பணியாற்றினார். எனது தந்தை பள்ளியில் படிக்கும்போதே அவர் ரயில் விபத்து ஒன்றில் மறைந்தார்.

எனது தந்தையான ஐராவதம், திருக்காட்டுப்பள்ளி உயர்நிலைப்பள்ளியில் படித்தார். சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் மருத்துவம் பயின்றார். எல்.எம்.பி பட்டம் பெற்றுப் பத்து வருடங்கள் பர்மாவில் பணிபுரிந்தார். அந்தச் சமயத்தில்தான் ஐராவதி நதியோடும் பர்மாவின் ஐராவதி என்னை என் அன்னை கருவுற்றார். அப்போது என் தந்தை இந்தியாவுக்குத் திரும்பித் திருச்சிராப்பள்ளியில் வாழ முடிவெடுத்தார்.

உங்களது இளமைக் காலத்தைப் பற்றிய நினைவுகளைக் கூறுங்களேன்.

எனது இளம்பருவம் திருச்சிராப்பள்ளியில் கழிந்தது. கண்டமங்கலத்தில் இருந்த எனது தாத்தா வீட்டில்தான் கோடை விடுமுறைகளைக் கழித்தேன். அப்போதெல்லாம் இரண்டு மூன்று மாதங்கள் விடுமுறை இருக்கும். எனது அப்பாவின் மாமாவான தியாகராஜ ஐயர் அங்கே பக்கத்து வீட்டில் வசித்துவந்தார். அவரது மகன் மகாதேவன் தான் எனக்கு முதல் குரு. அவர் மிகப்பெரிய சமஸ்கிருத அறிஞர். கோடை விடுமுறையின் போது சிறுவர்களாகிய எங்களுக்குப் பாடம் நடத்துவார். அவரிடம் இருந்துதான் நான் பஜகோவிந்தமும் ராமோதந்தமும் கற்றேன். பகவத்கீதையின் இரண்டாவது அத்தியாயத்தையும் விஷ்ணு சகஸ்கரநாமம் உள்ளிட்ட பல ஸ்லோகங்களையும் கற்றேன்.

அவர் கற்றுக்கொடுப்பதை வேகமாகக் கிரகித்துத் தவறின்றித் திரும்பச் சொல்வேனென்பதால் நான் அவருக்கு மிகவும் பிடித்த மாணவனானேன். சமஸ்கிருத மொழியில் ஸ்லோகங்களை எழுதிப்பார்ப்பதற்கும் எங்களை அவர் பழக்கினார். 12 வயதில், சமஸ்கிருத மொழியில் அனுஷ்டுப் சந்தங்களில் செய்யுள்களை எழுதக்கற்றுக் கொண்டேன். எனக்கு இன்னமும் சமஸ்கிருதத்தில் ஆர்வம் இருப்பினும், சமஸ்கிருத்த்தை விடத் தமிழ் ஆய்வில்தான் அதிகநேரம் செலவழித்திருக்கிறேன். தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகளின் மீது ஏற்பட்ட காதலே தமிழ்க் கல்வெட்டியல் மற்றும் சிந்து சமவெளிக் குறியீடுகள் குறித்த எனது ஆய்வுகளுக்கு வேராக அமைந்தது.

கல்லூரிப் படிப்பில் வேதியியல் துறையை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?

எனது அப்பா என்னை மருத்துவராக்க விரும்பினார். ஆனால் இன்டர்மீடியட் பரீட்சையில் நான் அதிக மதிப்பெண்கள் எடுக்கவில்லை. அக்காலத்தில் பி.எஸ்.சி படித்துவிட்டும் மருத்துவப்படிப்புக்குச் செல்லலாம். அதனால் 1947ம் ஆண்டு சென்னையில் உள்ள விவேகானந்தா கல்லூரியில் வேதியியல் பட்டப்படிப்பில் சேர்ந்தேன்.

வேதியியல் படிப்பைத் தொடர்ந்து அதற்குத் தொடர்பேயில்லாத சட்டப்படிப்பை ஏன் தேர்வுசெய்தீர்கள்?

நான் எதிர்பார்த்தது போலவே பிஎஸ்சி பரீட்சைகளில் நன்றாக மதிப்பெண்கள் பெறவில்லை. அக்காலத்தில், வேறு எந்தக் கல்லூரியிலும் இடமில்லை எனில் சட்டக்கல்லூரியில் சேர்ந்து கொள்ளலாம். அதனால் நான் மெட்ராஸ் சட்டக்கல்லூரியில் சேர்ந்தேன். அங்குதான் வெங்கடசுப்ரமணிய ஐயரின் தாக்கம் எனக்கு ஏற்பட்டது. அவர் இந்துச் சட்டம், அரசியலமைப்புச் சட்டம் ஆகிய இரண்டு பாடங்களை எங்களுக்கு எடுத்தார். இந்து தர்ம சாஸ்திரங்களைச் சமகால நோக்கில் அவர் விளக்கிய விதம் பலதரப்பட்ட நம் சமூகத்தில் முக்கியமாய் இருக்க வேண்டிய சகிப்புத்தன்மையையும் மதநல்லிணக்கத்தையும் எனக்குப் புரிய வைத்தன. பின்னாளில் இந்திய ஆட்சித்துறையில் நான் சேர்ந்தபோது என்னை வழி நடத்திய சமூகப்பார்வைக்கான வித்தாக அவரது பாடங்கள் அமைந்தன என்று கூறலாம்.

ஆட்சிப் பணியில் சேர்வதற்கான எண்ணத்துடன்தான் சட்டம் பயின்றீர்களா?

இல்லை. வழக்கறிஞராகப் பணிபுரிவதற்காகவே சட்டக்கல்லூரியில் சேர்ந்தேன். எனது பள்ளி/கல்லூரி நாட்களில் பேச்சுப் போட்டிகளில் பெற்ற பரிசுகள் எனது பேச்சுத்திறனின் மீது நம்பிக்கையளித்திருந்தன. அத்துடன் அந்நாட்களில் வழக்கறிஞர் பணியில் அதிகம் போட்டி இல்லை. நான் எனது சட்டப்படிப்பை முடித்துவிட்டு, திருச்சிராப்பள்ளி மாவட்ட நீதிமன்றத்தைச் சேர்ந்த ஒரு மூத்த வழக்கறிஞரிடம் சேர்ந்து ஒருவருடம் பயிற்சி பெற்றேன். அப்போதுதான் ஒரு வழக்கறிஞராக நான் அங்கீகாரம் பெறுவதற்கு நிறைய ஆண்டுகள் தேவைப்படும் என்பதை உணர்ந்தேன். விரைவிலேயே பொருளாதார ரீதியாக யாரையும் சாராமல் இருக்கவேண்டும் என்று எண்ணினேன். அதனால் 1953ல் நடைபெற்ற ஆட்சிப்பணித் தேர்வை எழுதினேன்.

எந்த வயதில் ஆட்சிப்பணித் தேர்வை எழுதினீர்கள்?

அப்போது எனக்கு 23 வயது. தமிழகத்திலிருந்து இந்திய ஆட்சிப் பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் நான் முதலிடம் பெற்றிருந்தேன். முதலிடங்களில் வந்த சிலரை மட்டும் அன்றைய பிரதமர் நேருவே நேர்காணல் செய்து அதில் நால்வரை வெளியுறவுப் பணியில் (IFS) அமர்த்தினார். நானும் அவர்களுள் ஒருவனாகத் தேர்வாகி தில்லியில் பயிற்சி பெற்றேன். ஆனால் மூன்று மாதங்களில் என் மனம் மாறியது. இந்திய ஆட்சிப்பணிக்கு மாறி, நாட்டின் வளர்ச்சியில் நேரடியாகப் பங்குகொள்ள விரும்புவதாக உள்துறை அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதினேன். எனது கோரிக்கையை ஏற்க அமைச்சகம் மறுத்துவிட்டது. அதனால், நான் பிரதமர் நேருவுக்கே ஒரு கடிதம் எழுதி என் விருப்பைத் தெரிவித்தேன். அவரது தலையீட்டின்பேரில், இந்திய நிர்வாகப் பணிக்கு மாற்றப்பட்டுத் தமிழகத்தில் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றேன்.

ஆட்சியராக உங்கள் ஆரம்ப நாட்கள் பற்றி கூறுங்கள்.

நான் கோவை மாவட்டத்தில் உதவி ஆட்சியராக எனது பணியைத் தொடங்கினேன். பின் துணை-ஆட்சியராகப் பொள்ளாச்சியில் பணி அமர்த்தப்பட்டேன். என் வாழ்வின் அற்புத நாட்கள் அவை. கோவையில் இருந்தபோது எனக்குத் திருமணமானது. கிராமங்கள் அனைத்தையும் நேரடியாகப் பார்த்துக் கிராம மேம்பாட்டுத் திட்டங்களில் ஈடுபட்டேன். கிணறு, சாலைகள், அரிஜனங்களுக்கான குடியிருப்புகள் கட்டுவதில் ஈடுபட்டேன். எனக்கு இயற்கையாக வாய்த்த மொழியார்வம் என்னைக் கல்வெட்டுகள் பக்கமும், நாணயவியல் பக்கமும் செலுத்தியது. 1958ல் புதுதில்லியில் உதவி நிதி ஆலோசகராக வணிகத்துறை அமைச்சகத்தில் பொறுப்பேற்றதுடன் என் ஆட்சிப்பணியின் முதல்கட்டம் முடிவுற்றது.

புதுதில்லியில் இருந்தபோதும் ஆய்வைத் தொடர முடிந்ததா?

வணிகத்துறையில் பணியாற்றியபோது, சம்பளமும், மதிப்பும் நிறைவாக இருந்த போதும் வேலைப்பளு அதிகமில்லை. எனது அலுவலகத்துக்கு அருகேதான் ஜனாதிபதி மாளிகை இருந்தது. அந்த மாளிகையின் முன்புறம் அப்போது தேசிய அருங்காட்சியம் இருந்தது. இந்தியாவின் மிகச்சிறந்த கல்வெட்டு அறிஞர்களுள் ஒருவரான சிவராமமூர்த்தி அருங்காட்சியகக் காப்பாளராக இருந்தார். முடிந்தபோதெல்லாம் அவரைச் சந்தித்து, கல்வெட்டியலின் அடிப்படைகளைக் கற்றுக்கொண்டேன். இந்தியக் கல்வெட்டியலில் எனது குருவாக அவரையே கருதுகிறேன்.

1961-இல் சென்னைக்கு திரும்பினேன். அங்கே வரலாற்றறிஞர் நீலகண்ட சாஸ்திரியைச் சந்தித்து, எந்தத் தலைப்பில் நான் ஆய்வுகள் செய்யலாம் என்று சிபாரிசு செய்ய வேண்டினேன். "தமிழகத்தில் பிராமிக் கல்வெட்டுகள் பல இடங்களில் கிடக்கின்றன. அவை தமிழ்க் கல்வெட்டுகள்தான் என்று கே.வி.சுப்ரமண்ய ஐயர் கூறுகிறார். இருப்பினும் அவற்றை எப்படிப் படிப்பது என்பது புரியாத புதிராகவே இருந்து வருகிறது. நீ அவற்றை ஆய்வு செய்ய முடியுமா என்று பார்.", என்று கூறினார். தமிழகத்தில் உள்ள குகைக் கல்வெட்டுகள் பற்றிய எனது ஆய்வுகள் இப்படித்தான் தொடங்கின.

நீலகண்ட சாஸ்திரி குறிப்பிட்ட பிரச்னைக்கு எப்படி விடை கண்டீர்கள்?

தொழில்துறையில் உதவிச் செயலராக நான் அப்போது சென்னையில் இருந்தேன். என்னால் நேரடியாகக் குகைகளுக்கு செல்லமுடியவில்லை. ஊட்டியில் இருந்த அரசு கல்வெட்டு ஆய்வாளர் ஒருவரை அந்த எழுத்துக்களின் பதிவுகளை எடுத்துவர நீலகண்ட சாஸ்திரி நியமித்தார். அவற்றை ஆய்வு செய்வதில் நான் ஆறு மாதங்கள் செலவழித்தேன். எந்த முன்னேற்றமும் இல்லை. அப்போதுதான் ஒரு திருப்பமாகக் கைத்தறி மற்றும் ஜவுளி துறையின் இயக்குனராகும் வாய்ப்பு வந்தது. தமிழகத்தில் உள்ள எல்லா கிராமத்துக்கும் செல்வதற்கு அப்பணி என்னை அனுமதித்தது. ஐந்து வருடங்கள் அப்பொறுப்பில் பணியாற்றியபோது, வேலைகளுக்கு இடையில் ஆய்வுகளையும் திட்டமிட்டு செய்து வந்தேன். வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் வேலையை முடித்துவிட்டு, ஞாயிற்றுக்கிழமைகளில் அருகில் உள்ள குகைகளுக்கு சென்று, கல்வெட்டு எழுத்துக்களை நகல் எடுப்பேன்.

1965ல் புகலூரில் நான் கண்டெடுத்த சங்க காலத்தைச் சேர்ந்த சேரர் கல்வெட்டுகள் மூலம் நான் வெளிச்சத்துக்கு வந்தேன். அந்த வெளியீடு அறிஞரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. சங்க காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள் அதுவரை கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை. இந்தக் கல்வெட்டுகளும், மாங்குளத்தில் கண்டெடுக்கப்பட்ட முற்பாண்டியர் கல்வெட்டுகளும் சர்வதேச அளவில் பேசப்பட்டன. 1966ல் கோலாலம்பூரில் நடைபெற்ற முதல் உலகத் தமிழ் மாநாட்டில் கட்டுரை வாசிக்க எனக்கு அழைப்பு வந்தது.

அதற்குச் சில மாதங்களிலேயே ஆர். நாகசாமி தமிழகத் தொல்பொருள் துறையின் இயக்குனராகப் பொறுப்பேற்றார். அவர் கல்வெட்டுகள் குறித்த ஒரு கருத்தரங்கைச் சென்னையில் ஏற்பாடு செய்தார். மிகப்பெரிய ஆளுமைகளான நீலகண்ட சாஸ்திரி, கே.கே. பிள்ளை, மா.இராசமாணிக்கனார் முன்னிலையில் எனது கட்டுரையை வாசித்தேன். தமிழ் பிராமி கல்வெட்டுகளின் தொகுப்பு இம்மாநாட்டையொட்டி வெளியிடப்பட்டது. இது பல்வேறு அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, எனது ஆய்வைத் தொடரும் ஊக்கத்தை அளித்தது.

கல்வெட்டு ஆய்வில் மிக முக்கியமான திருப்பத்தை நீங்கள் ஏற்படுத்தி உள்ளீர்கள். ஆனால் அதை எவ்வாறு சாதித்தீர்கள்?

பிராமி எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்தாலும், தமிழகத்தில் குகைகளில் உள்ள கல்வெட்டுகள் தமிழில்தான் உள்ளதாக கே.வி. சுப்பிரமணிய ஐயர்தான் முதலில் கண்டுபிடித்தார். வடமொழியில் இல்லாது தமிழுக்கு மட்டுமே இருக்கும் ஓசைகளைக் குறிக்கும் சிறப்பு எழுத்துக்களை அவரால் அடையாளம் காணமுடிந்தது. அவரை நான் ஒருமுறையே பார்த்திருந்தாலும், அவரை எனது குருவாகக் கருதுகிறேன். தமிழ் பிராமி எழுத்துகளுக்கும், பட்டிபொருலுவில் கண்டெடுக்கப்பட்ட எழுத்துக்களுக்கும் உள்ள தொடர்பை விரித்துப்பார்த்த போது தமிழ் பிராமி எழுத்துக்களைப் படிக்கமுடிந்தது. அந்த வழியில் தொடர்ந்த போது தமிழ் பிராமி எழுத்துக்களின் பரிமாண மாற்றங்களையும் அவை வட்டெழுத்துகளாக மாறிய வரையிலுமான வரலாற்றையும் கண்டுகொள்ள முடிந்தது. எனது சமீபத்திய புத்தகமான 'Early Tamil Epigraphy'-யில் இந்த ஆய்வைப் பற்றிச் சுருக்கமாக எழுதியுள்ளேன்.

சிந்து எழுத்துக்கள் ஆய்வை உங்களது மற்றொரு கண்ணாகப் பாவித்து வருகிறீர்கள். அந்த ஆர்வம் எப்படி வந்தது?

1943-ல் என் பள்ளியில் சிந்து சமவெளி நாகரிகத்தைப் பற்றி ஒரு பேச்சுப்போட்டி நடந்தது. அதற்காக என் புவியியல் ஆசிரியரை அணுகியபோது, அவர் அப்போது வெளியாகி இருந்த மா.இராசமாணிக்கனாரின் 'சிந்து சமவெளி நாகரிகம்' புத்தகத்தைப் பரிந்துரைத்தார். அதைப் படித்துத் தயார்செய்து கொண்டு பேச்சுப்போட்டியில் பேசிப் பரிசும் பெற்றேன். அதுதான் சிந்து சமவெளி நாகரிகத்துடன் என் முதல் தொடர்பு. பின்னாளில் ஆய்வுகளில் ஈடுபடுவேன் என்றெல்லாம் நினைத்துப்பார்த்ததில்லை.

1996-ல் நான் மீண்டும் தில்லிக்கு மாற்றப்பட்டேன். அதனால் பிராமிக் கல்வெட்டுகளைப் பற்றிய என் முதல்கட்ட ஆய்வு முடிவுக்கு வந்தது. தென்னிந்தியாவிலிருந்து தொலைதூரத்தில் இருந்ததால் என் ஆய்வுக்களங்களில் இருந்து துண்டிக்கப்பட்டது போல உணர்ந்தேன். என் ஆய்வுகளுக்கு வேறொரு தலைப்பு தேவைப்பட்டது. ஒருநாள் எதேச்சையாக நூலகத்தில் ஹண்டரின் சிந்து எழுத்துகள் பற்றிய புத்தகம் கிடைத்தது. ஆங்கிலேயரான ஹண்டர், இந்தியக் கல்வித் துறையில் இருந்தவர். தனது முனைவர் பட்ட ஆய்வுக்காகச் சிந்துசமவெளி எழுத்துக்களின் முதல் அட்டவணையைத் தொகுத்து வெளியிட்டவர் அவர்தான். அவர் கையால் வரைந்து வெளியிட்டிருந்த அட்டவணையிலிருந்தே சிந்து எழுத்துகளின் கூறுகளை அறிமுகம் செய்துகொண்டேன்.

அறிமுகத்திலிருந்து ஆய்விற்கு எப்படிச் சென்றீர்கள்?

தேசிய அருங்காட்சியகத்துடனும் இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறையுடனும் எனக்கு இருந்த தொடர்புகள் 'Indus Seals' மற்றும் கல்வெட்டுகளைக் காண்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தன. 1970ல் இந்திராகாந்தியால் நடத்தப்பட்ட ஜவஹர்லால்நேரு நினைவு அறக்கட்டளை சார்பாக எனக்கு ஜவஹர்லால்நேரு ஆய்வுநல்கை வழங்கப்பட்டது. அதன் மூலம், இரண்டு வருடங்கள் சிந்து எழுத்துக்களை வாசிப்பதில் ஈடுபட்டேன்.

எனது ஆட்சிப்பணியில் இருந்து இரண்டு ஆண்டுகள் விடுப்பு எடுத்துக்கொண்டு ஆய்வுப்பணியை ஒப்புக் கொண்டேன். வேலையில் இல்லாததால் தில்லியில் தங்க முடியாத சூழல். அதனால் சென்னை திரும்பினேன். ஆய்வுக்கான பொருட்கள் எல்லாம் தில்லியில் என்பதால் சென்னைக்கும் தில்லிக்கும் அடிக்கடி பயணம் செய்யவேண்டியிருந்தது. ஒரு வழியாகச் சிந்து எழுத்துக்களின் புகைப்பட அட்டவணையை உருவாக்கிக் கொண்டேன். அதன் மூலம் ஆய்வுகளைத் தொடர்ந்தேன்.

அந்தப் பணி உங்களை மிகவும் சிரமப்படுத்தியிருக்குமே? அப்போது உங்களுக்கு ஏதேனும் உதவிகள் கிடைத்தனவா?

தொழிலதிபர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம், சிந்து எழுத்துகளை ஆய்வு செய்வதற்குக் கணிப்பொறியைப் பயன்படுத்திக்கொள்ளச் சொன்னார். நான் அதற்கு முன்பு கணிப்பொறியைப் பார்த்ததே இல்லை. அந்நாட்களில் கால்குலேட்டரைப் பார்ப்பதே அரிது. என்னை அவர் தமிழகத் தொழில்நுட்பக் கல்வித்துறை இயக்குனர் வி.சி.குழந்தைசாமியிடம் அழைத்துச்சென்றார். ஃபண்டமென்டல் என்ஜினியரிங் ரிசர்ச் எஸ்டாப்ளிஷ்மெண்ட்டில் இருந்த ஐபிஎம்-1620 கணிப்பொறியில் எனக்குப் பணிசெய்வதற்கு அனுமதி கிடைத்தது. அக்காலத்தியக் கணிப்பொறிகளை விட இன்றுள்ள மிகமிகச் சாதாரண மொபைல் போன்கள் அதிக சக்திவாய்ந்தவை. அப்போது மானிட்டர் திரை கிடையாது. தரவுகளை பஞ்ச்ட் கார்டுகளாக உள்ளிட்டு அதன் வெளிப்பாடையும் பஞ்ச்ட் கார்டு வழியாகவே எடுத்து முடிவுகளை ஆராய்வோம். மிகமிக மெதுவான வேலையாக இருந்தது.

சிந்து எழுத்துகளை எழுத்துருக்கள் இன்றி மானிட்டர் திரை இன்றி எப்படித் தொகுத்து அட்டவணைப்படுத்தினீர்கள்?

அனைத்து விவரங்களையும் பஞ்ச்ட் கார்டுகளில் எடுத்து அந்தக் கார்டுகளை அட்டவணைப்படுத்திக்கொண்டேன். எண்களை மட்டும் பயன்படுத்திப் பின்னணித் தரவுகள் மற்றும் கல்வெட்டு எழுத்துகளையும் குறியீடாக்கக் கற்றுக்கொண்டேன். எண்கள் வழியிலான அந்தப் பதிப்பைக் கணிப்பொறியில் இட்டு, தோராயமாய் முதல் வரைவு தயாரானது. அந்த முடிவுகளை டாடா இன்ஸ்டிட்யூட் ஆப் ஃபண்டமென்டல் ரிசர்ச் நடத்திய கருத்தரங்குகளில் கட்டுரையாக வாசித்தேன். அங்குக் கணினித்துறையின் தலைவராக இருந்த ஆர்.நரசிம்மன் எனது பேச்சைக் கேட்டு அவரது துறையில் இருந்த கணிப்பொறியைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதியளித்தார். அப்போது அந்த ஆய்வகத்தில்தான் நல்ல கணிப்பொறி வசதிகள் இருந்தன. மைதிலி ரங்காராவ் என்ற கணிப்பொறி நிபுணர், மேம்படுத்தப்பட்ட ஆய்வு முடிவை நான் தயாரிப்பதற்காக எனக்கு உதவிபுரிய நியமிக்கப்பட்டார். நான் சென்னைக்கும் மும்பைக்குமாக அலைய ஆரம்பித்தேன். ஆனால் அதற்குள் எனது ஆய்வுநல்கை காலம் முடிவுக்கு வந்தது. திரும்பவும் 1974 இல் டெல்லிக்கு மாற்றப்பட்டேன். அப்போதும் எனது ஆய்வுப்பணி முடிவடையவில்லை.

அட்டவணையைத் தொகுக்கவே இத்தனை சிரமமென்றால் அதைப் புத்தகமாக அச்சிடுவதில் இன்னமும் சிரமங்கள் ஏற்பட்டிருக்குமே?

ஆமாம். சிந்து எழுத்தை அச்சிடுவதற்கு அச்சுருக்களோ அச்சு வசதிகளோ இல்லை. அது புத்தகமாகத் தயாராகியும் எப்படி அச்சிடுவது என்பது பெரிய சவாலாக இருந்தது. முதலில் நாங்கள் எக்ஸ்-ஒய் டிரம் ப்ளாட்டரின் உதவியுடன் அச்சடித்தோம். ஆனால் அச்சு அத்தனை திருப்திகரமாக இல்லை. 1975 இல் எனது பணி கிட்டத்தட்ட ஸ்தம்பித்த நிலைக்கு வந்துவிட்டது. அதேவேளையில் டாடா ஆய்வகத்தில் சக்திவாய்ந்த கணிப்பொறிகளின் அறிமுகத்தால் கணிப்பொறி உதவியுடனான போட்டோ டைப்செட்டிங் முறையில் கையால் வரையப்பட்ட படக்குறிகளை எழுத்துருக்களாக அச்சுக்குப் பயன்படுத்தும் தொழில்நுட்பம் வந்திருந்தது. அப்போது நான் மும்பைக்கும் டெல்லிக்குமாக அலைந்து முடிந்தளவுக்கு விடுமுறைகளை எடுத்துப் போய்க்கொண்டிருந்தேன். 1976 இல் ஆறுமாதம் கல்வி விடுமுறை எடுத்துப் பாதிச்சம்பளத்தில் டாடா இன்ஸ்ட்யூட் ஆப் பண்டமென்டல் ரிசர்சுக்கு சென்று புத்தகம் அச்சாகும் வரை அங்கேயே இருந்தேன். 'The Indus Script; Text, Concordance and Tables' என்ற அந்தப் புத்தகத்தை இந்தியத் தொல்லியல் அளவீட்டுத்துறை வெளியிட்டது. சிந்து எழுத்து குறித்த ஆய்வுக்கு முக்கிய மூலகமாக அந்த ஆய்வுப் புத்தகம் கருதப்படுகிறது.

ஆட்சியர், வரலாற்றாய்வாளர் என்பதைத் தவிரப் பிரபல தினசரிக்கு ஆசிரியர் என்றொரு முகமும் உங்களுக்கு உண்டு. அது எப்படி நடந்தது?

காலப்போக்கில் எனக்கு அரசுவேலை அயர்ச்சியாகிவிட்டது. ஐம்பது வயதானால் இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் விருப்ப ஓய்வுபெறலாமென்றொரு சட்டம் இருந்தது. அதைப் பயன்படுத்திக் கொண்டேன். ஆனால் என்னை முழுநேர ஆய்வுக்கு உட்படுத்திக் கொள்வதற்கு முன்பு வேறு வேலை எதையாவது இன்னும் சில வருடங்கள் செய்யலாம் என்று நினைத்தேன். எனது மகன்கள் கல்வியை நிறைவு செய்து வேலை பார்க்கும் வரை நான் பணிபுரிய வேண்டும் என்று தீர்மானித்தேன். இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் பதிப்புத்துறையின் செயல் இயக்குனராக 1980 முத்ல 82 வரை பணிபுரிந்தேன். ஆய்வு வேலைகளுக்காக அந்தப் பணியை நான் ராஜினாமா செய்தேன். ஆனால் அப்போதுதான் எனது மூத்த மகனான 29 வயது வித்யாசாகர் ஒரு விபத்தில் மரணமடைந்தார். அவர் திருமணமானவர். இரண்டு குழந்தைகள் இருந்தன. எனது பேரக்குழந்தைகளுக்கு உதவியாக நான் திரும்பவும் வேலை தேட வேண்டியிருந்தது. அதனால் தினமணியில் ஆசிரியராகப் பணியாற்ற அழைத்த ராம்நாத் கோயங்கோவின் அழைப்புக்கு சம்மதம் தெரிவித்தேன்.

தினமணி நாட்களைப் பற்றி கூறுங்கள்.

நான் அதுவரை செய்தித்துறையில் இருந்ததே இல்லை. ஒரு செய்தித்தாள் அலுவலகம் எப்படி இருக்கும் என்றுகூடத் தெரியாது. செய்தித்தாள் எழுத்துக்குத் தேவையான தமிழறிவும் என்னிடம் கிடையாது. எனக்கே ஆச்சரியம் உண்டாகும் வகையில் என் பணி சிறப்பாக அமைந்தது. தமிழ்மணி மற்றும் அறிவியல் சுடர் போன்ற இணைப்புகளை நான் தினமணியில் அறிமுகம் செய்தேன். அதற்கு வாசகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. சீர்திருத்த எழுத்துகளைச் செய்தித்தாளில் பயன்படுத்தினேன். சமஸ்கிருதம் மற்றும் ஆங்கிலத்தைக் கூடுமானவரை தவிர்த்தேன். ஆசிரியர் பக்கத்துக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. அதில் தீவிரமான விஷயங்கள் பற்றித் தொடர்ந்து கட்டுரைகள் வெளிவந்தன. நான் மிகச் சுதந்திரமான பத்திரிகை ஆசிரியராகச் செயல்பட்டேன். அருண் ஷோரி ஆசிரியராக இருந்த இந்தியன் எக்ஸ்பிரஸ் மண்டல் கமிஷன் பரிந்துரைகளைக் கடுமையாக எதிர்த்தபோது, அதே நிறுவனத்திலிருந்து வந்த தினமணியில் இட ஒதுக்கீடுக்கீட்டுக்கு ஆதரவான நிலை எடுக்கப்பட்டது. தினமணியின் ஆசிரியராக எனக்கு அப்பணி முழுமையான திருப்தியைத் தந்தது. 1991 இல் எனது மிச்சகாலத்தில், ஆய்வுப் பணிகளை நிறைவு செய்வதற்காக வேலையை ராஜினாமா செய்தேன்.

தமிழ்-பிராமி எழுத்துகள் பற்றிய உங்கள் இரண்டாம் கட்ட ஆய்வைப் பற்றிச் சொல்லுங்கள்.

நான் 1991 ஆம் ஆண்டில் மீண்டும் தமிழ்க் கல்வெட்டியல் ஆய்வைத் தொடங்கினேன். இதற்காகத் தமிழகம் முழுவதும் உள்ள குகைகளுக்குத் தீவிரமான பயணத்தைத் தொடங்கினேன். இந்தியன் கவுன்சில் ஆப் ஹிஸ்டாரிக்கல் ரிசர்ச்சில் எனக்குத் தேசிய ஆய்வுநல்கை மூன்று வருடங்களுக்குக் கிடைத்தது. 1992-ம் ஆண்டு எனது மனைவி திடீரென்று மாரடைப்பால் மரணமடைந்தபோது திரும்பவும் ஆய்வுப்பணிகளில் பின்னடைவு ஏற்பட்டது. ஆனாலும் தமிழகத் தொல்லியல் ஆய்வுத்துறையிலுள்ள இளம் ஆய்வாளர்களின் உதவியுடன் ஆய்வைத் தொடர்ந்து 2000-ல் பணியை முடித்தேன். 2003-ம் ஆண்டில் க்ரியா பதிப்பகமும் ஹார்வர்ட் பல்கலைக்கழகமும் சேர்ந்து எனது Early Tamil Epigraphy புத்தகத்தை வெளியிட்டன.

தங்களுடைய தற்போதைய ஆய்வுகளைப் பற்றிக் கூறுங்கள்.

சமீபத்தில் ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்தில் சிந்து ஆய்வுகளுக்காக மையம் ஒன்றை உருவாக்கியுள்ளோம். இந்த மையம், டாடா இன்ஸ்ட்யூட் ஆப் ஃபண்டமெண்டல் ரிசர்ச்சுடனும் சென்னையிலுள்ள மேத்சயின்ஸுடனும் இணைந்து புதுப்பிக்கப்பட்ட விரிவுபடுத்தப்பட்ட சிந்து எழுத்துகள் பற்றிய முடிவுகளைத் தொகுப்பதில் ஈடுபட்டு வருகிறது. இந்த மையத்திலிருந்து ஏற்கனவே சில நல்ல ஆய்வுக்கட்டுரைகள் வெளியாகியுள்ளன. சிந்து எழுத்துகளை ஆய்வு செய்யும் இளம் ஆய்வாளர்களை இந்த ஆய்வு மையம் ஈர்க்கும் என்று நினைக்கிறேன். "Interpreting the Indus Script: A Dravidian Model" என்றொரு புத்தகம் எழுதுவதிலும் ஈடுபட்டுள்ளேன். இது பெங்குவின் பதிப்பகத்தினரால் வெளியிடப்பட உள்ளது.

நீங்கள் ஓர் அறக்கட்டளை மூலமாக நிறையப் பணிகள் செய்துவருகிறீர்கள். அதைப் பற்றியும் சொல்லுங்களேன்.

எனது மூத்த மகன் வித்யாசாகர் 1986 இல் விபத்தில் இறந்தபோது எனது மனைவியும் நானும் அவனது நினைவாக ஒரு அறக்கட்டளையை நிறுவத் தீர்மானித்தோம். அதற்கு எனது மற்ற கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்றும்வரை காத்திருக்க வேண்டியிருந்தது. அத்துடன் அந்த அறக்கட்டளைக்கான நிதியும் திரட்ட வேண்டியிருந்தது. 2003-ல், திருவான்மியூரில் இருந்த என் கடலோர பங்களாவை விற்று வித்யாசாகர் கல்வி அறக்கட்டளையை எனது பணம் ஐம்பது லட்சத்தை இட்டு உருவாக்கினேன். அந்த அறக்கட்டளையிலிருந்து நாற்பது லட்சம் சங்கர நேத்ராலயா மருத்துவமனைக்குத் தரப்பட்டு அங்கு வித்யாசாகர் இன்ஸ்டிட்யூட் ஆப் பயோ மெடிக்கல் டெக்னாலஜி அண்ட் சையன்ஸ் பயிலகம் உருவாக்கப்பட்டது.

ஆண்டுதோறும் பாலிடெக்னிக் மற்றும் தொழிலகப் பயிற்சி நிலையங்களில் படிக்கும் திறமையுள்ள ஏழை மாணவர்களுக்கு இந்த அறக்கட்டளையிலிருந்து உதவித்தொகை வழங்கப்படுகிறது.

உங்களை இந்த வயதிலும் உங்களை உற்சாகமாக ஆய்வுகளைத் தொடரச் செய்வது எது?

அறிவுப் பசியும், உண்மையை அறிந்துகொள்வதற்கான விழைவும்தான்.

பேச ஆரம்பித்து மூன்று மணி நேரம் ஆகிவிட்ட போதும் நேர்காணலை முடிக்க மனம் வரவில்லை. இந்திய வரலாறைப் போலவே இந்த வரலாற்று அறிஞரின் வரலாறும் எடுக்கக் எடுக்கக் குறையா அட்சய பாத்திரம் என்பதால் அரைமனதுடன் நேர்காணலை முடித்துக் கொண்டேன்.
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.