http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 144
இதழ் 144 [ ஜனவரி 2019 ] இந்த இதழில்.. In this Issue.. |
தொடர்:
பல்லவர் பாதையில்
ஒருமண்டபக் குடைவரைகள்
முற்றுப்பெறாத குடைவரைகள்: 2. புலிப்புதர் மண்டபம் இராமானுஜர் குடைவரையின் வடமேற்கே செல்லும் பாதையில் நடந்தால் அக்குடைவரையின் பின்புறம் உள்ளப் புலிப்புதர் மண்டபத்தை அடையலாம். கோனேரிப்பள்ளம் ஏரியினைப் பார்த்தவாறு அமைந்துள்ள இக்குடைவரைக்கு புலிப்புதர் என்ற பெயர்க் காரணம் அறிய இயலவில்லை. இக்குடைவரையின் தரைப்பகுதியை அடைய இந்திய தொல்லியல் அளவீட்டுத்துறையினர் அமைத்துள்ள கட்டுமான அணைப்புகளின் இடையிலான சீரமைக்கப்பட்ட மண்பாதை உதவுகின்றது. தரைமட்டத்திலிருந்து குடைவரையை அடைய படிகள் ஏதும் அமைக்கப்படவில்லை. குடைவரையின் முகப்பின் முன் விரியும் பாறைப் பரப்பின் தென்புறத்தில் சேதமுற்றிருக்கும் பாறைப்பகுதி குடைவரையின் முகப்பைனை அடைய உதவுகின்றன. குடைவரை முகப்பு: பாறைத்தளத்திலிருந்து சற்றே உயர்ந்து கிழக்குப் பார்வையாய் எழும் குடைவரையின் முகப்பானது முன்புறம் நான்கு எண்முக முழுத்தூண்களையும், தெற்கிலும், வடக்கிலும் பக்கச் சுவர்களையொட்டி இரண்டு நான்முக அரைத்தூண்களையும் கொண்டுள்ளது. இவற்றுள், தெற்கு அரைத்தூண் அமர்யாளி வடிவம் பெற்றுள்ளது. வடக்கு அரைத்தூண் அவ்வடிவத்திற்கான ஒதுக்கீடு பெற்ற நிலையில் முழுமை பெறாமல் காணப்படுகிறது. முழுத் தூண்களுள் மூன்று தூண்கள் அமர்யாளி முழுமை பெற்ற நிலையில், வடக்கிலிருந்து இரண்டாவது தூண் முழுமை பெறவில்லை. குடைவரை, முகப்புத் தூண்களால் ஐந்து அங்கணங்களாகப் பிரிக்கப் பெற்று காட்சியளிக்கின்றது. தூண்களின் தலையுறுப்புகள் வடிவம் பெறாமல் அதற்கான ஒதுக்கீடு நிலையிலேயே உள்ளன. வளைமுகப் போதிகைகள் உத்திரம் தாங்குகின்றன. போதிகைகளின் மேற்கைகள் கீழ்க்கைகளை விட நீளம் பெற்றுள்ளன. குடைவரை அகழப்பட்டுள்ள பாறையின் மேற்பகுதி கூரையாக வடிவமைப்புப் பெறாத கபோதமாக நீட்சி பெற்று இறங்கியுள்ளது. அரைத்தூண்களையொட்டி மேற்கு முகபாகச் சரியும் பாறைச்சுவர்கள் வடசுவர் அகலம் அதிகம் பெற்றும், தென் சுவர் அகலக் குறைவாகவும் காணப்படுகிறது. மண்டபம்: மண்டபத்தின் வடக்கு, தெற்குச் சுவர்களும், தரை, கூரை ஆகியவையும் முழுமை பெறாத நிலையில் உள்ளன. கூரை, பாறைப்பிளப்பு நிலையில் கைவிடப்பட்டுள்ளது. தரையின் பாறைப்பிளப்புகள் அகற்றப்படாமல் உள்ளன. மண்டபத்தின் பின்சுவரில் தரையிலிருந்து உபானம் எழுகின்றது. மண்டபப் பின்சுவரின் வடபுறம் நீங்கலாக நான்கு கருவறைகளின் வாயில்கள் அகழப்பட்டுள்ளன. அவ்வாயில்கள், முகப்பின் அங்கணங்களுக்கு நேர் எதிரே அமைந்துள்ளன. வடக்கிலிருந்து தெற்காக, முதல் அங்கணத்திற்கு நேர் எதிரே சுவர் அகழப்படாமல் வெறுமையாக உள்ளது. 2,3,4,5 ஆம் அங்கணங்களுக்கு எதிரே கருவறை வாயில்கள் அகழப்பட்டுள்ளன. கருவறைகள்: மண்டபப் பின்சுவற்றில் உள்ளடங்கியவாறு கருவறைகள் அகழப்பட்டுள்ளன. தெற்கு, வடக்கு இடைக் கருவறை இவற்றின் வாயில்கள் அணைவுத் தூண்களின்றி உள்ளன. நடு, தெற்கு இடைக்கருவறைகளின் வாயில்களைத் தழுவியுள்ள நான்முக அரைத்தூண்களும் அவற்றை அடுத்துச் சுவரிலுள்ள மூன்று நான்முக அரைத்தூண்களும் முழுமை பெறாது உள்ளன. மேலே போதிகைகள், உத்திரம், கபோதம் இவாற்றிற்கான ஒதுக்கீடுகளைக் காண முடிகிறது. முதல் கருவறை இரண்டாவது கருவறை மூன்றாம் கருவறை நான்காம் கருவறை வெறுமையாக உள்ள நான்கு கருவறைகளின் சுவர்கள், கூரை, தரை ஆகியன ஓரளவிற்குச் சீர்மை பெற்றுள்ளன. முற்றுப் பெறாத இப்புலிப்புதர் மண்டபக் குடைவரை முழுமை பெற்றிருப்பின் மாமல்லையின் சிறந்த குடைவரைகளுள் ஒன்றாக விளங்கியிருக்கும் என்பதில் ஐயமில்லை தான். மாமல்லபுரம் களப்பணியின்போது தோழி லக்ஷ்மியும் உடன் வந்திருந்தார். அவருக்குத் துணையாக அவரது அன்னையாரும் வந்திருந்தார். எங்கள் ஆர்வம் சிதறாமலிருக்கும் பொருட்டு மூப்பினாலும், நோயினாலும் தளர்ந்திருந்த தன் வலி பொருட்படுத்தாமல் காஃபி, சிற்றுண்டிகளைத் தானே கடைக்குச் சென்று வாங்கி உபசரித்த தாயன்பு இன்றும் விழிகளில் திரையிடுகிறது. ஆம்…அவர் மறைந்து ஓராண்டு ஆகி விட்டது. நன்றி: மாமல்லபுரம் குடைவரைகள் டாக்டர் கலைக்கோவன், முனைவர் மு. நளினி ஒளிப்படங்கள்: ஆர். கே. லக்ஷ்மி |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |